கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 10,601 
 
 

ஜீவா முதல் முதல் கிடைத்த சம்பளப் பணத்தை புரட்டிப் புரட்டிப் பார்க்கிறான். கஞ்சிபோட்டு வெளுக்கப்பட்ட துணிபோல் மடமடப்புக் குறையாத புத்தம் புதிய தாள்கள்.

ஒரு தாளை எடுத்து முகர்ந்த போது புதுமையான வாசம் ஒன்று நாசியில் புகுவதாக உணர்ந்தான். கண்களில் நீர்முத்து ஒன்று தெறித்து திவாகரம் போல் உருண்டோடிக் கீழே விழுகிறது. இந்த நாளுக்காக அவன் எவ்வளவு போராட வேண்டியிருந்தது.?

அவனுக்கு இத்தாலி விசா கிடைத்தபோது அவனுடைய குடும்பம் அடைந்த எல்லையற்ற மகிழ்ச்சி அவன் நினைவுக்கு வருகிறது.

அந்த மகிழ்ச்சியின் பின்னணியில் பல காரணங்கள் இருந்தன..

கலையரசி, செல்லத்துரை தம்பதியினருக்கு மூன்று பெண்களுக்கு நடுவே பிறந்த ஒரே மகன் ஜீவா. செல்லத்துரை லொரி ஓட்டுனர்.அவரது உழைப்பினால் அவர்கள் குடும்பம் ஓரளவு வசதியுடனேயே இருந்தது.ஆனால் 2006 ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு லொரியை ஓட்டிச் சென்றவர் திரும்பவே இல்லை. அவருக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை தெரியாதிருந்து வருகிறது. .ஜீவாவின் மூத்த அக்கா கமலினி இச்சம்பவத்துக்கு முன்பே இயகக்த்துக்கு போய்விட்டா.ஜீவாக்கு அப்பொழுது 17 வயது.அவனுக்கு கீழ் கஸ்தூரியும் சுதர்சினியும் பருவமெய்தியிருந்தனர்.

செல்லத்துரையின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து கலையரசி சுதாகரிக்க முன்னமே ஜீவா வேறு இயக்கத்துக்குப் போய்விட்டான். அவனை மீட்டெடுப்பதற்குள் கலையரசிக்கு உயிர் போய் வந்துவிட்டது. தகப்பனில்லாதது,வீட்டுப்பொறுப்பு என்ற காரணங்களுடன் குடும்பத்தில் ஒருத்தியாக கமலி இயக்கத்தில் இருந்தமையும் அவள் இயக்கத்தில் பொறுப்பான பதவியில் இருந்தமையும் மீட்டெடுப்பதைச் சாத்தியமாக்கின.

ஆனாலும் ஜீவா மீண்டும் இயக்கத்துக்குப் போய்விடுவனோ என்ற பயம் கலையரசிக்கு இருந்துகொண்டே இருந்தது. அதனால் அவனை எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்பிவிடவேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தா. தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரித்து வெளிநாட்டுக்குச் செல்வதற்கான வழிவகைகள் சிலவற்றைத் தெரிந்து வைத்திருந்தா.

அந்தச் சமயத்தில் தான் இத்தாலியிலிருந்து கலையரசியின் தம்பி முறையான கணேசன்,அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தார். .

குசல விசாரிப்புக்களின் பின் தனது மனக்கிடைக்கையை அவரிடம் வெளியிட்டா கலையரசி.

“தம்பி!அவரும் போன இடம் தெரியாமல் போயிட்டார். மூத்தவளும் இயக்கத்துக்குப் போயிட்டாள். நான் இரண்டு குமர் பிள்ளைகளை வைச்சிருக்கிறன். ஏதோ காணியில,வயலில எண்டு வருகிறத வைச்சு குடும்பத்த ஓட்டிரன். இவன் ஜீவா தலைஎடுத்தாத் தான் இந்தக் குடும்பத்துக்கு விடிவுகாலம் கிட்டும்”.

“ஓமக்கா சீதனம் குடுக்கவாவது ஜீவா உழைக்க வேணும் தானே.”

“ஓம் ஓம் அங்கதான் தம்பி உம்மட உதவி தேவைப்படுது. இத்தாலியில ஏதோ விசா குடுக்கிறாங்கள் எண்டு கேள்விப்பட்டனான் .நீர் மனம் வைச்சா ஜீவாக்கும் விசா எடுத்துத்தராலாம் தானே ” மிகவும் மன்றாட்டமாய் அவவின் குரல் குழைந்து வெளிப்பட்டது.

“ஓமக்கா இப்ப விசாக் குடுக்கிறாங்கள்தான் .ஆனா ஒரு,,, முப்பது இலட்சம் அளவில செலவாகும் . நீங்கள் இப்ப இருக்கிற நிலையில அதக் குடுக்கிறது கஸ்டம் தானே!”

உள் நோக்கத்துடன் மிக நாசூக்காகக் கணேசன் கூறுகிறார்.

வெளிநாடுளுக்கு செல்ல முகவர்கள்30 இலடசம் வரை கேட்கிறார்கள் என்பதும் உண்மைதான் இத்தனை பணத்தை தன்னை அடைவு வைத்தால் கூட புரட்ட முடியாது என்பது கலையரசிக்குத் தெரியும். காணி பூமியை வித்து ஏயன்சிக்காரரிடம் பணம் கொடுத்தால் கூட பிரச்சினையில்லாது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வார்களா என்பதும் சந்தேகம்தான். கணேசனைவிட்டால் தனக்குப் போக்கிடம் இல்லை என நினைத்தவவாய்

நம்பிக்கையை இழக்காமல் கணேசனிடம் கேட்டா.

“தம்பி! உமக்கு ஜீவா இயக்கத்துக்கு ஒடிப்போனது தெரியும்தானே,,. எங்கட நிலையைக் காட்டி ஒருமாதிரி மீட்டெடுத்துவைச்சிருக்கிறன் .திரும்பவும் போய்விடுவானோ எண்டு பயமாக் கிடக்குது.நீர் அவனை கூப்பிட்டு அவனுக்கு ஒரு வேலை எடுத்துக் கொடுத்தீர் எண்டால் அவன் நீர் கூப்பிடச் செலவழிச்ச காசு முழுவதையும் உழைச்சுத்தருவான் தானே.”

“என்னக்கா இப்படிச் சொல்லுறீங்கள்… வேலை என்ன அங்க கொட்டிக் கிடக்குதே. ஜீவா உழைச்சுத்தாரத்துக்கு?இத்தலிக்காரனே வேலையில்லாமல் இருக்கிறான்”

“அப்பிடிநீர் சொல்லக்கூடாது தம்பி .நீர் அங்க ஒரு சுப்பமார்கெற் வைச்சிருக்கிறதா உம்மட மனிசி சுஜாத்தா சொன்னவா, அதில அவனுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுக்கலாம்தானே. ?” இதனைச் சொல்லும்போது “மனிசி எல்லா விசயத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டுதான் பேசுது”என எண்ணிக்கொண்டார் கணேசன்.

“எந்த வேலை செய்யிரதெண்டாலும் மொழி முதலில தெரிய வேணும் . சுப்ப மாக்கற்றில வேலை செய்யிற தெண்டால் சும்மாவே. இத்தாலிக்காரங்களே என்ற மாக்கற்றில வேலைசெய்ய போட்டி போடிறாங்கள். அவங்கள விட்டிட்டு இத்தாலியில அனா ஆவன்னா தெரியாத ஜீவாவை எடுத்து நான் என்ன செய்யிறது.”

கணேசனின் சுப்ப மாக்கெற் ஒன்றும் மிகவும் பெரியதல்ல .ஆசிய, தென்னமேரிக்க பொருட்களை விற்கும் சிறிய மாக்கற் தான். உண்டியலும் செய்வதால் நால்வர் வரை வேலைக்குத் தேவைப்பட்ட போதும்

சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இருவரை மட்டும் வேலைக்கு வைத்திருந்தார் .அங்கு உதவியாளராக நிற்கும் நபருக்கு இத்தாலி மொழி பேசுவது கட்டாயமானதாக இருக்காது என்பதும் கணேசனிடம் வேலைக்கு வரும் தமிழ் பெடியல் வேலைப் பழு காரணமாகவும் கணேசன் அவர்களை நடத்தும் விதம் காரணமாகவும் ஆளைவிட்டால் காணும் என அலறியோடுவதும் வேறு கதை.இதனால் மாதத்துக்கு ஒரு வேலையாள் என எடுத்துக்கொண்டிருந்தார். ஜீவாவைக்க் கூப்பிட்டால் நீண்ட காலம் வேலைவாங்கலாம் .அவருக்கு கலையரசி தானாக வந்து வலையில் விழுந்தது மகிழ்ச்சியைத்தந்தது.

“தம்பி! ஜீவா கெட்டிக்காறன் . அவன் வேலைக்குக் கள்ளப்ப்படுகிறவனில்ல. அங்க வந்தால் வேலைசெய்து எப்படியும் உம்மட கடன அடைச்சுப்போடுவான்.” எப்படியாவது கணேசனை சம்மதித்துவிடச் செய்து விட வேண்டும் என்ற வேகத்தோடு கெஞ்சுகிறா கலையரசி.

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கணித்தவராய் கணேசன் தனது திட்டத்தை முன்வைக்கிறார்.விட்டில்பூச்சி விளக்கில் வந்து விழுந்தால் விளக்கின் குற்றமல்லவே.

“அக்கா நாங்கள் ஓண்டுக்க ஒண்டு. உங்களுக்கு உதவி செய்யிறது என்ற கடைமை. நான் ஜீவாவை இத்தாலிக்குக் கூப்பிடுகிறன். ஆனா ஒரு நிபந்தனை.”

நிபந்தனை என்றவுடன் சிறிது தயக்கம் மனதில் தோன்றினாலும் அதை மறைத்து

“என்ன அது ?என்ன எண்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறம்” அவசரமாகச் சொல்லுகிறா கலையரசி.

“ஜீவா என்ற கடையில மூண்டுவருசம் சம்பளமில்லாமல் வேலை செய்ய வேணும். அதுக்கு ஓமெண்டால் நான் ஏற்பாடு செய்யிறன். ”

கலையரசிக்கு இந்த நிபந்தனை மிகச் சாதாரணமாகத் தெரிகிறது.

“அதுக்கென்ன காசில்லாமல் கூப்பிடுகிறதுக்கு அவன் செய்யத்தானே வேணும்.”

எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றிய சந்தோசத்தில் கணேசன். தங்கள் இக்கட்டுக்கள் எல்லாவற்றிலிருந்தும் மீட்க வந்த தேவதூதனாக கணேசன் கலையரசியின் கண்களுக்கு தெரிகிறார். மனமெல்லாம் நன்றியாய் அவருக்கு விடைகொடுக்கிறா கலையரசி.

விசா வந்தபோது ஜீவாவும் காற்றில் பறந்தான்..அவனுக்கு கார் ஓடுவது என்றால் அலாதியான பிரியம். செல்லத்துரையிடம் லொரியைத்தவிற ஒரு மொரிஸ் மைனர் காரும் நின்றது.பன்னிரண்டு வயதிலேயே தகப்பனின் உதவியுடன் கார் ஓடப் பழகியிருந்தான். வெளிநாடுகளில் அவனது நண்பர்கள் பலர் பென்ஸ், அவுடி ஏன் ஃபெராரி போன்ற மிக விலை உயர்ந்த புதிய மொடல் கார்களின் முன் மிகவும் ஸ்ரைலாக நின்று படம் எடுத்து அனுப்புகிறார்கள்..மாதம் மாதம் குடும்பத்துக்குச் சுளையாகப்பணம்வேறு கொடுக்கிறார்கள். காரில் உள்ள மோகமும் சம்பாதிப்பதில் ஏற்பட்ட ஆசையும் வெளிநாட்டை சொர்க்க பூமியாய் கருத வைத்தது.

இலட்சியத்துக்காய் இயக்கத்துக்குப் போனவன் இன்று வெளிநாடுசெல்வதையே இலட்சியமாக்கக் கொண்டுவிட்ட போது இளவயசு ஆசைகளும் கனவுகளும் அவனிடம் வந்து ஒட்டிக்கொண்டன.

கனவுகள் பலவற்றைச் சுமந்துகொண்டு விமானத்தில் பறந்தான் ஜீவா. அவனை அழைத்துச்செல்ல சற்றுத்தாமதாமகவே கணேசன் விமான நிலையத்துக்கு வந்தார்.

“தம்பி! மிலானோவில கடைக்கு சாமாங்கள் வாங்கினதில நேரமாச்சுது மன்னிச்சுக்கொள்ளும்”

தம்மில் பெரியவரான கணேசன் தன்னிடம் மன்னிப்புக்கேட்டது ஜீவாவின் மனதைத் தொட்டு விட்டது. கணேசன் நல்லவர் அன்பானவர் என அப்பொழுது எண்ணிக்கொண்டான்.

ஆனால் இரண்டு மூன்று நாள்களில் அந்த எண்ணத்தில் மண்விழுந்தது.

விமான நிலையத்திலிருந்து பண்ணிரண்டுமணிக்கு வீடு வந்து சாப்பிட்டுவிட்டு படுத்தவனுக்கு சில மணிநேரம் புது இடமாதலாலலும் மனக்கிளர்ச்சியினாலும் தூக்கம் வரவில்லை. மூற்றுமணியளவில் கண்னயர்ந்தவனை அதிகாலை ஐந்து மணிக்கு கணேசன் வந்து எழுப்பினார்.

அந்த நிமிடத்திலிருந்து அவனது ஊழியம் தொடங்கியது. இரண்டு வருடங்களாக இடைவிடாது தொடர்ந்தது.

வீட்டில் ஒரே ஆண்பிள்ளை என்றதால் துரும்புகூட எடுத்துப்பழக்கம் இல்லாத ஜீவா கணேசன் வீட்டில் முழு நேர வேலையாளாக மாற வேண்டியிருந்தது. கணேசன் ஐந்து மணிக்கு எழும்பிவிடுவார், அவர் முதலில் எழுப்புவது ஜீவாவைத்தான், ஜீவா குளியலறைக்கு போய் வந்தவுடன் அவனுக்கு அவரால் தேனீர் வழங்கப்படும் .அதுதான் ஜீவா பின்பு செய்யும் வேலைகளுக்கு எல்லாம் அச்சாரமாய் அமையும், இருவரும் திங்கள் வியாழன் ஆகிய இரண்டுநாள்களில் பொருடகள் கொள்வனவு செய்ய மிலானுக்கு போவார்கள். பொருட்களை வானில் ஏற்றும் பொறுப்பு முழுவதும் ஜீவாவின் தலையில் விடியும். பத்து மணிக்கு ரப்பாலோ வந்தால் இரவு பன்னிரண்டு மணிவரை கடையினை விட்டு நகர முடியாது.கடை வேலையும் சும்மா இல்லை . ரப்பாலோ என்ற சிறு நகரத்திற்கும் அதனை அண்டிய நகர் பகுதிகளுக்கும் ஆசிய, தென்னமேரிக்கப் பொருட்கள் விற்கும் ஒரே கடை இதுவாதலால் வாடிக்கையாளர்களுக்கு குறைவில்லை. கடையொடு உண்டியலும் நடத்துவதால் கடையின் வியாபாரம் அதிகம்தான். தமிழர்கள், சிங்களவர் , தென்னமேரிக்கர் என்று எப்பொழுதும் சனமாகவே இருக்கும். ஜீவாவுக்கு கடையில் சாப்பிடுவதற்கு 15நிமிடங்கள் கிடைக்கும் ஒரு நாளில் 16 மணித்தியாளத்தில் ஒரு மணித்தியாளமளவில் மட்டும் இருப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். மிகுதிப் 14 மணித்தியாளங்கள் தொடர்ச்சியாக வேலையிருக்கும். பம்பரம் போலச் சுழர வேண்டியிருக்கும் மற்றைய ஐந்து நாட்களில் எட்டு மணிக்கு கடையில் வேலை தொடங்கும். இடையில் கணேசனின் பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டுசெல்வது படசாலையிலிருந்து எடுத்துவருவது வீட்டுக்கான பொருட்களை வாங்குவது போன்ற கொசுரு வேலைகள் பல. ஜீவா வந்து இந்த இரண்டு வருடங்களில் ஒருநாள் தவறாது இப்படித்தான் அவன்பொழுதுகள் கழிந்தன.

கணேசன் ஜீவாவை இத்தாலிக்கு அழைப்பதற்கு, மொத்தமாகவே முத்திரைக்கு 16 யூரோக்கள் மட்டுமே செலவழித்தார் என்ற உண்மையை ஜீவா இத்தாலிக்கு வந்த சில நாட்களிளேயே அறிந்து கொண்டான். ஆனால் தான் ஏயென்சிக்கு 20,000 யூரோக்களைச் செலவழித்ததாகவும் அவன் அவர்களது உறவினன் என்பதால் வீட்டில் ஒரு அறையும் சாப்பாடும் உடுப்பும் கொடுப்பதால் தனக்கு அவன் பொருட்டு 400 யூரோக்கள் செலவாகிறது என்றும் பலமுறை ஜீவாவின் காது படவே பலருக்கும் சொல்வார்..உண்மையில் அவன் அவர்கள் வீட்டு வரவேற்பறையில் உள்ள செற்றியில்தான் படுக்கிறான் என்பதும் கணேசனின் பழைய உடைகளையே உடுக்கிறான் என்பதும் வேறு விடயம். அவனது சொந்தச் செலவுக்காக மாதத்துக்கு 50 யூரோக்களையாவது வழங்குமாறு அவரது மனைவி சுஜாத்தா சொன்னாலும் “அவன் அந்தப் பணத்தைக் கொண்டு எங்காவது ஓடிவிடுவான்” எனக் கூறி மறுத்துவிடுவார்.குடும்பத்தினரிடம் ரெலிபோன் கதைப்பதற்கு மட்டும் அவர்கடையில் இருக்கும் காட்டில் மாதத்தில் இரண்டு மூன்றை கொடுத்துவிடுவார்.

ஜீவா தனது கஸ்டங்கள் எதையும் தாய்க்கோ சகோதரிகளுக்கோ சொல்வதில்லை.அவ்வாறு சொல்வதால் எந்தப்பயனும் இல்லை என்பதுடன் அவர்களைத் தேவையில்லாது கவலைப்படுத்த அவன் விரும்புவதில்லை.

கணேசனின் மான்மியமாக பிறர் உழைப்பை உருஞ்சுவதை மட்டுமே சொல்லிவிடமுடியாது. கணேசன் சரியான கொதியர்,ஜீவா கவலையீனமாகச் சிறு தவறு செய்தால் கூட அன்றுமுழுவதும் கருணகொடூரமாகத்திட்டுவார். .வறுத்து எடுத்துவிடுவார். பலசமயங்களில் யாரோ செய்த தவறுக்காகக் கூட ஜீவா திட்டுவாங்கியிருக்கிறான். நிதானம், பொறுமை, மனிதாபிமானம் என்ற சொற்களுக்கு கணேசனின் அகராதியில் இடம் இல்லை. திட்டும் போது ஜீவாவின் குடும்பத்தினையும் இழுத்துத் திட்டுவார். “கொம்மா என்ற காலில விழுந்து உன்ன இங்க கூப்பிடச் சென்னவா”எனத்தொடங்கி பிச்சைக்காரக் குடும்பம் என்று முடிவுரை செய்வார் . இந்த நேரங்களில் ஜீவாவின் மனம் கொதித்துப்போகும். பல தடவைகள் இழுத்துவைத்து அடித்து நொருக்கினால் என்ன என்றுகூடக் கைத்துறுதுறுக்கும். ஆனால் அவரை விட்டு வெளியேறி எங்கு செல்வது? பாஸ்போட் அவரிடம் இருந்தது. டொக்கிமன்ஸ் செய்து தருவதாகக் கூறி அலைகழித்துவந்தார்

குடித்து நிறை வெறியிலிருக்கும் போது மட்டும் கணேசனின் மனச்சாட்சி விழித்துக்கொள்ளும் போலும்.அப்பொழுது மட்டும் அன்பொழுகப் பேசுவார்.மிகவும் மலிவான சரக்குகளைக் கடையில் இருந்து எடுத்துவந்து மற்றவர்களையும் குடிப்பதற்கு ஊக்குவிப்பார்.

“ஜீவா!ஊனக்கு நாளைக்கு சம்பளம் போட்டுத் தாரதோடு பத்து நாள் லீவும் தாரன்”

பக்கத்தில் அவர் மனைவியின் தம்பி சிவக்குமார் கொஞ்சமாகக் குடிப்பவன் .

“நீங்கள் இப்பிடிச் சொல்லுவியல் ஆனா கண்ணில காசக் காட்ட மாட்டியல்.”

எனத் தன் எரிச்சலை வெளியிடுவான்.

“இளம் வயதில் வேலை மட்டும் செய்தால் போதாது உலகை உல்லாசமாக அனுபவிக்க வேணும்” என்று கூறியபடி மதுக்கிளாசை ஜீவாவிடம் நீட்டுவார்.

ஆனால் விடிதந்ததும் குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு கதைதான்.

அன்று காலை கணேசனுடன் ஜீவா விசா கொடுக்கும் அலுவலகத்துக்குப் போயயிருந்தான்.கணேசனுக்கு ஜீவாவுக்கு விசா எடுத்துக்கொடுப்பதற்காக தனது நேரத்தைச் செலவிடுவதிலோ சிறுபணத்தைக் கூடச் செலவிடுவதிலோ விருப்பமோ அக்கறையோ இல்லைத்தான். ஆனால் விசா இல்லாது கடையில் அவனை வேலையில் வைத்திருப்பது சட்டப் பிரச்சினையாக அமையுமாதலால் சிலகாலம் அலைகழித்துவிட்டு பின்னரே விசாவுக்கான விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார். ஜீவாவின் விசா ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்கப் பட்டிருந்தது. அதனைஜீவா பெற்றவுடனேயே அந்த விசாவையும் பாஸ்போட்டையும் அவனிடமிருந்து பறிக்காத குறையாக வாங்கி தான் கவச குண்டலம்போல என்றுமே தனது தோள்களில் மாட்டிக் கொள்ளும் பையில் வைத்துக்கொண்டார் கணேசன்.

அன்றிரவு கடை வேலை முடிந்ததும் வழமை போல மது அருந்த தொடங்கிங்கி அதில் மயங்கியும் போனார் கணேசன். அவர் தோளில் போட்டிருந்த பையில் தனது பாஸ்போட் இத்தியாதிகள் இருக்கிறது என்பது ஜீவாவுக்கு நன்கு தெரியும். அவன், கல்லுழிமங்கனான கணேசனிடம் தனது சாதுரியமான பேச்சாற்றலால் ஒருவாறு அவற்றை வாங்கிவைத்துக் கொண்டான்.

சிவக்குமார் கணேசனின் மைத்துனன் என்றாலும் அவன் கூட அவரைவிட்டு தப்பியோடவே விரும்பினான்.. அதனால் அவன்கூட மனதுக்குள் ஜீவாவைப் பாராட்டியவனாக கண்டும் காணாதவன் போல் இருந்துவிட்டான்.

அதன் பின்பு ஒரு நாளைக் கூட வீணாக்கவில்லை ஜீவா. ஏனெனில் கணேசனுக்கு எப்பொழுது என்றாலும் ஜீவா வாங்கிவைத்தவை பற்றிய ஞாபகம் வரலாம்.

இத்தாலியில் ரப்பாலோ நகர் விட்டு கணேசனுக்குத் தெரியாது சுவிஸ்சுக்கு ஓடிவிட முடிவெடுத்து அதற்கான வழிவகைகளையும் தேடிக்கொண்டான்.

ஜீவாவின் பாடசாலை நண்பன் ரகு, சுவிசில் இருந்தான் . அவன் சுவிஸ் போடருக்கு ஜீவா வந்தால் தான் அவனை சுவிசுக்குள் அழைத்துச் செல்வதாக வாக்களித்திருந்தான்.திங்கள் முதல் வெள்ளிவரை மாலை ஐந்து மணிவரை போடருக்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் அவனுக்கு வேலை .இந்த நேர இடைவெளியில் எப்பொழுது வந்தாலும் ஜீவாவைக் கூட்டிச்செல்வதாகவும் அதன்பின் தானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாகவும் ரகு சொல்லியிருந்தான்.

சுவிசுக்கு போவதானல் ரயிலுக்கு 30 யூரோக்கள் தேவை. 20 யூரோ வருடப்பிப்பிறப்பிக்கு கைவிசேடமாக சுஜாத்தாக்கா தந்த காசு இருந்தது. மேல கீழ இருந்தாலும் ஒரு 25 யூரொ இன்னும் இருந்தால் போதுமானது. கடையில் எடுக்க முடியாது .. கல்லா எப்பொழுதும் கணேசனிடமோ அவரது மைத்துனன் சிவகுமாரிடமோதான் இருக்கும். அவர்கள் அசந்திருக்கும் வேளையில் எடுத்துவிடலாம்தான். ஆனால் சி.சி.டி கமராவில் பார்த்துவிட்டு ரெண்டாயிரம் மூன்றாயிரத்தை களவெடுத்துவிட்டு ஓடிவிட்டான் என உடனடியாகக் கணேசன் பொலிசுக்கு சொல்லுவார். அதன்பின் அதோகதிதான். யாரிடமாவது கடன் பெற்றால் பயமில்லாது சுவிசுக்கு போகலாம் என எண்ணியிருந்தான் .

யாரிடம் கேட்பது என்பதுதான் தெரியவில்லை.. சிவக்குமாரிடம் கேட்டால் ஆயிரம் கேள்வி கேட்பான்.வேலையிலேயே மூழ்கியிருந்ததால் உள்ளூரில் நெருங்கிய நண்பர்களாக யாரையும் அவன் சம்பாதித்துக் கொண்டிருக்கவில்லை.

அன்று சங்கரியக்கா கடைக்கு சில பொருட்களை வாங்க வந்தா. அவ வாங்க வந்த பொருட்களில் அவகேட்ட வகையான மிளகாய்த்தூள் கடையில் இல்லை. மகசீனில் தான் எடுக்க வேண்டும் . சங்கரியக்காவுக்கு சமையல் அவசரம் போலும்.. எனவே தூளைப் பின்பு எடுப்பதாக சொல்லிவிட்டு காசை கொடுத்துவிட்டு மற்றைய பொருட்களைமட்டும் எடுத்துச்சென்றா . சிவக்குமார் அவவைச் சிரமப்பட வேண்டாம் என்றும் மிக அருகில் இருப்பதால் ஜீவாவிடம் பொருளை கொடுத்திவிடுவதாகவும் சொன்னான்.

சங்கரி அக்கா பற்றி ஜீவாக்கு அதிகம் தெரியாதுதான். ஜீவா வேலை செய்த தமிழ் கடையின் வாடிக்கையாளர்களில் ஒருவ என்பதுடன் அக்கடை அமைந்த அப்பாற்மண்டில் வசிக்கிறவ, என்ற இரண்டு விடயங்கள் மட்டுமே அவன் அறிந்தவை.

“சங்கரியக்கா நல்லவபோல இருக்கிறா. அவவிட்ட காசு கேட்டா என்ன?

இப்பொழுது பத்துமணி. பதினொருமணிக்கு சுவிசுக்கு போகும் ரெயினை எடுத்தால் இரண்டுமணிக்கு சுவிஸுக்கு பொயிடலாம்” என்று எண்ணியவனாய் உடனேயே விரைவாகச் செயற்படத் தொடங்கினான். மகசீனில் இருந்து தூள் போத்தலை எடுத்துக்கொண்டு தனது செல்போன், கடவுச் சீட்டு,விசா இருக்கிறதா என்று உறுதிசெய்து கொண்டான். கூடவே தான் முன்பே மகசினில் ஒளித்து வைத்திருந்த அத்தியாவசியமான உடைகள் கொண்ட பையையும் எடுத்துக்கொண்டான். சிவக்குமார் கல்லாவில் மும்மரமாக இருந்ததால் பையைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு கடைக்கு வெளியில் வந்தான்.

சங்கரி அக்காவின் வீட்டு அழைப்புமணியை அழுத்தினான்.

சங்கரி அக்காவிடம் தூளைக் கொடுத்துவிட்டு தயங்கிநின்றான்.

“என்ன தம்பி என்னவும் வேணுமே ?” என்றா சங்கரி

“ஓமக்கா எனக்கு 25 யூரோ இருந்தாத் தாங்கோ. ரெண்டு நாளில திருப்பித்தாரன்.”

“சரி தம்பி ” என்றவ தனது கைபைக்குள் காசினைத்தேடி எடுத்து வந்தா.

“தம்பி என்னட்ட 50 யூரோ தாள் தான் இருக்கு, நீர் இதப்பிடியும்.”

உண்மையில் ஜீவா அவவிடமிருந்து பணம் கிடைக்குமா என்ற சந்தேகத்துடந்தான் தயங்கிதயங்கிக் கேட்டிருந்தான். அவன் கேட்டதில் கூடிய காசு கிடைத்திருந்தது. அவவின் காசைத் திருப்பிக் கொடுக்கப்போறதில்லை என்பது வேறு ஜீவாவுக்கு ஒரு மாதிரியாகவிருந்தது,

கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அவவுக்கு தெரியாது மறைக்க முற்பட்டபடி அவ கொடுத்த காசைப் பெற்றுக்கொண்டான்.

“நன்றி அக்கா. இந்த உதவிய நான்உயிர் இருக்கிறவரை மறக்கமாட்டன்”

“என்ன இவன் சொற்பமான பணம் கொடுத்ததுக்கு இப்பிடிப் பெரிய வார்த்தை கூறுகிறானே” என்று எண்ணியவவாகப்

“பறுவாயில்ல தம்பி” என விடை கொடுத்தா.

இத்தாலியில் இருந்து வெளியேறி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இப்பொழுதுதான் முதல் சம்பளத்தை எடுத்திருக்கிறான்.

மறுபடியும் தாள்களை எண்ணிப் பார்க்கிறான்.அ தில் சங்கரியக்காவின் முகம் தெரிவதாக ஒரு பிரமை தட்டுகிறது ஜீவாக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *