கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 32,420 
 
 

“மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!”

ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத் தோன்றாமல் அவசரமாக அந்த ஏர்-மெய்ல் உறையைப் பிரித்தேன். ராதாவும் என்னுடன் சேர்ந்து கடிதத்தின் வரிகளில் கண்களை ஓட்டினாள்.

“…உங்களுடைய ’மைக்ரோ மோஷன் பிக்சர்ஸ்’ பொழுதுபோக்கு சாஃப்ட்வேர் வகைகளில் ஓர் அறுதியான சாதனையாகும். ஒரு சிறிய, பன்னிரண்டு அங்குல கம்ப்யூட்டர் திரையில் நீங்கள் இயக்கியுள்ள முபபரிமாண கார்ட்டூன் பாத்திரங்களும், அவற்றின் வடிவமைப்பும், பின்னணி சூழல்களும் இசையும் வியக்கவைக்கின்றன. எனினும், கதை நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் எழுத்து மூலம் வெளியிடுவது கொஞ்சம் செயற்கையாகவும் மௌனப் படங்கள் போன்றும் இருக்கிறது. பதிலாக, ஒரு வாய்ஸ் சிந்தசைஸர் எவ்வளவு உதவியாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்… ”

“மன்னி, உங்களை அமெரிக்காவுக்கு வரச் சொல்லியிருக்கா! ஆறு மாசம் ட்ரெய்னிங், அப்புறம் வேலை வாய்ப்பு! வாவ், கங்கிராட்ஸ் மன்னி”, என்றாள் ராதா, எனக்கு முன்பாகவே கடிதத்தை முடித்தபடி.

என்னுடைய ஸாஃப்ட்வேர் படைப்பில் வாய்ஸ் சிந்தசைஸர் உதவியுடன் உரையாடல்களையும் மற்ற எழுத்து வர்ணனைகளையும் இணைக்கத் தேவையான அதிநவீன டெக்னிக்களில் ஆறுமாதகாலப் பயிற்சியும், முன்பணமும், அதன்பின் விரும்பினால் நான் அவர்களுடைய என்டர்டெய்ன்மென்ட் ஸாஃப்ட்வேர் டிவிஷனில் ரிசர்ச் அதிகாரியாகப் பணியாற்ற இரண்டு வருட வேலை வாய்ப்பும் அளிக்க அந்த அமெரிக்கக் கம்பெனி முன்வந்திருந்தது.

அத்துடன் என் படைப்புக்கான சன்மானமும் ராயல்டியும் விரைவில் நிர்ணயிக்கப்டும் என்றும், என் பதில் கண்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அந்தக் கம்பெனி அறிவித்திருந்தது.

“அம்மா, மன்னி அமெரிக்கா போகப்போறா, இன்னும் மூணே மாசத்திலே!”

ராதாவின் குரல்கேட்டு என் மாமியார் வெளிப்பட்டார்.

நான் சுருக்கமாக விஷயத்தை விளக்கிவிட்டு, அவர் ஆசியுடன் அந்தப் பயணத்தை மேற்கொள்ளப் போவதாகக் கூறியபோது, “என்னடி உளர்றே?” என்றார்.

தொடர்ந்து, “அமெரிக்காவுக் கெல்லாம் ஒரு பொம்மனாட்டி தனியாப் போய்ட்டு வர முடியுமா? உனனை யார் அந்தக் கம்பெனிக்கெல்லாம் உன் படைப்பை அனுப்பச் சொன்னா? சரிசரி, அப்புறம் பேசிக்கலாம். நீ போய்க் கால் அலம்பிண்டு அப்பாவுக்கு காப்பி டிஃபன் பண்ணிக்கொடு. ஏற்கனவே லேட்!” என்றார்.

“நோ சான்ஸ்”, என்றார் என் கணவர், இரவு சாப்பாட்டு மேசையில் என் அமெரிக்கப் பயண வாய்ப்பு அலசப்படும்போது.

“முதல்ல நீ என்ன கன்சல்ட் பண்ணாம இந்தக் காரியத்ல இறங்கினதே—”

நான் இடைமறிக்க நேர்ந்தது. “கன்சல்ட் பண்ணலன்னு சொல்ல்தீங்கோ. என்னிக்கு நீங்க என்னுடைய கம்ப்யூட்டர் படைப்புகள்ல அக்கறை காட்டியிருக்கீங்க? கேட்டா, எனக்குத் தெரிஞ்ச ஸாஃப்ட்வேர் பனியன், ஜட்டிதான்னு இளக்காரம் வேற… இந்தப் பாக்கேஜை டெவெலப் பண்ண ஆறு மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? கல்ல எறிஞ்சு வெப்போம்னு அந்தக் கம்பெனிக்கு அனுப்ச்சேன். இவ்ளோதூரம் உற்சாகமா பதில் வரும்னு நானே எதிர்பார்க்கலை. திஸ் இஸ் எ லைஃப்டைம் சான்ஸ்; ப்ளீஸ், லெட்’ஸ் நாட் ஸ்கிப் இட்!”

“டோன்ட் பி ஸில்லி, ஹேமா! உனக்கு நம்ம குடும்பம் பத்தி நல்லாத் தெரியும். நம்பர் ஒன், வயசான அப்பா அம்மாவுக்குப் பணிவிடை செய்யறதைத் தவிர உனக்கு வேற எதுவும் முக்கியும் இல்லை. நம்பர் ட்டூ, ராதாவுக்குக் கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணியாகணும். நம்ப ரெண்டுபேர் சம்பளத்ல குடும்பத்தையும் நிர்வகிச்சிட்டு இவ கல்யாணத்துக்கும் சேக்கறதுக்கே தாவு தீந்துரது. இந்த நிலைமைல நான் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க முடியாது.”

“எனக்கென்ன விஸ்வம் இப்ப கல்யாணத்துக்கு அவசரம்?”, என்றாள் ராதா. “நான் இப்பதான் போஸ்ட் கிராஜுவேஷன் பண்றேன். நானும் மன்னி மாதிரி ஒரு நல்ல கம்ப்யூட்டர் கம்பெனில ரிசர்ச் அசிஸ்டன்ட்டா ரெண்டு மூணு வருஷம் வேலை பார்த்துட்டுத்தான் கல்யாணம். எங்க காலத்லயாவது கம்ப்யூட்டர் சயன்ஸ் ஒரு காலேஜ் சப்ஜக்ட்டா இருக்கு. மன்னி’ஸ் ரியலி க்ரேட். எம்.எஸ்ஸி ஃபிஸிக்ஸ்ல அவள் யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட். சின்ன வயசிலர்ந்தே லைஃப்ல ஏதாவது ஒரு சாதனை செய்யணுங்கற உத்வேகம் இருக்கறதா மன்னி அடிக்கடி சொல்லியிருக்கா. அவளோட வாழ்க்கை லட்சியம் இப்ப பூர்த்தியாகற வாய்ப்பு. அதைக் கெடுத்திடாதீங்கோ?”

“காலேஜ் வேற, லைஃப் வேற. என்னக்கேட்டா ஒரு பொண்ணோட லட்சியம் லைஃல ஒரு நல்ல கணவன், குடும்பம் அமையணும், அமைதியா வாழ்க்கை ஓடணும், இவ்வளவோட நிக்கறது நல்லதும்பேன். ஏதோ ஒண்ணு ரெண்டு பேர் காலேஜ்ல எக்ஸ்ட்ரா ப்ரில்லியன்ட்டா இருக்கலாம். அதெல்லாம் வாழ்க்கைல அடிபட்டுப் போய்டும்.”

“அந்த் ஒண்ணு ரெண்டு பேர்க்கும் வாழ்க்கை எப்படி அமையறது பார்த்தியா?”

“இவளுக்கென்னடி இப்ப கொறச்சல்?” என்றார் என் மாமியார். “வசதியான வீடு, கைநிறைய சம்பாதிக்கற புருஷன். அனுசரணையான குடும்பம். வேறென்ன வேணும் ஒரு பொண்ணுக்கு, ம்?”

“அமெரிக்கா போற இந்த சான்ஸ் விஸ்வத்துக்கு வந்திருந்தா நாம பேசாம இருப்போமாம்மா? இல்ல எனக்கு வந்தா விடுவேளா? இந்திரா காந்தி பிரதமரா இருந்த நாட்ல ஒரு பொண்ணோட தனிமனித சுதந்திரம் கல்யாணத்தோட நின்னு போவது என்ன நியாயம்?”

“அதிகப் பிரசங்கித்தனமா பேசாதடி! இங்க என்னடி உங்க மன்னிக்கு சுதந்திரத்துக்குக் கொறச்சல்? வேளா வேளைக்கு சாப்பாடு போடலையா, துணிமணி எடுத்துக் கொடுக்கலையா, மாசம் 200 ரூபாய் பாக்கட் மணி தரதில்லையா, வேறென்ன செய்யலை? என்ன பேசற நீ?”

“நீ இப்ப சொன்னதெல்லாம் சுதந்திரம் இல்லைமா; அதெல்லாம் ஒரு பொண்ணோட அத்தியாவசியத் தேவைகள், அவள் புகுந்த வீட்டோட கடமைகள். நான் சொல்ற சுதந்திரம் வந்து, ஒரு கல்யாணமான பொண்ணோட நியாயமான உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, கூடுமானவரை அவற்றை நிறைவேற்றுவது. மன்னிக்குதான் இந்த வீட்ல ஒரு பத்திரிகை படிக்கவோ, அல்லது டி.வி.ல க்விஸ் பாக்கவோ நேரமோ அல்லது உரிமையோ இருக்கற மாதிரிகூடத் தெரியலையே? ஒவ்வொரு தடவையும் அவள் ஏதாவது படிக்கவோ எழுதவோ கையில் எடுக்கறபோதுதான் நீ அவளுக்கு ஏதாவது வேலை கொடுப்பே!”

மாமியார் முகம் சிவந்தார். “இதப்பாருடி! படிப்பு முக்கியமா, வாழ்க்கை முக்கியமாங்கறதை ஒவ்வொரு பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடியே தீர்மானிச்சுடணும். உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். கல்யாணம் ஆயிடுச்சுன்னா குடும்பத்தைப் பத்திய நினைவைத்தவிர எல்லாத்தையும் மூட்டைகட்டி வெச்சுடணும். உங்க மன்னியத் தனியா அமெரிக்கா அனுப்பறதுக்கில்ல. அதுக்காக வேலையையோ சம்பளத்தையோ விட்டுட்டு விஸ்வம் பின்னாடியே போகமுடியாது.”

“மன்னிக்கு அமெரிக்கால தங்க இடம் இருக்கேம்மா! அவ சித்தி பையன் இருக்கானே அதே ஃப்ளாரிடால! தவிர அவள் அங்க போறதால இன்னும் கூடத்தானே சம்பாதிக்கப்போறா? ரெண்டு வருஷம்தானே? அப்புறம் இண்டியாலயே போஸ்ட் பண்றதாச் சொல்லியிருக்காளே?”

அதுவரை பேசாமல் இருந்த என் மாமனார், “நான் வேணும்னா ரெண்டு வருஷம் கூடப்போய் இருந்துட்டு வரேன்”, என்றார்.

“ஆமாம், நீங்க போறேளாக்கும்! உங்களுக்கு வாசப் படியைத் தாண்டியே ரெண்டு வருஷமாச்சு…”. தொடர்ந்து தனக்குள், ’கொஞ்சங்கூட விவஸ்தைகெட்ட மனுஷர்’” என்றார்.

சமையல் அறைப்பக்கம் என் தலை மறைந்ததும் தாழ்ந்த குரலில், “அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உசிர வாங்காதீங்கோ! எல்லாம் நான் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்றேன். இதபார் விஸ்வம். கல்யாணமாய் ஒரு வருஷங்கூட ஆகலை. புதுப் பொண்டாட்டியைத் தனியா தூரதேசம் அனுப்சிட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நாலு பேர்க்கு பதில் சொல்லமுடியாது. இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன், ’ரொம்பப் படிச்ச பொண்ணுடா, ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் யோசிச்சிக்கோன்னு.’ எவ்வளவுக் கெவ்வளவு படிப்பும் அழகும் இருக்கோ அவ்வளவுக் கவ்வளவு திமிரும் கூடவே இருக்கே, என்ன செய்யறது? பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா? சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும்! எல்லாம் இந்த சம்பாத்யத்ல குப்பை கொட்டினாப் போறும்” என்றார்.

என் கணவரின் பிடிவாதம் தொடர்ந்தது. என் பிடிவாதமும்தான்! இவர்களுக்கெல்லாம் நான் வெறும் சமையல்காரிதான் என்ற எண்ணம் மேலோங்க, மனதில் வெறுப்பும் கோபமும் சோகமும் வளர்ந்தது. கல்லூரி நாட்களில் என் அசாதாரண ஐக்யூவை வியந்து பலவிதத்திலும் என்னை ஊக்குவித்துத் துணைநின்ற என் தந்தையும் இந்த விஷயத்தில் என்னைக் கைவிட்டு, “எல்லாம் மாப்பிள்ளை சொல்றபடி செய்யம்மா” என்று நழுவியது எனக்குப் பேரிடியாக இருந்தது.

என் பாட்டி மட்டும் இருந்திருந்தால்! நான் சிறுமியாக இருந்தபோதே அவர் அடிக்கடி என் தந்தையிடம், “ரொம்ப கெட்டிக்காரப் பொண்ணுடா! நீ வேணும்னாப் பார், ஒரு நாள் இவ ஃபாரின் போகப்போறா” என்று மெச்சிக்கொண்டது ஞாபகம் வரக் கண்ணீர் துளிர்த்தது.

கடைசியில் மேலும் மூன்று மாசம் அவகாசம் கேட்டு அந்தக் கம்பெனிக்குக் கடிதம் எழுதினேன், என் கணவருக்குத் தெரியாமல். அந்தச் செய்கை என் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திசை திருப்பப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்க நியாயமில்லை. இடைப்பட்ட காலத்தில் என் நலம் விழைவோர் உதவியுடன் என் பயணத்துக்குத் தேவையான பாஸ்போர்ட் முதலியன வாங்க முயற்சிகள் மேற்கொண்டேன்.

அடுத்த சில தினங்கள் நான் யாருடனும் சரியாகப் பேசவில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்குமட்டும் கூடியவரை ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில்கூறிவிட்டு நான் உண்டு என் வேலை உண்டு என்றிருந்தேன்.

வேலைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. ராதா கோடை விடுமுறையைக் கழிக்கத் தன் உறவினர் வீடு சென்றுவிட, அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டிருந்த வேலைக்காரியும் நின்றுவிட, காலை 5 மணிக்கு எழுந்ததுமுதல் இரவு 11 மணிவரை நிமிடங்கள் ஓய்வின்றி வீட்டிலும் அலுவலகத்திலும் என் பணிகள் என்னை வருத்தின. சரியான உணவும் உறக்கமும் இல்லாமல் என் முகம் களையிழந்தது. யாரும் என்னைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. என் கணவருக்கு மட்டும் இரண்டு இரவுகளுக்கு ஒரு முறை நான் தேவைப்பட்டேன்.

*** *** ***

திடீரென்று ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து ஒரு கேபிள் வரும்வரை எனக்கு அந்த சாத்தியம் உறைக்கவில்லை. கேபிளில், நான் அந்த மாதம் 15-ஆம் தேதி அமெரிக்கா வருவதற்கான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்கு என்னிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை என்றும், நான் உள்ளூர் ஏர் இந்தியா அலுவலகத்திலிருந்து என் பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, தேவையான கான்ட்ராக்ட் படிவங்களைக் கையொப்பமிட்டு அனுப்பக்கோரி அவர்கள் முன்பு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதில் இல்லை என்றும், உடனடியாக என் ஒப்புதலைக் கேபிளில் வேண்டியும் அந்தக் கம்பெனி கேட்டிருந்தது.

“வாட் த ஹெல் யு திங்க் யு ஆர் டூயிங்?” என்றேன் என் மதிப்பிற்குரிய கணவரிடம், அன்று மாலை, அவர்முன் மேசையில் அந்தக் கம்பெனியின் முந்தைய கடித உறையை எறிந்தவாறே. “என் பெயருக்கு வந்த தபாலை என்கிட்டக்கூடக் காட்டாம டேபிள்ள வெச்சுப் பூட்ட உங்களுக்கு உரிமை இருக்கறதா நான் நினைக்கல.”

“ஐ’ம் யுவர் ஹஸ்பன்ட், மைண்ட் யூ. உன்கிட்ட எனக்கு எல்லா உரிமையும் உண்டு. இப்ப நான் நினைச்சா இந்தக் கவரைக் கிழித்துப்போட முடியும்.”

என் கணவரின் கைகள் அந்த உறையை நாட, நான் அதிர்ந்து, சட்டென்று செயல்பட்டு, அவரது முரட்டுத்தனத்தை சமாளித்து அந்தக் கவரை அவர் கைகளிடமிருந்து விடுவித்து பத்திரப்படுத்திக் கொண்டேன். அந்த சில நிமிடப் போராட்டத்தில் அவரது கண்ணாடி கீழே விழுந்தது.

“யு ஆர் அஸால்டிங் மீ, ப்ளடி பிட்ச்!”

அவரது கரங்கள் தாறுமாறக என் உடலில் வசைபாட நான் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு, “லுக் ஹியர்! இதோட நாலஞ்சுதரம் அடிச்சாச்சு. இப்ப சொல்றேன், நான் அமெரிக்கா போகத்தான் போறேன், என்ன வந்தாலும் சரி! நாளைக்கே ஏர் இண்டியா ஆஃபீஸ் போய் டிக்கெட் கலெக்ட் பண்ணிண்டு, வர்ற பதினஞ்சாம் தேதி ஐ’ம் க்ளியரிங் அவுட் ஆஃப் யுவர் லைஃப்! யாரும் என்னத் தடுக்க முடியாது–என்னக் கொன்னுபோட்டால் ஒழிய. அதையும் செய்யத் தயங்க மாட்டேள் நீங்கள்லாம்!

விமானம் புறப்பட ஒருமணி நேரம் இருந்தது. செக்யூரிடி செக் முடிந்து லௌஞ்சில் காத்திருந்தபோது மனதில் அமைதி நிறைந்திருந்தது. புயலுக்குப்பின் அமைதி. சந்நியாச பாவமானதொரு அமைதி. அல்லது துறவு.

கடந்த சில மணி நேரத்தில் நான் எல்லாவற்றையும் துறந்து, என் வாழ்வில் ஒரு பயணத்தை முடித்து மற்றொரு பயணத்தைத் தொடங்கிய நிகழ்ச்சிகளை மனதில் அசைபோட்டபோது நான் இப்போதுதான் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடங்குவதாகப் பட்டது.

என் உடலின் பரிமாணங்களை மட்டும் நேசித்து என் மனதின் பரிமாணங்களைப் புறக்கணித்த உலகிலிருந்து விடுதலை.

இத்தனை நாள் வெறும் ரோபோவாக இருந்த நான் இந்த நிமிடம் முதல் ஒரு முழு மனிதனாக, சாதனையாளனாக, வளரும் கம்ப்யூட்டர் வித்தகனாகப் பரிணமித்து என்னைச் சுற்றியிருந்த கூண்டை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டபோது வெளியுலகம் அழகாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும் தோற்றமளித்தது.

தூரத்தே மறைந்துவிட்ட சூரியனுடன் என் வாழ்வின் ஒரு அத்தியாயம் முடிந்து நாளை ஒரு புதிய பூமியில் நான் புதுப்பிறவி எடுக்கப்போவதை நினைத்துக்கொண்டபோது பயணிகள் விமானத்தில் நுழவதற்கான அறிவிப்பு வந்தது.

இன்னமும் நான் யாருக்காக அல்லது எதற்காகக் காத்திருக்கிறேன்? நிகழ்வதற்கு இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது?

புரிந்தது. என் மன உணர்வுகளில் லயித்திருந்தபோது நான் சற்று சாவதானமாக அமர்ந்திருக்க, காற்றில் மெலிதாக ஊசலாடிக் கொண்டிருந்த என் மாங்கல்யம் எதிரில் அமர்ந்திருந்த ஓர் இளம் அமெரிக்க ஜோடியின் கவனத்தை ஈர்க்க, அவர்கள் அதைப்பற்றி மெல்லிய குரலில் ஏதோ உரையாடிக்கொண்டிருக்கத் திரும்பிப் பார்த்தபோது என் கணவர் பூனைபோல வந்து அருகில் நின்றிருந்தார், தனது இடது உள்ளங்கையை விரித்தபடி.

“வாசப் படியத் தாண்டறதுக்கு மின்ன, கட்டின தாலியைக் கழட்டி வெச்சுட்டுப் போடி நாயேன்னு சொன்னனில்ல? எவ்வளவு திமிர் இருந்தால் லெட்டர் எழுதி வெச்சிட்டு, நான் ஆஃபீஸில் இருந்து வீடு திரும்பறதுக்குள்ள கிளம்பிவருவ? என்னையே வேண்டான்னதுக்கப்புறம் நான் கட்டிய தாலி மட்டும் எதுக்கடி உனக்கு? கமான், ரிமூவ் இட்!”

“ஓவராக் கத்தாதீங்கோ. இந்தப் பயணம் ஒரு நிரந்தரப் பிரிவு இல்லை. யு நோ ஐ ஹாவ் டு மேக் திஸ் ட்ரிப். கொஞ்ச நாள்ல நீங்க உங்க தப்பை உணர்ந்து, மனசு மாறி, என்னோட இந்த செயலை அங்கீகரிப்பீங்கன்னு இப்பவும் நான் நம்பறேன். இந்தத் தாலி அந்த வகையில நமக்கிடையில் ஒரு தொலைத் தொடர்பு வளையமாகவும், எனக்கு ஒரு பாதுகாப்—”

பளார் என்று என் கன்னத்தில் அறை விழுந்தது.

“ப்ளடி ஹெல்! எனக்கு அறிவுரை கூற உனக்கு என்னடி தகுதியிருக்கு? கெட் லாஸ்ட், அந்தத் தாலியைக் கழட்டிக் கொடுத்திட்டு! ஆர் எல்ஸ், ஐ’ல் க்ரியேட் அ சீன் அன்ட் டிலே யுவர் ஃப்ளைட்!”

அங்குமிங்கும் புருவங்கள் உயர, அந்தக் கௌன்டர் பெண் “மேடம், யு ஆர் அல்ரெடி லேட், ப்ளீஸ்!” என்று விண்ணப்பிக்க, “ஃபைனல் கால் ஃபர் பாஸஞ்சர்ஸ் போர்டிங் த ஃப்ளைட்…” என்ற அறிவிப்பு கணீரென்று ஒலிக்க, நான் சட்டென்று தீர்மானித்து, என் மனதில் எழமுயன்ற சம்பிரதாய உணர்வுகளைக் கம்ப்யூட்டரின் ’க்ளியர் ஸ்க்ரீன்’ ஆணைபோல் சுத்தமாகத் துடைத்துக்கொண்டு, என்னுடைய கடைசி நினைவுச் சின்னத்தையும் துறந்துவிட்டு, விடுவிடுவென்று கேட்டைத் திறந்துகொண்டு, ஓட்டமும் நடையுமாக அந்த விமானத்தில் ஏறிக்கொள்ள, சில நிமிடங்களில் எஸ்கலேட்டர் விடுபட்டு அந்த விமானம் ரன்வேயில் டாக்சியித்துக்கொண்டு கிளம்பியது.

“யு ஆர் ஆல்ரைட்?” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். பக்கத்தில் அந்த அமெரிக்கப் பெண்.

“ஐ’ம் ஃபைன். அன்ட் ரிலீவ்ட், தாங்க் யு.”

உரிமையுடன் அவள் அணிந்திருந்த பைனாகுலரை எடுத்துக் கண்களில் பொருத்திக்கொண்டபோது, தூரத்தே என் கணவர் முகம் அஷ்டகோணலாக, கண்களில் அவநம்பிக்கையுடன் என் விமானம் சென்ற திசையில் வெறித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

ஒரு நெடிய பெருமூச்சுடன் பேனாவைக் கீழே வைத்தபோது எனக்கே வியப்பாக இருந்தது! என் கணவர்மீது எனக்கு அத்தனை வெறுப்பா, அதுவும் தாலியைத் துறக்கும் அளவுக்கு!

இந்தக் கதையின் பாத்திரங்கள் மிகைப்படுத்தப் படவில்லை. அந்த ’நான்’ வேண்டுமானால் ஒரு விதிவிலக்காக இருக்கலாம். கதையின் சம்பவங்களும் உரையாடல்களும் பெரும்பாலும் என்னைச் சுற்று வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்தவையே. அவற்றை வசதிக்கேற்ப மாற்றி அமைத்துத் தொகுத்தது மட்டுமே என் பணி. என் வலிய உணர்வுகளின் ’கார்டியோக்ராஃப்’-ஆக என் பேனா கிறுக்கிவிட்ட இந்தச் சித்திரத்தில் இவ்வளவு தூரம் என்னை ஒரு தீவிரவாதியாகக் காட்டிக்கொள்ள வேண்டுமா என்ற எண்ணத்தை உடனே புறக்கணித்தேன். என்னைப் பற்றி எழுதத் துணிந்த பின் என்னைப்பற்றி எழுதத்தானே வேண்டும்?

என் முன் மேசையில் அந்த கான்ட்ராக்ட் படிவங்கள் காற்றில் அசைந்தன. எனது அரிய ஸாஃப்ட்வேர் பாக்கேஜின் முழு உரிமைகளையும் அந்தக் கம்பெனி பெயரில் மாற்றி அவர்கள் நிர்ணயித்திருந்த ’ராக் பாட்டம்’ ராயல்டிக்கு சம்மதித்திருந்தேன். அவர்கள் அளித்திருந்த பயண, வேலைவாய்ப்புகளை நிராகரித்து விட்டதில், இதுவாவது வரட்டுமே? ஏற்கனவே பதிவாகிவிட்ட விமானப் பயணச் சீட்டை ரத்து செய்துவிட என் கணவர் சென்றிருக்க, அவர் சமீப காலமாக விரித்திருந்த அன்பு வலையில் நான் வசமாக சிக்கிகொண்டுவிட, அடுப்படியில் எனக்கு வேலைகள் காத்திருக்க, நான் ஆயாசத்துடன் எழுந்துகொண்டபோது அடிவயிறு கனத்தது.

– May 1990 (சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்ட இரண்டு கதைகளில் ஒன்று)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *