கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 324 
 
 

விழிப்புக் கண்டதும் எழுந்து உட்கார்ந்துகொண்டான். இடுப்பில் போர்வைதான் இருந்தது. சாறம், தூர வழுகிய நிலையில் கிடந்தது. எழுந்து சாறத்தை உடுத்திக் கொண்டான்.

பக்கத்தில் அம்மாவைக் காணவில்லை.

‘பால் கறக்கிறாளா….? பால் கறந்து போட்டு…. பெரிய பனந் தோட்டப் பக்கம் விறகு எடுக்கப் போயிருப்பாள்.’

நினைவுகளுடன் எழுந்து, கோடிப் பக்கம் போய் ஒண்டுக் கிருந்தான். சிறு கடுக்கலும் எரிவும் இருந்தது.

புறாக்களின் நினைவு வர புறாக்கூட்டுப் பக்கம் போனான். கூட்டைத் திறந்து விட்டான். சோடி இழந்திருந்த மயிலை நிறக் கொண்டைப் புறா, செல்வம் தந்த பெட்டையுடன் சோடி சேர்ந்ததைப் பார்த்து அதிசயித்தான்.

இனிப் பெண்புறா முட்டையிடும். ஆணும் பெண்ணும் மாறி மாறி அடை காக்கும். குஞ்சு பொரிக்கும். இரண்டு நாலாகும். நாலு ஆறாகும்….’

அவன் விழிப்பு நிலையில் கனவு கண்டான்.

புறாக்கூட்டைக் கடந்து, முயற்கூடு இருந்த இடத்துக்குப் போனான். வெண் பஞ்சுக் குவியலாக முயல்கள். இரு முயல்களும் நெருக்கமாக இருந்தன. இளங் காலைக் குளிரில் அவை லேசாக நடுங்கின. முயல்களின் சிவப்பு மணிக் கண்கள் அவனைப் பெரிதும் ஈர்த்தன. வைத்த கண் மாற்றாது பார்த்தபடி நின்றவன், செவிகளைப் பற்றி முயல் ஒன்றை வெளியே எடுத்தான். முயலின் பின்னங்காற் பக்கமாக இரு விதைகள் இருந்தன. விதைகளைத் தடவிப் பார்த்தவன் அதை மீளவும் கூட்டுக்குள் விட்டுவிட்டு பெட்டையைத் தூக்கினான். ‘குட்டி போடுமா….? அடி வயிற்றைத் தடவிப் பார்த்தான். எதுவும் அவனுக்குப் பிடிபடவில்லை . மெதுவாக அதனையும் விட்டுவிட்டு, மிளகாய்த் தோட்டப் பக்கம் போனான்.

தோட்டத்தின் கிழக்குச் சாய்வில் குப்பைக் கீரையும், கோழிச் சூடனும் சடைத்து வளர்ந்திருந்தன. கை நிறைய அவற்றைப் பிடுங்கி வந்து முயல்களுக்குப் போட்டான். முயல்கள் அவற்றை வெட்டுப் பற்கள் தெரியச் சிரித்தபடி, வெட்டி வெட்டிச் சாப்பிட்டன. புறாக்க ளுக்கும் பாசிப் பயறு விசிறி விட்டு மாட்டுத் தொழுவத்தைப் பார்த்து நடந்தான்.

பூச்சிப் பசுவிலும் வெள்ளைப் பசுவிலும் கன்றுகள் முட்டி மோதிப் பால் குடித்துக் கொண்டிருந்தன.

‘அம்மா பால் கறந்திட்டுத்தான் பனந்தோட்டப் பக்கமாப் போயிருக்கலாம். அம்மா கூடப் போயிருந்தால் ‘அணில் கோதின’ நுங்கு எடுத்து வந்திருக்கலாம்….’

சலித்தவன் வெள்ளைப் பசுவின் கன்றைப் பிடித்துக் கட்டிவிட்டு, பசுவின் மடியைப் பிடித்துத் தடவியபடி முலைக் காம்பில் வாய் வைத்துச் சுவைத்தான். பசு எக்கி இவனுக்குப் பால் தந்தது. வாயில் சுரந்த பச்சைப் பாலின் மொச்சை இவனுக்குக் குமட்டியது. எழுந்தவன், பூச்சிப் பசுவின் கன்றையும் இழுத்துக் கட்டினான். வைக்கலை எடுத்துப் பசுக்களுக்கு முன்னால் உதறிப் போட்டான் கன்றுகளுக்கு முன்னாலும் இரண்டு தூர் வைக்கல் தூவினான்.

தொழுவம் சுத்தமாயிருந்தது. அம்மாவே அவனது வேலை யையும் செய்திருப்பது திருப்தியாக இருந்தது. பூச்சிப் பசு புதிதாகப் போட்ட எரு விட்டைகளை எடுத்துக் கும்பியில் வீசியவன், கிணற் றடிப் பக்கம் போய் கை அலம்பிக்கொண்டான்.

அடுப்படித் தாவாரத்தில், சட்டியில் இருந்த சாம்பலைக் கை நிறைய எடுத்து பல் விளக்கினான். அவன் முகம் கழுவி நிமிர்ந்த போது, அம்மா விறகுக் கட்டுடன் வந்து விட்டாள். இவனைப் பார்த்ததும் சொன்னாள், “அப்பன் ஒரு நிமிஷம் பொறடி… பிள்ளைக் குத் தேத்தண்ணி தாறன். தோட்டத்திலை அய்யா நிக்கிறார்…. அவருக்கும் கொண்டு போய்க் கொடுக்க வேணும்.”

கிணத்தடிக்கு வந்த அம்மா, கை கால் கழுவினாள். பின்னர், அடுக்களைக்குள் நுழைந்தாள். “ராசா மதி வந்து பால் எடுக் கேல்லைப் போல… இதை ரெண்டு எட்டிலை மாமி வீட்ட குடுத்திட்டு வா….”

இவன் பால் போத்திலை எடுத்துக் கொண்டு மாமி வீட்டுப் பக்கம் போனான்.

படலைச் சத்தம் கேட்டதும் ரதி மச்சாள் ஓடி வந்து இவனை அணைத்தபடி, பாலை வாங்கிக் கொண்டாள். மதியைக் காண வில்லை . ரதி மச்சாள் ஓடி வந்ததைப் பார்த்த மாமி, “என்னடி… நீ குமரல்லா… அடக்க ஒடுக்கமா இருந்தா என்ன… எப்பவும் இவவுக்கொரு குதிப்பும் கும்மாளமும்….”

உதட்டை நெளித்து, தனது வெறுப்பைக் காட்டிய ரதி, இவன் வீடு திரும்பவதைத் தடுத்தபடி கேட்டாள், “ரகு கொண்டைக் கிளாத்திக் கூடு பாக்கேலையா…?”

“எங்கை இருக்கு..” “மரவள்ளித் தோட்டத்திலை…..”

ரதி குதித்துக் கொண்டு முன்னால் ஓட, இவன் அவளைத் தொடர்ந்து பின்னால் சென்றான்.

தோட்டத்தில், மரவள்ளி உயர்ந்து வளர்ந்து பச்சைக் கூடாரம் அடித்ததுபோல இருந்தது. உள்ளே ஒளி படாத இருட்டும் கூடவே இருந்தது.

ரகுவுக்குப் பயமாக இருந்தது. தோட்டத்தில் தயங்கித் தயங்கிக் கால் வைத்த போது, ரதி மச்சாள் தான் இவனது கையைப் பிடித்தபடி கூட்டிக் கொண்டு போனாள்.

தோட்டத்தின் தொங்கலில் கூடு இருந்தது. இவர்கள் இருவரி னதும் அரவம் கேட்டதும் குருவி விருட்டென்று போனது. குருவியின் கொண்டையும் வாலின் அடியாகப் பூசியிருந்த சிவப்பும் ரகுவை மருட்டின.

மரவள்ளிக் கிளைகளுக்கு இடையில் கூடு.

இவன் எட்டி எட்டிப் பார்த்தான். கூடு எட்டவில்லை. அதன் அடிப்பக்கம் மட்டும்தான் தெரிந்தது. ரதி மச்சாள் இவனைத் தூக்கிக் காட்டினாள்.

கூட்டினுள் இரண்டு முட்டைகள். சின்ன முட்டைகள், ஊதாவும் கபிலமும் கலந்த புள்ளிகளோடு…… இவன் கை விரல்களை நீட்டி முட்டைகளைத் தொடப் போனபோது ரதி மச்சாள் தடுத்தபடி கூறினாள், “தொடாதை குஞ்சு பொரிக்காது….”

“உண்மையா…?” விழிகளை மலர்த்திக் குறுஞ்சிரிப்புடன் கேட்டான்.

“இந்தக் குட்டி….. இந்தச் செல்லம்….. சிரிக்கேக்கை நல்ல வடிவு.”

ரகுவை ரதி இறக்கிவிடும்பொழுது, அவனது சாறம் அவிழ்ந்து விடுகிறது. அவன் வெட்கத்துடன் அதை எடுத்து உடுக்கப்போன போது, “அவற்றை வெக்கத்தைப் பாரு….. வெக்கத்தை” கூறின ரதி மச்சாள் அவனது சாறத்தை உருவி எடுத்தபடி, அவனை இழுத்துத் தனது மார்புடன் அழுத்தமாக அணைத்துக் கொண்டாள். அவன் எதிர்பாராத வேளை, அவனது நெற்றியிலும் கண்களிலும் பூப்போல முத்தமிடவும் செய்தாள். அந்த நெருக்கமான ஸ்பரிசம் அவனுக்கு மிகுந்த கூச்சத்தையும் படபடப்பையும் தந்தது.

“ரதி மச்சாளின்ரை நெஞ்சு என்ன ஆர்பிக்கோ ரபராலை செய்ததா….! மெத்தை மாதிரி மெதுமெதெண்டு இருக்கு….”

விளங்கியும் விளங்காமலும் அவன் குழம்பினான். எல்லாமே ஒரு நிமிஷம்தான். அவன் அவளது கைகளில் இருந்து விடுபட்டு, ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தான்.

“ஏனப்பு! இவ்வளவு நேரம்…?”

அம்மா கேட்ட கேள்விக்கு, “கொண்டைக் கிளாத்திக் குருவிக் கூடு பார்த்தனான் அதுதான்…” என்று பதில் தந்தான். ரதி மச்சாளைப் பற்றி அவன் மூச்சுவிடவில்லை .

அம்மா இவனுக்குத் தேநீர் தந்தாள். அய்யாவின் தேத் தண்ணியையும் பெரிய பேணியில் ஊற்றி வைத்தாள். ஊதி ஊதித் தேத்தண்ணியைக் குடித்தபோது, ரதி மச்சாளின் நினைவுதான் அவனைத் திரும்பத் திரும்ப ஆக்கிரமித்துக் கொண்டது.

‘அவ கெட்டவ… ஊத்தைப் பழக்கம்…. எப்பிடித் தொடாத இடமெல்லாம் தொட்டு, கொஞ்சி… சீ…. வேர்வையோட குட்டிக்கிறாப் பவுடரும் அவவில மணத்தது…. மாமி சொன்னமாதிரி அவ ஆட்டக்காரி. சரியான ஆட்டக்காரி. மச்சாளைப்பற்றி மாமியிற்றைச் சொல்ல வேணும்….’

அவன் முணுமுணுத்துக்கொண்டான்.

பெரிய பேணியுடன் அஞ்ஞாத் தோட்டத்துக்குப் போன பொழுது, வெய்யில் ஏறியிருந்தது. அய்யா, ராசா அண்ணர், சங்கரன் எல்லாரும் தோட்டத்தில் நின்றார்கள். அய்யா நறுக்நறுக் என்று புகையிலையை வெட்டிக் கொடுக்க, ராசா அண்ணரும் சங்கரனும் தங்களது தோள்களில், வெட்டிய புகையிலையைத் தாங்கிக் கொண்டு போய், பெரிய வயற் பக்கம் பரவினார்கள்.

தேநீரை வாங்கிக் குடித்த அய்யா, இவனைப் பார்த்துக் கேட்டார், “ஒரு கண்டு வெட்டித் தாறன் நீயும் பரவன்ரா…”

“ம்” என்று தலையசைத்தவன், அவர்களைப் போலவே தனது சின்னத் தோளில் புகையிலையை வாங்கிச் சுமந்து சென்று பரவினான்.

கொஞ்ச நேரத்தில் அவனுக்கு அலுப்பு வந்துவிட்டது. ஆடுகால் நிழலில் போய் உட்கார்ந்துகொண்டான்.

ராசா அண்ணர் கிணற்றடிக்கு வந்து, பட்டையில் நீர் ஏந்திப் பருகினார். இவனும் அவரிடம் நீர் வாங்கிக் குடித்தான்.

அம்மா தூரத்தில் வருவது தெரிந்தது. தகரக் கேத்தலில் தேநீர்தான் அம்மா கொண்டு வந்தாள்.

ராசா அண்ணருக்கும் சங்கரனுக்கும் தேநீரை வார்த்து வார்த்துக் கொடுத்தாள்.

இவனைப் பார்த்து அம்மா கேட்டாள், “வாவன்ரா வீட்டை… ரொட்டி சுட்டுத் தாறன்.”

“புகையிலை கொஞ்சம் பரவியிட்டு வாறன்.”

இவனது பதிலைக் கேட்டதும் அம்மா அய்யாவைப் பார்த்துச் சிரித்தாள். அய்யா காதிலை செருகியிருந்த புகையிலைக் காம்பை எடுத்து, கொடுப்பில் அதக்கியபடி கூறினார், “அவனும் கொஞ்சம் பழகட்டுமன்….”

“பிள்ளைக்கு வெய்யில் நல்லாச் சுடப் போகுது” என்று கூறிய அம்மா, பெரிய பேணியையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அம்மா போவதையே இவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘அம்மா எவ்வளவு வடிவு. தாவாடியில் அம்மாவைவிட, வேறை ஆர் வடிவு…… ரதி மச்சாளும் வடிவுதான். ஆனா அவ கெட்டவ. கூடாதவ…. மதி வளர்ந்து அம்மா மாதிரித்தான் வருவா. ரதி மச்சாள் மாதிரியெல்லாம் வரமாட்டா.’

மதி ரதியின் தங்கை. அவனைவிட இரண்டு வயது இளைய வள். இவனைக் காணும் போதெல்லாம் “மதி உனக்குத் தானடா…” என்று மாமி சின்னச் சிரிப்புடன் சொல்லுவாள்.

அப்பொழுதெல்லாம் இவனுக்கு ஏதோ புரிந்தும் புரியாத மாதிரியும் இருக்கும். கூடவே கொஞ்சம் கூச்சமும் தகையும். மாமியின் அந்தப் பேச்சு, மதியிடத்தில் ஒரு விருப்பத்தை அவனுக்கு ஏற்படுத்தி இருந்தது.

‘ரதி மச்சாளின்ரை கதையை மதிக்குச் சொல்ல வேணும். இப்பவே சொல்ல வேணும்.’ நினைத்தபடி தோட்டத்தில் இருந்து புறப்பட்டான்.

“எங்கையடா போறை… புகையிலை புறக்கேல்லையா. உலர்ந்ததும் கொஞ்சம் புறக்கிப் போட்டுப் போ.” அய்யாவின் குரலை அவனால் மீற முடியவில்லை. உலர்ந்த புகையிலையை உதறிப் பார்த்து சங்கரன் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி வருவதைக் கண்ட இவன், தானும் சங்கரனுடன் சேர்ந்து புகையிலை பொறுக்க ஆரம்பித்தான். சூரியனின் அசுரத் தனம் – இவனது பின் முதுகில் தகித்தது. முதுகுத் தோல் தணலில் பொசுங்குவது போல இருந்தது.

அய்யாவை நினைத்ததும் அவனுக்குப் பாவமாய் இருந்தது. ‘அய்யா மாதிரி இல்லாமல் படித்து உத்தியோகம் பார்க்க வேணும். சீலிங் விசிறிக் காத்தில் அல்லது குளிர் அறையில் மேசையில் இருந்து வேலை செய்ய வேணும். மாதாமாதம் சம்பளம் எடுத்து அம்மாவின்ரை கையிலை கொடுக்க வேணும்.’

ஆசை அடங்காத கிளர்த்தல்கள்.

வெய்யிலில் தகித்தவன் ஆடுகால் நிழலை நோக்கி ஓடினான். அய்யா இவனைப் பார்த்து, “வீட்டை போ” என்றார். விடுதலை பெற்ற உணர்வுடன் வீட்டை நோக்கி ஓடினான். மதியைப் பார்ப்ப தற்கு முன்னதாக, அவனுக்குச் சாப்பிட வேண்டும் போலிருந்தது.

வெங்காயமும், பச்சை மிளகாயும் போட்ட கோதம்பை ரொட்டி அம்மா சுட்டுத் தர, இவன் சம்பலுடன் இரண்டு ரொட்டி சாப்பிட்டான். சாப்பாடு ஆனதும், முயல்களைத் திறந்து விட்டான். புறாவுக்கும் முயலுக்கும் தண்ணீர் மாற்றி வைத்தான். பின்னர், மதியைப் பார்ப்பதற்குப் புறப்பட்டான். மதி வீட்டில் இல்லை. ரதி மச்சாள்தான் ஓடி வந்து கையைப் பற்றினாள். அவளுக்கு முகம் கொடுக்காமல் மாமியிடம் கேட்டான், “மதி எங்க மாமி?”

“கடைக்குப் போனவள், இரு வந்திடுவாள்.” மாமியின் பதிலைக் கேட்டபடி, அவன் கடை வரைக்கும் போனான்.

இவனுக்கு, ரதி மச்சாளைப்பற்றி மதியிடம் எதைச் சொல்ல வேணும் எப்படிச் சொல்ல வேணும் என்பது பிடிபடாமல் இருந்தது.

மதியை அழைத்துக் கொண்டு , கொண்டைக்கிளாத்திக் கூடு பார்க்கப் போனான். ரதியும் இவன் பின்னால் ஓடி வந்தாள். தங்கையைத் தூக்கிக் கூட்டைக் காண்பித்தாள். இவனைத் தூக்கிக் காட்ட வந்த போது, உதடுகள் வெடிப்புறச் சற்றுக் கோபம் அடைந்தவனாக, “எனக்கு வேண்டாம்” என்று ஒதுங்கிக் கொண்டான்.

ரதியின் கண்களில் நீர் திரண்டு விட்டது. “இனிமேல் அப்படி யெல்லாம் செய்ய மாட்டனடா. அம்மா சத்தியம்.” ரதி மச்சாள் இவனது காதில் மெதுவாகச் சொன்னாள்.

“கெட்டவ… இவ சரியான அரிகண்டம்….” முனகியவன், ரதியை விட்டு விலகி நின்று கொண்டான். என்றாலும், ‘மச்சாள் பாவம்’ என்ற உணர்வு அவனை வருத்தவும் செய்தது.

மதிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. –

“மாமீற்ரை சொல்லுவன்…. கட்டாயம் சொல்லுவன் …” என்றவனைக் கெஞ்சுவது போலப் பார்த்த ரதி, “என்ற ரகுவெல்லா….. நல்ல பிள்ளையெல்லா….” என்று அவனது தாடையைப் பற்றி, வாயை அழுத்தமாக மூடினாள்.

மதிக்கு, ரகுவுக்கும் – ரதிக்கும் இடையே நடந்த அந்த நாடகம் விளங்கவில்லை. ‘ரகுவைத் தனியாகக் கேட்டுப் பார்ப்பம்’ என்று நினைத்துக் கொண்டாள்.

வீட்டுக்குத் திரும்பியதும் நார்க் கடகத்தை எடுத்துக்கொண்டான். “எங்கை ராசா….” அம்மாதான் கேட்டாள். “நவக்கைப்பக்கம்….. எரு ஏதும் கிடந்தால் அதுதான்….”

‘நவக்கை எண்டால் மதி வருவாள்’ என நினைத்துக் கொண்டான்.

அவள் வீடு வந்து மதியை அழைத்துக்கொண்டு போனான். பங்குனியின் கடைக்கூறு. வெய்யில் தகித்தது. நவக்கைக் குளத் தைக் கடந்து, வயல்வெளியில் இறங்கிய இருவரும் எருப் பொறுக்கினார்கள். கடகம் நிரம்பியதும் குளத்தில் இறங்கிக் கை கழுவிக் கொண்டார்கள்.

“சப்பட்டைக் குருவிக்கூடு பார்க்கப் போறியா…..?”

இவன் மதியைப் பார்த்துக் கேட்டான். அவள் “ம்” கொட்டித் தலையசைத்தாள்.

காட்டுச் செவ்வந்திச் செடிகள் மண்டிக் கிடந்த வயல்களைப் பார்த்தவன், வயல்களில் இறங்கி, “ச்சூய்… ச்சூய்…” என்று குரல் எழுப்பி, கைகளைத் தட்டி அங்குமிங்கும் ஓடினான். அவனைத் தொடர்ந்து மதியும் ஓடினாள். நிலத்தில் செடிகளுக்கு இடையே இருந்து குருவிகள் பறந்தன. குருவிகள் பறந்த இடத்தைக் குறி வைத்து இருவரும் தேடுதலில் இறங்கினார்கள்.

இரண்டு கூடுகள் அவர்களது கண்களில் பட்டன. ஒரு கூட்டில் நாலு முட்டைகள். மற்றதில் செட்டைகள் ஏதுமற்ற தோலியாய் இரண்டு குஞ்சுகள். முட்டைகளை ஒவ்வொன்றாகத் தூக்கிப் பார்த்து விட்டு வைத்தார்கள். குஞ்சுகளை ஸ்பரிசிப்பதற்குக் கூசியவர்களாய் அவற்றைப் பார்த்தபடி இருந்தார்கள். இவர்களது அரவம் கேட்டதும், குஞ்சுகள் தமது தலைகளைத் தூக்கி மென்மையான மஞ்சள் அலகுகள் விரிய வாயைப் பெரிதாகத் திறந்தபடி குட்டிப் பாம்புகள் போல ஆடின. அதையே பார்த்தபடி இருந்தவர்கள், அடுத்த கணம் குளத்தை ஒட்டியிருந்த சிவகுருவருடைய வயலைப் பார்த்து நடந்தார்கள்.

“உனக்கு வாலாட்டிக் குருவிக் குஞ்சு பார்க்க ஆசையா?” என்ற இவன் கேட்க, “ம்” என்று மீளவும் அவள் தலையசைத்தாள்.

குளத்துக் கட்டை அண்மித்த இருவரும், கட்டில் வளர்ந்து நின்ற பூவரச மர நிழலில் இருந்தார்கள். மரத்தின் மேலே சடாரென ஏதோ ஓசை. படபட என சிறகுகளை அடித்தபடி மணிப்புறா.

“மரத்தில மணிப்புறாக் கூடு இருக்கு மதி…” கூறியவன், மரத்தில் தாவி ஏறினான். அவன் மரமேறும் லாவகம் மதியை மலைக்க வைத்தது.

“பத்திரம், விழுந்திடாதை…” மதி அவனுக்குப் பக்குவம் சொன்னாள்.

மரக்கிளைகளுக்கு இடையே பாதுகாப்பாகப் புறா கூடு கட்டி யிருந்தது. அதில் மூன்று முட்டைகள். வெள்ளைவெளேரென. ஒரு முட்டையை எடுத்து மதிக்குக் காட்டியவன் கீழே இறங்கி வந்தான்.

மதிக்கும் கூட்டைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. ஆசை யுடன் மரத்தில் தொத்தியவளுக்கு , இவன் தோள் கொடுத்தான். அவள் மெதுவாக ஏறி, புறாக்கூட்டைப் பார்த்துவிட்டு இயங்கிய போது, இவன் அவளைப் பார்த்துக் கேட்டான், “மதி….. நீ ஏன் நிக்கர் போடேல்லை?”

அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவள் மெதுவாகச் சிரித்தபடி, “எங்க வாலாட்டிக் குருவிக் குஞ்சு…..” என்று கதையை மாற்றிப் பேசினாள்.

“அங்க பார்….வாலை ஆட்டியாட்டி வருகுது, அது குருவி. குஞ்சு வரேல்லை. நாளைக்குப் பார்ப்பம்…” கூறியவன் எழுந்து கொண்டான். அவளும் இவனுடன் எழுந்து கொண்டாள். இருவருக்கும் தண்ணீரத் தாகம் எடுத்தது.

“ராசா அண்ணர் வீட்டில தண்ணி குடிப்பமா?” மதிதான் கேட்டாள்.

“சரி” என்று கூறியவன், ராசா அண்ணர் வீட்டை நோக்கி அவளுடன் நடந்தான்.

‘அண்ணர் தோட்டத்திலை, அவ இருப்பா…’ என நினைத்துக் கொண்டான். படலை கட்டிக் கிடந்தது. அவிழ்த்துக் கொண்டு உள்ளே போனார்கள். ஆள் சிலமனில்லை. வீட்டுக் கதவு பூட்டிக் கிடந்தது. மெதுவாகத் தட்டினான். ‘டக்’ என்று உள்ளால் பூட்டுத் திறப்பட்டது. கதவும் திறபட்டுக் கொண்டது.

அண்ணர் பெண்சாதி அரிசிப் பல்லுத் தெரியச் சிரித்தபடி வெளியே வந்தாள். அவளைத் தொடர்ந்து, தருமு அண்ணரும் கரும்பூதமாய்…

“ஆர் இந்தக் கரடிக் குட்டியள்?” தருமு கேட்டான்.

“சிவபூசையிலை…!’ தருமு தொடுத்ததை, சிரித்தபடி அண்ணி முடித்து வைத்தாள்.

இவனுக்குப் புரிந்ததும் புரியாததுமாய் இருந்தது. இருந்தும் ஏனோ ராசா அண்ணர் பாவம் என்பது மட்டும் அவனுக்கு விளங்கியது. தொண்டையில் ஏதோ திரண்டு சங்கடப்படுத்த வாயடைத்துப் போய், “தண்ணி” என்றான். அண்ணி செம்பில் தண்ணி எடுத்துத் தந்தாள். மடக்மடக் எனக் குடித்தவன், மதிக்கும் தந்தான்.

“தண்ணி உப்புக் கைக்குது….”

“உப்புக் கைக்குதோ…. அவற்ரை பொய்யைப் பார். எல்லாம் உங்க கிணத்துத் தண்ணிதான். நல்ல தண்ணி.”

“இப்பவே மச்சாளைச் சாய்க்கிறான்….” தருமுவின் பகிடி இவனுக்கு அருவருப்பாய் இருந்தது. ஏதோ நரகலை மிதித்து விட்டதுபோல அவதிப்பட்டான்.

மதியைப் பார்த்தான். நிஷகளங்கமாய் நின்றாள். அன்புடன் அவளது கையைப் பற்றியபடி வெளியே வந்தான். அவனைச் சூழ, எல்லாமே அவனுக்குப் பிடிக்காத மாதிரி இருந்தது. அம்மாவை நினைத்துக் கொண்டான். அவள் பெயருக்கு ஏற்ற லஷமிதான். மதியைப் பார்த்தான். அவள் ஒன்றும் பேசாமல் இவனுடன் இணைந்து நடந்தாள்.

‘இந்தப் பெட்டை மதி எவ்வளவு நல்லவள்.’ ரதி மச்சாளின் நினைவுகளும் சடைப்புற்று அவனது நெஞ்சை நெருடின. ‘ரதி மச்சாள் பாவம். இந்த அரிசிப் பல்லுக்காரி மாதிரி ஆகிவிடக் கூடாது.’ அவனது நினைப்பில் ஏற்பட்ட மாற்றம் அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது.

எருவைக் கொண்டுபோய் கும்பியில் கொட்டியவன், கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்தான். குடித்தவன், சிலுந்தாப் பக்கம் புறப் பட்டான். மதி வர மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். அவன் கடகத்துடன் தாவாடி வயலில் இறங்கி, நடந்து போவதைப் பார்த்த படி மதி நின்றாள்.

“குளத்தில் குளிக்காதை, மாமி அடிப்பா” என்ற மதியின் குரல் அவனுக்குச் சன்னமாய்க் கேட்டது. பெரிய பனந் தோட்டத் துக்கு மேற்குப் பக்கமாக நாகதாளிப் புதர். மஞ்சள் பூக்களும், பச்சையும் ஊதாவுமாய் காய்களும், கனிகளும். இவனுக்கு புதருக்குக் கிட்டவாகப் போகப் பயமாக இருந்தது.

‘செட்டி நாகம் அடை கிடக்குதடா….. பாம்புச் செட்டையைப் பார்….’ முன்னர் அம்மா பனந் தோட்டத்துக்கு இவனுடன் வந்தபோது, தூரத்தில் நின்றபடி கூறியவை அவனது ஞாபகத்துக்கு வந்தது.

பயமாக இருந்தபொழுதும், மதிக்குப் பழத்தைப் பறித்துக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் கடகத்தைத் தூர வீசிவிட்டு நாகதாளிப் புதரை நெருங்கினான். ஊதா நிறப் பழங்களாகப் பார்த்து இரண்டைப் பறித்தான். காலில் ஏதோ தட்டுப் பட்டதான பிரமை அவனை அசர வைத்தது. சட்டெனக் காலை எடுத்தவன் திரும்பிப் பார்க்காமல், பழங்களை நழுவ விடாமல், கடகம் கிடந்த இடத்துக்கு வந்து திரும்பிப் பார்த்தான். ஒன்றையும் காணவில்லை .

கையில் ஏறியிருந்த நாகதாளி முள்ளை எடுத்து எறிந்துவிட்டு, பழத்தில் இருந்த முள்ளையும் நீக்கினான். ஒரு பழத்தை மதிக்குக் கொடுப்பதற்காக மடியில் பத்திரப்படுத்திக் கொண்டான். மற்றப் பழத்தைத் தனது வாயில் போட்டுக் கொண்டான். பின்னர், நாக்கை நீட்டி நீட்டிப் பார்த்தான். நுனி நாக்கு மட்டும் மிக லேசாகத் தெரிந்தது. அது நாவல் பழ நிறத்தில் இருந்தது.

சிலுந்தாவை நோக்கி மெதுவாக நடந்தான். செல்லத்துரை மாமாவின் தோட்டத்தை ஒட்டிய வயலில் வெள்ளரிக் கொடி. கொடியில் பிஞ்சுகள். இவன் மட்டைவேலியின் கீழ்வரியை நீக்கி, வெள்ளரிப் பிஞ்சு ஒன்றை ஆய்ந்து கடித்தபடி நடந்தான்.

எரு அதிகம் இல்லாததால் கடகம் அவனுக்குச் சுமையாக இருக்கவில்லை . கைகளை வீசியபடி நடந்தான். குளக்கட்டில் ஏறி, ஆலடியை அடைந்தான். குண்டில் நீர் தளம்பித் தளதளத்தது. அக்கம்பக்கம் பார்த்தவன், சாறத்தை உருவி நாகதாளிப் பழத்துடன் கடகத்துக்கு அருகாக வைத்துவிட்டு குண்டில் குதித்து நீந்தினான். குண்டின் இக்கரைக்கும் அக்கரைக்கும் ஐம்பது தடவை யாவது நீந்த வேண்டும் என்ற நினைப்புடன் மாறிமாறி நீந்தினான்.

தண்ணீரின் அளவான வெதவெதப்பு அவனுக்கு இதமாக இருந்தது. கால் சோரும்வரை நீந்தியவன், பாதங்களைத் தூக்க முடியாத ஒரு விறைப்பு கால்களில் பரவியதை உணர்ந்தான். கால்களை முழுமையாக அவனால் அசைக்க முடியவில்லை. கைகளைப் பயன்படுத்தி, நீரில் கவிழ்ந்து கிடந்து நீந்திப் பார்த்தான். நடுக் குண்டில் நிற்பதான உணர்வு. அவன் திணறி, நீர் மட்டத்துக்குக் கீழே போய் வந்ததையும் உணர்ந்தான். ஓரளவு தண்ணீரையும் விழுங்கி இருந்தான். தனது பலம் அனைத்தையும் ஒன்று திரட்டி நீந்த முயற்சித்தான். ஆனால், அவனால் நீந்த முடியவில்லை.

அய்யா, அம்மா, மதி என்று எல்லாரும் அவனது நினைவுக்கு வந்தார்கள். அவனது நிர்வாண உடலை ரதி மச்சாள் அள்ளி யெடுத்து, அவனுள் புதைந்துபோன மாதிரியும் நினைவுகள். ‘ரதி மச்சாள் ஏன் அழுகிறாள். அபயக்கரம் நீட்டி எதை என்னிடம் யாசிக்கிறாள்…’ குழப்பங்களின் மத்தியில் யார் அது குளக்கட்டின் மேல். சிவபாதம் மாமாவா? “மாமா! மாமா!” என இவன் கூவியது அவருக்குக் கேட்டிருக்க வேண்டும்.

அவரது கண்களிலும் உடலிலும் ஏற்பட்ட பதகளிப்பையும் படபடப்பையும் இவன் கவனங்கொண்டான். அவர் அவனை நோக்கி வேகமாக ஓடி வருவது தெரிந்தது.

இவன் கால் சோர்ந்து மீளவும் தண்ணீருக்குள் அமிழ்ந்தபோது, அழுத்தமான கரங்கள் இவனைப் பற்றியிருப்பதை மட்டும் உணர்ந்தான். அடுத்த கணம், அவனது அறிவு உட்சொருகி ஓய்ந்து போனது.

– மல்லிகை – நாற்பதாவது ஆண்டு மலர், ஜனவரி 2005

– கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *