பிணங்கள் விற்பனைக்கு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 25, 2022
பார்வையிட்டோர்: 3,465 
 
 

இழவு வீட்டு தட்டிப் பந்தலின் கீழ் கிடந்த அந்த குறைக் கொள்ளி எரிந்து முடியும் தறுவாயில் கிடந்தது.

பனிப் புகாரை ஊடறுத்து விடியலின் கிரகணங்கள் பாய்ந்து கொண்டிருந்தன.

“டேய்! தம்பியரே….. விடுஞ்சு வருகுது. எழும்புங்கோடா.” நெருப்புக் கொள்ளியில் தனது குறை கோடாச் சுருட்டை பற்ற வைத்து விட்டு ஒரு சத்தம் போட்டு வைத்தாள் சீராள அம்மாச்சி.

போர்வையை இறுக்கிப் போர்த்தபடி சில விடலைகள் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

இருந்தாலும் இப்போது எல்லோருக்குமே விடிந்து விட்டது. தெய்வானைக்கு மட்டுமே விடியவில்லை.

அவள் விழிக்கவும் இல்லை . கண் மூடித் தூங்கினால் தானே விழிப்பதற்கு! இந்த நிலை அவளிற்கு ஏற்பட்டு வாரத்திற்கும் மேலாகிறது.

தேசியத்தையும், சுயநிர்ணயத்தையும் நேர்மையாக நேசிக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உள்ள கடப்பாடுதான் தெய்வானை யின் மகன் சாந்தனுக்கும் இருந்தது.

தேசியத்தின் செல்நெறிகளை அவன் தெளிவாக விளங்கி வைத்திருந்தான். நாட்டின் அதர்மங்களுக்கு அள்ளுண்டு போனவர்களில் இருந்து வேறுபட்டிருந்தான். சோரம் போகாமல் ஸ்திர கொள்கையோடு அவன் மாணவ பருவம் ஒன்றித்திருந்ததனால் ‘மாணவர் பேரவையின் தலைவனும் ஆனான்.

தன் இளம் பராயத்தில் தந்தை மறைந்ததன் பின், அவனது தாய் இரண்டு ஏக்கர் வயலோடு போராடி தன்னையும் இரு சகோதரர்களையும் கையேந்தாமல் காப்பாற்றி வருவதை

வாழ்வியலின் பாடமாக நினைத்துக்கொள்வான்.

அன்று! இவை யாவும் சாஸ்வதமாகும் நாள்! பாடசாலைக்கு நேரமாகி விட்டதனால் அவசரமாகிக் கொண்டிருந்த சாந்தனுக்கு இள உறைதயிரும் பிட்டும் பினைந்து ஊட்டிக் கொண்டிருந்தாள் தாய் தெய்வானை.

அதுதான் அவள் மகனுக்கு இடுகின்ற இறுதி வாய்க்கரிசி என துளியும் சிந்தித்திருக்க மாட்டாள்.

பாடசாலை உடையில் சாந்தன் கடத்தப்பட்டான். நான்கு தினங் களுக்குப் பின் உருக்குலைந்த நிலையில் தாயாரினால் மட்டும் சாந்தனின் பிரேதம் அடையாளம் காணப்பட்டது. உடல் தாமதமின்றி விதைக்கப்பட்டது.

“புள்ள…. தெய்வானை”

என்றவாறு கடப்படி உளன்டிக் கம்புகளை கழற்றி வைத்து விட்டு சீராள அம்மாச்சி வந்து கொண்டிருந்தாள்.

பந்தல் கப்பில் சாய்ந்து அமர்ந்து கொண்டு மேற்கு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தெய்வானை, தன் திசையை மாற்றிப் பார்க்கிறாள்.

“இஞ்ச புள்ள! நாளைக்குச் சாந்தன்ர எட்டல்லவோ! ஒண்டும் உசும்பாம இருக்கிறாய்.”

சீராள அம்மாச்சியின் வார்த்தைகள் அவளின் சோகத்தை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தது. அதுவே விம்மி வெளி வந்தது. “அழாத புள்ள… அழாதே! நடக்கிறது நடந்து போச்சு. உனக்கு இன்னும் இரண்டு பிள்ளைகளும் இருக்கு. இப்படி நெடுக இருக்க ஏலாது. பழைய நிலைக்கு வந்தாகத்தான் புள்ள வேணும். அதுதான் எட்ட முடிச்சுப் போடணும் என்றன்.”

விசும்பலை ஒருவாறு தணித்துக் கொண்டு தெய்வானை கூறினாள். “அம்மாச்சி! எண்ட புள்ள எப்ப செத்தான் எண்டு சரியாத் தெரியாது. எட்டுச் சிலவுக்குக் கையில் காசும் இல்லை . கடன் படவும் ஏலாது. அதனால எட்டு செய்யிற தில்ல.”

இருவரும் நிசப்தமானார்கள். அம்மாச்சியின் சுருட்டுப் புகை மட்டும் வேகமாக வெளிவந்து கொண்டிருந்தது.

“அக்கா ….. அக்கா …”

பக்கத்துத் தெரு ‘கொமினிகேசன்’ பொடியனின் குரல் அந்த நிசப்தத்தைக் கலைத்தது.

ஏறிட்டுப் பார்க்கிறாள் தெய்வானை. மீண்டும் அதே குரல்.

“அக்கா! ரமணன், உங்கட மகன்ர நண்பன் சுவிசில இருந்து எடுத்தவன். பத்து நிமிசத்தில் எடுப்பானாம். கடையில் வந்து உங்களை நிக்கட்டாம்.”

பதிலுக்குக் காத்திராமல் விரைந்தான்.

சீராள அம்மாச்சி அவசரப்படுத்தி அவளை கடைக்கு அனுப்பி வைத்தாள்.

எட்டு வீடு செய்ய கடவுள் கண் திறந்திட்டான், ‘மனதுக்குள்’ எண்ணிக் கொண்டவாறு சுருட்டை ஒரு இழுவை இழுத்துக் கொண்டார் அம்மாச்சி.

ரமணனின் தொலைபேசி அழைப்பிற்காய் காத்திருந்தாள் தெய்வானை.

மகனோடு நன்றாகப் பழகியவன். சொந்தக்காரன். ஊரிலிருந்து சென்றதும் எதுவித தொடர்பும் வைக்க விரும்பாதவன். அம்மாச்சி யின் தெண்டிப்பில் தான் வர வேண்டியிருந்ததை சற்று வேதனை யுடன் நினைத்துக் கொண்டிருந்தாள்.

தொலைபேசி அலறியது. தெய்வானைக்குத்தான் அழைப்பு. “மாமி ரமணன் பேசுறன்.”

“என்ன தம்பி சொல்லு…. சொல்லு” பதிலளித்துவிட்டு மௌன மானாள் தெய்வானை.

“மாமி சாந்தனுக்கு இப்படி வருமென்று எதிர்பார்க்கவே இல்லை. அப்பவும் நான் எவ்வளவோ சொன்னனான். அவன் கேக்கயில்ல.”

இந்த வார்த்தைகள் தெய்வானைக்கு உள்ளூரப் பிடிக்கவில்லை.

“தம்பி! அதை விடு! நம்மட தாய் மண்ணுக்கு நாம ஏதாவது தியாகம் செய்யணும். அவ்வளவுதான். சரி… சரி… நீ சொல்லு!” வார்த்தைகளுக்கு வரம்பு கட்டினாள்.

ரமணன் தொடர்ந்தான்.

“மாமி சுவிசுக்கு இப்பதான் கஷடப்பட்டு வந்தனான். இப்ப உங்களுக்கு உதவி செய்ய என்னட்ட வழியில்ல, இருந்தாலும் மாமி….” என்று இழுத்தவன் மீண்டும் தொடர்ந்தான்.

“என்னண்டா மாமி! யுத்தத்தால் அங்க இருக்க ஏலாதெண்டு, இங்கதான் நிரந்தரமாக இருக்கப்போகிறன் என்று வழக்கு வைச்சிருக்கன். வழக்குல வெண்டால் தான் எல்லா வசதியும் கிடைக்கும். அதுக்குத்தான் நீங்க பொலிசில அங்க இங்க முறைப் பாடு செய்யக்குள்ள நானும் சாந்தனும் ஒண்டாகப் பிடிப்பட்ட தெண்டும் இப்ப நான் எங்க எண்டு தெரியாதெண்டும் சொல்ல வேணும். அதின்ர கொப்பியளை எடுத்து எனக்கு அனுப்புங்க. அந்த சின்னச் சின்னச் சிலவுகளுக்கு இரண்டு லட்சம் அனுப்பி வைக்கிறன். எல்லாம் சரி வந்தா பத்துக்குக் கிட்ட அனுப்பி வைப்பான். இதுதான் மாமி என்னால் செய்யக்கூடிய உதவி. என்ன சொல்லுறீங்க….. சரி தானே!”

“எண்ட புள்ளட உடலுக்கும் உயிருக்கும் விலை பேசுகிறாய் என்ன! வையடா போனை.”

இடியென முழங்கினாள் தெய்வானை.

விலைபோகா வீரர்களில் தன் மகனும் ஒருவன் என்ற பெருமிதத்துடன் வீறுநடை போட்டு கடையை விட்டு வெளியேறுகிறாள் தெய்வானை.

– தினக்குரல் 27-05-2007 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *