புத்தியுள்ள மனிதரெல்லாம்…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 11,104 
 
 

இலண்டன் ஹீத்ரூ விமான நிலையம்.

கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் யூஎல்-564 விமானத்தின் பயணிகள் நுழைவாயில் அடைக்கப்படுவதற்கு சரியாக பத்தொன்பது விநாடிகள் மட்டுமே இருந்தபோது அதன் கடைசிப்பயணியாக உள்நுழைந்தேன். ‘இனிமேல் யாரும் வரப்போவதில்லை’ எனும் தைரியத்தில் கைகூப்பாமல் நின்றிருந்த ஏர்ஹோஸ்டஸ் அழகி என்னைப் பார்த்து அதிர்ந்த பின்பு உண்மையாய்ச் சிரித்தாள்.

முதலாம் வகுப்பு பயணிகள் பகுதியில் யன்னலோரமாக ஒதுக்கப்பட்டிருந்த குஷன் இருக்கையில் நான் அமர்ந்ததும் எதிர்ப்புற ஆசனத்தின் முதுகிலிருந்த சிறிய தொலைக்காட்சிச்சதுரம் உயிர்பெற்றது. அதில் ஓர் அழகிய இளம்பெண் தோன்றி, ஆசனப்பட்டியை சரிவரப்பொருத்திக்கொள்வது எப்படி என்பதை மாறாப்புன்னகையுடன் செய்து காண்பித்துவிட்டு மறைய, லோங்ஓன் திசையில் ஸிக்ஸர் ஒன்றை அடித்துவிட்டு, ‘கொக்கோ கோலாவைவிடச் சிறந்த பானம் உலகில் கிடையவே கிடையாது’ என்று ஆங்கிலத்தில் கூறிக்கொண்டிருந்தான் ஒரு பிரபல கிரிக்கட் ஆட்டக்காரன். ஓடுபாதையில் சீராக நழுவிக்கொண்டிருந்த விமானம், எப்போது வேகம் பிடித்தது என்று நான் யோசிப்பதற்குள் தலைதெறிக்க ஓடிச்சென்று வானில் ஏறிவிட்டது. சரியாக விடிந்திராத கிழக்குவானில் எங்கள் அலுமினியப்பறவை ஓர் அரைவட்டமடித்துச் சரிந்தபோது யன்னலினூடாக வெகுகீழே தெரிந்த தேம்ஸ் நதியின் வளைவுகளை பஞ்சுமேகங்கள் மழுப்பியவாறிருந்தன.

மணிக்கட்டைப் பார்த்தேன். நேரம் காலை ஆறு இருபத்தேழு. கொழும்பில் இப்போது ஏறத்தாழ மதியம் ஒரு மணி. இலங்கை நேரப்படி இன்றிரவு எட்டு மணிக்கு முன் அங்குள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் சத்திரசிகிச்சைக்கூடத்தில் நான் இருந்தாக வேண்டும். விமானம் கட்டுநாயக்காவில் தரையிறங்குவதற்கு குறைந்தபட்சம் இன்னும் ஆறு மணிநேரமாவது செல்லும்.

அதற்கிடையில் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

நான் முகம்மது மதனி. இலங்கையிலும் இங்கிலாந்திலுமாக இரட்டைப் பிரஜாவுரிமை வைத்திருக்கும் பிரபல இதயமாற்றுச் சத்திரச்சிகிச்சை நிபுணர். உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள், பணம்படைத்த பிரபலங்கள் உட்பட பலருக்கு உயிரைத் திருப்பிக்கொடுத்திருப்பவன். அவர்கள் பாஷையில் கூறினால், ‘இரண்டாம் கடவுள்’. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று உலகமெல்லாம் பறந்து படித்து வாங்கிய பட்டங்கள் என் பெயரின் பின்னால் நீண்டு செல்ல.. நிறையப்பணம், புகழ், வசதி வாய்ப்புகள். சர்வதேச மருத்துவ நிறுவனங்கள் ஆண்டுதோறும் தவறாமல் அழைத்து வழங்கும் செரமிக், செலுலாய்ட் விருதுகள் எல்லாம் எனது லண்டன் அலுவலகத்தில் கொலுவிருக்கின்றன.

இத்தனை இருந்தும் என்னுடைய தனிப்பட்ட வாழ்விலே எனக்கு நிறைவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாற்பத்தேழு வயதாகியும் நான் இன்னும் திருமணமாகாத கட்டைப்பிரம்மச்சாரி. இந்தவயதிலும் பெண்தருவதற்கு வரிசையில் பலர் காத்திருந்தும் அத்தனைபேரையும் பார்க்காமலே நிராகரித்து வருகின்ற காரணத்தால், ‘ஆள் வேறு மாதிரியோ’ என்ற வதந்திகூட உலாவுகின்றது. என்னுடைய வாழ்வை நான் நிறைவில்லாமல் உணர்வதற்கும் இன்றுவரை எனக்கென குடும்பம் ஒன்றை நான் தேடிக்கொள்ளாதற்கும் காரணம் : ஒரே ஒருவன்.

அவன் என்னுடைய பல்கலைக்கழக நண்பன் முனவ்வர்.

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் என்னோடு ஒன்றாக இருந்தவன்தான் முனவ்வர். ‘ஹில்டா ஒபயசேகர’ மாணவர் விடுதியின் இரண்டாம் மாடியில் இருவரும் அறைத்தோழர்களாக இருந்தோம். மொத்தம் ஐந்து வருடங்களைக் கொண்ட பல்கலைக்கழக வாழ்வில் நானும் அவனும் ஒன்றாக இருந்தது வெறும் எட்டு மாதங்கள்தான். ஆனால் அதற்குள் அவன் என்னில் ஏற்படுத்திய மாற்றமோ அளப்பரியது.

முதல் செமஸ்டர் முடிவடைந்து ஊருக்குப்போனவன்தான். அதன் பின்பு முனவ்வர் திரும்பி வரவேயில்லை. எங்கு போனான் அவனுக்கு என்ன ஆயிற்று என்பதெல்லாம் அவன் ஊரிலுள்ளவர்களுக்கே தெரியவில்லை. ஆறுவாரங்கள் பொறுத்துப்பார்த்துவிட்டு பல்கலைக்கழக நிர்வாகம் அவனுடைய முகவரிக்கு கடிதங்களை அனுப்பி வைத்தது. அவற்றுக்கும் பதில்வராத காரணத்தால் வேறுவழியின்றி முனவ்வர் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டான். அவன் எங்கு சென்றான் என்பதை எனக்கு சொல்லியிருக்கவில்லை என்றாலும் அவன் எதற்காகச் சென்றிருப்பான் என்பதை என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தது. அதற்குக் காரணம் நானும் அவனும் அறிமுகமாகிப் பழகிய விதம்.

நானும் அவனும் அறிமுகமானதே ஒரு தனிக்கதை.

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி மருத்துவபீட அனுமதி கிடைத்ததும் உடனடியாக என்னால் விடுதிக்கு வந்து சேர்ந்துகொள்ள முடியாமல் போனது. தாமதமாக நான் வந்தபோது விடுதியின் அறைகள் அத்தனையும் ஏறத்தாழ நிரம்பிவிட்டிருந்தன் முனவ்வரின் அறை ஒன்றைத் தவிர. அங்கு வந்து சேர்ந்த சிறிதுநேரத்திலேயே அவனை எனக்குப் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம், முனவ்வர் என்னைப்போலவே ஒரு முஸ்லீமாக இருந்தும் அதற்குரிய அடையாளம் எதுவும் அவனிடம் இருக்காததுதான். அவனுடைய நடையுடை பாவனை மற்றும் பழக்கவழக்கங்கங்கள் எல்லாவற்றிலும் அவன் எனக்கு நேர்மாறாக இருந்தான்.

நான், படிக்கும் உறங்கும் நேரம் தவிர எப்பொழுதும் இறைவணக்கத்திலும் ஓதுவதிலும் ஈடுபட்டிருப்பேன். முனவ்வரோ காதில் இயர்போனை மாட்டியபடி வோக்மேனில் முகம்மது ரஃபி, கிஷோர்குமார், ஜேசுதாஸ் போன்றோரின் பழைய ஹிந்தி சினிமாப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பான். நான் வெளியில் சென்று அறைக்குத் திரும்பினால் ஸலாம் கூறியபடிதான் உள்ளே நுழைவேன். முனவ்வர் அதற்குப் பதிலே கூறமாட்டான். வெறுமனே புன்னகைத்தபடி தன் வேலைகளைச் செய்துகொண்டிருப்பான். அவன் என்னோடு அதிகம் பேசுவதுகூடக் கிடையாது. ஒன்றில் விரிவுரைக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருப்பான் இல்லையென்றால் ஏதாவது தமிழ் அல்லது ஆங்கிலப் புத்தகங்களை தன்பாட்டில் வாசித்துக் கொண்டிருப்பான்.

ஒருதடவை இதுபற்றி அவனிடம் வினவினேன்.

‘ஓகே, தாராளமாகப்பேசலாம் மதனீ. ஆனா, படிப்பைத் தவிர, நானும் நீயும் பேசிக்கொள்ற மாதிரி பொதுவான விசயங்கள் ஏதாவது உன்னிடம் இருக்குதா என்ன?’

‘சரி, பேசவேணாம் முனவ்வர். நம்ம ரெண்டு பேரும் முஸ்லீம்தானே..? ஆனா நான் உனக்கு ஸலாம் சொன்னாக்கூட நீ பதில் சொல்றதில்லயே..’

‘பாத்ரூமுக்குள்ள போய்ட்டு வந்து ஒரு ஸலாம்.. றூமுக்கு வெளியில எட்டிப்பார்த்திட்டு உள்ள வந்தாலும் உடனே ஒரு ஸலாம்.. இப்பிடி ஒருநாளைக்கு நீ நூறுதடவை போகக்குள்ளயும் வரக்குள்ளயும் ஸலாம் சொன்னா அதுக்குப் பதில் சொல்லிட்டேயிருக்கேலுமா மதனீ? நீ ஒண்ணு செய்.. இந்த மேசையிலருக்கிற கெசட்டுல நான் உன்ட ஸலாத்துக்கு பதிலை ரெகோர்ட் பண்ணி வைக்கிறேன்.. போட்டுக் கேளு!’

ஆரம்பத்தில் என்னோடு இப்படி குதர்க்கமாகத்தான் பேசினான். இதனால் அவன் ஆள் ஒரு மாதிரியோ என்றுதான் நான் நினைத்தேன். இவ்வாறான சிறு விவாதங்களினால் பலதடவை அவனோடு கோபித்துக்கொண்டு பேசாமலும் இருந்திருக்கின்றேன். ஆனால் அதுகுறித்து அவன் அலட்டிக்கொண்டதே கிடையாது. ஏதாவது மிக முக்கியமான விடயமாக இருந்தால் மட்டும் என்னுடைய பதிலை எதிர்பாராது உரத்துச் சொல்லிவிட்டுப்போவான். ஒருதடவை இருவரும் காராசாரமாய் விவாதித்துக் கொண்டதில் கடும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. நான் வழக்கம்போல அவனோடு பேசாமல் விட்டேன். முனவ்வரும் என்னை ஒரு பொருட்டாகவே கருதாமல், நான் என்று ஒருவன் அந்த அறைக்குள் இல்லாதிருந்தால் அவன் எப்படியிருப்பானோ அப்படி நடந்துகொண்டான். சிலவாரங்கள் மௌனமாகக் கழிந்தன. அவனுடைய அலட்சியமும் பிடிவாதமும் என் தன்மானத்தைச் சுட்ட காரணத்தால் விடுதி வாழ்க்கையே வெறுத்துவிடும் போலிருந்தது எனக்கு.

‘சே! போயும் போயும் எனக்கு இப்படி ஒருத்தனா ரூம் மேட்டாக வாய்க்கணும்’ என்று நான் என்னையே நொந்துகொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் என் தோளில் ஒருகை விழுந்தது. திரும்பிப்பார்த்தால், முனவ்வர்தான் புன்னகையுடன் நின்றிருந்தான். ‘மதனீ, ஐ’ம் ஸோ ஸொறி!’ என்றவன் சிறிதுநேரம் எதுவும் பேசாமல் எதையோ ஆழமாய்ச் சிந்திப்பவன்போல எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு என்னுடைய மனதைப்படித்தவன் போல, ‘நான் உனக்குப் பொருத்தமான றூம்மேட் இல்லை. அது எனக்குத்தெரியும் மதனீ. ஆனா இனி வேற வழியில்லையே.. நீ கொஞ்சம் முந்தி வந்திருந்தாலாவது உன்னைப்போல ஒருவனோட நீ றூம்மேட்டாயிருக்கலாம். இப்பிடிக் கடைசிநேரத்தில நீ ஹொஸ்டலுக்கு வந்தா இப்பிடித்தானே ஆகும். சரி, நீ வேணும்னா ஹொஸ்டல் இன்சார்ஜுக்கிட்ட பேசி மீச்சுவலா வேறு றூம் மாத்திக்கோ. ஐ ஹேவ் நோ ஒப்ஜெக்ஷன்’ என்றான்.

ஆனால் அதுவும் முடியவில்லை. அந்தநேரத்தில் ஓரிரு சிங்களப் பையன்களின் அறைகள் மட்டுமே காலியாக இருந்தன. அவர்களோடு இருப்பதைவிட முனவ்வருடன் இருப்பதே மேல் என்று தீர்மானித்தேன். அதுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிக முக்கியமான தீர்மானம் என்பதை இப்போதும் உணர்கின்றேன். ஒருவேளை அன்று நான் முனவ்வரை விட்டு வேறு அறைக்கு மாறிச் சென்றிருந்தால் இன்று நானும் ஒரு சராசரி மனிதனாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன்.

முனவ்வர் மற்றவர்களை விட வித்தியாசமானவனாக இருந்தான்.

அவன் ஐந்துநேரம் தொழுவதில்லை. வெள்ளிக்கிழமைகளில் நிகழும் ஜும்மாத் தொழுகைக்குகூட வருவதில்லை. பல்கலைக்கழகத்தில் நிகழும் மஜ்லிஸ் நிகழ்வுகள் மற்றும் வியாழன் இரவிலே கண்டி மர்கஸில் நடைபெறும் ராத்திப் நிகழ்வுகள் என்று எதிலுமே அவனை மட்டும் காணமுடியாது. அவன் உண்மையில் யார்? ஏன் அவன் இப்படியிருக்கின்றான்.. அவனுக்கு ஆன்மீக விடயங்கள் எதுவும் தெரியவில்லையா..? அல்லது அதுபற்றிய புரிதல் இல்லையா..? என்று யோசித்து யோசித்து என் மண்டைதான் குழம்பியது. அதுபற்றி அவனிடம் கேட்பதற்கு நினைத்தாலும் அவனுடைய அசாத்திய அறிவாற்றலையும் எதையுமே அலட்டிக்கொள்ளாதிருக்கும் ஆளுமையையும் பார்த்து வியந்து அந்த எண்ணத்தை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தேன்.

‘சரி, அவன் எப்படி இருந்தால் நமக்கென்ன’ என்று விட்டு விடலாம் என்றாலும் ஒரு முஸ்லீம் கண்முன்னே மார்க்கப்பேணுதலின்றி இருப்பதைப் பார்த்தும் இன்னொரு முஸ்லீம் வாளாவிருப்பது பாவம் என்பதால் ஒருநாள் அவனிடம் மெல்லப் பேச்சுக்கொடுத்துப் பார்த்தேன்.

‘முனவ்வர், நான் கேட்கிறனென்டு கோபிக்காத. நீ ஏன் தொழுவுறதேயில்ல..?’

அவன் புத்தகத்தை மூடிவிட்டு நிமிர்ந்து பார்த்தான். ‘என்னடா இதுவரைக்கும் நீ இதைப்பத்தி கேட்கல்லியே என்று யோசிச்சேன். சரி, கேட்டுட்ட. என்ட பதில பிறகு சொல்றன். அதுக்கு முதல் நான் உன்னை ஒரு கேள்வி கேட்கட்டா மதனீ?

‘சரி, கேளு..’

‘நாம ஏன் தொழணும்..?’

‘ஹ! இதென்ன மடத்தனமான கேள்வி? அது ஒவ்வொரு மனிசன்ட கடமைதானே முனவ்வர். நம்மளப் படைச்ச இறைவனுக்கு நாம நன்றி செலுத்திறதில்லையா..?’

‘ஏன் மதனீ, தனக்கு நன்றி செலுத்த வேணுமென்டு எதிர்பார்த்தா இறைவன் நம்மளையெல்லாம் படைச்சிருக்கிறான்?’

‘அப்படியில்ல.. நம்மளையெல்லாம் நாயாப் பூனையா, புழுவாப் பூச்சியா படைக்காம மனிசனா படைச்சதுக்கு.. கை, கால் மொடமில்லாம ஆரோக்கியமாப் படைச்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த வேணாமா..?’

‘அவன்தான் எந்த தேவையுமற்றவனாச்சே.. நாம செலுத்துற நன்றி மட்டும் அவனுக்கெதுக்கு? ஓல்ரைட், ஆரோக்கியமா படைச்சதுக்கு நன்றியென்டா இயற்கையில கைகால் மூளை வளர்ச்சிக் குறைபாடுகளோட எத்தனையோ குழந்தைகள் பிறந்திருக்குதே.. அதுக்காக அவனுக்கு ஏசுறதா..?’

நான் விக்கித்துப்போனேன்.

‘ஓல்ரைட் மதனீ! இனி நமக்குள்ள விவாதம் எதுவும் வேணாம். நீ உனக்குச் சரியென்று நம்புறதை தொடர்ந்து செய். என்னை என் பாட்டில விடு. ஓகே?’ என்பதோடு அன்றைய விவாதம் முடிவடைந்தது. ஆனால் அதன்பிறகும் சில வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. அப்பொழுதெல்லாம் பிறப்பிலிருந்தே நான் ஆத்மார்த்தமாக நம்பிவருகின்ற விடயங்களையெல்லாம் அவன் துச்சமாகப்பேசினான். அதில் நியாயம் இருப்பதுபோலத் தோன்றினாலும் அவனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவன்மீது மெல்லிய வெறுப்புணர்வு தோன்ற ஆரம்பித்தது.

ஆனால், அடுத்துவந்த வாரங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் அந்த உணர்வை அப்படியே புரட்டிப்போடும் விதமாக அமைந்தன. பேராதனையின் குளிரான காலநிலை ஒத்துவராத காரணத்தாலோ என்னவோ ஒரு சனிக்கிழமை பின்னிரவில் எனக்குத் திடீரென கடுமையான குளிர்காய்ச்சல் கண்டது. அன்றைய தினம் பார்த்து முனவ்வர் அறையில் இருக்காமல் எங்கோ பயணம் சென்றிருந்தான். ஊருக்கும் செல்லமுடியாத நிலையில் விடுதி அறையிலேயே படுத்தபடுக்கையாக தனிமையில் கிடந்தேன். மறுநாள் மாலையில்தான் முனவ்வர் வந்து சேர்ந்தான். தோளிலே பெரிதாக ஒரு ட்ரவலிங் பேக்கை சுமந்து கொண்டு உள்ளே வந்தவன், நான் போர்த்துக்கொண்டு கட்டிலில் கிடப்பதைப் பார்த்ததும் சட்டென அருகில் வந்து, ‘மதனீ.. என்ன படுத்திட்டிருக்கிறா.. சுகமில்லையா..?’ என்று கேட்டான்.

‘காய்ச்சல் என்று கூறினால் மட்டும் ஏதாவது உதவி செய்து விடவாபோகின்றான்..?’ என்ற வெறுப்பில் பதில்கூறாமல் படுத்திருந்தேன். ஆனால் அவன் விடவில்லை. போர்வையை விலக்கி என்னைத் தொட்டுப்பார்த்தவன் பதறிப்போய், ‘ஓ! மை குட்நெஸ், இப்படிக் காயுதே. மதனீ எழுந்திரு.. எழுந்திரு..!’ என்று அதட்டிவிட்டு வெளியே ஓடிச்சென்று டாக்சி ஒன்றைப் பிடித்துக்கொண்டு வந்தான். அவசர அவசரமாக எனக்கு உடைமாற்றுவித்து கீழிறங்கும் படிகளில் கிட்டத்தட்ட என்னைக் குண்டுகட்டாகத் தூக்கிச்சென்று காரிலேற்றினான். பேராதனையிலிருக்கும் தனியார் வைத்தியசாலையில் காண்பித்து மருந்து மாத்திரைகள் வாங்கித் தந்துவிட்டுத்தான் ஓய்ந்தான்.

ஒருவாரகாலம்; என்னால் விரிவுரைக்குச் செல்லமுடியவில்லை. அந்தவேளை ஆச்சரியப்படத்தக்க விதத்தில், ஒரு தாய் தனது கைக்குழந்தையைக் கவனிப்பதைப்போல முனவ்வர் என்னைக் கவனித்துக்கொண்டான். அந்தநாட்களை இப்பொழுதும் என்னால் மறக்க முடியாது.

அதன் பிறகும் அவன்மீது என்னால் வெறுப்புடன் இருக்க முடியுமா?

—-

காய்ச்சல் குணமாகி மீண்டும் நான் விரிவுரைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

நான் உடம்புக்கு முடியாமல் படுத்திருந்த பத்து நாட்களிலும் முனவ்வர் ஒருநாளின் கூடியபாகம் என்னருகிலேயேதான் இருந்து வந்தான். அறைக்கு வந்த புதிதில் போலில்லாமல் அவனோடு நன்றாகப் பேசிப்பழக முடிந்த காரணத்தால் அந்த நாட்களில்தான் அவனை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்.

அவன் உண்மையில் ஒரு சிறந்த மனிதாபிமானி. இயற்கையை ஆராதிப்பவன். உயிர்களிடத்தில் அன்பும் பரிவும் கொண்டவன். அநீதி இழைப்பவர்களை மனதார வெறுப்பவன். இவை எல்லாவற்றையும்விட முனவ்வர் ஒரு சுதந்திர விரும்பி. தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் யாரும் தலையிடுவதை அவன் விரும்புவதில்லை. அதேபோல மற்றவர்களின் சுதந்திரத்தில் அவனும் மூக்கை நுழைப்பதில்லை. இத்தனை சிறந்த குணங்களிருந்தும் அவன் ஆன்மீக விடயங்களில் முரண்போக்குடையவனாக இருப்பது மட்டும்தான் எனக்கு மிகுந்த வருத்தமளித்தது. அதற்குரிய காரணத்தை முனவ்வரிடமிருந்தே பக்குவமாய் கேட்டறிந்து அவனை மெல்ல ஆன்மீகத்தின்பால் கொண்டுவருவது என்று உள்ளுரத் தீர்மானித்து வைத்தேன்.

ஒருநாள் மருத்துவ புத்தகங்கள் சிலவற்றை வாங்குவதற்காக முனவ்வர் கண்டிக்குச்செல்ல ஆயத்தமானான். எனக்கும் அதே தேவை இருந்த காரணத்தால் அவனோடு நானும் கிளம்பினேன். இருவரும் ஒன்றாகப்புரிந்த முதற்பயணம் அது. கண்டி செல்லும் பிரயாணத்தில் இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் திரும்பிவரும் வழியில் பேராதனைப் பூந்தோட்டத்தில் அமர்ந்து சிலவிடயங்களை கதைப்பது என்று தீர்மானித்து உள்ளே நுழைந்தோம்.

நான்தான் முதலில் பேச்சை ஆரம்பித்தேன்.

‘முனவ்வர், நம்ம மார்க்கத்தை பற்றிய உன்ட கருத்து என்ன..?’

அவன் என்னை ஒருதடவை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, ‘மதனீ, இதுபற்றி நாம பேசுறதென்டா எனக்கு நீ ஒரு உத்தரவாதம் தரணும்.. இல்லையெண்டா வேணாம்..’

‘என்ன உத்தரவாதம் அது?’ என்று கேட்டேன்.

‘நீ முன்முடிவுகளோடு விவாதம்புரிய வரக்கூடாது. அவரவர் கருத்துகளைப்பேசி அதில வரும் ஏத்துக்கொள்ளக்கூடிய பொதுவான விடயங்களை வச்சு பரிசீலிக்க தயாராக இருக்கணும்.. சரிதானே..?’

‘ஓகே, முதல்ல நான் கேட்டதுக்கு பதிலைச் சொல்லு முனவ்வர்’

‘சரி, உலகவரலாற்றில ஒவ்வொரு காலகட்டத்துலயும் மனிதனால உண்டாக்கப்பட்ட எத்தனையோ மதங்களில அதுவும் ஒண்ணு.. வேறென்ன?’ என்றான் வெகுசாதாரணமாக.

‘அடப்பாவி! அப்படியென்டா சகல சமயங்களையும் மனிதன்தான் உண்டாக்கினான் என்று சொல்றியா..?’

‘ஆமா.. அதிலென்ன சந்தேகம்?’

‘அப்போ நம்மளை மீறின சக்தி என்று எதுவுமே இல்லியா முனவ்வர்..?’

‘ஏன் இல்லாம? நிச்சயம் இருக்கு! அது இயற்கையின் சக்தி. அதற்கும் நமக்கும் நடக்கும் போராட்டந்தான் இந்த மனித வாழ்க்கையே. ஆனா அதைப்போய் கடவுள், சாமி, பூதம் என்று சொல்லி மக்களை ஏமாத்திட்டிருக்கிறதுதான் நம்மளோட சமயங்கள்ற வேலையே..’

‘இறைவன்ட தண்டனைகள் பற்றிய பயம் இல்லையென்டா மனிசன் அட்டூழியங்களில துணிஞ்சு இறங்கிருவானே.. சமயங்கள் எல்லாம் பாவம் செய்யக்கூடிய மனிசனை நல்வழிப்படுத்திறதுக்குத்தானென்டா அதைப்போய் எப்பிடி நீ பிழை சொல்லலாம்..?’ நானும் விடவில்லை.

‘சமயங்கள் சொல்லுகிறபடி பார்த்தால் இறைவன் ஒரு மாபெரும் சக்தி. அவன் இல்லாமல் அணுவும் அசையாது. அப்படித்தானே..? அப்போ மக்களைத் தவறுசெய்யத் தூண்டுறதும் அவன்தானே? அப்படி மனிசனைத் தூண்டி விடுறவனே தண்டனைகளையும் தர நினைக்கலாமா?’

‘அதுவந்து.. வந்து..’ எனக்கு ஒருகணம் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

‘இரு.. இரு மதனீ, நான் சுருக்கமாச்சொல்றேன். இறைவன் இப்பிடியெல்லாம் பிள்ளையைக் கிள்ளிக்கிள்ளித் தொட்டிலாட்டுறதுக்குப் பதிலா தன்னோட முழுஆற்றலையும் பயன்படுத்தி குற்றங்களே இல்லாத ஒழுங்கான உலகத்தை ஆக்கியிருக்கலாமே..?

‘நீ என்னதான் சொல்ல வர்றா முனா?’

‘இந்த உலகத்தில உள்ள மக்களில பெரும்பகுதி பசியால வாடிக்கொண்டிருக்கு.. ஆனா இன்னொரு சிறுபகுதி பசிவர்றதுக்கு மாத்திரைகள் சாப்பிடுது. இப்பிடிச் சமத்துவமே இல்லாமல் சில ஆயிரம் மனிசங்க டாம்பீகமா வாழ்றதுக்கும் பல கோடி மனிசங்க சாப்பிடவே வழியில்லாம வாடுறதுக்கும் யாரு காரணம்?’

‘படைச்சவன்தான் காரணம்! ஆனா அவன் தான் நாடியவர்களுக்கு மட்டுந்தான் செல்வத்தையோ வறுமையையோ கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறது உனக்குத் தெரியாதா முனவ்வர்?’

‘சரி, அப்படியென்டா எதியோப்பியா, சோமாலியாவில ஒரு பிடிச்சாப்பாடு இல்லாம குழந்தைகளைப் பட்டினியால சாகடிக்கிறது யாரு மதனீ? அந்தப் பிஞ்சுக்குழந்தைகளில கூட ஆண்டவனுக்கு இரக்கம் கிடையாதா..? அதுகள் செய்த பாவந்தான் என்ன? தான் விரும்பிப் படைத்த படைப்புகளுக்குள்ளேயே ஏன் இந்தப் பாரபட்சம் அவனுக்கு?.

‘அதுவந்து.. அப்படியென்டா இதெல்லாம் உண்மையில்லையா முனவ்வர்?’

‘ஓகே.. இப்ப நான் சொல்றதைக்கேளு மதனீ. நாமல்லாம் வாழுற இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் சில அமானுஷ்ய சக்திகள்தான் தீர்மானிக்குது என்று நாம நம்பிட்டிருக்கிறதெல்லாம் முழுப்பொய்! கோடிக்கணக்கான மக்கள் வறுமையில வாடுறதுக்கும் சிலபேர் செல்வத்துல திளைக்கிறதுக்கும் இந்த தெய்வங்களோ பூதங்களோ காரணமில்லை..’

‘அப்படியென்டா யார் காரணம்..?’

‘வறுமைக்கு உண்மையான காரணம் நிறைய இருக்கு. ஒரு காரணம் உலகத்தில இருக்கிற வளங்கள் எல்லாம் சரிவரப் பகிரப்படாமல் இருக்கிறது.’

‘அப்ப மற்றது..?’

‘மற்றது, குறைஞ்ச எண்ணிக்கையில இருக்கிற சில மனிதர் கூட்டம் பெரும்பான்மையான மக்களின்ட உழைப்பை அவங்களே அறியாத வகையில தந்திரமாக சுரண்டிக் கொண்டு இருக்கிறது..!’

‘இப்படியெல்லாம் செய்யிறது யாரு. இதைத் தட்டிக்கேட்கிறதுக்கு ஏலாதா முனவ்வர்..?’

‘அதைத்தான் மதனீ நீ, நான், என்று நாம எல்லாருமே ஒண்ணுசேர்ந்து செய்யவேண்டியிருக்கு. சுரண்டிப்பிழைக்கிற மனிசங்க தங்களுக்கு போதுமான அளவைவிடக் கூடுதலான செல்வத்தைக் கபடத்தனமாகச் சேர்த்து வச்சிருக்கிறதும் அதைப் பரம்பரை பரம்பரையாக அனுபவிக்கிறதுக்காக உழைக்கிற மக்களை வஞ்சிக்கிறதும்தான் இந்த உலகத்தில தொடர்ந்து நடந்திட்டிருக்கு’

‘இப்பிடியானவங்களுக்கு சட்ட ரீதியா ஆக்ஷன் எடுக்க முடியாதா முனவ்வர்..?’ என்று நான் கேட்டதுதான் தாமதம். முனவ்வர் அடக்கவே முடியாமல் சத்தமாய் சிரிக்க ஆரம்பித்து விட்டான். எனக்கு சிறிது வெட்கமாகப் போய்விட்டது.

‘ஓ.. ஐ’ம் ஸொறி மதனீ! நரிகளுக்கிட்ட போய் மீனைக் கழுவத்தரலாமா?’ என்று கேட்டான் முனவ்வர், சிரிப்பை முழுமையாக நிறுத்த முடியாதவனாக.

‘நீ சொல்றதைப் பாத்தா.. சட்டம் கூட அந்த சுரண்டுகிற மனிசங்களுக்குத்தான் சப்போர்ட்டா இருக்குதுபோல. அப்படித்தானே..?’

‘அதேதான்! அரசாங்கம், பொலீஸ், ராணுவம், மதநிறுவனங்கள் எல்லாமே இந்த பணம்படைச்ச கபட மனிசங்களுக்குத்தான் காலம் காலமாகச் சேவகம் செய்துவருது.. ஆனா அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் திறமையாக நடிச்சிட்டிருக்கிறாங்க.’

‘ஓகே முனவ்வர், நீ சொல்றதில் எனக்கு ஒரு விஷயம் மட்டுந்தான் இடிக்குது. மதநிறுவனங்கள் என்டு சொன்னியே.. அது இதில எப்படி சேர்த்தியாகுது?’

‘உழைச்சுவாழ்ற ஏழைமக்கள் பக்கம் இருக்கிறதுபோல என்னதான் பாசாங்கு செய்தாலும் மதங்கள் எல்லாமே மறைமுகமாக பணக்கார அதிகார வர்க்கத்துக்குத்தான் உதவி வருது.’

‘அதெப்படி?’

‘சுரண்டப்படுகிற ஏழை மக்கள் தங்களோட இழிவான நிலைமையை புரிஞ்சு கோபம் வந்துட்டா என்ன பண்ணுவாங்க..? எல்லாரும் ஒண்டு திரண்டு அதற்கு எதிராக போராடுவாங்கதானே. ஆனா அப்படி அவங்கல்லாம் போராட்டத்துல இறங்கிடக்கூடாது என்பது பணக்கார அதிகாரவர்க்க ஆட்களுக்கு மிகமுக்கியம். அதனால வறுமைக்குரிய உண்மையான சமூகப்பொருளாதாரக் காரணங்களைப்பற்றிய சிந்தனைகளில ஏழைமக்கள் ஈடுபடாமலிருக்கணும். அதுக்காக என்ன செய்யணும்.. சொல்லு?’

‘என்ன செய்யணும்..?’

‘பரலோகத்தில இருக்கிற நம்ம கண்ணுக்கெல்லாம் தெரியாத சக்தி ஒண்ணுதான் உங்களை ஏழையாகவும் எங்களை செல்வந்தராகவும் முன்கூட்டியே யோசிச்சு படைச்சிருக்குது என்ட பொய் நம்பிக்கையை அந்த மக்களிட மனதில விதைச்சு விதைச்சு அவங்கள்ற போராட்ட உணர்வை மழுங்கடிக்கணும்.’

‘……’

‘இந்த வேலையை நம்மளோட மதங்கள் எல்லாமே அமோகமாகச் செய்து வருதா இல்லையா.. சொல்லு மதனீ?’ என்று கேட்டு முத்தாய்ப்பு வைத்தான் முனவ்வர்.

அன்றிரவு நான் தூங்கவில்லை!

‘ஸேர், டூ யு லைக் டு ஹேவ் எனிதிங் டு ட்ரிங்க்?’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். ஏர்ஹோஸ்டஸ் ஒருத்தி ட்ரிங் ட்ரொலியோடு புன்னகைபூசி நின்றிருந்தாள்.

‘நோ தேங்ஸ். பட் கேன் ஐ ஹேவ் ந்யூஸ் பேப்பர்ஸ்?’

அவள் தந்துவிட்டுப்போன பத்திரிகைகளுக்குள் லண்டனிலிருந்து வெளிவரும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களால் நடாத்தப்படும் தமிழ் செய்திப்பத்திரிகை ஒன்றும் இருந்தது. அதன் பக்கங்களை ஒவ்வொன்றாய் புரட்டித் தலைப்புச் செய்திகளை மட்டும் மேய்ந்து கொண்டு வந்தபோது ஒரு மூலையில் இருந்த செய்தி என்னைக்கவர்ந்தது.

‘வெள்ளை ஜனநாயகம்’ நூல் வெளியீடு!

அது என்ன வெள்ளை ஜனநாயம்? என்று வியந்து செய்தியைத் தொடர்ந்தேன். ‘எதிர்வரும் ஏப்ரல் 12ந் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மூதூர் அந்நஹார் மகளிர் மகாவித்தியாலயத்தில் காலை 9.30க்கு சகோதரர் பிரபல சட்டத்தரணி முஸம்மில் முனவ்வர் எழுதிய ‘வெள்ளை ஜனநாயகம்’ நூல்வெளியீடு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு மாவட்ட நீதிபதி…’ என்று தொடர்ந்தது.

‘முஸம்மில் முனவ்வரா..? ஒருவேளை என்னுடைய நண்பன் முனவ்வராக இருக்குமா..? அவன் முஸம்மில் முனவ்வர் இல்லையே..? ஒருவேளை முஸம்மில் என்பது அவனுடைய தகப்பனுடைய பெயராக இருக்கலாமோ.. என்று பரபரப்பாகி செய்தியை மீண்டும் வாசித்துப் பார்த்தேன். அந்தநபர் ஒரு சட்டத்தரணி என்பதைத் தவிர வேறுவிபரங்களோ ஒளிப்படமோ அந்தச்செய்தியில் இருக்கவில்லை. ஆனால் மூதூர் அவனுடைய ஊர்தான். அந்த ஒருவிடயமே போதும்.

அந்த நபர் என்னுடைய முனவ்வராக இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருந்தது.

நினைக்கும்போதே என் மனம் பரபரத்தது. அவனைப் பார்த்து எத்தனை வருடங்களாயிற்று..? பிறந்ததிலிருந்தே மௌட்டீகச் சிந்தனையில் ஊறிக்கிடந்த என் கண்களை அகலத்திறந்து வைத்த என் ஆத்மார்த்த குரு அவனல்லவா..? ஆனால் இது அவன்தான் என்பதை எப்படி உறுதி செய்வது என்றுதான் புரியவில்லை. கடைசியில், மூதூருக்குப்போய் அது யாரென்று பார்த்துவிடுவதென்று முடிவெடுத்தேன். கையடக்கத்தொலைபேசியில் அந்தப்பத்திரிகைச் செய்தியைப் ஒளிப்படமெடுத்த பின்பு என்னுடைய வேலைத்திட்டங்களை பார்வையிட்டேன். 13ம் திகதி மாலை நான் மெல்பேர்னில் இருந்தாக வேண்டும். இன்னும் இரு தினங்கள் மட்டுமே இலங்கையில் என்னால் தங்கியிருக்க முடியும்.

ஏப்ரல் 12 ஞாயிறு..? இன்று 10ம் திகதி. இரவு ஒரு மணிக்குள் என்னுடைய நோயாளிக்குரிய சத்திரச்சிகிச்சை முடிந்து விடும். 11ம் திகதி நள்ளிரவு வரை நோயாளியை எனது கண்காணிப்பில் வைத்திருந்துவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி விடலாம். அதன் பிறகு தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கினால் போதும். டாக்டர் ஜெபர்ஸன் குழுவினர் பார்த்துக்கொள்வார்கள். 12ம் திகதி அதிகாலையில் புறப்பட்டால்கூட மூதூருக்குச் சென்றுவிடலாம். அழையா விருந்தாளியாக புத்தக வெளியீட்டிற்கு நான் போய்த் திடீரென போய் இறங்கினால் முனவ்வருக்கு -அது என் முனவ்வராக இருந்தால்- எப்படியிருக்கும்..?

கொழும்பிலிருந்து வாடகைக்கு நான் அமர்த்திய ஜாகுவார் கார் 90 கிலோமீற்றர் வேகத்தில் கிண்ணியா கடல்பாலத்தைத் தாண்டி மூதூருக்கு விரைந்து கொண்டிருந்தது. நான் தனியாகச் செல்லக்கூடாது என்பதற்காக டாக்டர் ஜெபர்சன் தனது ட்ரைவர் டானியலை எனக்காகத் தந்திருந்தார். இரவு முழுவதும் சத்திரசிகிச்சைக்கூடத்தில் நின்று கொண்டிருந்ததனால் எனது கண்கள் சிவப்பேறிக்கிடந்தன.

செல்போனில் நேரத்தைப்பார்த்தேன் காலை 9:17

‘டேய் முனா, என் ஆத்மார்த்த நண்பா! நீ இப்போது எப்படியிருப்பாய்..? முழுச்சவரம் புரிந்த உன் அழகான முகமும் வசீகரமான புன்னகையும் கூர்மையான விழிகளும் என் மனக்கண்ணில் அப்படியே உள்ளதே.. இரு.. இதோ வருகின்றேன்.. உன்னைப் பார்ப்பதற்காகவே ஓடிவருகின்றேன்.. இந்த பங்ஷன் உன்னுடையது என்றால் நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். நீ என்னை விட்டுப்போன பின்புதான் இந்த மதனீ உன்னை முழுமையாகப் புரிந்து கொண்டான்.. அதுவரையில் இந்த முட்டாள் எப்படியிருந்தான் தெரியுமா? சிறுபராயத்திலிருந்தே பேய்க்கதைகூறி வளர்க்கப்பட்ட குழந்தைகள் பின்பு வளர்ந்ததும், உண்மையில் பேய், பிசாசுகளே இல்லை என்று தெரிந்தாலும்; ஆழ்மனதில் படிந்துள்ள பயத்துடன் வாழ்வது போலத்தான் நானும் அறியாமையில் இருந்தேன். ஓ! என்னை மன்னித்துவிடு முனவ்வர்.

அன்று பேராதனையில் அடம்பிடிக்காமல் உன்னை நான் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் இத்தனை ஆண்டுகள் நாம் பிரிந்திருக்க வேண்டியதில்லையே.. முனா, நீ மூச்சுக்கு மூச்சு ஏழைமக்கள்.. ஏழைமக்கள் என்பாயே.. அந்த மக்களுக்காக நாம் ஒன்றிணைந்தே இயங்கியிருக்கலாமே.. நீ என்னைப் பார்த்ததும், நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்று நிச்சயம் கேட்பாய். முனா, இன்று நான் புகழ்பெற்ற ஒரு ஸேர்ஜனாக இருந்தபடியே இரகசியமாக இயங்கிவரும் ஒரு புரட்சியாளனாகவும் இருந்து வருகின்றேன். அதற்குக் காரணமே நீதான். நீ விட்டுச் சென்ற இடத்திலிருந்துதான் நான் ஆரம்பித்தேன் நண்பா. ஆம் நான் ஒரு ஏகலைவன். என் மானசீக குரு நீதான்.

உலகம்முழுவதும் இருக்கும் முற்போக்குசக்திகளுடன் நான் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றேன். உழைத்து வாழும் நமது மக்களுக்காக இந்த முதலாளித்துவ தனியுடமைச் சமுதாயத்தை மாற்றியமைக்க நான் பாடுபடுவதையும் நீ அறிய நியாயமில்லை நண்பா. அதற்காக தனிப்பட்ட வாழ்வைகூட இழந்து நான் இயங்கிக் கொண்டிருப்பதையும் நீ அறிய மாட்டாய்! என்னுடைய தொழில் மூலமாக கிடைக்கும் வருமானம், சலுகைகள் அத்தனையும் அந்தப்பணிகளுக்கே பயன்பட்டு வருவதும் உனக்குத் தெரியாது.. இதையெல்லாம் உன்னிடம் சொல்லி நான் பெருமைப்பட வேண்டும் என்று துடிப்பதை நீ அறியமாட்டாய் முனவ்வர் இதோ.. இதோ உன்னைக்காண வந்து கொண்டிருக்கின்றேன் நண்பா!’

அடுத்த கால் மணிநேரத்தில் ஒரு பாடசாலையின் முன்பு நின்றது கார். அதை நிறுத்துவதற்குக்கூட இடமில்லாதளவுக்கு பாடசாலை வளாகத்தில் வாகனங்கள் நிறைந்திருந்தன. மண்டப முகப்பில், ‘சட்டத்தரணி முஸம்மில் முனவ்வர் எழுதிய ‘வெள்ளை ஜனநாயகம்’ நூல் வெளியீடு’ என்ற பெரிய பேனர் ஒன்று காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. நூல்வெளியீட்டு நிகழ்வு ஏற்கனவே ஆரம்பமாகி ஒலிபெருக்கியில் யாரோ உரையாற்றிக்கொண்டிருப்பது கேட்டது. காரிலிருந்து நான் இறங்கியதும் இளைஞர்கள் சிலர் ஸலாம் கூறி வரவேற்று மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். மண்டபத்தினுள் பார்வையாளர்கள் நிறைந்திருந்தார்கள்.

நான் இருந்த இடத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தது மேடை. அதன் மத்தியில் கோட் சூட் அணிந்த பிரமுகர் ஒருவர் கைகளில் கழற்றிய மாலைகளோடு அமர்ந்திருந்தார். அவரது அருகில் சீருடையணிந்த பொலீஸ் உயரதிகாரி ஒருவரும் அவரையடுத்து ஏறத்தாழ தூய வெண்ணிறத்தில் ஒரே மாதிரியாக ஜிப்பா, தொப்பி அணிந்து அடர்த்தியான தாடியுடன் மூவரும் வீற்றிருக்க மறுபுறம் சபாரி உடையணிந்த இருவர், ஒரு பௌத்தமதத் துறவி, பாதிரியார், ஐயர் என்று மொத்தமாக பத்து பன்னிரண்டு மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் வந்துசேர்வதற்கு முன்பே நூல் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்பட்டிருக்க யாரோ ஒரு பிரமுகர் மைக்கைப் பிடித்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

‘அப்படியானால் என் முனவ்வர் எங்கே..?’ என்று என் விழிகள் தேடலாயின. நான் வந்திருப்பது என் நண்பன் முனவ்வரின் நூல்வெளியீட்டுக்குத்தானா என்று சரியாகத் தெரியாமல் அவனைத் தேடுவதை நினைத்து எனக்கு சிரிப்புக்கூட வந்தது. அநேகமாக இது முனவ்வரின் நிகழ்ச்சியல்ல என்றுதான் தோன்றியது. தவிர, மேடையிலிருந்தவர்களில் நான்கைந்துபேர் ஏறத்தாழ ஒரேபோலவே இருந்த காரணத்தாலோ என்னவோ நூலாசிரியர் யார் என்பதை என்னால் யூகிக்க முடியாதிருந்தது. அவர்களது உடல்மொழிகளும் எனக்கு பெரிதாக உதவவில்லை. யாரிடமாவது கேட்கலாமா என்று தோன்றிய போதும் என்னை அறிமுகப்படுத்திக்கொள்வதில் வழமையாக எனக்குள்ள ஒருவித தயக்கம் தடுத்தது.

சில நிமிடங்களில், ஒருவர் பேச்சை முடித்ததும், அடுத்து மாவட்ட நீதிபதியை பேச அழைத்தார்கள். அவர் தொண்டையைச் செருமிக்கொண்டு பேசலானார், ‘நண்பர்களே, இந்த நூல் ஒரு முக்கியமான தருணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய உலகில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கத்திய வல்லரசு நாடுகள் தமது முதலாளித்துவ ஏகாதிபத்தியத்துக்கு சவாலாக நமது ஆன்மீக நம்பிக்கைகள் இருந்து வருவதைக் கண்டு அஞ்சுகின்றன. ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் தமது கம்யூனிசத்துக்கும் இடையூறு வந்துவிடுமோ என்று பேதலிக்கின்றன. இதனால் அவை நம்மையும் நமது மார்க்கத்தையும் அழித்தொழித்து விட பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றது. அதுபற்றியே இந்த நூல் விரிவாகப் பேசுகின்றது…’

இது நிச்சயம் என்னுடைய முனவ்வரின் நூலாக இருக்கமுடியாதென்பது சந்தேகத்திற்கிடமின்றி உறுதியானது. வெளியில் நின்றிருக்கும் ட்ரைவர் டானியலைப் போனில் கூப்பிட்டு, திரும்பிச்செல்லத் தயாராகுமாறு கூறிவிட்டு வெளியேறுவதற்குத் தருணம் பார்த்திருந்தேன். நீதிபதி விடாமல் பேசிக்கொண்டேயிருந்தார், ‘….இந்த நூலின் ஆசிரியர் முஸம்மில் முனவ்வர் ஒரு சிறந்த சட்டத்தரணி என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு நீதிபதியாக அவரது வாதத்திறமையை நான் பலதடவைகள் வியந்து ரசித்திருக்கின்றேன். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதும் உங்களுக்குத் தெரியும். அத்துடன் ஆன்மீகத்தின் அவசியத்தை வலியுறுத்தி பல ஆய்வு நூல்களை வெளியிட்டிருப்பதையும் அறிவீர்கள்…..’

மெல்ல நாற்காலியிலிருந்து எழுந்து வாயிலை நோக்கி நடக்கலானேன்.

‘…..ஆனால், அவரைப்பற்றி உங்களில் பலருக்குத் தெரிந்திராத ஒரு ரகசியத்தை இப்போது நான் கூறப்போகின்றேன்.. அவசியம் கேளுங்கள்!’ என்று சில விநாடிகள் பேச்சை நிறுத்தினார் நீதிபதி.

கூட்டம் திடீரென சலசலத்து அமைதியானது.

மண்டபத்தைவிட்டு வெளியேறுவதற்காக வாசலை நோக்கிச் சென்றவன் அதைக்கேட்டதும் ஆர்வமிகுதியால் சட்டென நின்றேன். மேடையைத் திரும்பிப் பார்த்தவாறு நீதிபதியின் பேச்சை செவிமடுத்தேன்.

‘என்ன முனவ்வர்.. அதைச் சொல்லட்டுமா..?’ என்று மேடையில் ஒரே தோற்றத்தில் ஜிப்பா, தொப்பி அணிந்திருந்தவர்களில் சற்று நீண்ட அடர்த்தியான தாடி வைத்திருந்தவரைப் பார்த்துக்கேட்டார் நீதிபதி.

‘ஓஹோ! இவரா அந்த எழுத்தாளர்?’ என்றபடி நான் மேடையை ஆவலோடு எட்டிப் பார்த்தேன்.

நீதிபதியினால் விளிக்கப்பட்ட அந்தநபர் சிறிது வெட்கத்துடன் தாடிக்குள்ளிருந்து லேசாய்ப் புன்னகைத்தார். அந்தப் புன்னகை என்னை ஏதோ செய்தது. அதைப்பற்றி யோசித்தவாறே நான் மீண்டும் நடந்து மண்டபத்தைவிட்டு வெளியேறி பாடசாலையின் முன்வளாகத்திற்கு வந்துசேர்ந்தேன். மண்டபத்தின் வெளியில் கட்டப்படிருந்த ஒலிபெருக்கிகள் நீதிபதியின் குரலை தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்க வெளிவாசலில் நின்றிருந்த காரை நோக்கி நடந்து செல்லலானேன்.

‘அந்தப் புன்னகை.. அந்தப் பல்வரிசை முன்பு எங்கு பார்த்தேன்?’

‘ …நண்பர்களே, நமது சட்டத்தரணி முனவ்வர் அவர்கள் ஒர் வைத்தியக் கலாநிதியாக வந்திருக்க வேண்டியவர்.. ஆனால் அப்படி ஆகியிருந்தால் நாம் ஒரு ஆற்றல் மிகுந்த சட்டத்தரணியை இழந்திருப்போம்…’ நீதிபதியின் குரல் ஓங்கி ஒலித்தது.

‘அந்தக் கண்கள்.. வசீகரிக்கும் புன்னகை..?’

‘ஆம், நண்பர்களே இவர் ஒரு முன்னாள் மருத்துவபீட மாணவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில்தான் இவர் தனது மருத்துவக் கல்வியை ஆரம்பித்திருந்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேறி சிறிதுகால அஞ்ஞாதவாசத்தின் பின்பு சட்டக்கல்லூரியின் வெளிவாரி மாணவராக இணைந்து…’ என்று நீதிபதி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க..

‘மை காட்! அப்படியானால்…?’

அவ்வளவுதான். என் இடதுபுற மார்பில் சன்னமாய் ஒரு வலி கண்டது. நான் சிறிது பதற்றமாகி, ‘டானியல்.. டானியல்!’ என்று ட்ரைவரைக் கூப்பிடும்போதே என்னைச் சுற்றியுள்ள சகலமும் சட்டென இருண்டு போனது.

மீண்டும் நான் கண்விழித்தபோது ஏதோ ஒரு வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் பச்சைத்திரை கருவிகளின் பீப் ஒலிகள் சூழ ஒக்ஸிஜன் முகமூடி சகிதம் ஏராளமான குழாய்களுடன் பிணைந்தபடி படுக்கையிலிருந்தேன். எனது கட்டிலருகே கவலைதோய்ந்த முகத்துடன் என்னையே பார்த்தபடி இருகையேந்தி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான், தூய வெண்ணிறத்தில் ஜிப்பா, தொப்பி மற்றும் அடர்த்தியான தாடியுடனிருந்த என் ஆத்மார்த்த குரு முனவ்வர்.

Print Friendly, PDF & Email

1 thought on “புத்தியுள்ள மனிதரெல்லாம்…

  1. மிகவும் அழகான படைப்பு. இறுதி ட்விஸ்ட் பிரமாதம்.வாழ்த்துக்கள் மூதூர் மொஹமட் ராபி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *