கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 13, 2013
பார்வையிட்டோர்: 10,262 
 

விஷயத்தைக் கேள்விப் பட்டவுடன் என் அப்பா ஸ்வீட்டோடு வந்திறங்கி விட்டார். கண்கள் கசிய சரஸுக்குட்டீ! என்று வந்து அணைத்துக் கொண்டவர், உணர்ச்சியில் அழுதேவிட்டார். எதையோ படித்துக் கொண்டிருந்த என் கணவர் பெட்ரூமிலிருந்தபடியே எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு மனசு நிறைந்திருந்தது.இப்பத்தான் நீண்ட நாட்களுக்கப்புறம் அப்படி இப்படியென்று இரண்டு மாதங்கள் பீரியட் தள்ளிப் போயிருக்கிறது. பத்து வருஷ பிரார்த்தனை. இனிமேல் இந்த வீட்டில் ஒரு மழலை கொஞ்சி விளையாடுவதைப் பார்த்து அனுபவிக்க நமக்கு ப்ராப்தமில்லை என்ற விரக்திக்கு நாங்கள் வந்துவிட்ட தருணம், இப்படி ஒரு அதிர்ஷ்டம் எங்களுக்கு வாய்த்திருக்கிறது. அதேசமயம் உள்ளூர லேசாக பயமும் இருக்கிறது. இதற்கு முன்பு ஒரேயொரு தடவை இப்படி பீரியட் தள்ளிப் போய், எல்லோரும் கனவு கண்டு, நானும் அவரும் அழகான பெயருக்காக, நெட்டில் மாய்ந்து மாய்ந்து தேடி,. அதிலும் பெயரின் முதல் இரண்டுஆங்கில எழுத்து ஏ யில் ஆரம்பிக்க வேண்டுமாம், அப்பத்தான் ஆல்ஃபாபடிகல் ஆர்டரில் குழந்தையின் பெயர் முதலில் வருமாம். பெண்ணோ,பிள்ளையோ?. எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் முதலாக இருக்க வேண்டும்.இது அவர் கனவு.. கடைசியாக ஆணாயிருந்தால் ஆதித்யன், பெண்ணாயிருந்தால் ஆர்த்தி என்று ஏகமனதாக முடிவு செய்திருந்த வேளையில் திடுதிப்பென்று மடை உடைந்து போய் அழுத அனுபவம் எனக்கு இருக்கிறது. இப்போதும் அப்படி ஆகிவிடக்கூடாதே. கடவுளே! பூஜையறையில் அம்பாளை கண்மூடி பிரார்த்திக்கிறப்போ கரகரவென்று கண்ணீர் திரள்கிறது. ஆனால் இந்த தடவை அப்படியில்லையென்று நான் திடமாக நம்புகிறேன்.

” தாயே! அம்பிகே! போதும். பத்து வருஷங்களாய் நான் பட்டது போதும். எவ்வளவு சுடுசொற்கள்?, குத்தல் பேச்சுக்கள். நல்லவேளை அத்தை ஊரில் இல்லை. வாயைத் திறந்தால் அமிலம் பீச்சியடிக்கும். பெண்ணுக்குப் பெண்ணே எதிரி..

“இனிமே அவளுக்கு பொறக்கப் போவுதாங்காட்டியும்.. எனக்குத் தெரியும்டா. அவள் வம்சம் அப்படி,.. இவ அம்மா பெத்ததே இவ ஒருத்தியத்தானே? இங்க அதுக்கும் வழியில்லாம அடஞ்சிப் போச்சி. நமக்குன்னு தேடித்தேடி புடிச்சோம் பாரு. அதுக்குத்தான் பொண்ணு தேட்ற போது அவங்க பரம்பரை எப்படீன்னு நுணுக்கிப் பார்க்கணுன்றது. எங்கே என் பேச்சைக் கேட்டே?..”–.

நான் வாயைத் திறக்க மாட்டேன், திறக்கக் கூடாது. பொறுக்கணும். சுடுசொற்களை ஜீரணம் பண்ண கத்துக்கணும்மா. , திருப்பி அப்படியே கொட்டக்கூடாது, கொட்டிட்றது பெருசில்லம்மான்னு அப்பா சொல்லுவார். அப்படியே கொட்டினாலும் இங்கே செல்லுபடியாகாது.. என் வீட்டுக்காரர் சரியான அம்மா கோண்டு. எந்த விஷயத்துக்கும் அம்மா பக்கம்தான் நிற்பார். ஏன் இந்த பத்து வருஷங்களில் எந்த டாக்டரையுமே கன்சல்ட் பண்ணலியா? ன்னு நீங்க கேட்கிறது எனக்குக் கேட்கிறது சார். பார்க்காமலா இருப்போம்?. எல்லா டாக்டர்களையும் பார்த்தாச்சி. எங்க இரண்டு பேரையுமே டெஸ்ட் பண்ணிப் பார்த்தாச்சி. அவருக்கு ஒரு குறையும் இல்லையாம், உயிரணுக்கள் எண்ணிக்கை சரியா இருக்காம். எனக்குத்தான் சினைக் குழாயில் அடைப்பாம். அடைப்பை நீக்கி, டீஅண்ட்ஸி ஆபரேஷனையும் பண்ணி முடிச்சாச்சி. இப்ப இரண்டு பேரும் நார்மல், எப்ப வேண்டுமாலும் கரு தரிக்கலாம் என்றார்கள். சொல்லி மூணு வருஷம் ஆச்சி. இன்னும் இல்லை. ஏன்? னு தெரியவில்லை. இனிமே கடவுளை வேண்டிக்கோ என்கிறார்கள் டாக்டர்கள். இந்த மூன்று வருஷங்களாக அத்தை என்மேல் கொட்டும் சுடுசொற்கள் இருக்கே.அப்பப்பா. ஏதாவது ஒரு வீட்டு விசேஷத்துக்கு போனோம் என்றால், திரும்பும் போது கண்டிப்பாய் சத்தமில்லாமல் அழுதுக்கொண்டுதான் வருவேன். ஊசியாய் குத்துவாள். அவர் டியூட்டிக்கு கிளம்பறப்போ நான் அவர் மனைவி தானே?, எதிரில் வரக்கூடாதாம்,.அபசகுனமாம் கத்துவாள்.இப்படி எத்தனையோ அவமானங்கள், கொடுமைகள். எந்த காலத்தில இருக்கீங்கன்னு நீங்க கேட்கலாம். இந்த காலத்தில்தான் இப்பவும் இதெல்லாம் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இதெல்லாம் அவருக்குத் தெரியுமா?ன்னு கேக்கறீங்க. சிலது தெரியும், சிலது தெரியாது. நானும் சொல்றதில்லை சொன்னால். ப்ளீஸ்! பொறுத்துக்கோ . சின்னவயசிலேயே அப்பாவை இழந்த, என்னை அம்மாதான் அவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து,படிக்கவெச்சி ஆளாக்கினாங்க என்று எனக்குத்தான் சமாதானம் சொல்லுவார். அதுக்காக என்னை இப்படி இம்சிக்கிறது எந்த விதத்தில நியாயம்?..

“அடியே! நீ இருக்கிற இருப்புக்கு விசேஷங்கள்ல முன்னமுன்ன போய் நிக்காதே, நிக்கக்கூடாது. ஏன் சொல்றேன்னு புரியுதா?.’—–உடையவங்க சொல்றாங்களோ இல்லையோ. அத்தை வார்த்தைகளால் கொட்டுவாங்க.. ஒருமுறை ஆசையாக ஒரு பலா கன்று கொண்டுவந்து தோட்டத்தில் நட்டேன். அதுக்கு எரு இட்டு, மண் அணைச்சி,, தினசரி சிரத்தையா தண்ணீர் விட்டு,, பார்த்துக் கொண்டேன்.ஆனால் என்னுடைய அவ்வளவு பணிவிடைகளையும் ஏற்றுக் கொண்டு இரண்டு மாசத்தில் காய்ந்து விட்டது. ஏன்னு தெரியவில்லை. வருத்தமாக இருந்தது.. இதில என் தப்பு என்னங்க இருக்குது?.இதுக்கு அத்தை சொல்றாங்க

“ க்கும்! நாம வெளங்கினாத்தானே நாம வெச்சது வெளங்கும்.”—–கேட்டுக் கொண்டிருந்த அவர் ஒன்றும் சொல்லாமல் எழுந்து வெளியே போய்விட்டார். குபுக்கென்று அழுகை பீறிட்டது எனக்கு.அன்றைக்கெல்லாம் மறைவாய் போய் அழுதேன்.இதுபோன்ற அவமதிப்புகள் எத்தனையோ. இரவு ஊர் அடங்கினப் பிறகு சமாதானப் படுத்த வருவார்.. இந்த பதின்மூன்று வருஷங்களில் அவரை முழுசாய் எனக்குத் தெரியும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனால்..கடந்த ஒரு மாசமாக எனக்குத் தெரியாமல் இங்கே என்னென்னவோ விஷயங்கள் ரகசியமாக நடப்பதாக தெரிகிறது. ஒருநாள் இரவு அவரிடம் கொட்டிவிட்டேன்.

“வேண்டாம். என்னை விட்ருங்க. குழந்தை இல்லாததுக்குக் காரணம் நான் தானே, நீங்க இல்லையே?. அத்தை . சொல்றாப்பல நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் விளங்காத ஜென்மம்.பிறந்து ஒரு மாசத்துக்குள்ள பெத்தவளை முழுங்கிட்டேனாம். எங்க ஆயா சொல்வாங்க. அப்படிப் பட்ட ராசி நான். நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் கையெழுத்து போட்டுத்தர்றேன்….’—-அவர் என்னை அதட்டினார்…

“முட்டாள் மாதிரி உளறாதே.நான் ஒண்ணும் அப்படி அலையறவன் இல்லை. குழந்தை இல்லையென்ற கவலை நமக்கு இருக்குதுதானே?.”

‘ஆமாம்.”.

“அதேதான் அவங்களுக்கும். குடும்பம் விளங்க ஒரு வாரிசு இல்லையேன்ற ஆத்திரம். வயசானவங்க அவங்க பேசறதை எல்லாம் பெருசா எடுத்துக்காத. சரி அவங்க சைட்ல அப்படி நெனைக்கிறதில தப்பு என்ன இருக்கு?. ஊருல உலகத்தில நடக்கிற. யதார்த்தத்தைத்தானே பேசியிருக்காங்க?.விடு. .”—-எனக்கு அழுகை வந்துவிட்டது. எவ்வளவு யதார்த்தமாக விஷயத்தை வெளிப்படுத்துகிறார் பாருங்க.
“ எனக்கு எல்லாம் தெரியும்.. தேவிகாபுரத்தில அத்தை உங்களுக்காக பொண்ணு பார்த்திருக்காங்க. ரகசியமாக ரெண்டாவது கல்யாணத்தை நடத்த திட்டம் போட்டிருக்கீங்க. ”

“ச்சீ! வாயை மூடு. இப்படியெல்லாம் நான் எப்பவும் யோசிச்சதில்லை. புரிஞ்சிக்கோ. ஒருவேளை குழந்தை இல்லையே என்று அம்மா இன்னொரு கல்யாணத்தைப் பத்தி யோசிச்சிருக்கலாம், ஏன் வெளியே பேசியுமிருக்கலாம். விடு சும்மா பண்ணிப் பண்ணி பேசிக்கிட்டு இருக்காதே..”——- பொய். பேசறதுமட்டுமில்லை, அதை மறைக்கவும் செய்கிறார். போன ஞாயிற்றுக்கிழமை எனக்குத் தெரியாம தேவிகாபுரம் போய்வந்திருக்கிறார்.. நான்தான் சம்மதிக்கிறேனே ஏன் மறைக்கணும்?.அத்தை என்னை திட்றதாவது நிற்கட்டும்.
“நீங்க பொய் பேசறீங்க. தெரியும் தேவிகாபுரம் போய் வந்திருக்கீங்க.”

“சரஸு! நிறுத்து. துபாய்ல என்ஜினியரா வேலை பார்க்கிற என் ஃப்ரண்ட் உலகநாதன் ஊருக்கு வந்திருக்காண்டீ. அவனைப் பார்க்கத்தான் தேவிகாபுரம் போனேன். தெரிஞ்சிக்கோ.”—-என்னவோ சமாளிக்கிறார். இரண்டு நாளைக்கு முன்ன எதிர் குடியிருப்பிலுள்ள மரகதம் அத்தைதான் இவங்க ப்ளான் எல்லாத்தையும் சொல்லிட்டாங்களே..

“அடியே! குழந்தை இல்லேன்னு சொல்லி ரெண்டாம் தாரத்துக்குப் பார்த்து வெச்சிருக்கிற தேவிகாபுரத்து பொண்ணு டீச்சராம்டீ.படிச்சிட்டு கை நிறைய சம்பாதிக்கிறவ யாராவது ரெண்டாந்தாரமா வாழ்க்கை படுவாளா?.அதுவும் முதல் தாரம் இருக்கச்சே. என்ன எழவோ?..”

எனக்குத் தெரியாமலேயே இவ்வளவு விஷயங்களும் நடந்திருக்கின்றன, அம்மாவும் பிள்ளையும் எவ்வளவு கமுக்கமா வெச்சிருக்காங்க?. அதனாலதான் இரண்டுபேரும் அடிக்கடி தனியே போய் ரகசியம் பேசறாங்க போல., நான் போனால் பேச்சை நிறுத்திடுவாங்க. எனக்குன்னு கேட்க வாய்செத்த என் அப்பாவைத்தவிர வேற யார் இருக்காங்க?.ஆனால் இன்றைக்கு என் பங்கில் கடவுள் இருக்கிறார்னு தெரிஞ்சிப் போச்சி. என் வயிற்றில் ஒரு விடியல் விடிய ஆரம்பித்திருக்கிறது. முற்றுப் புள்ளி வெச்சாச்சி. என் சந்தோஷ சமாச்சாரம் உறுதியானப்புறம் தேவிகாபுரம் விஷயம் என்னாகுதுன்னு பார்க்கலாம். என் வயிற்றிலும் ஒரு சிசு என்பதில் நான் அதிக சந்தோஷத்திலிருந்தேன்..

“சும்மா ஆட்டம் போடாதடீ! முத்து திரளுதா, வழக்கம் போல ஒடையுதான்னு பார்ப்போம்..”—இது அத்தையின் வைர வரிகள்.. ஆனால் எனக்குத் தெரியுது, இது மெய்தான்.முத்து திரண்டுவிட்டது. பசி இல்லை, சாப்பிட்டாலும் குமட்டுகிறது. சிலசமயம் வாந்தி எடுத்திட்றேன்,, நிறைய தூங்கறேன். கண்ணாடியில பார்க்கிறப்ப எப்பவும் மினுமினுன்னு, தூங்கியெழுந்த மாதிரி முகம் உப்பலாகத் தெரிகிறது. இதுக்கு முன்னே இப்படியெல்லாம் இருந்ததில்லை. கடவுளே! என்னை கை விட்றாதே.
“சரஸு! இது உருவாயிருக்கிற நேரந்தான் நமக்கு இப்ப சொந்த வீடு கட்டுற யோகம் வாய்ச்சிருக்குன்னு என் ஃப்ரண்ட் சத்தியன் சொல்றான்..”——என்றார்.அவர். ஆமாம் ஒரு விஷயம். சொல்ல மறந்துட்டேன் சார்., ஆரணி டவுன்ல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். அவரு தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார். ஆரணியிலிருந்து தச்சூர் பதினைஞ்சி கிலோ மீட்டர் தூரம். அங்க குவார்ட்டர்ஸில் எங்களுடைய ஜாகை. .நான் ஹவுஸ் ஒய்ஃப். அத்தை நாலைஞ்சி நாளாக ஆரணியிலதான் இருக்காங்க. கன்ஸ்ட்ரக்ஷன் வேலை நடந்துக்கிட்டிருக்கு. போன வாரமெல்லாம் நான் போய் பார்த்துக்கிட்டேன். இந்த வாரம் அத்தையின் டர்ன்.ஆயிரம் சதுர அடியில் இரண்டு பெட்ரூம் வீடு என்பது ப்ளான்.

“ஆனா சரஸு! இப்படி உனக்கு பீரியட் தள்ளிப்போறது சகஜந்தானே?..சும்மா கனவு கண்டுக்கிட்டு இருக்காதே…”—அவர் முகத்தில் எந்த சந்தோஷமும் இல்லை.சே!. எனக்கொரு மகன் பிறப்பான்னு—பாடுகிறார்களே, எத்தனை சினிமாவில காட்டுகிறார்கள்? சரியான ஜடம். உ.ம்.ம்! அவர் உள் மனசில என்ன இருக்கோ?. . .

சரீ இரண்டு மாசம் ஆயிட்டப் பின்னாலும் ஏன் தவிச்சிக்கிட்டு இருக்கணும்.எந்த உலகத்தில இருக்கீங்க?. ஒரு மாசத்திலேயே கன்ஃபார்ம் பண்ணலாமே. இதுக்கு சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன்னு எத்தனை வசதிகள் இப்ப இருக்கு? அப்படீன்னு நீங்க கேட்கறீங்க.. ஆமாம் சார், இருக்குன்னு தெரியும். ஆனா எங்க அத்தை ஒத்துக்கலியே.. முழுசா மூணு மாசம் முடியட்டும் அப்புறம் பார்க்கலாம்னு தீர்த்து சொல்லிட்டாங்களே. நாங்க என்ன பண்றது?..

“சரஸு! நாளைக்கு காலையிலேயே சீக்கிரம் ரெடியாயிடு ஆஸ்பிட்டல்ல .டாக்டர் நந்தினி மேடம் என்னை திட்றாங்க.ரெண்டுமாசம் முடிஞ்சும் இன்னும் உங்க மனைவியோட கர்ப்பத்தை கன்ஃபார்ம் பண்ணாம மெய்யோ பொய்யோன்னு இருக்கீங்களா?. லேட் இஷ்யூ வேற. எல்லாம் நார்மலா இருக்கான்னு செக் பண்ணத்தேவல?. இதுக்கு நீங்க ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேற. காலையிலே கூட்டிவாங்கன்னு சொல்லிட்டாங்க.”
“ஏங்க! அத்தை மூணு மாசம் ஆவட்டும்னு…”

“அவங்க சொல்வாங்க. நான் சொல்லிக்கிறேன்.”

காலை எட்டு மணிக்கெல்லாம் போய்விட்டோம். ஓ.பி. ஆரம்பித்திருந்தது. இன்றைக்கு கர்ப்பிணிகள் பரிசோதனை தினம் போலிருக்கிறது. ஹால் கொள்ளாத அளவு கர்ப்பிணிகள் கூட்டம், வரிசையில் காத்திருந்தனர். டாக்டர் நந்தினி எங்கிட்ட வாஞ்சையுடன் கையைப் பற்றி, பிரியத்துடன் பேசியதில் எனக்கு பாதி பலம் வந்தது போல் இருந்தது..என்னை படுக்க வைத்து பரிசோதித்தார். சில கேள்விகளையும் கேட்டு முடித்து வெளியே அழைத்து வந்தார்

“சார்! ரொம்ப அனிமிக்காக இருக்காங்க. டானிக்குகள் எழுதித் தர்றேன் .இரண்டு மாசம் தொடர்ந்து சாப்பிடட்டும். அப்புறம் பார்க்கிறேன்..”—என்னை தட்டிக் கொடுத்தார்.

“மேடம்! கர்ப்பம்..?.”

“வெரி சாரி!. கர்ப்பம் இல்லை. மத்தபடி இவங்களுக்கு வர்ற மயக்கம்,வாந்தி, நிறைய தூக்கம், அதெல்லாம் ப்யூர்லி சைக்கலாஜிக்கிள். ப்ளஸ் அனிமியா. .கவலைப் படாதீங்கம்மா இன்னும் உங்களுக்கு வயசு இருக்கு..”—-டாக்டரம்மா தட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். அவர் சோர்வுடன் கிட்டே வந்து நிற்க, எனக்கு அழுகை பீறிட்டது.

“இவளுக்கு என்ன தெரியும்?.படிச்சிட்டா மட்டும் போதுமா?.என் ஒடம்பு எனக்குத் தெரியாதா?.நான் பொய் சொல்றேனா…”—-அதற்கு மேல் முடியாமல் குலுங்கினேன்.பதிலுக்கு அவர் எரிச்சலுடன் திட்ட ஆரம்பித்தார்.

“ஏய்! ச்சீ! பேசாம வா. கண்டதுக்கெல்லாம் அழுவறது. சும்மா சும்மா வெறுமனே கனவு காண்றது, அப்புறம் ஏமாந்துட்டு அழுவறது.மொதல்ல குழந்தை பொறக்காதுன்றதை ஏத்துக்கிட்டு வாழ கத்துக்கோ. பொறந்தா அப்ப சந்தோஷப் பட்டுக்கலாம். புரியுதா?..சரி..சரி நான் ஆரணி கிளம்பறேன்.இன்னிக்கு லிண்டல் ஜல்லி போட்ற வேலை இருக்குல்ல?. போயாவணும்.ராத்திரி கடைசி பஸ்ஸுக்குத்தான் வருவேன்.சரியா?. சும்மா அழுதுக்கிட்டு உடம்பை கெடுத்துக்காதே. அவ்வளவுதான் சொல்வேன்.”—-அவர் கிளம்பிவிட்டார்.

இரண்டுமாசமாக கண்டு வந்த கனவு நொடியில் கலைந்து போயிற்று. நான் குமுறிக் குமுறி அழுகிறேன், அதற்கு..அவரிடம் அனுசரணையாக ஒரு சொல் இல்லை. இனிமேல்தான் அத்தைக்கு விஷயம் தெரியணும். அதை நினைக்கும்போதே உடம்பு நடுங்குகிறது.. முழு வேகத்துடன் என்னைக் குத்தி கிழிக்கப் போகிறாள். இவரும் கண்டும்காணாமல்தான் இருக்கப் போகிறார்.. படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் போன என்னைப் போன்ற பெண்கள், புகுந்தவீட்டில் பொருளாதார சுதந்திரமின்மையால் அப்பா சொல்வதைப் போல வசவுகளை ஜீரணிக்கக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இனி நான் எங்கே போவேன்?. இது பொய்கர்ப்பம் என்றதும் என்மீது வெறுப்பு. . அதனால்தான் அப்படி விட்டேற்றியாக பேசிவிட்டுப் போய்விட்டார். அவர் போய் சிறிது நேரத்திற்கெல்லாம் மரகதம் அத்தை தேடிக் கொண்டு வந்து விட்டாள்.

“உங்க வீட்டுக்காரர் எங்கேடி கிளம்பிட்டாரு?.”

“ஆரணிக்கு. அங்க இன்னிக்கு காங்க்ரீட் போட்றாங்க.அதுக்கு போறார்.”

”ஏண்டீ இப்படி இருக்கிற?. அம்மாவும், பிள்ளையும் இன்னைக்கு தேவிகாபுரம் போறாங்க, தெரிஞ்சிக்கோ.”

என்ன தெரிஞ்சி என்ன பண்ணப் போறேன்?. சுருண்டு படுத்துவிட்டேன். மதியம் சமைக்கவில்லை. சாப்பிடப் பிடிக்கவில்லை, குமட்டுகிறது. ஆனால் அந்த டாக்டர்தான் கர்ப்பமில்லை என்றார்களே..இனி என் காலம் எப்படிப் போகும் என்று புரியவில்லை. இருண்டு கிடக்கிறது.நம் வாழ்க்கையில் வேறொருத்தி சீக்கிரமே வந்து பாகம் பிரிக்கப் போகிறாள்.. அப்புறம் சம்பளமில்லா வேலைக்காரியாக இங்கே சீரழிஞ்சி கிடப்பதைவிட .நம்ம ஜென்மத்தை முடிச்சிக்கிறதே சிறப்புன்னு நான் பத்தாம்பசலித்தனமாய் யோசிக்கமாட்டேன், கூடாது. வாழணும், எதிர்த்து வாழணும். பி.எஸ்ஸி யில்விட்டுப் போன அரியர் மூணு பேப்பர்களை முடிச்சாவணும். அப்புறம் பி.எட். கோர்ஸ் படிச்சிட்டால் நல்லது. உடனடியாக ஏதாவது தனியார் பள்ளியில் குறைஞ்ச சம்பளத்தில் வேலை கிடைக்கலாம்.சமாளிக்கலாம். துணைக்கு அப்பா இருக்கிறார். கூடவே டி.என்.பி.ஸி. பரிட்சைகளை விடாம எழுதணும். பேங்க் எக்ஸாம் எழுதலாம்.கம்ப்யூட்டரில் ஏதாவது கோர்ஸ் படிச்சி வைச்சிக்கலாம். யோசிச்சிப் பார்த்தால் வழியா இல்லை?.ஆனால் அவசரம் கூடாது. அவ வரட்டும். அதுவரைக்கும் பொறுமனமே பொறு. இப்படி ஒரு தீர்மானம் எனக்குள் ஏற்பட்டு, மளமளவென்று கெட்டிப்பட்டாலும் அன்பு பொய்த்துப் போன எங்கள் தாம்பத்தியத்தை நினைத்து கொஞ்சநேரம் மனம்விட்டு அழுதேன். சாயங்காலத்துக்கெல்லாம் தெளிந்துவிட்டது. என் அன்பு கணவனே! நீ எப்படியும் இருந்து விட்டுப் போ. உன் மீது நான் கொண்டிருக்கும் அன்பு என்றைக்கும் பழுதானதில்லை. சுறுசுறுப்பாய் எழுந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.பொழுது இருட்ட ஆரம்பித்திருந்தது. வேலை முடிஞ்சி அவர் பசியோடு வருவார்.கடைசி பஸ் ஒன்பதரைக்கு. அதற்குள் சமையலை முடிக்கவேண்டும். ஆரம்பித்தேன். அரிசி உலை வைத்துவிட்டு,கத்தரிப் பிஞ்சை நெடுக்க பத்தை போட்டு எண்ணையில் வதக்கி,புளியை கரைத்து…,எண்ணைக்காய் வத்த குழம்பு ரெடி. ஏழெட்டு அப்பளத்தை பொரித்தெடுத்தேன், அதற்குள் குக்கர் நாலு விசில் கொடுத்து விட்டது. இன்னும் இரண்டு விசிலுக்காக காத்திருந்தேன். அவருக்கு சாதம் குழைய இருக்கவேண்டும். கத்தரி எண்ணைக்காய் குழம்பு என்றால் அவருக்கு இரண்டு உருண்டை சாதம் கூட இறங்கும். வேப்பம்பூ ரசம், தேங்காய்,பருப்பு துவையல். தேங்காயை கொஞ்சம் உபரியாய் சேர்க்கவேண்டும் ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சமாய் புளி, போதும். இஷ்டமாய் சாப்பிடுவார். தயிர் சற்று புளிப்பாயிருந்தது. புளிப்பு தெரியாமல் இருக்க, தாளித்தெடுத்தேன்.

மணி ஒன்பதரை ஆகியிருந்தது. வழியும் வியர்வையை துடைத்தபடி வெளியே வந்தேன். மற்ற குடியிருப்புகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவைகளில் விளக்கு அணைக்கப்பட்டிருந்தன. எங்கள் குடியிருப்புகள் ஊரைவிட்டு ஒரு கிலோமீட்டர் தள்ளியிருப்பதால், ஒன்பது மணிக்கெல்லாம் அடங்கிவிடும். அதோ ஒன்பதரை மணி பஸ்.. ஓ! அது குடியிருப்பைக் கடந்து போய்க்கொண்டேயிருக்கிறது.. நிற்கவில்லை. தச்சூர் ஊருக்குள் போய் நைட் ஹால்ட். மீண்டும் விடியற்காலை ஐந்து மணிக்கு கிளம்பிப் போகும்..தெரிஞ்சிப் போச்சு. அவர் வரவில்லை. தேவிகாபுரத்திலிருந்து திரும்புவதற்கு லேட் ஆகியிருக்கலாம்.. இப்போது மறுபடியும் எனக்கு அழுகை பீறிட்டது. அவருக்கு நான் தேவையில்லாதவளாக ஆகிவிட்டேன். நான் இங்கே தனியாக இருக்கிறேன்,இது அத்துவானக் காடு, எதையும் அவர் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.அத்தை தூபம் போட்டிருப்பாள். கதவை தாளிட்டுவிட்டு, ஃபேனைப் போட்டு விட்டு ஈஸிசேரில் சாய்ந்தேன். களைப்பாய் இருந்தது.அப்படியே தூங்கிவிட்டிருக்கிறேன். அரையுங்குறையுமான கனவுகள்.கனவில் முகந்தெரியாத அந்தப் பெண் வந்தாள். என்னைப் பார்த்து அலட்சியமாக சிரித்து போடீ! என்கிறாள். நான் அழுகிறேன். திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு விழித்தேன். யாரோ கதவைத் தட்டுகிறார்கள். இரவில் இங்கே அடிக்கடி இது ஒரு தொல்லை. ஏதாவது எமர்ஜென்ஸி கேஸாகவோ, அல்லது பிரசவ கேஸாகவோ இருக்கும் .வீடு தெரியாமல் நர்ஸ் குவார்ட்டர்ஸுக்கு பதில் இங்கே வந்து தட்டுவார்கள், அடிக்கடி நடக்கிறதுதான்.விளக்கைப் போட்டேன் நேரம்இரவு 1-30 கதவைத் திறந்தால் அவர்தான் நிற்கிறார். கையில் டாக்டர் காலையில் எனக்கு எழுதிக் கொடுத்த சத்து மாத்திரை அட்டைகள், டானிக் பாட்டில்,எல்லாம் இருந்தன.எனக்குப் புரியவில்லை.

“இந்நேரத்துக்கு எப்படி வந்தீங்க?.”

“ நடந்துதான் வந்தேன். என்ன பண்றது?.சரி..சரி சாப்பாடு போடு. பயங்கர பசி.ஏதாவது செஞ்சியா இல்லையா?.”—– நான் இங்கே தனியாய் இருக்கிறேன் என்று இந்த நடுஇரவில் பதினைந்து கிலோமீட்டர் துரம் நடந்தே வந்திருக்கிறார். அதுவும் அமாவாசை கருக்கலில். இப்போதும் எனக்கு அழுகைதான் வருகிறது. சாப்பாட்டை எடுத்து வைத்து, என் தட்டையும் கழுவி வைத்தேன். அவர் எப்பவும் இவ்வளவு தொலைவு நடந்ததில்லையா? வலி தாளாமல் கால்கள் முழுக்க தைலத்தை தேய்த்துக் கொண்டு சாப்பிட வந்தார். அங்கே என் தட்டும் இருப்பதைப் பார்த்து விட்டு,.
“ நீயும் இன்னும் சாப்பிடலியா?. தெரியும். பைத்தியம். உன்னைப் பத்தி தெரியும்.அதனாலதான் என்ன ஆனாலும் போயிட்றதே சரின்னு பதினைஞ்சி கிலோமீட்டரையும் நடந்தே வந்து சேர்ந்தேன். பஸ்காரன் பத்து நிமிஷம் முன்னாலியே கிளம்பிட்டான். என்ன பண்றது?.ஏன் முகம் உப்பிக்கிட்டு இருக்கு?.காத்தாலயிருந்து அழுதுக்கிட்டே இருந்தியா?.ஹூம்! இதில நான் இன்னொரு கல்யாணம் கட்டப் போறதா யாரோ உனக்கு வேப்பிலை அடிச்சி விட்டிருக்காங்க சனியனே! எங்கம்மா நினைச்சிட்டா ஆச்சா?. நான் அப்படிப் பட்டவனா?. அப்படியே நம்பிட்றதா?. ரெண்டை கட்டினவனுக்கு நடுத்தெருவிலதான் சோறுன்னு எனக்குத் தெரியும் சரஸு..”——அவர் என்னைப் பார்த்து கெக்கெக்கே வென்று சிரித்தார். நான் முகத்தை முந்தானையால் பொத்திக் கொண்டேன்.கிட்டே வந்து அணைத்துக் கொண்டார்.

“ அழாதே! வெரி சாரி!. என்னைக்கும் நான் அம்மாவுக்கு ஒரு நல்ல பிள்ளையாக இருக்கணும்னு யோசிச்சேனே தவிர உனக்கு நல்ல புருஷனாக இருந்ததில்லை.மன்னிச்சிடு இரண்டையும் பேலன்ஸ் பண்ணத் தவறிட்டேன்..”—–அவர் கண்களிலும் கண்ணீர்.

”இதோ பாரு. .நமக்குன்னு குழந்தை இருந்தாலும் சந்தோஷம், இல்லேன்னாலும் சந்தோஷம். இன்னைக்கு நம்ம நாட்டில ஜனத்தொகை நூத்தி இருபது கோடியை எப்பவோ தாண்டியாச்சி,. நாடே பிதுங்குது. 2030 ஆம் வருஷத்தில நாமதான் நெம்பர் ஒண்ணாம். சீனாவை ஓரங்கட்டிவிடுவோமாம்.ஒவ்வொரு இந்தியனும் நடுங்க வேண்டிய விஷயமிது. இந்த நிலையில இந்த மகா ஜனசமுத்திரத்தில நம்முடைய பங்களிப்பாக ஒரு குழந்தை கட்டாயம் இருந்தே ஆகணுமா?ன்னு நாம யோசிச்சா அது ஒண்ணும் தப்பில்லை.. இல்லாதிருந்தா அது நாட்டுக்கு செய்ற உபகாரம். நம்மை மாதிரி குழந்தையில்லாத எவ்வளவோ தம்பதிங்க சிறப்போடும், புகழோடும் வாழ்ந்துட்டுப் போயிருக்காங்க. குழந்தை இருக்கணுன்றதை விட நீ என் கூட இருக்கணும்ன்றதுதான் எனக்கு சந்தோஷம்..”— சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார். கண்ணீர் என் பார்வையை மறைத்தது. சரியான ஜடம். மனைவிமேல இருக்கிற பிரியத்தைக்கூட சரியா வெளிப்படுத்தாத மரமண்டை..
திண்ணை.காம் 17-12-2012 இதழில் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *