கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 9,098 
 
 

“ஹலோ! எக்ஸ்க்யூஸ்மீ, உங்கட இந்த நம்பர்ல இருந்து இரவு நிறைய மிஸ்ட்கோல் வந்திருக்கு…யாரு நீங்க…என்ன விசயமா எடுத்தீங்….?” முழுவாக்கியத்தையும் நான் கேட்டு முடிக்கவில்லை.

“அடச்சீ! நீங்களா…? நீங்கள்ளாம் ஒரு மனிசனா..?” என்றது எதிர்முனையிலிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் குரல். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“ஹலோ! நீங்க..” என்று ஆரம்பித்த என்னைப் பேசவே விடவில்லை!

” சீ வாயை மூடுங்க! இரவு முழுக்க நானும் என்ட பிள்ளைகளும் கூப்பிட்ட நேரம் போனைத் தூக்காமல் கல்லு மாதிரி இருந்திட்டு.. இப்ப விடியிற நேரம் வந்து என்ன ….க்கு எடுக்கிறீங்கள்..? ஆங்.. இப்ப எதுக்கு எடுத்த நீங்கள்…ஆ?” என்று அதட்டியது அந்தக் குரல்.

“ஹலோ.. முதல்ல நீங்க யாரு…? நான் யாரேண்டு நினைச்சுட்டுப் பேசுறீங்க நீங்க…?” என்றேன் ஆச்சரியம் நீங்காமல்.

“ஆங்! அதெல்லாம் சும்மா நடிக்க வேணாம் சரியா..? இஞ்ச பாருங்க..! எங்கட பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள்..சின்னதுகள்… அதுகளுக்கு படிப்பிக்கிற ஆள் நீங்க! இப்படித்தான் செய்யிறதா…?” என்று பட்டாசு வெடித்தது.

அடுத்த முனையிலே பேசும் பெண்குரலை என்னால் அடையாளங் காணமுடியவில்லை என்பதால் அந்தப் பெண்குரல் படபடவென்று பொரிந்து கொண்டிருப்பதை வேறுவழியின்றி கேட்டுக்கொண்டேயிருந்தேன்.

“……இந்தா! இரவு அதுகள்ற போனைப் பாத்திட்டு சரியான அடி அதுகளுக்கு. பாவம் உங்களால அதுகள் ரெண்டும் எனக்கிட்ட அடி வேண்டிட்டு அழுதழுது இந்தா..ஸ்கூலுக்கும்போக எழும்பாமப் படுக்குதுகள் சந்தோஷமா உங்களுக்கு? சே!”

என்ன விடயமென்று எனக்கு தலைகால் புரியவேயில்லை. ஆனால் ஏதோ கைத்தொலைபேசியுடன் தொடர்பான ஒரு விபரீதம் அந்தப் பெண்ணுக்கு நடந்திருக்கின்றது என்பதும் என்னை யாரோவென்று நினைத்து தவறுதலாக ஏசிக்கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் இலேசாகப் புரிந்தது. செல்போனை கட்டிலில் போட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது விடாமல் கீச்சுக்குரலிலே வசைபாடியவாறேயிருந்தது.

நான் மிக அண்மையில்தான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ள 26 வயது இளைஞன். இன்னும் அரசாங்க வேலை எதுவும் கிடைக்காததால் இங்கே கிழக்கின் தலைநகரில் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு மசூதி ஒன்றின் வாடகை அறையில் தங்கியிருந்து நகரிலுள்ள தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றிலே விஞ்ஞானபாடம் கற்பிக்கும் ஒரு பகுதிநேர ஆசிரியராக இருந்து வருகின்றேன். வார இறுதியிலே மட்டும் 40 கிலோமீற்றர் தள்ளியிருக்கும் ஊருக்கு ஒருதடவை போய்விட்டு மறுநாளே திரும்பி வந்து விடுவதும் எனது வழமை.

நேற்றைய தினம் எனது ஊரைச்சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடல் குளிக்கச்சென்று மூழ்கி உயிரிழந்த விபரீதம் பற்றி வானொலிச் செய்தியில் கேட்டேன். செய்தியிலே குறிப்பிடப்பட்ட பெயரையும் வயதையும் வைத்து அவர்கள் எனது தாய்வழி தூரத்து உறவினர்கள் என்பதை அறிந்ததும் பதறியடித்து அறையைப் பூட்டிவிட்டு ஊருக்கு பஸ்ஸேறிச் சென்றுவிட்டேன்.

மூன்று மரணவீடுகளிலும் துக்கம் விசாரித்து ஆறுதல்கூறி இயன்ற ஒத்தாசைகளையெல்லாம் புரிந்துவிட்டு இன்று அதிகாலையிலேதான் மீண்டும் அறைக்குத் திரும்பியிருந்தேன். பிரயாணக் களைப்புடன் கட்டிலில் விழுந்து கிடந்தபோது இடுப்பினருகே ஏதோ உறுத்தியது. அதை எடுத்துப் பார்த்தால் முந்தியதினம் மரணவீட்டுக்குச் செல்லும் அவசரத்திலே நான் மறந்துபோய் அறையிலேயே விட்டுச் சென்ற கைத்தொலைபேசி. மரணவீட்டின் சோக நிகழ்வுகளிலே செல்போனை முற்றாக மறந்துவிட்டிருந்த எனது ஞாகபசக்தியை நொந்துகொண்டேன்.

இந்த ஊரிலே எனக்குள்ள ஒரே ஆத்ம நண்பன் இந்த செல்போன் என்பதால் அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தபடி அதன் ஒளிரும் திரையைப் பார்த்தபோது இரவு நான் எடுக்கத்தவறிய பல அழைப்புகள் (Missed Calls) திரையிலே வரிசைகட்டிக் கிடந்தன. அவற்றிலே ஒரு புதிய இலக்கத்திலிருந்து மட்டும் ஏராளமான அழைப்புகள் கிடப்பது கண்டு வியந்துபோய் அந்த இலக்கத்தை அழுத்தி அழைப்பை ஏற்படுத்தி விசாரிக்கப்போய்தான் இதுவரை நான் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் அந்த அதட்டலும்; வசைபாடலும்…!

அந்தப் பெண்மணி என்னை விடுவதாக இல்லை. மீண்டும் மெதுவாக போனைக் காதில் வைத்தேன்

“…..இப்படியான வேலைகள் செய்வீங்களென்டு கனவிலயும்…நான் நினைக்கேல்ல மாஸ்டர்….” என்று பொரிந்து கொண்டிருந்த அந்தப் பெண் சிறிது இடைவெளி விட்டார்;. ஆனால் நிச்சயம் அது என்மீது கொண்ட பரிதாபம் காரணமாக இருக்காது. மூச்சு வாங்குவதற்காகவோ அல்லது தொண்டையைச் செருமிக் கொள்வதற்காகவோதான் இருக்க வேண்டும்.

“ஹலோ அக்கா! கொஞ்சம் நிப்பாட்டுங்க!” சட்டென்று கிடைத்த இடைவெளிக்குள்ளே அதிரடியாகப் புகுந்து அதட்டல்போட்டு அவரின் சரவெடியை ஒருவாறு நிறுத்தினேன்.

” அக்கா, நீங்க இப்ப பத்து நிமிஷமா என்ட செலவிலதான் எனக்கே ஏசிக்கொண்டிருக்கிறீங்க தெரியுமா? தயவு செய்து கொஞ்சம் நீங்கள் யாரு….இப்ப என்ன விசயம் சம்பந்தமா ஏசிக்கொண்டிருக்கிறீங்க என்டு சொல்லிப்போட்டு ஏசுறீங்களா?..” என்றதும் சிலவினாடிகள் மௌனத்தின் பின்பு மறுமுனையின் தொடர்பு அறுந்து போனது.

‘ அதட்டலுக்கு பயந்திட்டாரா அல்லது திரும்ப ரோஷத்திலே தன்னுடைய செலவில் ஏசப்போகிறாரா புரியவில்லை…. இதென்ன வம்புடா இது?’ என்று போனை உடனே அணைத்துச் சட்டைப்பையினுள் போட்டுக் கொண்டேன்.

மனம் நிம்மதியில்லாமல் தவித்தது.

அறையை விட்டு வெளியேறி பள்ளிவாசலை நோக்கி நடந்தேன். குழாய் நீரில் முகம், கை கால்களைச் சுத்தம் செய்தபின் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு தொழுகைக்கூடத்தின் ஒருபக்கச் சுவரோரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன். இப்போது மனம் சிறிது லேசாக இருந்ததுபோல உணர்ந்தேன்.

‘யார் இவ…? ஏன் இப்படி ஒரேயடியாகத் துள்ளுறா..அப்படி என்னதான் நடந்திருக்கும்?’ என்று நிதானமாக யோசித்தபோதுதான் அந்தப் பெண் போனிலே சற்றுமுன்பு கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

‘இஞ்ச பாருங்க எங்கட பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள்… சின்னதுகள்’ மற்றும் ‘படிப்பிக்கிற ஆள் நீங்களே இப்படிச் செய்யலாமா?’ என்ற அந்தப் பெண்ணின் வார்த்தைகள் எனக்குள் பல்வேறு யூகங்களையும் தோற்றுவித்தது. அப்படியானால்…அந்தப் பெண்மணி என்னிடம் படிக்கின்ற யாரோ மாணவிகளின் தாயாகத்தான் இருக்க வேண்டும். எத்தனை பேர்தான் என்னிடம் படிக்கின்றார்கள்… அதிலே யாராக இருக்கும்? ஆனால் நான் அவர்களிலே யாருக்கும் என்னுடைய கைத்தொலைபேசியின் இலக்கத்தை கொடுத்திருக்கவில்லையே..’

சட்டென்று ஏதோ ஒரு பொறிதட்டவே மீண்டும் கைத்தொலைபேசியை இயக்கி ஆராயத் தொடங்கினேன். எனது விரல்கள் குறுஞ்செய்திக்குரிய உள்பெட்டியை (Inbox) ஐச் சொடுக்கியதும் அது ஏறத்தாழ நிறைந்து கிடப்பது தெரிந்தது. அதுவும்கூட ஒரு குறிப்பிட்ட இலக்கத்திலிருந்து வந்த குறுஞ்செய்திகளால்தான் வழிந்து கொண்டிருந்தது. அந்த இலக்கத்தை உற்றுப் பார்த்தவுடன் திடுக்கிட்டேன்.

ஆம், அது சற்றுமுன் என்னை உண்டு இல்லையென்று ஆக்கிய அந்தப் பெண்ணின் இலக்கம்தான் அது. ‘இதென்ன கூத்து இது?’ என்று பள்ளிவாசலினுள் இருக்கின்றேன் என்பதையும் மறந்து வாய்விட்டு கத்தியே விட்டேன். சற்றுத் தள்ளி ஓரமாக அமர்ந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த மசூதியின் முஅத்தினார்; (தொழுகை உதவியாளர்) என்னைச் சந்தேகமாய் ஒருதடவை பார்த்துவிட்டு மீண்டும் ஓதலானார்;.

தொலைபேசித் திரையிலிருந்து கண்ணை விலக்காமலே பள்ளிவாசலை விட்டு இறங்கி வெளிமுற்றத்திற்கு வந்தேன். காகங்கள் கரைந்து கொண்டிருக்க வானம் வெளுத்திருந்தது. பள்ளி வளாகத்திலே இரண்டொரு கார்களும் வேன்களும் சில லொறிகளும் தரித்துக் கிடந்தன. அவற்றின் முன்புறக் கண்ணாடிகளிலே இரவு பெய்தபனி படிந்து கிடந்தது. பிரதான வீதியில் வாகனங்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டிருக்க பள்ளிவாசலுக்கு எதிரேயிருந்த தேனீர்க்கடையிலிருந்து நாகூர் ஹனீபாவின் இஸ்லாமிய கீதம் ஒன்று காற்றில் பரவிவந்தது.

முற்றத்திலிருந்த மணல் குவியலின் மீது அமர்ந்து கொண்டேன். மனம் காரணமில்லாத பதட்டத்திலிருந்தாலும் நிதானத்தை வரவழைத்துக் கொண்டு அந்தக் குறுஞ்செய்திகளை அவை வந்த ஒழுங்கிலேயே அடியிலிருந்து ஒவ்வொன்றாகத் திறந்து படிக்கலானேன்.

” ஸேர், நீங்க சாப்பிட்டீங்களா…?” என்று தமிழ் எழுத்துகளிலே விசாரித்தது முதலாவது குறுஞ்செய்தி. எனக்கு வரும் குறுஞ்செய்திகள் பொதுவாக ஆங்கிலத்தில் மட்டும்தான் வருவதனால் எனது தொலைபேசியிலே தமிழ் எழுத்துகளில் செய்தி அனுப்பும் வசதியை நான் பெற்றிருக்கவில்லை.

யோசனையுடன் அடுத்த செய்தியைப் பார்த்தால், “சேர் நீங்க நோம்பு பிடிக்கிறீங்களா?” என்று கேட்டது. “இரவு வந்தனங்கள் சேர்!”; என்றது ஒன்று. “ஏன் சேர் தாடியை எடுத்திட்டீங்க?” என்றது மற்றொன்று.. “சேர் விஞ்ஞான டெஸ்ட்டில நீங்க சொன்ன கேள்விகள் வந்தது!” இப்படியே சாதாரண சுகவிசாரிப்புக்களாக ஆரம்பித்து மெல்ல மெல்ல… “ஏன் சேர் இப்படியெல்லாம் அசிங்கமாய பதில் Message போடுறீங்க?” என்றும் ‘சேர் மரியாதை மிக முக்கியம்” என்றும் பின்பு, “சேர் நீங்க நக்கல் அடிக்கிற மாதிரி இருக்கு..” என்று தொடர்ந்து ஒருநிலையிலே, “என்ன நீங்க ஓவராத்தான் போறீங்க? கூடாத மெஸேஜ் அனுப்பினால் நாங்களும் ஏசித்தான்; மெஸேஜ் அனுப்புவோம்” என்றெல்லாம் செய்திகளின் தன்மை வலுக்கத் தொடங்குவதை உணர்ந்தேன். மனம் பதற்றமாகி பரபரப்போடு அத்தனை செய்திகளையும் திறந்து படிக்கப் படிக்க எனது முகம் பாறையாய் இறுகிப்போனது. சிறிதுநேரம் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே குந்தியிருந்தேன்.

“என்ன மாஸ்டர் தம்பி, ஊருக்குப்போய் வந்தாச்சா?” என்று கேட்டபடி தொழகைக்கூடத்திலிருந்து கீழே இறங்கி வந்து வேகமாக நடக்க ஆரம்பித்தார் முஅத்தினார்.

“ஓ! ஓம் நானா..! ஸஹர் செஞ்ச கையோட பஸ் ஏறினதுதான்” என்று பதில் கூறினேன்.

வயோதிபரான அவருக்கு இரத்த அழுத்த வியாதி இருப்பதால் விடிந்ததும் பள்ளிவாசல் வளாகத்தைச் சுற்றிச் சில வளையங்கள் நடப்பது வழமை. அன்றைய தினம் பள்ளிவாசல் வளாகத்தினுள்ளே லொறிகள், வேன்கள், கார்கள் என்று அதிகமான வாகனங்கள் தரித்து நின்றிருந்ததால் அவரது நடைக்குத் தடங்கல்கள் அதிகமிருந்தன. இதனால் அவர் சற்றுச் சிரமப்பட்டே நடைப் பயிற்சியைச் செய்து கொண்டிருந்தார். அவர் நடக்கும் திசையிலே சற்றுத் தூரத்தில் நின்றிருந்த ஒரேமாதிரியான இரு அழகான புதிய கார்கள் என் கண்ணில் பட்டன. அருகருகே நின்றிருந்த அந்தக் கார்களில் ஒன்று அடர்பச்சை நிறத்திலும் மற்றையது வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருந்தன.

அப்பொழுதுதான் எனது மூளையிலே சட்டென ஒரு மின்னல் பளிச்சிட்டது.

ஒருவேளை போனில் ஏசியது அந்த ‘ப்ளக் அண்ட் வைற்’ஸின் தாயாக இருக்குமோ? அவர் கதைத்த விடயங்களையும் எனக்கு வந்திருந்த மெஸேஜ்களையும் பார்க்கும்போது நிச்சயம் எனது அனுமானம் சரியென்றுதான் தோன்றியது.

நகரை அண்டியுள்ள கிராமம் ஒன்றிலே நான் கற்பிக்கும் தனியார் டியூட்டரியில் ஒன்பதாம் வகுப்பிலே படிக்கும் இரட்டைச் சகோதரிகளான இரு மாணவிகளைத்தான் ‘ப்ளக் அண்ட் வைற்ஸ்’ என்பது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இருவரையும் காண்பித்து இரட்டைச்சகோதரிகள் என்று தெரியாதவர்கள் யாரிடமாவது சொல்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைக் கேட்பவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

அந்தளவுக்கு அந்த இரு பெண்பிள்ளைகளிடமும் நிறம் தோற்றம் குணம் முதற்கொண்டு அத்தனையிலும் வித்தியாசங்கள்தான் அதிகம். ஆம், ஒருத்தி பால்போல பளிச்சென்று இருந்தால் மற்றவள் கன்னங்கரேல் கருங்காலி நிறத்திலிருப்பாள். ஒருத்திக்கு அழகான பெரிய விழிகள் என்றால் மற்றவளுக்கு யானைக்குப்போல சிறிய கண்கள். ஒருத்தி என்னுடைய பாடத்தில் படு கெட்டிக்காரி. ஆனால் மற்றவளோ சாதாரண ரகம். ஒருத்தி வெகுநிதானமானவளென்றால் மற்றவள் படு பரபரப்பானவள். அப்படியொரு விநோதமான சேர்க்கையுள்ள இரட்டையர்களாக அவர்களை இறைவன் படைத்திருந்தான். அதனால்தான் அவர்களை ‘ப்ளக் அண்ட் வைற்ஸ்’ என்பது. அப்படிச் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்.

இரண்டு பேருமே ஒரே வகுப்பில் இருப்பதால் கற்பித்தலின்போது வகுப்பறைச் சூழலைக் கலகலப்பாக்குவதற்காக இரட்டையர்கள் இருவரையும் அவ்வப்போது வேடிக்கையாக நான் கேலிசெய்வதுமுண்டு. நான் மட்டுமல்ல, அவர்களது சக வகுப்பு மாணவ மாணவிகளிலிருந்து டியூட்டரி நடத்துனர்; வரையில் அவர்கள் இருவரையும் ‘பென்குயின்ஸ்’ மற்றும் ‘பன்டா பியர்ஸ்;’ என்றெல்லாம் கேலி செய்வது வழமைதான்.

விஞ்ஞான பாடத்தில் வரும் சுவாரஸ்யமான விடயங்களுடன் தொடர்புபடுத்தி நான் கேலி செய்வதால்; வெளிப்படையாக என்னைச் செல்லமாகக் கோபித்துக் கொள்வார்களாயினும் அந்த இருவருக்கும் என்மீது ஒரு தனிப்பிரியமிருக்கத்தான் செய்தது. “சாப்பிட்டீங்களா சேர்?” என்றோ “இன்டைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது உங்களைக் கண்ட நாங்கள் ஸேர்!” என்றெல்லாம் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள் அந்த இருவரும். நானும் அவர்களின் அன்பைப் புரிந்தவனாக பொறுமையாகப் பதில் கூறுவதுண்டு.

அந்தப் பெண்கள் ஆசிரியர்கள் எல்லோருடனும் மேலதிக அக்கறையுடன் பழகுவதற்கு அவர்களிருவரின் தாயின் கதைதான் காரணம். அதை ஒருநாள் டியூட்டரிப் பொறுப்பாளர் என்னிடம் விபரமாகக் கூறி முடித்தபோது ஏதோ 70 களில் வெளிவந்த ஒரு பழைய தமிழ் அல்லது ஹிந்தி திரைப்படத்தின் கதையைக் கேட்பது போலிருந்தது.

அந்தத் தாய் ஒரு பாடசாலை மாணவியாக இருந்த காலத்திலே பருவக்கோளாறு காரணமாக தனது பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக ஓர் இளைஞனைக் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி அவனை மணமுடித்திருந்தாராம். மனமுதிர்ச்சியற்ற வயதிலே திருமண வாழ்வை ஆரம்பித்த காரணத்தினாலோ என்னவோ இருவருக்குமிடையே இருந்த இளம்வயதின் கவர்ச்சிகள் தீர்ந்ததும் அந்தத் திருமண பந்தம் சில மாதங்களுக்குள்ளேயே முடிவுக்கு வரவேண்டியதாகிப்போனதாம். தன்னை நம்பி வீட்டைவிட்டு வந்தவளைக் கர்ப்பிணியாக்கிய அந்த பொறுப்பற்ற இளைஞன் அவளைக் கைவிட்டு எங்கோ சென்றுவிட நிராதரவானாள் நமது இரட்டைகளின் தாய். பெற்றோரிடமும் திரும்பிச் செல்ல முடியாத நிலையிலே வேறுவழியின்றி தற்கொலைக்கு முயன்றவளை அதிஷ்டசவமாக பாடசாலை ஆசிரியையான ஒரு வயது முதிர்ந்த கத்தோலிக்கப் பெண்துறவிதான் காப்பாற்றியிருந்தாராம்.

நமது ‘ப்ளக் அன்ட் வைற்ஸ்’ பிறக்கும் வரையிலே தனது ஆலய விடுதியிலே அடைக்கலம் கொடுத்திருந்த அந்தப் பெண் துறவி தொண்டு நிறுவனமொன்றின் உதவியோடு அவர்களுக்கு வீடு ஒன்றைக் கட்டித்தந்ததோடு தான் மரணமடையும் வரை தாயையும் இரட்டைக் குழந்தைகளையும் தனது பராமரிப்பிலேயே வைத்திருந்தார்.

இதனிடையே ஒருநாள் மனைவியைக் கைவிட்டுச்சென்ற இளைஞன் மனம் திருந்தி தனது மகள்களாகிய இரட்டைச் சிறுமிகளைப் பற்றியும் கேள்வியுற்று அவர்களைக் காண திரும்பி வந்திருந்தானாம். ஆனால் துரதிஷ்டவசமாக அவன் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே சந்தேகத்தின்பேரில் சீருடைக் காவலர்களால் கொண்டு செல்லப்பட்டுவிட்டானாம்;. அன்பிறகு அவனைப்பற்றிய தகவலே இல்லாதிருந்ததாம். எவ்வளவோ முயன்றும் அவனை எங்கே கொண்டு போனார்கள் என்று அறியவே முடியவில்லையாம். நமது நாட்டின் காணாமல் போனோர்களின் பட்டியலில் அவனும் இடம்பிடித்து விட்டானாம்.

சூழ்நிலை காரணமாக அந்தத் தாயும் சகோதரிகளும் வறுமையுடன் போராடியே வளர்ந்திருந்தார்களாம். அதன் பிறகு பல வருடங்களாக கூலிவேலைகளைச் செய்து தனது இரு பெண்களையும் வளர்த்து வந்தாராம் அந்தப் பெண். அவர்களின் நிலைமையை அறிந்து எங்கள் டியூட்டரி பொறுப்பாளர் அவர்களிடம் கட்டணம் கூட அறவிடுவதில்லையாம். நீண்ட காலமாக தந்தை என்ற ஆணின் துணையும் அரவணைப்பும் இன்றியே வாழ்ந்து வருவதால்தான் அந்த இரட்டைச் சகோதரிகள் தம்மீது அக்கறையுடன் கற்பிக்கும் ஆண் ஆசிரியர்களிடம் அதீத அன்புரிமை பாராட்டுகின்ற இயல்புகளைச் சற்றுத் தூக்கலாகவே கொண்டிருக்கின்றார்களாம் என்று அவர்களின் கதையைக் கூறி முடித்தார் பொறுப்பாளர்.

அந்த மாணவிகளின் மிகை இயல்புகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பாடங்களைக் கற்பித்து முடிக்கவேண்டிய அவசரத்தில் இருக்கும் எனக்கு சிலவேளைகளிலே தொல்லையாய் கூட அமைந்து விடுவதுண்டு. அப்படியான வேளைகளிலே இலேசாக அவர்களிருவரையும் கடிந்து கொண்டும் விடுவேன். அப்படி ஏதாவது செய்துவிட்டால் போதும் இரட்டைச் சகோதரிகளின் முகங்கள் வெட்டிப்போட்ட வாழையிலைபோல துவண்டு தொங்கி விடும். வீட்டுக்குப்போனதும் அழப்போகும் அழுகையை தங்களது கண்களிலே அடைகாத்து வைத்திருப்பார்கள் இருவரும்portrait-of-skepticism

மீண்டும் பழைய நிலையை அடைய சில நாட்களாகும். அதுவரை என்னோடு சிறு ஊடல்கொண்டு பேசாமல் திரிவார்கள். சிலவேளைகளிலே வகுப்பிலே கண்கள் கலங்கி அழுவதும்கூட நடக்கும். நானும் அதைக் கவனிக்காதது போலவே இருந்து விடுவேன். உண்மையிலேயே எனக்கிருக்கும் வேலைப்பளுவில் இதையெல்லாம் கவனிக்க முடிவதில்லையாயினும் அவர்களது குடும்ப நிலையை அறிந்திருந்ததால் மனதின் சிறுமூலையிலே மெல்லிய அனுதாபம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் கூடிய விரைவிலேயே அந்தக் கெட்டிக்காரப் பெண்களை அவர்களது படிப்பை நினைத்தாவது ஏதாவது உயர்வாகப்பேசி இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து விடுவேன்.

அந்த இரட்டைச் சகோதரிகளிடம் ஏன் நான் இப்படியெல்லாம் அனுதாபமாய் நடந்து கொள்கின்றேன் என்பது எனது வகுப்பிலே கற்கும் பல மாணவர்களுக்கும் சில மாணவிகளுக்கும் புரிவதில்லை. இதனால் அவர்களில் சிலர் துணிந்து, “சேர், நீங்க ‘ப்ளாக் அண்ட் வைட்ஸ்’ க்குப் பயங்கர ஸப்போர்ட்தானே ஸேர்..?” என்று செல்லக்கோபத்தோடு என்னைக் கலாய்ப்பதுமுண்டு.

உடனே நானும் கடுமையான சிந்தனை வயப்பட்டதுபோல பாசாங்கு செய்து, “பிள்ளைகளே.. கவனியுங்கள்! ஒரு ஆசான் எனப்படுபவர் அவரது மாண்புமிகு மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் பொதுவானவர் என்று இலைகுழை ஆடையுடுத்து தாடிமீசை வைத்திருந்த நமது முன்னோர்களாகிய காட்டுமிராண்டிகள் கல்வெட்டுக்களிலே எழுதிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள்; தெரியுமோ?.” என்று திடீரெனச் செந்தமிழில் பேசி அவர்களைப் பதிலுக்குக் கலாய்ப்பேன்.

உடனே வகுப்பே சுவாரஸ்யமாகிவிடும்.

“ஸேர், எனக்கொரு சந்தேகம்! கல்வெட்டு எழுதும்போது பிழைவிட்டா எதை வச்சு சேர் அழிச்சிருப்பாங்க…?” என்பான் ஒரு வால் பையன்.

“அதுதானே…எதை வச்சு அழிச்சிருப்பாங்க?” என்பேன் நானும் உண்மையான சந்தேகத்தோடு.

“அழிச்சிருக்கவே மாட்டாங்க ஸேர்!” என்பாள் ஒருத்தி.

“ம்ம்..அப்படியா சேதி? ஆகா! எப்பிடி இளவரசியே இவ்வளவு ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறீர்கள்?” என்பேன் நானும் நையாண்டி குறையாமல்.

“அதுவந்து ஸேர்.. பிழைவிட்டா மட்டும் என்ன, பின்னால வாறவங்களுக்குப் புரியவா போகுது என்டு நினைச்சி பேசாம விட்டிருப்பாங்க ஸேர்” என்பாள் அவள்.

மொத்த வகுப்புமே சிரிசிரியெனச் சிரித்து கலகலப்பாகி விடும்.

இப்படியாக அனைவரையும் சமாளித்தவாறு சுவாரசியமாப் போகும் எனது விஞ்ஞானபாடம். தவிர அந்த இரட்டையர்களை சக மாணவிகளோ மாணவர்களோ ஒருபோதும் கோபித்ததுகூடக் கிடையாது என்றால் நம்புவீர்களா? அந்தளவுக்கு தங்களது நல்ல இயல்புகளாலும் திறமையாலும் அனைவரது அபிமானத்தையும் பெற்றிருந்தார்கள் அந்த ‘ப்ளாக் அண்ட் வைற்’ சகோதரிகள்.

“என்ன தம்பி… தனிய.. இருந்து…ஹா..ஆ!..இப்பிடி.. மனசுக்குள்ள சிரிக்கிறீங்க..?” என்றபடி மீண்டும் என்முன்னே வந்து நின்றார் முஅத்தின். நடைப்பயிற்சியால் மூச்சு வாங்கியது அவருக்கு.

“ஏன் நானா இப்படி நோன்பையும் புடிச்சிக்கிட்டு உடம்பை வருத்திறீங்க?”

“என்ன தம்பி செய்யுறது போன க்ளினிக்கில டாக்குத்தர் சொல்லிப்போட்டான் ஒவ்வொரு நாளும் காலையில நடக்காட்டி…ங்ஆ! அதாலதான் நோம்பெல்லாம் பார்க்க ஏலாது வாப்பா..! அதுசரி போன காரியம் என்னாச்சு?” என்று கேட்டார்.

கடல் குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய ஊர் இளைஞர்களின் விபரத்தை பொறுமையாகச் சொல்லி முடித்தேன்;.

“யா அல்லாஹ்! இந்த நோம்பு காலத்துலயும் இப்பிடித் தோணியை எடுத்திட்டுப் போய் கடல்ல விளையாடிச் சாவணுணுமா..? யார்ர புள்ளைகள் வாப்பா..அது? சின்னப்பயலுவளா?”

“ஆங்..மூணுபேரும் தூரத்துச் சொந்தக்காரங்கதான் நானா. ஒருவன் ரஜீஸ், 28 வயசு..மற்றவன் ஸஹீர், மிஸ்பா ரெண்டுபேருக்கும் 19 வயசு இந்த வருஷம் ஏயெல் எடுக்கிற பொடியன்கள்..!”

“அப்பிடியா பாவமே?” என்ற முஅத்தின் திடீரெனத் திரும்பி, “என்ன பேர் வாப்பா சொன்னீங்க..?” என்று ஆச்சரியமாய்க் கேட்டார்.

“ஏன் நானா?” என்றேன் அவரது ஆச்சரியத்தைப் பார்த்து. “இல்ல..இல்ல எங்கயோ கேள்விப்பட்ட பேரு மாதிரி இரிக்குதேண்டுதான் பாத்தன்..” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவரை அப்போது பார்த்து பள்ளிவாசலில் நின்றிருந்த வாகனம் ஹோன் அடித்துக் கூப்பிடவே அவசரமாகச் சென்று விட்டார் அவர். முஅத்தின் வேலைகளோடு பள்ளிவாசலில் தரித்து நிற்கும் வாகனங்களின் பண வசூல் வேலைகளையும் அவரேதான் கவனித்துக் கொள்வதால் எப்போதுமே இப்படித்தான் பாவம். ஓயாத வேலை அவருக்கு.

பள்ளிக்கிணற்றடிக்குச் சென்று குளித்துமுடித்து பரீட்சைத்தாள் ஆயத்தம் செய்வதற்காக அறையைப் பூட்டிக்கொண்டு பொதுநூலகத்திற்குப் புறப்பட்டேன். பள்ளிவாசல் வளாகத்தை விட்டு வெளியிலிருக்கும் பஸ்தரிப்பில் நான் காத்து நின்ற போது அந்த வழியாகச் சென்ற இரு மாணவிகள், “குட்மோர்னிங் ஸேர்” என்று கூறியவாறு என்னைக் கடந்து சென்றார்கள்.

உடனே மீண்டும் எனக்கு அந்த ‘ப்ளக் அன்ட் வைற்ஸ்’ நினைவுக்கு வந்து விட்டார்கள். இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாளலாம் என்றே புரியவில்லை. சே! அவர்களுடைய போனிலிருந்து என்னுடைய போனுக்கு வந்த செய்திகளுக்காக எனக்கு ஏன் அந்தத் தாய் அப்படி ஏசினார் என்பதுதான் இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.

அந்தப் பெண்ணை மீண்டும் போனிலே அழைத்துப் பேசிப் பார்த்தாலென்ன என்று கூட யோசித்தேன். ஆனால் சும்மா கிடந்ததை உசுப்பேற்றி விட்டது போலாகி விடுமோ..? என்றும் பயந்தேன். எதற்கும் கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்று தீர்மானித்துக் கொண்டவனாக வந்த பஸ்ஸிலே ஏறினேன்.

****

பொதுநூலகத்தின் உசாத்துணைப் பகுதியில் நான் பரீட்சைக்குரிய வினாத்தாள் தயாரிப்பிலே மும்முரமாக இருந்தேன் ஆனால் அப்போதும் கூட அதிகாலையிலே என்னை ஏசிய முகம் தெரியாத பெண்ணின் எண்ணமாகவே இருந்தது. ஏதோ ஒரு விபரீதம் நடக்கக் காத்திருப்பது போலவே மனம் அமைதியின்றி உழன்றது.

‘இரவெல்லாம் பூட்டிக்கிடந்த அறைக்குள்ளே கிடந்த போனுக்கு அவர்களது போனிலிருந்து மெஸேஜ்கள் வந்திருக்கின்றது என்றால் என்னை ஏன் ஏசுகின்றார்கள்..?” என்ற யோசனை மீண்டும் மீண்டும் என்னைக் கொன்று தின்று கொண்டிருந்தது. அந்த மெஸேஜ்களிலே கூட… “ஏன் சேர் இப்படியெல்லாம் அசிங்கமாய் பதில் எழுதுகிறீர்கள்?” என்றும் ‘சேர் மரியாதை மிக முக்கியம்” என்றும் இருந்தது நினைவுக்கு வந்தது. அப்படியானால்… எனது போனிலிருந்தும் மெஸேஜ் போயிருக்க வேண்டும் என்றுதானே அர்த்தம்;.. ஆனால் யாருமில்லாத அறைக்குள்ளே கிடந்த போனிலிருந்து எப்படி மெஸேஜ் போகும்..?’ என்று யோசித்தவாறு வெகுஇயல்பாக எனது போனிலுள்ள Sent Message பகுதிக்குச் சென்று பார்த்தேன்;.

அதுவும் நிறைந்துதான் கிடந்தது.

சரி என்று என்னால் அனுப்பப்பட்டிருந்த பழைய செய்திகளை பார்க்கலாம் என்று சொடுக்கியதுதான் தாமதம் மைகாட்! என் கண்களையே நம்ப முடியவில்லை. அந்தப் பெண்ணின் இலக்கத்திற்கு மட்டும் 19 மெஸேஜ்கள் – அவை அத்தனையும் வாசிக்கவே கூசும் படுஆபாசமான கொச்சையான மெஸேஜ்கள்- அனுப்பப் பட்டிருந்தது தெரியவந்தது. அதுவும் நேற்றிரவு நான் மரணவீட்டிலே இருந்த சமயத்திலே!

அப்படியானால்.. நேற்று மதியம் நான் மறந்துபோய் அறையிலே விட்டுச்சென்ற செல்போனை யாரோ கையாண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்..?

ஆனால் அது.. எப்படி?…எப்படிச் சாத்தியம்?

பூட்டியிருந்த அறைக்குள்ளே வந்து இதை யார் செய்திருக்க முடியும்? அப்படி வந்தவர்கள் ஏறத்தாழ எண்பதினாயிரம் ரூபா பெறுமதியான இந்த வெளிநாட்டு போனைத் திருடிச் செல்லாமல் ஏன் இப்படி எனது மாணவிகளின் இலக்கத்துக்கு ஆபாசச் செய்தி அனுப்பியிருக்க வேண்டும்..? அப்படியானால் எனக்கு வேண்டுமென்றே கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரவேண்டுமென்று நினைக்கும் யாரோ இங்கே இருக்கின்றார்களா..? எனக்குப் பயமும் பிரமிப்புமாகச் சேர்ந்து தலையைச் சுற்றியது. சிறிதுநேரம் பிரமை பிடித்தவன் போல அப்படியே அமர்ந்திருந்தேன்.

இல்லை..! இதை இப்படியே விடக்கூடாது. உடனடியாகக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற ஆவேசம் உண்டாகவே எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு பஸ்ஸைப் பிடித்து மீண்டும் நான் தங்கியிருந்த பள்ளிவாசல் வாடகை அறைக்கு வந்து சேர்ந்தேன். அந்தப் பிரதேசமே ஆள் நடமாட்டம் குறைந்து அமைதியாயிருந்தது. அறையைத் திறக்க முன்பு அதன் கதவையும் பூட்டுகளையும் நோட்டமிட்டேன். அவை எல்லாமே வேறுயாரும் திறக்கமுடியாதளவுக்குப் பாதுகாப்பாகத்தான் இருந்தன. என்னைத் தவிர முஅத்தினாரிடம்தான் இந்த அறைக்குரிய மற்றொரு திறப்பு உள்ளது. அதுவும் நானேதான் ஒரு முற்காப்புக்காக அவரிடம் கொடுத்து வைத்திருந்தது.

அப்படியானால் முஅத்தின் நானாவைத்தான் சந்தேகப்படுவதா, சே! அவருக்கு இப்படிச் செய்ய வேண்டிய தேவை என்ன? அத்தோடு சாதாரண தொலைபேசியே அதிகம் பாவித்தறியாத வயோதிபர் அவர். அப்படியானால் யார் இந்த சதிவேலையைச் செய்திருப்பார்கள்? கண்ணுக்குத் தெரியாமல் செயல்படும் எனது எதிரிகளோடுதானா இத்தனை நாளும் இந்த இடத்திலே நான் இருந்து கொண்டிருக்கின்றேன் என்று எண்ணியபோது உடலெல்லாம் உள்ளுர நடுங்கியது எனக்கு.

மனமெல்லாம் வெறுமையாகி கால்கள் பலமிழந்தது போலிருக்க அறையைக் கூடத் திறக்காமல் அப்படியே வாசலிலே அமர்ந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் முஅத்தின் என்னை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

“தம்பீ வந்திட்டீங்களா? காலம்பொறயிலருந்து ஒங்களத்தானே தம்பி தேடிக்கிட்டிருக்கேன்… விடியப்புறம் சொல்ல நெனச்சிக்கிட்டு இருந்தேன்..அதுக்குள்ளே வந்து எங்கயோ குர்பான் ஆடு தக்பீர் பண்றதுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டானுகள்…திரும்பி வந்து பாத்தா ஒங்கள காணல்லியே..” என்றவாறு என்னை நோக்கி வந்தார் முஅத்தின்.

“என்ன விசயம் நானா?” என்றேன் கசப்புடன்.

” தம்பீ, நேத்து காலம்பற நீங்க ஊருக்குப்போன பொறவு லுஹர் நேரம் மூணு இளந்தாரிப் பொடியனொள் மோட்ட சைக்கிள்ள வந்தானுவொள். இஞ்ச எங்கயோ ஸெமினாருக்கு போகணுமாம். ஒரு ராவு தங்கி நிண்டு போறதுக்கு றூம் கேட்டானொள். அந்த நேரம் ஒரு றூமும் கிடையாது. பொறவு ஒங்கட பேரைச் சொல்லி இஞ்சயா இரிக்கிங்க எண்டு கேட்டானொள். நானும் ஓம் மாஸ்டர் தம்பி இஞ்சதான் இரிக்கிற இப்ப ஊருக்கு மையத்து வூட்டுக்குப் போயிருக்கிறாருண்டு சொன்னேன். ஒங்கட பக்கத்து ஊர்தானாம் தெரியுமாம் என்டு பயலுவள் சொன்னதால நாந்தான் நிண்டுட்டுப் போட்டுப் போகட்டும் என்டு உங்கட றூமைத் தொறந்து வுட்டேன் வாப்பா.. படுத்துக் கெடந்து காலம்பற சுபஹு தொழுத கையோட பொயிட்டானுவள்…! பிரச்சினையில்லையே ..தம்பீ..?

“பிரச்சினை..யில்லையா? எவ்வளவு வாங்கினீங்க அவனுகளுக்கிட்ட?” என்று கேட்பதற்கு பற்றிக்கொண்டு வந்த கோபத்தை உதடுகளிலே வைத்து அடக்கிக் கொண்டு பேசாமலிருந்தேன்.

“ஆனா தம்பீ.. ஒங்கட பொஸ்தகம் சாமானுவள் எதையும் தொடப்படாது என்டு சொல்லித்தான் உள்ளேயே வுட்டேன் தம்பீ…?” என்று என் முகத்தைப் பார்க்கத் திராணியின்றி வேறு எங்கோ பார்த்துக்கொண்டுதான் பேசினார்.

“என்ன தம்பீ, ஒண்ணுமே பேசுறீங்க இல்ல..? ஒங்கட சொந்தமெண்டு சொன்னதாலதான்…” என்றார் குற்றவுணர்வுடன் குனிந்தபடி. அவரைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது.

” அதுசரி, எப்பிடி ஆக்கள் நானா? பேர் ஏதாவது சொன்னானுகளா…..?” என்றேன் எனது எரிச்சலை வெளியிலே காட்டாமல்.

“ஆ! இரிங்க…! இப்படி நீங்க கேப்பீங்கண்டுதான் எதுக்கும் இருக்கட்டுமெண்டு பள்ளிக்குள்ள வாற வாகனத்தை பதியிற கொப்பியில கடசிப்பக்கத்துல அவனொள் பள்ளய வுட்டுப் போறநேரம் மூணு பேர்ர பேரையும் கேட்டுஎழுதி வைச்சிருக்கேன் தம்பீ. இரிங்க..அதைக் கொஞ்சம் எடுத்திக்கிட்டு வாறேன்” என்று மசூதியின் மெயின்கேற்றுடன் இருக்கும் வாகனப் பதிவுக்கூண்டை நோக்கி வேகமாக நடந்தார் முஅத்தினார்.

அவர் வரும்வரை என்னுடைய ஆவலை அடக்க முடியவில்லை.

சட்டென அவரை முந்திக்கொண்டு வாகனப்பதிவுக் கூண்டை நோக்கி ஓடிச்சென்று அந்தக் கொப்பியை எடுத்து அவசர அவசரமாக படபடவெனத் தட்டிப் பார்த்தேன். அந்த பெரிய ஸீ ஆர் கொப்பியின் கடைசிப் பக்கத்தின் ஒரு மூலையிலே ரஜீஸ், மிஸ்பா, ஸஹீர் என்று நேற்றைய தினம் நீரில் மூழ்கி இறந்துபோன மூவரின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தது.

– ஆகஸ்ட் 2012 (கிண்ணியா.காம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *