கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 10,037 
 
 

சூரியன் மறைந்தபிறகு அது நனைத்த இடங்களிலெல்லாம் நியான் விளக்குகளும் மங்கலான தெரு விளக்குகளும் ஆக்கிரமித்திருந்தன. தனியாக நடந்து வரும்போது என் காலடி சத்தத்தின் இடையே உருவான நிசப்தம் பயத்தை உண்டாக்கியது. இப்போது பைத்தியங்கள்,குடிகாரர்கள் இவர்களை மட்டுமே இத்தெரு எதிர்ப்பார்த்திருக்கும். சமயத்தில் என்னைப்போல் வீடுள்ளவர்களுக்கும் அனுமதியுண்டு.

சில மாதங்களுக்கு முன் இதே இடத்தில் – `உங்களுக்கு நாலு தலை` – ஜெயந்தி நீண்ட நேர மெளனத்தை நிரப்பினாள். அரைமணி நேரமாய் எதுவும் பேசாமல் நடந்துகொண்டிருந்தோம். என் மனைவி சுட்டிக்காட்டிய இடத்தில் இன்னும் நான்கு விளக்குகள் அசோக ஸ்தூபி போல நின்றிருந்தது. அதன் அடியில் நடப்போருக்கு எப்போதுமே நான்கு தலை தான். நான்கு விளக்கடியில் அவள் கண்களில் ஆர்வமினுமினுப்பும், என் கண்களில் எரிச்சல் கலந்த விட்டேரித்தனமும் தளும்பியிருந்தது. அவள் அணிந்திருந்த புடவை இப்போது நினைத்துப் பார்த்தால் பாந்தமாக இருக்கிறது.

அன்றுபோல் இப்போதும் மெளனத்தை மட்டும் துணையென நடந்து வீடு சேர்ந்தேன்.

வீட்டிற்குள் நுழைந்து சாவியையும், தினசரியையும் மேஜையில் எறிந்தேன்.பலசமயம் வெளியே சென்று தினசரி வாங்கினால்தான் அன்று என்ன தினமென்று தெரிகிறது.ஒன்றோடு ஒன்று அவ்வளவாக பேதமில்லாத அறைகள். அதே நாற்காலி, மேஜை, துணிகள். மதியம் சில நொடி இச்சையில் உச்சத்தை அடைய முடியாமலும் சாதாரணத்துவத்தையும் தொட முடியாமல் விடுத்த படுக்கை விரிப்புகள். அவற்றை ஒதுக்கிவிட்டு ஓரமாக படுத்துக்கொண்டேன். சற்று நேரத்தில் தூங்கியாக வேண்டும். சாவு, கனவு, பிறப்பு , காமம் எல்லாவற்றையும் மெளனமாக பார்த்திருக்கும் பூதம் இந்த படுக்கை. அதனிடம் அண்டும்போது நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்படியாக தூங்க வேண்டும். தூங்காமல் படுத்திருக்கும் கனவான்களிடம் கேட்டுப்பாருங்கள் – படுக்கை விழித்திருப்பவனின் யுத்தகளம் எனச் சொல்வான்.

மெல்லிய போர்வையை என் பக்கம் மிருதுவாக இழுத்து போர்த்திக்கொண்டேன்.சுவற்றின் பக்கம் முதுகை திருப்ப எத்தனிக்கும்போது –

`நீங்க வீட்டுக்கு வந்தது ரொம்ப நிம்மதியா இருக்கு`

`ம்ம்.ம்ம்`

`இவ்வளவு குறைவாக தூங்கியவனை நான் பார்த்ததேயில்லை`

மூச்சு விடுவதைவிட மெலிதாக அந்தக் குரல் என் மூளையில் நுழைந்தது. ஜெயந்தியின் குரல் தங்க ஜரிகையில் இழைத்ததுபோல் இருக்கும். ஆனால் இது அவள் குரல் போல் இல்லையென என்னையே ஏமாற்றிக்கொண்டேன்.எங்கிருந்து எனத் தெரியாவிட்டாலும் ஈயைப்போன்று கேட்டுக்கொண்டேயிருக்கும் எரிச்சல் தரும் குரல்.

‘என்ன? இன்னிக்கு என் பக்கம் படுத்திருக்கீங்க.’

சரிதான்.அவள் வீட்டைவிட்டுப் போனாலும் அந்த குரல் இன்றிரவு ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்கப் போகிறது. அவள் எப்போதும் இடது பக்கமே தூங்குவாள். பல்லிபோல் சுவற்றுக்கும் எனக்கும் இடையே இருப்பாள். அவள் போன பிறகு முழு கட்டிலையும் நன்றாக ஆக்கிரமித்திருந்தேன். இன்று மதியம் வரை அப்படித் தான் படுத்திருந்தேன்.

‘போய்த் தொலையேன். நான் தூங்கணும்’

‘நீங்க தனியா தூங்குவீங்களா? நானும் போயாச்சு, மதியம் வந்தவளும் ஓடிப்போய்ட்டா. உங்க காதலி பாவனாவை நினைத்து தானே வந்தவளை துரத்தினீங்க?’

‘உன்னை இப்போகூட விரட்ட முடியும். தெரியுமில்லை? உன்னைப் பற்றி யோசிப்பதை நிறுத்தினால் போதும்’

‘அப்ப செய்யுங்கள்.அதையும் தான் பார்க்கலாமே?’

ஒன்றைப்பற்றி நினைக்காமலிருக்க அதை ஞாபகத்தில் வைக்க வேண்டுமே.ஞாபகத்தில் நிறுத்தினால் எப்படி மறப்பது? இது ஒரு பைத்தியக்கார வட்டம்.இதைப் போன்ற மிக சிக்கலான கட்டத்தில் வரும் ஜெயந்தி, நான் தூங்கினால் மட்டுமே போவாள். சனியன் பிடித்த தூக்கம் வரவில்லை. அவளை கல்யாணம் செய்த போது இதே போல் ஒரு முடிவு எடுத்திருந்தேன்.என் காதலி பாவனா இறந்து ஐந்து வருடங்களுக்குள் இந்த கல்யாணம். அதற்குப் பிறகு ஏதும் யோசிக்காமல் உட்கார்ந்திருக்கும்போததும் வென்னீர் ஊற்று போல பாவனாவின் ஞாபகங்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. அப்போது பாவனாவை மறக்க மடத்தனமாக பல கற்பனைகள் செய்து வந்தேன். எகிப்திய கதைகளில் வருவதைப் போல, கையில்லாத வீரனாய் என்னை நினைத்துக்கொள்வேன். பாவனா நதியின் ஒரு கரையில், நான் மறுகரையில். எத்தனை முயற்சி செய்தும் என்னால் நீச்சலடித்து கரைசேர முடியாது. அதனால் நான் இருந்த கரைமணலில் என் காலகளால், கையைப் போல வடிவம் வரைந்து கொள்வேன். படுத்துதிருக்கும் ஜெயந்தியின் கண்கள் முதுகை குத்திட்டு நிற்க, நான் காலை வரை முடிவிலா கனவில் என் கைகளை அழித்துக் கொண்டிருப்பேன்.

கல்யாணமான முதல் நாளிலிருந்து இப்படி இருக்க, பல இரவுகள் கடந்த ஒரு இரவில் வெளியே போய்விட்டு நடந்துவரும்போது தான் ஜெயந்தி கேட்டாள்.

‘பாவனா யாரு?’

அப்போது தான் எனக்கு நான்கு தலைகள் இருந்தன. ஒரு கணம் அவள் கண்களில் இருந்த தவிப்பு என்னிடம் ஒட்டிக்கொண்டது.அடுத்த நாள் காலை வரை பதில் சொல்லவில்லை. சில கேள்விகளுக்கு பதில்கள் தேவையிராது.எல்லா மனைவியையும் போல ஜெயந்தியிடமிருந்து அடுத்த நாட்களில் சத்தமேயில்லை.இலக்கினை அடையும் சிங்கம் போன்ற கூர்மையான பார்வையில்லை. நரிபோல் தந்திரமாக மறைவிலிருக்கும் சமையலறையின் தரைகள் கிடுகிடுக்கவில்லை.பாத்திரங்களும் கைதவறி விழவில்லை. எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் நேரம் அவளிடமும், புரிய வைக்கும் மெளனம் என்னிடமும் நிறைய இருந்தது.

இப்போதெல்லாம் இரவில் ஊசிபோல் நுழைந்துவிடுகிறாள் –

`என்னோட ரோஸ், சாமந்திக்கெல்லாம் தண்ணீர் விடுகிறீர்களா? இல்ல நான் போனதும் ஜன்னலைக் கூட திறக்காமல் படுத்துக்கொண்டேயிருக்கிறீக்ளா?`

`நீ இன்னும் போகலியா?`

`சில நாளா தூக்கம் வராம யோசிக்கறீங்களே. தினமும் வருகிற கையில்லாத கனவைவிட சுகமாயிருக்கோ என் ஞாபகங்கள்?`

`சீ, போய்த் தொலை`

நான் உதைத்த கட்டில் பகுதியிலிருந்து பீட்ஸா துண்டுகள் சிதறின. மத்தியானம் வாங்கியவை. அன்று காலை எழுந்து ஜன்னல் சீலைகளை நீக்கும்போதுதான் அறையில் பரவிய வெளிச்சம் என் தனிமையை சுரீரென உறுத்தியது. வயதொன்றும் அவ்வளவு ஆகவில்லையே. காதலி,மனைவி இருவரோடும் அந்தந்த வயதனுபவங்களுக்கேற்ப வாழ்ந்தாகிவிட்டது. இப்போது எனக்கே எனக்காக சில மணிநேரங்கள் – தற்கொலை மட்டுமல்ல, காமமும் வினாடி தவிப்புதானே- செலவுசெய்து பார்க்கலாம். நான் இருக்கும் பகுதியில் நினைத்த வினாடிகூட தப்ப விட சந்தர்ப்பம் மிக தொலைவில் இருக்காது. வெளியே போன அரைமணியில் புதியவள் ஒருத்தியுடன் இருவராய் வீட்டினுள் வந்தோம்.வந்தவள் கேட்டதும் எனக்கு பசியுணர்வு தெரிந்தது. பீட்ஸா வாங்கி, சூழ்நிலை உறுத்தாமல் முதல் பசிக்கு உணவிட்டோம். இரண்டாவது பசி இருவருக்குமே வேறுவேறாக இருக்குமாதலால், முதல் பசி நிதானமாகவே செலவானது.

பாத்ரூம் குழாயிலிருந்து தண்ணீர் விழும் சத்தத்தை சிரித்துக்கொண்டே கேட்டபடி வெளியே நின்றிருந்தாள். எந்த குழாயிலும் கேட்கும் சத்தம்தான். எதிர்ப்பாத்தபடி இருக்கப்போகும் அடுத்த செயல்களில் இதுவாவது வித்தியாசமாய் இருக்கட்டுமே என நினைத்து சிரித்திருக்கக்கூடும். நிதானமாய் –

‘இப்படியே நிற்கட்டுமா?’

‘வேண்டாம்’

‘தொந்தரவா இருக்குமா என்ன?’

‘இல்லை..உனக்கு ரொம்ப குளிரெடுக்கும்.இங்க வா..’’

மதிய செய்திகள் எல்லா பக்கங்களிலுமிருந்து எதிரொலித்துக்கொண்டிருந்தது.தொடக்கத்தில் பழக்கமில்லாத சங்கோஜ கட்டிப்பிடித்தல்கள் நடந்தேரின. இந்த செயல்களின் முடிவு, தலை முடியின் வடிவத்தையோ, படுக்கை விரிப்பின் வடிவ அலங்கோலத்தையோ கொண்டு நிர்ணயிக்கப்படுவதல்ல. சீரான இயக்கத்தில் சற்றே சுவாசப்படுத்திக்கொள்வதற்குள் கட்டிலின் சுவற்றுப்பகுதியிலிருந்து ஜெயந்தி –

‘புதுசாக திரைச்சீலை மாத்திருக்கேனே. இந்த ஜன்னல்பக்கம்ங்க.. எப்படியிருக்கு?’

`எப்பவும் திறந்துதானே வெச்சிருக்கே. இது என்ன பண்ணப்போகுது?`

‘மத்தியானம் அம்மா ஃபோன் பண்ணாங்க. தீபாவளிக்கு மாமா வீட்டுல எல்லாரும் வந்தாங்களாம். விசேசம் ஏதாவது இருக்கான்னு கேட்டாங்களாம். அப்பாவோட ஸ்கூல்ல கூட கேட்டாங்கலாம்..’

‘சே..’ – எட்டு மணி செய்தியின் சத்தத்தில் நான் தள்ளிவிட்ட ரோஜா தொட்டிகள் மீன் தொட்டியில் இடித்து விழுந்தது பக்கத்து வீட்டில் கேட்டிருக்காது.பெண் தேனீக்களைப் போல ஞாபக சாளரங்கள் எல்லாம் ஒரே நினைவுகளோடு இருந்த சமயம் அது. என் காதலி பாவனாவின் மரணம் அலையாய் நிமிண்டிக்கொண்டிருந்தது. சிறு வயது முதலே பழகியிருந்தாலும், கல்லூரியிலே எங்கள் நெருக்கம் முழுமையானது போல் இருந்தது. தொடுகையைவிட ஆழமானப் பிறகு நட்பிற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. அவள் போய் ஐந்து வருடங்களுக்குப் பிறகு என்னையே ஏமாற்றிக்கொண்ட தருணத்திலோ, எதிர்கால தனிமையின் இருப்பின்மையாலோ கல்யாணம் செய்துகொண்டேன். என் மெளனத்திற்கு துணைநிற்க வந்தவள் போல் மனைவியாக வந்தாள் ஜெயந்தி. இப்படி ஒவ்வொன்றையும் இருக்கும்போது விட்டுவிட்டு, அவை கிடைக்காமல் போகும்போது தவிக்கிறேன்.என் ஞாபகங்களைத் தவிர எதுவுமே என்னை வழி நடத்தாமல் போய்விட்டதும் ஒரு காரணம். இப்போது யோசித்தால் அடிபட்ட இடத்தை நோண்டுவதுபோல். ரணம்தான் அதிகமாகும்.

என் இருப்பில் எனக்கே வெறுப்பு அதிகமானபோது ஜெயந்தி நம்பிக்கையின் விளிம்பிலிருந்தாள். சுயபச்சாதாபம் மீறி கோமாளித்தனமாய் உருமாறிக்கொண்டிருந்த போது ஜெயந்திக்கு என் மீது கொஞ்சம் சகமனித சினேகம் ஒட்டியிருந்தது என நினைக்கிறேன். கட்டற்ற வெறுப்பில் செல்ல அருகதை உடையவள், தெரிந்தவனாகவேனும் என்னை மதித்துப் பேசிச்சென்றாள். ஜெயந்தி வீட்டைவிட்டுப் போனபோதா அல்லது எப்போது என்று ஞாபகமில்லை. ஆனால், அப்போது இருள் இன்னும் இருண்டு வந்துகொண்டிருந்தது.நான் வெளியே சென்று திரும்ப வந்து பெருமூச்சுடன் கட்டிலில் படுத்திருந்தபோதுதான் கடைசியாக அவள் பேசினாள்.

‘நீங்க கண்டிப்பாக நரகத்துக்குப்போவீங்கன்னு சொல்லணும்போல இருக்குங்க..’

‘அதைப்பற்றி நம்பிக்கையில்லை..’

‘ஆனால், பயம் இருக்குமில்லையா?’

‘ஜெயந்தி, மரணத்தை நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆனால், நரகத்தைப் பற்றியெல்லாம் ஒன்றும் தோணவில்லை..’

‘எனக்கும் பயமாத்தான் இருக்கிறது. பார்க்கலாம்.’

இப்போதும் மனம் பித்துபிடித்ததுபோல் இருக்கிறது. என்னுடன் வந்த புதியவள் எனக்குக் பக்கத்தில் மரத்துப்போய் பாதியிலேயே தூங்கத் தொடங்க, நான் எதையோ யோசித்தபடி அந்த அறையின் வடிவங்களையும், நிழல்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அவளது மூச்சு மெதுவாகத் தொடங்கி, சீராக மாறி, சொகுசாக தூக்கதினுள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்தில் எழுந்தபோது அவள் என்னைப் பார்த்துத் திகைக்காதது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அரைகுறையாய் நடந்த செயலில் அவளுக்கு கண்டிப்பாக ஏமாற்றமிராது. என்னைத் தள்ளிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

நான் ரோஜா செடியை பார்த்து அழுததைப் பற்றியும், உச்சத்தையும் எட்டாமல் மரவட்டையாய் ஆடாமலிருந்ததையும் தன் சகாக்களுடன் பகிர்ந்து இரவு முழுவதும் சிரித்திருப்பாள்.

– உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது (06/26/2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *