மீனாட்சிப் பாட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 3,184 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திடுக்கிட்ட மீனாட்சிப் பாட்டிக்கு அடிவயிற்றில் குபீரென்றது. ஏற்கெனவே பதைபதைத்துப் போயிருந்த அவள் இதயம் கழன்று விடுவதைப் போல் கடகடவென்று ஆடியது. கொட்டும் மழையில் எதிர்பார்த்துக் காத்திருந்த அவளின் ஒரே உறவான லெட்சுமி இப்படி வந்து சேரும் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. லெட்சுமி சற்றுத் தொலைவில் வரும்போதே ஓடிப்போய் அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“ஏண்டா கண்ணு, எந்தப் பாவி இப்படி ஒங்காலை அடிச்சி ஒடிச்சுப்புட்டான். அவன் வீட்டிலே இடிவிழ, மாரியாத்தா வந்து தூக்கிக்கிட்டுப் போவ, அட முருகா, நீதான்டாப்பா அவங்களைக் கேக்கணும்” இன்னும் என்னென்னவோ புலம்பிக் கொண்டே மூன்று கால்களில் பரிதாபமாக நின்றுகொண்டிருந்த லெட்சுமியின் உடைந்த காலைத் தடவிக் கொடுத்தாள் மீனாட்சிப் பாட்டி. ஆற்றாமையால் அந்த இரண்டு உயிர்களின் கண்ணீரும் மழையோடு கலந்து மண்ணில் மறைந்து கொண்டிருந்தது.

மழை நின்றது. லெட்சுமியைக் கொண்டுபோய்க் கொட்டகையில் கட்டினாள் மீனாட்சிப் பாட்டி. மண்ணுலகில் அறுபது ஆண்டுகள் வாழ்ந்து விட்டதற்குச் சான்றாக அவள் முடியில் எஞ்சியிருந்தவை வெள்ளிக்கம்பிகளாக மாறிப் போயிருந்தன. வாழ்க்கையின் நீண்ட பயணத்தின் களைப்பு அவள் உடலில் புரையோடி இருந்தது. அதோடு கட்டை உருவமும் கந்தலாடையும் ஒரு கொய்யாய்க்காயின் அளவே உள்ள கொண்டையும் மீனாட்சிப் பாட்டியை அறிமுகம் செய்யும் அடையாளங்களாக இருந்தன.

லெட்சுமி தரும் பால்தான் மீனாட்சிப் பாட்டிக்கு உணவு, உடை, ஏன் வாழ்க்கையையே வழங்கிக் கொண்டிருந்தது. அவள் வாழ்க்கையில் தொல்லைகள் ஏதும் கொடுக்காத ஒரே துணையும் லெட்சுமிதான். ஆண்டு தவறாமல் லெட்சுமி கன்று போட வேண்டும். இது அவளுடைய வேண்டுதல். ஓர் ஈற்றுத் தவறினாலும் மீனாட்சிப் பாட்டி தவித்து விடுவாள்.

அவளுக்கு நறுக்காக மூன்று வாடிக்கையாளர். பால் பணம் கொத்தாக வராவிட்டாலும் தவணை முறையிலாவது மாதம் இருபது அல்லது இருப்பத்தைந்து என்று வந்து கொண்டிருந்தது. அவளின் உணவு, மாட்டின் உணவு, வேறு எல்லாச் செலவுகளுமே அதில்தான். மீனாட்சிப் பாட்டிக்கு எதிர் காலத்திலும் சற்றுக் கவனம் இருந்தது. அதனால் அவ்வப்போது சில நாணயங்களையாவது உண்டியலில் போட்டுக் கொண்டிருந்தாள். அதிக ஆடம்பரமும், ஆரவாரமும் இல்லாத வாழ்க்கை. அது அவளுக்குப் பழக்கமும் இல்லை. அவளுக்கு லெட்சுமியும், அவள் குலதெய்வத்தையும் தவிர வேறு எதைப் பற்றியும் அதிக நினைவும் கற்பனையும் இல்லை. அவ்வப்போது, காலஞ்சென்ற கணவரின் நினைவு மனத்தை உலுக்கும். சில சொட்டுக் கண்ணீர் சுரந்து காயும் போது மீனாட்சிப் பாட்டி பழைய நிலைக்கு மீண்டுவிடுவாள்.

முருகனைக் கும்பிட்டுக் கொஞ்சம் திருநீற்றைக் கையில் அள்ளிக் கொண்டு லெட்சுமியைக் காண வந்தாள் மீனாட்சிப் பாட்டி. ஏதோ முணுமுணுத்தபடி உடைந்த காலில் விபூதியைப் பூசினாள். ஏற்கனவே அவளுக்குத் தெரிந்த நாட்டு வைத்தியத்தைச் செய்திருந்தாள். இனி முருகன் துணைதான். லெட்சுமியின் கண்களில் நீர் சுரந்து கொண்டிருந்தது. அதன் இரு கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அதன் தாடையில் கரிய நிறக் கோடுகளைப் போட்டிருந்தது.

“ஏண்டி கண்ணு அழுவுற” மீனாட்சிப் பாட்டி லெட்சுமியை அணைத்துக் கொண்டாள். லெட்சுமிக்குக் கால் குணமாகிவிட்டால், மாரியாத்தாவுக்கு நெய் விளக்கு போடுவதாகவும், முருகனுக்கு என்னவோ செய்வதாகவும் வேண்டிக் கொண்டாள்.

அங்கிருந்த குப்பைகளையும் புல்லையும் கூட்டிப் புகை மூட்டினாள். லெட்சுமியைச் சுற்றியிருந்த கொசுக்கூட்டம் சற்று விலகியது. லெட்சுமி அமைதியாக அசைபோட ஆரம்பித்தது. நீண்ட நேரத்திற்குப்பின் மீனாட்சிப் பாட்டி ஏதோ ஒரு சிறிய ஆறுதலோடு வீடு திரும்பினாள். பழைய சோற்றில் கொஞ்சம் மோரைவிட்டுக் கரைத்து வாயில் ஊற்றிக் கொண்டாள். நெற்றியில் பட்டையாக விபூதியைப் பூசிக்கொண்டு மூலையில் கிடந்த கோரைப்பாயை விரித்து அதில் முடங்கிக் கொண்டாள். குளிரின் கொடுமை தாங்க ஓட்டைகளோடு தேய்ந்து நைந்து முடியவில்லை போலும். பல போன போர்வையை இழுத்துத் தன்னை மூடிக்கொண்டாள். களைப்பு அவளைப் படுக்கையில் தள்ளியது. கவலையும் ஒரு பக்கம் அவளை வாட்டியது. பாவம், அவளுக்கும் உயிரென்று ஒன்று இருக்கிறதே! அது இன்னும் பிரியவில்லை. அதனால் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்!

லெட்சுமியின் கருணை வெள்ளம் இன்னும் சில நாட்களுக்குள் வடிந்துவிடும். “அடுத்த கன்னு போடற வரைக்கும் பால் கிடையாது” என்று வாடிக்கையாளருக்கு அறிவிப்பும் செய்துவிட்டாள், மீனாட்சிப் பாட்டி. லெட்சுமியோ அடுத்த கன்றுபோடும் நிலையில் இல்லை, இதுவரைக்கும் அதன் வயிற்றில் ஏதும் இருப்பதாக மீனாட்சிப்பாட்டிக்குத் தெரியவில்லை. அதுதான் அவளுக்குப் பெரிய கவலையாக இருந்தது. இந்த நிலையில் லெட்சுமி காலைவேறு உடைத்துக் கொண்டது. லெட்சுமியும் இனிமேல் மீனாட்சிப் பாட்டி போல் தனிமையாய் வாட வேண்டுமா? இந்த நினைவுகள் மீனாட்சிப் பாட்டியின் இதயத்தை சுட்டுச் சுட்டுப் புண்ணாக்கி விட்டது. வெப்பம் நாக்குவரை படர்ந்து வறட்சியை உண்டாக்கியிருக்க வேண்டும். மீனாட்சிப் பாட்டி பாயைவிட்டு எழுந்தாள். முழங்கால் மூட்டுகள் படபடவென்று முறிந்தவைபோல ஒலியிட்டன.

தட்டுத் தடுமாறி நடந்து சென்று செம்பிலிருந்து கொஞ்சம் தண்ணீரை மொண்டுக் குடித்தாள்.

‘பொழுது விடியவே கூடாது’ என்று போர்வைக்குள் புதையுண்டு தூங்கும் அக்கம் பக்கத்தாரின் குறட்டையொலி அவள் மந்தமான காதுகளிலும் வந்து விழுந்தது. கதிரவனின் வரவுக்கு நீண்ட நேரமாய்க் காத்திருந்த மீனாட்சிப்பாட்டி, சலிப்படைந்து கால்களைப் பாயில் நீட்டியபடி உட்கார்ந்து கொண்டிருந்தவள் அப்படியே தலையணைப் பக்கம் சாய்ந்தாள். எவ்வளவு நேரந்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தாளோ, தனக்குத் தொல்லையாக இருந்ததோ என்னவோ உறக்கதேவன் மீனாட்சிப் பாட்டியை மெல்ல தன் வலைக்குள் ஈர்த்துக் கொண்டான்.

கதிரவன் அரைகுறையாகக் கண் விழித்திருந்தான். உலகின் இருட் போர்வை மெல்ல விலகிக் கொண்டிருந்த நேரம், காலை மணி ஏழிருக்கும். மீனாட்சிப்பாட்டி லெட்சுமிக்குக் கஞ்சி வைத்துக் கொண்டிருந்தாள். லெட்சுமி கஞ்சியை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதைப் பக்கத்துக் கொட்டகையில் இருந்து ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காளை. லெட்சுமி ஈன்ற மூன்று கன்றுகளும் அந்தக் காளையின் மறு பதிப்புகளே.

மீனாட்சிப் பாட்டி லெட்சுமி குடித்து மீதி வைத்த கஞ்சியைக் கொண்டு போய் அந்தக் காளைக்கு வைத்தாள். காளை ஆவலோடு கஞ்சியை உறிஞ்சியது. மீனாட்சிப் பாட்டி அவள் வயதிலும் ஒரு குறும்புப் பார்வையோடு காளையைக் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்பொழுதெல்லாம் லெட்சுமிக்கும் காளைக்கும் சேர்த்தே கஞ்சி வைப்பாள் மீனாட்சிப்பாட்டி. லெட்சுமி தன்னைப்போல் விதவையாகிவிடக் கூடாதே என்ற ஒரு விசித்திரமான எண்ணமே அவள் காளையையும் சேர்த்துப் பராமரிக்கச் செய்தது. காலம் சம்பவங்களை அடித்துக்கொண்டு ஓடியது.

காளையின் சொந்தக்காரருக்கு மீனாட்சிப் பாட்டி தன் காளையையும் கரிசனையோடு உபசரிப்பதன் ரகசியத்தை விளங்கிக்கொள்ள வெகு நாட்களாகவில்லை. அவர் அள்ளித் தெளித்த கேலி வார்த்தைகள் மீனாட்சிப் பாட்டியைப் பலருக்குப் பைத்தியக்காரியாக உருவகப்படுத்திக் கொண்டிருந்தன.

“மீனாட்சிக் கிழவி தன் காலொடிந்த மாட்டுக்குக் கலியாணமும் செய்து வைத்து விடுவாள் போலிருக்கிறது” என்ற வார்த்தைகள் பல நாட்களுக்குப் பின் அவள் காதிலும் விழுந்தது. மீனாட்சிப் பாட்டி அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படுவதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

லெட்சுமியும் காளையும் ஒன்றாக ஒரு தொட்டியில் கஞ்சி குடிக்கும்போது மீனாட்சிப் பாட்டிக்கு மகிழ்ச்சியால் நெஞ்செல்லாம் அடைப்பது போலிருக்கும். ‘லெட்சுமி என்னைப்போல போயிட மாட்டா’ என்று அவள் மனம் ஆறுதல் கொள்ளும்.

அடுத்த சில மாதங்களில் மீனாட்சிப் பாட்டியின் மனசில் மகிழ்ச்சி தூறல் போட ஆரம்பித்தது. அம்மகிழ்ச்சியின் உச்ச நிலை இன்னும் சில மாதங்களில் லெட்சுமி இன்னொரு கன்றைப்போடப் போகிறது என்று அவள் அறிந்து கொண்டபோது உண்டானது. மீனாட்சிப் பாட்டி இப்போது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினாள். லெட்சுமியின் கடைசிக் கன்றை விற்று கொட்டகையைத் திருத்திக் கட்டினாள். இப்போது லெட்சுமி மட்டும் தான் அவளின் சொத்து. லெட்சுமி போடும் கன்று கிடாரியாக இருக்க வேண்டும் என்று மேலும் ஒரு மனுவை மாரியாத்தாவுக்கு அனுப்பி வைத்தாள்.

அன்று காளையின் சொந்தக்காரர் மீனாட்சிப் பாட்டியைப் பார்த்து “என்ன கிழவி, அடுத்த வாரம் ஓம் மருமகனை அறுப்புக் கடைக்கு கொடுத்துடப்போறேனே, என்ன செய்யப்போறே?” என்றார். மீனாட்சிப்பாட்டிக்குத் திக்கென்றது. காளை போய்விட்டால் லெட்சுமி வருந்துமே என்பதுதான் அவள் கவலை. என்றாலும் அவள் விட்டுக் கொடுக்கவில்லை. “வித்துட்டுப் போயேன்” என்று முகத்தில் அறைந்தாற்போல சொல்லிவிட்டு அவள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தாள்.

“முன்பு தன்னைக் கேலி செய்தவனை வாட்டமாக மாட்டிவிட்டோம்” என்ற ஒரு பெருமிதத்தில் அவள் போய்க் கொண்டிருந்தாலும் புதியதொரு கவலை அவள் நெஞ்சத்தில் பரவிக் கொண்டிருந்தது. “அவங்காளை எங்கொட்டாய்க்கு வருதுன்னு தானே வித்துடப் போறேங்கிறான், பாவி உருப்புடுவானா அவன் என்று சபித்தவள், லெட்சுமியையும் காளையையும் நினைத்தவளாய் ஒரு மாட்டு மூளையை எடுத்துத்தான் அஞ்சாறு மனுசனுக்கு ஆண்டவன் பங்கு போட்டுட்டான் போலிருக்கு” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

மறுநாள்,

லெட்சுமி “ம்மா……” என்று கத்தியதைக் கேட்டதும் அரக்கப் பறக்கக் கொட்டகைக்கு ஓடினாள் மீனாட்சிப் பாட்டி. அங்கே….,

பக்கத்துக் கொட்டகைக் காளை நஞ்சு தூவப்பட்ட புல்லை வயிறு நிறைய மேய்ந்து விட்டுவந்து கொட்டைகையில் தடுமாறிக் கொண்டிருந்தது. மீனாட்சிப் பாட்டி அதிர்ந்து விட்டாள். “டேய் கருப்பண்ணா ஓங் காளையை வந்து பாரடா” என்று கத்தினாள். காளையின் துன்பம், லெட்சுமியின் துன்பம் எல்லாவற்றையும் சேர்த்து அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள். காளையின் சொந்தக்காரனான கருப்பண்ணன் வந்து சேர்ந்தான். “ஐயோ, நொரை நொரையா கக்குதே” என்றவன் பக்கத்திலிருந்த வாழைக் கன்றை வெட்டி முறுக்கி சாறு பிழிந்து அதைக் காளைக்குப் புகட்டினான்.

மீனாட்சிப் பாட்டி என்னென்னவோ நாட்டு மருத்துவம் எல்லாம் பார்த்து விட்டாள். சில மணி நேரம் கழிந்தது. பாட்டி நம்பிக்கை இழந்துவிட்டாள். மீனாட்சிப் பாட்டி சுண்டிவிட்ட கண்ணீர்த்துளி கருப்பண்ணனின் முகத்தில் பட்டுத் தெரித்தது. அவன் கண்களும் கலங்கிக் கொண்டிருந்தன. மிருக மருத்துவர் வருவதற்குள் காளை எமனோடு பிரயாணமாகி விட்டிருந்தது.

காளையின் நெற்றியில் குங்குமத்தைத் தடவிவிட்டு வந்த மீனாட்சிப் பாட்டி லெட்சுமியைப் பார்த்தபோது அதன் கண்களிலும் நீர் தளும்பிக் கொண்டிருந்தது. அவள் “அடிப்பாவி நீயும் என்னைப் போல தரித்திரக் கட்டையாகிட்டியா” என்று கட்டிப் பிடித்துக் கொண்டாள். துன்பச்சுமை தாளமாட்டாமலோ அவள் கூன் இன்னும் கொஞ்சம் வளைந்து விட்டது.

மறுநாட் காலை.

வழக்கம் போல் கஞ்சியை எடுத்துக் கொண்டு கொட்டகைக்குச் சென்றாள் மீனாட்சிப் பாட்டி. காலைக் கதிரொளி இன்னும் உறைப்பேறவில்லை. கொட்டகையை நெருங்கியவள் லெட்சுமி அமைதியாகப் படுத்துக் கிடந்ததைப் பார்த்தாள். அது படுத்துக் கிடந்த தோற்றம் மீனாட்சிப் பாட்டியின் நெஞ்சில் மின்னலைப் பாய்ச்சியது. கஞ்சியைப் போட்டுவிட்டு ஓடிப்போய்ப் பார்த்தாள். நுரையும் புல்லுமாக வாந்தி எடுத்திருந்தது லெட்சுமி. இரவு எத்தனை மணிக்கோ அது கிழவியையும் காற்றையும் மறந்து விட்டிருந்தது.

“அடிப்பாவி, நீயும் போயிட்டியா, ஏண்டி லெட்சுமி, உனக்கு என்னடிகொறை வச்சேன், இப்படி ஒன்டி சண்டியா என்னை விட்டுட்டுப் போய்ட்டியடி பாவி!” கிழவியின் குரல் கேட்டு சிலர் ஓடிவந்தனர். ஒரு மாடு செத்துப் போனதுக்கு இப்படி கத்துதே கிழவி என்று முணுமுணுத்தனர் சிலர். சிலர் பல்லியைப்போல் “ச்” கொட்டிக்கொண்டனர். இந்த மாட்டுக்குத் தான் எவ்வளவு அறிவு, அந்தக் காளை செத்துப் போச்சின்னு இதுவும் செத்துப் போச்சே” என்றனர். “என்னப்பா தெய்வீகக் காதலா” என்று ஏதோ நகைச்சுவையைச் சொன்னவன் போல கூட்டத்தை ஊடுருவிக் கொண்டிருந்தான் ஒரு வாலிபன்.

கிழவியின் புலம்பல் நிற்பதாக இல்லை. “ஒந்தொணை ஒன்னை விட்டுப் போயிடிச்சினு மறுநாளே போய்ட்டியடீ… எம்புருஷன் செத்து நான் இருவது வருஷமா இந்த பூமியில் ஒலாவுறெண்டி!…” மீனாட்சிப் பாட்டி புலம்பிக் கொண்டே யிருந்தாள். காளையின் புதைகுழியருகில் லெட்சுமிக்குக் குழி வெட்டிக் கொண்டிருந்தனர் சிலர்.

லெட்சுமிக்குக் காசநோய் என்று பரிசோதித்த மிருக வைத்தியர் சொன்னார். ஆனால் மீனாட்சிப் பாட்டி ஒப்புக் கொள்ளவில்லை. “அவ பத்தினியப்பா, அவத் தொணையோட அவ போயிட்டா” என்றுதான் புலம்பினாள்.

மறுநாள் இப்படி நடக்குமென்று அந்த ஆண்டவனுக்கே தெரியுமோ, என்னவோ?

மீனாட்சிப் பாட்டி லெட்சுமியின் புதைகுழியின் மேல் பிணமாய்க் கிடந்தாள்.

– தமிழ்நேசன், பிப். 1969, தமிழ் இளைஞர் மணிமன்றங்களின் ஐந்தாம் மாநாட்டுச் சிறுகதைப் போட்டியில் 2ஆம் பரிசு பெற்றது. ‘கோணல் ஆறு’ தொகுப்பின் மறுபதிப்பு.

– கம்பி மேல் நடக்கிறார்கள், முதற் பதிப்பு: 2006,சிவா எண்டர்பிரைஸ், கோலாலம்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *