கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 9,832 
 

மொட்டைமாடி சுவரின் விளிம்பில் சாய்ந்து நின்று குளிரும் காற்றை மல்லிகையின் வாசத்தோடு நாசிக்குள் இழுத்தபோது, தேவகிக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அப்பாவின் இறப்புக்கு பிறகு, இந்த வீடும், தோட்டமும், பேரூர் கோவிலும் மட்டுமே அம்மாவின் உலகம்.

தோட்டத்து மல்லிகையோடும் நந்தியாவட்டை பூக்களோடும் அம்மாவுக்கான உறவு தனிதான். பெரிதாய் அலட்டிக்காமல் அதிகமாய் அவற்றோடு பேசிக்கொள்ளாமல் தண்ணீர் விடுவதும் பூக்களைப் பறிப்பதும் கோர்ப்பதுவுமாய் இருப்பாள். சிறு வயதிலிருந்தே தன்னோடும் அவள் அதிகமாய் பேசியதில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. தன் திருமணத்திற்கு பிறகு, தன்னைவிட ராகவனிடம் அதிகமாய் உரிமை எடுத்துக்கொள்வதை அவள் கவனித்திருக்கிறாள்.

மொபைல் சத்தமிடவும் எடுத்தாள். ராகவன்தான். மித்ராவையம் மாப்பிள்ளையையும் சென்னை விமானநிலையத்தில் விட்டுவிட்டதாக சொன்னார். இனி மித்து கல்கத்தாவில். ராகவனின் குரலில் கரகரப்பு தென்பட்டது. அழுதிருப்பாரோ. மித்துவுக்கும் இவர் மட்டுமே போதும். தான் தேவையேயில்லை என்பதும் தேவகிக்குப் புரியும்.

தன் முழு அன்பையும் மித்துவுக்கு கொடுக்கமுடியவில்லையோ என்கிற குற்றஉணர்ச்சி அவளுக்குள் எப்போதும் உண்டு. பெரும்பாலும் வேலைக்கு செல்லும், அதுவும் மாற்றல்கள் அதிகமிருக்கும் வேலையில் இருக்கும் பெண்களுக்கு இந்த உறுத்தல் அதிகமாகவே இருக்கும். டிரன்ஸ்பர் போட்ட இடத்திலிருந்து மறுபடி இடம் மாற்றி வருவதற்கு ஒரு போராட்டம், இரண்டு ஊர்களுக்கு இடையில் அலைச்சல், குடும்பத்தை கவனிக்க முடியாமை, பணி சுமை என்று எல்லாமும் சேர்ந்து அழுத்தும் கொடுமை, இப்படி எல்லாமே உண்டு.

மித்ரா பிறந்து ஆறு மாதத்தில் சென்னைக்கு மாற்றலாகியது அவளுக்கு. அந்த காலத்தில் அவ்வளவு பேருந்து வசதிகளும் கிடையாது. இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை விடுமுறையில் வரும்போது, மித்து இவளிடம் ஒட்டவேமாட்டாள். ஒவ்வொரு முறையும் திரும்பிசெல்லும் பேருந்து பயணத்தில் கண்ணீர்தான் இவளுடன் பயணிக்கும்.

மித்துவுக்கு இரண்டு வயதாகும் போது,மாடி அறையில் குடியிருந்த ராகவனை அப்பா என்றே அழைக்க ஆரம்பித்தாள். அம்மா ராகவனை இரண்டாவதாய் ஏற்றுக்கொள்ளும்படி அவளிடம் கெஞ்சியபோது மித்துவே இவளின் கண்முன் முதலாய் நின்றாள்.

திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில், தனக்கு கணவனாய் வந்த செந்தில் இருதயநோயால் இறந்தபோது, மித்து வயிற்றில் உண்டாகியிருந்தாள். எல்லோரும் கலைக்க அறிவுறுத்தியபோது, இவளும் கூட அரைமனதாய் ஒத்துக்கொண்டாள். அம்மா மட்டும்தான் எதிர்த்தாள். அது பாவம், கூடாது என்றாள்.

அதன் பிறகு அம்மாவே இவளுக்கு எல்லாமும் செய்தாள். அம்மா யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டாள். இரண்டாம் திருமணம் என்பதெல்லாம் அவள் அகராதியில் கிடையவே கிடையாது. குலம், கோத்திரம், ஜாதகம் என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவள். அவளே தேவகியிடம் ராகவனை இரண்டாவதாய் ஏற்றுக்கொள்ள சொன்னது அந்த சமயத்தில் இவளுக்கு குழப்பமாய் இருந்தது.

ஊருக்கு வரும் சமயங்களில் மட்டுமே தேவகி ராகவனைப் பார்த்திருக்கிறாள். பி காம் படித்துக் கொண்டிருப்பதாக ஒரு முறை கூறியிருக்கிறார். ரொம்ப வெட்கசுபாவி. இவளைப் பார்த்தாலே நாணிக்கோணி ஒதுங்கிக்கொள்வார். மித்துவின் பிரியம் இவளைவிட அவர்மேல் அதிகமாய் இருப்பது தெரிந்தே தேவகியும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள்.

அவர்களுக்கென்று இருந்த தோப்பில் விவசாயம் செய்வது, மித்துவை கவனித்துக்கொள்வது என்று அம்மாவின் பிள்ளையாகிப் போனார். பெண்மையின் அன்பின் சாயலை இவள் ராகவனிடம் பார்த்ததுண்டு. இந்த வீட்டில் ஆண், பெண் என்ற இரண்டு படிமங்களும் மாறி அமைந்துவிட்டதோ என்று சில வேளைகளில் அவள் நினைப்பதுண்டு.

ஓடிவிட்டது காலமும். மித்ராவும் பள்ளி முடித்து ஊருக்கு அருகில் இருக்கும் விவசாய கல்லூரியிலேயே பட்டமும் பெற்று, இப்போது திருமணமும் முடிந்து கணவனுடன் பறந்தும்விட்டாள்.

கிளம்பும் சமயம் கூட சென்னை வரை தானும் உடன் வரவா என்ற தேவகியின் கேள்விக்கு, ‘வேண்டாம்மா, அப்பாதான் இருக்காரே. எப்படியிருந்தாலும் நான் கூட இல்லைன்னா உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கப்போறது அப்பாதான். அபபுறம் நீ ஏன் வந்து சிரமப்படுறே. உன் வேலையைப் பாரும்மா.’ என்று வெகுசாதாரணமாய் சொல்லிவிட்டாள் மித்ரா.

தன்னை இந்த சின்ன பெண் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது என்று சுர்ரென்று கோபம் வந்தாலும், அவள் பார்வையில் அவர்தானே எல்லாமே செய்துவிடுகிறார். காலையில் எழுப்புவதிலிருந்து, அவளை கல்லூரியில் இறக்கிவிடுவது வரை அவர்தான்.

ராகவனுக்கும் தேவகிக்கும் திருமணம் முடிந்த புதிதில் கட்டம் போட்ட சட்டை ஒன்றை வாங்கி அவர்கிட்டே கொடுத்தாள். அவர் அதை போடாமல் இருக்கவும் போடசொல்லி வற்புறுத்தினாள். அதற்கு சம்மதித்து அவரும் அதை போட, அம்மா அவகிட்டே வந்து,’ ஏன் தேவகி, ராகவன் என்னைக்காவது கட்டம் போட்ட சட்டை அணிந்து பார்த்திருக்கியா, அவன் அலமாரியில் இதே மாதிரி ஏதாவது சட்டை இருக்கிறதையாவது பார்த்திருக்கியா. நல்ல சட்டை வாங்கினே போ..நீ சொன்னேன்னு அவனும் மாட்டிக்கிட்டு அலையிறான்னு பாருன்னு…’ என்று கேலியுடன் சொன்னாள். அம்மா ராகவனை புரிந்துக்கொண்ட அளவுக்கு தான் புரிந்துக்கொள்ளவில்லையோ என்று அப்போது தோன்றியது.

அம்மாவுக்கு அப்புறம் அவரை முழுமையாய் புரிந்துக்கொண்டது மித்துதானோ. இவர்களுக்கிடையில் நான் எங்கே பொருந்துகிறேன் என்ற ஐயம் எழுந்தது அவளுள். இந்த கேள்வி மித்ரா வளர வளர அதிகம் தோன்றத் தொடங்கியது.

கௌரியம்மா கீழிருந்து குரல் கொடுத்தாள். ‘செடிக்கு எல்லாம் தண்ணி ஊத்தவாம்மா ‘ என்று. தலையசைத்தாள் தேவகி. அம்மா இறந்தபிறகு, கௌரியம்மாதான் இந்த வீட்டில் எல்லாமும்.

அவளுக்கும் ராகவனுக்கும் திருமணம் முடிந்த சில வருடங்களாகவே கௌரியம்மா அடிக்கடி கேட்கும் கேள்வி, ‘ நாள் தள்ளி போச்சாம்மா’ என்பதே. இவளும் இல்லைன்னு சொல்லி அலுத்துவிட்டாள். கௌரியம்மாவும் அலுத்துபோய் கேட்பதையே நிறுத்திவிட்டாள். அவங்க கேட்டதில் என்ன தப்பு. ஆமாம், ஏன் எனக்கு நாள் தள்ளி போகவில்லை என்று தலை உருட்டத் தொடங்கினாள். என்ன இந்த வயதில் இப்படி நினைப்பு என்று வெட்கமாய் வந்தது. மெலிதாய் சிரிப்பும் கூடவே வந்தது.

கிளம்பும் போது கௌரியம்மா, ‘நாளைக்கு ஒரு கம்பி கோலம் இழுத்துவிடுங்கம்மா. நான் எட்டு மணிக்குதான் வருவேன்’ என்று சொல்லியவாறே கேட் மூடிவிட்டு சென்றார்.

மெதுவாய் மாடியில் இருந்து இறங்கினாள். வீட்டுக்குள் இன்னும் கல்யாண வாசம் ஒட்டிக்கொண்டிருந்தது

ராகவன் இந்நேரம் கிளம்பியிருப்பார் . இனி இவ்வளவு பெரிய வீட்டில் அவளும் அவரும் மட்டுமே என்று நினைக்கும்போதே அவளுக்குள் ஏதோ ஒரு பயம் உண்டாகியது. இவ்வளவு வருடத்தில் மித்து இல்லாமல் ராகவனை அவள் எதிர்கொண்டதே இல்லை. இருவரும் ஒருவரின் நிழலாய் இருந்துக்கொண்டிருந்தது அவளுக்கு பிடித்திருந்தது, சில விஷயங்களில் அது அவளுக்கு சௌகரியமாகவும் இருந்தது.

ஹாலை கடக்கும்போது, அம்மாவின் புகைப்படம் கண்ணில்பட்டது. அம்மாவிடம் கோலநோட்டு இருக்குமே. நாளைக்கு கோலம் போடா உதவுமே என்ற யோசனையுடன் அம்மாவின் பொருட்களைப் போட்டு வைத்திருந்த பெட்டியைத் திறந்தாள்.

கோலநோட்டைத் தேடியெடுத்தாள். பக்கங்கள் எல்லாம் பழுப்பு நிறத்தில், திருப்பினாலே கிழிந்துவிடும் நிலையில் இருந்தது. அந்த பெரிய சைஸ் நோட்டை மெதுவாய் விசிறி போல் விரித்து ஓட்டினாள். அதிலிருந்து வந்த பழைய புத்தகத்தின் மணம் சுகமாய் இருந்தது. கண்களின் பார்வை வட்டத்துக்குள் சட்டென சிறிய சைஸ் தாள்களும் கடந்தன. புரட்டுவதை நிறுத்தி, அவற்றை எடுத்துப்பார்த்தாள். அம்மாவின் கையெழுத்தில் நான்கு பேப்பர்கள்.

அதில் ‘நான் எடுக்கும் இந்த முடிவுக்கு என்னை மன்னிச்சுருங்க பெருமாளே..’ என்று ஆரம்பித்திருந்தாள்.

வயிற்றுக்குள் ஏதோ செய்தது தேவகிக்கு. படிக்க படிக்க அம்மாவா இதற்கு ஒப்புக்கொண்டாள் என்கிற கேள்வி அவளைக் கொன்றது. மெதுவாய் சுவரோரமாய் அமர்ந்தாள்.

திருமணம் நிச்சயம் ஆனா சமயம், ராகவனின் குடும்பம் பற்றி அம்மாவிடம் கேட்டிருக்கிறாள். அவனுக்கு யாரும் கிடையாது என்று சொல்லியிருந்தாள் அம்மா. ஆனால், இதில்..

ராகவனின் குடும்பம் வசதியான குடும்பமாய் இருந்து, ராகவன் பிறந்தபிறகு நொடிந்து போனதையும் ஒரு கட்டத்தில் அவனின் பெற்றோர் தற்கொலை செய்துக்கொண்டதையும் உறவுகளெல்லாம் அவனை தரித்திரம் பிடித்தவன் என்று ஒதுக்கியதையும் எழுதியிருந்தாள்.

பள்ளிபடிப்பு முடித்ததும் படிப்பை நிப்பாட்டிவிட்டாள் அவன் அத்தை. வீட்டு வேலை செய்துவந்த அவனை அவன் மாமாதான் போராடி கல்லூரியில் சேர்த்ததாகவும், மறுநாளே அவர்களின் மருமகன் இறக்கவும் அதற்கும் இவன் ராசிதான் காரணம் என்று சொல்லி இவனை அடித்து ஊரைவிட்டு வெளியே அனுப்பியதும் குறித்து எழுதியிருக்கிறாள்.

உறவில் ஒரு திருமணத்திற்காக சென்ற அம்மாதான் ரோட்டில் பசியுடன் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த ராகவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து நான்கு நாட்களாக வைத்தியம் பார்த்து வீட்டுக்கு கூட்டிவந்திருக்கிறாள்.

அம்மாவும் ராகவனின் அத்தையுடன் பேசியிருக்கிறாள். அந்த அம்மா எங்களுக்கும் அவனுக்கும் சம்மந்தமேயில்லைன்னு சொல்லியிருக்காங்க. அதன் பிறகுதான் கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு அவனைப் படிக்க வைப்போம் என்று அம்மா துணிந்திருக்கிறாள் .படிப்பு முடித்து அவனும் அம்மாவிற்கு துணையாக இருக்க, அவளுக்கு தேவகிக்கு ராகவனை திருமணம் செய்யும் எண்ணம் வந்திருக்கிறது.

அதற்கு அவனிடமிருந்து ஒரு ஆட்சேபம் மட்டும் வந்திருக்கிறது. மித்து மட்டும் போதுமென்பதே அது. ஆபரேஷன் செய்துகொள்கிறேன் என்றிருக்கிறார். முதலில் அம்மா பதறியிருக்கிறாள். ‘இது உனக்கு, உன் சந்ததிக்கு நான் செய்யும் பாவம்..’ என்றிருக்கிறாள்.

‘எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய என்னை நீங்கதானே ஆளாக்கியிருக்கீங்க. இருக்க இடம், உறவு, படிப்பு, பொறுப்பு, மித்து குட்டியின் அன்பு, எல்லாமே நீங்க போட்டதுதான். எனக்குன்னு தனியா ஆசை கிடையாது. எனக்கு மித்ரா மட்டும் போதும்மா. தேவகிக்கும் பின்னாடி சங்கடம் இல்லாமல் இருக்கும். சரின்னு சொல்லுங்கம்மா.’ என்று வற்புறுத்தி சம்மதிக்கவைத்திருக்கிறான்.

மித்துவை தான் கலைக்க நினைத்தபோது, வேண்டாம் என்று உறுதியாய் நின்று, கருவைக் காப்பாற்றியவள். அதுதான் ராகவனின் இந்த வேண்டுகோள் அவளை பெருமாளிடம் மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறது. தேவகிக்கு நினைக்கவே மலைப்பாய் இருந்தது. தனக்கு தெரியாமல் எத்தனையோ நடந்திருப்பதை அவளால் தாங்கமுடியவில்லை.

ராகவன் வந்து சேர்ந்தபோது இருட்டிவிட்டது. சாப்பிட்டுவிட்டு புத்தகத்துடன் உள்ளே நுழைந்தவர், இவளின் முகவாட்டத்திற்கு காரணம் கேட்க, விசும்பலுடன் தொடங்கினாள் கடித விஷயத்தை.

முதலில் மௌனம் காத்தவர், பின்பு பேசத் தொடங்கினார்.

‘இரண்டாம் திருமணம் என்று பேச்சு வந்ததும், மித்து மட்டும் போதும்னு நீதான் அம்மாகிட்டே சொல்லியிருக்கே. அதுதான் நானும் யோசித்தேன். யாருமேயில்லாத எனக்கு வாழ வாய்ப்பு கொடுத்தவங்க அம்மா. நான் தரித்திரம் இல்ல, ஒரு பலம், ஒரு தூண், ஒரு ஆண்மகன், ஒரு விவசாயி, ஒரு பிள்ளையின் தகப்பன் என்னும் அந்தஸ்த்தை கொடுத்தவங்க அவங்க. அதுக்காகதான்..’

‘உங்களுக்குன்னு ஒரு குழந்தை வேணும்னு ஆசை இருந்ததில்லையா ‘

‘மித்துவை குழந்தையாக இருந்தபோது நீ பார்த்திருக்கணுமே. அவளோட சிரிப்புல என் கவலை, என் தரித்திரம், என் விளங்காத ராசி இப்படி எல்லாத்தையும் மறந்திருக்கேன். அவ என்னை அப்பான்னு சொல்லும்போது, போதும் இந்த உயிர்ன்னு நினைச்சிருக்கேன். அந்த அளவு சிறுவயதிலிருந்து வேதனைகளோடு வாழ்ந்திருந்திருக்கேன். நீ ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் உன்னை ஒரு பெண்ணாய் பார்த்ததில்லை. மித்துவின் அம்மான்னுதான் பார்த்திருக்கேன். மித்ராவின் மூலமாய்தான் நீ எனக்கு அறிமுகம். அதனால் அவளுக்காக எடுத்த என் முடிவில் எனக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. இப்போ வரை. அம்மாவை சம்மதிக்க வைக்கத்தான் நான் ரொம்ப சிரமப்பட்டேன். அதுதான் நான் அவங்களை வருத்தப்படுத்திய தினமாக இருக்கும்னு நினைக்கிறேன்.’

‘அப்போ இதிலே நான் யாரு? எந்த இடத்தில் நான் நிற்கிறேன்?’ என்ற தேவகியின் குறுக்கிடலுக்கு,

‘இந்த முக்கோணத்தின் மூன்று முனைகளிலும் நீ இல்லே. நான், அம்மா, மித்து மட்டுமே. நடுவில் மையப்புள்ளியாக, ஓர் அரசகுமாரியாக அரசாட்சி செய்துகிட்டு இருந்தே. உன்னை சுற்றி நாங்க இயங்கினோம், உன்னை தொல்லைபடுத்தாமல்..’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல, தேவகிக்கு இப்போது புரியத் தொடங்கியது. இன்று என்றில்லை, என்றுமேதான் இதை கலைத்துவிடக்கூடாது என்கிற சங்கல்பத்துடன் அவரின் தோள் மீது சாய்ந்துக்கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *