மனிதர்கள் இருக்கும் இடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 10,349 
 
 

சோதனைச் சாவடிக்கு மிகத் தொலைவிலேயே வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலிருந்து நடக்கவேண்டும். சனங்கள் பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கினார்கள். தங்கள் பொருள் பொதிகளை இழுத்துப் பறித்தார்கள். கியூவில் முன்னே இடம் பிடிக்கவேண்டுமென்ற அவசரம் ஒவ்வொருவரிடமும்! சுமக்கமுடியாத சுமைகளைச் சுமப்பதற்குத் தயாராய் வந்தவர்கள்போலவே எல்லோரும் தென்பட்டார்கள். அந்த அளவுக்குப் பொருள் பண்டங்கள். வட பகுதியில் யுத்த காரணங்களால் தடை விதிக்கப்பட்ட பொருள்கள் மட்டுமின்றி ஏனைய பொருட்களுக்கும் தட்டுப்பாடு. வயோதிபப் பெண்கள்கூடத் தலையில் சுமையுடன்.

அலுவலகங்களில் உடை கசங்காது பணிபுரியும் அதிகாரிகள், சில நோஞ்சான் மனிதர்கள் போன்ற எல்லோருமே பாரங்களைச் சுமந்தார்கள்.

வெயில் சுட்டு எரித்தது. எனது முதுகில் ஒரு பொதி. அது வழுகி விழாதவாறு சற்று முன் குனிந்து நடந்தேன். தோள்மூட்டில் ஒன்றைக் கொழுவிக்கொண்டேன். இரண்டு கைகள் மட்டுமே இருந்தமையால் அவற்றில் இரு பைகளைக் காவினேன். தடைதட்டுப்பாட்டில் படும் கஷ்டங்களை மனைவி குறிப்பிட்டு எழுதுவாள்.. பிள்ளைக்குப் பால்மாகூடக் கிடைப்பதில்லை. அந்தக் கடிதங்களே லீவு போட்டுவிட்டு ஊருக்குப் போகவைக்கும்.

சோதனைச் சாவடியை அண்மிப்பதற்கு ரோட்டு இன்னும் நீண்டுகொண்டிருந்தது. முகத்தில் துளிக்கும் வியர்வையைத் துடைக்க ஒரு கையும் இல்லாதிருந்தது. நெற்றியிலிருந்து கண்களுக்குள் வியர்வை கசிந்ததும் ஒருவித எரிச்சல் ஏற்பட்டது. பாதை தெரியாமல் மறைந்தது. சுமக்கும் பை முதுகை அழுத்தி வலித்தியது. அதையெல்லாம் பொருட்படுத்தும் மனநிலை எனக்கில்லை.

பெரிய மரங்கள் வீதியேரத்தில் வெயிலிற் காய்ந்துகொண்டிருந்தன. இளைத்துப்போய் ஒதுங்குபவர்களைத் தங்கள் நிழலில் அணைத்துக்கொண்டன. கிளைகளை அசைத்துச் சிறு தென்றலை வீசிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தின. அப்பா… என நன்றிப் பெருக்குடன் நிமிர்ந்து பார்த்தால் பழுத்த இலைகளை உதிர்த்து வாழ்த்தின. நல்ல மனம் கொண்டவர்கள் வாழ்த்தினாலும் எங்களுடைய வாழ்க்கை யுத்த பிரதேசங்களுக்கள் சிறையடிக்கப்பட்டிருக்கிறது. அங்கே மரங்கள் இலைகளை உதிர்க்காது. நிமிர்ந்து பார்த்தால் விமானங்கள் குண்டு போடுமோ என்ற பயம். குண்டுகள் மரங்களின் பசுமையான இலைகளையெல்லாம் எரித்துவிட்டிருக்கின்றன.

எனக்குப் பதற்றமாயிருந்தது. அல்லது ஒருவித பயம் – இந்தமுறை வரும்போது டோர்ச் லைட்டும் பட்டரியும் வேண்டிவாங்கோ… என மனைவி எழுதியிருந்தாள். ‘இராவிருட்டியிலை ஒன்றுக்கு ரெண்டுக்கு எழும்பிப் போறதென்றாலே ஒரு லைட்டும் இல்லை. ஒரு நடுச்சாமம்.. பிளேன் இரைந்துகொண்டு வந்து குண்டு போடத் தொடங்கியிட்டுது.. திவ்யாவும் குளறுகிறாள் எழும்பி பங்கருக்கு ஓடலாமென்றால் ஒரே கும்மிருட்டு. நான் விழுந்தும்போனன். திவ்யாதான் தூக்கிவிட்டாள். அந்த அவதியிலும்…’நொந்து போச்சோம்மா? நொந்து போச்சோம்மா…?” என்று வயித்தைப் பிடிச்சுப் பிடிச்சுக் கேட்கிறாள். எனக்கு வெட்கமாயும் போச்சு!”

பெறுமாத வயிற்றைச் சுமந்துகொண்டு அவள் இப்படியெல்லாம் இன்னல் படுகிறாளே என்ற ஆதங்கத்தில் எப்படியாவது ஒரு டோர்ச் லைட்டும் பட்டரிகளும் கொண்டு போய்விட வேண்டுமென அப்போதே தீர்மானித்தேன். இப்போது பயம் பிடித்து ஆட்டுகிறது. பத்து பட்டரிகளை எனது உடையில் சுற்றி பாய்க்கின் அடிப்பாகத்தில் ஒளித்து வைத்திருந்தேன். இன்னொரு பாய்க்கினுள் அவ்வாறே டோர்ச்சையும் மறைத்து வைத்தேன். செக் பண்ணும்போது எப்படியெல்லாம் உதறிக் கொட்டுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனினும் ஏதோ ஓர் அற்ப நம்பிக்கை. பிடிபட்டாலும் உண்மையான காரணத்தைச் சொன்னால் இரக்கப்பட்டு விட்டுவிடுவார்கள் என என்னையே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால், இராணுவச் சோதனைச் சாவடி நெருங்கிக்கொண்டே வர… நெஞ்சு பக்… பக்…!

மரங்களின் இலைகளையொத்த வர்ணத்தில் யூனிபோம் அணிந்த சிப்பாய்கள் வீதியின் இரு மருங்கும் கரிய துப்பாக்கிகளின் துணையுடன் நின்றனர். அவர்களது முகங்கள் இறுகிப்போயிருந்தன. அவர்களிடமிருந்து சிரிப்பையும் மென்மையுணர்வையும் அழித்திருப்பார்களோ, இந்த டியூட்டிக்காகப் பயிற்றுவிக்கும்போது?

ஆனால், அபூர்வமாக சிலர் துப்பாக்கிகளின் சுடு முனையை நிலத்தில் குத்தி அதன் பிடியில் கை ஊன்றிக்கொண்டு ‘ரிலாக்ஸ்” ஆக நின்றார்கள். இனிச் சுடுவதில்லை என்று தீர்மானித்து விட்டதுபோல! துப்பாக்கிகள் இதுபோல நல்ல வகையிலெல்லாம் பயன்படுத்தக்கூடியவைதான்.. அதை விட்டு ஏன் சுட்டுத் தள்ளுகிறார்கள்?

நடு வெயிலில் மக்கள் வரிசை நீண்டிருந்தது. பத்துப் பதினைந்து போராக அழைக்கப்பட்டு உதறிக் கொட்டப்பட்டார்கள். தலையை எட்டி நோட்டமிட்டேன். தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டுவந்து யாராவது பிடிபடுகிறார்களா அல்லது மன்னித்து விடப்படுகிறார்களா என்பதை இங்கிருந்தே கண்டறிய எத்தனித்தேன். மாட்டுப்படப் போகிறேனோ என நினைக்க வயிற்றைக் கலக்கியது. இங்கிருந்தே திரும்பி விடுவோமா என்றும் தோன்றியது. அப்படித் திரும்பினாலும் அது சந்தேகத்தைக் கொடுக்குமே! அது வேண்டாம். முன் வைத்த காலைப் பின் வைக்காதே!

என்ன பொருட்கள் தடை செய்யப்பட்டவை எனப் பட்டியலிடப்பட்ட அறிவிப்புப் பலகை முகத்திலடித்தது. அதை மீறுபவர்கள் இன்ன சட்டப்பிரிவுப்படி தண்டனைக்கு ஆளாவார்கள் என எழுதப்பட்டிருந்தது. அதே வி~யத்தை ஒலிபெருக்கியும் செகிட்டாவடியைப் பிடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது.

கியூ ஒழுங்குகளைக் கவனிக்கும் சிப்பாய் அண்மையில் வந்தால், அவன் என்னையே நோக்கி வருவதுபோலவும் எனது பைகளைக் கடைக்கண்ணால் நோட்டமிடுவதுபோலவும் பிரமை! எனது கண்களின் மிரட்சியே காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற எண்ணத்தில் மிக இயல்பாக நிற்பதுபோல் நிற்பதற்கு முயன்றேன். சினிமாப் பாட்டொன்றை வாயசைத்து முணுமுணுத்துப் பாசாங்கு காட்டினேன். ஆனால், உண்மையிலேயே மனசுக்குள் கடவுளைக் கசிந்துருகிக்கொண்டிருந்தேன்.

கியூ முன் நகர, நான் அதைக் கவனிக்காமலிருக்க.. பின்னே நின்றவர் சினப்பட்டு முதுகில் தள்ளினார்.. ‘போங்கோ!… போங்கோ!… என்ன யோசிச்சுக் கொண்டு நிக்கிறியள்?”

எனது முறை வந்தது.

‘கடவுளே!” என்றேன். கடவுள் என ஒருவர் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது இப்படியான நேரங்களில்தான் தெரியவருகிறது.

முதலில் பொருட்களை கீழே வைத்துவிட்டுக் கைகளை உயர்த்திக்கொண்டு நிற்க, உடலெல்லாம் ஸ்பரிசித்துச் சோதிக்கப்பட்டேன். உடலின் சில பாகங்களைத் தொட்டபோது கூச்சமாக இருந்தது. ‘அதுக்குள்ள என்ன இருக்குதென்று சோதிக்கிறாங்கள்..’ என எரிச்சலுடனும் ஆனால் மிக அவதானத்துடன் சிரிப்பை வெளிப்படுத்தாமலும் நின்றேன்.

“சரி!… போ!… போ!…”

அடுத்து பொருட்கள் செக் பண்ணும் இடத்துக்குப் போகவேண்டும்.. டக்…டக்…டக்…டக்…நெஞ்சு அடித்தது.

ஒவ்வொருவருக்கும் இரு சிப்பாய்களாக நின்று ‘செக்” பண்ணிக்கொண்டிருந்தார்கள். தப்ப வழியில்லை. பைகளைக் கீழே வைத்து அவர்கள் உத்தரவுக்குக் காத்திராமல், நல்ல பிள்ளையைப்போல பை ஒன்றைத் திறந்து பொருட்களை வெளியே வைத்தேன்.

மற்றப் பைகளையும் திறக்கும்படி சைகை செய்தார்கள். முதலில் கொட்டப்பட்ட பொருட்களைச் சோதிப்பதில் அவர்கள் கவனமாக இருக்க, நான் பட்டரி டோர்ச் ஆகியவை சுற்றப்பட்ட துணியை எடுத்துக் கீழே வைத்து அதன் மேலும் சில உடுதுணிகளைப் போட்டு மறைத்தேன்.

‘ஓய்!… என்ன இது?”

திவ்யாவுக்காக நான் வாங்கிவந்திருந்த சொக்லேட் பக்கட்டுகள் அவர்களின் கண்ணிற் பட்டுவிட்டது.

‘லமயாட்ட!… (பிள்ளைக்கு!…)” எனப் பதில் சொன்னேன்.

அவனது முகம் முக்கோணமாகியது. ‘லமயிற்டத.. நத்நங் கொட்டிற்டத? (பிள்ளைக்கா…அல்லது.. புலிகளுக்கா?)”

அவன் குறிப்பிட்ட மிருகவர்க்கம் சொக்லட் சாப்பிடுமா என்பதுபற்றிச் சரியான ஞானம் இல்லாமையால் அதை ஒரு ஜோக்காகக் கருதிச் சிரிக்க முற்பட்டேன்.

‘என்ன சிரிப்பு?… சொக்லட் சாப்பிடாவிட்டால் உன்ட புள்ள செத்திடுமா?”

எனக்கு உச்சிக்கு ஏறியது. சொக்லட் உயிரைத் தக்கவைக்கிற பண்டமல்ல என்பது எனக்குத் தெரியும். குழந்தை யுத்த பிரதேசத்திலிருந்து காய்கிறாளே… குண்டுச் சத்தங்களினால் அதிர்ச்சி மனநிலையில் இருப்பாளே என்றெல்லாம் எண்ணிக் கலங்குவதுண்டு. இப்படி ஆறேழு மாசங்களுக்கொரு முறை வீட்டுக்குப் போகும்போது ஏற்படுகிற பெற்ற மனத் துடிப்புத்தான்…

‘இல்ல…இதெல்லாம் அங்க கிடைக்காது…அதுதான்..” வெறும் வாயை மென்று விழுங்கினேன்.

‘இது தடை செய்யப்பட்ட சாமான் என்று தெரியாதா?.. உன்னைப் புடிச்சு உள்ளே போடவா?”

இந்தளவு மரியாதையே போதுமென்றிருந்தது. சொக்லட்டுக்கே இந்தப் பாடென்றால்…பட்டரி பிடிபட்டால்? கடவுளே…என்னைக் காப்பாற்று!

சொக்லட் பக்கட்டுக்களை எடுத்துக் கொண்டார்கள். ‘சரி போ!… போ!… இனிமே இப்படி செய்யவேணாம்.. சரியா!”

‘சரி..’ அது போனால் போகட்டும். இந்த அளவுக்குத் தப்பியதே பெரிய காரியம். மள மளவென்று பொருட்களை எடுத்துப் பைக்கள் திணித்தேன். கையில் நடுக்கம் தெரிந்தது. அதைக் கவனித்திருக்க வேண்டும்.

‘என்ன…பயப்படுறதா?…இதெல்லாம் எங்கட டியூட்டி… பயப்பட வேண்டாம்… சரியா?” என்றான்.

நன்றிப்பெருக்குடன் ‘சரி” என்றேன்.

‘எனக்கென்ன பயம்?… துணிஞ்ச கட்டை..!” என்பதுபோன்ற பாவனையில் அவனை நிமிர்ந்து பார்த்தேன். சிக்கலிலிருந்து விடுபட்டாயிற்று என்ற மகிழ்ச்சிதான் அப்படியொரு உசாரைத் தந்தது. ஆனால், அவனது முகத்தின் இறுக்கம் விடுபடாமலிருந்தது. ‘போ! போ…!” விரட்டப்பட்டேன்.

அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டாலே போதும் எனும் அவசரத்துடன் மீதமிருந்த துணிமணிகளையும் எடுத்துப் பைகளில் திணித்தேன். அவசரத்தில் அவதானத்தை கைவிட்டதால்… ‘தடக்!”

பட்டரிப் பார்சல் நிலத்தில் விழுந்தது. முன்னே நின்றவன் துள்ளி ஓரடி பின்வாங்கினான்.

‘என்ன குண்டா?”

எனக்கு மூச்சு நின்றதுபோலிருந்தது. முழிகள் வெளியே வந்துவிடும்போல் கண்கள் இமைக்க மறந்து நின்றன.

‘பெண்… பெண்சாதி…பிள்ளைத்தாச்சி…பெண்சாதி…பாத்றூம்…பிள்ளைத்தாச்சி!”

சதுரமெல்லாம் நடுங்கியது. வியர்வையில் சேர்ட் நனைந்து முதுகில் ஒட்டியது. பாய்க்கிற்குள் திணித்த பொருட்களெல்லாம் திரும்ப வெளியே கொட்டப்பட்டன. துருவித் துருவி ஆராயப்பட்டன. இரு பக்கமும் துப்பாக்கிகள் எனக்குத் திருப்பப்பட்டன.

துணிப் பார்சலைக் குலைத்து பட்டரிகளை வெளியே எடுத்து அது குண்டல்ல என்பதைக் காட்டினேன். ‘எதுக்கு இதெல்லாம்?.. பட்டரி குண்டு வெடிக்கவா?”

நான் அழுவாரைப்போல நின்றேன். டோர்ச்சுடன் இரு பட்டரிகளை மட்டும் கொண்டு வந்திருக்கலாம். ‘ஸ்டொக்” பண்ணி வைத்தால் நீண்ட காலம் பாவனைக்கு உதவும் எனக் கொண்டுவந்து சேர்த்த எனது சாதுரியத்தை அல்லது துணிச்சலை மனைவி மெச்சுவாள் என்ற ஆசையில் பட்டரிகளைக் கொண்டு வந்தது எவ்வளவு தப்பு எனப் பட்டது.

இப்போது என்ன சமாதானம் சொல்லித் தப்புவது? உண்மையான காரணத்தைச் சொன்னால் நம்புவார்களா என்ற சந்தேகமான நிலை தோன்றியிருந்தது.

‘பெண்சாதி… பெறுமாசப் பிள்ளைத்தாச்சியாயிருக்கிறாள். ஆளுதவி ஒன்றும் இல்லை. இரவில் பாத்றூமுக்கு போறதெண்டாலும் லைட் இல்லை.”

‘என்ன…நோனா புள்ளத்தாச்சியா?”

ஒருவன் கேட்க மற்ற இருவர் சிரித்தார்கள். இதிலென்ன ஏளனம் இருக்கிறது என எண்ணினேன். அல்லது இவர்கள் சிரித்தது நான் நின்ற வெருட்சியுற்ற கோலத்தைக் கண்டோ தெரியாது. திரும்பவும் அதே கதையைச் சொன்னேன்.

‘நோனா புள்ளத்தாச்சி என்றால் றெட்குறோசுக்கு சொல்லுங்க. அல்லது அங்க ஆமிக் காம்புக்கு இன்ஃபோம் பண்ணுங்கோ… இங்காலை கொண்டுவர ஒழுங்கு செய்யலாம்.”

அது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பது எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கே தெரியும் என்பதால் மௌனம் சாதித்தேன்.

‘உங்களையெல்லாம்…சுடவேணும்!” (தம்சலாட்ட வெடி தியன்ன ஓன!)

நடுங்கிக்கொண்டிருந்த எனது மேனி ஒரு முறை உறைந்தது. முயன்று கதைத்தேன்.

‘நான் செய்தது பிழையென்றால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. (சமாவென்ட!…) நான் குடும்பஸ்தன்.. கன நாட்களுக்கு பிறகு பிள்ளையைப் பார்க்க வீட்டுக்கு போறன்… என்னை விடுங்கோ…பட்டரி வேண்டாம்… கொண்டுபோகயில்லை!.”

‘விட வேண்டாம்… இவனை லொக்காவிடம் கூட்டிப்போ..” என ஒருவன் கூற, மற்றவன் ‘என்ட..!” என்றான். நான் போகாமலே நின்றேன்.

இந்தப் பயணம் ஆரம்பித்த நேரம் முதல் எத்தனையோ அலைச்சல்களைப் பட்டாலும் மனைவி குழந்தையைப் பார்க்கப் போகிறேனென்ற ஒரு நாதம் நாடி நரம்புகளை மீட்டிக்கொண்டிருந்தது. இப்போது சர்வாங்கமும் சோர்வடைந்த… தளர்ச்சி. ஏதாவது பேச வாய் திறந்தால் அழுதுவிடுவேன்போல விம்மல்கள் வெடிக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தன.

பொருட்களை அப்படியே விட்டு வரச் சொன்னார்கள். சோதனைச் சாவடியின் ஒரு பக்கத்திலிருந்த அலுவல் அறையை நோக்கி நடத்தப்பட்டேன். பக்கத்திலேயே சிறியதொரு கூடும் உள்ளது. அதனுள்ளேதான் என்னைப் போட்டு அடைப்பார்களோ! இந்தக் கேவலம் தேவைதானா? நான் செய்தது குற்றமா இல்லையா என்றுகூடப் புரியவில்லை. இனி என்ன நடக்குமோ என நெஞ்சிடித்தது. விசாரணை தடை முகாம் என்றெல்லாம் வாழ்க்கை திசைமாறிப் போய்விடுமோ! கவிதா… உன் பிள்ளைப்பேற்றுக்குக்கூட நான் நிற்கமுடியாமற் போகுமோ!

அலுவல் அறைக்கு வெளியே ஒருத்தனின் காவலுடன் நிறுத்தப்பட்டேன். உள்ளே சென்றவன் மேசையில் பட்டரிகளையும் டோர்ச்சையும் வைத்துவிட்டு என்னைச் சுட்டிக் காட்டி முறையிட்டான். ஒரு குற்றவாளியாக நிற்பது கூசியது. மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் செய்தது தவறு அல்ல. கடைசி முயற்சியாக அந்த அதிகாரியுடனாவது கதைத்துப் பார்க்கலாம் என்றொரு வேகம்.

ஜன்னலூடு பார்த்து விஷயத்தைச் சொன்னேன். ‘மனைவி பெறுமாதம், இருட்டில் பங்கருக்கு ஓடியது… விழுந்தது..” என எல்லா நியாயங்களையும் ஒப்புவித்தேன். மனமும் சலிப்படைவதுபோல் களைத்துப் போனது. அவர் எழுந்து எனக்கு அண்மையாக வந்தார்.

தொப்பியைக் கழற்றி, தன் முடியில்லாத தலையைத் தடவிக்கொண்டே என்னைப் பார்த்தார். அது…அவர்…?

0

அவர்…சோமைய்யாவைப் போலல்லவா தோன்றியது. அந்தக் கறுத்த நெடிய தோற்றம்? பதினாலு வருடங்களுக்கு முன் அவரது தலையில் முடியிருந்தது. இப்போது வழுக்கைத் தலையோடிருந்தவரை மட்டுக்கட்ட முடியவில்லை.

அப்போது நாங்கள் கொழும்பில் குடியிருந்தோம். வெள்ளவத்தையில் வீடு. முதலில் அவ்வீட்டில் நானும் சில நண்பர்களும் இருந்தோம். அவ்வீட்டிலேயே ஒரு பகுதியில் சோமையா குடியிருந்தார். சோமதாச என்பது அவர் பெயர்.

அண்ணா என்ற அர்த்தத்தில் சோமையா என நாங்கள் அழைப்போம். ஒரு வகையில் பார்த்தால்; அவ்வீடு அவருக்குச் சொந்தமானது. இன்னொரு வகையில் பார்க்கப்போனால் அவ்வீடு அவருக்குச் சொந்தமாகுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. உண்மையில் அது அவரது தந்தையின் சொத்து. அவருக்கு ஒரு தம்பியாரும், திணைக்களமொன்றில் உயர் பதவி வகிப்பவர் இருந்தார். தந்தை இறந்தபோது வீடு யாருக்கு என்று எழுதிவைக்காமலே போய்விட்டார். தம்பிக்கு ஏற்கனவே ஒரு வீடு தந்தை கொடுத்திருப்பதால் இந்த வீடு தனக்குத்தான் சேரவேண்டுமென சோமையா குடி போதையிலிருக்கும் நேரங்களில் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால், வீட்டை எங்களுக்கு வாடகைக்கு தந்ததும், மாதாந்த வாடகைப் பணம் பெறுவதும் அவரது தம்பியார்தான்.

ஒரு பக்கத்தில் சோமதாச இருக்கட்டும் என அறையொன்றை சட்டரீதியற்ற முறையில் பிரித்துக் கொடுத்திருந்தார். அந்தப் பக்கத்து அறையிலும் பாத்றூமிலும் அவர் பகலெல்லாம் (விழுந்து) கிடப்பார். வெறி முறிந்ததும் மாலை வேளையில் வெளியே போய் மீண்டும் இரவு நல்ல போதையில் வருவார்.

குடிப்பதற்கு இவ்வளவு காசு எங்கிருந்து கிடைக்கிறதோ என நாங்கள் பேசிக்கொள்வோம். ‘சாப்பாட்டுக்கென கொடுப்பதை குடித்துத் தள்ளுகிறார்… இந்த மனுஷன் ஒரு உதவாக்கரை!” எனத் தம்பியாரும் குறைபடுவார்.

அவர் எங்களோடு பழகத் தொடங்கியதும் எங்களிடமும் கைமாற்றாகக் காசு கேட்பார். கொடுத்தால் திரும்ப வராது. நண்பர்கள் கொடுக்கமாட்டார்கள்: ‘இந்தாள் கசிப்பு அடிச்சிட்டு வந்து கத்திறதுக்கா?”

அந்த ஆளோ காசு கொடுக்காவிட்டால் போகாமல் அழுங்குப் பிடியில் நிற்கும். கடைசியில் பத்தோ பதினைந்தோ கொடுத்து அனுப்புவது நானாகத்தான் இருக்கும். இரவு வந்தால் காசு கொடுக்காதவனின் பெயர் விலாசமெல்லாம் இழுத்துக் கிழிக்கப்பட்டும். அவ்வப்போது ‘தெமளு” என்ற சொல் பிரயோகமும் விழும். நான் கவிதாவை மணமாகி (மனைவி) குடியிருக்க வந்தபோது இதுதான் தருணம் என அவர்கள் விலகிவிட்டார்கள்.

‘இந்த மனுஷன் இருக்கிற இடத்திலை எப்படி மனிசியை வைச்சிருக்கப்போகிறாய்?” என அவர்கள் கரிசனைப் பட்டதுண்டு. எனக்குத் தோதாக வேறு வீடு கிடைக்கவுமில்லை. பழகிய இடமே சிறந்தது என்றும் தோன்றியது. அங்கேயே தங்கிவிட்டேன்.

ஒரு கட்டத்தில் சோமையாவின் தொல்லை தீராத தொல்லையாகத்தான் போய்விட்டது. கவிதாவுக்கு அவரைக் கண்ணில் காட்டவே கூடாது.

‘என்ன இந்த மனுஷன்?… எங்கையாவது வேலை செய்து உழைக்கிறதுக்கு… சோம்பேறி மாதிரிக் கிடக்குது… குடுத்துவைச்ச மாதிரி காசு கேட்டுக்கொண்டு வருவது…” என என்மீது பாய்ச்சல்கள் நடக்கும்.

‘என்ன கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறீங்களோ..” என ஏளனத் தொனியிலும் கேட்பாள்.

சோமையா நன்றாக இருக்கும் நேரங்களில் ‘ஏன் இப்படி குடிக்கிறீங்கள்?… குடிக்கிறது கூடாது!” என்றெல்லாம் உபதேசித்திருக்கிறேன். ஒன்றும் பேசமாட்டார். சில வேளைகளில் ‘குடிக்கக்கூடாதுதான்!” என ஒரு வார்த்தையில் பதில் சொல்லுவார். ‘இனிக் குடிக்கமாட்டேன்!” என்றும் கூறுவார். ஆனால், இரவு திரும்பவும் சனியன் பிடித்திருப்பதைக் காணலாம்.

வெறி மயக்கத்தில் வெளிப்படும் புலம்பல்களிலிருந்தும் அவரது தம்பியார் சொன்ன சில கதைகளிலிருந்தும் அவருக்குள்ளும் ஒரு கதை இருப்பதைத் தெரிந்து வைத்திருந்தேன்.

அவர் முன்னர் நல்ல உத்தியோகத்திலிருந்தவர். வேலை செய்யும் இடத்தில் இளநங்கை ஒருத்தியுடன் தொடர்பு – காதல். சோமையாவின் குடும்பம் அந்தஸ்து வசதியில் உயர்ந்தது. அவர்களுக்கு இதைப் பொறுக்கவில்லை. எவ்வளவோ தடைகள் போட்டார்கள். சோமையாவும் தொடர்பைக் கைவிடுவதாயில்லை. அவர் ஊரிலில்லாத தருணம் பார்த்து ஒரு நாள் அந்தக் குடிசை எரிக்கப்பட்டுவிட்டது. சோமையாவின் கிளி பறந்துபோனது எந்த இடமென்றே தெரியவில்லை.

‘அவளைத் தேடிக்கொண்டே இருக்கிறேன்… அவளை நினைத்துத்தான் குடிக்கிறேன். அவளைக் கண்டுபிடித்த பிறகுதான் எனக்கு கல்யாணம், வாழ்க்கை எல்லாம்.” என்பார்.

இதை அறிந்த பிறகு எனக்கு அவர் மேல் இன்னும் பரிவு கூடியது. இரவில் வருவதற்குச் சுணங்கினால் கேற்றடியில் பார்த்துக்கொண்டு நிற்பேன். குடிபோதையில் எங்காவது விழுந்துகிடப்பாரோ எனக் கவலையாயிருக்கும். அப்படி நடப்பதுமுண்டு. வந்ததும் சாப்பிட்டாரா என்று கேட்பேன். அவருக்குச் சாப்பாடு கொடுக்கும்படி கவிதாவிடம் சொல்வேன். கவிதா அந்தக் கதைகளையெல்லாம் நம்பத் தயாராயில்லை. என்னிடத்தில் அவர் இடம் கண்டுகொண்டார் என்றுதான் சொல்வாள். அது ஓரளவு உண்மையும் கூட. ஆரம்பத்தில் மாலை நேரங்களில் மட்டும் பணம் கேட்பார். பின்னர் பகலிலும்… ‘பசிக்கிறது” என வயிற்றைத் தொட்டுக் காட்டிப் பணம் கேட்பார். சாப்பாடு கொடுத்துச் சாப்பிடச் சொன்னால்…’இல்ல… உங்களுக்கு கஷ்டம் தரக்கூடாது… கடையில்தான் சாப்பிடவேணும்!” என காசுக்காக நாண்டு கொண்டு நிற்பார்.

‘இப்ப தருகிற கஷ்டம் போதாதா?” என அவருக்குக் கேட்கக் கூடியதாகவே சத்தம் போடுவாள் கவிதா. பசிக்கிறது என்று கேட்ட மனிசனுக்கு எப்படி கொடுக்காமல் விடுவது என்று எனக்குத் தோன்றும். கொடுத்தால் அந்தக் காசுக்கும் குடித்துவிட்டு வருவார். இரவில் வந்து கத்தலும் திட்டல்களும்தான். ‘நன்றி கெட்ட மனுஷன்..’ என கவிதா சொல்வாள். ‘வேறு வீட்டிற்கு மாறிவிடலாம்!” என நச்சரிக்கத் தொடங்கியிருதாள். அப்போது நாட்டு நிலமைகள் மோசமாக ஆரம்பித்திருந்தன. புதிய இடத்துக்கு… தெரியாத சூழலுக்கு போவதை விட இங்கேயே அஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம் என்றுதான்.. என் மனம் சொன்னது.

0

எண்பத்து மூன்று ஜூலை!…

மதிய போசனத்தின் பின் வழக்கம்போல அலுவல்களில் ஈடுபட்டிந்தபோது வெளியே கலவரம் வெடித்தது. மாடியிலிருந்து கீழே நடக்கிற தாக்குதல்களை அவதானித்த சிற்றூளியர்கள் தங்கள் மேலதிகாரிகளான தமிழர்களுக்கு அடி உதை என்ற ரீதியில் உள்ளேயும் ஆரம்பித்தார்கள்.

எனக்கு கவிதாவின் நினைவுதான் முதலில் வந்தது. கவிதா தனிமையில் இருக்கிறாளே! உடனே போய்விடவேண்டும். எப்படிப் போவது? புறக்கோட்டையிலிருந்து வெள்ளவத்தைக்குப் போக எவ்வளவு நேரமாகும்?

இறங்கி வீதிக்கு ஓடிவந்தால்… நிலைமையின் உக்கிரம் தெரிகிறது. பஸ்கள் வாகனங்களில் போகிறவர்களையெல்லாம் ‘தெமளுகள்” இருக்கிறார்களா என செக் பண்ணி இழுத்துப்போட்டு வெட்டுகிறார்களாம்… எரிக்கிறார்களாம்.

ஒன்றுக்கும் யோசிக்காமல் நடக்கத்தொடங்கினேன். மனதில் ஒரு அசாத்திய துணிவை ஏற்படுத்திக் கொண்டு விறு விறு என நடந்தேன். பொக்கட்டிலிருந்த ஐடென்ரிக் கார்ட்டைத் தூக்கி வீசிவிட்டு கையில் பைஃலுடன் – அதில் சிங்களத்தில் எழுதப்பட்ட சில தாள்கள் இருந்தன – அலுவலகத்திலிருந்து வெளியேறியபோது ஒரு தற்பாதுகாப்புக்காக இந்த யுக்தியைக் கையாண்டிருந்தேன்.

பாதையெல்லாம் கோரம். கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்படுகின்றன. லொறிகளிலும் பஸ்களிலும் பொருட்களை அள்ளிக் குவித்துக்கொண்டு போகிறார்கள். ‘ஜயவேவா!” கண்முன்னே வெட்டி வீழ்த்துகிறார்கள். எனக்கு மரணபயம் ஒருபக்கம்… கவிதா பற்றிய பயம் அதற்கு மேலாக. சோமதாசவுக்கு ஏற்கனவே கவிதாமேல் ஒருவித கோபம் இருக்கக்கூடும். என்ன நடந்திருக்குமோ எனக் கலங்கியவாறே நடந்து… நடந்து… எப்படியோ வீடு வந்து சேர்ந்துவிட்டேன். இருட்டியிருந்தது. வியர்த்து விறு விறுத்தது.

வாசலில் சோமையா!

அவரைக் கண்டதும் என்னையறியாமலேயே கட்டிப்பிடித்தேன். உடைந்து உடைந்து அழுகை வந்தது. பயம், அதிர்ச்சி, அயர்ச்சி, களைப்பு கவிதாவிற்கு என்ன நடந்ததோ என்ற குழப்பம். ‘சோமையா…சோமையா…!”அவரை ஒரு சொந்த அண்ணாவைப்போல உணர்ந்தேன்.

‘பயவென்ட எப்பா!… (பயப்பட வேண்டாம்)…பயவென்ட எப்பா..” எனச் சொல்லி என் முதுகில் தட்டினார். ‘மம இன்னவா…பயவென்ட எப்பா…!” அப்போதுதான் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்…

‘கவிதா?”

‘உள்ளே வா சொல்கிறேன்…!”

அவரைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றேன். நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்று சொன்னார். கவிதாவை தனது அறையில் கட்டிலின் கீழே படுக்க வைத்திருக்கிறாராம். என்னையும் அவ்வாறே செய்யச் சொன்னார். தான் இருக்கும்வரை பயப்பட வேண்டாமெனத் தெம்பூட்ட முயன்றார்.

அன்றிரவே வீட்டுக்கு வெளியே ஆரவாரம் கேட்டது. வீட்டுக்குள் இருக்கும் தெமளுக்களை வெளியே விடு என்ற கோஷம் எங்களது காதுகளையும் கிழித்தது.

‘அவங்களெல்லாம் ஓடிட்டாங்கள்… போட்டாங்கடா…!”என சோமையாவின் அதட்டல் சத்தமும் கேட்டது.

‘வீட்டுக்குள்ளே எங்களை விடு!…நாங்கள் பார்க்கிறோம்..!”

‘ஒரு நாய் உள்ளுக்குள் வர முடியாது!”

சோமையா குடிக்கிறவரானாலும் அப்போது முப்பத்தைந்து வயது இளைஞன்… வாட்ட சாட்டமாக இருப்பார். அவரது அட்டகாசத்தால் அந்தப் பகுதியில் சண்டியன் என்றும் பெயர் எடுத்திருந்தவர்… அவருக்கும் சில கையாட்கள் இருந்தார்கள் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

மூன்று நாட்கள் வீட்டின் முன்னே குழுமியிருக்கும் காடையர்கள் போகாமல் ஆள் மாறி ஆள் மாறி நிற்கிறார்களாம். தனது ஆட்களும் நிற்கிறார்களாம்.. பயப்பட வேண்டாம் என சோமையா அவ்வப்போது தகவல் தந்துகொண்டிருந்தார். எங்களுக்கு உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து கொண்டிருந்தது.

சோமையா ஒரு திட்டத்தைச் சொன்னார். வீட்டின் பின் பகுதியில் அவரது தம்பியாரின் தோட்டத்திலிருந்து கொண்டுவந்து போடப்பட்ட தேங்காய்கள் இருந்தன. அவற்றையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி லொறியில் எடுத்துப் போவாராம். மூட்டையோடு மூட்டையாக நாங்களும்…!

அடுத்த நாள் காலை எல்ப் லொறி உறுமிக்கொண்டு உள்ளே வந்தது. அவர்கள் கண்முன்னே மூட்டைகள் ஏற்றப்பட்டன. லொறியை ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஓட்டிச்சென்று இறக்கப் பட்டோம். சோமையா ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த உடுதுணிகளை (சிங்களபாணி) எங்களிடம் தந்தார். நிறையச் சாப்பாடு போட்டார். பிறகு அதே லொறியில் ஏற்றி வந்து அகதி முகாமில் சேர்த்து விட்டார்.

அங்கிருந்து கப்பலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததெல்லாம் வேறு கதை.

அந்த நேரத்தில் ஒருவித அதிர்ச்சி மனநிலையில் அவருக்கு நன்றிகூடச் சொல்லாமல் வந்து விட்டோமே என நானும் கவிதாவும் அவ்வப்போது நினைவுகூர்ந்து கவலைப்படுவதுண்டு. சில வருடங்களின் பின்னர் அவரைத் தேடி அந்த வீட்டுக்குப் போயிருக்கிறேன். வீடு யாருக்கோ விற்கப்பட் டிருந்தது. அங்கிருந்தவர்களுக்கு சோமையா யார் எங்கிருக்கிறார் என்ற விபரங்கள்கூடத் தெரியவில்லை.

0

இந்தப் பழைய கதையை உங்களுக்குச் சொல்ல சற்று நேரம் பிடித்திருக்கலாம். ஆனால், பட்டரியைக் கொண்டு வந்ததற்கான காரணத்தைச் சொன்னவுடன் அவர் ஒரு புன்முறுவலுடன் சொன்னார்.

‘கொண்டு போங்க…!”

மேசையில் போடப்பட்டிருந்த பட்டரிகளையும் டோர்ச்சையும் எடுத்து என் கையில் தந்தார்.

‘அவரைக் கொண்டுபோக விடுங்க!” – என்னைக் கூட்டிவந்த சிப்பாய்க்குப் பணித்தார்.

சிப்பாய்க்கு கோபம். அவரது முன்னிலையிலேயே என்னை ஏசினார். ‘இனிமேல் இப்படிக் கொண்டுவந்தால் பிடித்து உள்ளேதான் போடுவோம்!”

அவர் திரும்பவும் அதட்டினார். ‘அவரைத் தொந்தரவு பண்ணவேண்டாம். கொண்டு போகவிடு!… உங்கள் குழந்தை நலமாகப் பிறக்க எனது வாழ்த்துக்கள்!.”

‘தாங்ஸ்” என்றேன். நான் நன்றி சொன்னது இந்தக் காரணத்துக்காக மட்டுமல்ல என்பது அவருக்குப் புரிந்திருக்கவேண்டும் எனப் பிரார்த்தித்துக்கொண்டே எனது பைகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றேன்.

வந்த சிப்பாய் மற்றவனிடம் சொல்வது கேட்டது. ‘இவங்களையெல்லாம் சுட வேண்டும்!” அது கேட்காதவன்மாதிரி அவசரமாக பொருட்களைப் பைகளுள் திணித்தேன். அவற்றைச் சுமந்துகொண்டு நடக்கத் தொடங்கினேன்.

அவர் சோமையா என்பதை நான் கண்டுகொண்டதுபோல என்னையும் இவர் மட்டுக் கட்டியிருக்க மாட்டாரா? தெரிந்துகொண்டு மற்றவர்கள் முன்னிலையில் இந்த இடத்தில் அதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லையோ! காட்டிக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை… கடவுளே, அவர் என்னை இன்னார் என்று கண்டுகொண்டிருந்தாலே போதும்.

சோமையா தனது காதலியைக் கண்டுபிடித்திருப்பாரா? வாழ்க்கையில் செற்றில் ஆகியிருப்பாரா என்றெல்லாம் எண்ணியவாறு நடந்துகொண்டிருந்தேன். என் மனைவியையும் பிள்ளையையும் காண்பதற்கு முதலில் கிடைத்த பெரிய ஆசீர்வாதம் போல அவரது வாழ்த்துக்கள் நெஞ்சை நிறைத் திருந்தது.

– மல்லிகை 1999 – காற்றோடு போதல் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு 2002, எம்.டி குணசேன அன் கம்பனி, கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *