கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 30, 2013
பார்வையிட்டோர்: 18,120 
 
 

சித்திரை மாதத்து வெயிலை மார்கழியில் உமிழ்ந்த ஒரு மத்தியானப்பொழுதில், முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி, ‘மௌத்‘தாகிப் போனார்.

முக்கியவேலைகளைத்தாண்டி, வீட்டைவிட்டு வெளியில் எங்கும்போகாத அவர், கழுதையும் ஒதுங்கிநிற்கும் பகலின் கடும்வெயிலையும் கம்பளிகளையும் ஊடுருவி நடுமுதுகைத் தாக்கும் இரவின் கொடும்பனியையும் தாங்கமுடியாமல், உடல் நலிவுற்றிருந்ததாகச் சொன்னார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இரண்டுநாட்களுக்கு முன்னால்தான் சுகமாகி, வீடு திரும்பியிருந்தார்.

இன்று முற்பகலின் உச்சியின்போது, தினந்தந்தி நாளிதழின் ‘உலகச்செய்திகள்‘ பகுதியில் வெளியாகியிருந்த, இயற்கைமுறையில் வாழும் அர்ஜென்டைனா நாட்டின் 113 வயது மூதாட்டி இப்னு ஹவ்வா ஜொஹராவின் பேட்டியைப் படித்துச் சிலாகித்தார். ‘அல்லாஹ் கருணை நிறைந்தவன். எத்தனை நீண்ட ஆயுளைக் கொடுத்திருக்கிறான்‘ என்று, அறையின் மேற்கூரை யைப்பார்த்து, அந்தமூதாட்டியின் சார்பாக நன்றிசெலுத்தும் முகமாகக் கையேந்தினார். ‘அவன் விரும்பினால் எவ்வளவு காலமும் வாழவைப்பான்!‘ என்று புகழ்ந்திருந்தார். அதற்குப்பிறகு, சாப் பிட்டுவிட்டு ஓய்வுவெடுக்கக் கட்டிலில் சாய்ந்தவர், அப்படியே மறுவுலகப் பயணம் போய் விட்டார்.

அறுபது ஆண்டுகளும் சொச்ச மாதங்களுமே ஆகியிருந்த அவரின் பூவுலக வாழ்க்கை, மருத் துவ உலகம் வலுப்பெற்றிருக்கும் இந்தக்காலத்தில், மௌத்துக்கான வயதுஅல்ல என்று மஹல்லாவாசிகள் அத்தனைபேரும் வருத்தம்தொனிக்கும் குரலில் பேசிக்கொண்டார்கள்.

முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானிக்கு, மஹல்லாவில் நல்லபெயர் இருந்தது. ஜமாத்தில் செயல்படாதத் துணைத்தலைவராகவும் அவர் இருந்துவந்தார்.

தகவல்கிடைத்த நொடிகளில், மௌத்தாவின் பாபி ஜன்னத்துல் பிர்தௌஸ்தான் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு முதலில் ஓடிவந்தாள். மய்யத்தை இழுத்து மடியில் போட்டுக் கொண்டு, மௌத்வின் மனைவி நூர்ஜஹான் உட்கார்ந்திருந்தாள். அழத்திராணியற்று, ஈரத் துணியாக அவள் உடம்பு துவண்டிருந்தது. வேறு யாரும் இருக்கவில்லை.

முதல்ஆளாய்ப் போய்நின்றுவிட வேண்டுமென்று, பிளஸ் 2 மாணவி இருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓட்டமாய் ஓடிவருவதுபோல ஓடோடிவந்த ஜன்னத்துல் பிர்தௌஸ், தனக்கு முன்னால் வேறுயாரும் வந்திருக்கவில்லை என்றதும் ஆசுவாசமானாள். அதேவேளையில், அழுவதற்குக்கூட ஆளில்லாத அந்தக்காட்சியில் வெடித்து, “அரே மேரே பேட்டா!” என்று மய்யத்தைப் பார்த்து மாரில் அடித்துக்கொண்டு அலறினாள். அண்ணன் மனைவியான அவள், மௌத்தாவுக்குத் தான், தாயாக இருந்தக்கதையை எடுத்தஎடுப்பிலேயே ஆதியிலிருந்துத் துவக்கியதில், கழுதை வாலில் கட்டப்பட்ட வெடிச்சரத்தின் படபடப்புடன், அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்பப் பொறிந்து விழுந்தன.

பக்கத்துத் தோப்பிலிருந்த இலந்தை மரத்துப் பறவைகள், எதிர்பாராமல் கிளம்பிய வெடிசத்த அழுகையில் பதைபதைத்துப்போய், சிறகடித்து அலறின. அதற்குப்பிறகுதான், ஜமாத்துக்குத் தகவல்போய் அங்கிருந்துவந்த மோதினாரும் மஹல்லா பையன்கள் இருவருமாகச் சேர்ந்து, ‘கடுவா‘ மாற்றினார்கள்.

அடுத்தடுத்து, ஆண்களும் பெண்களுமாக, அவரது வீடுநோக்கி, ‘மௌத் விசாரிக்க‘க் கிளம்பி வந்தார்கள்.

வாசலில் நிழல்பந்தல்போட மூங்கில்களும் கிடுகுகளும் வந்திறங்கியிருந்தன. எப்போதோ வரிந்து வைத்திருந்தக் கட்டுப்பாலையை அவிழ்த்து, பக்கத்துக் குழாயடியில் தேங்கி நின்றிருந்த அழுக்குத் தண்ணீரில் ஊறவைக்கும் முயற்சியில், ஒருஆள் இருந்தான். யாரோ ஒருவர், ‘ஷாமி யானா போடுறதுக்கும் இதேசெலவுதான். அது அழகு‘ என்று சொல்லிக் கொண்டிருந்தார். “தெருவுல குப்பை சேராதுல்ல!”

மத்தியானத் தெருவில் லேசான பரபரப்பு உருவாகியிருந்தது.

மூன்றுமாதங்களுக்கும் மேலாக ஆஸ்பத்திரியும் வீடுமாக அலைந்துதிரிந்து, இரவும் பகலு மாகக் கண்விழித்ததில் நைந்து, ‘பார்த்ததெல்லாம் வீணாகிப்போனதே‘ என்று, அல்லாஹ்விடம் வருத்தம்கொண்டவளாகச் சாய்ந்திருந்தாள், மௌத்தாவின் மனைவி. சுற்றிலும் உறவுக்காரர் கள்.

எடுத்துவளர்த்த பெரிய மச்சான் மகனும் மகளும் அவளை நெருக்கியடித்து, ஆளுக்கு ஒருபக்க மாகக் கலங்கியக் கண்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். மடியில் அவர்களது பிள்ளைகள். ஒரு சிறுமி, “நாநாக்கு க்யா?” என்று விசாரணை நடத்திக்கொண்டிருந்தாள். இன்னொரு சிறுவன், “தாதா கீ சோத்தீங்(தூங்குகிறார்)?” என்று எழுப்பிக்கொண்டிருந்தான்.

மௌத் விசாரிக்க வந்த ஆண்கள், ‘மய்யத்‘ கிடத்தப்பட்டிருந்தக் கட்டிலின் பக்கவாட்டில் நின்று, மௌத்தாவுக்கு ஜன்னத் கிடைக்க, அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்டார்கள். லேசாகக் கண் கலங்கினார்கள். பெண்கள் நூர்ஜஹானைக் கட்டிப்பிடித்து, “உன் வாழ்க்கை இப்டியாயிருச்சே!” என்று ஓலக்குரலில் ஏதேதோ சொல்லி, அரற்றினார்கள்.

வீட்டுக்குள் இருள்படர்வதுபோலிருந்தது. “இங்கன ரெண்டு லைட் கட்டச்சொல்லுங்க. வெளிச் சம் பத்தலை!” அழுகையினூடாக ஜன்னத்துல் பிர்தௌஸ் வெளியில் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

‘மௌத்‘தானவரின் மனைவிக்கு சொந்தபந்தமென்று சொல்லிக்கொள்ள பெரிய அளவில் யாரும் இல்லை. பெற்றவர்கள் எப்போதோ ‘வபாத்‘தாகிப் போனார்கள். உடன்பிறந்தவர்களில் ஒரு ஆணும் ஒருபெண்ணும் உண்டு. ஆண், சின்னவயதிலேயே வடக்குப்பக்கம் போய்விட்டான். அதன்பிறகு, எந்தவொரு தகவலும் அவனைப்பற்றிக் கிடைக்கவில்லை. பெண்ணுக்கு, இவள் தலையெடுத்துத்தான் பக்கத்துக்கடையில் வேலைக்கிருந்தப் பையனுக்கு நிக்காஹ்செய்து வைத்தாள். அவன், அவளை அடித்துத் துவைத்து, உதறிஉதறிக் காயப்போட்டதால், தனது வாழ்க்கையை அக்காக்காரி பாழாக்கிவிட்டதாகச் சொல்லி, ‘ஒம்மூஞ்சீல இனிமே முழிக்கமாட் டேன்!‘ என்று விட்டுப்போனாள். ரோஷக்காரி. இந்தநிமிடம்வரை வரவில்லை. அதனால், ரத்த சொந்தமென்று யாருமிருக்கவில்லை. முப்பத்தைந்து ஆண்டுகள் உடனிருந்தவரும் கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கிறார்.

மௌத்தாவின் பாபி ஜன்னத்துல் பிர்தௌஸ், முதலில் ஆரம்பித்த சின்னவயதிலிருந்தே அவரை மகன்போல பார்த்துக்கொண்டக் கதையைத் தொடர்ந்து, தன் பிள்ளைகளைவிட அவர் மேல் அவள்வைத்தப் பிரியம்குறித்து, பிலாக்கானத்தில் புலம்பிக்கொண்டிருந்தாள். கன்றைத் தொலைத்துவிட்ட பசு எழுப்பும் ஹீனக்குரலை, அவள் வார்த்தைகள் சுமந்திருந்தன. மற்றவர் களின் சிறுசிறு அழுகையை, அடுத்தவர் அழுவதைப் பார்த்து அழும் பிரதிபலிப்பு அழுகையை, வந்ததற்காக அழும் ஊமை அழுகையை, கண்ணீரே வராத பொய் அழுகையை, நிஜமான அழுகையையும்கூட அவள் அழுகைக்குரல் அமுக்கிவிட்டது. சுற்றி உட்கார்ந்திருந்தப் பெண் களுக்கு, அவள் அழுகை இரக்கத்தை வரவழைத்தது.

துவக்கத்தில், நூர்ஜஹானைக் கட்டிக்கொண்டு அழுத ஜன்னத்துல் பிர்தெளஸ், அப்புறம் தன்னந் தனியாக, ஒற்றைக்குரலுக்குத் தாவிவிட்டாள். முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி, தன்னை எப்படி நடத்தினார். தன்னிடம் எப்படி நடந்துகொண்டார் எனும் கதைக்கு, இப்போது அவள் வந்திருந்தாள். கீறல்விழுந்த ஒலித்தட்டு சுற்றும்போது, முள்தட்டி அதேவாசகத்தைத் திரும்பித் திருப்பிச் சொல்வதுபோலிருந்தது, அவள் அழுகையினூடாகக் கேட்கமுடிந்த வாசகங்கள்.

என்றபோதும், அவ்வப்போது எடுத்துவிடுவதற்கு அவளிடம் இன்னும்இன்னும் நிறையக் கதை கள் இருப்பதாகப்பட்டது. ஒருபோதும் தன் சொல்லை மீறாதவராகவும், தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகவும், எந்நிலையிலும் சொல் பிறழாதவராகவும், தாய்க்கும் மேலான கௌர வத்தைக் கொடுத்தவருமாகவே அவர் நடந்துகொண்டார் என்று கண்ணீர் சிந்தினாள். பள்ளிப் பாடத்தை திரும்பத்திரும்ப வாசித்து மனனம்செய்யும் மாணவிபோல அந்தஇடத்தில் பதிவு செய்த அவளது வார்த்தைகள், அங்கிருந்த எல்லோருக்கும் கண்ணீர் வரவழைக்கப் போதுமான தாக இருந்தது. ஆனாலும், அவள் சொல்வதில் ‘ஏதாவது பிசிறு தென்படுகின்றதா?‘ என்று கூர்ந்துபார்க்க வேண்டியிருந்ததால், தங்களின் கண்ணீர்க்குழாய் வால்வுகளை மற்றவர்கள் அடைத்து வைத்திருந்தார்கள்.

“அவ சொல்றது நெசந்தான். புள்ளைக்கும் மேலே அவளுக்கு அந்தக்கொழுந்தன். அப்டியொரு கொழுந்தன் யாருக்கும் அமைஞ்சுற மாட்டாங்க!” என்று கூடியிருந்தப் பெண்கள், தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள். தங்கள் கொழுந்தன்களும் மச்சான்களும் தங்களிடம் நடந்துகொள் ளும் முறைமைகள் தேவையில்லாமல் நினைவுக்கு வந்து, அவர்களில் சிலரைச் சங்கடப்படுத் தியது. சிலரை முகம்சிவந்து, நாணச்செய்தது.

முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி, எப்போதோ செய்த சின்னச்சின்ன உதவிகள், இப்போது முன்னிறுத்தப்பட்டன. அவையெல்லாம் அவருக்கு ஜன்னத் கிடைக்க உதவும் காரணிகள் என்று போற்றப்பட்டன. ‘அல்லாஹ் எல்லாத்தையும் கணக்குல வெச்சுருப்பான். ரஹாம் நெறைஞ்ச வன்!‘ என்று, புள்ளிவிவரங்கள் அடுக்கப்பட்டன. “அன்னிக்கிக்கூட கீழேவிழுந்தக் குச்சிய எடுத்துத் தொடைச்சுக் குடுத்தாரே!” என்று விடுபட்டுப்போனதாக ஒன்றை, ஒருத்தி எடுத்துக் கொடுத்து அவர் கணக்கில் சேர்த்தாள். அந்தவகையில் அமெரிக்க, பிரிட்டானிய இலக்கங் களையெல்லாம் தாண்டி அவரது புண்ணியக்கணக்குக் கோடு, அக்னி -5போல மேலே மேலே போய்க்கொண்டிருந்தது.

கொழுத்தி வைக்கபட்டிருந்த பெங்களுருவில் செய்யப்பட்ட தரமான ஊதுபத்திகள், புகையும் வாசமுமாய்க் கரைந்துகொண்டிருந்தன. பாத்திஹாக்களின்போது நல்லமணத்தைப் பரப்பும் அவை, மய்யத்துகளின் தலைமாட்டில் காரவாசனையை உமிழ்வதாகப்பட்டது. இடத்துக்கு இடம் அவை தங்கள் சேவையை மனிதர்களைப்போலவே மாற்றித் தகவிக்கொள்கின்றன என்று, முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானியின் உறவுக்கார இளம்பெண்ணொருத்தி கண்டறிந்து, சொல்லிக்கொண்டிருந்தாள். சொல்லும்போது, புர்காதுணியால் மூக்கைப் பொத்தியிருந்தாள், அவள். வீட்டுக்குள் அடர்த்தியும் கனமுமாக ஒருவித வாசம் பரவத்தொடங்கியிருந்தது.

அப்போது, ‘மௌத்தை எப்போது எடுப்பது? என்ன மாதிரியாக அடுத்தடுத்த நிகழ்ச்சியை நடத்து வது?‘ என்று கலந்துபேச உள்ளேவந்த முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானியின் அண்ணன் முஸ்தபா கமால்க்கி சோட்டி, மனைவி சொல்லிச்சொல்லி அழும் வாசகங்களில் நெக்குருகிப் போனார். அதில் அவருக்கு லேசான மயக்கம் வந்தது. அவளது அழுகையில் ஒருவாசகம்கூட பொய்யில்லை. அத்தனை மரியாதையானவர் தம்பி. தன்னையும் மனைவியையும் பூஜிக்கும் இடத்தில் வைத்திருந்தார். ஒருபோதும் விலகிநிற்கச் சொன்னதில்லை. ஒருசுடுசொல் பேசிய தில்லை. முகம் சுண்டியதில்லை. தங்களைக் கேட்காமல் எதையும் செய்ததுமில்லை. மனைவி அழும் அழுகை அவருக்கு, தம்பியின் மீதானப் பாசத்தை மீள்பார்வை செய்யத் தூண்டியது. கண்களில் அருவி. கீழிமையை உடைத்துக்கொண்டு நீர்வழிந்தது.

மய்யத்மீது உட்காருவதற்காக, மேலும்கீழுமாக அலைந்துகொண்டிருந்த ஒரு ஈயை கைகளை ஆட்டியாட்டி விரட்டினார்.

பின்னால் உட்கார்ந்திருந்தப் பெண்ணொருத்தி, அவர் வந்துநிற்பதைப் பார்த்து, ஜன்னத்துல் பிர்தௌஸைத் தட்டி அழுகையை நிறுத்தச்சொல்லி, சைகை காட்டினாள்.

‘திடுக்‘கிட்டு அழுகையை நிறுத்தி ஏறிட்டுப்பார்த்தவள், அவரைக் கண்டதும், “பாத்தீங்களாங்க… நம்ம ரப்பி, நம்மட்டச் சொல்லாமலேயே போயிட்டத?” என்று அழுகையைக் கூட்டினாள். ‘நம்மட்ட‘ என்ற சொல்லின் அழுத்தத்தில் செறிவு இருந்தது. அந்த இடம், ஒலிகூட்டப்பட்ட அரங்கம்போல அதிர்ந்தது. சுற்றியிருந்தவர்களில் ஒருசிலரும் அவளுடன் சேர்ந்து அழுதார்கள்.

அவர் எதுவும்பேசாமல் கண்கலங்கிப்போய், வந்தவிஷயத்தை விட்டுவிட்டு நின்றிருந்தார். கூடி
யிருந்தவர்களுக்கு, முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி மீது, அண்ணன் முஸ்தபா கமால்க்கி சோட்டியும், அண்ணி ஜன்னத்துல் பிர்தௌஸும் கொண்டிருந்த அன்பின் மீது, மரியாதை பன்மடங்காகக் கூடியது.

“சரி.. அழுதா தம்பி எந்திரிச்சு வந்துருவாரா?… ஆகுறதப் பாக்கணும்ல்ல. எப்ப ஜனாஜா எடுக் குறது. சொல்லணும்ல்ல. நூர்ஜான்ட்ட கேளு!” சோர்வாகச் சொன்னார்.

அவள் அழுகை, ‘சட்‘டென்று வடிந்துநின்றது. நூர்ஜஹானைத் திரும்பிப் பார்க்காமலேயே சொன்னாள். “அவகெடக்குறக் கெடப்புல பேசுறமாதிரியா இருக்கா. அவளுக்குன்னு எடுத்துச் செய்ய யாருருக்கா?. நாமதான் செய்யணும்!” என்றாள். வார்த்தைகளில், தனது பணங்காசை அவிழ்த்து செய்வதுபோன்றதொரு பாவனையை உருவாக்கிவிட்டிருந்தாள். எவ்வளவு செலவா னாலும் அதைத்தானே எடுத்துக்கொடுத்துவிட இருப்பதுபோல நயமாக இருந்தது, அவள் பேச்சு. தான் சொல்வதைச் சுற்றிலும் உட்கார்ந்திருப்பவர்கள் கவனிக்கிறார்களா என்று ஒருமுறை நோட்டம் விட்டுக்கொண்டாள். ஜத்தரை, புர்க்காவைக் கழற்றாத அத்தனைப்பேரின் பார்வையும் தன்மீது இருந்ததில் அவளுக்குள் திருப்தியும் பெருமையும் மலர்ந்தது.

“எல்லாரும் அக்கம்பக்கமாத்தானே இருக்காங்க. வந்துருவாங்க. இஷாக்கு எடுத்துறலாம். எம்பேச்சைத் தட்டாமக் கேக்குற மகராசனோட மையத்த எடுக்குறதுக்கும் என்னிய முடிவு செய்ய வெச்சுட்டானே, இந்த அல்லா!” என்று சலித்துக்கொண்டாள். தன்முதுகில் பாரம் ஏற்றப் பட்டிருப்பதாக அவள்கொண்ட சலிப்பில், பெருமை ஊடாடியது.

அப்போது நூர்ஜஹானின் தூரத்து உறவு மும்மானியொருத்தி, “யம்மா, நம்பவே முடியலியே. கெழங்குமாதிரிக் கெடந்தவனை அல்லா கூப்புட்டுக்கிட்டானே?” என்றபடி வந்துசேர்ந்தாள். நடக்கவே சிரமப்பட்ட அவளது வருகை, ‘எப்போது எடுக்கலாம்?‘ என்ற ஆலோசனையால் மட்டுப்பட்டிருந்த அழுகையை, புகையின் நூலாட்டமாய் மேலெழச்செய்து, குரலாய் வடிவு பெற்று மீண்டும் ஒலித்தது.

உட்கார்ந்திருந்த பெண்களுக்கிடையில் புகுந்த மும்மானி, யாரையும் மிதித்துவிடாமல், பக்குவ மாக நுழைந்து, நூர்ஜஹானருகில் இடம்பிடித்து வாகாக உட்கார்ந்து, கவலையும் அழுகை யுமாகக் கேவத்தொடங்கினாள். நூர்ஜஹானின் பூர்வகோத்திரத்திலிருந்து நூல்பிடித்துக் கொண்டுவரும், புதிய தகவல்கள் அவளிடமிருந்தன. இதற்குமுன்பு அவை பேசப்படாதவை. யாருக்கும் தெரியாதவை. மஹல்லாவாசிகள் அந்தபுதிய தகவல்களில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அதில், ஆழப்பதிந்தார்கள்.

மும்மானியின் கேவல் அவர்களைக் கவர்ந்திருந்தது. அவள்கேவுவதை அரைமயக்கத்திலிருந்த நூர்ஜஹானும் கண்திறந்து உற்றுப்பார்த்தாள். தன் பூர்வீகத்தைப் பற்றிப்பேச ஒருத்தி வந்துவிட்
டாளென்ற நூலளவு மயக்கம், அவளுக்குள் எழுந்தது.

எல்லோரின் கவனமும் மும்மானி மீது படிவதைக் கவனித்துவிட்ட ஜன்னத்துல் பிர்தௌஸ், தனது ஸ்தானத்துக்கு ஏதோ அபாயம் நேரப்போவதாய் உணர்ந்தாள். அந்தஇடத்தைக் கைப் பற்ற அல்லாஹ், மும்மானியை அனுப்பிவைத்திருப்பதாகக் கருதிக்கொண்டாள். அதற்கேற்ப, மும்மானியின் கேவல் முக்கியத்துவம் பெற்றுவிடும் அற்புதம், அவள்கொண்டுவந்த செய்தி களுக்குள்ளிருந்தது.

‘ஆஹா‘வென்று ஜன்னத்துல் பிர்தௌஸ்குள்ளிருந்து எதுவோ ஒன்று எழுந்தது. அது, ‘நீ ஒரு காலிகடா (வெற்றுக்குடம்)!‘ என்று அவள் காதுக்குள் ரகசியம் சொன்னது. மும்மானியின் அழுகையில் இருக்கும் அர்த்தத்தை, அழுத்தத்தை பார்க்கச்சொல்லி, உணர்த்தியது. கொஞ்ச நேரம் மும்மானியின் அழுகையைக் கவனித்தாள். அர்த்தம் இருப்பது ‘ஆமா‘வென்றுபட்டது. மும்மானியைக் காலிசெய்து, தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவளைப் பிரயத்தனப் பட வைத்தது. சூழலை மாற்றும் முயற்சியாக, மும்மானியின் குரலைப் பின்னுக்குத் தள்ளி விடும் ஓலக்குரலை எழுப்பினாள். கிள்ளிவிட்டக் குழந்தையின் வீறிடலாய் அந்தஓலம் இருந் தது.

அதில், தனது பிள்ளைகளை முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி, எப்படி பாகுபாடில்லாமல் தன் பிள்ளைகளாய்ப் பாவித்தார், என்னென்ன செய்துகொடுத்தார், பிள்ளைகளின் நிக்காஹ்வுக்கு எப்படி பாடுபட்டார் என்பதுபோன்றத் தகவல்களை அவிழ்த்துவிட்டு, தனக்குநேரவிருந்த ஆபத் தைத்தவிர்த்து, ஸ்தானத்தை நிலைநிறுத்திவிட்டதாகக் கருதிக்கொண்டாள். மேலும், சூழ்நிலை யைத் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள, நூர்ஜஹானுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தனது மகளையும் மகனையும் இழுத்து அணைத்துக்கொண்டு, “‘இனிசோட்டே பாவா‘ன்னு யாரைக் கூப்பிடுவீங்க?” என்று கேட்டுக்கேட்டு அழுதாள். காட்சி, அவள் நினைத்ததுபோலவே மாறிப் போனது.

நூர்ஜஹானின் மனதுக்குள், ‘அட… இத்தனையையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறாளா?‘ என்று சூழலுக்கு ஒவ்வாதக் கேலிச்சிரிப்பு எழுந்தது. ‘அண்ணன், அண்ணன் பொண்டாட்டி, அண்ணன் பிள்ளைகள் என்றிருந்த புருஷனுக்கு பொண்டாட்டியான தன்மீது, ஏதாச்சும் கரிசனம் இருந்தி ருக்குமா?‘ என்று யோசித்தாள்.

முப்பத்தைந்து ஆண்டுகால நீள்பட்டியல் அவளிடமிருந்தது. இருந்தும், எதுவும் நினைவில் வருவதாகப் புலப்படவில்லை. அக்கம்பக்கம் எங்கும் போய்விடக்கூடாது. யாரிடமும் பேசிவிடக் கூடாது. சாப்பாடு வைத்துவிட்டு, சாப்பிட்டு முடிக்கும்வரையில் பக்கத்திலேயே இருக்க வேண்டும். கேட்காமலேயே பரிமாறவேண்டும். தான் மனதுக்குள் நினைத்ததை அவள் செய லாய் செய்துமுடிக்கவேண்டும். அப்படியே எங்காவது போகவேண்டுமென்றால் முன்கூட்டியே சொல்லவேண்டும். அணியும் சட்டைவேட்டியிலிருந்து, அண்டர்வேர்வரை எடுத்து வைத்து விட்டுப் போகவேண்டும். குறிப்பாக முழுக்கை கமீஸில் கைகளை அரைக்கையாகச் சுருட்டி, மடித்து வைத்துவிட்டுப் போகவேண்டும். இதில் எதுவொன்று குறைந்தாலும், வீட்டுக்கு வராமல், அப்படியே அண்ணன் வீட்டில் ‘டேரா‘ போட்டுவிடுவது அவரது வாடிக்கையாக இருந் தது.

அப்போது அண்ணனோ அண்ணியோ, ‘இதெல்லாம் தப்புப்பா!‘ என்று சொல்லி அனுப்பிவைத்த வரலாறெல்லாம் இல்லவேயில்லை. ‘இன்னும் நான்குநாட்கள் இரு‘ என்பதுபோல இருத்திக்
கொள்வார்கள். இத்தனைக்கும், வீடு அடுத்தத் தெருவில்தான்!

ஒரேஒருமுறை மனைவிக்கும் கணவனுக்குமிடையில் மனஸ்தாபம் வந்துசேர்ந்தது. “இந்தாப் பாரு. அல்லாஹ்ஹுத்தாலா ஆணையும் பொண்ணையும் சேக்குறது அவங்க சந்தோஷத்துக் காகத்தான். புருஷனோட மனசறிஞ்சு நடந்துக்கத்தான் பொண்டாட்டி. எப்படிப்பட்டவனா இருந் தாலும் அவனுக்கு அடங்கி நடக்கத்தான் அவ இருக்கா. அப்படித்தான் இருக்கணும்!” என்று பெரியதொரு பயானை நடத்தி நோகடித்ததில், அதற்குப்பின் அவள் எதுவுமே பேசியதில்லை. தங்கக்கூண்டாகவும் இல்லாமல், தகரக்கூண்டாகவும் இல்லாமல், விட்டேத்தி வாழ்க்கைக்கான இடமாக வீடு ஆகியிருந்தது. ‘அல்லா நமக்குக் குடுத்தது இவ்வளத்தான்‘ என்று நொந்து கொண்டாள். மற்றபெண்களைக் காட்டிலும் தனக்கு சோறும் ஆடையும் கிடைக்கும் வீடாக மஹல்லாவுக்குள் அல்லா அளித்திருப்பதாகக் கருதி, அடக்கமான நல்ல பொண்டாட்டியாகி விட்டாள். அது சற்றுநேரத்து முன்புவரை தொடர்ந்தது. ஒரு வார்த்தைக்கூட எதிர்த்துப் பேசிய தில்லை.

சாப்பிட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்த முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி, தனக்கு மேலுலக அழைப்பு வந்துவிட்டதை உணர்ந்து, “அண்ணனுக்கு போன்போடு!” என்று சொல்லவந்து, வாய் வராமல், “பாய்… பாவஜ்மா… பான்… பச்சே!” என்று ஏதேதோ உளறியிருக்கிறார். பக்கத்திலிருக் கும் மனைவியிடம் தனக்கு ‘என்னவோ செய்கிறது‘ என்றுகூடச் சொல்லவில்லை. அடுத்து அந்த உளறலும் வரவில்லை. சைகையால் ஏதோ சொல்லமுயன்று, ‘கை வீசம்மா… கைவீசு!‘ என்பதுபோல ஆட்டியிருக்கிறார். இறுதிநொடிகளில்கூட உடன்பிறப்புகளின் ஞாபகம்தான் அவருக்கிருந்தது. நூர்ஜஹான்தான் என்னவோ ஏதோவென்று பதறி, பக்கத்துவீட்டுப் பையன் மூலமாகச் சொல்லியனுப்பினாள்.

மௌத்துக்கும் ஜனாஜா எடுக்கும் நேரத்துக்கும் இடையில் நான்கைந்து மணி நேரம்தானிருந் தது. பூலோகவாழ்வு முடிந்தபின் நீண்டநேரம் மய்யத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டிய தில்லை என்று செயல்படுவதாக, எல்லாமே துரித கதியில் நடந்தன. ஒற்றைக்கிடுகு நிழல் பந்தல் போடப்பட்டு, உட்காருவதற்கு நாற்காலிகள் விரிக்கப்பட்டுவிட்டன. நிழல், சற்று இயைவாக இருந்தது. நிழலில் உட்கார்ந்திருந்த இரண்டு மூன்றுபேரும் முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானியின் தொழுகை சகாக்கள். தொழுகைக்கு அவர் வருவது, எல்லோரிடமும் மரியாதையாகப் பேசுவது, தொழுவது, அவரது ஞானம், அமைதி குறித்த சங்கதிகள் அலசப் பட்டன. தாடிவைத்து, குல்லா போட்டு, தொழுகைக்கு வந்துவிட்டால், சர்வ லட்சணமும் கௌர வமும் கிடைத்துவிடும் என்பது அவர்களின் பேச்சில், தண்டுவடமாக இருந்தது. வார்த்தை களால் அவருக்கு புனிதப்போர்வை போர்த்தினார்கள்.
“மனுஷனுக்கு கொழந்தை இல்லாமப் போச்சு. அவ்வளதான். மத்தபடி அண்ணன் புள்ளைங்கள தன் புள்ளைங்களாவே பாத்துக்கிட்டாரு. அல்லாஹ் அவருக்கு ஒரு புள்ளையக் குடுத்துருக்க லாம்!” அவர் எடுத்து வளர்த்த அண்ணன் மகனைப் பார்த்த அவர்கள், பேச்சை மாற்றினார்கள். அவன் அவசரவேலையாக எங்கோ கிளம்பினான்.

அவன் போனதும், “நூர்ஜஹான் ரொம்ப நல்ல மாதிரி! நிக்காஹ்வான ரெண்டாவது வருஷமே டாக்டர்கக்கிட்ட செக்கப் செஞ்சப்ப, இவரு விஷயமான ஆளு இல்லேன்னு தெரிஞ்சுபோச்சு” என்று யாரோ சொல்லிக்கொண்டிருந்தபோது, முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானியின் மூத்தத் தங்கச்சி ஜவேரியா ஓடோடி வந்துகொண்டிருந்தாள். ‘தனக்கு ஏன் முன்னக்கூட்டியே தகவல் தரவில்லை?‘ என்று, நூலாய் நொந்துகிடந்தவளைக் காய்ந்துகொண்டே நுழைந்தாள். “வாரந் தவறாம என்னியப் பாக்க வருவீங்களேண்ணே. எனக்கு ஒண்ணுன்னா, ராப்பகல் பாக்காம செஞ்சு முடிச்சப் பின்னாலத்தானே ஓய்வீங்க. இப்ப இப்டி ஓஞ்சு சாஞ்சு செடக்கீங்களேண்ணே. இனி எனக்குன்னு யாரு வருவா?” என்று, இனி தனக்குக் கிடைக்காமல் போகும் உதவிகளை தன் கவலையாய் சபையில் எடுத்துவைத்தாள்.

நூர்ஜஹானும் அதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். பள்ளிவாசலுக்குப் போய்விட்டு வரு வதாகச் சொல்லிவிட்டு, நீண்டநேரத்துக்கு அவர் காணாமல் போய்விடும் விஷயத்துக்கான ஆதாரம் சபையில் வந்துவிழுந்தது. இதுநாள்வரை தங்கச்சியின் வீட்டுக்குப் போய்வந்த விஷயத்தை, ஒருமுறைகூட அவர் சொன்னது இல்லை. அண்ணனின் பெருமையை ‘கஸீதே‘க் களைப்போல கவிதையாய்ப் பேசியவள், தன்னுடன் ஏன் புருஷன் வரவில்லை என்பதை, அழுகையின் ஊடாக, சாடையில் சொன்னாள். ‘மச்சாம்மேல ஒங்களுக்கு எவ்வளவு பிரியம்னு தெரியாதாண்ணே. நீங்க மௌத்தான சங்கதிகூட வரலையேண்ணே. கேட்டமனசு தாங்கலியே அண்ணே. நான் ஓடியாந்துட்டேன். மௌத்த முறையாச் சொல்லி அழைக்கவேணாமா? மச்சானைக் கூப்புட வேணாமா?‘ என்று.

ஜன்னத்துல் பிர்தௌஸின் அழுகையையே தூக்கிச் சாப்பிடுவதாக இருந்தது, தங்கச்சி ஜவேரியாவின் அழுகை. ‘நிதானத்தோடுதான் இருக்கிறாளா?‘ என்று சந்தேகம்கொண்ட கிழவி யொருத்தி, “மௌத் சேதிய நிக்காஹ்வுக்குக் கூப்டுறாப்பலயா சொல்லி அழைப்பாங்க. கேள்விப் பட்டதும் ஓடியாறேண்டிய சங்கதியில்லா மௌத்து!” என்று யாரும் கேட்காமலேயே சொல்லிக் கொண்டிருந்தாள்.

நூர்ஜஹான் மனசுக்குள், வெற்றிலைப்பாக்கு எங்காவது இருந்தால், எடுத்துக் கையில்கொடுத்து அழைக்கவேண்டும் போலிருந்தது.

அசர் தாண்டி நேரம் போயிருந்தது. கபர்க்குழி வெட்ட ஏற்பாடு செய்யப்போன ரஷீத், வெட்டி விட்டதாகச் சொல்லிக்கொண்டு வந்தான். அவன் கையில் மய்யத்தைக் குளிப்பாட்டும் தண்ணீரில் போடுவதற்கான இலந்தை இலைகள் இருந்தன. “ரஷீத் ஞாபகக்காரன்யா. சொல்லா லேயே கொண்டாந்துட்டான் பாரு!” என்று, மக்ரீபுக்கு முன்னால் கபன் துணியைக் கிழித்து வைத்துவிடலாமென்று வந்துசேர்ந்த மோதினார் புகழ்ந்தார்.

“பாக்கும்போதெல்லாம் ரஷீதுக்கு குடுத்து ஒதவுனவருல்ல. கணக்குப்பாத்தா லட்சத்தைத் தாண்டிருக்குமே!” யாரோ போட்டு உடைக்க, ரஷீத் ஆள் மறைந்துபோனான்.

ஓலைக்கொட்டானில் பூல்க்கி ஜத்தரை சுருட்டிக்கொண்டுவந்து வைத்துவிட்டு, காசுக்காக மாலைக்கோனார் சந்தனக்கடை ஆள் நின்றிருந்தான்.

உள்ளேயும் வெளியேயுமாக டியூப் லைட்டுகள் கட்டப்பட்டு வெளிச்சத்தை உமிழ்ந்தன.

நிழல் பந்தலில் ஆண்களும் வீட்டுக்குள் பெண்களுமாகக் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. வந்தவர்கள் அத்தனைபேரும் முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானியைப் பற்றி நல்லபடியாகவே பேசினார்கள். மௌத்தாவைப் பற்றிக் குறையேதும் சொல்லக்கூடாது என்பது தொன்மமாகவே கருதப்பட்டாலும், இங்கே அவரைப் பற்றித் தவறாகப் பேசுவதற்கு, சங்கதிகள் ஏதும் இருக்க வில்லை. எல்லோருக்கும் நல்லவராக இருப்பதற்கு முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி அடை யாளமாகப் பேசப்பட்டார்.

மஹல்லாவில் குடியிருக்கும் மற்றவர்களும் அப்படியே பேசினார்கள். நல்லகண்ணு நாடார் சொல்வதில் எந்த அளவு உண்மையிருக்குமென்று சந்தேகம் இருந்தாலும் சுவாரசியமும் இருக்கும். “அவசரத்துக்கு பாய்ட்ட ஓடிவந்து கடன் கேட்டேன். எம்பொண்ணோட காரியம். என்ன ஏதுன்னு மனுஷன் கேக்கவேல்ல. கேட்ட பணத்தைத் தூக்கிக்குடுத்துட்டாரு. அப்பறம் நான் நெதானமாப் பெறட்டிக்குடுக்க வந்தப்ப, ‘நாடாரே… பொம்பளப்புள்ளைக் காரியத்துக்குக் குடுத்தத் திரும்பிவாங்குறது நாகரீகம் இல்லன்னுட்டாரு. அப்படியாக்கொத்த மனுஷன்!” என்றார். அத்தனைபேரும் அதைக்கேட்டு சிலாகித்தார்கள்.

முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானியை நன்றாகத் தெரிந்து வைத்திருந்த ஒருவர், “ரப்பானி நல்லவன்தான் ஆனா இந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப நல்லவனா இருந்துருக்கானே?” என்றுசொல்லிக் கலகலக்க வைத்தார். அந்தப்பகுதியில் நிலவிய இறுக்கம் தளர்ந்தது. வெயில் ஏறக்கட்டியிருந்தது.

ஜனாஜா சந்தூக்கைக் கழுவி, சின்னப்பையன்கள் இரண்டுபேர் சாம்பிராணிப் புகைபோட்டுக் கொண்டிருந்தனர். அது அவர்களுக்கு விளையாட்டாக இருந்தது.

மக்ரீபுக்குப் போனவர்கள் தொழுதுவிட்டுத் திரும்பி வந்தார்கள். மய்யத்தைக் குளிப்பாட்டு வதற்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டன. மோதினாரும் நாலைந்து இளைஞர்களும், ‘பெண்களெல் லாம் வெலகிக்குங்க!‘ என்றார்கள். உடனே பெண்களின் அழுகைஒலி எழுந்தது. நூர்ஜஹானைக் கைத்தாங்கலான எழுப்பி, பக்கத்து அறைக்குக் கூட்டிப்போனார்கள். அடைசலாக இருந்த அந்த ஹால், இப்போது விசாலமாக ஆனது.

கிடத்தப்பட்டிருந்த கட்டிலோடு, மய்யத்தைத் தூக்கிக்கொண்டு வராண்டாவுக்கு வந்தனர். அரப்புத்தூளைத் தனியாகவும், சோப்புக்கட்டியைத் தனியாகவும் சந்தூக்கிற்கு சாம்பிராணிப் புகைபோட்ட சிறுவர்கள் போட்டிப்போட்டு மண்சட்டிகளில் கரைத்துக் கொண்டிருந்தனர். இலந்தை இலைகள் போடப்பட்ட தண்ணீரை அள்ளிஅள்ளிக்கொடுக்க, ஒருசிறுவன் இரண்டு
மூன்று டிப்பர்களுடன் தயாராக இருந்தான்.

மையத்தின் மீதிருந்த ஆடைகள் அகற்றப்பட்டன. மறைவிடத்தை மூடி, தண்ணீர்விட்டு அலசிக் குளிப்பாட்டத் துவங்கினார்கள்.

தண்ணீர் கொட்டும் சத்தம்கேட்டதும், ஜன்னத்துல் பிர்தௌஸ் தனது பாட்டை மறுபடியும்
முதலிலிருந்து ஆரம்பித்தாள். இப்போது எல்லாப்பெண்களும் அவளுடன் சேர்ந்துகொண்டனர்.

கபன் துணிக்குள் மய்யத் பொதிக்கப்பட்டு கால், வயிற்றுப்பகுதி கட்டப்பட்ட நிலையில் முகப் பகுதியைக் கட்டுவதற்குமுன், “தீதார் பாக்குறவங்க பாத்துக்குங்க!” என்று ஒரு இளைஞன் குரல்
கொடுத்தான்.

நூர்ஜஹானை அழைத்துவந்து முகத்தைக் காட்டினார்கள். மயங்கி, இத்தனைநேரமும் அழுகையை அடக்கிக்கொண்டிருந்தவள் பெருங்குரலில் அழத்துவங்கினாள். தான் தனித்துவிடப் பட்டதை எண்ணி மறுகினாள். தனக்கென்று யாருமில்லை என்பதை எண்ணிக்கலங்கினாள். ‘இப்டி விட்டுட்டுப் போறீங்களே!‘ என்று, ஓலமிட்டாள்.

“அழாதே… அழக்கூடாது. அழுதா மௌத்தாக்கு ஜன்னத் கெடைக்காது!‘‘ என்று யாரோ சொன் னார்கள். அதற்கு அப்புறம்தான் அழுகைச் சத்தம் கூடியது.

எல்லோரும் குழிக்குள் கிடக்கும் எதையோ எட்ட நின்று எட்டிப்பார்ப்பதுபோல, பார்த்தார்கள்.
“பாத்தவங்க வெலகுங்க. மத்தவங்க பாக்கணும்ல்ல!”

”சரி கட்டுப்பா. டைம் ஆகுது. ஜமாத் கெடைக்கணும்ல்ல!” அதிகாரக் குரலென்று கூவியது.
கட்டினார்கள்.

“தாதாவ ஏன் பொட்டலம் கட்டுறாங்க?” ஒருகுழந்தை அழுதுகொண்டே கேட்டது.

“ஒலட்டாம சந்தூக்ல வைங்க!”

வைத்தார்கள்.

“தாதாவ என்ன பண்ணப்போறீங்க?” இன்னொரு குழந்தை தன்பங்குக்குக் கத்தியது.

“இப்டியொரு நல்லமனுஷனப் பாக்கவே முடியாது!” என்று எல்லோரும் சொல்லிச்சொல்லி அழுதார்கள். பூல்க்கி ஜத்தரை சந்தூக்கின் மேல் போர்த்தினார்கள்.

பல்வேறுவிதமான அழுகுரல்கள் ஒன்றுடன் ஒன்றாய்க் கலந்து, கதம்பமாய் மலர்ந்தன.

நூர்ஜஹானும் அழுதாள். ‘வாழ்க்கைப் பூராவும் அண்ணன், அண்ணி, அண்ணன் புள்ளைங்க, அவங்க வீடு, தங்கச்சிகன்னு இருந்தீங்களே, என்னிக்காச்சும் வீட்ல பொண்டாட்டியா இருந்த என்னைப் பத்தி யோசிச்சிருக்கீங்களா? ஊருக்கு நல்லவரா இருந்த நீங்க, எனக்கு என்னவா இருந்தீங்க?‘ என்று ஓங்கிக் குரலெடுத்துக் கத்தினாள்.

அவளது குரலை, “கல்மா ஷஹாதத்!” என்ற கோஷம் அமுக்கியது. தோள்களில் ஜனாஜாவை சுமந்தவர்களின் காலகள் கபரஸ்தானை நோக்கி நகர்ந்தன.

– இச்சிறுகதை சமநிலைச் சமுதாயம் ஜுன் 2012 இதழில் பிரசுரமானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *