கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 20,114 
 
 

மேந்தோன்னிப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. தோட்டத்துப் படலைச் சுற்றித் தீ பற்றிக் கொண்டாற்போல் அதன் செவ்வண்ண இதழ்கள் செக்கச் செவேலென்று நெருப்பாய் ஒளிர்ந்தன. எங்கோ திரிகின்ற பார்வையைக் கண நேரத்தில் தன் பார் ஈர்க்கும் கவர்ச்சி அதன் அலாதி குணம். மழைக்காலத் தொடக்கமல்லவா? இனி மலையாளத்தின் இயற்கை வனப்பு மிகுந்த பிரதேசமெங்கும் இவை பூத்துக் குலுங்கிக் கண்ணுக்கு விருந்தளிக்கும்.

கொல்லைத் தாழ்வாரத்தில் நின்றபடி வேலியைச் சுற்றிப் படர்ந்திருந்த அந்த மேந்தோன்னிப் பூக்களின் அபரிமித அழகில் லயித்து நின்றாள் சாரு. அந்தக் கண் கொள்ளாக் காட்சி அவளுக்கு மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது. மேந்தோன்னி என்றால் அவளுக்கு உயிர். அவை பூத்துக் குலுங்கும் இந்த நாட்களத்தானே இத்தனை நாளும் அவள் எதிர்பார்த்திருந்தாள்! இந்த நிறைவான மகிழ்வுக்குக் காரணம் இது மட்டுமே என்றும் சொல்லிவிட முடியாது. இன்னொன்றும் உண்டு. இந்த மேந்தோன்னிப் பூக்களின் மலர்ச்சியால் விளைந்த மகிழ்ச்சி மூன்று மாதமோ, நான்கு மாதமோதான் நீடித்திருக்கும். இன்னொன்றான அந்த மகிழ்ச்சியோ வாழ்க்கை முழுவதுமே நிறைந்திருக்கும். இன்பத்தைக் கொள்ளை கொள்ளையாய்க் கொழிக்க வைக்கும். அந்த நிரந்தர நித்தியமான மகிழ்ச்சி.

கிருஷ்ணன் நம்பூதிரி இன்னும் வரவில்லை. வருகிற நேரம்தான். சற்றைக்கெல்லாம் வந்துவிடுவான். நெஞ்சளவில் நிறைந்திருக்கும் இந்த மகிழ்ச்சி, பிறகு உடலெல்லாம் இழையும். அவனது மென்மையான ஸ்பரிசத்தின் இன்பம் கிளுகிளுக்க வைக்கும். அவளது நினைவில் வெறும் கற்பனைச் சித்திரங்களாய்ச் சுழலும் எண்ணங்கள் சில நிமிஷ நேர நனவாக மாறி, அவளை இன்பக் கடலில் திளைக்கச் செய்யும். அது நிரந்தரமாகிவிடும் நாளொன்றும் அதிகத் தொலைவிலில்லை.

சாரு நெடுமூச்செறிந்தாள். பிறகு வேலியை நெருங்கி ஒரு மேந்தோன்னிச் செடியைப் பற்றி இழுத்து, அதன் கூரிய முட்களில் விரல் படாத லாவகத்தோடு ஒரு மலரைக் கொய்து எடுத்துக் கொண்டவள், திரும்பி வீட்டுக்குள் நுழைந்தாள். ‘உன் வண்ணத்துக்கு நான் எவ்விதத்திலும் தாழ்ந்தில்லை’ என்பதைப் போல், தீக்கொழுந்தாய் மிளிர்ந்த அந்த மேந்தோன்னிப் பூவுக்குச் சாருவின் நிறத்தில் சற்றும் மாற்றமில்லைதான்.

வீடு வெறிச்சென்றிருந்தது. கூடத்தில் வாத்தியக் கருவிகள் பல வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தபேலா, மிருதங்கம், டோலக், செண்டை, ஹார்மோனியம், வீணை, வயலின் என்று பலவகை வாத்தியங்கள். சங்கரன் நாயர் உயிரோடு இருந்த காலத்தில் இவையெல்லா ஒலிக்காத நாளென்று ஒன்று உண்டா?அப்போதெல்லாம் இந்த வீடு இப்படியா வெறுமை சூழ்ந்திருக்கும்? சதா சலங்கை ஒலியும், மிருதங்க ஒலியும், நாட்டியப் பாடல்களுமாகக் கலகலத்துக் கிடக்காதா? கலையில் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற வித்துவான்களும் வந்து போய்க்கொண்டே இருக்க மாட்டார்களா?

அவற்றை எண்ணியதும் சாருவின் நெஞ்சில் சற்றே வேதனை படர்ந்தது. அதை நெஞ்சை விட்டு அகற்றும் பொருட்டுக் கவனத்தை வேறெதிலோ திருப்ப முயன்றாள். முற்றத்தின் நடுவட்டத்தில் அலங்கார வேலைப்பாடுகள் அமைந்த சிறிய மேஜையொன்று கிடந்தது. அது பழமையானது. அந்தக் குடும்பத்தின் பாரம்பரியச் சொத்து. சாருவின் முன்னோர்கள் கலைத்துறையில் சிறப்புற்று விளங்கியதற்கு ஆதாரமாய் அங்கே இருப்பது அது ஒன்றுதான். அந்தக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய மகாரஜா — கருவிலே திருவுடையார் — சுவாதித் திருநாள், சாருவின் முன்னோர்களில் சங்கீதத் துறையில் பெரும் புகழ்பெற்று விளங்கிய திருவாங்கூர் அப்புக்குட்டி நாயருக்கு அளித்த பரிசுகளில் ஒன்றுதான் இது.

கையிலிருந்த மேந்தோன்னி மலரை ஒரு குவளையில் செருகி, அந்தச் சிறிய மேஜையின் மீது வைத்து சற்று நேரம் அழகு பார்த்தாள் சாரு. பிறகு ஒரு திருப்திப் புன்னகை உதடுகளில் நெளிய அவள் நிமிர்ந்தாள். எதிரே சபரி மலை அய்யப்பனின் அருளே வடிவான தோறறம் நான்கு மரச்சட்டங்களுக்கிடையில் கண்ணாடிக்குள் தெரிந்தது. சட்டென்று நெஞ்சில் ஒரு பக்தியுணர்வு விரவ, மேந்தோன்னிப்பூவின் இதழ் நுனி மாதிரி உதடுகளை மடித்துக் கொண்டு இரு கரங்களையும் நெஞ்சுக்கு மேல் கூப்பி வணங்கினாள். அந்த மெய்யுணர்வின் தலைப்பில் அவள் தன்னை மறந்து நின்றபோது, “சாரு” என்ற கனிவான குரல், ஒலி அலைகளாய் அவள் செவியில் மோத, ஒரு திடுக்குடன் திரும்பினாள். நெஞ்சு படபடத்துச் சிலிர்க்கிறது. வந்தது கிருஷ்ணன் நம்பூதிரி. அவனைக் கண்டதும் அன்றலர்ந்த மேந்தோன்னி மலர் மாதிரி அவள் முகம் சிவந்தது.

”வாருங்கள்” என்றாள் சாரு. ஒரு புன் சிரிப்புடன் அவளை நெருங்கி வந்த கிருஷ்ணன் நம்பூதிரி, “அய்யப்பனிடம் என்ன வேண்டிக் கொண்டாய் அப்படி?” என்று கேட்டான்.

பதிலேதும் கூறாமல் தலை குனிந்து நின்றாள் சாரு. அவள் முகம் மேந்தோன்னி மொட்டின் அடிப்பாகம் சொக்கர் வண்ணம் பூண்டது.

கலகலவென்று நகைத்தான் நம்பூதிரி. “நீ சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியும், என்ன வேண்டிக் கொண்டிருப்பாய் என்று?”

குறும்பு இழைந்த அவனது கணீரென்ற குரல் சாருவுக்கு வெகு இனிமையாக இருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்தமான விபின்ன தேவி துதிப்பாடல்களை விட.

”அம்மா எங்கே சாரு?” கிருஷ்ணன் நம்பூதிரி சுற்று முற்றும் பார்வையை அலைத்தபடி கேட்டான்.

”டியூஷனுக்குப் போயிருக்கிறாள்”, பதிலளித்தாள் சாரு.

முற்றத்து மேஜை மீதிருந்த குவளை மலரைப் பார்த்துவிட்ட அவன், “அடடே, மேந்தோன்னியா? இது பூக்க ஆரம்பித்து விட்டதோ, இல்லையோ? உன்பாடு கொண்டாட்டம்தான் போ” என்றான் கேலியாக.

”அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மற்ற மலர்களைவிட மேந்தோன்னி என்றால் எனக்குக் கொஞ்சம் பற்றுதல். அவ்வளவுதான்” என்றாள் சாரு. பிறகு மெல்ல அதைப் பற்றி எடுத்துப் பரிவுடன் வருடி விட்டாள்.

”அதன் மீது மட்டும் உனக்கு ஏனிந்தப் பற்றுதல்? நான்சொல்லட்டுமா? அது உன் மாதிரியே இருக்கிறதல்லவா? அதனால்தான். ஹும். இனம் இனத்தோடுதானே சேரும்!” என்று பொய்ப் பெருமூச்சு விட்டான் கிருஷணன் நம்பூதிரி.

புரியாது விழித்தாள் சாரு.

கிருஷ்ணனே விளக்கினான். “மேந்தோன்னிச் செடியின் தண்டு மாதிரி உருண்டு திரண்ட மிருதுவான உடல். செக்கச் செவேலென்ற அதன் வண்ணம் போன்ற நிறம். அதன் இரு புறமும் முளைத்திருக்கும் இலைகள் மாதிரி உறுதியான உன் கரங்கள். அது தன் சுருள் சுருளான நுனியால் மற்ற செடிகளைப் பற்றிக் கொள்ளுகிற மாதிரிதானே நீயும் என்னை…”

”போங்கள்” என்று சிணுங்கினாள் சாரு, வெட்கத்தால் ரத்தம் சுண்டிய முகத்தை கரங்களில் கவிழ்த்தபடி.

”சாரு’ என்று அவளை ஆசையுடன் நெருங்கி, தனது கரங்களால் அவளது வட்ட முகத்தை நிமிர்த்தினான் கிருஷ்ணன் நம்பூதிரி. அதே சமயம், வெளிவாசல் பக்கம் செருப்புச் சத்தம் கேட்டது. கிருஷ்ணன் நம்பூதிரி சட்டென்று நகர்ந்து கொண்டான். தொடர்ந்து, இடக்கையில் பிடித்திருந்த சிறிய கேரளத்துக் குடையை மடக்கியவாறு உள்ளே நுழைந்தாள் பார்வதி. செருப்பை ஒரு ஓரமாய்க் கழற்றிப் போட்டுவிட்டு, நிமிர்ந்த அவளது முகத்தில் சற்றே வியப்பு வரியிட்டது. கிருஷ்ணன் நம்பூதிரியைக் கூர்ந்து பார்த்தாள். “யாரு கிருஷ்ணனா?”

ஒரு அசட்டுப் புன்னகையுடன் தலையசைத்தான் அவன்.

”எங்கே உங்களை இந்தப் பக்கம் ஆளையே காணோம்?” என்று வினவிய பார்வதி, “அவரே போன பிறகு, நமக்கு அங்கென்ன வேலை என்று எண்ணி வராமல் இருந்து விட்டாயாக்கும்?” என்றாள் கரகரத்த குரலில். கணவனின் நினைவு வந்துவிட்டது போலும்!

”அப்படியெல்லாம் ஒன்றுமில்லையம்மா, வேலைகள்..” என்று சங்கடத்துடன் கூறினான் கிருஷ்ணன் நம்பூதிரி. “நீங்கள் இல்லாத சமயம் பார்த்து, இங்கே அடிக்கடி வந்து சாருவுடன் பேசிக்கொண்டிருந்து விட்டுத்தான் போகிறேன்” என்று உண்மையைச் சொன்னால் தவறாக அர்த்தம் செய்து கொள்ள மாட்டாளா பார்வதி?

”உன் கலைத்துறையெல்லாம் எப்படிப் போகிறது?” என்று கேட்டாள் பார்வதி.

”ஏதோ சுமாராக இருக்கிறது..சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ” என்று பதிலிறுத்தான் கிருஷ்ணன் நம்பூதிரி.

பெருமூச்சு விட்டாள் பார்வதி…”ஹும்! மதிப்பு வாய்ந்த நம்பூதிரிக் குலத்தில் பிறந்த நீ, இப்படிக் கலை கலை என்று உயிரை விடுகிறது மற்றவர்களுக்கு இளக்காரமாகவும், குலப்பெருமை குலைவதாகவும் படுகிறது. என்னைப் பொறுத்தவரை எந்தக் குலத்தில் பிறந்தால் என்ன,மனிதர்கள் என்ற முறையில் அவரவர்களுக்குப் பிடித்தமான அந்தந்தத் துறைக்குச் சேவை செய்வதே விவேகம் என்று கருதுகிறேன். அவர்கூட அப்படித்தான் சொல்லுவார். அடிக்கடி. தமிழ்நாட்டில்கூட எத்தனையோ அந்தணர்கள் கலைத்துறையில் முழு மூச்சுடன் உழைக்கவில்லையா? குலத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தப்படுத்திப் பேசுவது சரியல்ல. கடவுள் யார் யாரை எப்படி யெப்படி ஆட்டுவிக்கிறாரோ அப்படி ஆடுவதுதானே மனிதர்களின் விதி! உன் தந்தை வழியில் எல்லாம் பரம்பரை பரம்பரையாய் அன்னை பகவதிக்குப் பணி புரியும் சேவகர்கள். தாய் வழியில் எல்லாம் பெருமனத்து ஆண்டவனின் அர்ச்சகர்கள். நீ என்னவோ இரண்டையும் உதறிவிட்டு, செண்டை வாத்தியத்தில் தேர்த்தி பெற்ற வித்துவானாய்ப் பெயரெடுத்திருக்கிறாய். எங்களளவில் நாங்கள் பரம்பரைத் தொழிலைத்தான் செய்து வருகிறோம்”.

”உண்மைதான். எனக்கு எல்லாவற்றையும்விட அதில் இப்படியொரு பிடிப்பு” என்றான் அவன்.

”அவருக்கு உன்னை இத்தனை தூரம் பிடித்துப் போகக் காரணமே உன்னிடம் இப்படிக் குடி கொண்டிருந்த இந்த வேகமான கலைப்பித்துத்தான். என்னவோ அவர் இருந்த காலத்தில், பொழுது போக்காய்க் கற்றுக் கொண்டேன் இந்த கர்நாடக சங்கீதத்தை. அவர் போன பிறகு என்னையும், சாருவையும் காப்பாற்றுவது இதுதான். அது போகட்டும். நாளைக்குக் கொஞ்சம் இந்தப் பக்கம் வந்து போகிறாயா? சாருவின் விஷயமாக உன்னிடம் பேச வேண்டும்” என்றாள் பார்வதி.

’ஆகட்டும்” என்று பதில் சொன்ன கிருஷ்ணன், “நேரமாகிவிட்டது, நான் போய்வரட்டுமா?” என்று கேட்டான் சாருவைக் கடைக்கண்ணால் பார்த்தபடி.

”போய் வா” என்று பார்வதி விடை கொடுக்க, மெல்லத் தலையசைத்தாள் சாரு.

கிருஷ்ணன் நம்பூதிரி புறப்பட்டுப் போனபிறகு, பார்வதி தன் மகளிடம் சொன்னாள்: “நம்ம கேரளத்து வாத்தியங்களில் செண்டைதான் முக்கியமானது. பெருமை வாய்ந்தது. பல துறைகளிலும் வாசிக்கத் தகுதி பெற்ற அதன் புகழும் பெருமையும் இந்த உலகமெல்லாம் ஒலிக்க வேண்டும் என்று இரவு பகலாகப் பாடுபடுகிறான் கிருஷ்ணன். உன் அப்பா நீ பரத நாட்டியக் கலையில் பெரும் புகழ் பெறவேண்டுமென்றுதான் விரும்பினார். அதற்குக் கிருஷ்ணனின் துணை பெரிதும் உதவியாயிருக்கும். அதற்குத்தான் நாளை வரச்சொல்லி இருக்கிறேன்”.

தாயின் சொற்களில் உண்மையிருந்தாலும் சாருவுக்கு அது வேப்பங்காயாய்க் கசக்கத்தான் செய்தது. கிருஷ்ணனோடு இல்லற வாழ்க்கையில் இணையத்தான் அவள் தயாராக இருந்தாள். அம்மாவின் திட்டம் கலைத்துறையல்லவா? இளமைப் பருவத்து எல்லையில் நிற்கும் இரு இதயங்கள், தம்முள் பொங்கிப் பெருகும் இன்ப உணர்வுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு ஒரு புனிதமான கலை வழியில் செல்வதென்பது அத்தனை சுலபம்தானா?

காலை எட்டு மணியிருக்கும். டியூஷனுக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் பார்வதி. தாழிடப்பட்ட வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். சமையற்கட்டில் கை வேலையாயிருந்த சாரு, ‘கிருஷ்ணன் நம்பூதிரிதான் வந்திருக்கிறாரோ’ என்ற ஐயத்துடன் அவசரமாக எழுந்து வெளியே வந்தாள். தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்ததும்தான், வந்தது கிருஷ்ணன் நம்பூதிரியல்ல, மாமா மாதவன் நாயர் என்பது சாருவுக்குத் தெரிந்தது. ஏமாற்றம் நெஞ்சைக் கவ்வ, “வாங்க மாமா” என்று வரவேற்றாள் சாரு.

”என்ன சாரு, சௌக்கியமா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் மாதவன் நாயர்.

சாரு புன்முறுவலுடன் தலையசைத்தாள். அண்ணனைக் கண்டதும், “வாங்கண்ணா” எனப் பார்வதி வரவேற்றாள்.

மாதவன் நாயர் கூடத்து ஊஞ்சல் பலகையில் அமர்ந்து கொண்டார். பின்பு மூக்குக் கண்ணாடியைக் கழற்றி தம் அருகே வைத்துக் கொண்டு நெற்றி வேர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த சில்க் ஜிப்பாவின் பித்தான்களைத் தளர்த்தி விட்டுக் கொண்டார். நிமிர்ந்து வீட்டை ஒருதரம் கூர்ந்து பார்த்து விட்டுப் பிறகு பேசினார்.

”ஒன்றுமில்லை பார்வதி, நம்ம சாருவை ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஆட வரச்சொல்லி எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். எனக்கு மிகவும் வேண்டிய ஒரு கோயில் தர்ம கர்த்தாதான் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கோயில் கட்டியிருக்கிறார்களாம். யாரோ ஒரு மந்திரியின் தலைமையில் வருகிற பத்தாம் தேதி திறப்பு விழா நடக்க இருக்கிறது. அன்றைக்குத்தான் நிகழ்ச்சி. வேறு ஒரு சமயமாயிருந்தால் முடியாது என்று நானே எழுதியிருப்பேன். சங்கரன் நாயர் தன் கடைசி காலத்தில் சாருவின் புகழ் எல்லா நாடுகளிலும் பரவ வேண்டும் என்றுதானே ஆசைப்பட்டார்? அதுவுமில்லாமல், அவளுக்குச் சிட்சையளித்த நட்டுவனார் ஒரு தமிழரல்லவா? அதனால்தால் தமிழ் நாட்டில் நல்ல பெயர் எடுத்துக் கொண்டால் மற்ற நாடுகளில் சுலபமாகப் பேர் வாங்கி விடலாம் என்று சொல்லுகிறேன். நம்ம சாருவின் பெருமையை இந்தக் கேரளத்து வட்டாரம் அப்புறம் உணர்ந்து கொள்ளும். ஒன்று மட்டும் வைத்துக் கொள், எப்போதுமே, எந்த நாடும் தன்னுள் பிறந்த ஒரு உண்மையான கலைஞனை ஆதரிக்கவே செய்யாது”.

”அதற்கென்ன அண்ணா! தாராளமாய் அழைத்துப் போங்களேன். எப்படியோ அவரது விருப்பம் நிறைவேறினால் சரிதான். எங்களுக்கும் உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? நீங்களே பார்த்துச் செய்தால் சரிதான்” என்றாள் பார்வதி கம்மிய குரலில்.

”சம்மதம் என்று எழுதிவிட்டால் உடனே பணம் அனுப்பிவிடுவார்கள்…என்ன சாரு, எழுதிவிடட்டுமா?” என்று சாருவிடம் கேட்டார் மாதவன் நாயர்.

சாரு சொன்ன பதில் பார்வதியை மட்டுமல்ல, மாதவன் நாயரையும்கூடத் தூக்கிவாரிப் போட்டது. “யோசித்துச் சொல்கிறாயா? இதில் யோசிக்க என்ன் இருக்கிறது? நீ கற்ற கலையை உலகறியச் செய்ய வேண்டும் என்றுதானே உன் அப்பா விரும்பினார்? அப்படியொரு சந்தர்ப்பமே நம்மைத் தேடி வந்திருக்கும்போது, ஏன் யோசிக்க வேண்டும்?” என்று பரபரத்தார் மாதவன் நாயர்.

’சாரு, பரத நாட்டியத்தை இவ்வளவு சிறப்பாக ஆட, இந்தக் கேரளத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது என்று உன்னைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேனடி” என்றாள் பார்வதி.

சற்று நேர மௌனத்திற்குப் பின், “எனக்கு இப்போதெல்லாம் ஆடவே பிடிக்கிறதில்லை மாமா” என்றாள் சாரு.

’ஆங்’ என்று பதறினாள் பார்வதி. “சே, சே! இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமாயில்லை? பாடுபட்டுக் கற்றுக் கொண்ட கலையைப் பிடிக்க வில்லையாமே இவளுக்கு?”

மாதவன் நாயர் அமைதியாகப் பேசினார். “இதோ பார் சாரு, நீ கற்றுத் தேர்ந்திருக்கும் இந்தக் கலையைப் பற்றி நீ முழுமையாக அறிய நேர்ந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டாய். பண்டைக் காலத்திலேயே தோன்றிவிட்ட இந்தக் கலையைப் பல தென்னிந்திய அரசர்களும் தஞ்சை மன்னர்களும் போற்றி வளர்த்து இன்று நடை முறையில் சிறப்பும் ஆற்றலும் மிக்க ஒரு கலையாய் ஆக்கி வைத்திருக்கிறார்கள். காலஞ் சென்ற பல நாட்டிய வல்லுனர்கள் இதன் பழங்காலச் சம்பிரதாயத் தொடர்புகள் விட்டுப் போகாமல் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். உன்னை அறிந்தோ அறியாமலோ, இதை முழுமையாகக் கற்றுக் கொண்டுவிட்டாய் நீ. அப்படியிருந்தும் உனக்கு விருப்பம் இல்லாதது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமே! இதன் சிறப்பையும் ஆற்றலையும் நீ உணர்ந்து கொண்டால், இதை உலகுக்குப் பரப்பும் ஆர்வம் உன்னுள் மென்மேலும் பெருகும். உன் தந்தைக்கு எத்தனையோ சிஷ்யைகள் இருந்த போதிலும் இது விஷயத்தில் அவர் யாரையும் நம்பவில்லை. உன்னைத்தான் நம்பினார். அதை உணர்ந்து நடந்து கொள்”.

சாரு பதிலிறுக்கவில்லை. வாடிப்போன மேந்தோன்னிப் பூ மாதிரி தலை கவிழ்ந்து நின்றாள்.

மாதவன் நாயர் தொடர்ந்தார்:

ஆடற்கலையில் தேர்ந்து விளங்கிய மாதவி கூட தன் ஐந்து வயதில் இதைப் பயிலத் தொடங்கி, ஏழு வருஷஙகள் பயின்ற பின்புதான் தன் ஆட்டத் திறனை அரசன் முன் நிரூபித்துக் காட்டும் தகுதி பெற்றாளாம். நீ கற்றுக் கொண்ட காலமோ மிகக்குறுகியது. கற்க வேண்டும் என்ற ஆவல் உனக்கும், கற்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் உன் தந்தைக்கும் இருந்ததால்தான் இவ்வளவு திறமையைப் பெற முடிந்தது உன்னால். மேல் நாட்டினர் கூட விரும்பிப் பயிலும் இந்தக் கலை, தான் உருவான இடத்திலேயே மங்கி வருகிறது. நலிந்து வருகின்ற இதன் புகழையும் குலைந்து வருகின்ற இதன் மகத்துவத்தையும் மீண்டும் தழைக்கச் செய்ய வேண்டும். அதையே உன் லட்சியமாக்கிக் கொள்ள வேண்டும் என்றுதான் உன் தந்தையும் விரும்பினார்”.

சாரு உறுதி தொனிக்கும் குரலில் பேசினாள். “என் தந்தையின் விருப்பத்தை நான் புறக்கணிக்கவில்லை. ஆனால் அது அசாத்தியமானது. ஒரு பெண்ணால் இயலாத காரியம். எல்லாவித உணர்ச்சிகளையும் உள்ளத்தை விட்டுக் களைந்துவிட்டு, பெண்களின் இயல்பான மன நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒருத்தியாய், கலைக்கே — அதன் சேவைக்கே என் வாழ்நாளை அர்ப்பணிக்க வேண்டும்! அந்த அளவுக்கு நான் மனப்பக்குவம் பெறவில்லையே மாமா”.

” முடியாது என்று சொல்லாதே. முடியும் என்று நம்பு. தானாகவே நடக்கும். முயற்சி நமது. முடிவு அவனுடையது” என்று சற்றே கடுமையாகச் சீறினார் மாதவன் நாயர்.

” இதோ பாருங்கள் மாமா, நானும் நாலு பெண்களைப் போல வாழத்தான் ஆசைப்படுகிறேன். கலைக்கு என் சேவை சாதிக்கப் போவது எதுவும் இல்லை. நான் ஒருத்தி இல்லாவிட்டால் எத்தனையோ பேர்” என்றாள் சாரு தீர்க்கமாக.

பார்வதி வெடித்தாள். “உன் மனசு ஏண்டி இப்படிப் போயிற்று? நம் குடும்பத்தில் யாருக்கும் வராத திறமை உனக்கு இருந்துதான் என்ன செய்ய? உன் அப்பா உயிரோடிருக்கிறவரையில் இல்லாத இந்த எண்ணமெல்லாம் இப்போது எப்படியடி வந்தது?”

மாதவன் நாயர் எழுந்தார். “சாருவின் மனசு கலைத்துறையைவிட மேன்மையானது என்று அவள் கருதும் ஏதோ ஓர் உணர்ச்சிக்கு சமீப காலத்தில் அடிமைப்பட்டு விட்டது. அது மீளாத வரை நம் பேச்செல்லாம் கடலில் பெய்த மழைதான்”.

மாதவன் புறப்பட்டு விட்டார். பார்வதிக்கு மகளின் இந்த திடீர் மாற்றம் வியப்பாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருந்தது. ஆடற் கலையைத் தவிர வேறு எதையும் அறிந்திராத சாருவுக்கு இப்போது மட்டும் என்ன வந்தது? ஒரு புனிதமான கலையையே வெறுக்குமளவுக்கு அவளை மாற்றிவிட்டது எது? “சாரு, சும்மாதானே இருக்கிறாய்? அந்தச் சதங்கையைக் கட்டிக் கொண்டு கொஞ்சம் ஆடேன், பழக்கம் விட்டுப் போகக் கூடாது பார்” என்று தான் சொல்லும்போதெல்லாம், “இருக்கட்டும் அம்மா, அப்புறாமாய்ப் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவள் அலுப்புடன் சொல்வதன் காரணம் இப்போதுதான் பார்வதிக்குப் புரிந்தது.

’ இவளை இப்படியே விட்டுவிடக் கூடாது. மறுபடியும் கலையுணர்ச்சியை அவளுக்கு ஏற்படுத்த வேண்டும். அந்தக் கலைமகள்தான் கண் திறந்து அவளை வழி திருப்ப வேண்டும்” என்று மனம் உருக வேண்டிக் கொண்டு வெளியே புறப்பட்டாள் பார்வதி. சாருவின் விழிகளில் நீர் பொங்கிற்று. ‘மாமாவின் கூற்று உண்மைதானா? கலையை விட சிறப்பானது என்று நான் கருதும் ஓர் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டுவிட்டேனா?’

வெறுமையான எண்ணங்களை நெஞ்சில் சுமந்து கொண்டு, ஏக்கமே வடிவாய்த் தோட்டத்தில் உலவிய அந்த நாட்கள் சாருவின் நெஞ்சைவிட்டு மறையவில்லை. அப்போதெல்லாம் அவள் மனதில் எவ்வித உணர்ச்சிக்கும் இடமில்லை. கிருஷ்ணன் நம்பூதிரியின் வருகைக்குப் பின் இதயத்தின் எங்கோ ஓர் மூலையில் வித்தாய் விழுந்த ஏக்கம் நாளடைவில் துளிர்விட்டு வளர்ந்தது. தன்னைப் போன்றவர்கள் இல்லற வாழ்க்கையில் இன்பம் துய்க்கும்போது, தான்மட்டும் வாழ்விழந்தவள் மாதிரி அவர்களை ஏக்கத்தோடு நோக்கி நிற்பதை எண்ணி மனம் குமைந்தாள். தந்தையின் வேண்டுகோளை ஈடேற்றிவிட வேண்டும் என்ற நோக்கம் ஆழமாக இருந்தபோதிலும், திடீரெனத் தோன்றிவிட்ட தன் வருங்கால வாழ்க்கைக் கனவுகளைப் பற்றிய எண்ணங்கள் அதை மிகைத்து விட்டன. அவற்றை நெஞ்சை விட்டே நீக்கிவிடவும் அவள் விரும்பவில்லை. அந்த நினைவுகளே இனித்தன. இல்லற இன்பத்திற்காக அவள் ஏங்கினாள். அதைப் பெறுவதில் தடையாக இருக்கும் தந்தையின் கட்டளையை மட்டுமல்ல, தாயின் தூய அன்பையும்கூடப் புறக்கணித்துவிடத் தயாராயிருந்தாள்.

பரதக் கலையைச் சாரு விரும்பிதான் கற்றுக்கொண்டாள். அந்தக் கலைத்திறன் தன்னிடம் முழுமையாகப் படிந்து விட்டதற்காக அதற்கே தன் வாழ்நாளை அர்ப்பணித்து விடவும் அவள் தயாராயில்லை. சொல்லப் போனால் கலைச் சேவையைவிட இல்லற வாழ்க்கையையே அவள் அதிகம் விரும்பினாள்.

கிருஷ்ணன் நம்பூதிரி சாருவின் குடும்பத்துக்குச் சமீபத்தில்தான் அறிமுகமானான். அவன் ஒரு செண்டை வித்வான். தான் கற்றுத் தேர்ந்திருக்கும் அந்தக் கலையை உலகம் முழுவதும் பரப்புவதில் ஆர்வம் கொண்டிருந்தான். கலைஞர்களை தெய்வமாக மதித்தான். நம்பூதிரி குலத்தில் உதித்த ஒருவன், அதன் பரம்பரை நடைமுறைகளை விட்டு விலகி, செண்டை வாத்தியத்தில் தேர்ச்சி பெற்ற வித்வானாய் விளங்குகிறான் எனக் கேள்வியுற்ற சாருவின் தந்தை, அவனைத் தன் வீட்டுக்கு வரவழைத்தார். சங்கரன் நாயர் அப்போது பரத நாட்டியம் பயிற்றுவிக்கும் நட்டுவனாராய்ப் புகழ் பெற்று விளங்கினார். அப்படியொரு கலைஞரே தம்மை அழைக்கிறாரே என்றுதான் கிருஷ்ணன் நம்பூதிரியும் வந்தான்.

அதுமுதல் அந்த வீட்டுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமாயிற்று.

அந்தக் கண்ணனூரின் வனப்பு மிக்க தென்னஞ் சோலைகளில் கிருஷ்ணன் நம்பூதிரி — சாரு இருவரின் நட்பும் நெருக்கமாய் வளர்ந்து காதலாய் உருமாறிற்று. எதிலுமே பிடிப்பற்றிருந்த சாரு, மேந்தோன்னிச் செடியின் இலைகள் மற்றச் செடிகளைப் பற்றிக் கொள்கிற மாதிரி கிருஷ்ணனைப் பற்றிக் கொண்டுவிட்டாள். அதன் பிறகு அவளுக்கு வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியும், பிடிப்புமே ஏற்பட்டு விட்டன. பரதக் கலையின் ஆர்வமும், அதன் நினைவும் அவளை விட்டு நழுவி, குடும்ப வாழ்க்கையும், அதன் இன்பமுமே அவள் நெஞ்சில் எண்ணங்களாய்க் குடி புகுந்தன. நெஞ்சில் நெளிகிற நினைவுகளிலெல்லாம் கிருஷ்ணன் நம்பூதிரியே மிகைத்து நின்றான். சங்கரன் நாயரின் உள்ளக் கிடக்கையை அறியாத அவனும் சாருவை மிகவும் நேசித்தான். அவளிடம் ஓர் உயர்ந்த கலையம்சம் குடிகொண்டிருப்பதை அவன் உணரவில்லை.

மாமா மாதவன் நாயரின் சொற்களை இத்தனை தூரம் சாரு மறுத்துப் பேசிவிடக் காரணமே கிருஷ்ணனின் மீது அவள் கொண்டிருந்த அபார நம்பிக்கைதான். மேலும், ‘கலை உலகத்துக்கு என் சேவை ஒன்றும் பிரதானமல்ல. இதையே லட்சியமாகக் கொண்டு எத்தனையோ பேர் இல்லையா? அவர்களால் சாதிக்க முடியாததையா நாம் சாதித்துவிடப் போகிறோம்? என்றும் எண்ணினாள். தன் ஒருத்தியின் பிரவேசம் பலரை இந்தத் துறைக்குத் திரும்பத் தூண்டிவிடும் ஒரு தூண்டுகோல் என்பதை அவள் உணரவில்லை. சாருவின் கால்களில் சதங்கை ஒலித்து நாட்களாகிவிட்டது. இனி ஒலிக்கவும் செய்யாதோ?

சாரு, விழி நீரைத் துடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

இரவு மணி ஏழு. மாலை டியூஷனுக்குப் போயிருந்த பார்வதி இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டுக் கூடத்தில் சன்னமான ஒளியை உமிழ்ந்தபடி எரிந்துகொண்டிருந்தது ‘டூம்’ விளக்கு. தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த சாருவின் நெஞ்சில் அமைதியில்லை. ஏதேதோ அர்த்தமற்ற கற்பனைகள்.

தரையில் நிழல் படர்ந்தது. நிமிர்ந்தாள். கிருஷ்ணன் நம்பூதிரிதான் வந்திருந்தான். மனத்தில் மகிழ்ச்சி விரவ முகத்தில் மலர்ச்சியோடு எழுந்து கொண்டாள் சாரு.

” ஏன் என்னவோ போலிருக்கிறாய் சாரு?” பரிவுடன் கேட்டான் கிருஷ்ணன் நம்பூதிரி.

” ஒன்றுமில்லையே” என்றாள் சாரு.

“ ஏதோ சொந்தக் கவலை போலிருக்கிறது. சொல்லக் கூடாதது என்றால் வேண்டாம்”.

” அப்படியெல்லாம் ஒன்றுமில்லை”

” போகிறது, அம்மா இன்னும் வரவில்லையா?”

” சற்று நேரத்தில் வந்துவிடுவாள்.”

இருவருக்குமிடையே சற்று நேர மௌனம். அதைக் கலைத்தவன் கிருஷ்ணன்தான். “ உன் அம்மாவிடம் நம் விஷயமாகக் கேட்டுவிட்டுப் போகலாம் என்றுதான் வந்திருக்கிறேன்”.

சாருவைக் கண நேரத் தயக்கம் ஆட்கொண்டது. பிறகு, “அம்மா சம்மதிக்க மாட்டாள் என்றே நினைக்கிறேன்” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

”ஏன்?”

”நான் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதை அவள் விரும்பவில்லை. கலைச் சேவை செய்ய வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறாள். அது எனக்கு அறவே பிடிக்கவில்லை.”

”ஏன் பிடிக்கவில்லை?”

சாரு அர்த்த பாவத்துடன் பார்த்தாள் கிருஷ்ணனை. “ சில உணர்ச்சிகள் காரணம் தெரியாமலேயே மனத்தில் ஏற்படுவதுண்டு” என்றாள்.

”உண்மைதான்” என்று ஒப்புக்கொண்ட அவன், ”கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என்றான். பிறகு கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாத்தியங்களை நெருங்கி அதில் செண்டையை மட்டும் தூசு போகத் தட்டித் துடைத்தான். அவனது செய்கையை வியப்புடன் நோக்கியபடி நின்றிருந்தாள் சாரு. எல்லாம் ஆன பிறகு, அதை இருமு்றை தட்டிப் பார்த்துவிட்டு, வாசிக்கத் தொடங்கிவிட்டான். ‘தாயம்பகை’யை கட்டுக் கோப்பும் பெருமிதமும் பிறழாமல் வாசித்தான். ஒவ்வொரு கோவையையும் திரிகாலப் படுத்தி, மரபுகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனையைக் கலந்து அவன் வாசித்தபோது, ஆடிப்பழக்கப் பட்டுவிட்ட சாருவின் கால்கள் அதற்கேற்ப இயங்கின.

கிருஷ்ணன் நம்பூதிரி ‘முதல் நிலை’ முழுமைப் படுத்திவிட்டு, வாசிப்பதை நிறுத்தினான். பின்பு, சாருவை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தான். “ சாரு, பிரம்மாதமாக, தாளம் தப்பாமல் ஆடுகிறதே உன் கால்கள்? எங்கே அந்தச் சதங்கையைக் கட்டிக் கொண்டு ஆடு பார்க்கலாம்”. அவன் சாருவின் ஆட்டத்தை இதுவரை கண்டதேயில்லை. காண வேண்டுமென்று ஒரு ஆவல். சாரு தயங்கினாள். கிருஷ்ணனின் வேண்டுகோளை மறுக்க மனமில்லாதவளாய்ச் சதங்கையைக் காலில் கட்டிக் கொண்டு ஆடத் தயாரானாள்.

மறுகணம், ஸ்ரீராப்தி சாஸ்திரிகளின் ‘எல்லாம் பிரம்ம மயம்’ எனத் தொடங்கும் வேதாந்தப் பாடல்களை நாட்டிய இசையில் பாடினாள் சாரு. அதற்கேற்ப செண்டை முழங்க, சதங்கை குலுங்கிற்று.

செண்டை வாத்தியத்தின் முதல் நிலை கடந்து இடைநிலை தொடங்கியபோது, சாருவின் ஆட்டத்தில் ஒரு வேகம் பிறந்தது. நாட்டிய அடவுகளை தாளத்தின் காலப் பிரமாணம் தவறாமல், பாவம் குறையாமல் அவள் ஆடியபோது கிருஷ்ணன் நம்பூதிரியின் முகத்தில் வியப்புத் திரை விரிந்தது.

நாயகனின் பிரிவாற்றாமையினால் நாயகி வேதனையோடு விளக்கும் பாவத்தை, இசை, ஆட்டம், அபிநயம் ஆகியவற்றில் குறைவில்லாது ரசிக்க வேண்டிய தெய்வீகக் கலையம்சத்தோடு வெளிப்படுத்தினாள் சாரு. ஸ்வராட்சரப் பொலிவும், சாகித்தியமும் சரளமாய்ப் பெயர்ந்தன. அந்த ஆட்டத்தில் பாடலின் ஒவ்வொரு அடியையும் ஆழமாய் உணர்ந்து அவற்றை ஹஸ்தாபிநயச் செய்கையாலும், நாட்டிய முத்திரைகளாலும் அவள் விளக்கிக் காட்டியபோது, கிருஷ்ணன் நம்பூதிரி தன்னையே மறந்தான்.

அர்த்தபதாக, காத்தரீமுக முத்திரைகளை வலது இடது கைகளால் அலட்சியமாகப் பிடித்து ஒன்றையொன்று நீட்டிய விரல்களால் தொட்டுத் தொட்டு, மேலும் கீழுமாய்க் கொண்டுபோய் தை…தை என்று விளம்பத்திலும், திமிதை…திமிதை.. என்று திருதத்திலும் பிடித்து, மண்டியிட்ட கால்களுடன் வலக்கையை அலபத்ம முத்திரையாய் மார்பிலிருந்து முன்னே கொடுத்து, பின் வாங்கி த்ரிபதாக முத்திரையுடன் தை…தை… என்று அழகாகப் பின்னடி போட்டுப் போய், அஞ்சலி ஹஸ்தங்களைச் செய்து, அடி அட்டிமை போட்டு அந்தக் கஷ்டமான அலாரிப்பைச் சற்றும் சிரமமின்றி அவள் செய்து முடித்தபோது, கிருஷ்ணனின் முகத்தில் ஒரு மிரட்சி விரவியது. ‘இத்தனை பெரிய கலைச் செல்வியா சாரு? இப்படியொரு தெய்வீகக் கலையம்சமா அவளிடம் தேங்கி நிற்கிறது?’

சரேலென எழுந்தான் கிருஷ்ணன் நம்பூதிரி. “சாரு, நீ கலைமகளின் உரிமை. உன்னை அடையும் தகுதி எனக்கு மட்டுமல்ல, எந்த மானுடனுக்கும் கிடையாது. கலைத்தாயின் கருணா கடாட்சம் உன் மீது அபரிமிதமாய்ப் பொழியப்பட்டிருக்கிறது. நான் இதுவரை இத்தகைய ஒரு தெய்விகக் கலையம்சத்தை யாரிடமும் கண்டதில்லை. கலைத்தாய் தன் புத்திரியாகவே ஏற்றிருக்கிறாள் உன்னை. உன் வாழ்வு கேவலம் அற்ப வாழ்க்கையில் பலியாகிவிடாமல் கலைச்சேவையில் அர்ப்பணிக்கப்பட்டால் அது செழித்தோங்கும். இதை உணராத நானும் உன்னை நேசித்தேன். என்னை மன்னித்துவிடு சாரு. நீ தெய்வ அர்ச்சனைக்குரிய மேந்தோன்னி மலர். உன்னைக் குவளையில் வைத்து அழகு பார்க்க நினைத்தேன். வருகிறேன் சாரு” என்று படபடத்து விட்டுப் போய்விட்டான். சாரு சிலையாக நின்றாள்.

கனவு போன்ற நிகழ்ச்சிகள், கடந்து போன அந்த நாட்கள்தான் அவளை எப்படி எப்படியெல்லாமோ மாற்றி, என்னென்னவோ கிளர்ச்சிகளையெல்லாம் அவளுள் ஏற்படுத்திவிட்டு, இப்போது ஒரு புரட்சிக்குள்ளாக்கிவிட்டுப் போய்விட்டன! ஓர் உன்னதமான கலையையே துச்சமாய் உதறிய அவளை ஒரு சில நிமிஷங்கள்தான் எப்படித் திருத்தியமைத்து விட்டன! ஆம்…அவள் இல்லத்தை ஏற்றிருந்தால் வேலியோரம் பூத்துக் குலுங்கும் ஆயிரம் மேந்தோன்னிப் பூக்களில் ஒன்றாகத்தான் மறைந்திருப்பாள். கலை வாழ்க்கையின் மூலம் அவள் தெய்வத்துக்குச் சூடும் சிறப்பையல்லவா பெற்றுவிட்டாள்? வெப்பத்தைத் தாளாத மேந்தோன்னிப் பூதான் அவள் உள்ளம். அது வாடிவிட்டது. எந்த உஷ்ணத்தையும் தாங்கும் அதன் தண்டுதான் அவள் உடல். அது இருந்தது. உள்ளத்தில் உணர்ச்சியில்லை.

வேலியோரம் பூத்துக் குலுங்கின மேந்தோன்னிப் பூக்கள்!

==========

முடிவாகச் சில வார்த்தைகள்

மேந்தோன்னி
விபின்ன தேவி
அன்னை பகவதி
பெருமனத்து ஆண்டவன்
மாதவி ஆடல் கலையை ஏழு வருஷங்கள் பயின்றது
‘தாயம்பகை’யை கட்டுக் கோப்பும் பெருமிதமும் பிறழாமல் வாசித்தான்.
ஒவ்வொரு கோவையையும் திரிகாலப் படுத்தி, மரபுகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனையைக் கலந்து அவன் வாசித்தபோது
ஸ்ரீராப்தி சாஸ்திரிகளின் ‘எல்லாம் பிரம்ம மயம்’ எனத் தொடங்கும் வேதாந்தப் பாடல்களை நாட்டிய இசையில்
ஸ்வராட்சரப் பொலிவும், சாகித்தியமும்
ஹஸ்தாபிநயச் செய்கையாலும், நாட்டிய முத்திரைகளாலும்
அர்த்தபதாக, காத்தரீமுக முத்திரைகளை வலது இடது கைகளால் அலட்சியமாகப் பிடித்து ஒன்றையொன்று நீட்டிய விரல்களால் தொட்டுத் தொட்டு, மேலும் கீழுமாய்க் கொண்டுபோய் தை…தை என்று விளம்பத்திலும், திமிதை…திமிதை.. என்று திருதத்திலும் பிடித்து, மண்டியிட்ட கால்களுடன் வலக்கையை அலபத்ம முத்திரையாய் மார்பிலிருந்து முன்னே கொடுத்து, பின் வாங்கி த்ரிபதாக முத்திரையுடன் தை…தை… என்று அழகாகப் பின்னடி போட்டுப் போய், அஞ்சலி ஹஸ்தங்களைச் செய்து, அடி அட்டிமை போட்டு அந்தக் கஷ்டமான அலாரிப்பைச் சற்றும் சிரமமின்றி அவள் செய்து முடித்தபோது, கிருஷ்ணனின் முகத்தில் ஒரு மிரட்சி விரவியது.

(முத்திரைக் கதை-01 — 27.09.1964 ஆனந்த விகடன்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *