சுவர்கடிகாரத்தில் மணி ஐந்தைத் தொட
முட்களுக்குள் முயல் ஆமை ஓட்டப்பந்தயப்போட்டி முடிவுக்கு வந்துக்கொண்டிருந்த நேரம், ரகு. ஒரு சிறிய பதற்றத்துடன் கண்விழித்தான்.
பின் ஆஸ்வாசமாகினான். பக்கத்தில் மனைவி பானு அவளின் பக்கவாட்டில் ஒன்னரை வயது மகள் மீனு குட்டி ஒரு ஓவியம் மூச்சுவிடுவதுபோல அத்தனை அழகாய் உறங்கிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் முகத்தையே பார்த்தபடி “இன்னார் முகத்துலதான் முழிக்கனும் அதுதான் அதிர்ஷ்டங்கிற எண்ணங்களை எப்படி மனசுல வளத்துக்கிறாங்க ஜனங்க, நல்லதையும் கெட்டதையும் நம்ம செயல்கள்தானே தீர்மானிக்குது அப்பரம் எப்படி காரண காரியங்கள, நேசிக்கிறவங்க, கூட இருக்குறவங்க தலையில கட்டிட்டு நியாயம் தேடிக்கிறாங்க. இவங்களையெல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் ம்ம்…ம்.. ” என்று மூடப்பழங்களைப்பற்றி மனசுக்குள்ளேயே விவாதித்துக்கொண்டு படுக்கையைவிட்டு எழுந்தான் ரகு.
கூடத்தில் தூங்கிக்கொண்டிருந்த அம்மாவை பார்த்தபடி மொட்டை மாடிக்குச் சென்றான்.
அதிகாலை. கிழக்கின் ஒளி அந்த மெல்லிருளை மெல்ல அதட்டிக்கொண்டிருந்தது. தெருவிளக்குகள் தங்களின் முகத்தைச் சுழித்துக்கொண்டிருந்தன.
“முந்தாநாள் ஆஃபிஸ்ல எந்த டென்ஷனும் இல்லாம ஒர்க் ரிலாக்ஸா… போச்சில்ல! நேத்துதான் நாள் முழுக்க திரும்பவும் பிரச்சினை, ஒரே டென்ஷன்னு ஆகிடுச்சி, எப்படித்தான் இந்தநாள சமாளிக்கப் போறேனோ?!”என்று சலிப்பதும் யோசிப்பதுமாய் பல் துலக்க ஆரம்பித்தான்.
குளித்துவிட்டு வந்து பீரோவில் மடித்துவைத்திருந்த சட்டைகளை ஆள்காட்டி விரலால் தன் நினைவுக்குச் சுட்டிக்காட்டியபடி நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்.
முடிவாக நேற்று முந்தைய நாள் அவன் ஆஃபிஸுக்கு அணிந்து சென்ற அதே சட்டையை எடுத்தான்.
ரகுவிற்காக சமைத்துக்கொண்டிருந்த பானு, அந்நேரம் உள்ளே வந்து.
“ரகு… இட்லிக்கு தேங்காய் சட்னி வேணுமா.. இல்ல காரச்சட்னியா.. ?”என்றாள்.
“எதாச்சம் பன்னு.”என்று சொல்லிவிட்டு நகரும்போது பானு குறுக்கிட்டு
“என்ன ரகு இது, இந்த சட்டையவா போடப்போர..!. ஆமா… ஏன்?. இததானடா… முந்தாநாளும் ஆஃபிஸ் போட்டுப்போன.. மறந்துட்டியா? வேற எடுத்துப் போட்டுப்போ.. வேணா.. இதுவே இருக்கட்டும். ஏன்டா… இத்தனை சட்டை இருக்கும்போது போட்டதையே போடனுங்குற..? என்றதும்.
வாரத்துல நாளு நாள் உப்புமாவையே டிஃபனுங்குற பேர்ல திரும்ப திரும்ப நீ செய்யல? நானும் அமைதியா எடுத்துட்டு போகல? அந்தமாதிரிதான் இதுவும் போடி.. போய்டு சமைச்சத எடுத்து பேக் பன்னு. ஆஃபிஸுக்கு கெளம்பனும், லேட்டாகுது” என்று சுடுநீர் துவலைகள் தெறிப்பதுபோல பேசிவிட்டு சட்டைக்கு இஸ்திரிபோட ஆரம்பித்தான்.
கோபத்துடன் ‘பளார்’என முகத்தை திருப்பி முனங்கியபடியே.. சென்றாள் பானு.
இன்னைக்கு எந்த பிரச்சனையும் வராது, டென்ஷனும் இருக்காது என்று நினைத்தபடி, முந்தையநாள் போலவே தான் அணிந்திருந்த அதே ராசியான சட்டையை கண்ணாடியில் பார்த்து ஏதோ.. ஒரு திருப்தியுடன் வாசல் வந்தான் ரகு.
குழந்தைக்கு முத்தம் கொடுத்து “அப்பாவுக்கு Bye சொல்லு… “என்றான். குழந்தையின் கையைப் பிடித்து பானு அசைத்துக்காட்டினாள். பானுவுக்கும் அம்மாவுக்குமாய் சேர்த்து கையசைத்துவிட்டுப் புறப்பட்டான்.
பைக். ஸ்டார்டாகாமல் மக்கர் செய்துகொண்டிருந்தது, அப்போது ரகுவின் அம்மா எதிரே கவனித்துணர்ந்துவிட்டு உடனே,
“ரகு… இங்க கொஞ்சம் வந்துட்டு போடா.. என்றார்கள். என்னம்மா…? நீ.. வாடா.. சொல்றேன் “என்று நச்சரித்தார். வேகமாக இறங்கி வந்து “என்..னம்மா.. உன் பிரச்சனை? நானே பைக் ஸ்டார்டாகல, இரயிலக்கு வேற லேட்டாகுதுன்னு கடுப்புல இருக்கேன் எதுக்குமா.. இப்ப கூப்ட?” என்றான்.
“கோடி வீட்டு டைலர் சம்சாரம் வராங்கடா.. அதுக்கு ? வரட்டும். அவங்க வீட்டுக்காரரு இப்பதாண்டா கொஞ்ச நாள் முன்ன தவறிப்போனாரு. அதான் அந்தம்மா போனதுக்கப்பரம் கெளம்புவேன்னு கூப்டேன்” என்றார். ரகு. அம்மாவை முறைத்தான். “இரயிலேறி அவ்வளவு தூரம் போய் வேலை பாத்துட்டு வரவன், அதான்டா மனசு கேக்காம சொன்னேன்” என்றதும், சலித்துக்கொண்டே.. பைக்கில் ஏறி கிக்கரை ஒரு மிதி விட்டான், ஆக்ஸலேட்டரை முறுக்கினான், அவன் கோவத்தையும் அவசரத்தையும் ஒன்றாய் உள்வாங்கியதுபோல் உறுமியபடி கரும்புகை துப்பியவாரு கிளம்பியது பைக்.
எதிரே வந்துகொண்டிருந்த டைலர் மனைவியினருகே, வண்டியை நிறுத்தி வேண்டுமென்றே அந்தம்மாளிடம் ஏதோ விசாரித்துவிட்டு, அம்மாவைவை அங்கிருந்து திரும்பிப் பார்த்துவிட்டு தெருமுனை திரும்பி மறைந்தான்.
ரகு வண்டியை ஓட்டிக்கொண்டே.. “என் அம்மா கூடவா.. இப்டி! அந்த டைலர் மனைவி வரத சகுணத்தடையா பாக்குறாங்களே.. அம்மாவும் அவங்கள மாதிரிதானே! அத ஏன் அவங்க யோசிக்கல? பெண்களுக்கு பெண்கள்தான் எதிரின்னு சொல்வாங்களே.. அது சரிதான் போலிருக்கு! அம்மா மாதிரியான பெண்கள்மேல, போன தலைமுறையோட மூடநம்பிக்கையெல்லாம், புத்திலயும் சேர்த்து மூட்டைகட்டி, சீதனம் மாதிரி இந்த தலைமுறைக்கும் வச்சி உபயோகப்படுத்த சொல்றாங்க.
நாமாவது, அடுத்த தலைமுறைக்கு இந்த மூடநம்பிக்கை இல்லாத சமுதாயத்த, விட்டுட்டு போனோங்குற மாதிரி வாழனும்.”என்று தனக்குத்தானே மனதில் பெருமைபிரசங்கிபோல பேசிக்கொண்டே.. இரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள பைக் பார்க்கிங் விடும் இடத்திற்கு வந்தடைந்தான்.
“நேத்து வண்டிய எங்க விட்டோம்”னு பார்வையை துழாவவிட்டான்.
அந்த இடம் காலியாக இருந்தும், அதற்கு முந்தைய நாள் பைக்கை நிறுத்திய இடத்திற்கு வண்டியை தள்ளிக்கொண்டு போனான். அங்கே வேறு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது.
அதை நெக்கி, சற்று வலுகொடுத்துத் தூக்கி பக்கம் நகர்த்திவிட்டு, தன் வண்டியை அங்கே செறுகி நிறுத்தினான்.
“ஏம்பா… அங்க அவ்ளோ இடம் ஃப்ரியாதானே இருக்கு, அதெல்லாம் விட்டுட்டு அந்த இடுக்குல உன் வண்டிய விட்டாதான் உனக்கு மனசு ஒத்துக்குமா…?” என்று மனைவி வீட்டில் கேட்ட அதே தொனியில் ஒரு குரல் கேள்வி எழுப்ப, எந்த பதிலுமின்றி விறுவிறுவென அந்த இடத்தை காலி செய்தான் ரகு.
அடுத்தவர் இயல்பாக கேட்கும் சில கேள்விகள் நமக்குள் ஒளிந்திருக்கும் சிறுமைத்தனத்தை குத்திக்காட்ட வல்லது.
அடித்து பிடித்து இரயில் ஏறியவர்களோடு ரகுவும் முந்தியடித்து ஏறிவிட்டான். ஆனால், சீட் கிடைக்கவில்லை உடனே.., தன் ராசியான சட்டையை சற்று கடுப்புடன் இழுத்துப் பார்த்துக்கொண்டான்.
சரி. யாராவது எழுந்திருப்பார்கள் இடம் கிடைக்கும் வழக்கமாக நடப்பதுதானே, என்று நினைத்துக்கொண்டான்.
பயணம் தொடர்ந்தது. பசி வேறு. உட்கார இடம் கிடைத்தால்தானே சாப்பிடுவதற்கு. யாராவது எழுந்தால், அவன் சுதாரிப்பதற்குள் வேறொருவர் அமர்ந்துவிடுகிறார்கள்.
இப்படியே போக, அவன் கோபம் பலகீனமான மிருகமாக அவனைச்சுற்றியிருப்பவர்கள் மீது உக்கிரமானது.
எப்போது. நாம் நிதானம் இழக்கிறோமோ அப்போது மற்றவர்களுக்கு நாமே நமக்கான வாய்ப்பை நழுவக்கொடுக்கிறோம்.
இந்தளவு மனம் நொந்து பயணப்படுவது இதுதான் ரகுவிற்கு முதல்முறை. அவன் இறங்குவதற்கு மூன்று ஸ்டேஷன் முன்புதான், இடம் கிடைத்து அமர்ந்தான். ஏதோ பிரம்மை பிடித்ததுபோல முகம் வாடிப்போயிருந்தது.
இதை.. ரகு. ஒருபெருந்தோல்வியைப் போல மனதை சோகப்பட உந்திக்கொண்டிருந்தான்.
நினைத்தது நடக்காமல் போகும் சில எதார்த்தங்களுக்கு கூட ‘தோல்வி’ என பெயர் வைத்துவிடுகிறார்கள். அதைப்போலத்தான், சோம்பேறித்தனத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மட்டுமே ‘வெற்றி’ பலருக்கும் தேவைப்படுகிறது.
ஆஃபிஸ் சென்று நுழைந்தான். வருகைப் பதிவேட்டில் அனுமதி இட்டிருந்தது. ரகு மேலாளரையும் அவர் கடிகாரத்தையும் பார்க்க மணி 10.30 ஆகி இருந்தது. இருந்த மன உளைச்சலில் இரயில் தாமதமாக வந்தடைந்ததைக்கூட அவனால் உணர்ந்துகொள்ள முடியாமல் இருந்திருந்தது.
அன்று முழுவதும் வேலைச் சுமை காரணமாக மன அழுத்தத்திலேயே இருந்தான் ரகு.
வழக்கமாக மாலை 6 மணிக்கு அவன் ஆஃபிஸிலிருந்து புறப்படுகிறநேரம். அதுவும் தவறிப்போனது. ஒரு வழியாக, வேலைகளை முடித்து புறப்பட்டு கடைசி இரயிலை பிடித்தான்.
அப்போதே. வீட்டுக்குச் செல்ல எப்படியும் நடுநிசியை தாண்டிவிடும் என்பதை புரிந்துகொண்டு, வெறுமையோடு ஜன்னலோரம் அமர்ந்து பயணமானான்.
மார்பை மோதிய ஜன்னல் காற்று அவன் மனதையும் மோதி வீசத்தொடங்கியது.
தனக்குள் வழக்கத்திற்குமாறான தன்னைப்பற்றிய கேள்விகளை துருவி துருவி கேட்க எத்தனித்துக் கொண்டிருந்தான்.
அவன் மனம். இன்று, நேற்று, அதற்கு முந்தைய நாள் சம்வங்கள் அவன் நடத்தை, மறைமுக பழக்கவழக்கங்கள் என அவனைப்பற்றிய அத்தனையையும் நெஞ்சிக்குள்ளிருந்து தூர்வாரக் கச்சைக்கட்டிக்கொண்டிருந்தது.
எண்ணங்களின் ஓட்டத்தை நிலைக்குத்தலாக்கினான். கேள்விகள் குமிழிகளாகின.
ஒரு கையறுநிலை உணர்வு மூண்டதுபோல் கிளர்சியுறும்போது,
ரகுவிற்கு. தன்னை யாரோ கவனிப்பதுபோல தோன்றியது. எதிரே ஒரு வயசாளி.
செளமியமான கண்கள்,
சாவகாசமான பார்வை, துருபிடித்த மீசை,
உறைந்த பனிக்கட்டி இழைபோன்ற தாடி
அன்றாடங்காய்ச்சியைப்போல் உடை
வக்கணையான தெளிவு சொரிந்த முகம்
பார்க்க, காலங்கண்டவர்போல காட்சியளித்தார். அவர்.
“என்ன தம்பி ஒரு மாதிரியா இருக்கிங்க?” என்று பேச்சை நிறுத்தி மீண்டும் தொடங்கினார்.
“இல்லப்பா… நீ மனசப்போட்டு ஏதோ அலட்டிக்கிறாப்ல தெரிஞ்சிது அதான்..கேட்டேன் தப்பா நெனச்சிக்காதப்பா.. “என்று பரிட்சையமானவர்போல சட்டென நெருங்கியதொரு விசாரிப்பினை உதித்தார்.
அப்படில்லாம் ஒன்னுமில்லிங்க என்றான் ரகு.
மீண்டும் அந்த வயசாளி
“தம்பி… உங்க மனசிலிருந்து எதையோ வெளிகொண்டுவர பாக்குறிங்கன்னு நெனைக்கிறேன்.
ஒன்னு சொல்றேன் தம்பி… உங்க குணம், எண்ணம், செயல்கள் பற்றி தெரிஞ்சிக்க அது சரியா தவறான்னு புரிஞ்சிக்க உங்க ஆழ்மனசுல இருக்குற கேள்விகளுக்கான பதில்கள நீங்கதான் பிரசவிச்சாகனும் தம்பி.
இல்லை.. யாரிடமாவது மனசவிட்டு சொல்லுங்க அவங்க மூலமா ஒரு தெளிவு கிடைக்கலாம். இல்லன்னா உங்க நிம்மதிக்கும் வாழ்க்கைக்கும்தான் ஆபத்து”. என்று ஒரு அசரீரியே கண்முன் அவதரித்ததுபோல் அவரின் அனுபவ வார்த்தைகளைக் கேட்டு மிரட்சியானான். ரகு.
“சரியா.. சொன்னிங்க பெரியவரே.. இதற்கப்பரம் உங்கள நான் சந்திப்பனான்னு தெரியல ஆனா.. என் பிரச்சனையப்பத்தி உங்ககிட்டதான் பேசனும்னு தோனுது. பேசலாமா..? என்று மனங்கோலமான வார்த்தைகளில் பெரியவரிடம் கேட்டான்.
எங்கிட்டயா..? ஆமா.. ஏங்க?. உடன்பாடில்லை, என்பதைபோல அவன் கண்களை பார்த்தபடி சிரித்துவிட்டு.
“நானொரு நாடோடி தம்பி. எதிலும் பிடிமானம், பற்று வைத்துக் கொள்ளாதவன். உங்களுக்கு தெரிஞ்ச, வழி சொல்றவங்களா பாத்து, உன் பிரச்சனைய சொல்லுங்க. இதுதான் என் வழின்னு இலக்கில்லாம போகுற வழிப்போக்கனப்பா நானு” என்றார்.
“இல்லிங்க பெரியவரே.. உங்ககிட்ட சொன்னாதான் என் மனசு தெளிவாகும்னு தோனுது, அதுமட்டுமில்ல எனக்குள்ள இருக்குற குழப்பங்களயும், என்னைப் பற்றியும், ஒரு தெரியாத மனுஷங்கிட்ட பகிர்ந்துக்கனும்னு தோனுது. அதுமூலமா ஒரு தெளிவு கிடைக்குமான்னு பாக்குறேன். அவ்வளவுதான்” என்றான்.
அவன் நம்பிக்கையை குளைக்க வேண்டாமென்று வயசாளி முடிவுகட்டி ஒத்துழைக்கலானார். “சரிங்க தம்பி.. நீங்க சொல்லுங்க என் அனுபவத்த வச்சி எனக்கென்ன தோனுதோ அத வெளிப்படைய சொல்றேன்” என்று சொன்னதும்.
அவனோட குணம், அவன் மறைக்கிற சில நடத்தைகள், பழக்கவழக்கங்கள், காலையில் தொடங்கி இரயில் ஏறியவரை அத்தனையும் பெரியவரிடம் முற்றாக சொல்லி முடித்தான்.
பெரியவர். புன்முறுவலோடு அத்தனையயும் கேட்டுவிட்டு, ” இப்போ உங்க மனநிலை, பிரச்சனை என்னான்னு புரியுது தம்பி. நீங்க எது சம்மந்தமா குழம்பி போயிருப்பிங்கன்னு ஓரளவு உணர முடியுது” என்றதும்,
ரகு முகத்தில் ஆர்வம் பூரித்தது.
சொல்லுங்க பெரியவரே.. நான் மூடப்பழக்கங்கள நம்பாதவனா..? இல்லை அந்த போர்வையில் இருக்குற பத்தாம் பசிலியா..? இதான் என் குழப்பம். நான் எப்படிபட்டவன் சொல்லுங்க..?.
பெரியவர் பேச ஆரம்பித்தார்.
“உண்மைய சொல்லனும்னா.. நீ.. மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவனே..”.
ரகு முகத்தில் ஒரு நிம்மதி ரேகை எட்டிப்பார்த்தது.
“ஆனா”, என்று தொடர்ந்தார்…
” அந்த தெளிவில் முற்றாக இயங்குபவன் இல்லையப்பா. நீ..
பத்தாம்பசிலிதான். பழமையை பே..சி ஊறிப்போனவன் அல்ல. இந்த காலத்து மன எழுச்சிக்கு ஆட்பட்ட, நவீன பத்தாம்பசிலி.
நெடுநாள் ஏக்கங்கள் மனதைபோட்டு வாட்டும்போது, அது நடந்துவிடக்கூடாதா என, எண்ணம் அல்லல்பட.
உன்னையறியாமல் சில, அறிவுசாரா விஷயங்களை பின்பற்றுகிறாய். அதை யாருக்கும் தெரியாதவாறு உன்னையே.. நம்பவைத்துக்கொள்கிறாய்.
ரகு. நானா..?
ஆமாம்பா..
இத உன் மனைவிகூட புரிந்து வைத்திருப்பாங்க, அதை மறைக்கும் உன் போராட்ட செயல்களைப் பார்த்து வெளிகாட்டியிருக்க மாட்டாங்க” என்றதும்
ரகு சற்று அதிர்ச்சியானான்.
பெரியவர். மேலும் அவனை அவனுக்கே புரியவைக்க தொடர்ந்தார்.
“உதாரணத்துக்கு. உன் ஆஃபிஸ்ல ஏதோ ஒன்றுக்கு, எல்லோரும் சேர்ந்து உன்ன ரொம்ப பாராட்டுறாங்க. அததான் நீ ரொம்ப நாளா விரும்பியும் இருந்திருக்கன்னு. வை.
திரும்பவும் உன் மனசு அதே பாராட்ட எதிர்பாக்குது. ஆனா அது நடக்கல. உன் மனசு ஏங்க ஆரம்பிக்குது.
அதன் காரணமா, இதற்குமுன்ன உன்ன பாராட்டிய அந்த நாள்ல,
நீ என்ன ட்ரெஸ் போட்டிருந்த, எந்த வழியா வேலைக்குபோன, எந்த இடத்துல பைக்க நிறுத்துன, யாரு முகத்துல முழிச்ச இதுமாதிரி..
நிறுத்துங்க பெரியவரேன்னு ரகு குறுக்கிட்டு ” அப்படியெல்லாம் இல்லிங்க. நான் யார் முகத்துல முழிச்சேன்னு இதுவரைக்கும் நினைச்சி பாத்ததே இல்லை. இவங்க முகத்துலதான் முழிக்கனும்னு ஆசைபட்டதுமில்ல” என்றான்.
பெரியவர். ” சரி. ப்பா… அப்ப நான் சொன்ன மத்ததெல்லாம் யோசிச்சிருக்க அப்படித்தானே..”. ரகு. மெளனமாக தலையசைத்துக் கொடுத்தான்.
அதத்தாம்பா.. சொல்ல வறேன். உன் மனசுல ஏங்கிக்கிடக்குற அந்த ஏக்கங்கள் இயற்கையா, இயல்பா ஈடேறாதபோது, நீயே அத செயற்கையா ஈடேற்றப் பாக்குற.
இதுவும் ஒருவிதத்துல மூடநம்பிக்கைதான். ஒரு மாதிரி மனநோய்னும் சொல்லலாம்.
சரியா சொல்லனும்னா இத “மித்தை உணர்வு” , “பொய்யறிவு” ன்னு சொல்வாங்க.
ரகு. ஆமோதிப்பதுபோல் மெளனமானான்.
“காலையில என் அம்மாகிட்ட கோச்சிக்கிட்டேனே.. ‘அந்த சகுணத்தப்பத்தி சொல்றேன்’ அதுகூட நிஜம் இல்லைல்ல?”.
அது உண்மைதாம்பா..!
ரகு முகத்தில் சற்று நிலைகுலைந்த புன்முறுவல்.
“அந்த உண்மைய உனக்கு நீயே பெருமைபடுத்திக்க மிகைபடுத்திகிட்ட தம்பி. அவ்வளவுதான்”.
“மிகையா..? என்று குரல் குறுகி கேட்டான்”.
“ஆமா..
உங்க அம்மா அப்படி சொல்லும்போது..
‘அப்படியெல்லாம் அடுத்தவங்கள சகுணத்துக்கு பலியாக்கதம்மா. உன் வயசுதானம்மா அவங்களுக்கும். உன்னபோல அவங்களும் ஒரு அம்மா.. தானே..! அம்மாக்கள் முகத்துல முழிக்கலாம்தானேம்மா…! அது ஒன்னும் தப்பில்லயேம்மா..!’ ன்னு. அவங்க மனச மாத்தியிருக்கலாம். ஆனா.. நீ. ஏதோ ஒரு தப்ப உன்னளவுல கண்டிக்கிற மாதிரி, ஒரு நியாயவாதியா உன்ன நீயே தற்பெருமை பூசிக்கிட்ட.
உன் மனசுக்கு அது நல்லா தெரியும். ஆனா ஏத்துக்கல சரிதானே..?”என்றார்.
ரகுவிடம் முன்னைவிட அடர்த்தியான மெளனம், இமைகளின் உத்தரவுக்காக காத்திருக்கும் கண்ணீர்த்துளியின் ஈரம் தேங்கியிருந்தது.
“இவ்வளவு பிற்போக்குத்தனமாகவா நான் வாழ்ந்துற்றுக்கேன்”.
“தம்பி.. நீங்க ஒன்னு புரிஞ்சிகனும்.
சடங்கு சம்பரதாயங்கள், சாமிக்கதைகள், கோவில்ல சாத்தியமற்ற, சோம்பேறித்தனமான சில்லரை வேண்டுதல்கள், நேர்த்தி கடன்கள்.
இவைகள்தான் மூடநம்பிக்கைன்னு உன்ன மாதிரி எத்தனையோ பேர் நினைச்சிற்றுக்காங்க. அதுமட்டுமில்ல மூடநம்பிக்கை.
கடவுள் மறுப்பு சாராத இன்ன பிறவும் இருக்கு தம்பி.
தாழ்வு மனப்பான்மை, பொருத்தமற்ற முனைப்பு, வேதனை, துயரம், வலி, பிரச்சனைகளை தாக்குபிடிக்க முடியாதவர்களின் பிரயத்தனமற்ற கோழைத்தனத்தின் இயலாமையின் வெளிபாடுகள் இதையெல்லாம் சொல்லலாம்.
இன்னும் கொஞ்சம் ஆழமா சொல்லப்போனா..
தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதும், உணர்ச்சிவசப்பட்ட (Sentiments) அபிப்ராயங்களும், நம்பிக்கைகளும் கூட மூடநம்பிக்கைதான் தம்பி”. என்று
ஒரு நீண்ட நெடிய விளக்கத்தை ரகுவிற்கு எடுத்துச்சொன்னார்.
உங்க சட்டை பைல இருக்குற ஃபோன எடுங்களேன்..
அதுல.. ‘பெரியார் பொன்மொழி’ எதாவது ஒன்னு எனக்கு எடுத்துகாட்டுங்கசொல்றேன்.
ரகு. “ம்ம்.. இந்தாங்கய்யா”.
அதுல ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு.
“இத படிங்க தம்பி” என்றார்.
“சிந்திப்பவன் மனிதன்
சிந்திக்க மறுப்பவன் மதவாதி
சிந்திக்காதவன் மிருகம்
சிந்திக்க பயப்படுகிறவன் கோழை”.
என்று படித்து முடித்த ரகுவிடம்.
“இத மனசுல வாங்கிக்கப்பா.. “என்றார்.
ரகு. அந்த வயசாளியை பார்த்து. “நீங்க பெரியாரோட கொள்கை கொண்டவரா..?” என்று கேட்டதும்.
“நல்லத யாரு சொன்னாலும், பன்னாலும் அவங்கள கடவுள்னு நினைக்கிற ஒரு கொள்கை எல்லாருகிட்டயும் இருக்கும்,
இந்த நாடோடிக்கிழவனிடமும் அது இருக்கு தம்பி”, என்றார்.