கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 3,322 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனம் பொறுக்குமா? நடப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. என்ன செய்யலாம்? ஒன்றுமே தோன்றவில்லை.

தலைவரிடம் போய்ச் சொல்லலாமா? அவர் மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்?.

தலைவர் சட்டமன்ற உறுப்பினரிடம் போகலாம் என்பார். கூட்டத்தைக் கூட்டுவார். வருகிற கூட்டம் முழுவதும் ஒதுங்கி வெயிலில் காய்ந்து நிற்க, உள்ளே குளிர்பானம் அருந்திப் பேசிக் கொண்டிருப்பார்கள். ‘ஏதாவது சொல்லி அனுப்புங்க’ என்பார்கள். சிரிப்பார்கள். சிரித்தவாறே வெளியில் வருவார்கள். ஊரின் சிரிப்பெல்லாம். அங்கே திரண்டு வந்து குடிபுகுந்தது போலத் தோன்றும்.

“வறட்சி நிவாரண வேலைகள் தொடங்கப் போகுது. அப்பொழுது எல்லாருக்குமே வேலை கிடைக்கும். கூலியும் அரசாங்கச் சட்டப்படி கிடைக்கும். கூலியைக் குறைத்துக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. பொறுத்திருங்கள். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் உரிய நடவடிக்கை எடுப்பார்!”

கூட்டம் கைதட்டும்; கைதட்ட வேண்டும். இல்லாவிட்டால் அழைத்து வந்த தலைவருக்கு மரியாதை இருக்காது.

அவர் எப்பொழுது நடவடிக்கை எடுப்பது, எப்பொழுது வறட்சி நிவாரண வேலைகள் தொடங்குவது, வேலை செய்வது, கூலி வாங்குவது, பசியும் பட்டினியுமா அரிசி வாங்க ஓடுவது, ஒட்டிய வயிற்றுடன் குடிசைகளில் அமர்ந்து கதை பேசிக் கிடக்கும் மக்களுக்கு உழவுத் தொழிலையே நம்பி வாழ்ந்து விட்ட மக்களுக்கு எப்பொழுது கஞ்சி கிடைப்பது?

பெரியவர்கள் நிலைமையைவிட சிறுவர்,சிறுமியர் பாடு தான் கண்ணராவி காட்சி. குளம் குட்டைகள் வறண்டு போகாமல் இருந்தால் குத்தகைக்காரர்கள் மீன் பிடித்து முடிந்த பிறகு நண்டு நத்தைகளாவது கிடைக்கும். காசு செலவில்லாமல் கிடைக்கும்.

பள்ளிக்கூடங்களுக்குப் போகாவிட்டாலும் பெயரையாவது கொடுத்து வைக்கச் சொன்னதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டார்கள். பள்ளிக்கூடங் களில் பெயர் கொடுத்திருந்தால் இப்பொழுது மதிய உணவுத் திட்டத்தின் படியாவது சோறு கேட்டுத் தலைமையாசிரியரிடம் சண்டை போடலாம். அதற்கும் வழியில்லை.

“பள்ளிக்கூடம் வருகிறவர்களுக்குத்தானே மத்தியான சோறு போட முடியும்? பள்ளிக்கூடத்தில் பேரே இல்லாத பிள்ளை களுக்கு நான் எந்தக் கணக்கில், எப்படிய்யா சோறு போட முடியும்?” என்ற கேட்க மாட்டார்களா?

எந்த வகையிலும் வழியில்லை. திறந்து கிடந்த வழிகளை அடைத்துப் போட்டவனே இப்பொழுது அடைப்புக்குள் மாட்டிக் கொண்டு தவிப்பதாக எண்ணினான். மான உணர்ச்சியை விழிக்க வைத்தவன். ஆண்டானும் இல்லை; அடிமையும் இல்லை என்று முழங்கியவன். உழைத்து ஊதியம் பெற்று உண்ணச் சொன்னவன். இன்று உழைக்கவும் வழியில்லை; ஊதியம் பெறவும் வழியில்லை.

உழவுத் தொழிலைத் தவிர வேறு வேலை அறியாதவர்கள். தொழிலே இல்லை; கூலியும் இல்லை. சோற்றுக்கும் வழி யில்லை. மக்கள் ஆலாய்ப் பறந்தனர். குழந்தைகள் கண்டதைத் தின்றனர். தோப்பு துரவுகளில் திரிந்தனர். சிறுவர் சிறுமியருடன் வறண்ட வயல்களின் நண்டு வளைகளில் எலிகளையும் நண்டுகளையும் தேடி அலைந்தனர், முடியாத முதிர்ந்தவர்கள். இந்தக் கேடுகளைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மாயிருக்க முடியும்?.

எந்தத் தலைவரைப் பார்த்தாலும் ஒரு வேலையும் நடக்க வில்லை. ஒருவரையொருவர் கைகாட்டி விட்டுப் போய்க் கொண்டிருந்தனர். வறட்சி நிவாரண வேலைகள் தொடங்கப் போகின்றன. ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன. பணம் ஒதுக்கியாகிவிட்டது. இதோ, அதோ என்றெல்லாம் பேச்சு அடிபட்டதோடு சரி. அரசாங்க ஆமை இருந்த இடத்தை விட்டு நகர்ந்து வரும் பாட்டைக் காணோம்.

அதற்குள் அவசரப்பட்டு சிறுமி ஒருத்தி இறந்து போனாள். ஏதோ ‘காயலா’ என்று சொன்னார்கள். ‘என்னடா ஆச்சு?’ என்று கேட்கச் சென்றபோது வயிற்றுக் கோளாறு என்றான் பெற்றவன். இரண்டொரு நாளில் சிறுவன் ஒருவன் செத்து விட்டான். அவன் சோற்றுக்கு இல்லாமல்தான் செத்தான் என்று பேசிக் கொண்டார்கள். ‘அது எப்படிச் சொல்லலாம்?’ என்று அரசாங்க அதிகாரி ஜீப்பில் வந்து இறங்கினார். சிறுவனைப் பறி கொடுத்த வீட்டைக் ‘குடை குடை’ என்று குடைந்து தள்ளினார்கள்.

“பையனுக்கு வயித்து வலி இருந்ததுங்க. திடீர்னு செத்துப் போயிட்டான்.”

“ஆசுபத்திரிக்கு அழைச்சுகிட்டுப் போனியா?”

“ரெண்டாவது நாளு அழைச்சுகிட்டுப் போனேனுங்க.”

“மருந்து கொடுத்தாங்களா?”

“ஏதோ குடுத்தாங்க.”

“மருந்தை ஒழுங்கா குடுத்தியா?”

“சாப்பாட்டுக்கு முன்னாலேயும் அப்புறமும் கொடுக்கச் சொன்னாங்க. நான் என்னத்தைச் சாப்பாட்டைக் கொடுக்கறது?”

“மருந்தைக் கொடுத்தியா இல்லையா?”

“ஒரு நாளு குடுத்தேன்.”

“தொடர்ந்து ஏன் ஆசுபத்திரிக்குப் போகலை?’

“அரை நாளு போயிடும் ஆசுபத்திரிக்குப் போயிட்டு வரதுக்குள்ளே..நாங்க வயத்துக்குத் தேடுவோமா, ஆசுபத்திரிக்கு அலைவோமா?”

“வயிற்றுவலியாலேதானே உன் மவன் இறந்து போனான்? இதிலே கையெழுத்துப் போடு.”

“கை நாட்டு தாங்க…”

“ஏதோ ஒண்ணு போடு!”

கையொப்பம் பெற்றுக் கொண்டு ஜீப் புறப்பட்டுப் போய் விட்டது. அறிக்கை அவசரமாகக் கொடுக்க வேண்டும்.

மானம் காத்தானுக்கு மனம் பொறுக்கவில்லை.

“ஏன்டா, உன் மவனுக்கு வயத்து வலி எப்போதுமே உண்டா?”

“கிடையாது. இப்போதான் சோத்துக்கு இல்லாமே கண்டதையும் தின்ன ஆரம்பிச்சதுக்குப் பொறவு…”

“கண்டதையும்’னா?”

“ஒரு நாளு எலிக்கறி தின்னமா…”

“அட முண்டம், அதை ஏன்டா அந்த ஆபீசருகிட்டே சொல்லலை?”

“நாங்க எல்லாரும்தான் தின்னோம்.”

“ஏன்டா பெரியவங்களுக்கு ஒத்துகிட்டது?”

“விதி… போய்ச் சேர்ந்துட்டான்!”

“என்ன சாப்பிட்டேன்னு ஆசுபத்திரியிலே கேட்கலையா?”

“ஒண்ணும் கேட்கலை. இருக்கிற கூட்டத்திலே என்ன கேட்கிறாங்க?”

மகனைப் பறி கொடுத்தவனிடம் தன் பங்குக்கு ஒன்றும் குடையக்கூடாது என்று ஆறுதலை மட்டும் கூறிவிட்டு வந்த மானம் காத்தான் துண்டை விரித்துப் போட்டுக் குடிசையின் ஒட்டுத் திண்ணையில் படுத்துவிட்டான்.

வறட்சி நிவாரண வேலைகள் தொடங்குவதாகக் கூறி ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குள் தெருவில் இன்னும் எத்தனைச் சாவு விழுமோ?

என்னவோ, மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்கத் தின்றுவிட்டு, உடம்புக்கு ஏதாவது என்றால் தனியார் மருத்துவமனையில் பெரிய மருத்துவர்களிடம் உடம்பைக் காட்டிச் சோதனைகள் செய்து கொண்டு, விலை உயர்ந்த மருந்துகளை வாங்கி விழுங்கி விட்டு அதன் பிறகு உடம்பு தேறாமல் செத்துப் போவதாகக் கணக்கிட்டுப் ‘பட்டினிச் சாவு’ இல்லை என்று மிக எளிதாகக் கூறி விடுகிறார்கள்.

அவர்கள் மீது குற்றமில்லை. பட்டினிச்சாவு என்று அவர்கள் கணக்கிடுவது எதுவுமே உண்ணாமல் முழுப் பட்டினியாகக் கிடந்து துளித்துளியாகச் செத்துப் போவது. அதுபோல யாருமே சாவதில்லை. பசியின் கொடுமையால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாத எதையாவது தின்றுவிட்டு முறையான மருத்துவமும் செய்து கொள்ள வழியில்லாமல் செத்துப் போவதே அதிகம். அது பட்டினிச் சாவில் சேராது.

அவர்களுடைய கணக்குகளும் பொய்களும் ஏமாற்று வேலைகளும் எப்படியோ போகட்டும். மானம் காத்தான் தன் மக்களுக்கு மான உணர்ச்சியை ஊட்டியது போலவே இப்பொழுது அவர்களைப் பட்டினியின் கொடூரப் பிடியி லிருந்தும் காப்பாற்றியாக வேண்டும். அந்தக் கடமை அவனுக்கிருக்கிறது.

திண்ணையில் துயருடன் உருண்டு கிடந்த மானம் காத்தான் பொழுது போய் இருட்டியதற்குப் பிறகு எழுந்தான். தெரு முழுவதும் இருட்டு. தொலைவில் தெருமுனையில் உள்ள மின் விளக்கு வழக்கமாக ஒன்பது மணிக்குப் பிறகுதான் மினுக்கும். இருட்டோடு நடந்து குடியானவத் தெருவில் நுழைந்து ஒரு சந்து வழியாகச் சென்று இராமலிங்கம் ஐயாவின் பெரிய இரும்புக் கதவுகளைத் திறந்து பார்த்தான் அவன். நாய் குரைத்தது. கதவைச் சாத்திக் கொண்டான்.

“யாரு பாரு” என்ற குரலோடு இராமலிங்கமே வெளியில் வந்தார். விளக்கு ஒளிர்ந்தது.

குரைத்த நாயை அதட்டி ஓட்டி விட்டு, “என்ன மானம் காத்தான், இந்த நேரத்திலே?” என்று வியப்புடன் வரவேற்பு அளித்தார்.

தயங்கி நின்றான் மானம் காத்தான்.

“ஏன் நிற்கிறே? அதோ பலகையிலே உட்காரு. ஒண்ணும் யோசிக்காதே. உட்காரலாம் உட்காரு. நீ உன் மக்களை மட்டுமில்லை, எங்களையும் சேர்த்துத்தான் திருத்தியிருக்கே” என்றார் இராமலிங்கம்.

அவன் உட்கார்ந்தான்.

“ஏன் உன் மூஞ்சி இம்மாங் கலவரப்பட்டுப் போயிருக்கு? வந்த சேதியைச் சொல்லு. எதுவாயிருந்தாலும் செய்யறேன்.”

அந்த ஆறுதல் சொற்கள் அவன் கூச்சத்தைப் போக்கின.

“எல்லாம் பசியும் பட்டினியுமாக் கிடக்கிறாங்க. வறட்சி நிவாரணம் வரும்னு சொல்லிக் காலத்தைக் கடத்திக்கிட்டு இருக்கிறாங்க” என்றான் அவன்.

“தெரியும் சொல்லு. நம்ம அவசரம் அவங்களுக்குத் தெரியாது. சட்டதிட்டம் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. சாலையிலே அடிபட்டு ஆசுபத்திரிக்குப் போனா, போலீசுக்குச் சொல்லியாச்சான்னா கேட்பாங்க பாரு டாக்டருங்க? அதைப் போலத்தான்.உயிரைக் காப்பாத்த சட்டதிட்டங்களைத் தூக்கிக் குப்பையிலே போடணும்.உங்க தெருவுக்கு என்ன செய்யலாம் முதல்லேன்னு நானும் யோசிச்சுக்கிட்டுதான் இருந்தேன். ஒரு மூட்டை அரிசி அனுப்பட்டுமா?” என்றார்.

“இலவசமா கொடுக்கறதை எங்க மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. ஒரு பத்து நாளைக்காவது சோறு போட்டாகணும்.”

“ஐயோ! அது எப்படிப்பா முடியும்? என்கிட்டே வேலையும் இல்லை. ஊராட்சி மன்றங்களும் பணம் இல்லாமே முடங்கிக் கிடக்கு தெரியுமா? பொது வேலை ஒண்ணுகூட நடக்கலை.”

“எனக்கும்தாங்க ஒண்ணும் புரியலை. எங்க மக்களுக்கு அளவுக்கு மேலே தன்மான உணர்ச்சியை நானே உண்டாக்கி விட்டு இப்போ நெருக்கடியிலே தவிக்கிறேன். அவனவனும் சட்டம் பேசுறானுங்களே தவிர, கடமை உணர்ச்சியை அடியோட ஒழிச்சுட்டாங்க.”

“தன்மானம் என்கிறது கடமைக்கு எதிரானது இல்லை. கடமைக்குள்ளேதான் தன்மானம் அடங்கியிருக்கு. கடமைக்காகத்தான் தன்மானமே. இப்போ நீ உன் கடமைக்காகத்தான் தன்மானத்தோட என்கிட்டே வந்திருக்கே” என்ற இராமலிங்கம் சிறிது நேரம் தலைகுனிந்து வீற்றிருந்தார்.

மானம் காத்தான் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

இராமலிங்கம் ஒரு முடிவுக்கு வந்தவராகக் கூறினார்.

“மானம் காத்தான்! நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நாளைக்கு இங்கே உள்ள மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டுறேன். மழை பெய்து வளம் கொழிக்க மாரியம்மன் கோயில் விழா நடத்தணும்னு ஒரு தீர்மானம். ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மூட்டை அரிசி போட்டுக் கஞ்சி காய்ச்சி ஊத்தணும்னு சொல்லிடுறேன். சோறு போடுறதாச் சொன்னால் இங்கே உள்ளவங்களே சாப்பிட்டுப் போயிடுவாங்க. கோயில்லே கஞ்சி காய்ச்சி ஊத்தறதே ஏழை எளியவங்க சாப்பிடணும் என்கிறதுக்காகத்தான். ஏழைகளுக்குக் கஞ்சி ஊத்தறதா சொல்லிட்டா இவங்க வர மாட்டாங்க. நீயே முன்னாலே நின்னு கோயில் கஞ்சி புண்ணியம்னு சொல்லி உன் கையாலேயே உன் மக்களுக்கு ஊற்று. பத்து நாள் விழா வைச்சு நான் ஏற்பாடு பண்ணிடுறேன். என்ன சொல்றே? அதற்குப் பிறகு வறட்சி நிவாரணம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம்.”

மானம் காத்தான் எழுந்து நின்றான். அவரைக் கும்பிட்டான். “ஐயா…உங்களை நான் எப்படி…” அவன் குரல் நெகிழ்ந்து தடுமாறியது.

“ஒண்ணும் அதிகமா சொல்லிடாதே. நீ மானம் காத்தானாகவே இரு” என்றார் இராமலிங்கம்.

– இலக்கியப்பீடம் சிறுகதைப் போட்டி 2004 பிரசுரத்துக்குத் தேர்வுபெற்ற சிறுகதை, இலக்கியப்பீடம் அக்டோபர் 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *