‘டான்ஸுப் பாப்பா… டான்ஸுப் பாப்பா கோபங்கொள்ளாதே. உங்கம்மா வரவே நேரஞ்செல்லும்! சண்டை போடாதே’ – தெரு முனையில் இப்படியொரு பாட்டுச் சத்தம் கேட்டால், அலமி ஆச்சி வந்து கொண்டிருப்பதாக அர்த்தம்.
ஓ! இன்று திங்கட்கிழமை! ஒவ்வொரு வாரமும் இப்படிப் பாடிக்கொண்டு, அட்ரஸ் புத்தகமும், ஏரோகிராமுமாக ஆச்சி வந்துவிடுவாள். சிங்கப்பூரில் இருக்கும் தன் கணவர் ராமநாதன் செட்டியாருக்கு வாரம் தவறாமல் ஒரு கடிதம் எழுதிவிடுவது ஆச்சியின் தலையாய கடமையாகும்!
ஆச்சிக்கு லெட்டர் எழுதும் வேலையை கர்ம சிரத்தையாக சாவித்திரிதான் செய்து வந்தாள். இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆச்சி சொல்லுவதை கிரகித்துக்கொண்டு எல்லாவற்றையும் கோர்வையாக எழுத்தில் கொண்டு வருவது என்பது சாமான்யமானதல்ல. ஆனால், அதை அத்தனை அழகாகச் செய்து முடிப்பாள் சாவித்திரி. எதையும் பொறுமையாகவும் நறுவிசாகவும் செய்வதில் சாவித்திரிக்கு யாரும் இணையாக முடியாது. எனவே, ஆச்சிக்கு சாவித்திரி என்றால் ஒரு தனிப்பிரியம் என்றே சொல்லலாம்.
ஓவியர் ஸ்யாம்
ஒவ்வொரு தடவை கடிதம் எழுதும்போதும், ஆச்சி தனது கையால் அவள் கன்னத்தை நெட்டி முறித்து, “ஆத்தா… சாவித்திரி! நீ நல்ல மகராசியா இருக்கோணும் ஆத்தா! நல்ல பெரிய இடத்துல கல்யாணம் தகஞ்சு பதினாறும் பெத்துப் பெருவாழ்வு வாழணும் தாயி” என்று மனதார வாழ்த்திவிட்டுக் கிளம்புவாள்.
ஒரு நாள் கூட ஆச்சி வெறும் கையோடு வந்ததில்லை. அவள் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த அவரைக்காயும், பிஞ்சு பிஞ்சான வெண்டைக்காயும், கொத்துக் கொத்தாய்ச் சுண்டைக்காயும், பசேலென்ற கறிவேப்பிலையும், சுவிஸ் சாக்லேட் நிறத்தில் பழுத்திருக்கும் சப்போட்டா பழங்களும் கூடவே வரும். “அடி பொண்டுகளா! இன்னைக்குக் கிருத்திகை விரதம் இருந்தேன். சாமிக்குப் படைக்கக் கருப்பட்டிப் பணியாரம் செஞ்சேன். சாப்பிட்டுப் பாருங்க” என்பாள். பசு நெய் உறைந்து பச்சக்கற்பூரம், ஏலக்காய் மணத்தோடு மெத்தென்று புடைத்திருக்கும் அந்தப் பணியாரத்தின் ருசியை வார்த்தையால் எழுத முடியாது!
ஆச்சிக்கு ஒரே பையன்தான்! சம்முகம்… சம்முகம் என்று உயிரை விடுவாள். அவனும் திருமணமாகி பக்கத்திலேயே இரண்டு தெருக்கள் தள்ளி இருந்தான். மகனும் மருமகளும் அவ்வப்போது வந்து ஆச்சியை பார்த்துவிட்டுப் போவார்கள்!
தனது வீட்டிலேயே பிள்ளையுடனும், மருமகளுடனும் சேர்ந்து இருக்கலாமென்றுதான் ஆச்சியும் விரும்பினாள். ஆனால், “இந்த ஓட்டை வீட்டுல யாரு இருப்பாக? எனக்கு எங்க ஆத்தா, அப்பச்சி வீட்டுக்குப் பக்கத்துல இருந்தாத்தான் சரிப்படும். நாளக்கி எதுனாச்சும் அவசரம்னா, அவுகதான் ஒத்தாசையா இருப்பாக…” என்று மருமகள் கழுத்தை விடைத்துக் கொண்டு நீட்டி முழக்கியபோது…
“அடி ஆத்தி! நல்லா மகராசியா அங்கிட்டுப் போயி இருந்துக்க ஆத்தா! என் புள்ள சம்முகம் ஓடியாடி வளர்ந்த இந்த ஓட்ட வீடு எனக்கு அரமணையாக்கும்! நீங்க ஒங்க வசதிப்படி எங்க வேணாலும் இருந்துக்கங்க… எனக்கு யாரு தயவும் வேணாம்… அந்தக் குன்னக்குடியான் என்னைப் பாத்துப்பான்…”என்று ஆச்சி பளிச்சென்று சொல்லி விட்டாள். “தன்மானத்தைப் பெரிதும் மதிப்பவள் அலமியாச்சி’’ என்று அம்மா அடிக்கடி சொல்லுவதுண்டு.
அரு.வீதியில் 3/120 என்று இலக்கமிட்ட அந்த வீடு, ஆச்சிக்கு சீதனமாக வந்ததாகும்! பிறந்த வீட்டின் மஞ்சக்காணி சொத்து என்று ஆச்சிக்கு அந்த வீட்டின் மீது ஏகப் பிரியம். வெளியே காம்பவுண்டுச் சுவர்கள் செங்கல் உதிர்ந்து, அங்கங்கே இடிந்து காணப்பட்டாலும், வீட்டின் உட்புறம் நல்ல அமைப்புடன் இருந்தது.
பெரிய ஆள்வீடும், பக்கத்துக்கு நான்காக எட்டு அறைகளும் பர்மா தேக்குக் கதவுகளும், வேலைப்பாட்டுடன் கூடிய நிலைப்படி உத்திரங்களும், பெல்ஜியம் கண்ணாடிகள் பதித்த படுக்கை அறையும், வலை பீரோக்களை உள்ளடக்கிய காற்றோட்டமான சமையற்கட்டும், நீளமாகப் பின்புறம் இட்டுச் செல்லும் வளைவும், அழகான முற்றமும் கொண்ட பாந்தமான வீடாகவே அது இருந்தது.
அத்தோடு, நித்திய மல்லியும், செவ்வரளியும், பவழ மல்லிகையும், பன்னீர்ப் புஷ்பங்களும் பூத்துக் குலுங்கிய முன்புறத் தோட்டமும், மருதாணியும், முருங்கையும், கறிவேப்பிலையும், வாழையும், அதற்கு நடுவே சிறிய துளசி மாடமுமாக கொல்லைப்புறமும் கொண்டு மொத்தத்தில் அந்த வீடு எல்லா செளகரியங்களும் நிறைந்து மங்களகரமாக விளங்கியது என்பதே நிஜம்! வெள்ளிச் சட்டமிடப்பட்ட குன்னக்குடி முருகப்பெருமானின் படத்தை உள்ளடக்கிய அழகிய பூஜை அறையும் அருள்மணம் கமழும் மையமாக அங்கே விளங்கியது!
ஆச்சியின் கணவர் ராமநாதன் செட்டியார் சிங்கப்பூர் சென்று பல வருஷங்களாகி விட்டன. அவருக்கு, அங்கே நாணயம் மாற்றுத் தொழிலிலும், வட்டித் தொழிலிலும் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது ஆச்சிக்கு பெருந்தொகையாக அனுப்பி வைத்து விடுவார்.
செட்டியார் ஊருக்கு வந்து போகும் சமயங்களில் ஆச்சியை கையில் பிடிக்க முடியாது. “இந்தாடி குட்டி! செட்டியாருக்கு முள்ளுத் தேன்குழலும், சீப்புச் சீடையும் புடிக்கும்… போயி இத மெஷின்ல கொடுத்து அரச்சு எடுத்தா” என்று அரிசியும் உளுந்தும் கலந்து மாவரைக்கக் கொடுத்து அனுப்புவாள்.
தேன்குழலும், அந்தச் சீடையும், முறுக்கும் என்னவோ சலவைக்குப் போய் வந்தது போல் அத்தனை வெளுப்பாக இருக்கும். அத்தோடு, தினமும் எள்ளுருண்டை, வெள்ளைப் பணியாரம், மசாலா சீயம், கந்தரப்பம், கவுணி அரிசிப் பாயசம் என்று விதவிதமாகச் செய்து ஆச்சி அமர்க்களப்படுத்துவாள்.
செட்டியார் இருக்கும் இடம் தெரியாது. ‘கட்டின பசுப் போல்’ படு அமைதியாக இருப்பார். வெள்ளை மல்லு வேட்டியும், வெள்ளை டெர்லின் சட்டையும் போட்டுக் கொண்டு, இன்டிமேட் சென்ட் வாசனையுடன் கையில் ஒரு சிங்கப்பூர் குடையுடன் நடந்து போகும் போது, அவருக்கு ‘மிஸ்டர் கிளீன்‘ என்று ஒரு பட்டம் கொடுக்கலாம் போலிருக்கும்!
ஆச்சிக்கு அவர் வாங்கி வரும் பொருட்கள் அனைத்தும் தரத்திலும், விலையிலும் ரொம்பவே உயர்ந்ததாக இருக்கும்!
வழவழவென்ற ஜப்பான் புடைவைகள், விதவிதமான காலணிகள், நவீன மின் சாதனங்கள், முக ஒப்பனைப் பொருட்கள், கைக்கடிகாரங்கள், அருமையான கைப்பைகள், பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்புகள், மில்க் சாக்லட்டுகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் என்று அள்ளிக்கொண்டு வந்திருப்பார்.
”எனக்கும் என் மருமகளுக்கும் இம்புட்டு அள்ளிக்கினு வந்திருக்காக. எல்லாம் வெள்ளமா உண்டெனக் கெடக்கு. நீங்கள்லாம் சின்னஞ்சிறிசுகதானே… நீங்க போட்டுக்கங்க ஆத்தா” என்று அவற்றையெல்லாம் அன்போடு கொண்டு வந்து தருவாள். வேண்டாமென்றாலும் கேட்க மாட்டாள்.
ஆச்சியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாலே நன்றாகப் பொழுது போய்விடும். “எங்க செட்டியாரு இருக்காரே, அவரு பேருக்கேத்த மாதிரி அந்த ராமாயணத்து ராமனேதான்! இங்க வந்துட்டாருன்னா… பொழுதன்னைக்கும் கூடவே இரு இரும்பாரு… அங்கிட்டு இங்கிட்டு என்னை நகர விட மாட்டாரு. ’இந்தக் கையா மணக்க மணக்க எனக்குச் சமைச்சது? இந்தக் கையா நெய் மணக்க ருசியா பலகாரம் செஞ்சது?’ என்று சொல்லி இதமா பதமா கையைப் புடிச்சு விடுவாரு.
”நீ இப்படி ஒத்தையிலே கிடந்து அவதிப்படறியே” என்று அவரு சொல்லிச் சொல்லி மறுகிப் புலம்பையிலே, சென்ம சென்மத்துக்கும் இதைவிடப் பெரிசா என்ன வேணும்னு தோணும்.”
“ஹும்! அவுக நல்லா இருக்கோணும். நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா இருக்கணும்னுதான் அந்தக் குன்னக்குடியானுக்கு நேந்துக்கிட்டு தைப்பூசத்தின்போது வருஷா வருஷம் நடந்து போறேன். புள்ளையார்பட்டியிலே, அவரோட நட்சத்திரம் வரும்போது அபிஷேகம் பண்ணுறேன். ஆடி மாசம் நம்ம பழையூர் பொன்னழகி அம்மனுக்குக் கூழு காய்ச்சி ஊத்தி, மாவிளக்கு ஏத்தறேன்! மாசிப்பிறை அன்னிக்கு வர்ற நிலாவாண்டையிலே படையல் செஞ்சு, சுமங்கலி பொண்டுகளுக்கும், கன்னிப் பொண்ணுகளுக்கும், சேலை ரவிக்கைத் துணியோட தாம்பூலம் கொடுத்துட்டு வர்றேன்…” என்று உணர்ச்சி ததும்ப அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருப்பாள் ஆச்சி.
இப்படிப் பாசமும் நேசமுமாகப் பழக அலமி ஆச்சியால் மட்டுமே முடியும்! அவள் சாவித்திரியிடம் சொல்லி எழுதும் கடிதத்தில், அப்படியொன்றும் எந்தவொரு புது விஷயமும் இருக்காது. “இந்த மாசம் கரண்டு பில்லு கட்டியாச்சு; விலையெல்லாம் உசந்து போச்சு… இந்த வருஷம் மழை பொய்த்துப் போச்சு… சரியான வெள்ளாமை இல்ல…
நம்ப கொத்தரி சோலையாண்டவர் கோவில்ல பூச்சொரிதல் வருது; விராலிமலையிலே, நம்ப பங்காளி சிதம்பரம் செட்டியாருக்கு அறுபதுக்கறுபது சாந்தி கலியாணம்னு பத்திரிக்கை வந்திருக்கு. உங்க பேரச் சொல்லி ஐநூறு ரூபா மொய் எழுதச் சொல்றேன். இங்கனே நம்ப சம்முகமும் செகப்பியும் சுகம். இந்த வருசமாச்சும் நம்ப வம்சம் வெளங்க ஒரு பேரப்புள்ளய எடுத்துரணும். வெள்ளித் தொட்டி கட்டறதா குன்னக்குடியானுக்கு நேந்துக்கிட்டிருக்கேன். அப்புறம்… நீங்க சொகமா இருக்கியளா? குன்னக்குடியான் துணை” மொத்தக் கடிதமும் இப்படித்தான் இருக்கும்!
செட்டியாரிடமிருந்து மாதம் ஒரு தடவை கடிதமும், ஆச்சியின் பெயருக்கு இந்தியன் வங்கிக் காசோலையும் தவறாமல் வந்துவிடும். படு சிக்கனமாக இருக்கும் அந்தக் கடிதத்தில், ஆச்சியை மிகவும் அக்கறையாக நலம் விசாரித்திருப்பார். அந்த இரண்டு வரிக் கடிதத்திற்கே ஆச்சிக்கு மூசுமூசென்று அழுகை விம்மிக் கொண்டு வரும்!
ஆச்சியும் பணத்தை நீண்ட வைப்பில் போட்டு, அதிலிருந்து வரும் வட்டியில் மாதாந்திரச் செலவுகளைச் செய்துகொண்டு செட்டும் கட்டுமாக இருப்பாள். ஆச்சிக்கு எழுதப் படிக்கத் தெரியாதே தவிர, பணம் காசு விஷயத்தில் படு கெட்டி. அத்தனை சுலபத்தில் ஏமாந்து விட மாட்டாள்.
உணவு விஷயத்தில் கூட ஒருவித ஒழுங்கு முறையோடும், கால் காசு வீணாக்காமலும், குடும்பம் நடத்துவாள். இட்லி என்றால் மூன்று; தோசை என்றால் இரண்டு; சாதம் வைப்பது அரை ஆழாக்குதான்! என்றாலும் தினத்துக்கு ஒரு கீரை, கறிகாய் என்று வக்கணையாகச் சமைத்து உடம்பைப் பார்த்துக் கொள்ளுவாள். ‘வைத்தியத்துக்குச் செலவழிக்கிறதை விட வாணிகத்துக்குச் செலவழி‘னு சொல்லுவாக என்று நவதானியச் சமையலும் நாளொரு காயுமாக மணக்க மணக்கச் சமைத்துச் சாப்பிடுவாள்.
ஒவ்வொரு ஆண்டும் தவறாமல், மாசி மாதத்து வளர்பிறையில் வரும், ‘நிலாவாண்டை’ என்ற விழாவில் அத்தனை ஆச்சிமார்களும் கலந்து கொள்ளுவார்கள். தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுளும், தங்களுக்கு மாங்கல்ய பாக்கியமும் வேண்டி, எல்லோரும் முறை வைத்துக் கொண்டு, முழு நிலவை அம்மனாக வழிபட்டுப் படையல் செய்வார்கள். அமாவாசை தொடங்கி, பெளர்ணமி வரும் வரையில் தினமும் இரவு பத்து மணி வரையில் அந்தத் திடல் சிரிப்பும் கொண்டாட்டமுமாக இருக்கும்! சரக்சரக்கென்ற பட்டுப் புடைவையும், பளபளக்கும் நகைகளுமாக அந்த நிலாவாண்டைத் திடல் ஒரு வண்ணக் களஞ்சியமாகக் காட்சியளிக்கும்!
அன்றைக்கு அலமி ஆச்சியின் முறை! சாயங்காலம் மூன்று மணிக்கே திடலைச் சுத்தம் செய்து, பெரிது பெரிதாக மாக்கோலமிட்டு, செம்மண் பூசி, வண்ணப் பொடிகளால் ரங்கோலி போட்டு, தோரணம் கட்டி, வாழைமரம் நட்டு… என்று எல்லா ஏற்பாடுகளும் துரித கதியில் நடந்து கொண்டிருந்தன. ஒரு பெரிய கங்காளப் பாத்திரத்தில் பட்டாணிச் சுண்டலும், கும்பகோணத்து அடுக்கு நிறைய உளுந்து வடையும், காதுக்குண்டான் என்று அழைக்கப்பட்ட பெரிய வெண்கலக் கொப்பரையில் முந்திரி முழித்துக் கொண்டிருக்கும், நெய்யும் குங்குமப்பூவும் மணக்கும் கற்கண்டு சாதமும் நிவேதனத்திற்குத் தயாராக இருந்தன.
வந்திருந்த அனைவருக்கும், சந்தனம், குங்குமம், பூ கொடுத்து கூடவே, பானகம், நீர்மோர் தந்து உபசரித்து, விரித்திருந்த ஜமுக்காளத்தில் அவர்களை மரியாதையுடன் அமரச் செய்த பின், ஆளுயர இரண்டு வெள்ளி விளக்குகளை பயபக்தியுடன் ஏற்றினாள் அலமி ஆச்சி!
‘…… மாசிப் பொறையிலயும் வட்டமிட்ட (நி)லாவிலயும் தேவியன்ன (நி)லாவாத்தா தெருவீதி வாரான்னு தேங்காய் உடைப்பாரும் தீபங்கள் காப்பாரும் வெங்கலத்தைக் கீறி விளக்கெரம்ப நெய் வார்த்துக் கண்குளிரப் பாப்பாளாம் காட்சியுள்ள (நி)லாவாத்தா! இமைகுளிரப் பாப்பாளாம் நித்தே கலியாணி! போடுங்கடி பொண்டுகளா! ஒண்ணாத் திருக்குலவை!’
ஆச்சி பாடி முடித்தவுடன் அனைவரும் உணர்ச்சிப் பெருக்கோடும், பக்திப் பரவசத்தோடும் குலவை இட்டார்கள். பிறகு பெண்களும், சிறுமிகளும் வட்டமாகச் சுற்றி வந்து,
“பாற் காவடியாம் நந்தன் சேவடி பார்க்கலாம் கண்ணே! பெண்ணே! பார்வதி மைந்தன் கணபதி திருவருள் சேருமடி கண்ணே! பெண்ணே…!”
என்று பாடியபடியே கும்மி அடித்தார்கள். மணியடித்துக் கற்பூரம் காட்டி, நிவேதனம் செய்தவுடன், அனைவருக்கும் பிரசாதங்களை வாழை இலைத் துண்டு வைத்த பேப்பர் தட்டில் வைத்துக் கொடுத்தாள் ஆச்சி!
நெற்றி நிறையக் குங்குமம் விபூதியுடன், பக்திப் பரவசத்துடன், சிவப்புக் கண்டாங்கிச் சேலை கட்டி, கண்டசரம், காசு மாலையோடு, ப்ளுஜாக்கர் வைரத்தோடு ஜொலிக்க, ஜல்ஜல் மெட்டியோடு அலமி ஆச்சியை பார்த்தபோது, இரு கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது! “ஆச்சியோட இந்த சிரத்தையான வேண்டுதலும், மெய்யான பதிபக்தியும் அந்தச் செட்டியாரை பல வருஷங்கள் வாழ வைக்காதோ?” என்று அம்மாவும் பரவசப்பட்டுச் சொன்னாள்.
அன்று திங்கட்கிழமை. ஆச்சியின் தலை தெரிந்ததும், ‘‘வாங்க ஆச்சி! இன்னிக்கு என்ன சமாச்சாரம் எழுதணும்?” என்றபடி பேனாவும் பேப்பருமாக வந்தாள் சாவித்திரி. “ம்…ம்…! எழுதிக்க ஆத்தா. அன்புக்குரியவருக்கு அலமு எழுதுவது… நேத்தைக்கு (நி)லாவாண்டைக்குப் படையல் செஞ்சேன். செகப்பிக்கும் சம்முகத்துக்கும் புது உடுப்பு வாங்கிக் கொடுத்தேன். உங்க தங்கச்சி தேவானை மேலுக்குச் சொகமில்லைனுட்டு வரல. வர்ற புதன்கிழமை போயிப் பாத்துட்டு வாரேன். கரும்புத் தோட்டத்த வழக்கம் போலக் கண்டனூர் நாச்சியப்பனுக்குக் குத்தகை விட்டாச்சு. புது நெல்லை அவிக்கணும். நஞ்சப்பனை வடகுடியிலேந்து வரச் சொல்லியிருக்கேன். நம்ம கோட்டையூரு பங்களாவுல கதவு, ஜன்னல மாத்தணும். நம்ம அமிர்தம் (பசு) செனப்பட்டிருக்கு; கிராமத்துக்கு ஓட்டிவிடணும்! கிடேரிக் கன்னுக்குட்டியா இருந்துச்சுனா, சோலையாண்டவருக்குக் கொண்டுபோயிக் கொடுத்துரணும்! அப்புறம் நீங்க உடம்பு சொகம்தானே? குன்னக்குடியான் துணை.”
ஆச்சி சொல்லியதை எழுதி முடித்து, கோந்து தடவி, விலாசம் எழுதி, ஆச்சியின் கையில் சாவித்திரி கொடுத்தபோது, அப்பா உள்ளே நுழைந்தார்.
“சாமி! கும்புடறேன் சாமி! பார்த்து நாளாச்சு… நல்லா இருக்கியளா?” என்றபடி ஆச்சி எழுந்து கொண்டாள்.
“ம்…ம்! நல்லா இருக்கேன் ஆச்சி. ஒரு சந்தோஷ சமாச்சாரம். உங்ககிட்டதான் மொதல்ல சொல்றேன்.”
“சொல்லுங்க சாமி!” ஆச்சியின் முகமெல்லாம் சந்தோஷத்தில் பளபளத்தது.
“நம்ம பொண்ணு சாவித்திரிக்கு உங்களோட ஆசீர்வாதத்துல ஒரு அருமையான வரன் வந்திருக்கு. ரெண்டு பேரின் சாதகமும் பிரமாதமாகப் பொருந்தியிருக்கு. பையன் சிங்கப்பூர்ல இருக்கான். அடுத்த மாசம் லீவுல இங்க வரும்போது கலியாணத்த நடத்தலாமுன்னு அவுங்க வீட்டுல சொல்லிட்டாங்க.”
பூரித்துப்போனாள் ஆச்சி. ”அடி ஆத்தி! நல்ல உதார குணங்கொண்ட மகராசிப் பொண்ணு அய்யரே அது! நல்லா விமரிசையாப் பண்ணுங்க! இம்புட்டு நாளா உங்க பொண்ணு எழுதின கடுதாசிதான் சிங்கப்பூருக்குப் பறந்துச்சு! இப்ப உங்க பொண்ணே சிங்கப்பூருக்குப் பறக்கப் போகுதா?’’
அவகாசம் அதிகம் இல்லாவிட்டாலும், சாவித்திரியின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. சாவித்திரிக்கு ஒரு ஜோடி தங்க வளையல்களை பரிசாகத் தந்த ஆச்சி, வழக்கம் போல் அவளது கன்னத்தை வழித்து நெட்டி முறித்தபோது அனைவருக்கும் ஒட்டு மொத்தமாக ஒருவித நெகிழ்வு ஏற்பட்டது.
ஆயிற்று… ஒரு வாரம் கழித்துக் கணவன் சங்கரோடு சாவித்திரி, சிங்கப்பூருக்குக் கிளம்பும் நாளும் வந்தது. அன்றைய தினம், ஆச்சி கையில் ஒரு பார்சலோடு வந்தாள்.
“அய்யரு வீட்டுப் பொண்ணே! அருமையான கண்ணே! இனிமே, கடுதாசி எழுத உன் தங்கச்சி காயத்திரியைத்தான் புடிப்பேன். அப்புறம் ஆத்தா! உனக்குச் சிரமமா இல்லையினா, இந்தப் பார்சலை செட்டியார்கிட்ட குடுக்கிறியா? இதுல அவருக்குப் புடிச்சதெல்லாம் வச்சிருக்கேன்!”
“கட்டாயம் குடுக்கிறேன் ஆச்சி!” என்று சாவித்திரி விடைபெற்றபோது, ஆச்சியின் கண்களில் குளம் கட்டியிருந்தது!
சாவித்திரி சிங்கப்பூர் வந்து பதினைந்து நாட்களாகி விட்டன. அழகான, சுத்தமான சிங்கப்பூரை சுற்றிப் பார்த்ததிலும், புதுக் குடித்தனத்திற்குத் தேவையான சாமான்கள் வாங்குவதிலும் நாட்கள் ஓடி விட்டன. இந்த வார இறுதியில் எப்படியும் ராமநாதன் செட்டியாரைப் பார்த்து, ஆச்சி தந்த பார்சலைக் கொடுத்து விட்டு வரவேண்டுமென்று சாவித்திரி சொன்னபோது, சங்கரும் சரியென்று சொன்னான்.
சிங்கப்பூரின், ‘லிட்டில் இந்தியா‘ என்று அழைக்கப்படும் சிரங்கூன் வட்டாரத்தில் இருந்தது செட்டியாரின் இருப்பிடம். கிளம்பும் அவசரத்தில் செட்டியாரின் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொள்ள மறந்து போனதால், அவரிடம் முன்கூட்டியே வரும் விபரத்தைச் சொல்ல முடியாமல் போனது.
திடுதிப்பென்று போனதால் செட்டியார், சாவித்திரியை எதிர்பார்க்கவில்லை. தனியாக அல்லது தனது வயதையொத்த நண்பர்களோடு அவர் தங்கியிருப்பார் என்று நினைத்தது தவறாகப்போனது. ஆம்! வீட்டு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இருந்த அவரது வீட்டில் அழைப்பு மணி ஒலித்ததும், “யாரது?” என்றபடி ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கதவைத் திறந்தபோது, சாவித்திரியின் மனது படபடவென்று அடித்துக் கொண்டது!
வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும், பளீரென்ற திருநீறுமாகச் செட்டியார் காணப்பட்டாலும், அவரது முகம் மட்டும் அநியாயத்துக்குக் கறுத்துக் கிடந்தது!
அந்த அம்மாள், “வா அம்மா! ஊரிலேருந்து வந்தீங்களா? முன்னமே தகவல் சொல்லி இருந்தாக்கா சாப்பாட்டுக்கே வந்திருக்கலாமே? என்றபோது, மிஸ்டர் க்ளீன் செட்டியார் ஒன்றுமே சொல்லத் தோன்றாதவராக இருந்தார்.
பூவும் பொட்டும், கழுத்து நிறைய மாலையுமாகச் செட்டியாரும், அந்தப் பெண்மணியும் இருந்த ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம் சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்தது! ஒரு மெல்லிய சிரிப்போடு சாவித்திரி நீட்டிய பார்சலை வாங்கிக்கொண்டு சென்ற அந்த அம்மாள், திரும்பவும் வாயெல்லாம் பல்லாக ஹாலுக்கு வந்தாள்.
“பாத்தியளா? எனக்குப் புடிச்ச மஞ்சக் கலர்ல பட்டுச் சேலையும், உங்களுக்குப் புடிச்ச பலகாரங்களும் குடுத்து விட்ருக்காக! ஆயிரம்தான் சொல்லுங்க. பெரியாச்சியின் மனசும் பெரிசு… கையும் பெரிசு!” என்றாள். வந்த வேலை முடிந்தது என்ற பாணியில், அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல், சாவித்திரியும் சங்கரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.
சாவித்திரியின் மனதில், 3/120 அரு.வீதியில் இருந்த அலமி ஆச்சியின் இடிந்த வீடு வந்து போனது! ஆச்சிக்கும், அந்த இடிந்த வீட்டுக்கும்தான் எத்தனை ஒற்றுமையில் வேற்றுமை! எத்தனையோ இடிபாடுகளுக்கு இடையே, வெளித்தோற்றம் சிதைந்தாலும், உள்ளழகு குறையாமல் அந்த வீடு இருக்கிறது! ஆச்சியும் அப்படித்தானோ? ஆனால், பெரிய வித்தியாசம்… ஆச்சியின் வெளியழகு பிரமிப்பானது என்றால், உள்ளழகு மிகவும் பரிதாபத்துக்கு உரியதாக அல்லவா இருக்கிறது?
மனதுக்குள் எத்தனை உளைச்சல்கள் இருக்கும்? நொந்து நூலாகிப்போயிருக்க வேண்டும்! ஆனாலும், எதையும் வெளிக்காட்டாமல், நீறுபூத்த நெருப்பாக அல்லவா இந்த அலமி ஆச்சி இருக்கிறாள்? துக்கம் தாளாமல் சாவித்திரியின் மனது கனத்துப்போயிற்று! ஏதோ, தனது அம்மாவுக்கே இதுபோல ஒரு அநியாயம் நடந்து விட்டது போலத் துடித்துப்போனாள்! சாவித்திரியின் தவிப்பை உணர்ந்து கொண்ட சங்கர், “சாவித்திரி! உன்னோட அம்மாக்கிட்ட வேணும்னா பேசிப்பாரு…” என்றான்.
உடனே கைப்பேசியில் அம்மாவை அழைத்து, நடந்தவற்றை ஒன்று விடாமல் சொல்லி நிறுத்தியபோது, “சாவித்திரி! இப்போ நீ சொன்னதெல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரிஞ்ச சமாச்சாரம்தான்” என்றாள் அம்மா! மேலும், அம்மா தொடர்ந்து பேசலானாள்.
”கணவனை பங்கு போட்டுக்க முடியாமல், அழுது புலம்பி ஆர்ப்பரித்த அலமி ஆச்சிக்கு நான் எத்தனையோ தடவை ஆறுதல் சொல்லி தேத்தியிருக்கேன். கடல் கடந்து, கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்தில் நடந்துபோன இந்த நிகழ்ச்சியால, மனசு கசப்படஞ்சு ரொம்பவே ஆச்சி பாதிக்கப்பட்டாலும், நாளடைவில் ரொம்பவே பக்குவப்பட்டுப் போயிட்டா
சாவித்திரி! ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ! ஆச்சி மெத்தப் படிச்ச மேதாவி இல்லதான். ஆனாலும், வாழ்க்கைப் பண்பும், மனுஷத்தன்மையும் கொண்ட ஒரு நல்ல மனுஷி! எரிமலையாக வெடிச்ச மனசை மிகவும் பிரயத்தனப்பட்டு குளிரப் பண்ணிக்கொண்டாள். நாற்றக் கந்தையை நடுவீதியில் உலர்த்த, அவளது தன்மானமும் இல்லற தர்மமும் இடம் கொடுக்கலை.
அம்மா பேசி முடித்தபோது, சாவித்திரிக்குள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த புயல் அடங்கி, அங்கே அமைதி நுழைந்திருந்தது!
– ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதை போட்டி பரிசுக்கதை