கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 10,460 
 

என்ன சார்…நேற்று கூட்டத்துக்கு வரல்லே….?

யார் கண்ணில் படக் கூடாது என்று பொழுது விடியும் முன்பே சற்று முன்னதாக இன்று நடைப் பயிற்சிக்குக் கிளம்பினேனோ அவரின் குரல் சுற்றிலும் சப்தங்கள் அற்ற அந்த விடிகாலை வேளையில் தெளிவாகக் காதில் விழுந்தது. இருள் அடர்ந்த அந்தப் பகுதியில் எப்படி அவர் கண்ணில் பட்டோம் என்று சற்று சந்தேகமும் வந்தது.

காலை நாலரை மணிபோல் யோகப் பயிற்சிக்குச் செல்லும் வேளைகளில் அந்த இருட்டுப் பகுதியில் மாடு படுத்திருப்பதைப் பார்க்காமல் எத்தனையோ தடவை வண்டியில் தடுமாறியிருக்கிறேன் நான். எதிர்பாராத தருணத்தில் மூலையிலிருந்து வள்ளென்று பாயும் பைரவரின் இடம் அது. இவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் உடம்பு ஒரு முறை வியர்த்து விடும் துர்ப்பல ஸ்தானம்.

அன்று அந்த ஜீவன்களைக் காணவில்லை. ஞாயிற்றுக் கிழமை என்பதால் அவையவை இருப்பிடம் சென்று விட்டனவோ என்னவோ…..பதிலாக இவர்….

யாரு…..பிரமநாயகமா……? என்றவுடன்….ஆமா….குரல் தெரிலயா…..? என்றவாறே வெளிச்சத்திற்கு வந்தார் அவர். எதுவுமே “பளிச்“ தான் அவரிடம்.

என்னய்யா இது….வாக்கிங்கா….சாதாரணமா வரமாட்டீரே….ஞாயிற்றுக்கிழமை ரெஸ்ட்டுன்னுவீரே…. இது என்ன புதுப் பழக்கம்….?

எப்பயும் போல நாலுக்கு முழிப்பு வந்திடுது….அதுக்கப்புறம் வெறுமே படுத்துப் புரண்டிட்டேயிருந்தா…கண்ட கண்ட நெனப்பெல்லாம் வருது….என்னத்துக்குன்னு….எழுந்து புறப்டுட்டேன்…..இந்த முக்குக் கடைக்கு வந்து முதல் டீயா வாங்கி உறிஞ்சிற சுகமே தனி….

சுகவாசிய்யா நீரு….கண்ட கண்ட நெனப்புங்கிறீரே….? இந்த வயசுலயா…..? – என் நகைச்சுவை எனக்கே கிளுகிளுப்பூட்டியது. கொஞ்சம் கிண்டித்தான் பார்ப்பமே….

நெனப்புக்கு வயசா கணக்கு….? உடம்புக்குத்தான் எல்லாம்…..நமக்கு சொந்த வாழ்க்கைல கிடைக்காததை….கற்பனைல வரவழைச்சு…..சந்தோஷப்பட்டுக்கிறதில்லை? அப்டித்தான்னு வச்சுக்குங்களேன்….கிட்டாததெல்லாம் கிட்டுமாக்கும்….

அடப்பாவி….!– ஏதாச்சும் சாமி ஸ்லோகங்களை முணுமுணுத்தா மாறிட்டுப் போறது….இது தெரியாதா இந்த மனுஷனுக்கு…ஆளே ஒரு மாதிரிதான்….அபூர்வமாய்த்தான் இப்படிச் சிலரைப் பார்க்க முடியும்….என்ன மனுஷன் இந்தாளு? என்பதாய்….ஆனாலும் இப்படியாட்களிடம் ஏதாவது ஒரு விசேடம் இல்லாமல் போகாதுதான்.

நான் மட்டுமில்லை….என்னோடு யோகா வகுப்பிற்கு வரும் பலரும் இப்படி என்னிடம் சிலாகித்திருக்கிறார்கள்….அந்தாளு ஒரு துரும்பு சார்…..பல்லுக்குத்தக்கூட ஒதவ மாட்டாரு…..! வெத்து வேட்டு……

என்னவோ வாயில் வந்ததைச் சொல்லுவார்கள். எதற்குச் சொல்கிறார்கள் இப்படி? யோசிப்பேன். ஏதோ பொறாமை தட்டுவது போல் தோன்றும்.

ஏன் சார்….உங்காளு….அதான் அந்தப் பெரம்பு……(பிரமநாயகத்தின் மருஊ ) விவஸ்தை கெட்ட மனுஷனா இருக்காரு….வயசுக்கேத்த பண்பாடில்லையே அவர்ட்ட……!

ஏன்….என்ன செஞ்சாரு…..? யாரையாச்சும் கடிச்சு வச்சிட்டாரா…? இல்ல அடிச்சாரா….திட்டினாரா….?

அப்டின்னாத்தான் பரவால்லயே…நாமளும் ரெண்டு தட்டுத் தட்டிடலாமே…! நேத்து க்ளாஸ் முடிஞ்சு போனம்ல……வழில கைய நீட்டி பின்னாடி ஏறிக்கிட்டாரு…..ஒரு சின்ன ரெக்வெஸ்ட் கூட இல்லை…ஏறிக்கவான்னு..என்னவோ இவரை ஏத்திக்கிறதுக்காக நான் அந்த வழியே வந்த கணக்கா… ….சரி கிடக்கட்டும்னு வச்சுக்கிங்க….இன்கம்டாக்ஸ் தாண்டி அரசமரம் …..வண்டியை நிறுத்தச் சொல்லி….அந்தாள்பாட்டுக்கு இறங்கிப் போயிட்டான்….. நின்னு பார்த்திட்டேயிருக்கேன்….ஒப்புக்குத் திரும்பிக் கூடப் பார்க்கலை சார் …..ஒரு தேங்க்ஸ் கூடவா சொல்லத் தெரியாது……கிறுக்கனா சார் அந்தாளு…?

கேட்டு வாங்கிக்க வேண்டிதானே……? சொல்லிட்டுப் போயான்னு….

….தொலையட்டும்னு விட்டேன்……ஆனா பாருங்க….கிளம்பைல வழக்கம்போல பார்க் கேட் கிட்ட நின்னு உரிமையோட ஏறிக்கிறான்….அது மட்டும் தெரியுது….அவன்பாட்டுக்கு வந்திட்டிருக்கான்…..நாம என்ன கேனைங்களா….? என்னமோ கொடுத்து வச்சமாதிரி….

அவ்வளவு அந்நியோன்யம்…..

யாருக்கு…..?

அந்தாள் நினக்கிறாருங்க….அவருக்குத் தெரிஞ்சவங்களை அப்டி நினைக்கிறாரு… ….இவரைப்பார்த்தா….? எவனுக்கும் வராது சார்….தண்டமாத்தான் தோணும்….

அப்போ….நான் டபுள்ஸ் ஓட்டுறதில்லை….காத்து இல்லை…இந்தப் பக்கமாப் போகலை….கோர்ட்டைச் சுத்திப் போறேன்…மார்க்கெட் போயிட்டுதான் போவேன்… அப்டீன்னு எதையாச்சும் சொல்லி அவாய்ட் பண்ண வேண்டிதானே…?

நமக்குத்தான் வாய் வரமாட்டேங்குதே…… சட்டுன்னு பொய் சொல்ல…..

அப்ப அனுபவிக்க வேண்டிதான்…..!!! புலம்புறதுல அர்த்தமில்ல….

இந்தப் புகார் பலரிடமிருந்து ஏற்கனவே வந்திருந்தது எனக்கு. ஒருவரும் பிரியமாய் அவரை ஏற்றிச் செல்லவில்லை என்று தெரிந்தது. ஆனால் விடாமல் எவர் வண்டியிலாவது தொற்றிக் கடந்து விடுவது அவரின் சாமர்த்தியம்.

ஆனால் ஒன்று. அந்தாள் என் வண்டியில் மட்டும் ஏறியதேயில்லை. என்னைப் பார்த்துக் கேட்டதுமில்லை. நானாகவே ஏற்றிக் கொண்டதுமில்லை. வார நாட்களில் நாலரை போல் நான் வண்டியில் போய்க் கொண்டிருக்கையில் நடந்து போகும் அவரைக் கடந்துதான் செல்வேன். தினமும் இது நடக்கும்தான். நின்று ஏற்றிக் கொண்டதுமில்லை. அவர் கை தடுத்து நிறுத்தியதுமில்லை. காலை வேளை நீண்ட நடைப் பயிற்சியாக இருக்கட்டும் என்று கூட விட்டிருக்கலாம்.அப்படியானால் வீடு திரும்புகையில் பின்னால் தொற்றிக்கொள்ள வந்திருக்க வேண்டுமே…! இருவரும் ஒரே பகுதிதானே…! ஒரு நாளும் வந்ததில்லை. அதுதான் ஆச்சரியம்….…பலரையும் தொந்தரவு படுத்தியிருக்கிறார் என்று தெரிந்தது. அவருக்கே ஒரு புரிதல் இருந்ததோ இல்லையோ?… …இறங்கும்போது ஒரு நன்றி சொல்லிவிட்டுப் போயிருக்க வேண்டாமா?….அதுவரை உதவி செய்தவர் எவரிடமும் சொன்னதில்லை என்றால்…..? இதென்ன எழுதிக் கொடுத்த விஷயமா? போதாக்குறைக்கு, மெதுவாப் போங்க…..உறார்ன் அடிங்க….பள்ளம்…பள்ளம்…பார்த்து ஓட்டுங்க…..பிரேக் பிடிங்க….என்ன வண்டி ஓட்டுறீங்க….அது இது என்று அவ்வப்போது ஓட்டும் ஆளுக்கு இன்ஸ்ட்ரக் ஷன் வேறு……தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்த்த கதையாய்…..

ஒரே ஆட்டா ஆட்டி கீழ விழுக்காட்டிருவோமான்னு வருது சார்…நினைச்சா பாவமாயிருக்கு…..ஆனா வாயி……அடேங்ங்ங்ங்கப்பா…….!! ரெண்டு காதுக்கும் நீளுது சார்…

பிரமநாயகத்திடம் மாட்டாத ஒரே ஆள் நான்தான்…..ஒரு வேளை எங்கள் குடியிருப்புப் பகுதிச் சங்கத்தின் ஸ்தாபகர்களில் நானும் ஒருவன் என்று உணர்ந்திருப்பதனால் ஏற்பட்ட மரியாதையோ என்னவோ…..அல்லது வெறும் மதிப்பாகவும் இருக்கலாம்…எதற்கு இந்தாள்கூடப் பிரச்னை என்று நினைத்திருக்கலாம்….என்னைப் பொறுத்தவரை அவர் என்னோடு ஒட்டாமல் இருப்பதே மேல் என்றுதான் தோன்றியது. வேலியாடு போகும் ஓணானை எதற்கு மடியில் எடுத்துக் கட்டி அவஸ்தைப் பட வேண்டும்…?

ஆனாலும் அன்று பார்த்த மாத்திரத்தில் முதல் கேள்வியாய் இப்படி அதிரடியாய் வீசுவார் என்று எதிர்பார்க்கவில்லைதான். என்ன ஒரு உரிமை…?

ஏன் சார்….உடம்பு சரியில்லைங்கிறீங்க…நேத்து யோகா க்ளாசுக்கு வந்திருந்தீங்களே…..அப்பச் சரியா இருந்திச்சா…..? – மனசுக்குள் ஒன்று வைத்து குறும்பாய் கேள்வி கேட்பதில் திறமையைப் பாருங்கள்….

ஏன்…அதுக்கப்புறம் இருபது மணி நேரம் கடந்திருக்கேய்யா…. அதுல ஏதாச்சும் கோளாறு ஆகியிருக்கக் கூடாதா…,?

இல்ல…முக்கியமான கூட்டமாச்சேன்னு கேட்டேன்…..

எதுதான் முக்கியமில்லே….கூட்டுற கூட்டம் எல்லாமும் குடியிருக்கிறவங்க நலனுக்காகத்தானே……ரோடு, எலெக்ட்ரிசிடி, பஸ் வசதி…இப்டிப் பார்த்துப் பார்த்து எவ்வளவு செய்திருக்கு…..? சுடுகாடு முதற்கொண்டு கொண்டு வந்திருக்கமேய்யா….? காலம் காலமா குறிப்பிட்ட இனத்து சனங்க பயன்படுத்திட்டிருந்த இடத்தை விட்டுக் கொடுத்திருக்காங்களே….அது எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா?

அதெல்லாம் சத்தியம்தான்…உங்க சேவை மறக்க முடியாதுதான்….அதே போலத்தான் .நேத்துக் கூடின கூட்டமும் அதி முக்கியமாச்சேன்னு சொல்ல வந்தேன்…..

என்னய்யா…பெரிய அதி முக்கியம்?…..முக்கியம்…அதி முக்கியம்ங்கிறதெல்லாம் அவனவன் மனசைப் பொறுத்த விஷயமில்லே……பொது நலனைச் சார்ந்த விஷயம்…..

இது பொது நலன் சம்பந்தப்பட்டதுதானே…..நம்ம எக்ஸைஸ் காலனி குடியிருப்போருக்குள்ள தண்ணிக் கஷ்டத்தைத் தீர்க்கிற பிரச்னைதானே….?

சரிதான்….சரிதான்….நாம அப்புறம் பேசுவோம் இதப்பத்தி…..இப்ப காலை வேளைல வேண்டாம்….அமைதியா நடப்போம்…….புரிஞ்சிதா…….? இந்தாள்ட்டப் பேசினா ஊருக்கே தெரிஞ்சு போகவும் வாய்ப்பிருக்கு…லவுட் ஸ்பீக்கர்….

சார்….சார்….என்ன சார்….உதறிட்டுப் போறீங்க…..நானும் வர்றேனே…… – பிரமநாயகம் தொற்றிக் கொள்ளப் பார்ப்பது புரிந்தது. வண்டியில் பலரிடமும் தொற்றுவதுபோல இப்போது நடைப் பயிற்சியில் என்னோடு கை கோர்க்கப் பார்க்கிறார் என்று புரிந்தது. இந்த மனுஷன் வாய் சும்மா இருக்காது…..ஏடாகூடமா ஏதாச்சும் கேட்டு வைப்பான்…பதிலுக்கு ஏதாச்சும் பேச வேண்டி வரும்….கடைசில சண்டைல போய் நிற்கும்….சட்டென்று சுதாரித்தேன் நான்.

நீங்க உங்க வழில போங்க…..நான் தனியா நடக்கிறவன்……பார்க்கலாம்….சொல்லிவிட்டு நடையை எட்டிப் போட்டு விட்டேன். மனுஷன் நிற்கிறாரா, போய்விட்டாரா என்பது கூட எனக்குத் தெரியாது. சற்று தூரம் வந்த பிறகுதான் அருகில் யாருமில்லை என்று புரிந்து நிம்மதிப்பட்டது.

எங்கள் குடியிருப்போர் சங்கக் கூட்டத்திற்கு காரணமாய்த்தான் நான் போகவில்லை. அன்று எடுத்துக் கொள்ளப்படவிருந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு வகையில் பார்த்தால் அது சுயநலமிக்கது என்பது என் கருத்தாய் இருந்தது. முதலில் அந்தக் கண்மாயை ஒட்டி மேல்நிலைத் தொட்டி கட்டுவது என்பதிலேயே எனக்கு விருப்பமில்லை. அந்தப் பகுதியில் வீடுகள் வருவதற்கு முன்பிருந்தே…வெகு காலமாய் அந்தக் கண்மாய் அந்தக் கிராமப் பகுதி மக்களைக் காப்பாற்றி வருகிறது. பிறகு படிப்படியாக வீடுகள் வர ஆரம்பித்து, அனைவருக்கும் நீராதாரம் தரும் அட்சயபாத்திரமாய் இருந்து வருகிறது. சுற்றிலும் வீடுகள் நிறைய எண்ணிக்கையில் வந்த பின்பு தோன்றியதுதான் எங்கள் எக்ஸைல் காலனி. எல்லோரும் அந்தக் கண்மாய் மூலமாய்க் கிடைக்கும் நிலத்தடி நீராதாரத்தைப் பயன்படுத்தி எப்படி போர்த் தண்ணீரைப் பெற்று வீடுகளில் பயனடைகிறார்களோ அதுபோல்த்தானே எங்கள் எக்ஸைல் காலனியிலும் தண்ணீர்ப் பலனைப் பெற வேண்டும்? அதை விடுத்து ஊர்ப் பொதுக் கண்மாய்க்கருகில் பெரிய மேல்நிலைத் தொட்டியைக் கட்டி குழாய்களைப் பூமிக்கடியில் பதித்து நேரடியாகக் காலனிக்குள்ளேயே கொண்டு வந்து நிரப்புவது என்றால் எத்தனை சுயநலமிக்கது அச்செயல்?

கேட்டால் மேல் நிலைத் தொட்டி கட்டுவதன் மூலம் நமக்கு மட்டும் அந்தப் பலன் இல்லை. பஞ்சாயத்து மூலம் பிற பகுதி வீடுகளுக்கும் வீட்டுக்கு வீடு குழாய் போட்டு தண்ணீர் தாராளமாய்க் கிடைக்கும் என்பதான பேச்சு முன் வைக்கப்பட்டது. அது நடவாது என்றேன். அவர்களைப் புறக்கணித்து இதைச் செய்வது நல்லதல்ல என்பது என் கருத்தாய் இருந்தது. அத்தோடு அதுதான் இப்போது கிடைத்து வருகிறதே…அவரவர் வீட்டு ஆழ்துளைக் கிணறு மூலம்…? இதற்குத் தொட்டி கட்டி ஏன் இழுக்க வேண்டும்? அழுத்தமான சுயநலம் பொதிந்த செயல்தானே அது?

முதலில் மேல் நிலைத் தொட்டி கட்டுவது என்பதே தவறு. அந்தப் பகுதியின் நூற்றுக் கணக்கான வீடுகளுக்கும் நிலத்தடி நீர் கிடைக்கிறதென்றால் அதற்கு ஆதாரம் அந்தக் கண்மாய். அதில் நிறைந்திருக்கும் தண்ணீரை, நீர் ஆதாரத்தை…தினசரி மோட்டார் போட்டு, தொட்டியில் ஏற்றிவிட்டால் முதலில் கண்மாயில் நீராதாரம் குறையும்….ஆழத்திற்குப் போகும்…அதன் மூலம் வீடுகளில் நிலத்தடி நீர் குறையும்.…ஆழத்திற்குப் போகும்…தினசரி அரை மணி நேரம் ஓடும் மோட்டார்…ஒரு மணி நேரம் ஆகும். பிறகு ஒன்றரை, ரெண்டு என்று நீட்டிக்கும்…. படிப்படியாக நீர் வற்றி…ஒரு கட்டத்தில் அறுநூறடி, எழுநூறடி என்று போய் நிற்கும்….இது தப்பில்லையா….வசதியாய் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீரை ஏற்றி….அதை மிக வசதியாய் காலனிக்குள் தங்களுக்கு மட்டும் முதலில் கொண்டு வருவார்களாம்…கேட்டால் அந்தத் தொட்டித் தண்ணீர்தான் கிராம மக்களின் வீட்டில் உள்ள குழாய்களுக்கும் போகும் என்ற சால்ஜாப்பு வேறு. நிச்சயம் அது நடவாது. செய்தால் முதலில் முழுக்கப் பயனடைபவர்கள் காலனிவாசிகள் மட்டுமே என்பது உறுதியானது. அப்பகுதி வீடுகளுக்கு சில நாட்களுக்கு வேண்டுமானால் முதலில் கிடைக்கலாம்….பிறகு அவர்கள் பாடு தாளம்தான் என்பதில் திடமாய் இருந்தேன் நான்.

என் கருத்தை ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? மனிதா்களைத்தான் சுயநலம் பிடித்து ஆட்டுகிறதே…! காலனிக்குள் எப்படியும் தண்ணீரைக் கொண்டுவந்து விடுவது என்பதில் படு முனைப்பாய் இருந்தார்கள் எக்ஸைல் காலனிவாசிகள். பிற பகுதிக் குடியிருப்பு மக்கள் தங்களுக்குக் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கப் போகிறது என்பதில் சந்தேகத்தோடு ஏமாந்திருந்தார்கள். அதிகாரிகள் அதிகம் பேர் அடங்கிய காலனிப் பிரச்னையில் தலையிடுவதில் பல பேருக்குப் பயம்..வேறு. பெரிய்ய்ய எடம்…எதுக்கு வம்பு….? பாவம் நம் மக்கள்…அடிப்படையில் நல்லவர்கள்…..நல்லது நடக்கும் என்று நினைத்து நினைத்தே ஏமாறுபவர்கள்.

அதற்கு என்னென்ன பணிகளை மேற்கொள்வது, யார் யாரைப் போய்ப் பார்ப்பது, எப்போது பணியைத் துவக்குவது என்பதற்கான ஒருங்கிணைப்புதான் நேற்றைய ஆலோசனைக் கூட்டம். எனக்கோ மனசாட்சி சுத்தமாய் ஏற்றுக் கொள்ளவில்லை. பலகாலம் முன்பிருந்தே அப்பகுதியில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான பேரை ஏமாற்றுவது என்பதில் எள்ளளவும் உடன்பாடில்லை எனக்கு. கூட்டத்தில் நான் ஒருவன் மட்டும் எதிர்த்து என்ன பயன்? நிச்சயம் எல்லோரும் என்னைத் திட்டுவார்கள். அடிக்க வந்தாலும் போயிற்று. எதற்கு வம்பு……நான் மட்டும் அதை எதிர்த்து….ஆம்…நான் மட்டும்தான்….நான் சொல்வது சரி என்று தெரிந்தாலும் பலரும் வாய்விட்டு, மனம் விட்டு அதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை என்பதுதான் உண்மை. அவர்களின் தண்ணீர்ப்பாடு கழிகிறதே…..

மனிதர்கள் எல்லோருமே சுயநலமானவர்கள்தான். காரியம் என்று வரும்போதுதான் அது தெரியவரும். இந்தக் கணத்தில் நானும் அப்படித்தானே….நான் நினைப்பதைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேனல்லவா….அதுவும் ஒருவகை சுயநலம்தானே….!

எல்லாம் பேசினோம்…ஏதேதோ பேசினோம்…ஆனால் நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது என்றே கேட்கவில்லையே…! பிரமநாயகமோ நான் வராததைப் பற்றித்தான் திருப்பித் திருப்பிச் சொன்னாரே தவிர, கூட்ட விபரம் சொல்லவில்லையே….சரியான அமுக்குளி அந்தாள்…..நினைத்தவாறே நடந்து கொண்டிருந்தேன். ராஜாஜி முதியோர் இல்லம் பகுதியில் எதிர்ப்பட்டார் மணிவண்ணன். நான் வேலை பார்த்த துறையிலேயே என்னோடு பணியாற்றியவர். என்னோடு என்றால் அதே ஊரில்தானே தவிர ஒரே அலுவலகத்தில் அல்ல.

ஊழியர் பிரச்னையில் அதிக அக்கறை கொண்டவர். நானும்தான். ஆனால் அவர் வேறு சங்கம். நான் ஒரு சங்கம். எங்குதான், எதில்தான் ஒரே சங்கம் என்றிருக்கிறது. நோக்கங்கள் ஒன்றாயிருக்கலாம்…ஆனால் அதிகார போதை…அங்கங்கே அவரவர் இருப்பின் அளவுக்கு அவரவரைப் பிடித்து ஆட்டத்தான் செய்கிறது. நாங்கள் ஸ்டிரைக் செய்தால் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் ஸ்டிரைக் செய்தால் நாங்கள் செய்ய மாட்டோம். ரெண்டு பேரும் செய்தால், சேர்ந்து நிற்க மாட்டோம். கௌரவப் பிரச்னைதான். வறட்டுக் கௌரவம். கோரிக்கைகள் என்னவோ பொதுவாய்ச் சுமக்கும் சுமைகள்தான் என்றாலும், நாங்கள்தான் போராடி வாங்கிக் கொடுத்தோம் என்று நாளைக்குச் சொல்ல முடியாதே….! அதற்காகவாவது மாற்றி மாற்றி ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டுமே….!

வாங்கும் சம்பளத்திற்கு வேலை ரெண்டாம் பட்சம்தான். இதுதான் முதல். இல்லையென்றால் அலுவலக நேரத்தில் சங்கப்பணி என்று அலைவோமா….? அதை எந்த அதிகாரியும் தடுக்க முடியாது என்கிற அளவில் எங்கள் அதிகாரத்தை ஓரளவுக்காவது நிலை நாட்டியிருக்கிறோமே…! மீறி அவர்கள் ஏதேனும் சொல்ல முற்பட்டால்…அவர்களின் ஊழல்களை அவிழ்த்து விட்டால் போயிற்று….இந்த வம்பிற்காகவே அவர்களும் வாய் திறப்பதேயில்லை. கண்டும் காணாமல் இருந்து இருந்தே இங்கே பல விஷயங்கள் நாசமாய்த்தான் போயிருக்கின்றன. நம் நாட்டின் சுதந்திரம் என்பதே அப்படித்தானே இருக்கிறது…அவிழ்த்துவிட்ட கதையாய்…..

காலை வணக்கம், ராமநாதன் சார்…இந்த ரூட்ல வரமாட்டீங்களே…என்ன அதிசயமா இன்னைக்கு….?

அப்டியெல்லாம் இல்ல….ஒவ்வொரு நாளைக்கு ஓரொரு ரூட்….அவ்வளவுதான்….சலிக்கப்படாதில்லையா…..அதுக்குத்தான்…..

நேற்றைக்குக் கூட்டத்துக்குக் காணலியே….? வெளில எங்கயும் போயிட்டீங்களோ….?

அவரே யோசனை சொல்லிக் கொடுத்தாற்போலிருக்க….ஆமாமா….போஸ்டல் காலனில ஒருத்தரப் பார்க்க வேண்டியிருந்தது….

ஓ.கே. சார்….. பார்ப்போம்…ரொம்ப முக்கியமான ரிசல்யூஷன் பாஸாயிருக்கு….சொல்லியவாறே கடந்து போனார் மணிவண்ணன்.

இன்னும் கொஞ்சம் பேசியிருந்தால் நேற்றைய நிலவரம் முழுவதும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் மூலம் நான் அதை அறிந்து கொள்ள விரும்பவில்லை. அதற்கு பிரமநாயகமே எவ்வளவோ மேல். வெடிப்பான பேச்சு இருந்தாலும், அந்தாளிடம் கபடம் கிடையாது….நான் வராத கூட்டத்தில் மணிவண்ணன் என்னென்ன பேசியிருப்பார் என்பதை என்னால் போகாமலேயே யூகிக்க முடியும். நிச்சயம் என்னைப் பொருட்படுத்தாமல்தான் அந்தப் பேச்சு இருந்திருக்க முடியும். மனிதர்களுக்கென்றே உண்டான நடைமுறை பலவீனம் இது என்பதை நான் அறிவேன். நல்லது நடக்க வேண்டும்…அது ஒன்றேதான் என் குறிக்கோள். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்துவிடுவதோ, குறிப்பிட்ட விஷயம் தவறாயினும் நியாயம் என்று தூக்கி நிறுத்த முற்படுவதோ என்னால் இயலாது. பகுதி மக்கள் அனைவரும் வித்தியாசமின்றிப் பயனடைய வேண்டுமென்பதே என் பிரதான நோக்கம். என்னால் தடுத்து நிறுத்த முடியாது என்கிற இடத்தில் என் எதிர்ப்பு எந்த வகையில் இருக்க வேண்டும் என்று யோசித்தே இந்த முறையைக் கையில் எடுத்துக் கொண்டேன் நான். ஒரு எளிமையான மனம் கொண்டவனால் சாத்தியமாவது இதுவே. அது தெரிய வந்தது மறுநாள் காலை…..

சார்….சார்….சார்….என்னா சார்….உங்க கண் எதிர்க்கேதானே டீ குடிச்சிட்டு நிக்கறேன்…பார்க்காமலேயே போறீங்களே….

குரல் கேட்டு வண்டியைப் ப்ரேக் அடித்து நிறுத்தினேன். அவசர அவசரமாய் டீயை ஊற்றி விட்டு காசை வைத்து விட்டு வந்து கொண்டிருந்தார் பிரமநாயகம்.

என்ன….வகுப்புக்கு முன்னாடியே டீ குடிச்சிர்றதா….? வெறும் வயித்துலதான் யோகா பண்ணனும்னு மாஸ்டர் சொல்லியிருக்காரில்ல….?

அவ்வளவு ஸ்டிரிக்டால்லாம் நம்மளால இருக்க முடியாது சார்…காலைல ஒரு டம்ளர் சூடா ஊத்தினாத்தான் சுறுசுறுப்பே வரும்…..இல்லன்னா வகுப்புமே கட்டுதான்….

சரி…சரி…வாங்க….. – அன்று முதன் முதலாய் மனதோடு அவரை ஏற்றிக் கொண்டேன். என்றும் கேட்காத நபர்…அன்று ஆவலோடு ஓடி வருகிறாரே…எப்படி மறுப்பது…..?

சார்…..ஒரு முக்கிய விஷயம் உங்கள்ட்ட சொல்லணும்னு இருந்தேன்…நல்ல வேளை இங்கயே பார்த்திட்டேன் உங்களை…. சங்கக் கூட்டத்துல ரெசல்யூஷன் பாஸ் பண்ணியாச்சு…..மேல் நிலைத் தொட்டி கட்டிர்றதுன்னு….செய்தே ஆகணும்னு எல்லாரும் ஒத்தக்கால்ல நிக்கிறாங்க சார்….ஒராள் கூட மறுக்கலைன்னா
பாருங்களேன்…….

அது தெரிஞ்சதுதானே…..எல்லாரும் ஒத்துக்கிட்டாங்கங்கிறதுக்காகவே ஒரு விஷயம் சரியாயிடுமா….? தப்பு தப்புதான்….ஒட்டு மொத்தப் பகுதி மக்களுக்கும் சமமாத் தண்ணி கிடைக்க என்ன வழின்னுதான் யோசிச்சிருக்கணும்….அதிகாரத்தைப் பயன்படுத்திக் காலனிக்கு மட்டும் கொண்டு போறது சரியில்லை….அத்தோட உங்களுக்கும் உண்டுன்னு சொல்லி ஏமாத்துறது அதைவிடத் தப்பு…..என்னவோ செய்யட்டும்…என்னைக்கானாலும் இது ஒரு நாளைக்குப் பிரச்னை ஆகத்தான் செய்யும்…..அதான் சொன்னனே…மனுஷங்க எல்லாருமே சுயநலம் பிடிச்சவங்கன்னு….அவங்கவங்களுக்குன்னு வரும்போது சுயநலம்தான் விஸ்வரூபம் எடுக்கும்….எதிர்க்க முடியாதவங்க கூட அமைதியா ஏத்துக்கிடுவாங்க…உள்ளூர சந்தோஷம் இருக்கும்….காரியம் ஆனாச் சரின்னு….

பார்த்தீங்களா…பார்த்தீங்களா…..இங்கதான் தப்புப் பண்றீங்க…..?

என்ன தப்புப் பண்றேன்….உண்மையைத்தானே சொல்றேன்…..

உங்க பெயரைச் சொல்லி….நானும் அதை எதிர்த்திருக்கேன் சார்……அதைச் சொல்ல வந்தா…?

அப்டியா……?-சட்டென்று திரும்பி கூர்மையாய் நோக்கினேன் அவரை

பின்னே……? முடியாது….நீங்க பண்றது தப்புன்னு சத்தம்போட்டுல்ல சொன்னேன்…..அம்புட்டுப் பேரும் அசந்திட்டாங்க…பேரதிர்ச்சி எல்லாருக்கும்…..குட் பை..ன்னுட்டு வெளியேறிட்டேன்…..

ஏ…..பெரம்பு….பெரம்புன்னு எல்லாரும் கத்தினாங்க……இது உங்களுக்குத் தேவையில்லாததுன்னு சிரிச்சாங்க….நா ஒத்துக்கலையே…..

அவங்க எல்லாருக்கும் முதுகுல பெரம்படி விழுந்தமாதிரி, ரங்கநாதன் சார் சைடுதான் இந்த விஷயத்துல நியாயம் இருக்கு….நீங்க எல்லாரும் செய்ய நினைக்கிறது தப்பு….பகுதி மக்களோட அபிப்பிராயத்தை அறிய பொது மீட்டிங் போடுங்க…அவங்க கருத்தையும் கேட்டு..அதுக்கப்புறம் முடிவு செய்யுங்க…அப்டி உண்டானா தகவல் சொல்லுங்க…அவரையும் இழுத்திட்டு வர்றேன்….இல்லேன்னா எங்களை விட்ருங்க…. – அழுத்தம் திருத்தமா சொல்லிட்டேன் சார்….நியாயம்னா நியாயம்தானே….அதை யார் சொன்னா என்ன…..? மனுசனுக்கு மனசாட்சி வேண்டாம்…?

சொல்லிக் கொண்டிருக்கையில் யோகா மையம் நெருங்க…..அவர்பாட்டுக்கு வழக்கம்போல் அவர் பாணியில் இறங்கிப் போய் கொண்டிருந்தார். என் பதிலே தேவையில்லையா அவருக்கு? எனக்குள் சிரிப்பு மற்றும் ஆச்சர்யம்.

தாங்க்ஸ் பிரமநாயகம்..நீர் உண்மைலயே பிரம்புதான்யா…..என் வாய் அவரை நோக்கி மெல்ல முணுமுணுத்தது.

அவர் சொல்லாவிட்டால் என்ன…..அதுதான் செய்திருக்கிறாரே….வேண்டியதை…அந்தச் செயல்,அதன் வீர்யம், நியாயம் அதி முக்கியமல்லவா…..?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *