கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 16,838 
 

எங்கும் பச்சைப்பசேலென்றிருக்கிற ஒரு புல்வெளியில் அந்த தேவதையின் பக்கத்தில் உட்கார்ந்தபடி ப்ரியா ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள். ஊஞ்சலுக்கான கயிறு வானத்தில் எங்கிருந்தோ திடீரென்று துவங்கியிருந்தது, இதமான சிலுசிலு தென்றல் அதைத்தொட்டு இயக்கிக்கொண்டிருக்க, பல வண்ணங்களில் உடையணிந்த அழகிய தேவதை அவளை மெல்ல அணைத்தபடி இருந்தது. வேகமில்லாத வேகத்தில் முன்னும்பின்னும் அசைந்தாடிய ஊஞ்சலின் தாலாட்டில் கண்மயங்கி, தேவதையின் தோளில் சாய்ந்தபடி அவள் தூங்க முயன்றுகொண்டிருந்தபோது, தேவதை அவளை உலுக்கி எழுப்பி, ‘ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சு’ என்றது. சட்டென்று ஊஞ்சலின் இயக்கம் நின்றுவிட்டது.

ப்ரியா படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கண்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். தூக்கம் இன்னும் கலைந்திருக்கவில்லை, தினம்தவறாமல் அதிகாலையில் காண்கிற கனவின் ஞாபகங்களும், ஏக்கமும் இன்னும் மிச்சமிருந்தது. மீண்டும் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் ஊஞ்சலும், தேவதையும் திரும்பவந்துவிடுவார்கள்தான். ஆனால் அம்மா திட்டுவாள்.

குழந்தை இடதுபக்கமிருந்த சாமி படங்களைப் பார்த்து அனிச்சையாய் கன்னத்தில் போட்டுக்கொண்டு கட்டிலிலிருந்து இறங்கியது. அதற்காகவே காத்திருந்ததுபோல் கிச்சனிலிருந்து குரல் வந்தது, ‘ப்ரியா, எழுந்துட்டியாடி ?’
‘யெஸ் மம்மி’, சத்தத்தில் புரண்ட அப்பாவைத் தொந்தரவு செய்யாமல் இருட்டில் தத்தித்தத்தி வெளியே வந்தது. வீடெங்கும் இன்னும் இருட்டு, சமையலறையைமட்டும் வெள்ளை வெளிச்சம் நனைத்திருக்க, அதை நோக்கி நேராய் நடந்து சென்று, ‘குட்மார்னிங் மம்மி’.
வெளிச்சத்துக்குப் பழகாத கண்களைச் சுருக்கிப் பார்த்தபோது, அம்மா எப்போதும்போல குளித்து, ஈரத்துணியைத் தலையில் கட்டியிருந்தாள். அடுப்பில் கவனமாய், ‘குட்மார்னிங்’ என்றாள். ‘போய் ப்ரஷ் பண்ணிட்டு வந்துடுவியாம், மம்மி உனக்கு ஹார்லிக்ஸ் கலந்துவைப்பேனாம்’.

****

மதன் எழுந்துவந்தபோது ப்ரியா குளித்து யூனி·பார்மில் இருந்தாள். ஒரு காலில் மட்டும் ஷ¤ மாட்டியிருக்க, இடதுகையில் சாக்ஸை கிளவுஸ்போல மாட்டி விளையாடிக்கொண்டிருந்தவள், இவனைப்பார்த்ததும் நிமிர்ந்து, ‘குட்மார்னிங் டாடி’ என்றாள். தன் கையை ஒருமுறை குறும்பாய்ப் பார்த்துக்கொண்டு களுக்கென்று வெட்கமாய்ச் சிரித்தாள்.
‘அப்பா-ன்னு கூப்பிடுன்னு எத்தனை தடவை சொல்றது ?’, அவளை அநாயாசமாய்த் தூக்கினான் அவன். எட்டு வயதுக்கு ரொம்பப் பூஞ்சையாய் இருக்கிறாள். எவ்வளவு சொன்னாலும் சரியாய் சாப்பிடுவதே இல்லை.

ப்ரியா வாயின்குறுக்கே ஒற்றைவிரலை வைத்துக்கொண்டு, ‘மூச்’ என்றாள்., ‘உங்களை டாடி-ன்னுதான் கூப்பிடணும்-ன்னு அம்மா சொல்லியிருக்காங்க’ என்றுசொல்லிவிட்டு, சட்டென்று தலையில் தட்டிக்கொண்டு, ‘மம்மி சொல்லியிருக்காங்க’ என்று திருத்தினாள்.

‘ஐயோ பொண்ணே, என்னை அப்பா-ன்னு சொல்லலைன்னாலாவது பரவாயில்லை, அவளையாவது ஒழுங்கா அம்மா-ன்னு கூப்பிடு, அதுக்கப்புறம்தான் மம்மி, அம்மி எல்லாம்’ என்றான். இடது கையால் ஹிண்டுவைப் பிரித்தபோது குழந்தை முதல் பக்கத்திலிருந்த ஹர்பஜன் சிங்கை சுட்டிக்காட்டி, ‘யார் இந்த அங்கிள் ?’ என்றது.

அவன் பதில்சொல்வதற்குள் அவள் அம்மா வாசலிலிருந்து வந்தாள், ‘என்னடி, இன்னும் ஷ¤கூட மாட்டலையா நீ ?’ என்று அவள் கத்த ஆரம்பித்ததும் குழந்தை சாக்ஸ் கையை பின்புறமாய் மறைத்துக்கொண்டது. அவன் பேப்பரை மேஜைமேல் போட்டுவிட்டு, ‘ரெண்டு நிமிஷ வேலை. இதுக்கு ஒரு சண்டையா ?’ என்றான், ‘நீ உள்ளே போ மது, நான் அவளை ரெடி பண்றேன்’.

குழந்தை ஒற்றைக்காலணி சப்திக்க தொப்பென்று தரையில் குதித்தது. அதன் கையிலிருந்த சாக்ஸைக் கழற்றி காலில் அணிவித்தான். ஷ¤ மாட்டியபோது, சத்தமே காட்டாமல் பொம்மைபோல அவனையே பார்த்துக்கொண்டிருந்தது., ‘சமத்து’ என்றான் அதன் கன்னம்கிள்ளி. ‘மறுபடி தூக்கிக்கொள்ளேன்’ என்பதுபோலிருந்தது அதன் பார்வை.

நாற்காலியிலிருந்து இறங்கி நின்ற மகளின் பள்ளி உடுப்பை அவன் விநோதமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். என்ன யூனி·பார்ம் இது ? தாத்தா பனியனை பேத்திக்கு மாட்டிவிட்டதுமாதிரி தொளதொளாவென்று முழங்கால்வரை தொடுகிற வெள்ளைவெளேர் உடை ! இப்போது வேடிக்கையாகத் தெரிந்தாலும், கிளம்புவதற்குமுன்னால் பெல்ட்டை எடுத்து இடுப்பில் இறுக்கமாய்க் கட்டிக்கொண்டதும், இதே உடுப்பு, சட்டையும், ஸ்கர்ட்டுமாய் அழகாகப் பிரிந்துபோகும். கழுத்தில் சின்னஞ்சிறியதாய் ஒரு டை, முழங்கால் நீளத்துக்கு இறுக்கமான சாக்ஸ் மாட்டி, பளபளக்கிற ஷ¤. குட்டைக் கூந்தலை இறுக்கிப்பிடிக்கிற க்ளிப்கூட பள்ளி அனுமதித்த வண்ணத்தில்தான். அந்தக் காலத்தில் குழந்தைகளைப் படிக்க அனுப்புவதானால் தலைவாரிப் பூச்சூடினால்போதும், இன்றைக்கு இன்னும் என்னென்னவோ அலங்காரங்கள் செய்யவேண்டியிருக்கிறது.

வயர்கூடையில் டிபன்பாக்ஸை நுழைத்தபடி மது கிச்சனுள்ளிருந்து வந்தாள், ‘உன் ஸ்கூல் பேக் எங்கேடி ?’, குழந்தை கூடத்தின் மூலையில் கைகாட்டியது. மேஜை மேலிருந்த தண்நீர் பாட்டிலை துண்டில் துடைத்து கூடைக்குள் வைத்துவிட்டு, இன்னொரு கையில் ஸ்கூல்பையை எடுத்துக்கொண்டாள், ‘சீக்கிரம் வாடி, பஸ் வந்துடும்’ என்றபடி கதவைத் திறந்து படிகளில் விறுவிறுவென்று இறங்கினாள்.
ப்ரியா அவனிடமிருந்து விலகிநகர்ந்து புன்னகையுடன் சின்னக் கைகளில் டாட்டா காட்டிவிட்டு வாசலுக்கு ஓடியபோது மணி ஏழுதான் ஆகியிருந்தது. இப்போதுபோகிற குழந்தையை இனிமேல் ராத்திரிதான் பார்க்கமுடியும். அவன் பெருமூச்சுடன் செய்தித்தாளுக்குத் திரும்பினான்.

இரண்டு பேராவுக்குமேல் மனம் ஓடவே இல்லை. பால்கனியில் சேரை இழுத்துப் போட்டுக்கொண்டான். இதமான காலைக்காற்று. கீழே கேட்டருகில் அம்மாவும், பெண்ணும் பஸ்ஸ¤க்காக காத்திருப்பது தெரிந்தது. இருவரும் அவனைப் பார்க்கவில்லை. மது பையிலிருந்து ஏதோ ஒரு நோட்டை எடுத்து மடக்கி வைத்துக்கொண்டு கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க, குழந்தை அவளைச் சுற்றிச்சுற்றிவந்து பதில்சொல்லிக்கொண்டிருந்தது.

****

ஒரு கையைப் பின்னால் கட்டிக்கொண்டு உறுமும் குரலில், ‘நைட்’ என்றாள் மது.
ப்ரியாவின் நடைவேகம் கொஞ்சம் குறைந்தது, யோசிப்பதுபோல் நெற்றியில் ஒருமுறை தட்டிக்கொண்டு, ‘என் – ஐ – டி – ஈ’ என்றது தயங்கி. பிறகு நிச்சயமில்லாததுபோல் தலையை வேகமாய் ஆட்டிக்கொண்டது, ‘தெரியலை மம்மி’

‘இன்னொரு தடவை தெரியலைன்னு சொன்னா உதைபடுவே சொல்லிட்டேன், யோசிச்சு சொல்லுடி’ என்று அதட்டினாள் அவள். சற்றுத் தள்ளி ஷட்டில்கார்க் விளையாடிக்கொண்டிருந்த தொப்பை இளைஞர்கள் ஆர்வமில்லாமல் திரும்பிப்பார்த்துவிட்டு ஆட்டத்தில் கவனமானார்கள். தினமும் நடக்கிறதுதானே !

குழந்தை சின்னச்சின்ன அடிகளாய் எடுத்துவைத்து அவளை ஒருமுறை சுற்றிவந்தது, மீண்டும் பழைய இடத்திலேயே வந்து நின்று தலையைச் சொறிந்தபோது பட்டென்று கையில் சின்னதாய் அடிவிழுந்தது, ‘அப்படிப் பண்ணாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ?’, குழந்தையின் முகம் மாறுவதைப்பார்த்ததும், ‘தலை கலைஞ்சுடும்டி’ என்றாள் சமாதானமாய். குழந்தை அதற்கு எதுவும் பேசாமல், ‘என் – ஐ – ஜி – ஹெச் – டி, கரெக்டா ?’ என்றது.

‘வெரிகுட்’, மதுவின் முகம் மலர்ந்ததும் குழந்தைக்கும் சிரிப்பு வந்துவிட்டது, ‘நெக்ஸ்ட் வேர்ட், மம்மி’ என்றது மிக ஆர்வமாய். மது நோட்டை ஒருமுறை வேகமாய்ப் பார்த்துக்கொண்டு, ‘கைட்’ என்றாள், ‘நீ கைட் பார்த்திருக்கியோ ?’, கேள்வி புரியாததுபோல் குழந்தை மறுப்பாய்த் தலையாட்டிவிட்டு, ‘கே – ஐ – ஜி – ஹெச் – டி’ என்றது.

‘தப்பு’ என்றாள் அவள் சட்டென்று. முகம் பழையபடி கடுகடுவென்று ஆகிவிட்டது.
‘நாட் தப்பு’, கையாட்டிச் சொன்னது குழந்தை, ‘நைட்-க்கு என் – ஐ – ஜி – ஹெச் – டி-ன்னா, கைட்-க்கு கே – ஐ – ஜி – ஹெச் – டி-தானே வரும் ?’, அதனளவுக்கு நியாயமான கேள்வி என்பதால், உடும்புப்பிடிவாதம்.

‘வார்த்தைக்கு வார்த்தை பதில்பேசாதடி, கைட்-க்கு கே – ஐ – டி – ஈ-தான் கரெக்ட்’
‘அப்போ நைட்-க்கு என் – ஐ – டி – ஈ-தான் கரெக்ட்’ என்று குழந்தை அவளைப்போலவே முகத்தை வைத்துக்கொண்டு பேசிக்காட்டியது. அந்த மழலை மிமிக்ரியை ரசிக்கிற மனோநிலையில் மது இல்லை, ‘கடங்காரி, அடுத்தவாரம் எக்ஸாம், இப்படி தப்புத்தப்பா உளறிக்கொட்டறியே’ என்றாள் சத்தமெழாமல். முகத்தில் எள்ளும், கொள்ளும், இன்னும் நிறையவும் வெடித்துக்கொண்டிருந்தது.
குழந்தை எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைகளைக் கட்டிக்கொண்டது. மது நோட்டை அதன் கையில் திணித்தாள், ‘ஒழுங்காப் படிச்சு பஸ் வரதுக்குள்ள இந்த வேர்ட்ஸ் எல்லாத்துக்கும் என்கிட்டே கரெக்ட்டா ஸ்பெல்லிங் சொல்லணும். இல்லைன்னா லன்ச் பாக்கெட்டைப் பிடுங்கிடுவேன், மத்தியானம் பட்டினிதான்’.

ப்ரியா ஏதோ பேசமுற்பட்டபோது கேட்டைத் திறந்துகொண்டு பேப்பர்காரன் வந்தான். மது விறுவிறுவென்று நேராய் அவனிடம் சென்று, ‘போனமாசம் ·பெமினா வரவே இல்லையே’ என்றாள். அவன் ஏதோ பதில்சொல்லிக்கொண்டிருக்கையில் இவளைத் திரும்பிப்பார்த்து ‘இன்னுமா படிக்க ஆரம்பிக்கலை ?’ என்பதுபோல் கண்ணால் ஜாடை. குழந்தை அம்மாவை ஒருமுறை தீர்க்கமாய்ப் பார்த்துவிட்டு நோட்டுக்குள் முகத்தை மறைத்துக்கொண்டது. பேப்பர்காரன் ராட்சஸப் பையில் பெண்கள் பத்திரிக்கை தேட ஆரம்பித்திருந்தான்.

குழந்தை விரோதியைப் பார்ப்பதுபோல் நோட்டிலிருக்கிற எழுத்துக்களை ஆர்வமில்லாமல் வெறித்தது. எல்லாம் நேற்று ராத்திரி படித்ததுதான். எதற்காக மீண்டும் படிக்கவேண்டும் ? நைட், ·பைட், ரைட் எல்லாவற்றுக்கும் ஐ – ஜி – ஹெச் – டி வரும்போது கைட் மட்டும் எப்படி ஐ – டி – ஈ என்று அவசரப்பட்டு முடிந்துபோய்விடுகிறது என்று அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது. மிஸ் தப்பாய் எழுதிக்கொடுத்ததை அம்மாவும் தப்பாக சொல்லித்தருகிறாள் என்று முடிவுசெய்துகொண்டாள்.
அம்மா இன்னும் பேப்பர்காரனுடன் பேசிக்கொண்டிருக்க, குழந்தை மெல்லமாய் நடந்து விளையாடுகிறவர்களின் பக்கம் போனாள். நெஞ்சுக்குக் குறுக்கே நோட்டைக் கட்டிக்கொண்டு சிறிய வெள்ளைப்பறவைபோன்ற மெல்லிய இறகுபந்து இடமும் வலமும், மேலும் கீழும் பறந்து பறந்து திரிவதை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

விளையாடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவன் வியர்வையை வழித்துப்போட்டுவிட்டு அவளை அருகில் அழைத்தான், ‘விளையாடறியா ?’ என்று கேட்டபடி கைகுலுக்கக் கைநீட்டுவதுபோல ஸ்நேகமாய் பேட்டை நீட்டினான். அவளுக்கு ஆசையாகத்தான் இருந்தது – ஒருமுறை ஸ்கூலில் அந்தவிளையாட்டு கற்றுத்தந்திருக்கிறார்கள், ஆனாலும் சரியாய் ஞாபகமில்லை, அதுமட்டுமில்லாமல் அடுத்தவாரம் எக்ஸாம்வேறு இருக்கிறது.

அவள் தலையசைத்து மறுத்தாள். விலகிப்போய்விடப் பார்த்தவளின் அருகில்வந்து மண்டியிட்டான் அவன், ‘அம்மா திட்டுவாங்களா ?’ என்றான் குரலிறக்கி.
அவளுக்கு அந்த அங்கிளை சட்டென்று பிடித்துப்போய்விட்டது. ஒருமுறை தொலைவிலிருந்த அம்மாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, ‘ஆமாம்’ என்றாள் ரகசியமாய். அதைச் சொல்கையில் அவள் கண்களில் கவலை இல்லை. குறும்புச்சிரிப்பு.

எதிர்பாராமல் கிடைத்த அந்த திடீர் சிநேகிதனிடம் இன்னும் ஏதேதோ பேச நினைத்தாள் ப்ரியா. ஆனால் பேப்பர்காரனின் சைக்கிள்மணி அவர்களுடைய சந்திப்பைக் கலைத்துவிட்டது. அவனிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமலே திப்திப்பென்று ஷ¤ சப்திக்க அம்மாவிடம் ஓடினாள், ‘படிச்சுட்டேன் மம்மி, கைட்-க்கு கே – ஐ – டி – ஈ-தான் கரெக்ட்’ என்றாள் அவளைப் பேசவிடாமல். மதுவின் முகத்தில் நிம்மதி பரவியது. தூரத்தில் பழக்கமான ஹார்ன் ஓசை.

அந்த சத்தத்தைக் கேட்டதும் பிரதேசம் முழுக்க ஒரு பரபரப்பு சேர்ந்துகொண்டது. ‘பஸ் வந்தாச்சு, சீக்கிரம் கிளம்பு’, அவளை அவசரப்படுத்தியபடி, மது புரட்டிக்கொண்டிருந்த புத்தகத்தைக் கையிடுக்கில் வைத்துக்கொண்டாள். இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினாள். குழந்தை நிதானமாய் அவள்பின்னே நடந்து பஸ்வருகிற திசையைப் பார்த்தபடி கைகட்டிக்கொண்டு நின்றது.

அதை பஸ் என்று சொல்வது தப்பு. ஒரு பெரிய வேன். அங்கங்கே துருப்பிடித்தும், பெயின்ட் உதிர்ந்தும் குலுங்கியபடி வந்தது. உள்ளே இரண்டு குழந்தைகள் ஆர்வமாய் ஜன்னலுக்குவெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருகுழந்தை மதுவைப்பார்த்து பூப்போல் சிரித்தது. சுமாராய் உடுத்திய உதவிப்பையன் ஒருவன் கதவைத் திறந்துவிட்டு, ‘குட்மார்னிங் ப்ரியா’ என்றான். ‘குட்மார்னிங் மேடம்’
மது இரண்டு பைகளையும் ப்ரியாவிடம் ஒப்படைத்தாள், ‘பத்திரம்டி, ஒழுங்காப் படிக்கணும், குறும்பு பண்ணக்கூடாது, சரியா ?’ என்றதும் குழந்தை அழகாய்த் தலையாட்டியது. அதன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு, ‘போய் உட்கார்ந்துக்கோ’ என்றாள். ஜன்னல்பக்கம் அமர்ந்திருந்த குழந்தை ப்ரியாவிடம் மழலையில் ஏதோ கேட்டது அவளுக்குப் புரியவில்லை. முன்னால் வந்து டிரைவரிடம், ‘பார்த்து ஓட்டுங்க’ என்றாள் எப்போதும்போல். அவர், ‘சரிம்மா’ என்று அசட்டுச்சிரித்தார். மெல்லிய உறுமலுடன் வேன் கிளம்பி நெடுஞ்சாலையின் போக்குவரத்தில் கலந்தது.

வேன் கிளப்பிவிட்டுச்சென்ற கறும்புகை அடங்கும்வரை மது அங்கேயே நின்றிருந்தாள். பின்னர் பெருமூச்சுடன் மெல்ல நடந்து படிகளுக்குத் திரும்பினாள். நகருக்கு வெளியே பள்ளிக்கூடம், இன்னும் முக்கால் மணிநேரம் அலுங்கல், குலுங்கலுக்கிடையே குழந்தை பஸ்ஸில் போகவேண்டும். அவளுக்கு மகளை நினைக்க ரொம்பவும் பாவமாய் இருந்தது.

பத்து நிமிடத்தில் அடுத்த குழந்தையை ஏற்றிக்கொள்வதற்காக ஓட்டைவேன் ஒரு சந்தில் புகுந்து நின்றது. அதற்குள் குழந்தைகள் மூன்றும் ஒன்றைஒன்று அணைத்தபடி தூங்கிப்போயிருக்க, அவர்களின் நோட்டுப் புத்தகங்கள் பின் சீட்களில் சிதறிக்கிடந்தன.

****

மேலே வந்தபோது மதன் இன்னும் பால்கனியில் நின்றபடி சாலையில் வேன்போன திசையை வெறித்துக்கொண்டிருந்தான். மதுவைப்பார்த்ததும், ‘நான் இன்னும் பல்கூட தேய்க்கலை, அதுக்குள்ள அவ ரெடியாகிக் கிளம்பிட்டா’ என்றான் மெல்லமாய் சிரித்து.

மதுவுக்கு அவனுடைய உள்கேள்வி புரிந்தது, ‘பாவம், குழந்தைக்கு டெய்லி ரொம்ப சீக்கிரமா எழுந்திருக்க வேண்டியிருக்குல்ல ?’ என்றாள்.

‘நல்ல பழக்கம்தானே ?’ அவன் மீண்டும் ஒருமுறை ரோட்டைப் பார்த்தான். பத்து மாருதிக்களை ஏற்றிக்கொண்டு ஒரு பெரிய லாரி ஊர்ந்துபோனது.

‘நல்ல பழக்கம்தான், ஆனா ப்ரியா கஷ்டப்படறா’ என்று உள்ளங்கையைப் பார்த்தபடி சொன்னாள்.
அவன் பெருமூச்சுவிட்டான், தொடர்ந்து பேசவேண்டுமா என்பதுபோல் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘நீ அந்த கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டமாதிரி தெரியலையே மது’ என்றான் நேரடியாய்.

அவளுக்கு சட்டென்று கோபம் வந்தது, ‘என்ன சொல்றீங்க ?’ என்றாள். வெய்யிலுக்கு வெடித்திருந்த ஒரு சிறுசதையைக் கையிலிருந்து பிய்த்து எறிந்தாள். லேசாய் வலித்தது.

‘தப்பா ஒண்ணும் சொல்லலை மது, பகல்முழுக்க ஸ்கூல்ல கஷ்டப்படறா அவ, வீட்டுக்கு வந்தப்புறமும் அவளுக்குப் பாடம் சொல்லித்தர்றது, ஹோம்வொர்க், அது, இதுன்னு நீ அவளை ரொம்ப சிரமப்படுத்தறியோன்னு தோணுது. இந்த பாடத்தைப் படி, அந்த கணக்கை போட்டுக்காட்டு-ன்னு எப்போ பார்த்தாலும் படிப்புதானா ? எட்டு வயசுக் குழந்தைக்கு இதெல்லாம் ஓவர்லோட் இல்லையா ?’ என்றான்.

அவள் பட்டென்று, ‘நம்ம குழந்தைமேலே உங்களுக்கு இருக்கிற அக்கறை எனக்கும் இருக்கு’ என்றாள். அவன் ஏதோ சமாதானம் சொல்வதற்கு முயன்றான், அவள் அவனைப் பேசவிடாமல், ‘எட்டு வயசுதானே-ன்னு நீங்க சாதாரணமா சொல்றீங்க, ஒரு தடவை ப்ரியா ஸ்கூலுக்கு வந்து பாருங்க, ஒண்ணாங்கிளாஸ் குழந்தைகளுக்குக்கூட ஹோம்வொர்க், இம்போசிஷன், க்ளாஸ்டெஸ்ட் எல்லாமே இருக்கு. இவ தேர்ட் ஸ்டான்டர்ட், அந்த க்ளாஸ் பிள்ளைங்க படிக்கிறதையெல்லாம் இவளும் படிச்சாகணும், இன்·பாக்ட் அவங்களைவிட பெட்டரா படிக்கணும்’.

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் இடைமறித்து, ‘நம்ம ப்ரியா ஒண்ணும் முட்டாள் இல்லை’ என்றான்.

‘முட்டாளா இல்லாம இருக்கிறது பெரியவிஷயம் இல்லை மதன், ரொம்ப புத்திசாலியா இருக்கணும் – அதுக்குதான் ஸ்கூல் படிப்பு. அவ ஒவ்வொரு பாடத்தில மார்க் குறையும்போதும் நான்தானே அவ டீச்சர்கிட்டபோய் பாட்டு வாங்கவேண்டியிருக்கு ? ரெண்டு மன்த்லி எக்ஸாம்ல தொடர்ந்து ·பெயிலானா ஸ்கூலைவிட்டே அனுப்பிடுவாங்களாம், தெரியுமா ?’ என்றாள் மூச்சிறைக்க.

‘அதெல்லாம் சரிதான் மது, ஆனா சின்னக் குழந்தையை எக்ஸாம், அது, இதுன்னு பாடுபடுத்தறதே எனக்கு சரியாப் படலை, அவளுக்கு இதுதான் உலகத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கற வயசு’ என்றான். அவளுடைய புரியாதபார்வையை கவனித்து, ‘நான் உன்னை குத்தம்சொல்லலைம்மா, இந்த சின்ன வயசிலயே, சேணம் கட்டிக்கிட்ட குதிரைமாதிரி மார்க்குக்குப்பின்னால ஓடறதுக்குமட்டும் பிள்ளைகளைத் தயார்படுத்தற இந்தக் கல்விமுறையே தப்பு-ன்னு சொல்றேன்’ என்றான், ‘ஆறாங்கிளாஸ் வரைக்கும் நான் ஒரு எக்ஸாம்கூட சீரியஸா படிச்சு எழுதினதுகிடையாது தெரியுமா ? இப்போ நான் என்ன குறைஞ்சா போயிட்டேன் ?’ என்று கைகள்விரித்தான். வெய்யில்மெல்ல உறைக்க ஆரம்பித்திருந்தது.

அவனுடைய நீளமான வாதங்களுக்கெல்லாம் அவளுடைய பதில் சுருக்கமாய் இருந்தது, ‘நீங்க சொல்றதெல்லாம் உங்க காலத்துக்கு சரியா இருக்கலாம் மதன், இன்னிக்கு உலகம் ரொம்ப வேகமா போயிட்டிருக்கு, இந்த காலத்துக் குழந்தைங்க இந்த வயசிலிருந்தே இப்படிப் படிச்சாதான் நாளைக்கு ஒரு நல்ல பொசிஷனுக்கு வரமுடியும்’, சற்று யோசித்து, ‘ஆறு வயசானாலும், அறுபது வயசானாலும், வாழ்க்கையை யாரும் லேசா எடுத்துக்க முடியாத காலம் இது’ என்றாள் ஆங்கிலத்தில்.

அவன் சம்மதமாய்த் தலையாட்டினான், ‘உண்மைதான்’. ஒப்புதலும் வருத்தமும் சமவிகிதத்தில் கலந்திருந்தது அவன் குரலில்.

****

மதியம் உணவு இடைவேளையின்போது அலுவலகத் தோழி பரிமளாவிடம் இதைப்பற்றி கொஞ்சநேரம் பேசினான். இவன் சொன்னதையெல்லாம் கேட்டு அவள் பெரிதாய் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள், ‘அப்படியே எங்க வீட்டில நடக்கறதை கண்ணாடியில பார்த்தமாதிரி இருக்கு மதன்’
அவன் தப்பான ஆளிடம் நியாயம்கேட்க வந்துவிட்டோமோ என்று அவளை சந்தேகமாய்ப் பார்த்தான், அவள் மறுபடி சிரித்து, ‘உங்க வொய்·ப் மாதிரிதான் என் ஹஸ்பண்ட், என்னேரமும் படிப்பு, படிப்புன்னு பையனைப்போட்டு வாட்டி எடுக்கறார் பாவம்’ என்றாள்.

‘இது சிரிக்கிற விஷயமில்லை பரிமளா’ என்றான் அவன்.
‘சிரிக்காம என்ன பண்ணச் சொல்றீங்க மதன் ? நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கிறதா இல்லை. இப்பவே நல்லா படிச்சாதான் நாளைக்கு அவரைமாதிரி பெரிய ஆ·பீசரா வரமுடியுமாம். டெய்லி அவர் ராத்திரி ஆ·பீஸ்லயிருந்து வந்ததும் எந்நேரமானாலும் அன்னிக்கு ஸ்கூல்ல நடத்தின பாடத்தையெல்லாம் அவர்கிட்டே சொல்லியாகணும், பாடத்தில எது இருக்கு, எது இல்லைன்னுகூட தெரியாம அவர் கேட்கிற அறிவுஜீவிக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும், இல்லைன்னா திட்டு, அடி. அவன் எழுதற வீட்டுப்பாடத்தையெல்லாம் வாத்தியாருக்கு முன்னால இவர் கரெக்ட் பண்றார், எதுனா தப்பா இருந்தா உடனே திரும்ப எழுதச் சொல்றார்’ அவள் இன்னும் சொல்லிக்கொண்டே போனாள். அவனுக்கு ப்ரியாவின்மேல் இருந்த கருணை உலகத்தின் எல்லாக் குழந்தைகளின்மேலும் பரந்துபரவியது.

‘சொன்னா நம்பமாட்டீங்க மதன், ஆ·பீஸ் விஷயமா பாம்பே, கல்கத்தான்னு அவர் டூர் போனாக்கூட, ராத்திரியானதும் அங்கயிருந்து எஸ். டி. டி போட்டு இவன் படிச்சானா-ன்னு விசாரிக்கிறார், ·போன்லயே கேள்வி கேட்கிறார், பதில் சொல்லலைன்னா கன்னாபின்னான்னு திட்டு’, இப்போது இருவரும் சேர்ந்து சிரித்தார்கள், ‘வயலின் கத்துக்கறேன்னு ஆசையாக் கேட்டான் பையன், முடியவே முடியாது-ன்னு சொல்லிட்டார்’
‘ஏன் ?’
‘டான்ஸ், ம்யூசிக்ன்னு திரிஞ்சா கவனம் சிதறிப்போயிடுமாம், படிப்பு ஏறாதாம்’ அவள் விரக்திப்புன்னகையுடன், ‘அந்த சரஸ்வதி காதிலவிழுந்தா, கையிலிருக்கிற வீணையாலயே தலையில போடுவா’ என்றாள்.

‘அந்த விஷயத்தில என் வொய்·ப் எவ்வளவோ பரவாயில்லை, டான்ஸ், கராத்தே, ·ப்ரெஞ்ச், கர்நாடக சங்கீதம்-ன்னு தினமும் நாலு க்ளாசுக்கு ப்ரியாவை மதுதான் கூட்டிட்டுப் போறா’ என்று வாட்சைப்பார்த்துவிட்டு, ‘ரெண்டு மணி ஆகப்போகுது, இன்னேரம் கிளம்பியிருப்பா’ என்றான்.

****

மது கண்விழித்துப் பார்த்தபோது மணி இரண்டேகால். இன்றைக்கும் லேட்டாகிவிட்டது. அவசரமாய் எழுந்து எதிரில் ஓடிக்கொண்டிருந்த டிவியை அணைத்தாள். ஏதோ சீரியல் பார்த்துக்கொண்டிருந்ததாய் தூரத்து ஞாபகம். எப்படியோ தூக்கம்வந்துவிட்டது. பாத்ரூமுக்குப்போய் ஜிலீர் நீரை முகத்தில் அறைந்து தூக்கத்தை விரட்டினாள். கண்கள் லேசாய் சிவந்திருந்தது. உடைமாற்றிக்கொண்டு வட்டப்பொட்டும் நெற்றியில் குங்குமத்தீற்றலுமாய் அவள் படியிறங்கி வந்தபோது டிரைவர் தயாராய்க் காத்திருந்தான். ‘போலாமாம்மா’ ‘சீக்கிரம் கிளம்பு மணி, குழந்தை காத்துட்டிருப்பா’ என்று அவனை விரட்டினபடி காரில் ஏறி உட்கார்ந்தாள். இருபது நிமிட பயணத்துக்குப்பிறகு, நகரின் மையப்பகுதிக்கு வந்தார்கள். பரபரப்பான பஸ் ஸ்டாப்பினருகில் வழக்கமாய் சந்திக்கிற இடத்தில் பள்ளிச்சீருடையில் அழுக்கு படிந்திருக்க, கைகளைக் கட்டினபடி எதிரிலிருந்த சினிமா பேனரை பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை. காரைப்பார்த்ததும் சிநேகமில்லாமல் அருகில்வந்து கதவுதிறந்து, ‘ஏம்மா இன்னிக்கும் லேட் ?’ என்றது கோபமாய். ‘சாரிடா கண்ணா, மம்மிக்கு தூக்கம் வந்துடுச்சு’ என்றாள் குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து. குழந்தை ஒன்றும் பேசாமல் ஏறி உட்கார்ந்தது. கார்கிளம்பியபிறகு, ‘மிஸ் இன்னிக்கும் திட்டப்போறாங்க’ என்றாள் கைகளைக் கட்டிக்கொண்டு. புத்தகப்பையையும், டிபன்பாக்ஸையும் பின்பக்கம் வீசி எறிந்தாள். ‘டோன்ட் வொர்ரி, நான் அவங்ககிட்டே சொல்றேன்’ என்றபடி பையிலிருந்து வேறு உடை எடுத்தாள், ‘சீக்கிரம் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ, நாளையிலருந்து மம்மி கரெக்ட் டைம்க்கு வந்துடுவேன், சரியா !’ என்று அவளை முத்தமிட்டாள். குழந்தை முகம் உம்மென்றிருந்தது இன்னும் மாறவில்லை.

****
ஒவ்வொரு இடத்திலும் முக்கால் மணி நேரம், ஒரு மணிநேரம் என்று கடைசியாய் ம்யூசிக் க்ளாஸ் முடியும்போது ஆறரை மணியாகிவிட்டது. அதற்குள் மது காலையில் வாங்கிய ·பெமினாவை ஒருவரி மீதமில்லாமல் படித்து, காரின் பின் சீட்டில் எத்தனை மடிப்புகளாய் குஷன் படிந்திருக்கிறது என்பதை இருபத்தெட்டுமுறை எண்ணி முடித்திருந்தாள். டிரைவர், கண்ணாடியைத் தட்டி அவளை எழுப்பினபோது ப்ரியாவும், ம்யூசிக் டீச்சரும் படிகளில் இறங்கிவருவது மங்கலாய்த் தெரிந்தது. அவசரமாய் எழுந்து கார் கதவைத் திறந்துகொண்டு வெளியேவந்தாள். குட்டிக் கண்ணாடியில் பொட்டை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் அவர்களை எதிர்கொண்டாள், ‘எப்படி இருக்கீங்க டீச்சர் ?’ அந்த அம்மாள் மூக்குக்கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டு வெள்ளையாய் புன்னகைத்தார்கள், ‘உங்களுக்கும் நான் டீச்சர்தானா ?’, அவர் கையைப் பிடித்தபடி நின்றிருந்த ப்ரியாவும் புரிந்ததுபோல் சிரித்தாள். குழந்தைகளின் சிரிப்புக்கும், முதியவர்களின் சிரிப்புக்கும்தான் வித்தியாசமே தெரிவதில்லை. அந்த அம்மாளுக்கு எழுபது வயதாவது இருக்கும் என்பது மதுவின் ஊகம். அந்த காலத்திலேயே தமிழகப் பிரபலம். அபாரமான ஞானம், ஏழு வயதில் மேடையேற ஆரம்பித்து, கொஞ்சம்கொஞ்சமாய் புகழின் உச்சிக்கு வந்தவர். கல்யாணமானபிறகு ஏனோ கச்சேரிகள் பண்ணுவதில்லை. ஆனால், சங்கீதத்துக்கு என்னால் ஆனதை கிள்ளிப்போடுவேன் என்று பிடிவாதமாய் இந்த வயதிலும் சின்னதாய் ஒரு ம்யூசிக் ஸ்கூல் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். மதுவுக்கு அவர்கள்பேரில் ரொம்பவும் மரியாதை. அவரிடம் தன் மகள் படிப்பதைப் பெரிய கௌரவமாய் நினைத்திருந்தாள். ‘பிரமாதமா பாடறா உங்க பொண்ணு’ மௌனத்தைக் கலைத்துச் சொன்னார் அவர். மது கைகுவித்து, ‘எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்’ என்று மிகஉண்மையாய்ச் சொன்னாள். அவர் சிரித்துக்கொண்டார், ‘நல்ல குரல்ங்கறது பகவான் கொடுக்கிறது, அதை ஒழுங்கா உபயோகப்படுத்திப் பாடறதுக்கு நிறைய சிரத்தை வேணும், ரெண்டு விஷயத்திலயும் உங்க பொண்ணு ரொம்ப அதிர்ஷ்டசாலி, எது சொல்லித்தந்தாலும் ரொம்ப வேகமா பிடிச்சுக்கறா !’, அவர் ப்ரியாவைத் தன்னோடு சேர்த்து கட்டிக்கொண்டார், ‘என்ன தவம் செய்தனை-ன்னு இன்னிக்குப் பாடினா பாருங்க, கண்ணுல தண்ணி வழியறதுகூட தெரியாம அப்படியே உட்கார்ந்துட்டேன்’ என்றபடி அனிச்சையாய் மதுவின் கைகளைப் பற்றினார் அவர். மது சொல்வதறியாத சிலிர்ப்புக்கிடையே நின்றிருந்தாள். அவர்தான் மீண்டும் பேசியது. ‘லேட்டாயிடுச்சு போலிருக்கே, நீங்க கிளம்புங்க’, இன்னும் அவள் கையை விடுவிக்காமல், குழந்தையை முன்னே நகர்த்தி, ‘நீ காருக்குப் போ ப்ரியா’ என்றார் அவர். ஷ¤ சப்திக்க அவள் திரும்பி ஓடுவதையே சிலவிநாடிகள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘மார்னிங் குழந்தையை ரொம்ப சீக்கிரமா எழுப்பிடறீங்களோ ?’ என்றார் எதிர்பாராத ஒரு விநாடியில். ‘என்ன ?’ அந்தக் கேள்வியின் திடீர்மை மதுவுக்கு ஒன்றும் புரியாமல் செய்துவிட்டது. அவர் அந்த வாக்கியத்தை திரும்பச்சொல்ல விரும்பாதவர்போல, ‘குழந்தை பாடிக்கிட்டே இன்னிக்கு என் மடியில தூங்கிட்டா’ என்றார் எங்கோ பார்த்துக்கொண்டு.

****
கார் கிளம்பியவுடன் அவளுடைய செல்·போனில் மதன், ‘ஒரு மணி நேரமா வெயிட் பண்ணிட்டிருக்கேன்’ ‘ஸாரி டியர், கொஞ்சம் லேட்டாயிடுச்சு, இன்னும் பத்து நிமிஷத்தில அங்க இருப்போம்’ ‘வேண்டாம், நீங்க வீட்டுக்குப்போங்க, நான் ஆட்டோ பிடிச்சு வந்துக்கறேன்’ வைத்துவிட்டான். நியாயமான கோபம். அவள் பெருமூச்சுடன் திரும்பிப்பார்த்தபோது வாயில் கட்டைவிரலைப் போட்டுக்கொண்டு ப்ரியா தூங்கிப் போயிருந்தாள், துணைக்கு அம்மாவின் துப்பட்டா. மது அவளுடைய நெற்றியை மெல்லமாய் வருடிக்கொடுத்தாள். விரலை எடுத்துவிட்டபோது, ஒரு சிணுங்கலுடன் திரும்பிப் படுத்துக்கொண்டாள் ப்ரியா. மொய்க்கும் போக்குவரத்தில் நிதானமாய் பயணித்து அவர்கள் வீட்டுக்குப்போனபோது, மதன் முழு அலங்காரத்தில் இருந்தான். ‘என்ன ரொம்ப ·ப்ரெஷ்ஷா தெரியறீங்க ?’ என்றபடி மது உள்ளேபோனாள். ப்ரியா ஒருமுறை அவளைப் பார்த்துவிட்டு, ‘அப்ப்ப்பா’ என்று அவன்மேல் தொற்றிக்கொண்டாள். அவன் அவளுடைய மூக்கில் மூக்குவைத்து உரசி, ‘ப்ரியாக்குட்டிக்கு இன்னிக்கு ஸ்கூல்ல என்ன சொல்லிக்கொடுத்தாங்க ?’ என்று கேட்டதற்கு, அவள், ‘எந்த ஸ்கூல்ல ?’ என்றாள். அவன் பதில்சொல்லாமல் உள்ளேபார்த்து, ‘மது, இன்னிக்கு எங்க மேனேஜர் பொண்ணு கல்யாண ரிசப்ஷன், ஞாபகம் இருக்கா ?’ என்றான். உள்ளேயிருந்து பெரிதாய் சிரிப்புச்சத்தம் கேட்டது, ‘அதானே பார்த்தேன், என்னடா ஐயா ஆ·பீஸ்லருந்து வந்து புதுமாப்பிள்ளை மாதிரி ரெடியாகி உட்கார்ந்திருக்கார்ன்னு’. ‘கிண்டலெல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம், முதல்ல கிளம்பு’ என்றுசொல்லிவிட்டு, ‘நீயும் வரியாடா ?’ என்றான் குழந்தையிடம். குழந்தை அவன் கன்னத்தில் ஒரு முத்தம்வைத்து, ‘வரேம்பா’ என்றது. பரிசுப் பார்சலும் பட்டுப்புடவையுமாய் மது வந்தாள், ‘நீங்க கோபமா இருப்பீங்க-ன்னு தெரியும், அதான் சொல்லாமலே ரெடியாகிட்டேன்’ என்று விளம்பரப்பெண்போல கைகளை விரித்து, ‘இந்தப்புடவை எப்படி இருக்கு எனக்கு ?’ என்றாள். அவன் பதில்சொல்வதற்குள் ப்ரியா அவன் காதில், ‘அப்பா, அம்மாவை எனக்கும் ஸாரி கட்டிவிடச் சொல்லுங்க’ என்றுசொல்லிவிட்டு, வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டது. அவன் கலகலவென்று சிரித்தான். ‘என் பொண்ணு சேலையில உன்னைவிட அழகாயிருப்பா’ என்றான் அவளிடம். ‘உங்க அழகியைக் கொஞ்சம் இறக்கிவிடுங்க, டிரெஸ் மாத்தணும்’, அவள் சொல்லிமுடிப்பதற்குள் குழந்தை தானாய் இறங்கி பீரோ பக்கத்தில்போய் நின்றுகொண்டது. எந்த உடையைத் தேர்ந்தெடுப்பது என்று அம்மாவும், பெண்ணும் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு அமர்க்களம்தான்.

****
டிரைவரை வீட்டுக்குப் போகச்சொல்லிவிட்டு மதன் காரை எடுத்தான், ‘மெதுவா ஓட்டணும் மதன்’ ஒருமுறைக்கு இரண்டுமுறையாய் சொன்னாள் மது. அவள் மடியில் அமர்ந்திருந்த ப்ரியா காரின் முன்னால் தொங்கிக்கொண்டிருந்த கரடியின் தாடையில் தட்டியதும் அது ‘க்வீக், க்வீக்’ என்று சப்தமிட்டது. கல்யாண வரவேற்பு நடக்கிற ஹோட்டல் பக்கத்தில்தான். காரை நிறுத்திவிட்டு, ப்ரியாவைத் தூக்கிக்கொண்டு படிகளில் ஏறும்போது மது கண்டிப்பாய்ச் சொன்னாள், ‘போனோமா, கி·ப்ட் பார்சலைக் கொடுத்தோமா, மரியாதைக்கு நாலு வார்த்தை பேசிட்டு திரும்பி வந்தோமான்னு இருக்கணும், எனக்கு இங்கே யாரையும் தெரியாது, பேந்தப்பேந்த முழிச்சிட்டிருப்பேன்’, அவன் ப்ரியாவின் கன்னத்தில் கிள்ளி, ‘டோன்ட் வொர்ரி, உனக்காக இல்லைன்னாலும், இவளுக்காக கிளம்பிடுவேன்’ என்றான். ‘இவளுக்காகவா ?’ ‘ம், போற வழியில இவளை விளையாட கூட்டிட்டுப்போறதா ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்’ என்றதும், குழந்தை பெருமையாய் நெஞ்சுநிமிர்த்தி, ‘ஆம்மாம்’ என்றது. எங்கும் ரோஜா வாசனை.

****

மது எதிர்பார்த்ததுபோலவே தாமதமாகிவிட்டது. கல்யாண வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார்கள். ப்ரியாவுக்கு அந்த வடக்கத்தி ப·பே ஒத்துக்கொள்ளவில்லை. ஐஸ்க்ரீம் மட்டும் மூன்று உருண்டைகள் சாப்பிட்டாள். குலோப் ஜாமூன் ஜீராவை புது சட்டையில் கொட்டிக்கொண்டதற்காக மதுவுக்கு அவள்மேல் கோபம். படியிறங்கி வந்தபோது ப்ரியாவை மதன் தூக்கிக்கொண்டான்.

இருட்டில் காரைத் தேடிப்பிடித்து கார்சாவியைப் பொருத்துவதற்குள், ‘விளையாடப் போகணும் டாடி’ என்றாள் ப்ரியா.

‘லேட்டாயிடுச்சுடி, எல்லாம் க்ளோஸ் பண்ணியிருப்பாங்க’ என்றாள் மது. குழந்தை அவளை நம்பாமல் அவனைக் கேள்வியாய்ப் பார்த்தது. அதன் எதிர்பார்ப்பைக் கலைக்க மனமில்லாமல், ‘எதுக்கும் போய்ப் பார்க்கலாம் மது’ என்றபடி காரைக் கிளப்பினான்.

அவர்கள் வீட்டிலிருந்து நான்கைந்து கிலோமீட்டர் பக்கத்தில் ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். சுற்றிலும் பளபள கடைகள் காசுஇழப்பதற்கு அழைக்க, மையத்தை குழந்தைகளுக்கான விளையாட்டுப் பிரதேசமாய் செய்திருந்தார்கள். குதிரைபோலும், ரயில்போலும், பஸ்கள்போலும் முன்னும் பின்னும் நகர்ந்து, ஓடுவதுபோல் சத்தமிட்டு பாவ்லா காட்டுகிற பெரிய பொம்மைகள், வீடியோ கேம்கள், சறுக்குமரம், அப்புறம் ஒரு சின்ன அறை முழுக்க பலவண்ணத்தில் குழந்தைகள் வீசி எறிந்து, மேலே படுத்துக் குதூகலிக்கிற மெத்மெத் பந்துகள், இன்னும் நிறைய விளையாட்டு சமாச்சாரங்கள் அங்கே இருந்தன. ஒரு விளையாட்டுக்கு ஐந்துரூபாய்.

அவர்கள் அங்கே வந்தபோது அநேகமாய் எல்லாக் கடைகளிலும் ஷட்டர் இறக்கிக்கொண்டிருந்தார்கள். நம்பிக்கையே இல்லாமல்தான் மதன் காரை நிறுத்தினான். எஞ்சினின் இயக்கம் நின்ற மறுவிநாடி கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினாள் ப்ரியா. காரைப் பூட்டிக்கொண்டு, பிரதட்சணம்போல அதனை ஒரு சுற்று சுற்றிவந்து எல்லாக் கதவுகளையும் சோதித்துவிட்டு அவர்கள் படியேறியபோது, உள்ளே வெளிச்சத்தை இருட்டு மெல்லமாய் தின்னப்பார்த்துக்கொண்டிருந்தது. குழந்தை ஏமாற்றத்துடன் கட்டிடத்தின் ஒவ்வொரு மூலையாய் ஓடித் தேடிக்கொண்டிருந்தது. எல்லா பொம்மைகளையும் ஊமையாக்கி சங்கிலிபோட்டுக் கட்டிவைத்திருக்க, அவைகளும் ப்ரியாவை வருத்தத்துடன் பார்த்ததுபோல் தோன்றியது.

குழந்தை முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாய்த் தெரிந்தது படபடவென்று ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்டது. ஒரு கூர்க்கா எட்டிப்பார்த்து, ‘எட்டரைக்கு க்ளோஸ் சார்’ என்றான். அழாமல் அழுகிற குழந்தையைக் கண்டதும் அவனிடத்தில் கருணை தெரிந்தது. ஆனால் சங்கிலியில் கட்டிப்போட்ட பொம்மைகளை இயக்கும் மந்திரம் அவனுக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்காது.

மதன், ‘ஸாரிடா கண்ணா’ என்றான் தூக்கிக்கொண்ட குழந்தையிடம், ‘என்னாலதான் லேட்டாயிடுச்சு !’, அவனுக்கு ரொம்ப உறுத்தலாய் இருந்தது. மதுவைப் பார்ப்பதைத் தவிர்த்தான். குழந்தை யாரையும் குற்றம்சாட்டாததுபோல், ‘போலாம்பா’ என்றது கம்மிய குரலில்.

‘உனக்கு வேறென்ன வேணும் சொல்லு, பலூன் வாங்கலாமா ?’ என்று பழக்கமான இடதுபுறம் திரும்பினால், அந்தக் கடையும் பூட்டியிருந்தது, குழந்தை வரிவரியான ஷட்டர்களை வெறித்துப்பார்த்துவிட்டு, ‘எதுவும் வேண்டாம்பா, வீட்டுக்குப் போலாம்’ என்று அவன் தோளில் தலைபுதைத்துக்கொண்டது. மௌனமாய்த் திரும்பிநடந்தார்கள். ப்ரியாவின் முதுகு லேசாய் குலுங்கி அடங்கிக்கொண்டிருந்தது.

அவர்கள் காரை நெருங்குமுன்னால், எதிர்திசையில் ஒரு யானை அசைந்து அசைந்து நடந்துவந்தது. மதனுக்கு ஆச்சரியம் தாளமுடியவில்லை. நகர வீதிகளில் எப்படி யானை ? கோயில் யானையாய் இருக்குமோ ? பத்தடிக்கு ஆறடி என்று சுருங்கிவிட்ட இந்நாள் கோயில்களில் பூனை வளர்ப்பதுகூட சாத்தியமில்லை.

யோசனையை அவசரமாய்க் கலைத்து ப்ரியாவின் முதுகில் தட்டினான், ‘ப்ரியா, இங்க பாரேன்’

குழந்தை அஸ்வாரஸ்யமாய் வாயில் எச்சில் ஒழுக திரும்பிப்பார்த்ததும், அதன் கண்கள் பெரிதாய் விரிந்தது, ‘ஐ, யானை’. டிஸ்கவரி சேனலிலும், சில கார்ட்டூன்களிலும், பள்ளிப் புத்தகத்தில் ஒருமுறையும் யானையைப் பார்த்திருக்கிறாள் அவள். ‘எவ்ளோஓஓ பெரிசா இருக்கு ?’, பொருளில்லாத ஒரு குதூகல ஒலி அவளிடமிருந்தது வெளிப்பட்டது.

யானைப்பாகன் அதன் பக்கத்தில் மெல்லமாய் நடந்துவந்துகொண்டிருந்தான். கையில் ஜவுளிக்கடை மஞ்சள் பை. இவர்களைப் பார்த்ததும் விளக்குக் கம்பத்தினருகில் யானையை நிப்பாட்டினான். யானையின்மேல் மஞ்சள் வெளிச்சம் போதாமல் படர, அது சின்னக் கண்களால் மேலே ஒளிர்கிற மெர்க்குரி விளக்கை சந்தேகமாய்ப் பார்த்துவிட்டு துதிக்கையை மெல்ல உயர்த்தியது.

அவன் சாலையைக் கடந்து யானையின் பக்கமாய்ப் போனான். குழந்தை பயத்தில் அவனோடு இன்னும் ஒட்டிக்கொண்டுவிட்டது. ஆனால் தலையை மட்டும் யானையின்பக்கம் திருப்பியபடி, அதன் பாறை உடம்பை, கனத்த கால்களை, லேசாய்ச் சிதைந்த தந்தங்களை, துதிக்கையை, நெற்றி நாமத்தை, இன்னும் அந்த அரையிருட்டில் கண்ணில்பட்ட எல்லாவற்றையும் அதிசயமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தது. புத்தகத்தில் படித்த, பார்த்த யானைகளெல்லாம் அதற்கு மறந்து போயிருந்தது. இதுதான் நிஜ யானை, அதற்காக இவ்வளவு பெரிதாகவா இருக்கும் ?

ரொம்ப பக்கத்தில் போனபிறகு குழந்தைக்கு தைரியம் சேர்ந்திருக்க வேண்டும். அவன் தோள்களைவிட்டு லேசாய் நகர்ந்து, பிஞ்சுக்கைகளை நீட்டி யானையைக் கண்ணுக்கருகில் லேசாய் தொட்டுப்பார்த்துவிட்டு சட்டென்று கையை விலக்கிக்கொண்டாள். பாசாங்கில்லாத சிரிப்பு ஒன்று அவளிடத்தில் மலர்ந்தது. யானையும் லேசாய் சிரித்ததுபோல் இருந்தது அவனுக்கு.

கையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை யானைக்குத் தரவேண்டும் என்று ப்ரியாவுக்கு ஆசையாய் இருந்தது. ஆனால், யானையின் கைகளை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. மதன் அவள் தேடுவதைப் புரிந்துகொண்டு, யானையின் துதிக்கையைச் சுட்டிக்காட்டினான், ‘யானைக்கு இதுதான் கை’ என்றான்.

‘ஒரு கைதானா டாடி ?’ என்றாள் ப்ரியா சந்தேகமாய்.

கொஞ்சம் தள்ளி நின்றிருந்த மது, ‘தெரியாததுமாதிரி கேட்கிறா, ஏண்டி போனவாரம்தானே படம் காட்டி சொல்லித்தந்தேன், ட்ரங்க் – ஸ்பெல்லிங் சொல்லு’ என்றாள். அவன் அவளைத் திரும்பி முறைத்தான்.

குழந்தை மெல்லமாய்க் குனிந்து துதிக்கையின் நுனியைத் தொட முயன்றது. அவனும், யானையும் ஒரேநேரத்தில் முன்னால் நகர்ந்து அவள் காசுபோட உதவினார்கள். காசை வாங்கிக்கொண்ட யானை ஆசிர்வதிப்பதற்காக துதிக்கையைத் தூக்கியபோது ப்ரியா பயத்தில் கண்ணை மூடிக்கொண்டுவிட்டாள். இலவம்பஞ்சுத் தலையணையால் ஒற்றினதுபோல யானை இருவரையும் தலைதொட்டு வாழ்த்தியது. குண்டான பாகனிடம் காசு போய்ச்சேர்ந்ததும் அவனும் ஒரு சலாம் போட்டுவிட்டு யானையின் சங்கிலியைப் பிடித்து சொடுக்கினான். இருவரும் ஆடி அசைந்து நடக்க ஆரம்பித்தார்கள். யானையின் குட்டைவால் அதன் பின்புறத்தில் நாட்டியமாட, இருட்டுப் பின்னணியில் அவர்கள் நடப்பது ஏதோ சினிமாவின் கடைசிக் காட்சிபோலத் தோன்றியது அவனுக்கு.

குழந்தையைப் பின்சீட்டில்விட்டு, இருவரும் முன்னால் உட்கார்ந்தார்கள். காரைக் கிளப்புமுன் மது மெல்லமாய் சிரித்துக்கொண்டாள், அவன் தோள்களில் லேசாய் சரிந்து, ‘யானைமேல சவாரி போகணும்ன்னு இவ கேட்டுடுவாளோன்னு பயந்துட்டே இருந்தேன், நல்லவேளை’ என்றாள் சத்தமெழாமல். அவன் பெரிதாய்ச் சிரித்துவிட்டு, ‘யானைச்சவாரி பண்ற ஆசை குழந்தைக்கா, அம்மாவுக்கா ?’ என்று கண்ணடித்தான். அவர்கள் பேசுவதில் கவனமில்லாத குழந்தை பின் கண்ணாடிவழியே தூரத்தில்போகிற யானையையே இன்னும் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் ஒவ்வொரு பார்வைத்துணுக்கிலும் அளவில்லாத உற்சாகமும், சந்தோஷமும், முன்னெப்போதும் அவர்கள் பார்த்திராத ஆனந்தமும்.

இன்றிரவும் அவள் கனவில் தேவதை வருவாள். யானையின் மேலேறி.

****

நன்றி: ‘கல்கி’ தீபாவளி மலர்

– என்.சொக்கன் [nchokkan@gmail.com] (ஜூன் 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *