கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 15,086 
 

இந்தாப் போச்சு அந்தாப் போச்சுன்னு மூணுமாசமா இழுததுப் புடுச்சிக்கிட்டுக் கெடக்கும் பட்டாளத்தாருக்கு இன்னும் தெக்க போய்ச் சேர நேரம் காலம் வர்லங்கிற பேச்சு தான் ஊர் சனத்துக்கு பட்டாளத்தாரு யாருன்னு கேட்டா நேத்திக்கு கண்ணு முழிச்சுப் புள்ளங்கூட அடையாளம் காட்டிப்புடும். அவரோட பேரச்சொன்ன மொதத் தலைமுறை ஆசாமிங்களுக்குக் குட சட்டுன்னு நெனைப்பு வராது. கூடவே தோப்பூட்டுக்கார கோவிந்தம் புள்ளன்னு அடையாளத்தக் குறிப்புட்டாத்தான் மட்டுப்படும்.

அவரு பட்டாளத்தவுட்டு வந்து ரெண்டு மாமாங்கமா ஆயிட்டு அவரோடபட்டாளத்துச் சேவையைப் பாராட்டி, கலெக்டரு கொடுத்தது மூணுமா புஞ்சை பொறம்போக்கு அதை ஒட்டனாப் போல் இருந்தா ரெண்டுமா நெலத்தையும் சேத்து அடைச்சாப் போல வாங்கிக்கோ- வே- வச்சதப் பாத்த சனங்க தெகச்சித்தான் நின்னுச்சி.

இந்த ஊருக்குள்ளேயே இம்மா பெரிய நெலத்துக்கு வேலக்கட்டுனதே இவருதான் வடவண்டப் பக்கத்தில் இருவது அடி விட்டதில் தொறவு. லெங்குசா தண்ணீ எறைக்கிறாப் போல கரண்டுல மோட்டாரு.

பட்டம்பட்டமா பிரிச்சி மா. பலா. சப்போட்டான்னும் கூடவே நாரத்தையும் எலுமிச்சையுமா பட்டத்தச் சுத்தி ஏகமா தென்னம்புள்ள. ஏ….ப்பா கோவிந்தம்புள்ள எப்புடி யெல்லாம் மனசுக்குள்ள வரிச்சுக்கிட்டு பட்டாளத் திலிருந்து வந்தாரோ அச்சா அப்படியே தோட்டம் அமைஞ்சிப் போயிட்டு.

ஈசானி மூலையில தென்வடலா பொட்டி போல வூடு. சேவைய விட்டு வந்து கையில இருந்த காச. காசுன்னு பாக்காம அள்ளி எறச்சி விட்டுட்டாரு. போட்ட மரக் கன்னுங்க பலன் கொடுக்கங்காட்டியும் ரொம்பத்தான் முழி பிதிங்கிப் போயிட்டாரு. இடைஇடையே கீரைன்னும் மொளவான்னும் மருளிகட்டைன்னும் போட்டு சமாளிச்சாரு. ஒரு பத்து வருஷம் அவரு பட்டப் பாட்டச் சொல்றீமாளாது.

“ஏன் பட்டாளத்து மாமா கொண்டாந்த காசயெல்லாம் கண்ண மூடிக்கிட்டு மண்ணுல கொட்டி வைக்கிறீங்களே பெண்டாட்டிப் புள்ளைங்க சோறு திங்க வேணாமாஃன்னு கேட்ட அக்கா மவன் கிட்டக்க “அட. போடா. நாலஞ்சா பெத்து வச்சிருக்கேன். சிங்கக் குட்டிப் போல ஒரு ஆம்பளப் பய.”

தோப்ப சுத்தி வந்தாக் கூட அவன் சோத்த நாலு பேரு திங்கலாம்ங்கிற நெனப்புதான் கோவிந்தம்புள்ளைக்கு.

“என்னா மனுசன்… மழையிலயும் பனியிலயும் நின்னு சம்பாத்தியம் பன்னி கொண்டாந்த காச கையில வச்சிகிட்டு, அடக்கமா வீட்டக்கட்டி ரெண்டாம் பேருக்குத் தெரியாம நறுவுசா வாழத் தெரியாத மனுசன். யானைக்கு கோமன் கட்டினப்போல ஊரை வளைச்சி கோட்டம் போடுறாராம்
தோட்டம். ஒடம்பப் போட்டுத் தெண்டிச்சிக்கிறது வேற.

பட்டாளத்தில் தின்னு உண்டு வளந்த உடம்பு. இங்கு வந்து கரையனும்னு இருக்கும்போது… தலையெழுத்த யாரு மாத்தி அமைக்க முடியும்?

பெத்தப் புள்ள கஞ்சி ஊத்தாட்டாலும் வச்சி வளத்தப்புள்ள சோறு போட்டுப் புடுங்கிற வாய்செலவு
கோவிந்தம் புள்ளையும் அடக்கிப்புடுங்கிறது நெசமாகவே அமைஞ்சிப்போயிட்டு.

தூங்கி முழிச்சாப் போதும் அவரோடு கண்ணுல தோப்பு தான் வந்து நிக்கும் பளிச்சுன்னு எழுந்திருச்சாருன்னா ஒவ்வொரு மரத்தையும் பாத்துட்டு வந்தாதான் அன்னைய பொழுது
நல்லபொழுதா போயிருக்குங்கிற உணர்வு வரும்.

கையியில் இருந்த காசெல்லம் வல்லுசா கரைஞ்சிப் போனதும் கொஞ்சமா வர்ற பென்ஷன் பணத்த வச்சிக்கிட்டு தோப்புக்கு மேஞ்செலவுப் பாக்கிறதுக்கும் குடும்பத்த கவனிச்சிக்கிறதுக்கும் ரொம்பதான் அல்லாடிப் போயிட்டாரு. உழைப்புக்கு ஏத்தாப்போல சாப்பாடு சரியாயில்லாம போயிட்டு. அதனால உடம்புல நாளுக்கு நாளு தேஞ்சிக்கிட்டு வந்துட்டு. இருந்தாலும் மனசு மட்டும் எனப்பமா ஆயிடாம சுறுசுறுப்பாவே இருக்கு.

மரமெல்லாம் கிளைச்சி தண்டு உருண்டு மத்தளம் கூட்டி குந்தானி கணக்கா ஆனதும் தோப்புக்குள்ள வந்து பாக்கும் போதே தன்னோட மனகஷ்டமெல்லாம் மறந்து போயி தான் சுத்தி வருவாரு. எந்த நேரமும் காக்கா. கருவிகளும் பச்சைக் கிளின்னும் கூடவே அணில்களும் ஒண்ணடி மண்ணடி சேந்து கொட்டாம் அடிச்சிக்கிட்டு கெடக்குங்க. அதுல மனசு நெகிழ்ந்து போயி அதுகளாவே ஆயிடுவாரு. வாடையோ தென்றலோ சதா எந்நேரமும்… சிலுசிலுனு உச்சி உரும நேரத்தில் மட்டும் அப்படி இப்படின்னு கருப்பு தேகத்தில் சேப்பு தேம படத்தாப்போல வெயிலு விழுறதோட சரி.

தொறவ ஒட்டினாப்பேல நிக்கிற நாலஞ்சி மா மரங்களோட மனுசன் கட்டி அணைக்க முடியாத பலாமரமும் சிம்பு சிம்பா நிக்கிற தஞ்சாவூர் கொய்யாவும் பின்னி படந்து நிக்கிற அந்த நெழலோட்டத்தில் ஆற்று மணல் அடிச்சி கெடக்கும். விடிய கருக்கல்ல போனா அந்த மணல்ல படுத்து பொறள்ற சொகம் இருக்கே அது அலாதியானது.

எந்நேரமும் அப்படியே கண்குத்திப் பாம்பாட்டம் எல்லையில நின்னு பூத்துப்போன கண்ணு இத பாக்கிறச்சே மனது குளிந்துதான் போய் “ஏ! ரெத்னம்…. இங்க வாடி..ரொம்பதான் கோணிக்காதே. பாக்கிறவங்க சொல்லுறதுக்கு என்னாடி இருக்கு?” பொண்டாட்டிக்கிட்ட எளஞ்சிடுவாரு.

அன்னிய மனுசவாடையே வராத அந்த எடத்தில்தான் அவரும் அவரு சம்சாரமும். இந்தா பார் ரெத்தனம்! இந்த இடத்திலத்தான் என்னோட உயிரு போணும். இங்க வச்சிதான் என்ன குளிப்பாட்டி தெக்க அனுப்பி வைக்கணும் அப்ப. தப்புதாரையோ…. பட்டாளத்தான்னு யாராச்சும் ட்ரம் செட்டு கொண்டாந்து வைக்க வந்தா விட்டுப்புடாதே. பாவம் நம்ம தோட்டத்தில் குடியா கெடக்கிற ஜந்துக்களெல்லாம் சின்னபின்னமா போயிடும்’….

இப்படித்தான் பொண்டாட்டிக்கிட்டே ஒரு நூறு தடவயாச்சும் சொல்லிருப்பாரு.

“அதுக்கென்னாங்க… இந்த எடத்த யாரு பேத்து எடுத்துக்கிட்டுப் போவப் போறாங்க; ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இருக்கிற புள்ள இந்த ஆசையக்கூடவா நெறைவேத்தி வைக்காமப் போவான்? என்னோட கண்ணு முன்னால உங்களுக்குத் திருப்தியா செஞ்சி அனுப்பி
வச்சிட்டுத்தான் நானும் உங்கப் பின்னாலேயே வந்து சேத்துக்குவேங்க….!

அவரோட பொண்டாட்டி ரெத்தனத்தையும் சும்மா சொல்லக்கூடாது.புருஷனோட மனச ஒத்திஎடுத்தாப் போல அதோட மனசும். அவரோட கண்ணுல ஒரு தூசு விழுந்தட்டால் கூட அது கண்ணு கலங்கிப் போயிடும். எந்நேரமும் புருசன் நெஞ்சுக்குள்ளேயே முடங்கிக் கெடக்குனுங்கிறதில அந்த மூதாட்டிக்கு குதிகொள்ளாத ஆசை.

பத்து வருஷ கால வாழ்வில எத்தனையோ ஏத்தம் எறக்கத்தப் பாத்துட்டாரு கோவிந்தம்புள்ள. இருந்தாலும் ரெத்தனம் ஆசைப்பட்டாலும் ஒண்ணும் வீணாப் போயிடாது தான். போட்டது எல்லாம் பலனைக் கொடுக்க ஆரம்பிச் சுட்டு மாவும் பலாவும் சப்போட்டாவும் ஒண்ணு மாத்தி ஒண்ணு காச்சி குலுங்காவும் அதுகள பறிச்சி காசு பண்ணுறதிலயும் ரெத்தனம் கெட்டிக்காரிதான். அதுக்காவ அகிடுபகிடு பண்ணி சம்பாத்தியம் செய்ய வேண்டாம்ங்கிறதிலயும் கருக்காத்தான்
இருந்தார் கோவிந்தம்புள்ள.

இவ்வளவு இருந்தும் மவன் சரியா படிச்சிக்காமா போயிட்டானேங்கிற கவலையும் ஒரு பக்கம் இல்லாம இல்ல. அதோடயில்லாம கோவிந்தம்புள்ள. தோட்டம் போட்டநேரத்தில் நெனச்ச நெனப்புக்கு ஏத்தாப்போல மவன் தோட்டத்த அந்திசந்தி சுத்தி வந்தாக்கூட தேவலாம். ஆயாக்காரதுக்கிட்ட தில்லுமுல்லுப் பேசி காசுபணத்த கறந்துகிட்டு மானாவாரியா செலவு பண்ணிக்கிட்டு நிக்கிறத நெனைக்கும்போது இப்புடி ஒரு புள்ள நமக்கு வேணாம்கிற
நெனப்பே வந்துட்டு.

பொண்டாட்டி. மவன் மேல உகர வச்சிருக்கும்போது இவரு ஏதாச்சும் ஏறுக்கு மாறா நடந்து அவன் ஒண்ணுக் கடக்க ஒண்ணு செஞ்சிட்டா ஊரு வாயத்தான் மூட முடியுமா? போவட்டும் அது தலையெழுத்து எப்புடி இருக்கோ அதப்படி நடக்கட்டும்ங்கிற வெறுப்போடுதான் மவன கைகழுவிட்டார்.

லம்பாடிப் புள்ளையாத்தான் போய்விட்டான். அதுக்காவ அவனை சும்மா விட்டுட முடியுங்களா? ஒரு கால்கட்டு போட்டுல்லாங்க என்னோட தம்பி மவ வந்தான்னா அவன வசக்கட்டி ஒரு வழிக்கு கொண்டாந்துடுவா இப்புடி தத்தாரியா நிக்கிறவன் எங்காச்சும் போய் பொண்டுவோ சகவாசம்
வச்சுக்கிட்டா அப்புறம் வெளியே தலை காட்ட முடியாதுன்னு பொண்டாட்டிச் சொன்னதும் சரின்னு தான் பட்டுச்சி. நாலா பக்கமும் யோசிச்சிப் பாத்துட்டு தன்னோட மச்சான் மவனேயே கட்டி வச்சார்.

ரெத்தினம் சொன்னபடியே மருமவப்புடிக்குள்ள சிக்கிட்டான் சுபாஷு.

என்கிட்ட ஏறுகுத்தி மாவிளக்கு மாவு போட்டாப் போல அவக்கிட்ட முடியுமா?ன்னு மவனையும் மருமவளையும் சேத்து வச்சே சொல்லிருக்கா. தலைச்சான பேரன் பொறந்த கையோட எடச்சனா பேத்தியும் பொறந்துட்டு.

பட்டாளத்தார் பொண்டாட்டி சொல்லுறது நூத்துக்கு நுறு நெசமானாலும் நெசம். மவன் இப்புடி ஒரேடியா திருந்திப்புடுவாஙகிறது அவரால நெனச்சிக்கூடப் பாக்க முடியில. காசு பணத்திலயும் ரொம்ப குறியா போயிட்டான். “அத்தாச்சி! ராசாத்தியும் ஒண்ண பத்தாக்கிறதில கைகாரி. ஒரு
புள்ளி போட்டுக் கொடுத்துடடா எட்டுச் சித்திரம் போடுறவளாச்சே…ன்னு தம்பி பொண்டாட்டி சொன்னது இன்னிக்கு கண்ணாலேயே பாக்கிறா ரெத்தினம்.

“ஊரச்சுத்திக்கிட்டு நின்ன பட்டாளத்துக்காரர் மவனா இது….ன்னு பாக்கிற சனங்க வாய்பொளந்து நிக்கிறாப் போல மாறிப் போயிட்டான். எல்லாம் பொண்டாட்டி வந்த நேரம். அவ கமுக்காமா போட்ட தலவாணி மந்திரத்தில் அவன் நல்லாவே அவளோட ஒண்டிப் போயிட்டன்.

இப்பெல்லாம் அப்பாருக்குன்னு வேலை ஒண்ணும் வைக்கிறது இல்ல. எல்லாத்தியும் சுபாஷுவே பாத்துக்கிறான். அவரு விடிய கருக்கல்ல எழுந்திரிச்சா தோட்டத்த கோ-க்கிட்டு நிக்கிறது. காக்கா குருவிக அணிலுகளோட கொண்டாட்டத்த பாத்து ரசிச்சிக்கிட்டு நிக்கிறதுதான் பெரும்புடியான பொழுதுபோக்கா ஆயிட்டு.

கோவிந்தம்புள்ள மனுசனா பொறப்பெடுத்ததுக்கு பொறத்த நாட்டோட மண்ண காவந்து பண்ணன்னு பதினைஞ்சி வருஷம் உழைச்சாச்சி. மீதிக்காலத்த குடும்பத்துக்குன்னு உழைச்சி இம்மா பெரிய தோப்ப உண்டாக்கியாச்சி…. மீதம் வாழப்போர காலத்தில் பேரப் புள்ளைகளைத் தூக்கி வெளையாடிக்கிட்டு இருக்கிறதவிட வேற எண்ணாங்கிற பூரிப்புதான் அவருக்கு.

பேரப்புள்ளைங்களும் கண்ணுக்கு உசரமா ஆயிட்டாங்கன்னா அப்புறம் என்ன செய்யிறதுங்கிற ஒருவித கவலையும் தளர்ச்சியும் புடிச்சிக்கிட்டு.

பலாமரத்து ஓரமா கொட்டிக் கெடக்கும் மணல்ல அப்பாடின்னு சாஞ்சி படுத்தார். இன்னிக்குன்னு ஏகமா தவிட்டுக் குருவிக வந்து சேந்திருக்கு. இத்தனை நாளா பார்க்க முடியாத புது தினுசான பறவையோட காக்கா குருவிகளும் குறுக்கு நெடுக்குமா பறந்து ரொம்பத்தான் சத்தம்
போட்டுக்கிட்டு இருக்குங்க. அந்த விடிய கருக்கல்ல சிலு சிலுன்னு அடிக்கிற காத்துக்கும் அதுக்கும் மனசுக்குள்ள இதமா இருந்துச்சி. இப்புடி படுக்குறது.அவருக்கு அலதியான சுகம்தான்.
இருந்தாலும் அது ரெட்டிப்பா ஆயிட்டு.

பட்டானத்திலிருந்து ஒரு லீவுக்கு வந்தப்ப இந்த ரெத்தினத்தக் கண்ணாலம் கட்டினது. ஒருத்த முகம் ஒருத்தருக்கு படிஞ்சிப் போவங்காட்டியும் அவசரகாலமுன்னு காரணம் காட்டி ஒரு மாச லீவு கொறைச்சி உடனே வந்து சேர்ந்துட தாபலு வந்ததும் பொறப்பட்டு ஓடுனது. மறுபடி எப்பப் போய் ரெத்தனத்து மூஞ்சியப் பாக்கிறதுன்னு சதா காலமும் கனவு கண்டுக்கிட்டு இருந்தது. அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சி மூணு மாச லீவில வந்தது. பொண்டாட்டி முழுவாம
இருக்கான்னதும் அவ வேறு கால மாசத்தில் கிட்டக்க இருக்க முடியிலங்கிற கவலையோட திரும்பப் போனது. எல்லாத்தியும் நெனைச்சிப் பாத்துகிட்டு சில்லுசில்லா தெரியுற மானத்தப்
பார்த்துக்கிட்டு இருந்தார். சேவ தொறத்திக்கிட்டு வந்த ஒரு பொட்ட அதுக்கிட்ட மசங்காம பறந்து அவரை தாண்டி ஓடுச்சி ச்சே….. ன்னு விரெட்டித் திரும்புனா ரெத்தனம். சுக்குமல்லி காப்பியோட நிக்கிறதா. சுள்ளாப்பா எழுந்திட்டாரு.

“பேரப்பயல தூக்கிட்டு வந்தான்னா?”

வர்ற ஆயுத பூஜை அன்னிக்கு கான்வெண்டு ஸ்கூல்ல சேக்க போவுதாம். அதுக்காக இப்பவே மருமவப்பெண்ணு எழுத்துச் சொல்-க் கொடுத்துக்கிட்டு இருக்கு.”

“அதுக்கும் ஆவத்து வந்துட்டா? அஞ்சு வயசாவட்டுன்னு சொன்னா என்னா மூணு வயசுக்குள்ளேயே சேர்திருக்கணுமாம். மவந்தான் மருமவளத் திட்டி சொல்லிக் கொடுக்கச் சொல்லியிருக்கு” ன்னு லோட்டாவில் கொண்டாந்த தண்ணியக் கொடுத்துட்டு அவர் காலடியில் அவளும் உக்காந்தாள்.

எதையோ சொல் வந்தவள் திணறுவது போல் தெரிஞ்சதும்.

“என்னா தடுமாறுற?”

சொல்லுவோமோ வேண்டாமங்கிற யோசனையோட “நாலஞ்சி நாளா மவன் வீட்டுல உக்காரல பாத்திங்களா யாருயாரோ வர்றதும் போறதும் இருக்குங்க. வீ.ஏ.ஓ. கூட நேத்திக்கு வந்து தனியா பேசிட்டுப் போறாரு. புருஷனும் பொண்டாட்டியுமா குசுகுசுன்னு பேசிக்கிறாங்க…”

ரெத்தனம் சொல்லும்போது கோவிந்தம்புள்ள வாய் தொறக்கல. அவரும் பாத்தும் பாக்காது போலதானே இருக்கார்.

“என்னாங்க நான் பாட்டுக்கு….”

“சரிதான் போறியா கெணத்துத் தண்ணிய வெள்ளம் கொண்டுப் போறப்ப பாத்துக்கலாம். இந்தா பாக்கிய நீ குடி”ன்னு ரெத்தனத்துக் கிட்ட லோட்டாவைக் கொடுத்தார்.

திடுதிப்புன்னு வீட்டு வாசல்ல ஒரு ஜீப் வந்து நின்னுச்சி வீ.ஏ.ஓ. சர்வேயரோட நாலுஞ்சி பேர அழைச்சிக்கிட்டு எறங்கினார். சுபாஸூ வெளியே வந்து அழைச்சிக்கிட்டு போறான். கோவிந்தம்புள்ள மனசு என்ன ஏதோன்னு அடிச்சிக்கிட்டு கெடக்கு.

“ரெத்தனம்! சுபாஸூ ஏதாச்சும் சொன்னான?”

“இல்ல….. ஆனா…” என்று இழுத்தவள். “அவனே நம்மக் கிட்ட வர்றா’னு சொல்ல, புள்ளமூஞ்சைப் பாத்துக்கிட்டு எழுந்தாள்.

சர்வயரோட வந்த ஆளுங்க சங்கிலிய பிரிச்சு அளக்க ஆரம்பிச்சுதுங்க. அவரோட மனசில மேலமேல குழப்பம் ஏற்பட்டுச்சி.

மவன் ஏதிர்கொண்டு வர வர என்னாச் சொல்லப் போறானேங்கிற எதிர்பார்ப்பு நெஞ்சுக்குள் சூட்ட பரப்பிட்டு.

“என்னாடா தம்பி!….”

“நல்ல சேதியாதாம்மா…. அதான் அப்பாவையும் உன்மையும் சேத்தே……..”

மவனோட பீடிகை அழுத்தமா போவவும் அவரால் அனுமானிக்க முடியவில்லை.

“எதுக்குப்பா வந்திருக்கிறவங்க நம்ம தோட்டத்த அளந்துகிட்டு…….?”

“அப்பா…… நம்ம வீட்டச் சுத்தி அம்பது குழிய ஒதுக்கிக் கிட்டு மீதத்த லம்பா பத்து லட்ச ரூவா வெலைக்கு வருதுப்பா. அவங்க வாங்கி பிளாட்டுப் போட போறங்களாம். தனியா ஒரு நகராவே உருவாக்கப் போறாங்களாம். அதுக்கு “பட்டாளத்தார்’ நகருன்னே பேரு வைக்கப் போறங்களாம்.
ரொக்கமாக பத்து லட்சத்தோட பத்து மணிக்கெல்லாம் வந்துடுறாங்க. நான் எல்லாம் பேசி முடிச்சிட்டேன். இன்னிக்கே பத்தரம் பண்ணிக் கொடுத்துடுனும்பா….”

“என்னடா பாவி….. என் கண்ணு முன்னாலேயே பெத்த அப்பாவ வெலை பேசினாப் போல. தோட்டத்த வெலை பேசிக்கிட்டு வந்துக்கே. இது பொன்னு வெளையிற பூமிடா. என்ன ஒரு வார்த்த கேட்டியா?”

ரெத்தினம் கொதித்துப் போனாள்.

“அம்மா நான் ஒண்ணும் குடிச்சிட்டோ கூத்தியா வீட்டுக்கோ போயிட்டு வந்து வெலை பேசிடல. நாம் பொழுதுக்கும் லோலோன்னு நின்னு பலனை எடுத்து அஞ்சுக்குமா பத்துக்குமா வித்து மாதம் ரெண்டாயிரத்துப் பார்க்க உன்ன இழு என்ன இழுன்னு நிக்க வேண்டியிருக்கு…ரொக்கமா வர்ற பத்து லட்சத்த வாங்கி அப்புடியே அப்பா பேர்லேயே பேங்கிலே போடப் போறேன். அசல்ல குண்டு மணி கொறவு இல்லாம மாசாமாசம் ஒண்ணாம் தேதி பன்னெண்டாயிரம் ரூவா கணக்குக்கு வந்துடும். நான் நல்லா இருக்கனுன்னு நெனைச்சின்னா இத செஞ்சித்தான் ஆவணும்….”

கோவிந்தம்புள்ளைக்கு ஆத்தரமா ஆத்தரம் இப்ப அதை மவன் கிட்டக்க காட்டத்தான் முடியுமா? அதுவும் சரியான கொக்கிப்டி போட்டு இழுத்துட்டான்.

கொஞ்சம் சமாளிச்சிக்கிட்டு “எல்லாம் சரிப்பா…’இந்த மரங்கள் எல்லாம்…?”

“இது என்னாப்பா கேள்வி?”

அதனான் சர்வயர்ங்க வந்திருக்காங்க அளந்து பிளாட்டா பிரிச்சி ரோட்டுக்கு அளந்து ஒதுக்கிப்புடுவாங்க. அப்புறம் ரோட்டுல அடிபடுற மரங்கள இப்ப வெட்டி எடுத்துப் புடுவாங்க. அதுக்குப்பின்னால பிளாட்ட வாங்கினவங்க பாடு. இந்த பிளாட்ட வாங்கப் போற வங்க எல்லோரும் புதுசா கலெட்டரு ஆபிஸீல வேலைப் பாக்கிறவங்கதான் பெரும் பெரும் வீடா கட்டிப் புடுவாங்க. நமக்கு நல்ல தானேப்பா. அனாந்திரத்தில வீட்டைக் கட்டிக்கிட்டு இருக்கிற நெனப்பே
இல்லாம பயமில்லாம இருக்கலாம் பாருங்க. இப்ப நம்ம ஊரு புது மாவட்டமா ஆவாட்டா நம்ம ஆயுசுல இவவ்ளவுப் பெரிய ரூவாய கண்ணாலக் கூடப் பாக்க முடியுமா?

தலைமேல காக்கா குருவிக ஆலப் பறந்துக்கிட்டு கத்துச்சுங்க. புதுசா வந்த ஒரு ஒரு பறவை விநோதமா சன்னமான குரலில் கத்திச்சு மாமரத்திலிருந்து ஒரு நொண்டியான காக்கா குஞ்சு பொத்துண்ணு விழுந்தது. அத தூக்க வந்த ஒரு காக்கா பயந்து கிட்ட வர்றதும் போறதுமா..

விடியகருக்கல்ல எழுந்திரிக்கும்போது இன்னிய பொழுதுல இத்தன வருஷமா புள்ளைகள வளர்க்கிறாப் போல ஊட்டி வளத்து ஆண்டு அனுபவிச்ச இந்தத் தோப்பிலிருந்து அன்னியப்பட்டுப் போப்போறோம்ன்னு நெனச்சுக்கூடப் பாக்கில. மனசுக்குள்ள் திக்குன்னு இருந்துச்சி. தைரியப்படுத்திகிட்டாரு. பொண்டாட்டி ரெத்தினத்துக்கும் ஆறுதல் சொல்லி தேத்தி விட்டார்.

விடிஞ்ச ஏழெட்டு நாழிக்குள்ள பத்தரம் பண்ணிக் கொடுத்து வல்லுசா பத்து லட்சத்த பேங்கில போட்டுட்டு காருலே வீட்டுக்கு வரும்போது. ஏகமா இருந்த தோப்ப மூணு பட்டமா பிரிச்சிருந்தாங்க. ஒன்னாம் தெரு ரெண்டாம் தெருன்னு அட்டையில் எழுதி! வச்சிட்டாங்க. ரோட்டுக்கு ஒதுக்கின எடத்திலருந்த மரங்கள் பத்து ஆளுங்க வெட்டிக் கிட்டு இருந்தாங்க.

மரம்கொள்ளாத பிóஞ்சா இருந்த பால மரத்த வெட்டி விட்டு வரிகயித்தப் போட்டு இழுத்துத் தள்ளும்போது காருலேருந்து எறங்கினாரு கோவிந்தம்புள்ள… அப்புடியே துடிச்சிப் போய் ஓடியாரவும்.

கையெழுத்துப் போட்ட மை காயங்காட்டியும் பலா மரத்து வெட்டிச் சாச்சிட்டிங்களாடா பாவியலா’ன்னு கத்திக் கிட்டு ஓடும்போது இத்தனை நாளா அவர்படுத்துப் பொறண்ட அந்த
மணல் மேல தஞ்சாவூர் கொய்யா மரத்தப் போட்டு அமுக்கிக்கிட்டு பொதேர்ன்னு விழுந்தது.

கோவிந்தம்புள்ளைக்கு பிரமை தட்டி அப்பிடியே போய் ஒரு தென்ன மரத்தைக் கட்டிப்புடிச்சி சாஞ்சார்.

“ப்பா…. ப்பா’ன்னு அவரோட மவன் ஓடிப்போய் தாங்கிப் புடிச்சி உக்கார வைக்கும்போது வாயிலிருந்து ‘வாநீ’ ஊத்த சரிஞ்சிட்டாரு. தான் ஆடாட்டாலும் சதை ஆடும்பாங்களே. அந்த நாழியில் சுபாஷ் அப்புடியே ஆடித்தான் போயிட்டான்.

சுபாஷ் ஆஸ்பத்திரிக்கு போகும்போது நாம தான் அப்பாவுக்கு எமனா வந்துட்டோம்னு ஊரு உலகம் சொல்லுமேங்கிற கவலைதான்.

“சாரி மிஸ்டர் சுபாஷ் உங்கள் அப்பாவுக்கு மூளையில உள்ள உரு நரம்பு தெறிச்சிருக்கு. இன்னுமே எதுவும் செய்ய முடியாது. வீட்டுல கொண்டுபோய் வச்சிக்கிங்க. உங்க மனசாந்திக்காவத்தான் நான் இப்ப செய்யற மருத்துவம். இப்புடியே இருந்து மூச்சி அடங்கிப் போயிடும். அது எப்பன்னு சரியாச் சொல்ல முடியாது….” டாக்டர் கைவிரிச்சிட்டார்.

வீடு வந்த நாள்லருந்து ரெத்தினம் மட்டும் சோறு தண்ணியில்லாம கெடந்து அழுதுகொண்டிருந்தாள்.

“நீ இப்புடியே அன்னம் தண்ணியில்லாம அழுதுக்கிட்டு கெடந்தா அவருக்கு நல்லாவா இருந்துட போவுது?ன்னு வர்ற சொல்லுக்காவே சோத்த கரைச்சிக் கொடுக்கச் சொல்குடி ச்சிட்டுதான் உயிர புடுச்சிக்கிட்டு புருஷன் கிட்டக்கவே கெடக்கறா.

“இந்தா பாரு ரெத்தனம்! இந்த எடத்திலதான் என்னோட உயிரு போவணும் இங்க வச்சிதான் என்ன குளிப்பாட்டி தெக்க அனுப்பி வைக்கணும்….ஃ அவர் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் நினைவுக்கு வரும்போது மென்னை அடைத்தது.

அவரு ஆசைப்பட்டத செய்யமுடியாத பாவியா ஆயிட்டேனே. அவரு கண்ணுக்கு முன்னாலேயே அந்த மண்ணுல அடிஎடுத்து வைக்க முடியாம போயிட்டே….ன்னு சொல்லி ஒத்தக் குரலில் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தார்.

இப்புடியே ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல மூணு மாசமா கோமாவுல கெடக்கும் பட்டாளத்தாருக்குகக சாவு எப்ப எப்பன்னுதான்…..

உறவுசனங்க வந்து பாத்துட்டு அதஅது பங்குக்கு ரத்தனத்தையும் சுபாஷையும் கண்டுக்கிட்டுங்க
பட்டாளத்தாரோட கூடப் பொறக்கலண்ணாலும் “தம்பி … தம்பிஃ ன்னு சுத்திக்கிட்டு இருந்த ஆலங்குடி அக்காகாரது தான் ரெத்தனத்துக்கு பக்கத் தொணையா இருக்கு.

அப்ப அப்ப வந்து தலைய காட்டிக்கிட்டு இருக்கும் ரெத்தனத்தோட தம்பிக்காரன் எல்லாரோட மொகத்தையும் பாத்துக்கிட்டு. “அத்தானுக்கு மண்ணாசதான் கெடந்து உசுர இழுத்துப்புடுச்சிக்கிட்டு கெடக்கு… என்ன அத்தாச்சி னெனக்கிறீங்க?”ன்னு மனசில ‘மண்’ண வச்சிக்கிட்டு தான் கேட்டார்.

“…இப்புடி கெடக்கிறவங்களுக்கு அவங்க மனசில இருக்கிறத கரைச்சி ஊத்தறதுதான் அண்ணனுக்கு”ன்னு சொல்லும் போது மென்னிய அடைத்தது.

“அத நானே…” ன்னுக்கிட்டு எழுந்திருச்ச பட்டாளத்தாரோ மச்சினாரு தோட்டத்தோட கோடிக்குப்போய் புடிபுடி மண்ணா எடுத்தாந்து கலந்து ஒரு புடிய கரைச்சி…

தம்பிக்காரனே முன்னுக்கு நின்னு அதைச் செய்யும்போது..’தம்பி’ ன்னு புருஷன் மேல விழுந்து விழுந்து அழுதாள் ரத்தனம்.

பட்டாளக்காரர் வாயில மண்ணுகரைசல் எறங்கின ஒரு நாழிக்கெல்லாம் ஒரு விக்கலோடு மூச்சி நின்றிருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “மண்ணாசை

  1. விற்க விருப்பமில்லை என்று ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே? எதற்குக் கையெழுத்துப் போட்டுவிட்டு பிறகு லபோ திபோ என்று அடித்துக்கொள்ளணும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *