1
நாகஸ்வரக்காரனும் ஓய்ந்து போன மாதிரியிருந்தது. அவன் ஆடி வழிந்து கொண்டு மத்தியமாவதி ராகம் வாசித்து வந்த மாதிரியிருந்தது! ஆயிற்று, தம்பதிகள் பாலிகையைக் குளத்தில் விட்டதும் அவனும் மங்களம் பாடிவிட்டுத் தாம்பூலமும் சம்மானமும் பெற்றுக்கொண்டு போவதற்குத் தயாராக இருந்தான். கல்யாண வீட்டில் எல்லோரும் ஓய்ந்து போயிருந்தார்கள்.
”எங்களால் முடியாது அம்மா. சின்னப் பெண்களாக நாலுபேர் கூடப் போயிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் பெரியவர்கள் கல்யாணத்தில் பட்ட சிரமத்துக்குப் பரிகாரம் தேட முயன்று கொண்டிருந்தார்கள்.
ஜயலஷ்மிக்கும் சீனிவாசனுக்கும் – மணமகனுக்கும் மணமகளுக்கும் மட்டும் அலுப்பு இல்லை. வாழ்க்கைப் பாதையில் முதல் முதல் பிரவேசிக்கும் உற்சாகம் அல்லவா அவர்களுக்கு? நாலைந்து சிறிய பெண்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நாகஸ்வரக்காரன் மத்தியமாவதி ராகத்தை வாசித்துக்கொண்டு நடந்தான். சீனிவாசன் ஜயலஷ்மியைக் கடைக்கண்ணால் கவனித்தான். இதற்குள் எத்தனையோ தடவைகள் அவள் கண்களை அவன் சந்திக்க முயன்றும் அவள் இவன் பக்கமே திரும்பாமல் உறுதியுடன் இருந்தது, அவள் பிடிவாதக்காரி என்பதை சீனிவாசனுக்குச் சொல்லாமலே விளக்கிவிட்டது. ஜயலஷ்மியும் அவனை அதே சமயத்தில் கடைக்கண்ணால் பார்த்தாள்.
”என்ன, என்னைப் பார்க்கக்கூட மாட்டாயோ?” என்று மெதுவாக, ஆனால் ஸ்பஷ்டமாகக் கேட்டான் சீனு அவளைப் பார்த்து.
அவள் பொன்னிறக் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன. அழகாக ஆனால் சுருக்கமாக அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஜயம்.
”உன்னைத்தானே?” என்று மறுபடியும் கேட்டான் சீனு.
”பேசினால் போயிற்று. கூட எல்லோரும் வருகிறார்கள்” பெண்மையின் நிதானத்தை அந்தச் சொற்கள் விளக்கின.
இதற்குள் கோவில் வந்துவிட்டது. கூட வந்த பெண்கள் குளக்கரையில் பாலிகைக் கிண்ணங்களை வைத்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றப் போய்விட்டார்கள். பாலிகைச் செடிகளைக் குளத்தில் அலம்பிக்கொண்டே தலை குனிந்து கொண்டிருந்தாள் ஜயலஷ்மி. அவளுடைய நிதானம் சீனுவுக்குப் பிடிக்கவில்லை.
”என்னவோ அந்தக் காலத்துக் கல்யாணப் பெண் மாதிரி தலையைக் குனிந்து கொள்கிறாயே! இரண்டு வார்த்தை பேசினால் வாய் முத்து உதிர்ந்து போய்விடுமா?” சீனுவின் வார்த்தைகள் கடுமையாகத் தோன்றவே ஜயம் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
”என்ன பேச வேண்டும்? ஏதாவது கதை கிதை சொல்ல வேண்டுமா?” இப்படிச் சொல்லிவிட்டு அவள் பரிகாசச் சிரிப்புச் சிரித்தாள்.
”இன்றைக்கு மத்தியானம் ஊருக்குப் போகிறேன் என்பது தெரியுமா உனக்கு?”
”வீட்டில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்” என்றாள் ஜயலஷ்மி.
”மறுபடியும் தீபாவளியின்போதுதான் நாம் சந்திக்கப் போகிறோம்” என்றான் சீனு.
அவன் வார்த்தைகளில் பிரிவின் துயர் நிரம்பி இருந்தது ஜயலஷ்மியின் முகமும் வாடியது.
”அப்பொழுது என்னைக் கட்டாயம் உங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவீர்கள், இல்லையா?”
”இப்பொழுதுதேகூட அழைத்துப் போய்விடுவேன். உன் அப்பா தான் சம்பிரதாயப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.”
இதற்குள் கோவிலைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்த பெண்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
”நான் ஊருக்குப் போனபிறகு கடிதம் போடுகிறாயா?” என்று கேட்டான் சீனு.
”ஓ”என்றாள் ஜயலஷ்மி.
சீனு அவசர அவசரமாகத் தன் விலாசத்தை அவளிடம் கூறி முடிப்பதற்குள், மற்றப் பெண்கள் வந்துவிட்டார்கள்.
2
சீனு ஊருக்கு வந்த பிறகு இதுவரையில் தனிமை என்றால் என்ன என்று அறியாதிருந்தவனைத் தனிமை மிகவும் வருத்தியது. ஜயலஷ்மியின் பேச்சு, புன்னகை, பரிகாசம், ஒவ்வொன்றும் மாறி மாறி நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் பெண் கடிதம் எழுதினாலும் புத்திசாலித்தனமாகத்தான் எழுதுவாள் என்று நினைத்துக் கொண்டான். தேனூறும் அவள் வார்த்தைகளைப்போலவே கடிதமும் தேனில் தோய்த்து எழுதப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துகொண்டான் சீனு. ஆனால், நாட்கள் ஒவ்வொன்றாகச் சென்று கொண்டிருந்தன. தினமும் தபால்காரன் இவன் எதிர்பார்க்கும் கடிதத்தைத் தவிர வேறு கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான். சீனுவுக்கு மனத்தில் தெம்பு குறைந்து போயிற்று. இந்தச் சந்தர்ப்பத்தில் கல்யாணம் முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது ஜயலஷ்மி சீனுவின் தங்கையிடம் ரகசியமாக ஏதோ கூறியது அவன் நினைவுக்கு வந்தது. அவள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் தங்கையிடம் அந்த ரகசியத்தைப் பற்றிக் கேட்டான் அவன்.
”மதனியைக் கடிதம் போடச் சொல்லி இருக்கிறாயாம் அண்ணா. ஆனால், அவள் உனக்கு முதலில் எழுத மாட்டாளாம். நீதான் எழுத வேண்டுமாம்” என்று அந்தப் பெண் சிரித்துக் கொண்டே கூறினாள்.
சீனுவுக்கு இப்பொழுதுதான் புரிந்தது, ஜயத்தினிடமிருந்து கடிதம் வராத காரணம். கடைசியில் தன்னுடைய பிடிவாதத்தையும் போக்கிரித்தனத்தையும் விடவில்லையே என்று தோன்றியது அவனுக்கு. சீனுதான் கடிதம் முதலில் எழுத வேண்டும் என்பது தெரிந்து விட்டது. அப்பொழுதுதான் சீனுவுக்குத் தான் அவளிடம் அவள் விலாசம் கேட்டு வாங்காமல் வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. கடைசியில் கல்யாணம் நடந்த வீட்டு விலாசத்தைப் போட்டு அவளுக்கு ஒரு கடிதம் எழுதித் தபாலில் சேர்த்த பிறகுதான் அவன் மனம் ஆறுதல் அடைந்தது.
ஆனால் அவன் எதிர்பார்த்தபடி அதன் பிறகும் அவளிடமிருந்து அவனுக்குக் கடிதம் வரவில்லை!
கடைசியாக அவன் எதிர்பார்த்திருந்த தீபாவளிக்கு ஒரு வாரம் இருந்தது.
”ஊரிலேயிருந்து உன் வேட்டகத்தார் உன்னைத் தீபாவளிக்கு அழைப்பார்களே. நல்லதாகப் புடவை ஒன்று ஜயலஷ்மிக்கு வாங்க வேண்டும். என்னுடன் கடைக்கு வருகிறாயா?” என்று அவன் தாய் அவனைக் கூப்பிட்டாள்.
”நான் எதற்கு அம்மா? நீங்களே வாங்கி வந்துவிடுங்கள்” என்றான் சீனு.
”நான் கர்நாடக மனுஷி அப்பா. உன் மனசுக்கும் பிடிக்க வேண்டுமோ இல்லையோ?” என்று தாய் வற்புறுத்திக் கூப்பிட்ட பிறகு அவனும் கடைக்குப் புறப்பட்டாள்.
தாமரை வர்ணத்தில் இருந்த புடவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜயலஷ்மியின் சிவந்த மேனிக்கு இது நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால், அந்த ஜயலஷ்மிதான் ஒரு கடிதங்கூடப் போடாமல் இருக்கிறாளே என்பதை நினைத்தபோது அவளிடம் அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. தீபாவளிக்கு முதல் நாள் மாலை ஜயலஷ்மியின் வீட்டை அடைந்தான் சீனு. மாமனார் பரிந்து பரிந்து உபசரித்தார். மாமியாருக்கு மாப்பிள்ளை வந்திருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை. மைத்துனன் மைத்துனிகளுக்குப் பரிசுகள் வாங்கி வந்திருப்பவற்றை அவர்களிடம் கொடுத்தான் சீனு.
ஜயலஷ்மியும் பின்னல் அசைய ஒய்யார நடை நடந்து அவன் எதிர்போய் வந்து கொண்டிருந்தாள். ஆனால் இவன் இருக்கும் பக்கங்கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை. கலகலவென்று குழந்தைகளுடன் சிரித்துப் பேசினாள். அந்தச் சிரிப்பின் ஒலி கேட்டு இவன் உள்ளம் தேனைக் குடித்த வண்டுபோல் மயங்கியது.
‘ஒருவேளை ரொம்பவும் கர்வம் பிடித்தவளாக இருப்பாளோ?’ என்று தன் அறையில் உட்கார்ந்துகொண்டு எண்ணமிட்டான் சீனு. இரவு சாப்பிடக் கூப்பிட அவன் மாமனாரே வந்தார்.
”சீக்கிரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொள்ளலாம். விடியற் காலம் எழுந்திருக்க வேண்டும்” என்று கூப்பிட்டார் அவர். கனவில் நடப்பதுபோல எழுந்து இலையில் முன்பு உட்கார்ந்து கொண்டான். ஜயலஷ்மிதான் பரிமாறினாள். ‘வேண்டாம் வேண்டாம்’ என்னும்போதே இலையில் பாயசத்தை ஊற்றினாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாமனார் சிரித்துக்கொண்டே மாப்பிள்ளையின் அவஸ்தையை மிகவும் ரசித்தார். அந்தச் சந்தர்ப்பத்திலும் சீனு அவள் கண்களைச் சந்திக்க முயன்றான். அழகிய விழிகள் நிலத்தில் பதியக் குனிந்த தலை நிமிராமல் உள்ளே போய்விட்டாள் அவள்.
சாப்பிட்டு முடிந்ததும் தன் அறைக்குச் சென்று உட்கார்ந்தான் சீனு. தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு அவள் மைத்துனி உள்ளே வந்தாள். யாருக்காக ஆறு மாசமாக காத்திருந்து வந்திருக்கிறானோ அவள் தன்னை லட்சியம் பண்ணாமல் இருந்தது அவனுக்கு வேதனையை அளித்தது. எதிரில் தட்டில் இருந்த தளிர் வெற்றிலையும் வாசனைப் பாக்கும் அவனுக்குப் பிடிக்கவில்லை.
”இந்தா! இந்தப் புடவையை அம்மா அதுக்காக வாங்கி அனுப்பியிருக்கிறாள்” என்று தாமரைவர்ணப் புடவையை எடுத்து மைத்துனியிடம் கொடுத்தான்.
சிறிது நேரத்துக்கெல்லாம் புடவையைப்பற்றி எல்லோரும் பேசுவது கேட்டது. ஜயலஷ்மி ஏதாவது பேசுகிறாளா என்று குறிப்பாகக் கவனித்தான் சீனு. அவளுடைய பேச்சுக் குரல் கேட்கவில்லை. கடைசியாக அவள் தாய் அந்தப் புடவையைப் பீரோவில் வைக்கச் சொல்லி இவளிடம் கொடுத்ததும் அவள் பேசாமல் அதை வாங்கிக்கொண்டு போனதும் சீனுவின் வேதனையை அதிகரிக்கச் செய்தன.
3
நாகஸ்வரக்காரன் பூபாள ராகத்துடன் பள்ளியெழுச்சியை ஆரம்பித்தான். இரவு முழுவதும் தூங்காமல் இருந்து அப்பொழுதுதான் கண் அயர்ந்த சீனுவை அவன் மாமனார் வந்து எழுப்பினார். வேண்டா வெறுப்பாகப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான் சீனு.
”ரெயிலில் வந்தது அலுப்பாக இருக்கிறது. வீட்டில் எல்லோரும் ஸ்நானம் செய்து ஆகட்டுமே” என்றான் சீனு.
”மத்தியானம் தூங்கலாம். எழுந்திருங்கள்” என்று கண்டிப்பாக உத்தரவிட்டார் அவர்.
மங்கள ஸ்நானம் ஆயிற்று. தாமரை வர்ணப் புடவை சல சலக்கக் கூடத்தில் தன் தகப்பனாருடன் உட்கார்ந்திருந்த கணவனுக்கு நமஸ்காரம் பண்ண வந்தாள் ஜயலஷ்மி. ஈரம் உலராத கூந்தலைப் பின்னிப் பாதியில் கட்டியிருந்தாள். அதன்மேல் செண்டாகக் கட்டி வைத்திருந்த ரோஜாவும், மை தீட்டிய விழிகளும், புன்னகை ததும்பும் முகமும் அவனைப் பரவசத்தில் ஆழ்த்தின.
”மாப்பிள்ளை! வைர ஜிமிக்கி வேண்டுமென்று குழந்தை ஆசைப்பட்டாள். செய்து போட்டிருக்கிறேன். ஜயம்! எங்கே ஜிமிக்கியைக் காட்டம்மா” என்றார் அவர். ஜயம் காதுகளில் சுடர் விட்ட ஜிமிக்கிகளைக் கழற்ற ஆரம்பித்தாள்.
”வேண்டாம். பார்த்தாகிவிட்டதே!” என்று கூறிவிட்டுச் சீனு தன் அறைக்குப் போவதற்கு எழுந்தான்.
சமையல் அறையிலிருந்து வந்த சம்பாஷணை அவன் காதில் விழுந்தது. ”தீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளை மாதிரி இல்லையே உன் கணவர்! அவர் வந்ததிலேயிருந்து நீ அவர் இருக்கும் பக்கமாவது போனால்தானே? சமையல் அறையையே சுற்றிச் சுற்றி வருகிறாயே!” என்றாள் ஜயலஷ்மியின் தாய்.
”நீதான் பட்சணமும் காபியும் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். வேறே யாரும் போகக்கூடாது; தெரியுமா?” என்று வேறு மற்றவர்களுக்குத் தடை உத்தரவு போட்டாள் அந்த அம்மாள்.
ஜயலஷ்மி காபியையும் பட்சணத்தையும் கொண்டு வந்து மேஜைமேல் வைத்தாள். யாருடைய வரவை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தானோ அவள் பதுமைமாதிரி அவன் எதிரில் நின்றுகொண்டிருந்தாள். சீனு மெதுவாக எழுந்து கதவை ஓசைப் படாமல் தாழிட்டான். கைதியைச் சிறைபிடித்த அதிகாரியின் உற்சாகம் அவன் முகத்தில் இருந்தது.
”இந்தா! இங்கே எதற்காக வந்திருக்கிறேன், தெரியுமா?” என்று கேட்டான் அவன்.
”தெரியும்” என்று பதில் அளித்தாள் அவள்.
”என்ன தெரியும்? வந்தவனை மதிக்காமல் இருக்கத் தெரியும். போட்ட கடிதத்துக்குப் பதில் போடாமல் இருக்கத் தெரியும்.”
ஜயலஷ்மியின் முகம் கடிதம் என்றவுடன் கோபமடைந்து சுருங்கியது.
”யாருக்குக் கடிதம் எழுதினீர்கள்? யார் பதில் போட வேண்டும்?”
”சாக்ஷாத் உனக்குத்தான். நீதான் எனக்குப் பதில் போடவேண்டும். போட்டாயா?”
”எனக்கு ஒன்றும் நீங்கள் கடிதம் எழுதவில்லை.”
”பொய்யா சொல்லுகிறாய்?”
”ஐயோ! கடிதத்தைப் பற்றி உரக்க வெளியில் பேசாதீர்கள். எனக்கு அவமானமாக இருக்கிறது!”
சீனுவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
”என் மனைவிக்குக் கடிதம் எழுதி அவமானப்பட என்ன இருக்கிறது ஜயா.” ஜயலஷ்மியின் கண்களில் முத்துப்போல் நீர் வழிந்தது. ”நீங்கள் எனக்கு ஒன்றும் கடிதம் எழுதவில்லை. என் சிற்றப்பா பெண் ஜயத்துக்குத்தான் எழுதியிருக்கிறீர்கள். கூடப் பிறந்த சகோதரிகளைவிட நாங்கள் ஒற்றுமையாக இருப்பதால்தான் இந்த விஷயம் பெரியவர்களுக்குத் தெரியாமல் மறைக்க முடிந்தது. பாவம்! அவள் வேர்க்க விறுவிறுக்க அந்தக் கடிதாசியை என்னிடம் கொண்டுவந்து கொடுக்காமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும்?”
சீனு அவள் கையில் இருந்த கவரை வாங்கிப் பார்த்தான். ஒன்றும் புரியாமல் விழித்தான்.
”ஜயம்! எனக்கு ஒன்றுமே புரியலையே! அந்தப் பெண்ணின் பெயரும் ஜயலஷ்மிதானா?”
”நமக்குக் கல்யாணம் என் சிற்றப்பா வீட்டில்தானே நடந்தது! அந்த விலாசத்தில் என் தங்கை ஜயலஷ்மி என்று ஒருத்திதானே இருக்கிறாள்?”
”ஆமாம், என் விலாசம் மட்டும் கேட்டு வாங்கிக்கொண்டு உன் விலாசம் கொடுக்காமல் இருந்துவிட்டாயே. அத்துடன் முதல் கடிதம் நான்தான் போடவேண்டும் என்று வேறு சொல்லி அனுப்பியிருந்தாய்!”
ஜயலஷ்மி கன்னம் குழியச் சிரித்தாள்.
”இந்தத் தடவையாவது சரியான விலாசம் கொடுக்கிறாயா ஜயம்?”
”போதும், போதும், முதல் கடிதம் போட்ட லட்சணம்! விலாசமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உங்களுடன் என்னை அம்மாவும் அப்பாவும் ஊருக்கு அனுப்பி வைக்கப் போகிறார்களாம்.”
இப்படிக் கூறிவிட்டு ஜயலஷ்மி அவனை கடைக்கண்ணால் பார்த்தாள். வெளியில் குழந்தைகள் கொளுத்தும் மத்தாப்பின் ஒளி பட்டு அவள் மதிவதனம் சுடர்விட்டு பிரகாசித்தது. சீனு வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்தான். இருவரும் ஒரே சமயத்தில் மேஜைமீது கிடந்த முதல் கடிதத்தைப் பார்த்துக் கலகலவெனச் சிரித்தார்கள்.