கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 13,317 
 
 

அந்த விரைவுப் பேருந்து கோயமுத்தூரிலிருந்து கிளம்பிக் காங்கயத்தில் டிபனுக்கு நின்று மீண்டும் கிளம்பியபோது எனக்கு முந்திய ஆசனத்திலிருந்த நபர் எழுந்து, சன்னல் வழியே பார்வை எட்டுமட்டும் கழுத்தை வளைத்து யாரையோ தேடினார்.

“இந்தாப்பா கண்டக்டர், கொஞ்சம் வெயிட் பண்ணு! எனக்குப் பக்கத்து சீட்காரர் இன்னும் வரலை. அவர் திருச்சி வரைக்கும் போகிறவர்…” என்று சத்தமாகக் குரல் கொடுத்தார்.

ஓட்டுநர் ஆரனை ஒலித்தபடி பேருந்தை மெல்ல நகர்த்தி, நிலையத்தினின்றும் வெளியில் கொண்டுவந்து நிறுத்தி, நடத்துனரின் முகத்தைப் பார்த்தார்.

“ரைட்.. போகலாம்!” என்று கூறிவிட்டு, தம் ஆசனத்துக்கு அருகிலிருந்த சிறு தகரப் பெட்டியிலிருந்து டிக்கெட் புத்தகத்தை எடுத்தார் நடத்துனர்.

“என்னாய்யா கண்டக்டர், நான் சொல்லிக்கிட்டே யிருக்கேன். நீ பாட்டுக்கு ரைட் கொடுத்துப் போகச் சொல்றியே? திருச்சிக்கு டிக்கெட் எடுத்த மனுசன் பஸ் ஏறலியே, பாவம்! என்ன அவசர வேலையாக் கிளம்பினாரோ?”

நடத்துனர் தம் மணிக்கட்டிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.

“இன்னும் ஒரு மணிக்கு அப்புறம் ஒரு எக்ஸ்பிரஸ் வருது. அதில் அவர் சாவகாசமா ஏறி வரட்டும்” என்று நிதானமாகக் கூறிய நடத்துனர், ஓடுகிற பஸ்ஸினுள் புதிய பிரயாணிகளை நெருங்கி டிக்கெட்டுகளைத் துளையிட்டுக் கொடுப்பதிலும், பணத்தைப் பெற்றுக்கொண்டு மீதியைத் தருவதிலும் ஈடுபட ஆரம்பித்தார்.

“என்ன அழுத்தம் பாருங்க, கொஞ்சம் பஸ் லேட்டாப் போனாத்தான் என்ன, குடியா முழுகிடும்? டிக்கெட் வாங்கின மனுஷன் மாறிப் போய் கோயமுத்தூர் போகிற பஸ்சில் ஏறி
உட்கார்ந்துட்டாரோ என்னவோ? ஒரு நிமிஷம் நின்னு பார்த்துட்டுப் போறதுக்கு என்ன கேடு?” என்று புலம்ப ஆரம்பித்தார், என் முன் இருக்கையில் அமர்ந்திருத்த பருத்த மனிதர்.

பேருந்துக்குள் நடத்துனருக்கு ஆதரவாகவும், என் முன்னே அமர்ந்திருந்த பிரயாணிக்கு ஆதரவாகவும் வார்த்தை ஓட்டுகள் சிதறின.

சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்துக்குப் பின் பஸ்சின் வேகம் குறைவது தெரிந்தது. கரூர் பேருந்து நிலையத்தினுள் பஸ் நுழைந்தது.

“கரூர் டிக்கெட் மாத்திரம் இறங்குங்க. மத்த பாசஞ்சர்கள் யாரும் எழுந்திருக்காதீங்க. பஸ் இங்கே நிக்காது…” நடத்துனர் குரல் கொடுத்தார்.

கதவைத் திறந்து பிரயாணிகளை இறக்கிவிட்டு, சில புதுப் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு கதவைச் சாத்தினார். “ரைட்” என்று குரல் கொடுக்க, ஓட்டுநர் பஸ்சை விரைவாகச் செலுத்த
ஆரம்பித்தார்.

புதிதாக ஏறிய ஐந்து பிரயாணிகளில் இருவர் பெண்கள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கழுத்திலும், கைகள், காதுகளில் அணிந்திருந்த நகைகள், உடுத்திருந்த
புடவைகள் பறைசாற்றின. இருந்தும் அவசரம் அவசரமாகப் புறப்பட்டு வந்த அலங்கோலம் முகத்திலும் கலைந்திருந்த தலையிலும் புலப்பட்டது. கண்கள் சிவந்திருந்தன. அவர்கள் அழுகிறார்களா?

அந்த ஆண்களும் கூட தங்கள் மேல்துண்டைப் பந்தாக உருட்டித் தங்கள் வாயில் திணித்துக்கொண்டு விம்மிக் கொண்டிருந்ததையும் கவனித்தேன். பஸ்சில் இருந்த மற்றவர்களுக்கும் சுவாரஸ்யம் பிறந்திருக்க வேண்டும். “ஏன், என்ன ஆச்சு? என்ன ஆச்சு?” கேள்விகள், அனுதாபக் குரல்கள்… விஷயத்தை அறிந்துகொள்ளும் ஆவல் நிரம்பிய பார்வைகள்..

ஓர் அம்மாள் உடைந்து குரல் எடுத்து அழுதாள்.

“பாவி மகன் காளி கோயில் திருவிழாவுக்குப் போய்த்தான் ஆவேன்னு ஒத்தக் காலில் நின்னானே! தாய்மாமன் எழுதின கடுதாசியைப் பார்த்துட்டுப் புள்ள துடிக்குதேன்னு அனுப்பித்
தொலைச்சேம்மா. இந்த வைகாசிக்கு இருவது வயசு முடியுது. ஊர்ல ஆதிமூலம்னா நல்ல செல்வாக்கு. பெரசிடெண்டு, சேர்மன், எம்.எல்.ஏ. எல்லாரிட்டயும் நெருக்கமா பழக்கம். மாமன்
காரனோட தோப்புக்குப் போன எம்புள்ளதான் கெடச்சுதா? அந்த `நல்ல’ சனியனுக்கு? போட்டுடுச்சு.. எம்புள்ளை போயிட்டானே!” அந்தத் தாயின் அழுகை பஸ் பிரயாணிகள் அனைவர் நெஞ்சையும் உருக வைத்தது.

“பாக்கியம், வேணாம். ஊருக்குப் போயி அழுதுக்கலாம். கொஞ்சம் நிதானப்படு..உம்!” என்றார் ஒருவர், அடங்கிய – அழுத்தமான குரலில்.

நடத்துனரிடம் பணத்தை நீட்டியவர், “குளித்தலைக்கு டிக்கெட் வாங்கினோமுங்க கண்டக்டர், ஆனா குளித்தலைக்கு ஒரு நாலு கிலோ மீட்டர் முன்னால் எங்க ஊர் மாம்பட்டிக்கிட்டே இறக்கி உட்டுடுங்க!” என்று சொன்னார்.

டிக்கெட்டுகளைத் துளையிட்டு நீட்டிய நடத்துனர், “குளித்தலையில்தான் பஸ் நிக்கும்!” என்று கூறிவிட்டுத் திரும்பினார்.

“கண்டக்டர் ஐயா, நீங்க மனசு வைச்சா முடியும். நாங்க அவசரமாப் போகணும்தான் இதில் ஏறினோம். செத்துப்போன பையனுக்கு நாங்க ரொம்ப முக்கியப் பட்டவங்க.”

“நீங்க குளித்தலைன்னு சொல்லித்தானே பஸ் ஏறினீங்க? முதலிலேயே சொல்லியிருந்தா ஏற்றியிருக்கவே மாட்டேனே, மன்னிச்சுக்குங்க. குளித்தலைக்கு முன்னால் பஸ் எங்கேயும்
நிற்காது!” என்று அழுத்தம் திருத்தமாக வார்த்தைகள் வெளிப்பட்டன நடத்துனரிடமிருந்து.

பஸ்சில் மறுபடியும் வாதப் பிரதிவாதங்கள் எழத் தொடங்கின.

“இந்தக் கண்டக்டர் ரொம்பத் திமிர் பிடிச்சவன் போலிருக்கே. ஈவு இரக்கம் இருக்கா பாரேன்? பஸ் போகிற வழிதானே, அங்கே ஒரு நிமிஷம் நிறுத்தினா இவனுக்கு என்ன கொள்ளை போகுது?”

“காங்கயத்துல ஒரு ஆளைப் பஸ் ஸ்டாண்டில் அம்போன்னு விட்டுட்டு வந்ததைப் பார்க்கலை?”

“போக்குவரத்துக் கழக எம்.டி.க்கு ஒரு புகார் எழுதணும். இவனைச் சும்மா விடக்கூடாது!”

எதற்கும் அசையாத இடித்த புளியாக நடத்துனர் தன் இருக்கையில் அமர்ந்து, முன்னால் விரைந்து வந்து பஸ்ஸின் கோரப் பசிக்குக் கபளீகரமாகிற் சாலையை வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

உள்ளபடியே மிகவும் உருக்கமாக இருந்தது, சாவுக்குச் செல்லும் அந்தப் பிரயாணிகளின் நிலை. விரைவுப் பேருந்து என்றால் வழியில் நிறுத்தக் கூடாது என்று சட்டமா?

எனக்குக் கோபம் வந்தது. வந்து என்ன செய்ய? மனிதர்கள்…சட்டங்கள்..!

கொஞ்ச நேரம் சன்னல் வழியே தெரியும் இரு கரையைத் தொட்டு, பஸ்சின் கூடவே ஓடிவரும் சிற்றோடை, ஆங்காங்கே செழித்துத் தெரிந்த வாழைத் தோட்டங்கள், நெல் வயல்கள்,
மாந்தோப்புகள், கரும்புப் பயிர்களை ரசித்தவன், அலுப்பில், பஸ்சின் தாலாட்டலில் கண்களை மூடினேன். முந்தின நாள் கோவையில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு அது
தொடர்பாக நள்ளிரவு வரையில் கண் விழித்திருந்த அயர்ச்சி…

குளித்தலை பேருந்து நிலையத்தில் பஸ் நின்றது. பத்து நிமிடங்கள் நிற்கும் என்று நடத்துனர் அறிவிப்பு செய்தார். சாவுக்கென வந்தவர்கள் வேகமாக இறங்கி எதிரில் நின்ற ஒரு
டாக்ஸியில் ஏறி உட்கார்ந்ததைப் பார்த்தேன். ஓட்டலில் காப்பி பருகச் சென்றவர்கள், வெகுநேரம் கால்களை ஒரே மாதிரி மடக்கி அமர்ந்த வலி மறக்கச் சிறிது காலாற இறங்கியவர்கள், சிகரெட்டை மறந்திருந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ள பெட்டிக்கடை தேடிப் போனவர்கள்… பஸ்ஸில் முக்கால் பகுதி காலியாகி விட்டது. நான் எழவில்லை. அரைத் தூக்கத்திலேயே இருந்தேன்.

மீண்டும் ஆரன் ஒலித்து, எல்லோரும் அவசரமாக ஏறி, கண்டக்டர் கதவை அடித்துச் சாத்தியபின் பஸ் நகர்ந்து திருச்சிப் பாதையில் போக ஆரம்பித்த வரை ஞாபகம் இருந்தது. அப்புறம்
சுகமான தூக்கம்… மெய் மறந்த நிலையில் கற்பனை மயக்கம்…

திடுமென நான் அதல பாதாளத்தில் கீழே கீழே கால் தரை பாவாமல் மிதந்து இறங்குவதான உணர்வு. இப்போது நான் எங்கே இருக்கிறேன்? வீட்டிலா? கோவை மாநாட்டிலா?

விழிப்பு வந்தபோது பஸ் ஓடாமல் நிற்பது தெரிந்தது. அட, திருச்சி வந்து விட்டதா, என்ன?

இல்லை, இது திருச்சி இல்லை. ஒரு கடை முகப்பு விளம்பரத்தில் குளித்தலை என்று போட்டிருந்தது கண்ணில் பட்டது. பஸ் இன்னும் குளித்தலையைத் தாண்டவேயில்லையா? ஏன், என்ன ஆயிற்று?

பஸ்சினுள் மிகச் சிலரே அமர்ந்திருந்தனர். பெரும்பாலானோர் கீழிறங்கி ஆங்காங்கு நிற்பது தெரிந்தது. ஓட்டுநரும் நடத்துனரும் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த காட்சி…

நான் பரபரப்புடன் இறங்கினேன். பஸ் ஏதும் பழுதடைந்து விட்டதா? “ஏன் ஸார், என்ன ஆச்சு? பஸ் ஏன் நின்னுடுச்சு?”

கீழே நின்றவர்களில் ஒருவர் என் கேள்விக்குப் பதில் சொன்னார்:

“கோயமுத்தூரில் கைக் குழந்தையோட ஒரு ஐயர் வூட்டுஅம்மா ஏறிச்சு பாருங்க… அவுங்க கைக் கொழந்தைக்குத் திடீர்னு ஃபிட்ஸ் வந்துடுச்சு. கணை இழுப்பு மாதிரி வெட்டி வெட்டி
இழுக்க ஆரம்பிச்சுடுச்சு. பஸ் ஸ்டாண்டுல பஸ் புறப்படற வரைக்கும் நல்லாத்தான் குழந்தை சிரிச்சுகிட்டிருந்தான். அப்புறம் தான் ஸார், பாவம்! ஒண்ணரை வயசுக் குழந்தை ஐயரூட்டு அம்மா அழுது துடிக்கிறதைப் பார்க்கச் சகிக்கலை. கண்டக்டரும் டிரைவரும் நல்ல மனுஷங்க. நேரே கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டாந்து வண்டியை நிறுத்திட்டாங்க. டாக்டர் குழந்தைக்கு ரெண்டு ஊசி போட்டப்புறம் இப்பத்தான் குழந்தையோட வலிப்பு நின்னிருக்கு. ஒரு நிமிஷம் கூட வீணாகாம பஸ்ஸை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரலைன்னா குழந்தை பஸ்ஸிலேயே பரலோகம் போயிருக்கும்…”

பஸ்சில் எனக்கு முன் இருக்கையில் இருந்த பிரயாணி அருகே வந்து கூறினார்:

“கண்டக்டரைப் பத்தி நான் கூட காங்கயத்துல கொஞ்சம் வருத்தப்பட்டுக் கிட்டேனுங்க. ஆனா இப்பத்தான் அவரோட தங்கமான குணம் தெரியுது. கரூரில் கூட சாவுக்கு ஏறின சிலவங்க
கேட்டபடி குளித்தலைக்கு முன்னால் ஸ்டாப்பிங் இல்லாத எடத்துல பஸ்ஸை நிறுத்தலியேன்னு எல்லோரும் கோபிச்சுக் கிட்டாங்க. செத்துப் போன ஒருத்தருக்காகச் சட்டத்தை மீறுவதை
விட, ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்காகச் சட்டத்தை மீறலாம்…அதுக்காக என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கத் தயார்னு” கண்டக்டர் சொல்றார் ஸார்.

“கரூரில் பஸ் ஏறும்போது உண்மையான விவரத்தைச் சொல்லியிருந்தால் ஒருவேளை பஸ்ஸை அவங்க கேட்ட இடத்தில் நிறுத்தியிருப்பேனோ என்னவோ, குளித்தலைன்னு பொய்
சொல்லி ஏறிட்டு, பின்னால் விஷயத்தைச் சொல்லி வேறு ஊர்ல இறங்கணும்னு கேட்டதை நான் ஒத்துக்க முடியலை என்று கண்டக்டர் சொல்றதிலேயும் நியாயம் இருக்கு ஸார்…”

அரை மணி கழித்து அபாயக் கட்டம் தாண்டிய நிலையில் குழந்தையுடன் தாயும் வந்து பஸ்சில் ஏறியதும் பஸ் புறப்பட்டது.

“அப்பா கண்டக்டர், நீ மகராஜனா இருக்கணும். தெய்வம் கோயில்ல இருக்குன்னு சொல்லுவா. இல்லேப்பா, நீதான் எங்க குலதெய்வம்!” என்று கண்களில் நீர் வழிய அந்தக் குழந்தையின்
தாய் கை கூப்பி வணங்கியபோது, எனக்கு உடம்பு சிலிர்த்தது. பஸ்ஸில் அப்போது கிட்டத்தட்ட எல்லோருடைய நிலையும் அதுதான் என்று எனக்குத் தோன்றியது.

( கல்கி வார இதழில் வெளிவந்து, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு பிரசுரமான கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *