கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 12,601 
 
 

சோகங்களே உருவாகத் தன் துணைக்கு யாரும் இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் ஒரு தனியார் மருத்துவமனையில் தனிமையில் அமர்ந்திருக்கிறான் ‘செல்லா’. அவன் முகத்தில் பயம் தெரிகிறது. அவன் உடம்பெல்லாம் வியர்த்து இருக்கிறது. தலை குனிந்தபடியே முகத்திலும், உடம்பிலும் எவ்வித அசைவுகளும் இல்லாமல் அமர்ந்திருக்கிறான். “இரத்த பரிசோதைனையின் முடிவில் விபரீதமாக ஏதும் சொல்லிவிடுவார்களோ” என்று அவன் மனம் நடுங்குகிறது. “தனக்கு ஏதும் ஆகிவிடுமோ? தன்னை நம்பியுள்ளவர்கள் அனாதையாகி விடுவார்களோ” என்று நினைத்துக்கொண்டிருக்கிறான், செல்லா. தன் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடன் தன் கடந்த கால மகிழ்ச்சியான வாழ்க்கையை மெல்லிய குரலில் அசைப்போட துவங்குகிறான், செல்லா. மிகவும் மனம் வெறுத்து…

“பறவ மாரி இருக்குனூ… பறவ மாரி வாழனூனு… சொல்றாய்ங்களே அதே மாரி வாழ்ந்தவந்தே நா. எனக்கு சொந்த ஊரு திண்டுக்கல் மாவட்டோ கன்னியாபுரம். சின்ன அலகான கிராமம். எங்க ஊர்லயூ சரி… இந்தா இப்ப இருக்குற இந்த கோயபத்தூர்லயூ சரி… என்ன மாரி யாரூ சந்தோசமா இருந்து நா பாத்ததில்ல. எங்க ஊர்ல பணத்துல, செல்வாக்குல, மரியாதைல எங்க குடும்பத்துக்கு ஈடா எந்த குடும்பமும் இல்ல. ஆனா நா அந்த பேர காப்பாத்துவனானு தெரில”.

“என்னய விட எங்கப்புவுக்கு சேட்ட அதிகமாம். ‘மாடு பிடிக்க போறேன்னு’ மஞ்சுவிரட்டுக்குப் போயி மாடு குத்தி செத்துட்டாராம். எங்காத்தா சொல்லிதே எனக்கே தெரியும். அப்போ நா எங்காத்தா வயித்துல இர்ந்தேன்”.

“எங்க அப்பு மாரியே எனக்கூ குடிப்பழக்கம் உண்டு. ரொம்ப அதிகமா குடிப்பே. அதுக்குன்னு நேரங்காலமெல்லா கெடையாது. எப்பப்ப தோனூதோ அப்பல்லா கச்சேரி நடக்கூ… இந்த சனியன நா எப்படி பழகுனேனு தெரியல. நா வீட்டுக்கு ஒரே புள்ள, அதுவும் வசதியான வீட்டு புள்ளையா, எங்கத்தாவுக்கு செல்ல புள்ளயா இர்க்குறதுனால எங்காத்தாவும் என்ன ஒரளவுக்கு மேல கண்டிக்காது. ஏன்னா… எங்காத்தா ‘ஏண்டா இப்படி குடுச்சு சீரலியிற…?’னு ரொம்ப பேச ஆரம்பிச்சுன்னா, நா எங்க தோட்டத்து வீட்டுக்குப் போயிருவே. ரெண்டு, மூனு நாளு எங்காத்தா பொறுத்துப் பாக்கூ. அடுத்து ரொம்ப சங்கடப்பட்டு தோட்டத்துக்கே வந்து ஏதாச்சும் சாக்கு போக்கு சொல்லி, சமாதானம் பேசி என்னய கூட்டிட்டு போயிரும். பாவம் எங்காத்தா ‘பய சாப்பாட்டுக்கு என்ன செய்வானோ? காட்டுக்குள்ள இப்படி ஒத்தையா கெடக்குறானே’னு ஏ மேல இருக்குற பாசத்துலதே என்னய கூட்டிட்டு போகும். நா கோவங்குல பேர்ல அங்க போறது எதுக்கு…? அங்க போயி இன்னூ நல்லா குடிக்கலாமுனு. பாவம் எங்காத்தாவுக்கு இது தெரியாது”.

“எங்காத்தா மேல எனக்கூ ரொம்ப பாசம்… அது தூங்குறப்போலாம் கைப்பிள்ள மாரியே தெரியூ… எனக்கு மட்டுந்தே அப்டி தெரியுமானு எனக்கு தெரியாது. எங்காத்தாவுக்கே தெரியாம, தூங்குறப்பலாம் கொலந்த மாரி நெனச்சு எத்தனையோ வாட்டி ரசிச்சுருக்கே. அப்படி நா ஆத்தாவ பக்கத்துல போயி உத்து பாக்குறப்போ, சில நேரத்துல சரக்கு வாட ஓவராயி ஆத்தா முளுச்சுரும். அப்புறம் வலக்கம் போல வசவு குடுக்கூ… நா ஒன்னூ தெரியாத மாரி போயி படுத்துரூவே…”. தனக்குத்தானே மெல்லியதாகச் சிரித்துக்கொண்டான், செல்லா.

“இவ்ளோ சந்தோசமா, வசதியா, ஒரு ராஜா மாரி இருந்த நா இப்டி யாரையுமே தெரியாத ஊர்ல, ஒரு சீக்காளியா, தனியா ஒக்காந்துருக்கேனா அதுக்கு காரணோ என்னோட தாய்மாமந்தான்”.

“அவரோட மக ‘செல்விக்கு’ நானுன்னா உசுரு. எனக்கூ அவ மேல ஆச. எங்காத்தா எவ்வளவோ பேசிப்பாத்தூ மாமே எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கவே இல்ல. அவரு மேலயூ எந்த குத்தமு இல்லேனுதா சொல்லனும். ஏன்னா, எங்க வசதிய பாத்து நெறய பேரு எனக்கு பொண்ணு கொடுக்க வந்தாய்ங்க. அவிய்ங்களுக்கு நா இப்டி குடுச்சுட்டு ஊதாரித்தனமா ஊர் சுத்துறத பத்தி எந்த கவலயும் இல்ல, ஆனா, எங்க மாமா அவரு பொண்ணு மேல அக்கறையா இருந்தாரு. நா இப்டி குடுச்சுட்டு ஊதாரித்தனமா சுத்துறத நெனச்சி, ‘இந்த பயலுக்கு நம்ம பொண்ண கட்டி குடுத்தா நல்லா வச்சிருப்பானா’னு சந்தேகப்பட்டாரு. ஆனா, நானூ செல்வியூ இதையெல்லா கண்டுக்கவேயில்ல. அவளூ என்னய கண்டிக்கவேமாட்டா. என்னய அவ ரொம்ப ரசிப்பா. சில நேரத்துல மட்டூம் ‘மாமா ரொம்ப குடிக்காதடா… அப்புறோ நா உன்னய தூக்கிட்டு திரிய முடியாது’னு சொல்லுவா”.

“நாங்க ரெண்டு பேரூ ரொம்ப சந்தோசமா ஊர் சுத்துவோம். பக்கத்துக்கு டவுனுக்கு படத்துக்கு போறது. பால்பண்ணைக்கு நெதமு சேந்தே போறது. அடிக்கடி அவள வம்புக்கு இலுக்குறது, நா போதையில இருக்கும் போது அவள நா வம்புலுத்தத மனசுல வச்சுக்கிட்டு என்னய அடிக்கிறதுனு ரெண்டு பேருமே சந்தோசமா இருந்தோம். அவ என்னய விட ரொம்ப தெடமானவ. என்னய விட்டுட்டு அவளோட அப்பா வேற ஒருத்தனுக்கு கல்யாணம் கட்டி வக்க மாட்டாருனு ரொம்ப தைரியம். எங்க மாமாவூ நா எப்டியாச்சும் திருந்துவேனானு பாத்துகிட்ருந்தாரு. ஆனா ஒன்னூ நடக்கல…”

“அன்னக்கி எனக்கு பிறந்த நாளு. நானூ, அவளூ மிந்தியே பேசி வச்சிருந்தோம், ‘ரெண்டு பேரூ சேந்து கோயிலுக்கு போலாம்’னு. நா காலைலேயே வெள்ளனமா எந்துருச்சு வயலுக்கு போயி தண்ணி பாச்சிட்டு ஒண்ணூ தெரியாத மாரியே வீட்டுக்கு வந்தேன்”.

‘என்னடா பண்ண இவ்ளோ நேரமா? சரி போயி குலுச்சுட்டு, ஒங்கப்புவ கும்புட்டு, புது துணி இருக்கு போட்டுகிட்டு வா’னு எங்காத்தா சொல்லுச்சு.

நா “ஏந்த்தா இன்னிக்கி என்ன’னு கேட்டேன்.

‘இன்னிக்கி ஒனக்கு பெறந்த நாளு’ன்னு சொல்லுச்சு எங்காத்தா.

“அந்த நேரம் பாத்து கரைக்டா சொல்லி வச்ச மாரி நா எடுத்து குடுத்த புது தாவணிய கட்டிக்கிட்டு ‘மாமா நா ரெடி… போலாமா’னு செல்வி வீட்டுக்குள்ளாற ஓடி வர்றா. எங்காத்தா ‘ஒன்னூ தெரியாத மாரியே இருந்தியேடா’ங்குறா மாரி மெதுவா என்ன பாத்துச்சு. அப்படியே அர்ச்சன கூடய செல்வி கையில படார்னு வச்சு ‘இந்தாத்தா… ரெண்டு பேரூ சோடியா போய்ட்டு வாங்க’னு சொல்லுது. நா குலுச்சுட்டு வந்தோன எங்கப்பு படத்துக்கு மின்னால எனக்கூ செல்விக்கூ எங்காத்தா துனூரு பூசி விட்டுச்சு”.

“நாங்க ரெண்டு பேரூ கோயிலுக்கு போயி சாமி கும்புட்டு, வெலிய வரும்போது என்னோட மாமே, அதே செல்வியோட அப்பாரு பாத்துட்டாரு. எனக்கு என்னனு தெரியல என்னைக்கூ இல்லாம அப்ப கொஞ்சோ பயம் வந்துச்சு. ஆனா, செல்வி அவர பாத்தூம், வேற யாரையோ பாக்குற மாரி கண்டுக்காமயே வந்தா”.

“எத்தனையோ தடவ நாங்க ஊர் சுத்துறத அவரு பாத்துருக்காரு. ஆனா, அவருக்கு அன்னைக்கு என்ன கோவமோ தெரில… எங்களுக்கு முன்னாலேயே எங்க வீட்டு திண்ணையில ஒக்காருந்தாரு. நாங்க அடப்ப தாண்டி வீட்டுக்குள்ளார போனோம். எங்காத்தா முகம் வாடி போய்ருந்துச்சு. கொஞ்ச நேரோ யாருமே பேசல. அந்த எடமே அமைதியா இருந்துச்சு. நா மெதுவா திண்ணையில ஒக்காந்தே. செல்வி எங்காத்தா பக்கத்துல போயி நின்னுக்கிட்டா. மாமா பேச ஆரம்பிச்சாரு”.

ஏங்கிட்ட ‘மாப்ள, ஏ பொண்ண ஒங்கலுக்கு கட்டி குடுக்கிறதுல எனக்கு எந்த சங்கட்டமும் இல்ல. ஒண்ணே ஒன்ன தவர… என்ன… அந்த குடிதே தடுக்குது. நானூ மாப்ள இந்தா விட்ருவாரு, அந்தா விட்ருவாருனு பாத்து பாத்தே எனக்கு சலுச்சு போச்சு… ‘குடிய விடுங்க, இல்லேனா ஏ பொண்ண விடுங்க’னு சொல்லிட்டே. ஆனா, நீங்க விட்டாலும், அவ ஒங்கள விட்டு ஒதுங்குற மாரி தெரியல. நீங்க ரெண்டு பேரூ இப்டி ஒன்னா சுத்துறத பாத்துட்டு எந்த பயலுகளூ பொண்ணு கேட்டு வரமாட்டேங்கிறான். ஒங்க சண்டியர் தனத்துக்கு வேற பயப்புடுராய்ங்க. அதனால நா இப்ப ஒரு முடிவோடதே வந்துருக்கே’னு சொன்னாரு.

“எங்காத்தாவூ, செல்வியூ என்ன சொல்லப் போறார்னு நின்னுக்கிட்ருந்தாங்க. என்னய அவரு ‘மாப்ளே’னு கூப்டதுல எனக்கு ஒரு சந்தோசம்”.

திரும்பவூ பேசுனாரு ‘மாப்ள நீங்க ஒரு வருசோ வெளியூருக்கு போயி சம்பாதிச்சு ஒங்க பொலப்ப நீங்கலே பாத்துக்கனூ. ஒங்கள சம்பாதிச்சு வீட்டுக்கெல்லா பணோ அனுப்ப சொல்லல. உங்களுக்கு ஆகுற செலவ நீங்கலே பாத்துக்கணூ. அப்பத்தே ஒங்க மேல எனக்கு புடிப்பு வரும்’னு சொல்லி, எங்காத்தாவ பாத்து ‘பேச்சி நீயும் இவருக்கு இந்த ஒரு வருசத்துக்கு ஒரு ரூவா கூட அனுப்ப கூடாது’னு சொன்னாரு.

நானூ கொஞ்சங் நேரங்கூட யோசிக்காம ‘சரி’னுட்டே.

உடனே எங்காத்தாவூ, செல்வியூ அழ ஆரம்பிச்சிட்டாங்க. ‘ராசா மாரி இருந்த புள்ளைய இப்புடி கஷ்ட்ட பட சொல்றியேண்ணே’னு எங்காத்தா அலுதுச்சு. அந்த ‘அலுக ரொம்ப நாலைக்கு இருந்துச்சு’னு செல்வி போன்ல பேசும் போது சொல்லுச்சு.”

“பதினஞ்சு நா கலுச்சு எங்க மாமா வீட்டுக்கு வந்தாரு. ‘மாப்ள ஒங்களுக்கு கோயம்பத்தூர்ல வேலைக்கி ஏர்பாடு பண்ணிட்டே. எப்ப கெலம்புறாப்ள’னு கேட்டார்.

நா ஒடனே ‘நாளைக்கே கெலம்புறேன்’ சொல்லிட்டு ரெடியானேன்.

“எங்காத்தா அலுதுக்கிட்டே துணிமணியெல்லா எடுத்து வத்துச்சு. செல்வி வீட்டுகே வரல. ‘அது வீட்ல அலுதுக்கிட்டே இருக்குண்ணே’னு கண்ணுச்சாமி சொன்னான். மறுநா காலையில என்ன எல்லாரூ சேந்து வலியனுப்புனாங்க. இப்படித்தே நா கோயம்புத்தூருக்கு வந்தேன். எங்க மாமே சொன்ன மாரியே ஏப்பொலப்ப நானே பாத்துக்கிட்டேன். இன்னூ ஒரே மாசந்தே இருக்கூ ஒரு வருசோ முடிய. ஆனா, அதுக்குள்ள ஏ ஒடம்புக்கு ஏதோ ஆயிருச்சு”.

“கொஞ்ச நாலாவே அடிக்கடி மயக்கம் வந்துச்சு. நேத்து திடீர்னு வாந்தி எடுத்துட்டே. அதே ஆஸ்பத்ரிக்கு வந்தே. ரத்தோ எடுத்து டெஸ்ட் பண்றாங்க. ஏ ஒடம்புக்கு இது மாரி ஒரு சீக்கு வரும்னு நா நெனச்சு கூட பாத்ததில்ல. இதுக்குலாம் காரணோ ஏ மாமே இல்ல. அதுக்கு இன்னோரு முக்கியமான காரணோ இருக்கு. நா இங்க வந்தூ குடிய விடல…”

இப்படி தனக்குத்தானே மெல்லியக் குரலில் பேசிக்கொண்டிருந்தான், செல்லா. அவனது கண்களில் நீர் வழிந்தது. முகம் அதே பயத்திலேயே இருந்தது. தூரத்தில் எங்கோ ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. செல்லா சற்று மெதுவாக நிதானத்திற்கு வந்தான். செல்லா முகத்திற்கு முன் ஒருவர் இனிப்புப் பெட்டியை நீட்டி “ஏனுங்க… ஸ்வீட் எடுத்துகோங்க. எனக்கு ஆம்பள புள்ள பொறந்துருக்கு…” என்றார். செல்லா நிமிர்ந்து இனிப்பை எடுத்துக்கொண்டு சிறு புன்னகைக் கலந்த வாழ்த்துக்களோடு அவரை பார்த்துவிட்டு மீண்டும் தலை கவிழ்த்து உட்கார்ந்தான்.

சிறிது நேரம் அமைதியாகச் சென்றது.

செவிலியர் “Mr.செல்லா…” மீண்டும் முன்பை விட சற்று அதிக சத்தத்துடன் “Mr.செல்லா…”

செல்லாவின் செவிகள் இந்த ஒலியை வாங்கவில்லை.

செவிலியர் மீண்டும் “இங்க செல்லா யாருங்க…?” என்று உரக்கக் கத்தினார்.

சிறிய உடல் அசைவுடன் செல்லா திடிக்கிட்டு எழுகிறான்.

செவிலியர் “உள்ள வாங்க சார்…” என்று முணுமுணுத்துக்கொண்டே மருத்துவரின் அறைக்குள் செல்கிறார். செல்லா மிகவும் பயத்துடன் மெதுவாக செவிலியரை பின்தொடர்ந்து சென்றான்.

கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர், செல்லா நுழைந்தவுடன் அவனைப் பார்த்து “வாங்க செல்லா… உக்காருங்க” என்று இருக்கையைக் கைநீட்டி காண்பித்தார். நாற்காலிகளின் கைகளை இறுகப்பிடித்து அமர்ந்தான், செல்லா.

சிறிது நேரம் கழித்து கண்ணாடியை கழற்றி மேசையின் மேல் வைத்துவிட்டு, சிரித்த முகத்துடன் மருத்துவர் “உங்க ரிப்போர்ட்சலாம் பாத்தேன் செல்லா… ம்ம்ம்… பயப்படற மாதிரி எதுவும் இல்ல. உங்களுக்கு எப்ப வாமிட் வந்துச்சு?” என்றார்.

“நேத்து நைட்டு சார்”

“நீங்க நேத்து காலையில இருந்து எதுவும் சாப்புடல… அப்படித்தானே”

செல்லாவுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அவன் நேற்று காலையில் இருந்தே போதையில் இருந்தான். இரவு தான் எழுந்ததே. துளியும் சாப்பிடவில்லை.

“இதனாலதே வாந்தி வந்துருக்கூ” என புரிந்தவனாக செல்லா உற்சாகமாக “ஆம சார்… ஆம சார்” என்றான்.

மருத்துவர் “இத ஏன் இவ்ளோ சந்தோசமா சொல்றீங்க. எந்த வேலையா இருந்தாலும் நேரத்துக்குச் சாப்பிடுங்க செல்லா. இப்படியே சாப்புடாம இருந்தீங்கனா வாந்தி மட்டுமில்ல அல்சரும் சேந்தே வரும்”

செல்லா தலையசைத்துக் கொண்டான்.

மருத்துவர் “ரெண்டு நாளைக்கு டேப்லெட் எழுதுறேன். மறக்காம காரமில்லாம நல்லா சாப்புடுங்க.”

‘சர்…’ மருத்துவர் சீட்டைக் கிழித்துக் கொடுத்தார்.

செல்லா “சரி சார்… தேங்…ஸ் சார்…”

“K… செல்லா”, மருத்துவர்.

செல்லா நிம்மதியடைகிறான். இருட்டுக்கு பழகிய கண்கள் வெளிச்சத்தைப் மெது மெதுவாகப் பார்ப்பது போல் இயல்பு நிலைக்குத் திரும்பினான். மருத்துமனையில் இருந்து வெளியில் வரும்போதே மாமன் அலைப்பேசியில் அழைக்கிறார்.

செல்லா அலைப்பேசியை எடுத்து சற்று பணிவுடன், “ஹலோ…”

“மாப்ள நல்லாயிருக்கீங்களா…”

“நல்லாருக்கேன் மாமா. நீங்க நல்லாருக்கீங்களா…?”

“எனக்கு என்ன மாப்ள… நல்லா…இருக்கேன்” என்று வருத்தப்பட்டு சொல்லி “இந்தா பேச்சிட்ட குடுக்குறே…” என்று செல்லாவின் அம்மாவிடம் “ந்தா… பேச்சி. நீயே சொல்லு” என்று கொடுக்கிறார்.

“ராசா… நல்லாருக்கியாயா…”

“நல்லாருக்கேத்தா… மாமே என்னத்த சொல்ல சொல்றாரு…?”

“நீ ‘பட்டதெல்லா போதூம்’னு ஊருக்கு கெலம்பி வரச்சொல்லிட்டாருய்யா”

“என்னத்தா சொல்ற… நெசமாவா…?”

செல்வி அலைப்பேசியை வெடுக்கென்று பிடுங்கி, “மாமா வா… வா… வெரசா வரனூ…”

“என்னடி சொல்ற… நெசத்துக்குமா…?”

“ஆமாடா செல்லக்குட்டி… சட்டுன்னு வாடா…”

அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. முதல் வேலையாகப் பயணச்சீட்டு முன்பதிவு செய்தான். கையில் இருந்த பணத்தில் ஆத்தாவிற்கும், செல்விக்கும் ஏதேதோ வாங்கினான். அடுத்து அறைக்குச் சென்று மூட்டை முடுச்சுகளைக் கட்டி, முதலாளியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டான்.

அடுத்ததாக ‘பலய குருடி கதவ தெரடி’ என்பது போல மதுக்கடை. மது குப்பியுடன் தன் அறையில் சாமி படத்தின் முன் அமர்ந்து குடித்து முடித்தான். போதை நன்கு ஏறியவுடன் ஏதேதோ உளற ஆரம்பித்தான். சடாரென்று பின்புறமாகப் படுத்தவனின் உடம்பில் எவ்வித அசைவும் இல்லை.

அலைப்பேசி விட்டுவிட்டு பலமுறை சத்தம் கொடுத்தும் அவன் அசையவில்லை. அலைப்பேசியில் தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தது. அந்த அழைப்பு மருத்துவமனையில் இருந்து…

மருத்துவமனை. மருத்துவர் பணி முடித்து புறப்படும் நேரத்தில் கோப்புகளையும், வரவுகளையும் சரிப்பார்த்தார். அப்போது இரண்டு வெவ்வேறு விலாசங்களைக் கொண்ட, ‘செல்லா’ என்று ஒரே பெயரில் இரண்டு வெவ்வேறு கோப்புகள் இருப்பதைக் கண்டார். மிகவும் பதட்டத்துடனும், வேகவேகமாகவும் ‘பி.செல்லா’வின் கோப்புகளைப் படிக்கிறார். மிகவும் அதிர்ச்சியடைந்து செல்லாவின் அலைப்பேசிக்கு அழைத்துக்கொண்டே இருக்க, அவனோ நினைவிழந்து இருந்தான். மருத்துவர் முன்னர் பார்த்த கோப்பு ‘செ.செல்லா’ என்பவருடையது. அலைப்பேசியின் மூலம் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்பதால், அவனது தற்காலிக முகவரிக்கு அவசர ஊர்தி அனுப்பப்பட்டு ‘பி.செல்லா’ அழைத்து வரப்படுகிறான். மருத்துவமனையில் அறை எண் 90’ல் சேர்க்கிறார்கள். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை மருத்துவர்கள் முடிவு செய்து, செல்லாவின் உறவினர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டது.

பேச்சி, செல்வி மற்றும் செல்லாவின் மாமா மூரும் மருத்துவமனை விரைகின்றனர். செல்லாவைப் பார்த்து மூவரும் கதறி அழுதனர். சீர்கெட்ட தன் ஒழுக்கத்தை நினைத்துச் செல்லாவும் கண்ணீர் விட்டு கவலைப்பட்டான்.

பேச்சி “ஏய்யா அலுகுற… ஒனக்கு ஒன்னூ இல்லயா…”

செல்வி எதுவும் பேசாமல் செல்லாவின் கைகளைப் பற்றி கொண்டு கதறினாள்.

செல்லா “ஏய் அலாதடி… என்னய ஒன்னூ அண்டாது…”

இந்நேரத்தில் மருத்துவர் அறைக்குள் நுழைந்து இவர்கள் அழுவதைப் பார்த்துக் கோவமடைந்தார்.

மருத்துவர் “அழாதீங்க… யாரும் அழாதீங்க… பயப்படும்படியா ஒன்னும் இல்ல. ஹி இஸ் நார்மல். ரூமுக்கு வாங்க பேசலாம்” அங்கிருந்த செவிலியரிடம் “பேஷண்ட்ட யாருமே டிஸ்டர்ப் பண்ணாம பாத்துகோங்க” என்றபடி வெளியே சென்றார்.

இப்பொழுது மூவரும் நிம்மதியடைந்தனர். பேச்சியும், செல்லாவின் மாமாவும் மருத்துவரைப் பார்க்கச் சென்றனர். செல்வியின் முகத்தில் இப்போதுதான் சிறிய மகிழ்ச்சி வந்து செல்லாவும், அவளும் பேசிக்கொண்டிருந்தனர்.

‘படா…’ரென்று கதவைத் திறந்து உள்ளே வந்தார் செல்லாவின் மாமா. அவரின் பின்னால் சொல்ல முடியாத துக்கத்துடன் சேலையின் முனையை வாயில் பொத்தியபடி அழுதுகொண்டிருந்தாள், பேச்சி.

“குடி வேண்டா… குடி வேண்டானு… அப்பவே சொன்னேனே கேட்டானா…? இப்ப என்ன கெதில கெடககானு…? என்று கோவமாகக் கத்திக்கொண்டே செல்வியின் கைகளைப் பிடித்து வெளியில் இழுத்து சென்றார்.

செல்லா அதிர்ச்சியில் கத்துகிறான் “மாமா… என்ன மாமா…?”

பேச்சி அழுதுகொண்டேயிருந்தாள்.

செல்வி இன்னோரு கையில் பிடிமானம் ஏற்படுத்திக்கொண்டு “அப்பா விடுங்கப்பா… அவனுக்கு என்ன ஆனாலூ சரி… நா அவங்கூடத்தே இருப்பே…”

அவர் “பொ… போயி இருந்துக்க தாயி… அவே இப்ப செத்த பொணந்தே. அவனால ஒனக்கு ஒரு புள்ளய கூட தர முடியாது…”

செல்லா அதிர்ச்சியானான். பேச்சி மேலும் கதறி அழுதாள்.

செல்வியின் கை விரல்கள் கதவின் மீது இருந்த பிடியைத் தளர்த்திக் கொண்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *