கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 13,813 
 
 

‘வாங்க, வாங்க, உள்ளுக்க‌ வந்துருங்க…யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக… பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்… வாறவுகளுக்கு வளி வேணுல்லா… ‘ கண்டக்டர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சில திடீர் சமயங்களில், வெறும் நாலு இட்லி சாப்பிட்டதற்கே வயிறு நிரம்பி எருக்களிப்பது போல், விசேஷ நாள், விடுமுறை நாள் இல்லாத இன்று கூட ஏகக் கூட்டம் பஸ்ஸில். பிதுங்கி வழிந்தது.

தாமரை, மல்லிகாவின் மடியிலிருந்து கொண்டு என்னைப் பார்த்து சிரித்தாள். வாயில் எச்சில் ஒழுக, என்னைப் பார்த்து, ‘ங்கா….’ என்றாள். ‘ப்ப்…’ என்று ஏதோ சொல்ல முயற்சித்து அது ‘ப்ரு’ வாகியது.

ஏதோ சொல்ல வாயெடுத்த மல்லிகா, என் முகம் பார்த்து ‘கப்சிப்’ ஆனாள். ரயிலில் ரிசர்வேஷன் கிடைத்த பிறகு போகலாம் என்ற என்னை வற்புறுத்தி, கிடைத்த பஸ்ஸில் கிளம்பியே ஆக வேண்டும் என்று கிளம்ப வைத்தவள் அவள். ஜன்னலோர ஸீட்டில் அவளும் தாமரையும். நடுவில் நான். எனக்கடுத்தாற்போல் ஒரு சின்ன வயசுப் பையன். கிட்டத்தட்ட நெருக்கிக் கொண்டு அமரும் நிலை. கசகசவென்றிருந்தது. கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு மூச்சு வாங்கிய போது, நெருக்கடி பஸ்ஸில் மட்டும் அல்ல, மனதிலும் என்று புரிந்தேன்.

என்னைப் பற்றிய செய்திச் சுருக்கம் முதலில். ஒரு விபத்தில் அப்பா, அம்மா இருவரும் மரணிக்க, காலன் கைக்குத் தப்பிய கைக்குழந்தையாய் இருந்த என்னை, என் அம்மாவின் தங்கையும் அவர் கணவரும், எனக்கும் என் சொத்துக்களுக்கும்(ஒன்றும் பெரிதில்லை. கொஞ்சம் ரொக்கம், என் அம்மாவின் ஏராள நகைகள், ஒரு வீடு மட்டும்) ஊரார் நியமித்த காப்பாளர்களாக இருந்து வளர்த்தெடுத்தனர். குழந்தையில்லாதிருந்த அந்த இருவரும், என் வீட்டுக்கே தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டனர். என் அம்மாவின் நகைகளை போட்டுக் கொண்டு, என் சித்தப்பாவின் தங்கை புகுந்த வீடு போனார். பெட்டியிலிருந்த ரொக்கம் ‘காக்கா ஓஷ்’ ஆகியதாகக் கேள்வி.

நான் கிட்டத்தட்ட பத்து வயதாகியிருந்த போது என் சித்தி, காலம் தப்பிப் பெய்தாலும் கழனி விளைவிக்கும் மழை போல் உண்டானாள். முதலில் சுதாவும் அப்புறம் இரு வருடங்களில் ஹேமாவும்.

இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாக இருந்த நான் ஒரிஜினல் சர்க்கரை வந்ததும், ஹாஸ்டலுக்கு மாற்றப்பட்டேன்.

முதலில் கிட்டத்தட்ட வாழ்க்கையே வெறுப்பு மயமாகத் தான் இருந்தது. நண்பர்கள் என்னும் நல்லுறவுகள், என் வெறுமையை இட்டு நிரப்பி, எனக்கு எல்லாமுமாகினர். படிப்பு என்னை முழுமையாக ஆக்ரமித்தது. கவனம் முழுதும் அதில் குவிய, பாராட்டுகள் தேடி வந்தன. பள்ளி, கல்லூரி இரண்டிலும் ‘ஸ்டார்’ ஆனேன்.

கல்லூரியில் சந்தித்தவள் தான் மல்லிகா. பரஸ்பர அறிமுகம், நட்பு என்றெல்லாம் கதை விட எண்ணமில்லை. பளீரென பளிச்சிடும் அழகும் நிறமும் தான் என்னை முதலில் ஈர்த்தன‌. ‘என்னா அழகுடா, யாருக்கு அதிர்ஷ்டமோ’ என்கிற மாதிரியான புகழுரைகள் காதில் பட்டுப்பட்டு, அவள் பார்வையில் படுவதே கதிமோட்சம் போல் ஆகி, கிட்டத்தட்ட ஆண்கள் எல்லோரும் பித்துப் பிடித்துக் கிடந்தது தெரியும்.

அதனாலேயே அவள் என்னைப் பார்க்க ஆரம்பித்து, பேச ஆரம்பித்த போது, இரண்டடி உயரமாய் உணர்ந்தேன். தன் காதல் சொன்னதும் கனவில் மிதந்தேன்.

‘ஆளும் தோரணையும் நிச்சயமா பெரிய எடத்துப் பொண்ணு மாதிரி தான் தெரியுது மாப்ள… படக்குனு புடிச்சு செட்டிலாயிரு. ஒங்கப்பா காச ஒன் விதி எடுத்துக்கிட்டாலும், எப்படி திருப்புது பாத்தியா…’ என்று ஏகத்துக்கும் நண்பன் ஏத்திவிட, ‘பொன்மகள் வந்தாள்’ பாடலை விஜய் ரேஞ்சில் ரீமிக்ஸில் பாடித் திரிந்தேன். மல்லிகாவை ஜொள்ளு விட்டவர்களெல்லாம், கண்களால் எனை எரிக்க, கழுத்து நிமிர்த்திய வெடைக்கோழியாய் அலைந்தேன்.

ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது, நான் மெல்ல,’ ஒங்கப்பா பிஸினஸா பண்றாரு?’ என ஆரம்பித்த போது தான் அவளும் என்னைப் போல அதாவது பெற்றோர் அற்றவள் எனத் தெரிந்தது. எனக்கிருந்த அளவுக்கு சொத்து மட்டுமல்ல, இனிஷியல் கூட இல்லாதவள் எனத் தெரிந்தது. ஒரு ஆஸ்ரமம் அவளை வளர்த்தெடுத்து, அவள் நன்றாகப் படித்ததால், ஒரு பெரிய மனிதர் உதவியுடன் கல்லூரியில் சேர்த்திருந்தது.

‘ஆஸ்ரமத்தை நடத்திட்டுருக்குற ஐயாவும் அம்மாவும் தான் எங்களுக்கு அப்பாவும் அம்மாவும். நானு இத யாருட்டயும் சொல்லல. அப்பாம்மா ஊருல இருக்காங்களான்னு கேட்டா ஆமான்னுருவேன். ஊரு பேரக் கேட்டா, ஆசிரமம் இருக்குற ஊரு பேர சொல்லுவேன். இத சொல்லுறது, எம்மேல தேவையில்லாத பரிதாபத்த ஏற்படுத்திருமோன்னு ஒரு பயம்’ என்றாள்.

‘சட்டி சுட்டதடா’ என்று காதருகில் ஒரு குரல் பாடினாலும், அடி மனசில் இருந்த ஏதோ ஒன்று, அது நிச்சயம் காதல் தானா என்று சொல்வதற்கில்லை. ‘நம்மைப் போல் ஒருவள்’ என்ற உந்துதலா, ‘காசில்லைன்னதும் கழட்டி விட்டுட்டான்’ என்ற ஏச்சுக்குப் பயந்தா, பெண்பாவம் பொல்லாது என்று மனதின் ஆழத்தில் ஊறியிருந்த நம்பிக்கை காரணமா ஏதென்று தெரியவில்லை. கைவிட மனமின்றிக் காதலைத் தொடர்ந்தேன்.

ஒரு முறை, லீவுக்கு ஊருக்குப் போயிருந்த போது, சித்தியிடம் என் காதலைச் சொன்னேன்.

‘யாருமில்லாதவளா அந்தப் பொண்ணு?, ஒன் சித்தப்பா ஒனக்கு என்ன மாதுரி பொண்ணு பாத்து வச்சுருக்குறாங்கன்னு தெரியுமா?’

‘அதனால என்ன, நானும் அது மாதுரிதான’ என்றவன் அத்தோடு நிறுத்தியிருக்கலாம். வாய்க்கொழுப்பு, கிரகக் கோளாறு எல்லாமாகச் சேர்ந்து, ‘ஏன், எங்கப்பாம்மா காசு, நக எல்லாம் போதாதா?, எனக்கு வார வரதட்சணை வேற வேணுமாக்கும்’ என்று விட்டேன்.

சித்தி வெறித்துப் பார்த்தாள். கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்து விட்டுப் பிறகு, ‘ஒன் இஷ்டம், ஆனா அதுக்கப்புறம் இந்தப் பக்கம் வந்துராத’ என்றாள்.

‘வீட்டயும் வாயில போட்டுக்கவா’ என்று கேட்க நினைத்து, ஏனோ கேட்கவில்லை. கல்லூரிப் படிப்பின் கடைசி வருடம் அது. அதன் பின், கேம்பஸில் கிடைத்த வேலையில் சேர்ந்து, நண்பர்கள் சூழ மணம் முடித்து, தாமரை பிறந்து என மளமளவென வருடங்கள் மூன்று ஓடி விட்டன. எங்கள் இருவருக்கும் நல்ல வேலை. ‘டே கேர் சென்டரில்’ தாமரையை சீராட்டியபடி எங்கள் வாழ்க்கை, லோனில் வாங்கிய ஃப்ளாட், பைக் சகிதம் ஓடிக் கொண்டிருந்தது.

மல்லிகா, அடிப்படையில் உறவுகளுக்கு ஏங்குபவள். ‘ஒங்க சித்திக்கு என்னப் புடிக்குமா’ என்று காதல் காலத்தில் கோடி முறை திரும்பத் திரும்ப வினவியவள். ‘வெயிட் பண்ணலாம்பா’ என்று பல முறை சொல்லிப் பார்த்து, என் பிடிவாதத்துக்காக திருமணத்துக்கு ஒத்துக் கொண்டவள். அதன் பிறகு பலமுறை, தாமரை பிறந்த பிறகும் கூட, ‘ஊருக்கு ஒருவாட்டி போயிட்டு வரலாம்பா’ என்று நச்சரித்தேயிருப்பாள்.
அந்தச் சந்தர்ப்பம் விதி வழியே வந்து சேர்ந்தது. திடீர் ஹார்ட் அட்டாகில் சித்தப்பா மரணிக்க, சித்தியும் குழந்தைகளும் தனியாகியிருக்கிறார்கள். சித்தப்பாவுக்கு தனியாரில் வேலை. சித்திக்கு சித்தப்பாவே உலகம். என்ன சம்பளம், என்ன சேமிப்பு என மனைவிக்கு எதையும் சொல்லாத ஆணாதிக்க சித்தப்பா.

அவர்கள் நிலை கண்டு இரங்கிய என் உள்ளூர் நண்பன், என் கூடப் படித்தவனைத் தொடர்பு கொண்டு, அவனிடம் இருந்து என் முகவரியை வாங்கி, என்று என்னைத் தேடிக் கண்டடையும் ரிலே ரேஸ் முடிந்த நேரத்தில், சித்தப்பா சிவலோகப் பதவி அடைந்து முழுசாய் ஒரு மாதம் ஆகியிருந்தது.

ஏனோ எனக்கு எந்த வித பரிதாப உணர்வும் ஏற்படவில்லை. சித்தி என்ன செய்வாள் என்று தோன்றவில்லை. போனால், நம் தலையில் சுமையாக ஏறிவிட்டால் என்ன செய்வதென்றே தோன்றியது.
‘என்னருந்தாலும் ஒங்கள வளத்தாங்கல்ல. தூக்கியா போட்டாங்க?. நல்லா படிக்க வச்சாங்கல்ல?. ஒங்க நெனப்பு தப்புங்க, போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம். முடிஞ்சா அவங்கள கூப்புட்டுட்டு வந்துரலாம். சித்திக்கு எங்கயாவது சின்னதா வேல வாங்கிக் கொடுக்கலாம். பொம்பளப் புள்ளங்கள வச்சுட்டு என்ன பண்ணுவாங்க பாவம்’ என்றவளை, எப்படி முயன்றாலும் வாயடைக்க முடியவில்லை. கடைசி அஸ்திரமாக, ‘நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு பாத்துக்குங்க’ என்றதும், வாழ்வின் நிலையாமை எனக்கும் சேர்த்துத் தான் என்பது உறுத்த, மீற முடியாமல், மனாசாகா மனசோடு இதோ கிளம்பியிருக்கிறேன். சும்மா பார்த்து விட்டு வந்து விடலாம். அப்புறம் தொடர்பு கொள்வதாகச் சொல்லி விட்டு, உடனே கிளம்பி விட வேண்டும் என்பது என் திட்டம்.

‘ஏம்ப்பு.. செத்தவடம் நகந்துக்கிருவீக….., கொஞ்சோணு, நானு ஒண்டிக்கிருவேன்..’ கணீரென்ற குரல் கேட்டு, கலைந்து நிமிர்ந்தேன். 45, 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கையில் பெரிய கூடையோடு நின்றாள். என் பக்கத்திலிருந்த பையன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் ஒண்டிக் கொள்ள வேண்டுமானால், இடத்தையே கொடுத்தாக வேண்டும். கையில் சுமை வேறு. செய்வதறியாமல் எழுந்து நின்றான்.

”மன்னிச்சுக்க தம்பி, கூடய வச்சுக்கிட்டு நிக்க முடியல. தப்பா நெனக்காதீக, மகராசனா இருங்க..’ என்று பையனை வாழ்த்திவிட்டு, ‘ஆத்தி… நீயி செத்த இங்கிட்டு வந்துருப்பா, தம்பி அங்கிட்டு போயிக்கட்டும்…’ என மல்லிகாவிற்கு உத்தரவிட்டாள். மல்லிகா, சட்டென தாமரையை என் மடியிலிருத்தி எழுந்து விட, வேறு வழியில்லாமல், நான் ஜன்னலோரம் நகர்ந்தேன். சற்று இறுக்கம் குறைந்தவனாக உணர்ந்தேனாயினும் அந்தப் பெண்ணின் தோரணை என்னை எரிச்சல்படுத்தியது. நன்றாக உட்கார்ந்து கொண்டு, வெற்றிலை காவியேறிய பற்களால் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

‘பக்கத்தூருல திருளா, சோலி இருக்குன்னு சொன்னாக… வந்தேங்…. தேர்க்கூட்டம் திருநாக்கூட்டமுன்னா சும்மாவா… கெளம்புறதண்டிக்குங் கூட்டந்தே.. ஒரு பஸ்ஸூ கெடைக்கல. எங்கூருக்கு ரண்டு பஸ்ஸூ மாறணுமுண்டாக. அங்கிட்டுருந்து இங்கிட்டு வந்து இந்த பஸ்ஸ புடிச்சே… இன்னுமேட்டு தொக்கூருல ஒருவாட்டி மாறணு.. நீங்க எங்கிட்டு போறீக?….’.

நீளமாகப் பேசி நிறுத்தியவளை பார்க்கக் கடுப்பாயிருந்தது. என்ன இது, கொஞ்சங்கூட இங்கிதமில்லாமல்’ என்று தொடர்ந்த சிந்தனையை நிறுத்தியது மல்லிகாவின் பதில். ‘நாங்களுந் தொக்கூருதான் இறங்கணும்’.

‘அப்புடியா, நல்லதாயிருச்சு, நானு கொங்கணியாபுரம் போணும். தொக்கூரு பஸ் ஸ்டாண்டுல நிக்கும் கொங்கணியாபுரம் பஸ்ஸூ’.

‘ஆமாங்க‌….சேந்தே எறங்கிரலாம்’ என்ற மல்லிகாவை பார்வையால் எரித்தேன். கொஞ்சங் கூட முன்யோசனையில்லாமல், பார்ப்பவர்களிடமெல்லாம் சொந்தம் கொண்டாடும் அவளைப் பார்க்கப் பற்றிக் கொண்டு வந்தது.

‘ஒங்க புள்ளையா… என்னா பேரு’

‘தாமரை’

‘நல்ல பேருதே… எப்பா கண்டக்டரு தம்பி, இங்கிட்டு தொக்கூருக்கு ஒரு சீட்ட குடுத்துவுடுங்க…’ பணத்தை முன்னிருப்பவர் மூலம் கண்டக்டருக்குக் கடத்தினாள். சீட்டு வாங்கியதும் சொல்லி வைத்தாற்போல் பஸ் கிளம்ப, கூடையை மூடியிருந்த துணியை விலக்கி, கவர்களைப் பிரித்து, பூக்களை எடுக்க வசதியாக கவர்களின் ஓரம் சுருட்டி மடித்தாள். நூல் கண்டு எடுத்து நுனி தேடினாள். மளமளவென்று, ஒவ்வொரு கவரில் இருந்தும் ஒவ்வொரு வகைப் பூவை எடுத்து, சேர்த்துத் தொடுத்தாள். கண் முன்னே விரியும் வண்ணக் காட்சி போல் கதம்பம் உருவானது.

பூவைப் பார்த்து முகம் மலர்ந்தாள் தாமரை. ‘ஹீஇ…’ என முன்னிருந்த இரண்டு பற்களைக் காட்டிச் சிரித்தாள். கைகளைத் தட்டினாள்.

‘ஏம் பாப்பா, பூ தாரே… தலெல‌ வச்சுக்கிறியா…’ முடி வளராத‌ அவள் தலையைப் பார்த்துக் கேட்க, புரிந்தது போல் மீண்டும் சிரித்தது குழந்தை.
‘பூ விக்கவா திருவிழாவுக்கு வந்தீங்க..?’

‘இல்லத்தா… பூப்பல்லாக்கு சோடிக்க கூலிக்கி வந்தே… எங்க ஊரு சின்னது. வெள்ளி செவ்வா, நாளு கெளம வந்தாத்தா கொஞ்சமாச்சு ஏவாரம் நடக்கு…… அக்கம்பக்கத்து ஊருல திருநா, சந்த, வந்தாத்தே நாலு காசு மீறு…. சாமி சோடன செய்யிறவக கூடமாட ஒத்தாசக்கி, பூக்கட்டக் கொள்ள எங்கள மானி(மாதிரி) பூக்கட்டறவுகள‌ கூப்புடுவாக. செஞ்சு குடுத்துட்டு, கூலியோட கூலியா அவுக கிட்டயே கொஞ்சப் பூவ உதிரியா கொறச்சு வெல வச்சு வாங்கிக்கிடுவோம். போற வார ஊரு நடுவுல கெட்டி வித்துப்புடுவோம். இப்ப அப்படித்தே வாங்கியாறே…, கெட்டி முடுச்சது இந்தப் பஸ்ஸூல இல்லாட்டி, தொக்கூரு பஸ் ஸ்டாண்டுல பூ விக்கிறவுக கிட்ட மொத்தமா வித்துப்புடுவே…’

எனக்கு, ‘அத்தனை பூவையும் நானே வாங்கிக் கொள்கிறேன்’ என்று என் மனைவியாகப்பட்ட ‘வள்ளி’(வள்ளலுக்குப் பெண்பால்) சொல்லிவிட்டால் என்ன செய்ய‌ என்று பயம் வந்து விட்டது. அவர்கள் பேச்சில் நானும் கலக்கும் முகமாக,

‘ஒங்க புள்ளங்க வேல பாக்குறாங்களா?’ என்றேன்.

‘இல்லப்பு… ரண்டு பொட்டப்புள்ளெக… ஒண்ணு மூணாப்பு, இன்னொண்ணு ரண்டு படிக்குதுக….’

ஆச்சரியமானேன். முன் உச்சியில் நரை திரண்டிருக்கும் இவளுக்கா சின்னக் குழந்தைகள்?. ஒரு வேளை சித்தி போல், வருடம் கடந்து பிறந்திருக்குமோ!!! சிந்தனை ஓடியது.

மல்லிகா ‘புள்ளகள யாருட்ட விட்டுட்டு வ‌ந்திருக்கீங்க?’ என்றாள்.

‘தங்கச்சிட்ட..’

‘ஒங்க வீட்டுப் பக்கத்துலயே இருக்காங்களா?’

‘இல்லல்ல‌… ஒண்ணாத்தே இருக்குறோ…..’

‘அவங்களும் பூ விக்கிறாங்களா?’

‘இல்ல.. வூட்டுல புள்ளகளப் பாத்துக்குர்றா….’

‘ஓஹோ… அவங்களுக்கு எத்தன பசங்க?’

‘அதாஞ் சொன்னேனே… ரண்டு பொட்டப் புள்ளக…’

திடீரென்று ஒரு இறுக்கம் கவிந்தாற்போல், பேச்சு திசையறியாமல் நடுவழியில் நின்றது. எனக்கு நிச்சயம் அவள் சொன்னதன் கோர்வை புரியவில்லை.

என் நினைப்பு அந்தப் பூக்காரப் பெண்மணிக்குப் புரிந்திருக்கும் போல. அனிச்சைச் செயல் போல் பூக்கட்டிக் கொண்டே, எங்கோ வெறித்த பார்வையுடன் பேசலானாள்.

‘நாந் தங்கச்சின்னது எம் புருசெ ரண்டாவது சம்சாரத்தப்பா. நாங் கல்யாணங் கெட்டுனது எந் தாய்மாமனத்தே. கொடுப்பின உள்ளவுகளுக்குத் தே கொலசாமி வரமா புருசங் கெடக்குன்னு சொல்லுறது அம்புட்டும் நெசந்தே. அவருக்கு ஆசன்னா ஆச அம்புட்டு உசுரு எம்மேல. வாளப்பள ஏவாரம் பாத்தாரு எங்கூட்டுக்காரரு. நானு மாடு வச்சு பாலு கறந்து விப்பே…. கூலிக்கி பூக்கெட்டிக் கொடுப்பே.., நாலு காசு சேர்த்து சின்னதா ஒரு வூடு கூட கட்டுனோ.., வூடுன்னா என்னா.. நாலு சொவரு, ஒரு கூர, நடுவுல தடுத்து ஒரு சமயக்கட்டு, அம்புட்டுதே….. ஆனா சந்தோசமாயிருந்தோ நாங்க‌… ஒரே ஒரு கொற… ஒரு புள்ள இல்ல… கும்புடாத சாமி இல்ல, பண்ணாத வைத்தியமில்ல. ஒருவாட்டி டவுனு ஆசுபத்திரில, டாக்டரம்மா, என்னய படுக்க வச்சு, மொக்க மொக்கயா மிசினு வச்சு போட்டாப்படமெல்லா புடிச்சாக. எனக்குத் தே கொற அப்படின்னுட்டாக கடசியா..’

அவள் முகத்தையே பார்த்தாள் மல்லிகா.

‘அன்னிக்கி நா அளுதேம்பாருத்தா அப்படியொரு அளுக… எங்கூட்டுக்காரரு, அதுனால என்னா இப்ப?, எனக்கு நீ கொளந்த, ஒனக்கு நா கொளந்த அப்படின்னுட்டாரு.. மேக்கொண்டு வைத்தியமெல்லா பாக்கலான்னாக, கொள்ளக் காசு கட்டச்சொன்னாக‌, எங்கூட்டுக்காரரு வேணான்னுட்டாரு.’

‘ஒரு வருசம் போல ஆச்சு… தெருஞ்சவுக வீட்டுல விசேசன்னுட்டு வெளியூரு போனாரு .. போயிட்டு வந்ததுலருந்து எங்கூட்டுக்காரரு ஆளு செரியில்ல. ஒருமானி இருந்தாரு. நாங்கேட்டு கேட்டுப் பாத்தே.. ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்லன்னாரு. ஒரு நாளு, ஒரு ஆளு வீட்டு வாசல்ல வந்துட்டு எங்கூட்டுக்காரரு பேரு சொல்லிக் கேட்டாரு. நானு ஏவாரம் பாக்கப் போயிருக்காருன்னேன். ‘ஏம்மா, பொண்ணக் கெட்டிட்டு கெட்டுன ஊருலய விட்டுட்டு வந்துட்டாரே ஒம்புருசே.. நாங்க அங்க ஊருல எம்புட்டு நாளு பொண்ண வச்சுருக்க?’ ன்னு கேட்டாரு பாக்கணுமே…எனக்கு மயங்கியடிச்சுருச்சு..’

‘வந்தவரு மக்கா(மறு) நாளு வாரேன்னுட்டு போயிட்டாரு. நா இடி விளுந்த மானி ஒக்காந்திருந்தே. ஆனாலு மனசு சொல்லிச்சு அப்படியிருக்காதுன்னு. எங்கூட்டுக்காரரு ஏவாரம் பாத்துட்டு வந்தாரு. நாங் கேட்டே……..ஆமான்னாரு..’

நிறுத்தினாள். எச்சில் கூட்டி விழுங்கினாள். ‘நிக்கிற தரைய தடார்னு புடுங்கி நவத்திப்புட்டா என்னா மானி இருக்குஞ் சொல்லுங்க? . அப்படித்தேயிருந்திச்சு எனக்கு. என்ன செய்யிறதுன்னே புரியல. நெனப்பு தப்பிப்போச்சு. கொஞ்ச நேரமாச்சு வெவரமெல்லா வெளங்க’.
‘அதுக்குள்ள அவுரு கொஞ்சங் கொஞ்சமா எல்லாஞ் சொன்னாரு. பங்காளிப் பய, எங்க கொறைய பெரிசு பண்ணி அவர அசிங்கமாப் பேசீட்டான்னு மனசு வெந்து போயி, சேக்காளிப் பய பேச்சக் கேட்டு, அசலூருல போயி, பொண்ணு கேட்டுருக்காரு. அவுக கஞ்சிக்கே அலமோதுற குடும்பம். ஒத்தங் கெட்டுனா போதுன்னு நெலம. அவுககிட்ட எல்லா வெவரத்தையுஞ் சொல்லி, ‘எம் பொண்டாட்டி ரொம்ப நல்லவ. அவ கூடத்தே இருக்கணு, அவள அனுசரிக்கணுன்னெல்லா சொல்லி, அவுக சம்மதிச்சு, அந்த‌ ஊரு கோயில்ல தாலி கெட்டியிருக்காரு. எங்கிட்ட சொல்லீட்டு வந்து கூட்டிப் போறமுன்னு அவுக கிட்ட சொல்லி, அந்தப் பொண்ண அங்கனகுள்ளாறவே விட்டுப்புட்டு வந்துட்டாரு. எங்கிட்ட சொல்ல ரோசன பண்ணிட்டு இருந்திருக்காரு, ரம்ப நாளு ஆச்சின்னது, அவக ஊரு ஆளு கேட்டு வந்துருக்காரு.’.

‘நாம் போயி கூட்டு வாரே…. ஒரு மாசம் பாரு, சரிப்பட்டுச்சுன்னா சேந்து இருங்க, இல்லாட்டி வேற வீடு பாத்து வச்சுர்றே.. ஒனக்கு ஒரு கொறையும் வர வுட மாட்டேன்னாரு’.

‘எனக்கு எஞ்சொத்தே போன நெலம. என்ன செய்யன்னு தெரியல. பொறந்த வூட்டுக்குப் போயி அசிங்கப்பட முடியாது. வேற எங்க போக முடியு?.. அங்கனக்குள்ள தான இருந்தாகணு!!… எனக்கு மனசு ஆறல. இதுவே அவருக்கிட்ட கொற இருந்தா நா வுட்டுட்டிருப்பனா? என்னன்னாலு அவரு செஞ்சது பச்சத் துரோகம். ஆனா அதுக்கு வந்தவ என்ன பண்ணுவா?. அதும் நல்ல பொண்ணு. ஆனாலு மனசு கேக்காம, புடிப்பில்லாம திரிஞ்சே… எங்கூட்டுக்காரரு மேல இருக்குற கோவத்த நானு அவ மேல காட்டக் கூடாதுன்னு புடி சாதனயா இருந்தே.. எம்பாட்டுல வேல செய்வே… தோணிச்சுன்னா சோத்தப் போட்டுத் தின்னுவே … இப்புடி நாளு ஓடுச்சு.

கொஞ்ச நாளுல வந்தவ உண்டானா. மொதப்புள்ள பொறந்துச்சு. எடுத்துட்டு வந்து எங்கையில தே கொடுத்தாக மொதல்ல. எந் தங்கச்சி, ‘நாம் பெத்தாலும் புள்ளக்கி அம்மா அவுக தே’ண்டு சொல்லீட்டான்னாக. எனக்கு போன உசுரு திரும்ப வந்துருச்சு. மறு வருசமே அடுத்ததும் பொறந்துருச்சு. ரண்டு புள்ளங்களும் என்ன அவுகளோடவே இறுக்கி வச்சுருச்சுக’.

‘ஆனா காலக் கொடும இருக்கு பாராத்தா, ரண்டாவது பொறந்து மூணு மாத்தைக்கெல்லா(மாசத்திற்கெல்லாம்) அவுரு நெஞ்சப் புடிச்சுட்டு சாஞ்சுட்டாரு. பெரிய பெரிய ஆசுபத்திரிக்கெல்லா கொண்டு காட்டுனோ….இருதயத்துல அடப்புண்டாக. கொள்ளக் காசு கேட்டாக ஆபரேசனுக்கு. எனக்கு ஈரக்கொல நடுங்கிருச்சு. தாலி தப்புச்சா போதுண்டு, வூடு மாடு எல்லாத்தயும் வித்தே…, காசு கேக்குறப்பல்லா கொடுக்க சொல்ல நல்லாப் பேசுன டாக்டருக, பணங்கெடக்காம நாங்கொஞ்சம் தவக்கம் காட்டவும் கடுத்துப் பேசுனாக’.

‘இந்தப் பாளாப் போன ஒலகத்துல, நல்ல மருந்து, படிப்பு , மூணு வேளயு நல்ல சோறு இதையெல்லா, எங்கள மாதிரி பாவப்பட்ட சனங்க கனவுலதே பாக்க முடியு. காசிருந்தாத்தே எல்லா பவுசுங்… ஏள உசிரு சல்லி பெறாது. எம்புட்டு கவருமெண்டு வந்தாலு இத மாத்த முடியாது. மாட்டாக. இது எனக்குப் புரியும் போது எங்கூட்டுக்காரரு இந்த ஒலகத்துல இல்ல. சாவுக்கு வந்தவுக, ‘நீ பாட்டுக்கு ஒம்பாட்டப் பாரு, அதுக்குதே பெத்தவுக இருக்காகல்ல. அவுக பாப்பாக. நீ விட்டுரு. நாடு கெடக்குற கெடையில நக நட்டு போட்டு ரண்டு பொட்டப்புள்ளகள கெட்டிக் கொடுக்க ஆகுமாண்டு யோசி’ன்னாக. எந் தம்பியு அதத்தே சொன்னா….’

‘எங்கூட்டுக்காரரு ஒரு புள்ளக்கி ஆசப்பட்டு எங்கிட்டக்கூட சொல்லாம ரண்டாவது கெட்டினாரு. ஆனாப் பாரு, பெத்த புள்ளங்கள வளக்க அவுரு ஆள் இல்ல. எந் தங்கச்சி வெள்ளந்திப் பொண்ணு. பெத்தவுக வயசானவுக. அவ ரண்டு பொட்டப்புள்ளங்கள வச்சி எங்க போவா பாவம்?. அவர எடுத்துட்டுப் போன ஒடனே மூத்தது ஓடி வந்து எங்காலக் கெட்டி அளுதுச்சு. அதுகள விட்டுரவா நானு?. நம்மளப் பத்தி நெனச்சு இன்னுமேட்டு என்னாகணு?, இருக்குறவரக்கு அதுகளுக்காக இருந்துருவோம்னு தெயிரியப்படுத்திட்டே’.

‘ எம் புள்ளக, கவருமெண்டு பள்ளியொடத்துல தே படிக்குதுக.. நல்லா படிக்குதுக. எப்பாடு பட்டாச்சு…….,எம்புள்ளகளப் பெரிய படிப்பு படிக்க வச்சுரணுமத்தா… எங்க நெலம அதுகளுக்கு வரக் கூடாது. படுச்சு பெரிய வேலக்குப் போயி, நல்ல நெலமக்கு வரணு. எங்கள மாதுரி பாவப்பட்ட சனத்துக்கு அதுகளால முடுஞ்சத செய்யணு. அதுக்குதே எங்க சோலின்னு கூப்புட்டாலு ஓடீருவே…நா வெளியூரு போனா, ஏ வூட்டு அக்கம்பக்கத்துல இருக்குறவுக, எந் தங்கச்சிய பாத்துக்கிருவாக. அதனால ஒரு பயமெல்லா இல்ல…காசு சம்பாரிக்கலன்னாலும் மனுசாளுக சம்பாரிச்சு வெச்சுருக்கே…. ‘.

அவள் பேசப்பேச எனக்குள் ஏதுவோ விழுந்து நொறுங்கியது. என்னை யாரோ முச்சந்தியில் நிற்க வைத்து, விளாசியதாக உணர்ந்தேன். ‘என்ன மனசு…, என்ன மனசு இந்தப் படிக்காத பெண்ணுக்கு?, துரோகம் செய்த கணவன் பெற்ற பிள்ளைகளை, பண பலமோ மற்ற வித ஆதரவுகளோ இல்லாத இந்தப் பெண், எவ்வித சுயநலமோ, எதிர்பார்ப்புகளோ இல்லாமல், பொது நல நோக்குடன் வளர்க்கிறாள். ஆனால் நான்?. ‘என் பணத்தை எடுத்துக்கொண்டுதானே வளர்த்தார்’ என என் சித்தப்பாவை நினைத்தேனேயன்றி, எனக்கு உணவு, உடை, படிப்பு முதலியவற்றுக்கு ஒரு குறையும் வைக்காமல் தானே வளர்த்தார் என நினைக்கவில்லை. முள்ளைப் பார்த்து விட்டு, ரோஜாவைப் பார்க்கத் தவறிவிட்டேன். அவர் பெற்ற, என் தங்கைகளின் பொறுப்பை ஏற்பதை சுமையாக நினைக்கிறேன். என் படிப்பு எனக்கு இதையா கற்றுத் தந்தது?
விடுவிடுவென என் மனதிற்குள் அந்தப் பூக்காரப் பெண் விஸ்வரூபமெடுக்க, நான் அவள் முன் மிக அற்பமாய் உணர்ந்தேன்.
‘மல்லிகா, என் ஃப்ரெண்டு எழுதின லெட்டர் ஒன் ஹேண்ட் பேக்குல தான இருக்கு? அத எடு’ என்றேன். எதுவும் புரியாமல், லெட்டரை அவள் எடுத்துக் கொடுக்க, அதிலிருந்த நண்பனின் எண்ணுக்கு என் கைபேசியை எடுத்துப் போன் செய்தேன்.

‘ஆமாண்டா, ரெண்டு நாள் முன்னாடி தான் ஒன் லெட்டர் கெடச்சு வெவரம் தெரியும். தோ லீவு கெடச்ச‌ ஒடனே பொறப்புட்டாச்சு. மதியத்துக்குள்ள வந்துருவேன். சித்தில்லாம் அங்க தான இருக்காங்க?. முடிஞ்சா நான் வந்துட்டிருக்கேன்னு போய்ச் சொல்லு. என்ன?. அ, ஆமாமா, எங்கூட‌ கூட்டிட்டு போகலான்னு தான் ப்ளான். அதுக்குத் தான் வரேன். வொய்ஃப், பாப்பா எல்லாருந்தான் வரோம். சரி சொல்லிர்றியா? அங்க வந்து பாக்கறேன். சரியா? வச்சுர்றேன்?’ சொல்லிவிட்டு திரும்பிய போது, மல்லிகா என்னைப் பார்த்து, புரிந்து, சந்தோஷமாகப் புன்னகைத்தாள்.

தாமரை, என்னை நோக்கி, திருத்தமாக, ‘ப்பாஆஆ…’ என்றது.
கூடையிலிருந்து கமழ்ந்த பூமணம், மனதிலும் நுழைய, மன‌ நெருக்கடி குறைந்ததை உணர்ந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *