கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை  
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 3,310 
 
 

(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதல் பாகம் – காலச் சக்கரம்

முன்னுரை

நாடகத்துக்கு முன்னால் சூத்திரதாரன் வருவதுபோல் நமக்கு ஒரு மனிதர்: ஆம்! ஒரு சோதிடர். அவர் ஒரு சன்னியாசி என்ற தோரணையில் ஆடை அணிந்து இருக்காவிட்டாலும் அவர் வாழ்க்கை நிலை ஒரு சன்னியாசியின் வாழ்க்கை நிலையை யொட்டித் தான் இருந்தது. அந்த மனிதருக்குத் தெரியாத கலைகள் எதுவும் இல்லை. அந்த மனிதர் அறிந்து கொள்ளாத மொழி எதுவும் இல்லை.

அந்தத் தனி மனிதரை தரிசிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் குடந்தை நாகேசுவர சுவாமி கோயில் கோபுர வாயிலில் உள்ள மேடையில் எப்பொழுதும் தரிசிக்கலாம். கருகருவென்று வளர்ந்திருக்கும் தாடி, தோளில் திரி திரியாகப் புரண்டுவிழும் கேசம், கூர்மையான விழிகள், நெற்றியில் தீர்க்கமாகப் பிரகாசிக்கும் குங்குமப் பொட்டு, வெற்றிலைக் காவி படிந்த தடித்த உதடு. உடம்பை மறைத்திருக்கும் பூக்கரை போட்ட கதர்சால்வை. விசுவாமித்திரர் தவ நிலையில் அமர்ந்ததைப்போல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் நிலை நமக்கு அவரிடம் ஒரு மதிப்பைத்தான் உண்டாக்கும்.


அன்று வெள்ளிக்கிழமை. அம்பி கையைத் தரிசித்துவிட்டுவரலாம் என்று தான் நான் நாகேசுவரசுவாமி கோயிலுக்குப் போனேன். ஆனால் அந்தச் சந்நியாசியிடம் சிக்கிக் கொண்டுவிடுவேன் என்று நான் சொப்பனத்தில் கூட நினைக்கவில்லை.

இருவரும் கோயிலுக்குள் சென்றோம். “சுவாமி தரிசனம் இருக்கட்டும். இந்தக் கோயிலைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?” என்றார்.

“உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்!” என்றேன்.

“இது ஏற்கெனவே ஒரு பௌத்த விகாரமாய் இருந்திருக்கலாம் என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். ஆராய்ச்சித் திறனோடு பார்த்தால் அதையும் நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. உள் பிராகாரத்தைப் பார்த்தால் அது நன்றாகத் தெரியும், மூல கிருகத்தைச் சுற்றியுள்ள சிலைகளைப் பார்த்தால் உனக்கு விளங்கலாம். நின்ற திருக்கோலத்தில் அங்கு ஒரு புத்த பெருமானின் சிலையும் இருக்கிறது. நீ அஜந்தா, அமராவதி கெல்லாம் போயிருக்கிறாயா?”

“போனதில்லை.”

“இந்தக் கோயிலில் அமைந்த சிற்பங்கள் எல்லாம் அந்தப் பாணியில் அமைந்தவை” என்று சொல்லிக் கொண்டே வரும்போது நாங்கள் நடராஜப் பெருமானுடைய சன்னிதானத்துக்கு எதிரில் வந்த போது அவர் சட்டென்று என் கையைப் பிடித்து நிறுத்தி, “இதோ பார். அந்தச் சக்கரத்தை நீ பார்த்திருக்கிறாயா?” என்று அங்குள்ள சக்கரம் ஒன்றைச் சுட்டிக்காட்டினார்.

நாகேசுவரசுவாமி கோயிலில் நடராஜப் பெருமானின் சன்னிதி மிக விசேஷம், எங்கும் காணாத வண்ணம் அதன் அமைப்பே விசேஷமாக இருக்கும்.

அந்த மண்டபம் ரதம் போன்றது என்பதற்கு அறிகுறியாக இருபுறங்களி லும் இரு கருங்கல் சக்கரங்கள் நிறுத் தப்பட்டிருக்கும். அந்தச் சக்கரங்களுக்கு புறங்களிலும் குதிரைகள் பாயும் வண் முன்னால் பக்கத்துக்கு ஒன்றாக இரு ணம் அமைக்கப் பட்டிருக்கும். குதிரை களுக்கு முன்னால் நான்கு பெரிய யாை கள். அவர் என்னை அச் சக்கரத்துக்குச் சமீபமாக அழைத்துப் போய் அந்தச் சக்கரத்தின் கடைக்கால்கள் போல் சுற்றிலும் செதுக்கப்பட்டிருக்கும் உரு வத்தையும் அதன் பக்கத்தில் தாமரை மொட்டு போல் செதுக்கப்பட்டிருக்கும் பொருளையும் காட்டி, “இது சூரியனின் உருவம்தான். சூரியனுக்குப் பக்கத்தில் இருக்கும் பொருள், காலம் காட்டும் கருவி. மேலே தாமரை மொட்டு போல இருப்பதற்கு நடுவே வட்டமாகச் செதுக்கப்பட்டிருக்கும் குழியில் நிழல் விழுவதை அனுசரித்து நேரத்தைத் தெரிந்து கொள்வார்கள். அதனால் தான் அது சூரியனுக்குப் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. சூரியனையும் காலக் கருவியையும் வைத்து அமைக்கப் பட்ட இதுதான் காலச் சக்கரம். இரவு பகல் என்று இரு பக்கமும், இரு சக்கரங்கள் பொருத்தப் பட்டிருக்கும் இந்த ரதத்தின் பெயர் காலத்தேர். இப்பொழுது புரிகிறதா? போகட்டும் இச் சக்கரத்தில் இருக்கும் சூரியனின் பிம்பங்களையும், காலங் காட்டும் கருவிகளையும் எவ்வளவு இருக்கின்றன என்று எண்ணிப் பார்” என்று எனக்கு உத்தரவு போடுகிறவர் போல் அன்பு நிறைந்த குரலில் சொல்லி விட்டு காலச் சக்கரத்தைப் பார்த்தார்.

நான் அவைகளை எண்ணிப் பார்த்து விட்டு, “பன்னிரண்டு சூரியனுடைய உருவங்களும், பன்னிரண்டு காலங் காட்டும் கருவிகளும் இருக்கின்றன” என்று கூறினேன்.

“இது எதைக் குறிக்கிறது தெரியுமா? சூரியனின் சஞ்சார கதியைச் சொல்லுகிறது. அவன் சித்திரை முதல் ஓவ்வொரு மாதத்திலும் மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள பன்னிரண்டு ராசிகளை அடைகிறான். காலச் சக்கரத்தின் சுழற்சியில் மேல்தடம் கீழ் நோக்கி வரும்போது அவனுடைய சீதோஷ்ண பலம் குறையும். அது மேல் நோக்கிச் செல்லும்போது அதன் சீதோஷ்ண நிலை உயரும். இதைத்தான் நமது சோதிடர்கள் சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியை அடையும் போது உச்சனாகி இருக்கிறான் என்றும் ஐப்பசி மாதத்தில் துலா ராசியில் பிரவேசிக்கும் போது நீசனாகி விட்டான் என்றும் சொல்லுவார்கள். இந்தச் சக்கரத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் பன்னிரண்டு காலம் காட்டும் கருவியும் ஒரு வருடத்தில் அவன் ஒவ்வொரு மாதத்திலும், ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரித்துச் சுற்றி வருவதைக் காட்டுகிறது. சூரியன்தான் காலத்தேரை ஓட்டுகிறான் என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் சர்வேசுவரன் தான் சூரியனைத் தன் காலத் தேரின் சக்கரமாக அமைத்து அதை நடத்துகிறான் என்பது நமது உயர்ந்த கொள்கை. இதோ பார், இந்தக் காலத் தேருக்கு இரண்டு சக்கரங்களையும் வைத்தான். இரண்டு குதிரைகளையும் பூட்டினான். முன்னால் நான்கு சக்கரங்கள் போவது போல் நான்கு யானைகளையும் வைத்தான். ஆனால் இக்காலத் தேரை ஓட்டுவதற்கு ஒரு சாரதியை வைத்தானோ? இல்லை, எம்பெருமாளின் திருக்கூத்தில்தான் இக்காலத்தேர் அசைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அவனுடைய ஆட்டத்தில் சிறிது லயம் மாறினால் காலத்தேர் சிறிது திசை மாறும். மழை, புயல், வெள்ளம், பூகம்பம், தீ இத்தகைய அபாயங்க ளெல்லாம் அவன் ஒரு லயத்தில் நின்று ஆடும்போது ஏற்படும் சஞ்சார பேதங்கள். அவன் கூத்தில் ஆனந்தக் கூத்தும் உண்டு. ஆவேசக் கூத்தும் உண்டு. அவனுடைய ஆவேசக் கூத்து உச்ச நிலையை அடைந்தால் இந்தப் பூமியையே கூட விழுங்கினாலும் விழுங்கிவிடலாம்” என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு.

அவர் மறுபடியும் உணர்ச்சிப் பெருக்கோடு. “இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், இந்தத் தமிழ் நாடு இருந்த நிலையை எண்ணிப்பார்ப்போம். சரித்திர ஆதாரங்கள், மத கிரந்தங்களின் ஆதாரங்கள், சிலாசாசன ஆதாரங்கள், சிற்ப சித்திர ஆதாரங்கள், புதை பொருள் ஆராய்ச்சிகள் எல்லாம் இருக்கின்றன. காலச் சக்கரத்தின் வேகம் எவ்வளவை அழித்திருக்கிறது. எவ்வளவை மாற்றி இருக்கிறது? இந்தத் தமிழ் நாட்டில், புத்த சமயமும் ஜைன சமயமும் எப்படி வேரூன்றித் தழைத்து நின்றன? மனக்கண்ணால் நினைத்துப் பார்த்தால் பெரிய சாகரத்தையே அழித்துவிட்டது போல் தோன்றும்” என்றுகூறி என் பதிலை எதிர்பார்த்தார்.

அவரே பதில் சொல்லட்டும் என்று மௌனமாக உட்கார்ந்திருந்தேன்.

“இதையெல்லாம் அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட முடியாது. இந்தக் குறிப்புகளைப் பார்த்தால்தான் உனக்குத் தெரியும்” என்று சொல்லித் தான் மறைத்துவைத்திருந்த புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டு “நாளையிலிருந்து நீ என்னைப் பார்க்க முடியாது. நான் காசியாத்திரை போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார்.

நான் புத்தகத்தைப் புரட்டினேன். கோவை பில்லாமல் பல விஷயங்கள் எழுதப்பட்டிருந்தன. சிதறிக் கிடந்து பிரகாசிக்கும் அந்த நவரத்தின மணிகளைக் கோத்து மாலையாக்க நினைத்தேன்.


அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

முதல் அத்தியாயம்

சுகமும் சொர்க்கமும்

காலச் சக்கரம் முன்னோக்கிச் கழலுமே தவிர, பின்னோக்கிச் சுழலுவதில்லை. அது சுற்றி வரும் வேகத்தில் எவ்வளவோ அழிகின்றன. எவ்வளவோ உற்பத்தியாகின்றன. சிறிது நாட்க ளுக்கு முன் புறக்கண் எதிரே நின்றவைகளை யெல்லாம் இன்று நினைத்துப் பார்க்க முடிகிறது. பல ஆண்டுகளுக்கு முள் நாம் பார்த்து அறியாதவைகளைக் கூட நாம் ஓரளவு சிந்தித்துத் தெரித்து கொள்ளும் வண்ணம் அழித்தும் அழியாமலும் இருக்கும் காலச் சக்கரத்தின் அடிச்சுவடுகள் நமக்குச் சிறிது உதவி புரிகின்றன. சிந்தித்துப் பார்த்தால் அவை கனவு போலிருக்கின்றன. நேற்றும் மழை பெய்தது. இன்றும் மழை பெய்கிறது. ஆனால் நேற்று பெய்த மழை இல்லை இது. இது வேறு மழை, புது மழை. சென்ற வருடம் புயல் அடித்தது. இன்றும் அடிக்கிறது. ஆனால் இது சென்ற வருடம் அடித்த புயல் இல்லை. அதைப் போன்ற புயலாக இருக்கலாம். புதிது. காலச் சக்கரத்தின் வழிச்சுவட்டோடு தெரிந்து அது ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எங்கெங்கெல்லாம் உருண்டு வந்ததோ அங்கெல்லாம் செல்வோம். ‘இதுவும் அழிந்து விடுமா’ என்று நினைக்கக் கூடிய நிலையிலிருந்த சோழ சாம்ராஜ்யத்தைப் பார்ப்பதற்காகக் காலச் சக்கரம் வரும் பாதையில் எதிர்நோக்கிச் செல்வோம். எவ்வளவோ கண்களில் படும். எவ்வளவோ சிந்தனையில் இடம் பெறும். எவ்வளவையோ நிர்மூலமாக்கி கொண்டு வந்த காலச் சக்கரம் சோழ் சாம்ராஜ்யத்தின் பெருமையையும் அழுந்திய தன் சுவட்டின் பக்கத்திலேயே ஒதுக்கி இருக்கிறது. அது நமக்குப் போதாதா? இடிந்து வீழ்ந்திருக்கும் ஒரு மாளிகையைப் பார்த்தால் அது எப்படிப்பட்ட உன்னத நிலையில் இருந்திருக்கும் என்று நமக்கு விளங்காதா?

பூம்புகார் என்னும் பொன் நகரைச் சிருஷ்டித்து, புவனம் மெச்ச அரசாண்டான் கரிகாலன். அவனுக்குப் பின் அவன் பரம்பரையில் மாட்சிமையுடன் ஆண்ட மன்னர்கள் எத்தனையோ பேர். ஆனால் எண்ணெய் வற்றிக் கொண்டே வரும் தீபம் போல் மெதுவாக அமிழ்ந்து விட்டது அந்த வம்சம். சோழ மண்டலத்திலுள்ளோர் இருளில் நின்று பெருமைகளையும் உரிமைகளையும் கதையாகப் பேசிக் கொள்ளும் காலமாகி விட்டது அந்தக் காலம். காஞ்சியில் பல்லவரின் நந்திக் கொடி பகட்டிப் பறந்தது. மதுரையில் பாண்டியர்களின் மீன் கொடி விண்ணைத் தொட்டுத் தன்னிக ரில்லையெனப் பறந்தது. சாம்ராஜ்ய ஆசைகள் யாரை விட்டது?

போர்முரசின் முழக்கம் இடைவிடாது கேட்டுக் கொண்டுதான் இருக்கும். வடக்கிலிருந்து வரும் பல்லவர்களும். தெற்கிலிருந்து வரும் பாண்டியர்களும் வந்து மோதிப் போர் புரியும் யுத்தகள மாகத்தான் இருந்தது பெருமைமிக்க சோழ நாடு, ஆம்! குருக்ஷேத்திரமாகத் தான் விளங்கியது அவ்வள நாடு.

பராக்கிரமம் பொருந்திய ஒரு அரசர் கீழ் இல்லாமல் பாண்டியர்க ளுக்கும் பல்லவர்களுக்கும் அடிமைப் பட்டுக் கிடக்கும் பல சிற்றரசர் களின் கட்டுப்பாடற்ற நீதி முறை தவறிய ஆட்சிக்குள் அகப்பட்டுத் தத்தளித்தது. ஒரு காலத்தில் பெருஞ் சிறப்புப் பெற்று விளங்கிய சோழ நாடு, ஆட்சி முறையில் போராட்டமும் குழப்பமும் மிகுந்திருந்தது. பௌத் தர்கள், ஜைனர்கள், சைவர்கள், நாஸ்திகர்கள், ஆஜீவகர்கள், வேத வாதிகள், பூதவாதிகள், நரபலி கொடுத்துப் பராசக்தியின் அருளைப் பெற நிலைக்கும் கபாலிகர்கள்-இப்படிப் பல வகை. ஒரு புறம் அரசியல் போராட்டம்-மறுபுறம் மதப் போராட்டம்! இந்நிலையில் மக்களின் மனோநிலையைப் பற்றி என்ன சொல்வது? ஓவ்வொரு மனிதனின் அகமும் புறமும் நிலைகொள்ளா வேதனையில்தான் உழன்றது! பல மன்னர்களும் முடி தாழ்த்தி வணங்கப் பார்முழுதும் ஆண்ட கரிகாலனின் பெருமை தேய்த்த கனவாகவும் பழங்கதையாகவும் ஆகிவிட்டன. மறுபடியும் அத்தகைய பெருமை என்று கிடைக்கும் என்று சோழநாட்டு மக்கள் ஏங்கி நிற்கும் காலமாகி விட்டது அது.


சாம்ராஜ்யம் சிதைந்து விட்டது. ஆனால் அழிந்த சாம்ராஜ்யத்தின் மகோன்னத நிலையை விளக்கும் கலைச் சி ன்னமாகத் திகழ்ந்தது பூம்புகார் நகரம். அமர உலகுக்குச் சென்று வந்து அதைவிடச் சிறப்பாக ஒரு நகரைச் சிருஷ்டித்தான் கரிகாலன் என்றால் அது வெறும் புராணக் கதை அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதுபோல் திகழ்ந்தது அப் பொன் நகரம். ஆம். அப்பொழுதும் அவ்வளவு அழிவோடு விளங்கியது அந் நகரம். அழிந்த பேரரசை மறுபடியும் நிலை நிறுத்த முடியும் என்ற திடத்தையும் பன எழுச்சியையும் தூண்டி விடும் வண்ணம் அப் பொன் நகரம் காட்சியளித்து நின்றது. வம்ச பாரம் பர்ய வீர உணர்ச்சியைக் கிளறி நினைவு படுத்தும் அடையாளச் சின்னமாகவே அது திகழ்ந்தது. அந்த வீர உணர்ச்சித் தணல் தாழ்மைப்பட்டுக் கிடக்கும் மனத்தில் எழும்பி உரிமைப் போராட்டத் துடிப்பை என்று எழுப்பியதோ அன்றையச் சூழ்நிலையில்தான் இந்தக் கதையும் ஆரம்பமாகிறது.

நாட்டிலேயே சிறந்த துறைமுகப்பட்டினமாகவும், வியாபார ஸ்தலமாகவும் திகழ்ந்த புகார் எனும் காவிரிப்பூம்பட்டினம் செல்வம் நிறைந்த உலகப் பெரு மக்களின் இடமாகத் திகழ்ந்ததால் பல்லவ மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் சிறப்பில் குன்றாது இருந்தது. பல்லவ சாம்ராஜ்யத்தின் துறைமுகமாகக் கடல் மல்லையும், மயிலையும் அன்று பெருமையோடு திகழ்ந் தாலும் பூம்புகார் மதிப்பும் பெருமை யும்குறையாது இருந்தது. வணிகப் பெரு மக்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த அந் நகரின் சிறப்புக்கு என்ன குறை இருக்கப் போகிறது? என்றும் திருவிழாப்போல் திகழும் அம்மா நகருக்குத் தினம் தின்மும் பல தேசத்து வணிகர் களையும் மன்னர்களையும் விருந்தினராக அழைத்து வரும் பெருத்த மரக்கலங்கள் கடலில் ஆனந்தத்தோடு வருவது அந்தகரைக் கண்ட பெருமையில் அதி வேகமாக வருவது போல்தான் இருக் கும். அந்த நகரில் பல நாள் விருந்தின ராக இருந்த மன்னர்களையும், வணிகப் பெரு மக்களையும் அவரவர்கள் நாடு களுக்கு அழைத்துச் செல்லும் மரக் கலங்கள் அந்த நகரை விட்டுப் பிரிய மனம் இல்லாத மன்னர்களின் உள்ளம் போல் தயங்கித் தயங்கித் துறைமுகத்திலிருந்து மெதுவாக நகரும், கடற்கரையிலிருந்து வெரு தூரம் ஒளிகாட்டும் கலங்கரை விளக்கம் உலகில் எட்டுத் திசைகளிலும் உள்ள மக்களை யெல்லாம் இது தான் செல்லம் கொழிக்கும் பூம்புகார், இதுதான் அமர உலகையும் அழகில் வென்ற காவிரிப்பூம்பட்டினம் என்று சொல்லி அழைப்பது போல் இருந்தது.

அந்த அழகான நகரம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததுதான் அந் நகரை அமைத்தவனுடைய சிறப்பை இன்றும் நினைவுபடுத்துவதாக இருந்தது. கடற்கரையை எட்டித் திகழ்வது தான் மருவூர்ப்பாக்கம். அதை ஒட்டிச் சிறிது கிழக்கே மாடமாளிகை, கூட கோபுரங்களோடும் மகோன்னதமாகத் திகழ்வதுதான் பட்டினப்பாக்கம். பட்டினம் என்பது கண்ணையும் கருத்தையும் கவரும் பெரிய மாளிகைகள், அரண்மனைகள், ஆலயங்கள், பூஞ்சோலைகளோடு நிகழ்ந்ததென் மருவூர்ப்பாக்கமும் அதன் பெருமைக்குக் குறையாது பல நாட்டு வர்த்தகர்களும் அரச குலத்தினரும் நடமாடும் உன்னத வியாபாரஸ்தலமாகக் காட்சியளிக்கிறது. கடற்கரைத் துறைமுகத்தை ஒட்டினாற்போல் இருக்கும் மருவூர்ப்பாக்கத்தில் வெளிநாட்டிலிருந்து வந்துள்ள வியாபாரிகளும், பிரபுக்களும் அரச குலத்தினரும் தங்குவதற்கு வசதியாய்ச் சிறுசிறு மாளிகைகளும், அதை யொட்டிப் பகுதி பகுதியாய்ப் பிரிக்கப்பட்ட வியாபார ஸ்தலங்களும் காட்சியளித்தன, பலதேசங்களிலிருந்து வந்திருக்கும் வியாபாரிகள் மதம், ஆசாரம், மொழி, உடை இவைகளில் மாறுபட்டவர்களாய் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் சினேக மனப்பான்மையுடன் மகிழ்ச்சியோடு பேசிப் பழகி உலகில் வித்தியாசம் இல்லாத மனப்பான்மையோடு கூடிக் குலாவுவதில் உள்ள மன நிம்மதியையும் நன்மையையும் எடுத்துக்காட்டுவது போலிருந்தது. யவனர், சிங்களர், சீனர், கேரளர், மராட்டியர், வங்காளிகள் முதலிய வணிக மரபினர் தாங்கள் கொண்டு வந்திருக்கும் பொருள்களை நல்ல லாபத்தோடு மற்றவர்களிடம் விற்க வேண்டும் என்ற கருத்தோடு மிகவும் நட்புரிமை கொண்டு உபசரித்துப் பெருமை கொள்ளப்பேசி உறவாடுவது பார்க்க ஆனந்தமாகத்தான் இருந்தது. வியாபாரம் செய்யும் பொருள்களுக்குத் தக்கவண்ணம் பகுதி பகுதியாகப் பிரிக்கப் பட்டிருக்கும் அழகான கடைகள். அக் கடைகளை ஒட்டினாற் போல மக்கள் ஏதோ நடப்பதற்குரிய அழகான தாழ்வாரங்கள். ஒவ்வொருகடையிலும் இந்த வர்த்தகர்கள் அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை அறிவிப்பதற்கு உரிய சின்னமாகத் துலங்கும் பலதேசக் கொடிகள் பறப்பதும் ஓர் அழகாகத் தான் இருந்தது. அக் கொடிகளோடு ஒவ்வொரு வியாபாரப் பகுதியிலும் எத்தகைய பொருள்கள் விற்கப்படும் என்பதற்குச் சின்னமாக விளங்கும் கொடிகளும் பறந்தன.


மாலை வேளை : வியாபாரம் விருவிருப் பாக நடக்கும் நேரம். மருவூர்ப் பாக்கத் தில் எல்லா வியாபார ஸ்தலங்களிலும் என்றும் போலில்லாது அன்று சிறிது கூட்டம் அதிகம். நாளை மறுதினம் வைசாக பௌர்ணமி, இந்திர விழா கோண்டாட்டம். சோழ மன்னர்களின் காலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட அவ் விழாவை அப்பொழுதும் காவிரிப்பூம் பட்டினத்து மக்கள் வெகு சிறப்பாகக் கொண் டாடிவந்தனர். கரிகாலன், கோச்செங் கணான், நலங்கிள்ளி முதலிய சோழப் பேரரசர்களின் பெருமையைப் பேசிப் புகழவும் பாடிப் பரவவும் ஏற்ற திரு நாளாகவும் இந்திர விழா இருந்தது. முன்னிலும் அதற்குரிய பெருமையை யும் சிறப்பையும் அதிகமாக்கியது.

பல வாலிபர்கள் அரம்பையர் போல் திகழும் தங்கள் இளம் காதலிகளுக்குப் பிரியமான ஆடை ஆபரணங்களை வாங் இக் கொடுப்பதற்காக அவர்களையும் தங்களோடு அழைத்துக் கொண்டு வந் திருப்பது மனோரம்யமாக இருந்தது. முத்து, ரத்தின ஆபரணங்கள் விற்கும் கடைகளிலும், பட்டாடைகள் விற்கும் கடைகளிலும், வாசனைத் திரவியங்கள் விற்கும் கடைகளிலும், புஷ்பக் கடை களிலும் நின்று பேரம் பேசித் தங்களுக்குப் பிடித்தமானவை களை வாங்கும் இளந் தம்பதிகளின் வசீகர அழகு மனத்தை மயக்க வைக்கும் காட்சியாக இருந்தது. ஒரு தான்ப வியா பாரி பரபரப்போடு தன்னோடு வியாபார விஷயமாகப் பேசிக் கொண் டிருக்கும் மற்றெரு வியாபாரியிடம் கடைவீதித் தாழ்வாரத்தில் தனிமையாகப் போய்க்கொண் டிருக்கும் ஒரு வாலிபனைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னான். மற்றவன் அவ்வாலிபனை ஆச்சரியத் தோடு கூர்ந்து பார்த்துவிட்டு சொன்னான். அந்த வாலிபன் யார்? அவர்கள் அவனைச் சுட்டிக் காட்டி என்ன பேசிக் கொண்டார்கள்? ஒரு வேளை அவன் மற்ற வர்களைப் போல் தன் காதலியோடு கடைவீதிக்கு வராமல் தனியாகக் கடை வீதிக்கு வந்தது பற்றிக் குறையாகப் பேசிக் கொண்டிருக்கலாம்? அப்படி இருக்காது. அவளைக் கூர்ந்து பார்த்து விட்டு இவ்வளவு அலட்சியமாக முகத் தைத் திருப்பிக் கொள்ளுவதற்கு ஏதோ காரணம் இருக்கத்தான் வேண்டும்.


அவனுக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம். நல்ல உயரம், பிரகாச மான கண்கள், இரண்டபுஜம், அகன்ற மார்பு. கட்டுக் குலையாத கம் பீரமான தேக வளப்பு, பார்வைக்கு மிகவும் படித்தவனாகவும், விவேகியாகவும் தோன்றினான். அவன் ஒரு அரச குமாரனோ பிரபுக்களின் வம்சத்தைச் சேர்ந்தவனோ என்று சொல்வதற்குரிய ஆடை அலங்காரங்கள் ஏதுமில்லை. வெண்மையான சாதாரண உத்தரீயத்தினால் தன் வசீகரமான பொன்மேனியைப் போர்த்தி மறைத்திருந்தான், இதைத் தவிர அவனிடம் கண்டதெல்லாம் அவன் அணிந்திருந்த பாதரட்சை ஒன்றுதான். அவன் அந்த வியாபார ஸ்தலத்துக்கு எதையோ விற்க வந்தவனாகவோ, அல்லது வாங்க வந்தவனாகவோ தெரியவில்லை. அவன் ஒவ்வொன்றையும் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே நடந்தாலும் அவனுடைய கண்கள் அவன் விவேகமும் பேரறிவும் படைத்தவன் என்பதையே எடுத்துக் காட்டின.

அவன் தானியம் விற்கும் பகுதியைக் கடந்து ஆபரணம் விற்கும் பகுதியை அடைந்தான். வாலிபர்களும் மங்கையர்களும் நடமாடும் இந்தப் பகுதியில் வேடிக்கை பார்க்க வந்த அவனுக்கு இன்னும் சிறிது கவர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுக்கலாமல்லவா?

அங்கொரு முத்துக் கடை: ரகவாரியாகப் பிரிக்கப்பட்ட முத்துக்கள் சிறுசிறு மணிக்குன்றுகள் போல் குவிக்கப்பட்டு ஆண்களின் கண்களையும், பெண்களின் கருத்தையும் பறித்தன. விலையுயர்ந்த முத்துக்கள் கடையை அலங்கரிப்பது போல் சரஞ்சரமாகக் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தன. ஒரு பெண் அங்கு தொங்கிய முத்துச்சரம் ஒன்றைக் கையால் பிடித்துக் கொண்டு பக்கத்தில் நிற்கும் தன் காதலனின் முகத்தையே கெஞ்சுதலோடும் ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய காதலன் சிங்களத் தீவிலிருந்து வந்திருக்கும் முத்து வியாபாரியோடு ஏதோ பேரம் பேசிக் கொண்டிருந்தான். நடைபாதை தாழ்வாரத்தில் வேடிக்கை பார்த்த வண்ணமே வந்து கொண்டிருந்த வாலிபன், முத்துக்கடையில் ஒரு வாலிபன் தன் காதலியோடு நின்று பேரம் பேசுவதைப் பார்த்துச் சட்டென்று அக்கடை எதிரிலேயே நின்று கவனித்தான்.

சிங்கள வியாபாரி “அந்த முத்துச் சரம் எட்டுக் கழஞ்சு பொன்னுக்குக் குறையாது” என்று சொன்னான்.

தன் காதலியின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த வாலிபன், ”ஆறு கழஞ்சுக்குத் தருவாயா, மாட்டாயா?” என்று தர்க்கம் செய்தான்.

முத்து வியாபாரி “விலை குறையாது. எட்டுக் கழஞ்சுதான்” என்றான்.

“எல்லாம் குறைக்கலாம். ஆறுகழஞ்சு தருகிறேன்” என்றான் வாலிபன்.

“அதற்கு இந்த முத்துச்சரம் கிடைக்காது” எனறான் அந்த முத்து வியாபாரி.

வாலிபன் தன் காதலியின் முகத்தைப் பார்த்தான். அவள் அந்த முத்துச்சரத்தையே கையால் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்வத்தோடு.

“அது விலை அதிகமாக இருக்கிறது. வேறு சரம் வேண்டுமானால் வாங்குவோமே?'” என்றான் தன் காதலியிடம்.

“வேறு சரம் எனக்கு எதற்கு? மனத்துக்குப் பிடித்ததை வாங்கத்தானே இங்கு வந்தோம்” என்றாள்.

வாலிபன் பிடிவாதமாக இருக்கும் தன் காதலியைக் கோபக் கண்களோடு முறைத்துப் பார்த்தான்.


இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற வாலிபன் முத்துக் கடையில் தன் காதலியோடு நின்று கொண்டிருக்கும் அவ் வாலிபனை நெருங்கியபடி, ”ஏனப்பா! இவ்வளவு கோபமாக அந்தப் பெண்ணைப் பார்க்கிறாய்? கோபம் இன்பத்துக்குப் பகை. இந்த உலகத்தில் நாம் சுகம் அனுபவிக்கத் தானே பிறந்திருக்கிறோம்? இந்தப் பிறவியில் அடைய வேண்டிய இன்பத்தை அனுபவிக்கா விட்டால் இந்தப் பிறவியே பாழ், நீ உன் காதலியை இங்கு எதற்காக அழைத்து வந்தாய்? அவளுக்குப் பிரியமானதை அன்போடு வாங்கித் தருவதற்காகத்தானே? அவள் விரும்புவதை மறுக்காமல் வாங்கிக் கொடுத்தால் அவளுக்கும் மகிழ்ச்சி. அதனால் உனக்கும் ஒரு இன்பம். ‘அந்த முத்துச் சரம் எட்டுக் கழஞ்சு’ என்கிறார் அந்த வியாபாரி. ‘நீ ஆறு கழஞ்சுக்குக் கொடுங்கள்’ என்கிறாய். அவருக்குச் சம்மதமில்லை. ஆறு கழஞ்சுக்குக் கொடுப்பதில் நஷ்டம் இல்லையென்று பட்டால் அவர் இவ்வளவு நேரம் கொடுத்துவிட மாட்டாரா? செல்வம் இன்பம் அனுபவிக்கத்தானே இருக்கிறது. இரண்டு கழஞ்சுக்காகப் பார்த்துத் துக்கத்தைச் சுமத்திக் கொள்ளலாமா? போகட்டும். இரண்டு கழஞ்சு என்ன அதிகமா? உன் நாயகி ஆசைப்படும் பொருளை வாங்கிக்கொடு. உன்னிடம் இல்லாவிட்டால் நான் இரண்டு கழஞ்சு தருகிறேன். அவளுக்குப் பிரியமானதை வாங்கிக் கொடு” என்றான் அந்த அழகன்.

தன் மனைவிக்கு முத்துச்சரம் வாங்கிக் கொடுப்பதற்கு யாரோ ஒரு முகமறியாத வாலிபன் வந்து பரிந்து பேசியதுடன் இரண்டு கழஞ்சு பொன்னும் தருவதாகச் சொன்னது அவ்வாலிபனுக்கு மிக்க ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

இரண்டாம் அத்தியாயம்

கடற்கரையிலே!

அறிமுகம் இல்லாத ஒரு வாலிபன் மற்றொரு வாலிபனுடைய இளம் மனைவிக்குத் தன் கையிலிருந்து இரண்டு கழஞ்சு பொன் கொடுத்து முத்துச்சரம் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லுவது சுயமதிப்பைக் குலைப்பது போல் இல்லையா? அதோடு மட்டுமல்ல, ஒரு வாலிபனாக இருப்பவன் இன்னொருவனுடைய மனைவிக்காகத் தன் கையிலிருந்து இரண்டு கழஞ்சு பொன் கொடுத்து முத்துச்சரம் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்வது சந்தேகம் அளிக்கக் கூடியதாகவும் வெட்கக் கேடானதாகவும் அவமானப்படக் கூடியதாகவும் இல்லையா…? அவனுக்கு ஆத்திரமும் கோபமும் வந்ததில் ஆச்சர்யமென்ன? கண நேரத்தில் தீப்போல் புகைத்து எழுந்த ஆத்திரத்திலும், கோபத்திலும் “என்ன வார்த்தை சொன்னாய்…?” என்று பளீரென்று அவன் கன்னத்தில் அடித்தான். இவைகளை யெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற அவனுடைய மனைவி நடுக்கமும் பயமும் கொண்டவளாக, “எனக்கு முத்துச்சரம் வேண்டாம்-வாருங்கள் நாம் போவோம்” என்று பதறிய வண்ணம் கூறித் தன் கணவன் கையைப் பிடித்து அழைத்தாள்.

அடிபட்ட வாலிபன் தன் கன்னத்தைத் துடைத்துக்கொண்டே, ”என்னை அடித்து விட்டாய், பாதகமில்லை. என்னுடைய அடியை நீ தாங்க மாட்டாய். என்னைப் பற்றி உனக்குத் தெரியாது, பிறருக்கு நான் துக்கம் விளைவிக்க விரும்ப மாட்டேன்” என்று சொல்லி விட்டு அந்த இடத்தைவிட்டு நடந்தான்.


அந்த முத்துக் கடைக்குப் பக்கத்துக் கடை வியாபாரி சொன்னான்: “நாஸ்திக வாதம் பேசுகிறவனெல்லாம் இப்படித்தான் அடி வாங்கிச் சாக வேண்டும். அவன் யார் தெரியுமா? அவன் பெயர் பூதுகன் – பெரிய நாஸ்திகவாதி.”

சிங்களத்தைச் சேர்ந்த முத்து வியாபாரி இதைக் கேட்டதும் ஆச்சர்யம் அடைந்தவனாக, “இவன் தானா அவன்? புத்தர் பெருமான் அவனைக் காப்பாற்றட்டும். நாஸ்திகனென்றாலும் அவன் முகத்தில் தெய்விகக்களை சொட்டுகிறதே? நாஸ்திகனாக இருந்தாலும் இந்த உலகத்தில் அன்பை வளர்க்கப் பிரியப்படுகிறவர்கள் எல்லாம் தெய்விக புருஷர்கள் தான் ” என்றான்.

“புத்த சமயத்தைச் சேர்ந்தவர்களே இப்படித்தான், அன்பு, அஹிம்சை யென்று கடவுளையே மறந்து விடுகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய கடை வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினான் மற்றவன்.

“இதெல்லாம் அறியாதவர்கள் சொல்லும் வார்த்தைகள்! அன்பு, அஹிம்சை, சத்தியம் இவைகளையே கடவுளாக மதிப்பவர்களுக்குத் தனியாகக் கடவுள் எதற்கு?” என்று சொல்லி விட்டு முத்து வியாபாரியும் தன் வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினான்.

முத்துச் சரம் வாங்குவதற்காக வந்த அந்த வாலிபனும் அவன் காதலியும் எதுவும் வாங்குவதற்கு மனம் இல்லாதவர்கள் போல் அங்கிருந்து நடந்து கொண்டிருந்தனர்.


சிறிது நேரத்துக்கு முன்னால் ஒரு வாலிபனால் தாக்கப் பட்ட பூதுகன் ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்துக்கொண்டே, முத்துக்கடை, பட்டுக்கடை முதலிய பகுதிகளைத் தாண்டி நடந்து கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக ஒருவனிடம் அடிபட்டதற்காக அவன் முகத்தில் சஞ்சலமோ கோபமோ ஏற்பட்டதாகத் தெரியவில்லை! எப்பொழுதும் போல அவன் கண்களில் பிரகாசமும் இயற்கையான புன்சிரிப்புடன கூடிய ஒளியும் இருந்தன. புயல் வீசும் கடலில் கூட அமைதி குலையாது மிதக்கும் கப்பல் போல, மனத்தில் எவ்வித அதிர்ச்சியும் இல்லாதவன் போல் நடந்து கொண்டிருந்தான் பூதுகன்.

அங்கொரு இடத்தில் யவன தேசத்து வியாபாரி ஒருவன் இரண்டு யவன தேசத்து அழகிகளை ஒரு பிரபுவிடம் விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். அது அவன் கவனத்தைக் கவரக் கூடியதாக இருந்தது.

அந்த யவன நாட்டு அழகிகளை விலை பேசி வாங்க நினைத்த அந்தப் பிரபு பூதுகனைக் கண்டதும் சிறிது வெட்கம் அடைந்தவராக, “பார்த்தீர்களா? இப்படி அழகான பெண்களை யெல்லாம் கொண்டு வந்து இங்கே விலை கூறுகிறார்கள்!” என்றார்.

“உலகத்தில் எதையும் விலைக்கு வாங்குகிறவர்கள் இருக்கிறபோது ஏன் இந்த அழகிகளைக் கொண்டு வந்து விலை கூறுகிறவர்கள் இருக்க மாட்டார்கள்?” என்றான் பூதுகன்.

“இந்தப் பெண்கள் மிகவும் அழகாகத் தானிருக்கிறர்கள். விலைக்கு வாங்கி வைத்தால் எதற்காவது உபயோகப்படுவார்கள். எவ்வளவு கேவலம்? பெண்களை விலை என்று பேசி வாங்கத்தான் மனம் கூசுகிறது” என்றார் பிரபு.

பூதுகன் சிரித்தான். “ஏன் மனம் கூச வேண்டும்? மனிதன் தன்னுடைய சந்தோஷத்துக்காகவும் இன்பத்துக்காகவும் எவ்வளவு பொருள்களை விலை கொடுத்து வாங்கவில்லை? அதைப்போலத்தான் இதுவும். உங்களிடம் பொருள் இருக்கிறது. கூசாமல் வாங்குங்கள். இந்த உலகில் இன்பம் அனுபவிக்கத்தானே நாம் பிறந்திருக்கிறோம்” என்று சொன்னான் பூதுகன்.

“பெண்களைக் கேவலம் ஆடுமாடுகளைப் போல் விலை பேசி வாங்குவதென்றால்!…” என்று இழுத்தார் பிரபு.

பூதுகன் கலகலவென்று சிரித்தான். “ஆடுமாடுகள் மாத்திரம் ஜீவன்கள் இல்லையா? அவைகளையும் விலைக்கு வாங்காமல் இருக்கலாம் அல்லவா? இந்த உலகமே விநோதமான உலகம்! வீண் தத்துவங்களெல்லாம் பேசி மனிதர்கள் தங்கள் சுகத்தைத் தாங்களே பலியிட்டுக் கொள்கிறார்கள். இதோ பாருங்கள்! இந்த யவனன் பொருளை விரும்பி இந்த நங்கையரை விற்க நினைக்கிறான். அந்த அழகிகளோ தங்கள் வாழ்வை எப்படியேனும் நடத்த எந்தத் தேசத்தவர்களுக்காவது சந்தோஷத்துடன் அடிமையாகலாம் என்று அவனோடு வந்திருக்கிறார்கள். நீங்களோ சுகத்தை விரும்பி அவர்களை விலைகொடுத்து வாங்க நினைக்கிறீர்கள். இதில் தரும விரோதமோ, பாவமோ எப்படி வந்து புகுந்தது என்று தான் எனக்குத் தெரியவில்லை. வீண் கற்பனை இருளில் இறங்கி இன்பத்தைக் குலைத்துக் கொள்ளுகிறவன் மனிதன் அல்ல. உயிருள்ள வரையில் இந்த உலகத்தில் இன்பத்தையும், சுகத்தையும் அனுபவிக்கிறவன்தான் மனிதன். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் சுகம்தான் சொர்க்கம். நான் அனுபவிக்கும் துக்கம்தான் நரகம். மனம் கூசாமல் இந்த அழகிகளை விலைக்கு வாங்குங்கள்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தான் பூதுகன்.


பூதுகன் அந்தவியாபார ஸ்தலங்களை யெல்லாம் தாண்டிக் கடற்கரையை அடைந்தான். இருள் சேரும் நேரம். மழை வருவதற்கு அறிகுறியாக வானில் கருமேகக் கூட்டம் குமைந்து நின்றது. பேரிரைச்சலுடன் பொங்கி அலை எழும்பிக் கரையில் மோதும் பெருங்கடல் கண்ணுக் கெட்டிய நெடுந்தூரத்துக்கு அப்பால் வானத்தை அளவெடுத்துக் கோடிட்டது போல் அமைதியாக நின்றது. தெற்குக் கடற்கரையில் முத்துக் குளிக்கச் சென்று திரும்பும் திடமிக்க பரதவர்களின் கட்டு மரங்களும் சமீப தூரத்திலேயே மீன் பிடிக்கச் சென்ற பரதவர்களின் கட்டு மரங்களும் பரந்த நெடுங்கடலில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. கடல் நோக்கிச் சென்ற நாயகரின் வரவை எதிர் பார்த்துக் கடற்கரையில் நின்று கொண்டிருந்தனர் பரதவர்களின் காதலிகள். அவர்களுடைய குழந்தைகள் மணற் பரப்பில் ஓடிக் குதித்தும், கரைக்குச் சமீபமாகக் கடலில் மூழ்கி நீந்தியும் விளையாடிக் கொண்டிருந்தனர். பரதவர்களின் பெண் குழந்தைகள் எல்லாம், கடல் உந்திக்கொண்டு வந்து கரைசேர்க்கும் சோழி, சிப்பீ, பளபளக்கும் வர்ணக் கற்கள் இவைகளை ஓடோடிப் பொறுக்கிச்சேர்த்துக் கொண்டிருந்தனர். இந்த மனோரம்யமான காட்சிகளை யெல்லாம் அனுபவித்த வண்ணம் கரையோரமாகத் தென்திசை நோக்கி நடந்து கொண்டிருந்தான் பூதுகன்.

கண நேரத்தில் இவ்வுலகில் எத்தகைய மாறுதல்கள் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதற்கு அறிகுறியாக ஒரு பெரிய காற்று வீசியது. அதைத் தொடர்ந்து சரசரவென்ற பேரிரைச்சவோடு கூடிய மழையும் பொழியத் தொடங்கியது. வெட்டி வெட்டிப் பாய்ந்தது மின்னல். கடலின் அலைகள் விண்ணையே போய் முட்டுவது போல ஓங்கி ஓங்கிப் புரண்டு விழுந்தன. ‘கூ கூ’ என்று கூவிக் கூவி வீசியது பேய்க் காற்று, மழை எப்படி வந்தது? இயற்கையின் திருவிளையாடலை, அதிசய சக்தியை யாரே அறிவார்? கடலோரமாக நடந்து வந்து கொண்டிருந்த பூதுகன் எதிர்பாராத வண்ணம் ஏற்பட்ட அந்தப் பெரு மழையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடற்கரை யோரமாக இருந்த சோலையை நோக்கி விரைந்து ஓடினான்.

மூன்றாம் அத்தியாயம்

நான் பூதுகன்

பூதுகன் அந்தப் பெரு மழையில் அதிகம் நனையாமல் தப்பித்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தானே தவிர, அந்தச் சோலையை அடைவதற்குமுன்பே முழுவதும் நனைந்து விட்டானென்றே சொல்ல வேண்டும். அந்தச் சோலைக்குள் செல்லும் வாசல் ஸ்தூபங்களோடு கூடிய சிறிய மண்டபமாகக் காணப்பட்டது. அலங்காரமாகக் கட்டப்பட்டிருந்த அந்த ஸ்தூப வளைவில் அதிக இடமில்லா விட்டாலும் அந்தப் பெரு மழையில் அதிகமாக நனையாமல் நிற்பதற்கு வேண்டிய இடவசதி இருந்தது. புகார் நகரின் எல்லைக்கு வெளியே கடற்கரை ஓரமாக இருக்கும் அந்தப் பூஞ்சோலையைச் சம்பாதிவனம் என்று சொல்லுவார்கள். அந்தப் பூஞ்சோலையினிடையே ஒரு பௌத்த விஹாரம் இருந்தது. அந்தப் பௌத்த விஹாரத்தில் அனேக பிக்ஷுக்களும், பிணிகளும் வசித்து வந்தனர் என்பதெல்லாம் பூதுகனுக்குத் தெரியும். எந்நாளும் அவன் அங்கே வருவதற்குப் பிரியப்பட்டதில்லை. ஆனால் அவன் அன்று எதிர்பாராத விதமாக அங்கு வர நேர்ந்ததும் ஏதோ நன்மைக்குத்தான் என்று அவன் மனத்துக்குள் எண்ணினான்.

மழை சிறிது நின்றது. மழை பூரணமாக நிற்கா விட்டாலும் பிசுபிசு வென்று பொழிந்து கொண்டிருந்தது. மாலை மறைந்து இரவு நெருங்கியது. முன்னிலவு காலமாயிருப்பினும் வானம் முழுவதும் யானைக் கூட்டம்போலக் கருமேகக் குழப்பம்தான் குழ்ந்து நின்றது. தூரத்தில் தெரியும் கலங்கரை விளக்கின் பிரகாசமான ஒளி கரிய இருளிடையே வானத்தை எட்டிப் பிடித்து அன்று சந்திரனுக்குப் பதிலாகத் தானே ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது போல் காட்சி யளித்தது.

சம்பாதி வனத்திலுள்ள புத்த விஹாரம் தீப ஒளி செய்யப்பட்டுத் திகழ்ந்தது போல் காட்சி யளித்தது. கடலின் அலையோசையினிடையேயும், மழை யோசையினிடையேயும். அதர்மத்தின் பெருங் கூச்சலினிடையேயும் தர்மத்தின் இனிய குரல் எழுவதுபோல் புத்த விஹாரத்திலிருந்து எழுந்த மணியோசை கேட்டது. இது பிரார்த்தனை நேரம் என்பதை மணியோசை மூலமாக அறிந்த பூதுகனுக்கு அந்தப் புத்த விஹாரத்துக்குள் சென்று பார்த்து விட வேண்டுமென்று ஆவல் எழுந்தது. அவன் அந்தச் சோலையின் மத்தியிலே இருந்த புத்த விஹாரத்தை நோக்கிச் சற்று வேகமாகவே நடந்தான்.

மனத்தைக் கவரும் சிற்ப வேலைப் பாடுகள் அமைந்த பெரிய கருங்கல் கட்டடமாக அந்தப் புத்த விஹாரம் காட்சியளித்தது.

பூதுகன் அந்த விஹாரத்தினுள் நுழைந்தபோது முக்கியமான இடங்களில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களினால் சிறிது ஒளியும் மற்ற இடங்களில் திட்டுத் திட்டாக இருளும் சூழ்ந்திருந்தன. அது மெய்ஞ்ஞான ஒளியை அடைந்த உள்ளத்தின் ஓரங்களிலும் உலக மாயையின் இருள் ஒதுங்கி நிற்பது போலத்தான் இருந்தது. உள்ளே சபா மண்டபம் போன்ற முற்றம். அவைகளைச் சுற்றிலும் நீண்ட தாழ்வாரம். அந்தச் சபா முற்றத்தில் பிரதானமான இடமாக உயரமாக அமைக்கப்பட்ட மேடை. அந்த மேடையின் மேல் ஏறு வதற்கு நான்கு படிகள். புத்த சங்கத் தின் முக்கிய நிவர்த்தி மார்க்கக் கொள்கைகளான துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம். துக்க நிவாரண மார்க்கம் இவைகளைக் கடந்து நிர்வாண நிலையை யடையும் நிலையை எடுத்துக் காட்டுவது போல அந்தப்படிகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந் தன. அந்த மேடை மேலே தாமரை மலரில் அமர்ந்திருந்த புத்த பிரானின் பொற்படிவம் ஒன்றும் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படிவத்துக்குப் பின்னால் மிகப் பெரிய தருமச் சக்கரம் ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பொற்படிவத்தின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்குகளின் ஒளி அந்த இடத்தையே துயர இருள் ஒட்டாத சுவர்க்கமாகக் காட்டியது. அந்தச் சபையைச் சுற்றிலும் சதுரமாக அமைக்கப்பட்ட கூடங்களின் தென்புற அறை வாசலிலிருந்து புத்த பிக்ஷுக்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து வரிசையாக நின்றனர். வடபுறத்தில் இருந்த அறையின் வாசல் வழியாகப் புத்த பிக்ஷுணிகள் வந்து வரிசையாக நின்றனர். தலையை முண்டிதம் செய்துகொண்டு உடல் முழுதும் மறையும் வண்ணம் சீவா ஆடை அணிந்திருக்கும் புத்த பிக்ஷுக்கள் கையில் மலர்க் கொத்துக்களோடு தலை வணங்கி நின்றனர். நீண்ட தடித்த கேசங்கள். முடியப்படாமல் பிரி பிரியாகத் தோளில் தொங்க, சீவா ஆடையால் தங்கள் உடல் அழகுகளையும் வெளிக்குத் தெரியாமல் மிக்க அடக்கமாகப் போர்த்தி மறைத்திருக்கும் புத்த பிக்ஷுணிகள் கையில் மலர்க் கொத்துக்களை ஏந்திச் சிரம் தாழ்த்தி நின்றனர். பீக்ஷணிகளைக் காட்டிலும் பிக்ஷுக்களே அதிகமாக இருந்தனர். அவ்விடம் இருந்த பிக்ஷுக்கள் இருபத்தைந்திலிருந்து எழுபத்தைந்து வயது வரையில் மதிக்கக் கூடியவர் களாயிருந்தனர். பிக்ஷணிகளிலோ இருபது வயதிலிருந்து நாற்பது அல்லது ஐம்பது வயது வரையில் உள்ளவர்களாக இருந்தனர்.

அந்த விஹாரத்துக்குள் வந்த பூதுகன் தாழ் வாரத்தில் இருள் நிறைந்த இடத்திலுள்ள ஒரு தூணுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு என்ன நடக்கிறது என் பதைக் கண் கொட்டா மல் பார்த்துக் கொண் டிருந்தான். அந்தச் சம யத்தில் அவன் பகிரங்க மாகவே போய் நிற்க வாம். எவரும் தடை சொல்ல மாட்டார்கள். ஆனால் அன்னியனான தன்னைக் கண்டால் அவர்கள் தங்களுடைய செய்கைகளை மறைத்துக் கொள்ளக் கூடும் என்று நினைத்தான். அவன் மறைந்து நின்று கொண்டிருந்த அந்த இடம் ஒவ்வொன்றையும் தெளிவாகப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் வசதியாக இருந்தது. வரிசையாக நின்று கொண்டிருந்த ஒவ்வொரு பிக்ஷுவினுடைய முகத்தையும் பிக்ஷுணிகளின் முகத்தையும் அவன் நன்றாகப் பார்க்க முடிந்தது. அந்தப் பிக்ஷுக்களிலும், பிக்ஷுணிகளிலும் யௌவன வயதுடையவர்களாய் இருப்பவர்களைக்கண்டு அவன் மனத்தில் இரக்கமும் பச்சாத்தாபமும் ஏற்பட்டன. இந்த வயதில் சீவா ஆடையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உலகில் வைராக்கியத்தையும் வெறுப்பையும் உண்டாக்கிய விஷயம் எதுவாக இருக்கு மென்று அவனுக்குத் தெரியவில்லை. இளம் வயதிலேயே சீவா ஆடையைப் போர்த்தித் திரியும் அவர்கள் மூடத்தனமான கொள்கையையுடைய பக்தர்களாகவோ அல்லது சுயநலம் கருதி வேஷமிடுகிறவர்களாகவோதான் இருக்க வேண்டுமென்று அவன் கருதினான்! உலகின் துக்கத்தைத் துடைக்கிறேன்’ என்று சொல்லித் தானே வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டு துக்கத்தில் உழலுவதைக் கண்ட அவனுக்கு நகைப்பாகத்தான் இருந்தது. ஒருவன் உண்மையாகத் துறவறத்தை ஏற்றுக் கொண்டாலும் உலகில் அனுபவிக்க வேண்டிய சுகங்களைப் பலியிட்டுக் கொண்டு அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான் என்பது தான் அவனுடைய எண்ணம்.

புத்த விஹாரத்திலிருந்து ‘டாண்! டாண்!’ என்று அன்பு நாதத்தை எழுப்பிக் கொண்டிருந்த மதுரமான மணியோசை இன்னமும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தப் பிக்ஷக்களின் குழுவில் மிகவும் வயதானவரும் முன் வரிசையில் நிற்பவருமான ஒருவர், ‘நமோ தஸ்ய பகவதோ அரஹதோ ஸம்மாஸம்புத்தஸ்ய” என்று சொன்னார். அப் பிக்ஷுவைத் தொடர்ந்து மற்றப் பிக்ஷுக்களும், பிணிகளும்:

‘புத்தம் சரணம் கச்சாமி,
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி’

என்றனர். வயதில் நிறைந்த பிக்ஷு முதலில் சொல்லிய சுலோகத்தை மறுமுறையும் சொன்னார்.

‘துதியம்பி புத்தம் சரணம் கச்சாமி
துதியம்பி தம்மம் சரணம் கச்சாமி
துதியம்பி சங்கம் சரணம் கச்சாமி’

என்றனர். மறுபடியும் வயோதிகரான பிக்ஷு தம் சுலோகத்தைச் சொன்னார்.

‘ததியம்பு புத்தம் சரணம் கச்சாமி
ததியம்பு தம்மம் சரணம் கச்சாமி
ததியம்பு சங்கம் சரணம் கச்சாமி’

என்றனர். முதலில் வயதில் மூத்தவராக இருக்கும் பிக்ஷு நான்கு படிகளையும் கடந்து மேடைமீது ஏறித் தம் கையில் ஏந்தி இருந்த மலர்க் கொத்தைப் புத்தர் சிலையின் பாதார விந்தங்களில் வைத்து வணங்கினார். அவருக்குப் பின்னால் ஒவ்வொருவராக மேடை மீது ஏறி மலரைப் புத்தர் பெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டு வந்தனர். எல்லாப் பிக்ஷுக்களும் தங்கள் மலரைப் பகவானின் திருவடியில் சமர்ப்பித்த பிறகு பிக்ஷணிகள் வரிசையாகச் சென்று தங்கள் கையிலுள்ள மலர்களைப் பகவானுக்கு அர்ப்பணித்தனர்.

கடைசியில் வயதில் சிறியவளாக இருந்த ஒரு பிக்ஷுணி தன் கையிலுள்ள மலரைப் பகவருக்குச் சமர்ப்பணம் செய்வதற்காக மெதுவாகச் சென்று மேடையின் முதல் படியில் காலை வைத்த போது, ”பகவதி, நில்….” என்ற குரல் கேட்டுச் சட்டென்று நின்று விட் டாள். திடீரென்று ஏற்பட்ட இந்தக் குரலைக் கேட்டுப் பிக்ஷக்கள் கலவரம் அடைந்தவர்களாக நின்றனர். அந்தப் பிக்ஷுக்களினிடையே இருந்த ஒருவர், “இவள் ததாகதருக்கு மலர் சமர்ப்பிக்க அருகதையற்றவள், சங்கத்தில் இருக்கத் தகுதியற்றவள்……” என்றார்.

வயதில் முதிர்ந்தவராக இருந்த துறவி முன்னால் வந்து நின்று கையைத் தூக்கி வேதனை நிறைந்த குரலில் ‘சாந்தி, சாந்தி’ என்று இரு தடவைகள் சொல்லி விட்டுச் சில வினாடி நேரம் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் இருப்பவர் போல் இருந்தார். பிறகு கண்களை விழித்துத் துயரம் நிறைந்த குரலில், “இது பிரார்த்தனை நேரம். இந்தச் சமயத்தில் தியானத்தைத் தவிர வேறு எதையும் புத்தர் பெருமான் விரும்ப மாட்டார். பிறர் குறையைக் காண்பது எளிது. தன் குறைகளை முதலில் அறிந்து கொள்கிறவனே பிக்ஷு என்ற பெயரைச் சூட்டிக் கொள்ள அருகதை உள்ளவன். கொலைக் குற்றம் கூடச் செய்திருக்கலாம். ஆனால் புத்தர் பெருமானின் பொன்னடிகளில் மலர்களை வைத்து வணங்க அவர்களை அருகதையற்றவர்கள் என்று யாரும் தடுக்க முடியாது. அன்புருவமும் குற்றம் செய்தவர்களை மறுபடியும் மன்னிக்கும் தயாள குணமும் பொருந்திய ததாகதருக்கு இது உவப்பாகாது. பகவதி ஏதேனும் குற்றங்கள் இழைத்திருக்கலாம். அதை விசாரணை செய்ய வேண்டியது சங்கத்தின் விதி. கணவனைக் கொன்றவளைக் கூடப் பௌத்த சங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. துக்கமடைந்தோரையும், அனாதையானவர்களையும், தீய ஒழுக்கத்தினால் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களையும் ஏற்று அன்பு, அடக்கம், அஹிம்சை இவற்றின் மூலமாக அவர்களை நல்வழியில் புருத்து வதற்காகத் தான் சங்கம் ஏற்பட்டிருக் கிறது. இதுதான் புத்தர் பெருமானின் முக்கிய விருப்பம். துக்கம் அடைந்தவர் களின் பாதுகாப்பாளர் அவர். துயர மடைந்தோரை மேலும் துயரமடையச் செய்வதற்காக அந்தக் கருணாமூர்த்தி இந்த உலகுக்கு வரவில்லை. அவர் அவதரித்தது இந்த உலகத்தின் துயரைத் துடைப்பதற்காகத்தான். “பிக்ஷு” என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து கொள்ள வேணும். ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும். ஊழலைக் களையவேண்டும். நாளைய மறுதினம் பௌர்ணமி-பாடி மோஹ்ஹம்-அன்று பகவதியின் குற்றங்களை விசாரிக்கலாம். இன்று பகவனுக்கு மலர் அர்ப்பணிப்பதைத் தடுக்கும் பாவத்தைப் பிக்ஷுக்ஷகளாகிய நாம் ஏற்றுக் கொள்ள வேண்டாம்” என்றார்.

அமராவதி புத்தவிஹாரத்தில் பல வருஷ காலம் பிவாய் இருந்து பயிற்சி பெற்றிருந்த அக் காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள அந்தப் பௌத்த சங்கத்துக்கு மகாதேரர் அப்பொழுது தலைவராக இருந்தார். சங்கத்தில் தேர ராவதென்றால் வயதிலும் படிப்பிலும் அனுபவத்திலும் மிகுந்தவராக இருக்க வேண்டும். அக்கமகாதேரர் அசோகனைப் பௌத்த மதத்தில் பற்றுக் கொள்ள வைத்த உபகுப்தர் என்னும் பௌத்த மகானின் வழியில் வந்தவர். நாலந்தா கல்லூரியில் படித்த பேரறிவாளர், அவருடைய அன்பு மார்க்கத்தாலும், ஒழுக்க சீலத்தாலும் பூம்புகார் நகரத்தில் மாத்திரமல்ல. தமிழகமெங்குமே அவர் பெரிய தவசிரேஷ்டராகப் போற்றப்பட்டார். அக்கமகாதேரர் தம் கருணை நிறைந்த பார்வையை அந்தப் பிக்ஷுணியிடம் செலுத்தி, ‘பகவனுக்கு மலரைச் சமர்ப்பிக்கலாம்’ என்பது போல் மெதுவாகத் தலையசைத்தார்.

அந்த இளம் பிக்ஷுணி மலர்களைப் பெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்த பின் அமைதி நிறைந்த இரவில் கடலோசை கேட்பது போல் ‘புத்தம் சரணம் கச்சாமி – தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி’ என்ற கோஷங்கள் எழுந்தன. மணியோசையும் ஓய்ந்தது. பிக்ஷுக்களும், பிக்ஷணிகளும் அமைதியாகக் கலைந்தனர். இருளிடையே தூண்மறைவில் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பூதுகனுக்கு அங்கு நடந்தவைகள் எதுவுமே ஆச்சரியத்தையோ, வியப்பையோ கொடுக்கவில்லை. ஆனால் அவன் மனத்தில் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் உண்டாக்கிய விஷயம் ஒன்று தான். அந்தத் துறவிகளின் கூட்டத்தில் கடைசியில் நின்ற ஒருவருடைய முகம் அவனுக்கு யாரையோ நினைவுப் படுத்தியதுதான் அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இவன் கவனத்துக்கு உள்ளான அந்தப் பிக்ஷு மற்றப் பிக்ஷுக் களைப் போல் பிரார்த்தனைக்குப் பின் அந்த இடத்தை விட்டுச் செல்லாது சுரங்களைக் குவித்த வண்ணம், கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனையில் லயித்துப் போயிருந்தார். மற்றவர்களெல்லாம் சென்ற பிறகு அந்தப் பிக்ஷு தனியாக நின்று கொண்டிருப்பது அவனுக்கு ஒரு வாய்ப்பாகவும் பட்டது. அவன் சிறிதும் அச்சமோ தயக்கமோ இன்றிச் சட்டென்று அந்தத் துறவியை நெருங்கி அவர் தோளைத் தொட்டு அசைத்தான், தியானத்திலிருந்த பிக்ஷு கண்களைத் திறந்து எதிரில் நின்றவனைப் பார்த்ததும் பேய் அறைந்தவர் போல ஆகி விட்டார். ஆனால் கண நேரத்தில் அவர் மனத்தில் திடமும் தெளிவும் ஏற்பட்டு விட்டதை முகத்தின் ஒரு ஒளி காட்டியது.

“பூதுகனா..?” என்றார் சிறிது அச்சத் தோடும் ஆச்சர்யத்தோடும்.

– தொடரும்…

– மாலவல்லியின் தியாகம் (தொடர்கதை), கல்கி வார இதழில் 1957-01-13 முதல் 1957-12-22 வரை வெளியானது.

– கி.ரா.கோபாலனின் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘மாலவல்லியின் தியாகம்’ தொடரின் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் கல்கியில் மற்றொரு உதவி ஆசிரியராக இருந்த ஸோமாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *