கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 11,166 
 
 

நீண்ட காலமாய்த் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய்ப் பரபரப்பு! சுறுசுறுப்பு! ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊரும் ரயில் வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம் அவசரமாய்க் கூடிப் பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்!

சப்தங்கள் யாவும் ஓய்கிறபோது, பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலை நெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்!

சிலசமயம் வயிற்றைக் குமட்டும் … பலசமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டுகொண்டே கிடக்கும்!

சூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பொதிகளற்ற வெற்று ‘ரயில்’ பெட்டிகளினுள்ளேயிருந்து “ஐயோ … அம்மா ..! என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்!

சில நிமிடங்களிற்கு எங்களின் தொண்டைக்குழிகள் அடைத்துப் போகும்! வீடு அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்கும்!

ஆனால் நாம் பயப்படவே தேவையில்லை! அப்படித்தான் அறிவு சொல்லியது. எத்தனை நம்பிக்கை, அவர்களுக்கு எங்கள் மேலிருந்தது. ரெயில்வே ஸ்ரேசனின் பெரிய பெரிய கட்டடப்பகுதிகளை இணைத்து, பிரதான முகாமாக்கியிருந்த அந்த இந்திய ‘சிங்’குகளுக்கு நிலையத்தின் தலைமை அதிபரான அப்பாவில் மட்டும் நிறைய மரியாதை!

தண்டவாளங்களோடு ஒட்டியிருந்த எங்கள் ரெயில்வே குவாட்டர்ஸ் மிகவும் அழகானது; வசதியானது! ஸ்ரான்லி வீதிப் பக்கமாயிருந்த, வீட்டின் முன்புறத்தில், முல்லையும் அடுக்கு மல்லிகையும் பந்தலிட்டு நின்றன. மணல் பரவிய நீண்ட முற்றம். இருபுறமும் பச்சைப் புற்கள். வேலி முழுவதும் பின்னிப்படர்ந்திருக்கும் பூங்கொடிகள்; அவை பெரியபெரிய இலைகளைப் பரப்பி, வேலிக்கு மிகவும் பாதுகாப்பாய் இருந்தன. அவை ‘ரெயில்வே குவாட்டர்ஸ்’க்கே உரியவை போல, தனித்துவமாயிருக்கும்! றோஜா நிறத்தில் கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும்! ஆனால் வாசனையற்றவை! அவை சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் ‘சிங்களக் கொடி’ என்று பெயர் சூட்டியிருந்தோம்.

வீட்டின் இடது புறமிருந்த நீளமான பெரிய வளவில், நெடுநெடுவென்று வளர்ந்திருந்த பத்துப் பன்னிரண்டு பனை மரங்களும், ஓரமாய் இரண்டு முருங்கை மரங்களும்! முருங்கை கள் ஏராளமாய்க் காய்க்கும்! வீட்டின் வலது பக்கமிருந்த சிறிய வளவிலும், பின் வளவிலும் இரதை வாழைகள், தென்னைகள், தூதுவளை, துளசி, பயற்றங்கொடி, கரும்பு என்று பசுமையில் நிலம் செழித்துக் கிடந்தது!

இவற்றிற்கு நீர் பாய்ச்சுவதற்கா, நான் நீண்டநேரம் நீராடுவது வேறு விடயம்.

பனைமரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக்கொண்டேயிருக்கும்.

படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய்ப் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்!

வீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துக்கள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும். வளவைப் பார்க்கப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்!

பின்னால், ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டு வேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு ‘சென்றிப் பொயின்ற்’! பனங் கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த ‘சென்றிப் பொயின்ற்’!

அவர்கள் வெளியில் சென்றியில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண் மேய்ச்சல் விடுவதே அதிகம். கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடி துடித்துப் பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத் தலைகள் வேலியின் மேலால் எட்டிப் பார்த்து ஆராயும்! போகப் போக, அது அவர்களுக்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சனையேதும் ஏற்படவில்லை.

தண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையைச் சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை! சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு! ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்ப முடியாத உண்மை!

அப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய் வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத் தீனி சாப்பிட்டு விட்டுப் போவார்.

சில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து, ‘கேர்ணல்’, ‘மேஜர்’ என்று அலங்காரப் பட்டிகளுடன் ஹிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு! அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும். அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டு போவார்கள். போகும்போது நட்பாக விடைபெறுவார்கள்.

“இங்கு எல்லோருக்கும் பெரியபெரிய வீடுகள் இருக்கிறது .. .நிறையத் தண்ணீர் வசதியிருக்கிறது, இதைவிட வேறென்ன வேμம் உங்களுக்கு? எதற்காக சண்டை போடுகிறார்கள் … ” என்று ஒரு இந்தியக் ‘கேர்ணல்’ அப்பாவிடம் கேட்டானாம். அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன்.

‘விளக்கம் கொடுக்க வேண்டிய வினாதான்! ஆனால் இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா? இந்தியப் பெரும் பான்மையினக் குடிமகன் இவன்! – இந்தச் சிறுபான்மை இன இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள் …எல்லாம் சொன்னாலும் தான் இவனுக்குப் புரியுமா?’ – அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம். யோசனையின் விளிம்பிற்கு வருமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப்பற்றிச் சிலாகிக்கத் தொடங்கிவிட்டானாம். அதன் பின்னர் அவன் பதில் சொல்லக் கூடிய கேள்வி யெதுவுமே கேட்கவில்லையாம்.

வீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு ‘சென்றிப் பொயின்ற்’ வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றுவிட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது. அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித் தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள். அவள் பனைமரங்களருகே போனால், ‘சென்றிப் பொயின்ற்’றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமை யான பாடலிசையும் மாறிமாறிக் கேட்கும்! அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்ன தூக்கத்திற்காய்ப் படுக்கை யறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்! அச்சமயங்களிலெல்லாம், ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்ன குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக் கொண்டு படுக்கையில் கிடப்பேன்.

அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சிலநாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை! இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்து விடவில்லை! நிறைந்த வடுக்களோடும் நெடுநெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது!

முன் ‘கேற்’றால் வீட்டினுள் நுழைபவர்களை ‘சென்றிப் பொயின்ற்’ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது. ஆனால் வருபவர் வீட்டின் நடு ‘ஹோலி’னுள் நுழைந்துவிட்டால், பின் வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத்தெளிவாய்க் காணலாம் என்பது எமக்குத் தெரியும்.

என் சினேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள். அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும், உடம்பில் ஒரு பகுதியில் ‘சயனைட்’ குப்பி இருக்கும்! பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது ‘சென்றிப் பொயின்ற்’ல் இருப்பவன் தலையை வெளியே நீட்டிக் கண்ணடித்துச் சிரிப்பான்; களிப்பில் கையசைப்பான்!

எனக்கு இதயம் படபடத்துக்கொண்டேயிருக்கும்! அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றைச் சேகரித்துக் கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள்! ‘போகிறாளே’ என்று மனத்திற்குள் ஏக்கமாயும் இருக்கும்; போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.

வீடு வீடாகச் சோதனை நடக்கிறபோதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒருநாள் காத்திருந்தது!

அது ஒரு சுட்டெரிக்கும் வெயில்நாள்! ‘சென்றிப் பொயின்ற்’ஐ நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக ‘கிறனைற்’ குண்டொன்று வெடித்திருக்கிறது! வந்தவனின் குறி தப்பிவிட்டது! வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும்தான் சேதம்! ஸ்ரேசன் முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே! ‘திபுதிபு’வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள்! ‘சட சட’வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள்! வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவிகள் பச்சை உடைக்காரரால் பன்னாடையாக்கப்படும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது!

எல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன். மருந்துநெடி வீசியது! அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு! கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன. சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி! ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையாய்ப் போர்த்தியிருக்கும் பனைகள் எல்லாம் கெக்கலித்துச் சிரிப்பதுபோல் காற்றில் அழகாய் அசைந்து கொண்டுதானிருந்தன!

ஒரு உற்சாகமான வார இறுதி நாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார். அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்பரவாக்கத் தொடங்கி விட்டார்கள்.

வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது.

மேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய்க் கதைத்துக்கொண்டிருந்தான். அப்பா, வளவைத் துப்பரவு செய்விப்பது அவனுக்குப் பெருமகிழ்ச்சி என்று விளங்கியது. புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளூர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு, அது பெரிய விடுதலை என்பது போல் அவர்களின் பேச்சும் நடவடிக்கைகளும் உல்லாசமாயிருந்தன.

துப்பரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளை விட்டிருப்பது தெரிந்தது. அப்பா, அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை. அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.

வைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது. சைக்கிள் ‘றிம்’இல் சுரீர் சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது. நான் அலுவலகத்தில் ‘ரைப்’செய்ய வேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய்ச் சைக்கிளில் வந்திறங்கினேன். வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம்! வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப் பார்க்கிறார்கள். ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது!

அம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடி வந்தா. “தேவகி .. .” என்ற ரகசிய முனகலுடனும் முற்றி வெடிக்கும் விம்மலுடனும் என்னைக் கட்டியணைத்து ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா .. !

எனக்கு எல்லாம் விளங்கி விட்டது!

“ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான் .. .” என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குளறவோ ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கவோ எல்லாம் முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு! நடுவாயிலைத் தாண்டி, பின்புறமாகவோ முன்புறமாகவோ போயிருந்து அழுதுதீர்க்க முடியாத அவலம்!

எல்லாச் சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக்குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும்! இதில் யார், யாரைப் போய்த் தேற்றுவது?!

சில மாதங்கள் எமக்குள் நெருப்புத் துண்டங்களாய்க்கனன்று பொசுங்கிக் கழிந்தது! நம்பமுடியவில்லை நமது சின்னச் சின்ன சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பமுடியவில்லை.

இலையுதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவித் தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கியபோது, ஒருநாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டை கட்டத் தொடங்கி விட்டார்கள். ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடி விட்டது! அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடை பெற்றுப்போக வீட்டுக்கு வந்தார்கள். சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மன வருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள் – சொந்த உடைமையைத் துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்!

இரவு, ஈ காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கி விட்டாள் ..!

“நாசமாய்ப் போவாங்கள் .. . என்ரை பிள்ளையையும் நாசமாக்கிப் போட்டெல்லோ போறாங்கள்! மகனே .. நானினி உன்னை எங்கை போய்த் தேட .. .” என்று பின் வளவில் குந்தியிருந்து குழறிக்கொண்டேயிருந்தா.

எனக்குக் கண்களுக்குள் நீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது!

ஆயினும் யாரும் யாரையும் அழ வேண்டாமென்று தடுக்கவில்லை!

(இச்சிறுகதை 1999 ஆனிமாதம் – இங்கிலாந்திலிருந்து வெளியான அனைத்துலகக் கலைஞர்கள் எழுத்தாளர்களது படைப்புகளின் தொகுப்பான யுகம் மாறும் ருவான் வெளியீட்டு இதழில் பிரசுரமானது. பின்னர் பாரிஸ் ஈழமுரசு பத்திரிகையிலும் மறு பிரசுரமானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *