கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)  
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 14,841 
 

1988ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் பிற்பகல் இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில், புதுச்சேரி கடற்கரையோர மதுபான விடுதியான கடற்காகத்தில் மேல்மாடியில் பருகி முடிக்கப்படாத இறுதி மிடறு மேசை மீதிருக்க, கூடை வடிவ பிரம்பு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ழான் பெர்னாரின் உயிர் பிரிந்திருந்தது.

குழியில் பலகை மீது விழுந்த ஈர மண்ணின் முதல் பிடி ஒலியைத் தொடர்ந்து வெவ்வேறு கைப்பிடி அளவுகளில் ஓசைகள் எழுந்தன. இடையே மண் குவியலில் மண்வெட்டி உரசும் சப்தம். இடம் மாறும் காலடிகளின் ஓசை, கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே வாகனங்கள் எழுப்பும் இரைச்சல்களும் அடங்கிவிட, சற்றுமுன் மணியோசையில் அதிர்ந்து கோபுரத்தை விட்டுப் பறந்த புறாக்கள் மீண்டும் வந்தடையும் சிறகோசை. எல்லாம் முடிந்துவிட்டது. ஆம் அவரைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. அறுபது ஆண்டுகள் ஆறு மாதங்கள் பதினேழு நாட்கள் வாழ்ந்து முடித்தாகிவிட்டது. நீர் கலக்காத இறுதி மிடறு மது மெல்ல மெல்ல ஆவியாகிக் கொண்டிருந்தபோது ழான் பெர்னாரும் உடன் ஆவியாகி அற்றுப் போயிருந்தார்.

கொட்டும் மழையில் ஆளரவமற்ற புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நனைந்தபடி மெல்ல நடந்து செல்வது போன்ற சுகம் போகத்தில்கூட இல்லை எனச் சொல்லும் பெர்னாரை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் நனைந்தபடி நடந்துகொண்டிருக்கும்போது முதன்முதலாக எதிர்கொண்டு ஒருவருக்கொருவர் அறிமுகமானோம்.

நெடிய உருவம். தமிழனா ஐரோப்பியனா என அறுதியிட இயலாதத் தோற்றம். கட்டுத் தளராத குரல். பிரெஞ்சு மொழி பேசிப் பழகிய வாய்க்கே உரித்தான கரகரப்போடு வெளிப்படும் தமிழ். எந்தவொரு அசைவிலும் அவசரங்காட்டாத ஒரே சீரான தாள கதி. பெர்னாரை இத்தனை சீக்கிரத்தில் இழந்துவிடுவேன் என நான் நினைத்ததில்லை.

கப்பித்தேன் மரியூஸ் ஸவியே தெருவில் வெளித்தோற்றத்தில் காரை பெயர்ந்து இடிந்து கிடக்கும் சுவர்களைக் கொண்ட அவருடைய வீட்டின் உள்தோற்றம் அத்தனை மோசமில்லை. வரவேற்பறைச் சுவரில் வெள்ளைக்காரத் தந்தையுடன் கம்மல் மூக்குத்தி அணிந்து குங்குமமிட்ட நெற்றியுடன் தமிழ்க் கிறித்துவ அன்னை. கருப்பு வெள்ளைப் புகைப்படம் தேக்குச் சட்டமிடப்பட்டு பெரிய அளவில் தொங்கிக் கொண்டிருக்க, எதிர் மூலையின் வலப்பக்கத்தில் இலைகளைக் கழித்துவிட்டு நட்ட சிறு மரம்போல தொப்பிகளை மாட்டிவைக்கப் பயன்படும் மரத்தாலான ஒரு பொருள். பெர்னார் குடும்பத்தினரின் பல்வேறு வடிவங்கள் கொண்ட தொப்பிகள். பல தொப்பிகள் தங்களுக்கானத் தலைகளை என்றோ இழந்துவிட்டதன் சோகத்தை என்னைக் கண்டதும் மீண்டும் பொருத்திக்கொண்டு அசைந்தன. உள்கட்டுக்குள் நுழைந்ததும் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் மிகப் பெரிய வண்ண ஓவியம். தரையிலிருந்து சுவரில் சாய்ந்த நிலையில் நின்ற வெள்ளாடையுருவத்தின் காலடியில் பணிப்பெண் வைத்துவிட்டுச் செல்லும் நான்கைந்து செம்பருத்திகள். அதற்கடுத்து சிறு நடையைத் தாண்டி வலப்பக்கமும் இடப்பக்கமும் இரண்டு அறைகள். இடப்பக்கம் படுக்கையறை. வலப்பக்கம் அவருடைய பூசையறை என்று சொன்னார். கதவிற்கும் நிலைச் சட்டத்திற்குமான ஒட்டடைகள் அடர்ந்திருந்த நிலையில், புழக்கமற்ற அந்த அறையை பூசையறை என்கிறாரே என அப்பொழுது நினைத்துக்கொண்டேன். ஒரு முறை பகலில் நான் அங்கிருந்தபோது பணிப்பெண்ணை அழைத்து வலப்பக்க அறைக் கதவைச் சுத்தம் செய்யச் சொன்னேன். அதற்கு அவள், ‘மெர்ஸ்யே திட்டுவாரு’ எனச் சொல்லிவிட்டுச் சென்றது எனக்கு விநோதமாக இருந்தது.

பெர்னாரின் வினோதமான பழக்கவழக்கங்களையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் கேட்டு ரசிப்பதில் என் மனைவிக்கு அலாதியான விருப்பம் இருந்தது.

ஒருமுறை என் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த பெர்னார் ஒயினில் தனது சுருட்டுச் சாம்பலையிட்டுக் கலக்கி அருந்தியதைக் கண்ட நாங்கள் எல்லோருமே திடுக்கிட்டோம். மேலும் அவர் புகையிலை ஊறிய ஒயினை அருந்துவதற்கு ஈடான ருசியும் போதையும் வேறெவற்றிலும் இல்லை எனவும் சொல்வார்.

பெர்னாரை நான் அடிக்கடி சந்திப்பது போய் தினமும் ஒவ்வொரு மாலையும் அவருடன் கழிவதையும், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதையும் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்த என் மனைவிக்கு அவரின் மேல் சிறு கோபமும் வெறுப்பும் மெல்ல வளரத் தொடங்கியது.

பிரான்சிலிருக்கும் தன் வெள்ளைக்கார மனைவி குறித்தும் தன்னுடைய மகனைக் குறித்தும் பெர்னார் அடிக்கடி குறிப்பிடுவார். விவாகரத்து செய்துகொள்ளாமலேயே மிக இளம் வயதிலிருந்தே தாங்கள் பிரிந்து வாழ்வதாகவும் சொன்னார். மகன் ஆண்டுக்கு ஒரு முறை வந்துத் தன்னைப் பார்த்துவிட்டுச் செல்லும் பழக்கமும் நாளடைவில் குறைந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

எனக்கு எப்பொழுதுமே பிறருடைய வாழ்க்கை பற்றிய செய்திகளில் ஈடுபாடு இருந்ததில்லை. பெர்னாருடைய வாழ்க்கைக் கதையில் எனக்குத் தேவைப்படுவது எதுவுமே இல்லை என்றபோதும், என் மனைவிக்கு உதவுமே என அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வேன்.

அப்படித்தான் ஒருமுறை அவர் சொன்னார்: தனது வெள்ளைக்காரத் தகப்பனான ஃப்ரான்சுவா பெர்னாருக்கும் வடலூர் வள்ளலாருக்கும் இடையே ஆழமான பக்திப் பிணைப்பு இருந்தது என்று. வள்ளலார் என்னுடைய சாதியைச் சார்ந்த மாபெரும் யோகி என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. பெர்னாரின் அன்னையும் என் சாதியைச் சார்ந்த கிறித்துவர் என அறிய வந்தபோது, எங்களுக்குள் சாதிய நெருக்கமும் வளர்ந்துவிட்டதை தவிர்க்க முடியவில்லை.

வள்ளலாரைப் பற்றிய ஒரு பேச்சின்போது பெர்னார் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. வள்ளலார் தான் நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிர் வாழப் போவதாகச் சொன்னபடி அந்த நீண்ட ஆயுளை வாழ்ந்து முடித்தவர் எனச் சொன்னார். கிழம் போதையேறி உளறுகிறது என அசிரத்தையோடு கேட்டுக் கொண்டிருந்தேன். தனக்குப் பத்து வயது ஆகும்போதுதான் அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டில்தான் அந்தச் சுடர் அணைந்தது என அவர் சொன்னதை என் மனைவியிடம் சொல்ல; தயவு செய்து இனி குடித்துவிட்டு மகான்களைப் பற்றி பேசவேண்டாம் என கடுமையோடு முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.

ஒருமுறை பெர்னாரிடம் நான் கேட்டேன், “உங்களுடைய வீட்டின் எல்லா இடத்திலும் நான் புழங்கி வருகிறேன். உங்களுடைய பூசையறையை மட்டும் இதுவரை எனக்குத் திறந்து காட்டவில்லையே” என்று. அதற்கு அவர் நெடுநேரம் மௌனமாக இருந்தார். பிறகு நிதானமாக, “வாழ்க்கையில் வினோதமும் யதார்த்தமற்ற போக்கும் மிக அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமான புனைவு எப்படி அவசியமோ அதுபோலவே நிச்சயமற்ற புனைவும் அவசியம்” என்று பிரெஞ்சு மொழியில் சொன்னார். பிறகு அதையே தமிழிலும் சொல்ல எத்தனித்து சரியான சொற்கள் வந்து சேராமல் குழறினார்.
அவர் வீட்டில் குழல் விளக்குகளை பயன்படுத்துபவர் அல்லர். எல்லாயிடங்களிலும் குண்டு விளக்குகளையே பொருத்தியிருந்தார். வீட்டின் பழமையும் குண்டு விளக்கின் ஒளியும் நல்ல போதையில் ஒருவித மாயப் புதிரென மனசெல்லாம் படியும். அப்படித்தான் அன்றும் இருந்தது. மஞ்சள் மின்னொளியில் வள்ளலாரின் ஓவியம் உயிரும் சதையுமாக நிற்பதைப் போலவே இருந்தது. நான் பெர்னாரிடம் சொன்னேன், “வள்ளலார் இறக்கவில்லை. அவர் மறைந்துவிட்டார். சித்தர்கள் என்றைக்குமே அழிவற்றவர்கள். நம்மோடு என்றைக்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள்.”

பெர்னார் கடகடவென சிரித்து “போதையில் உனது பிரெஞ்சு மொழி அப்படியொன்றும் மோசமில்லை” என பகடி செய்தபடி என் பேச்சை மாற்ற அவர் எத்தனிப்பதாகத் தெரிந்தது.

நான் கடுப்பாகிப் போனேன். “வள்ளலாரை உமது குடும்பச் சொத்துப்போல பேசுகிறீரே உமது பொய்யுக்கும் ஒரு அளவு வேண்டாமோ” எனக் கத்திவிட்டேன்.

கிழவர் ஆடிப்போய்விட்டார். தன்னிலைக் குலைந்த அவர் விருட்டென எழுந்துசென்று ஒரு பெரிய சாவியை எடுத்துவந்து பூசையறையைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு வந்து என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பூசையறைக்குள் சென்றார். பிறகு நடந்தவைகளெல்லாம் எனக்கு நிச்சயமற்றுத் தெரிகின்றன. என் மனைவியிடன் நான் அதைச் சொல்ல அவள் கலவரத்தோடு என் மனோநிலையைச் சோதித்தாள். அந்தக் கிழவரோடுச் சேர்ந்து நீங்களும் பயித்தியமாகிவிட்டீர்கள் எனக் கத்தினாள். இனி நான் அவரைச் சந்திக்கக்கூடாது என என் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். அதற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து கிழவர் இறந்த செய்தியைக் கேட்டுத்தான் நான் அவர் வீட்டுக்குப் போனேன். ஒருவாரம் அவர் உடல் ஜிப்மர் சவக்கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. மகன் பிரான்சிலிருந்து வந்த பிறகு ஈமக்கிரியையை முடித்தனர். பெர்னாரின் மனைவி வரவில்லை.

ழாக் பெர்னார் இளவயது கிழவரைப் போலவே இருந்தான். என்னை விட இரண்டு வயது இளையவன். என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசினான். தான் இந்த வீட்டை இடித்துவிட்டு பெரிய அடுக்குமாடி கட்ட இருப்பதாகவும் நான்தான் அவனுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டான். நான் கலவரப்படலானேன்.

“கடைசி காலத்தில் அப்பாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறீர்கள். அவருடைய பூசையறையின் மர்மம் பற்றியும் அறிந்திருப்பீர்கள்தானே” என ஒருவிதக் கிண்டல் தொனிக்கும்படி கேட்டான்.
நான் மௌனமாக இருந்தேன்.

“சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒரு சாமியாரின் பிணத்தை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார். இதனால்தான் என் அம்மா இவரைப் பிரிந்து என்னை அழைத்துக் கொண்டு பிரான்சுக்கே போய்விட்டார். என் தாத்தா காலத்துப் பிணம். இன்னும் சவப்பெட்டிக்குள் கிடக்கிறது. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்.”

நான் கண்களை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தேன். பதப்படுத்தப்பட்ட அந்த உடலை பெட்டியோடு எடுத்துவந்து நாம் வைத்துக்கொள்ளலாமா என என் மனைவியிடம் கண்கள் கலங்கக் கேட்டேன்.
அவள் என்னைப் பச்சாதாபத்தோடுதான் பார்த்தாள் என்றாலும் அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியாமல் தவித்தேன்.

“நான் உங்களுடன் வாழ்வதா வேண்டாமா?” என அமைதியாகக் கேட்டுவிட்டு விருட்டென எழுந்து சென்று படுக்கையறைக் கதவை அடைத்துக்கொண்டாள்.

மறுநாள் ழாக் பெர்னாரைச் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் “என்ன முடிவு செய்தீர்கள்” எனப் பதறினான்.

”அரசிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை. அரசாங்கமும் பத்திரிகை மீடியாவும் நம்மை கேள்விகேட்டுத் தொலைத்துவிடும். அந்த உடம்பின் ரகசியத்தை வெளிப்படுத்தினால் அது சமயப் பிரச்சினையாகி அது என் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்தப் பிணம் ஒரு சாமியார் மட்டுமல்ல, இந்திய ஆன்மீகத்தின் ஒரு சிகரம். பிரெஞ்சுக்காரனான உனக்கு இதன் வெகுமானமோ, அற்புதமோ இதன் மூலம் உருவாகப்போகும் ஆபத்துக்களோ என்னவென்று தெரியாது” என நிதானமாகச் சொன்னேன். எனது நிதானம் அவனைக் கலவரப்படுத்தியது.

நீண்டநேரம் அமைதியாக ஒயினைப் பருகியபடி இருந்தோம். பிறகு எனது திட்டத்தை அவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியில் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டான்.

விடிந்தால் போகி. விடிய விடிய குடித்தபடி இருந்தோம். என் மனைவியோ தொலைபேசியில் பதறியபடியே இருந்தாள். அதிகாலை மூன்று மணிக்கு பூசையறைக்குள் சென்றோம். சவப்பெட்டி ஒரு காவித்துணியால் போர்த்தப்பட்டிருந்தது. துணியை விலக்கிவிட்டு ஆணியறையப்படாத பெட்டியைத் திறக்க முற்பட்டேன். ழாக் தடுத்தான். நான் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு மூடியைத் திறந்து பார்த்தேன். காவித்துணியால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலம். பெட்டியோடு தூக்கி வந்து வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினோம். சடசடவென தீ எழுந்தது.

ஆங்காங்கே வீட்டு வாசல்களில் எதையெதையோ போட்டுக் கொளுத்தத் தொடங்கிவிட்டனர். அரைமணி நேரத்ஹ்டில் வாசலில் சாம்பல் புகைந்தது. சாம்பலில் ஒரு கை அள்ளி எனது கைக்குட்டையில் கட்டிக்கொண்டேன். வீட்டுக்குள் சென்று வள்ளலாரின் படத்தை எடுத்து வந்து எனது காரின் பின் இருக்கையில் வைத்துவிட்டு ழாக்கிடம் கை குலுக்கி விடைபெற்றேன். வழி நெடுகிலும் வாசல்கள்தோறும் பெருந்தீ வளர்ந்துகொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *