கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 20,894 
 

அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. மூன்று நாட்களாக அம்மா ஐ.சி.யு. வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இயற்கை உபாதைகள் மறந்து போனவளாக இருக்கிறாள். காபியைக்கூட வற்புறுத்தித்தான் குடிக்க வைக்க வேண்டியிருந்தது.

”வேணாம் சகுந்தலா.. விட்டுடு..”

நானும் வற்புறுத்தவில்லை.

ஐ.சி.யு-வுக்குள்ளேயிருந்து வெள்ளை கோட்டும் ஸ்டெதஸ்கோப்புமாக அண்ணா வெளியே வந்தால் சடாரென்று எழுந்திருப்பாள். விரைந்து அண்ணன் அருகில் போய்க் கேட்பாள்..

”சங்கரா, அப்பாவுக்கு எப்படிடா இருக்கு..?”

”உஷ்.. அம்மா.. கொஞ்சம் தள்ளி வா..” என்றழைத்துப் போய் சின்னண்ணன் மெதுவாகச் சொன்னான்.

”அப்படியேதாம்மா இருக்கு…” கண்ணீர் வழிய அண்ணனை ஏறிடும் அம்மாவின் முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போயிற்று.

அம்மாவின் இந்த முகம் இதுவரை நான் பார்க்காத முகம். அதீதக் கவலையும் பயமும், அதனால் ஏற்பட்ட இருட்டும் கலந்து மங்கித் தெரியும் முகம். ஆஸ்பத்திரிக்கு வந்த இந்த மூன்று நாட்களுக்கு முன்புவரை அம்மா என்பவள் ஜாஜ்வல்யமானவள். நல்ல உயரமும் இறுகக் கட்டிய உடம்புமாக கம்பீரமானவள். பெரிய குங்குமப் பொட்டும் பளீரென்று டாலடிக்கும் நிறமும், வலது மூக்குத்தியும் உரிக்காத மட்டைத் தேங்காய் அளவுக்கு கழுத்தடிக் கோடாலி முடிச்சுமாக ஜெகஞ்ஜோதியாக இருப்பாள். அம்மா பவுடர் பூசி நான் பார்த்ததில்லை. இழைத்த மஞ்சளைப் பூசிக்கொண்டு வந்து நின்றாலே போதும். கைகளும் முகமும் கழுத்தும் தகதகக்கும். சில நேரங்களில் எனக்கேகூட ஒரு ஆதங்கம் வரும்.

”ஏம்மா, இந்த முகத்தையும் கை, காலையும் எனக்குக் கொடுத்துடேன்..”

”ஏன்.. உனக்கென்ன குறைச்சல்..? என் மூணு குழந்தைகளும் முத்து முத்தாத்தானே இருக்கீங்க..?”

அம்மா சொல்கிற மாதிரி இரண்டு அண்ணன்மார்களும் முத்துக்கள்தான். வெள்ளை வெளேரென்று அப்படியே அம்மாவைக் கொண்டு வந்திருந்தார்கள். முகவாகு, உயரம் இறுகக் கட்டிய உடம்பு எல்லாவற்றிலும் அம்மாதான் இருவருமே. இருவரும் டாக்டர்கள். ஸ்பெஷலிஸ்ட்டுகள். இருவருக்கும் தனித்தனி ஆஸ்பத்திரி. இருவருக்கும் ஒரே பந்தலில் ஜாம்ஜாமென்று கல்யாணம். இருவருக்கும் பணக்கார இடத்திலிருந்து பெண்கள். இருவருக்குமே சொல்லிவைத்த மாதிரி ஒரு பையன், இருவருமே கப்பல் போன்ற காரிலும் விமானத்திலும் பறப்பவர்கள்.

இதில் நான் மட்டும்தான் மாருதி 800-ல் வருபவள். அதுவும் மாதத் தவணையில் வாங்கியது. இன்னும் கட்ட வேண்டிய தொகை முப்பத்தைந்தாயிரமோ, நாற்பதாயிரமோ பாக்கி இருந்தது. என் கணவர் தொழிற்சாலை ஒன்றில் ஃபோர்மேன். இரண்டு பெண் குழந்தைகள். இருவருமே தோற்றத்தில் என்னைக் கொண்டு பிறந்தவர்கள். நான் அப்பாவைக் கொண்டு பிறந்தவள். மாநிறமாய், இரட்டை நாடி சரீரமாய், முன் வரிசையில் ஒன்று தெற்றுப் பல்லாய்…

இரு அண்ணன்மார்களுக்கு மட்டுமின்றி அவர்களின் மனைவிமார்கள், குழந்தைகளுக்கும்கூட நான் என்றால் இளக்காரம்தான். பேச்சிலும் செய்கைகளிலும் அது வெளிப்படும். ‘சகுந்தலாவுக்கு என்ன தெரியும்’ என்றும் ‘அவ பெத்த குழந்தைங்க அவளை மாதிரித்தானே இருக்கும்’ என்றும் காதில் விழும்போதெல்லாம் அம்மாவின் மடியில் தலைவைத்துக் கண்கலங்குவேன்.

”ஏம்மா.. என்னையும் உன்னை மாதிரி பெத்திருக்கக் கூடாதா..? எதுக்கு அப்பா மாதிரி பெத்தே..?” என்பேன்.

என் தலையை வருடியபடி அம்மா சொல்வாள்..

”அடி அசடே.. உன் அப்பாவுக்கு என்ன குறை..? கறுப்பு ஒரு குறையாடீ..? அவரை மாதிரி இருக்கக் குடுத்து வச்சிருக்கணும். வெள்ளை வெளேர்னு ஒல்லியா, அழகா இருக்கிறவாளுக்கெல்லாம் அந்த அன்பும் பிரியமும் வந்திடுமா? அந்த அப்பாவைக் கொண்டு பிறந்ததுக்கு சந்தோஷப்படுவதை விட்டு இப்படியா கண்கலங்குறது?”

அம்மா சொல்வது நிஜம். அப்பா அப்படித்தான் எங்களை வளர்த்தார். ‘சீ’..’ என்று ஒரு வார்த்தை சொன்ன தில்லை. அதட்டலாகப் பேசினதில்லை. கோபமாக ஒரு பார்வை பார்த்ததில்லை. ”ராஜம், ராஜம்” என்று அம்மாவைச் சுற்றிச் சுற்றி வந்ததும், எங்களைப் பெற்றதும் பெருந்தவமாக நினைத்திருக்க வேண்டும். கிடைக்காதது கிடைத்துவிட்ட திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும். அம்மா மாதிரி ஒரு பேரழகி மனைவியாக வந்து வாய்த்தது பூர்வஜென்மப் புண்ணியம் என்ற நினைப்பு வேரூன்றியிருக்க வேண்டும்.

அதனால்தான் அம்மாவை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். வீடோ, வியாபாரமோ.. எதுவானாலும் அம்மா சொல்வதுதான் நடக்கும். அம்மா ஆசைப்படுவது கிடைக்கும். அம்மா பேச்சுக்கு மறுபேச்சு அந்த வீட்டில் எழ முடியாது. எழுந்ததும் கிடையாது.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை எட்டும் அன்னியோன்ய தாம்பத்ய வாழ்க்கையில் ஒருநாள்கூட அப்பாவை விட்டு அம்மாவோ, அம்மாவை விட்டு அப்பாவோ பிரிந்திருந்ததில்லை.

”ஏன்னா, கல்யாண சத்திரத்துலயே தங்கிடறதால்ல சொல்லிட்டுப் போனேள்..”

”சொன்னேன். என்னவோ தோணித்து. வந்துட்டேன். ராத்திரி நீயும் குழந்தைகளும் தனியால்ல இருக்கணும்..”

”சரியாப் போச்சு. இன்னும் என்ன குழந்தைகள்.. குழந்தைகளுக்குக் குழந்தை பொறந்தாச்சு. தோளுக்கு மிஞ்சி வளந்தாச்சு. வயசாக ஆக நீங்கதான் குழந்தையாகிண்டே போறேள்..”

அந்த வயதான குழந்தைதான் இப்போது ஐ.சி.யு-வினுள் கிடக்கிறது.

”ஏன்னா, சங்கராந்தி வர்றது. பரண் மேல இருக்கிற வெண்கலப் பானையைத் தோட்டக்கார முருகனை விட்டோ ஆஸ்பத்திரிப் பையன் ராஜாவை விட்டோ எடுக்கச் சொல்றேளா..?”

”ஆஸ்பத்திரிப் பையனை வீட்டு வேலை செய்யச் சொன்னா சின்னவன் கத்துவான். தோட்டக்காரர் முருகனை பத்மினி, சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுப்பியிருக்கா. கைல ஒரு பெரிய லிஸ்ட் எடுத்துண்டு போயிருக்கிறவன் திரும்பி வர நேரமாகும். எந்த வெண்கல குண்டான்னு காட்டு, நான் எடுத்துத் தரேன்..”

”நீங்க வேணாம். உங்களால் முடியாது. சிவாவோ சங்கரனோ வரட்டும். எடுத்துத் தரச் சொல்றேன்”

”இதுக்குப் போய் சிவாவும் சங்கரனும் வரணுமா..? நீ சொன்ன உடனே ரெண்டு பேரும் போட்டி போட்டுண்டு எடுத்துக் கொடுத்திடப் போறாங்க பாரு. போடி போக்கத்தவளே.. போய் ஸ்டூலைக் கொண்டா.. ஏறி நானே எடுத்துத் தரேன்..”

அம்மா கேட்டவுடன் அது நடக்க வேண்டுமென்று நினைத்தாரோ, ஏதோ ஒரு விதத்தில் தன்னை நிரூபித்துக் கொள்ள ஆசைப்பட்டாரோ.. தெரியவில்லை.

அந்த ஸ்டூலின் ஓரடிக்கு ஓரடி மரப்பலகை அவரது ஸ்தூல சரீரத்தைத் தாங்க முடியாமல் ஆட்டம் கண்டு முறிந்துபோக ”ஐயோ.. பார்த்துன்னா..” என்று அம்மா தாங்கிப் பிடிப்பதற்குள் ”ரா..ஜ…ம்..” என்கிற அலறலுடன் பின் தலை மடேரென்று மோதக் கீழே விழுந்தார் அப்பா.

அதன்பின் பெரியண்ணா வந்தான். சின்னண்ணன் வந்தான். ஆம்புலன்ஸ் வந்தது. அப்பாவோடு அழுது கொண்டே அம்மாவும் ஏறிப் போனார். பின்னாலேயே இரு மன்னிகளுடன் நானும் காரில் ஏறி ஓடினேன்.

இதோ.. மூன்று நாட்கள் முழுசாக ஓடிப் போய் விட்டன. அப்பாவுக்கு நினைவு திரும்பவில்லை. கண்ணைத் திறக்கவில்லை. உதடு பிரியவில்லை. ஆடா மல், அசையாமல் அப்படியே கிடந்தார். கையிலும், மூக்கிலும் சிறிய ரப்பர் குழாய்கள் செருகப்பட்டிருந்தன. ஆகாரம் டியூப் வழியாக உள்ளே போயிற்று. மூத்திரம் கட்டிலோடு கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலைமையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வென்டிலேட்டர் வைக்கப்பட்டிருப்பதாக இரு அண்ணன்மார்களும் டாக்டர்களாக மட்டுமே அப்பாவின் நிலைமை பற்றி மருத்துவரீதியில் ஒருவருக்கொருவர் விவாதித்தனர்.

”சிவா, அப்பாவுக்கு எப்படிடா இருக்கு..?” கண்ணீருடன் கேட்டாள் அம்மா.

”அப்பாவுக்கு என்னம்மா வயசாச்சு..?”

”டேய் என்ன வயசானா என்னடா..? அப்பா எப்படிடா இருக்கார்..?”

குறுக்கிட்ட சின்னண்ணன் கோபமாகக் கேட்டான்.

”ஏம்மா, அப்பாவுக்குத்தான் அறிவில்லை. உனக்குமா அறிவில்லாமல் போச்சு? எப்பவோ வரப்போற பொங்கலுக்கு இப்ப வெண்கலப் பானை எடுக்க என்ன அவசரம்? அதுவும் அதை அப்பாதான் எடுத்துத் தரணும்னு பிரார்த்தனை ஏதாவது பண்ணித் தொலைச்சியா? வீட்ல ஒராளுக்கு ரெண்டாள் இருக்கிறது உனக்குத் தெரியாதா..?”

”சங்கரா, கொஞ்சம் நிதானமாப் பேசு” என்ற பெரியண்ணா அம்மாவைச் சற்று கனிவோடு நோக்கினான்.

”அம்மா, நீ மனசைத் திடப்படுத்திக்கணும்.. அப்பா நிறைவா வாழ்ந்திருக்கார். உன்னைக் கல்யாணம் பண்ணி, மூணு குழந்தைங்களைப் பெத்து, அவங்களை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி, மூணு பேருக்கும் கல்யாணம் பண்ணி பேரன், பேத்தின்னு ஜாம் ஜாம்னு வாழ்ந்திருக்கார்..”

அம்மாவின் முகத்தில் மருட்சியும் கண்களில் இருளும் எட்டிப் பார்க்கத் தொடங்கின. குரல் கரகரக்கக் கேட்டாள்..

”சிவா.. நீ என்னடா சொல்றே..?”

”அவன் ஒண்ணும் சொல்லலைம்மா. அப்பா இப்படி படுத்துக் கிடப்பதை மட்டும் பார்க்காதே. நல்லபடியா இருந்ததை நினைச்சுப் பாரு. அப்பத்தான் நல்லது நடக்கும்னு சொல்ல வரான். பாஸிட்டிவ்வா நினைச்சாத்தாம்மா பாஸிட்டிவா நடக்கும்!”

அம்மா வெறித்துப் பார்த்தாள். ”உட்கார்ந்து நல்லது நினைம்மா. வா சிவா போகலாம்” என்று சின்னண்ணன் பெரியண்ணனை அழைத்துக் கொண்டு போன விதம் எனக்கென்னவோ சரியாகப் படவில்லை.

சில நிமிடங்களுக்குப் பின் ”அம்மா, இதோ பாத்ரூம் வரை போய்ட்டு வர்றேன்” என்று கூறி நகர்ந்தேன்.

நான் எதிர்பார்த்த மாதிரியே சின்னண்ணன் அறையில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். கதவு திறந்து நான் உள்ளே நுழைந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. ”இனிமே அவருக்கு நினைவு திரும்பும்னோ உணர்வு வரும்னோ நான் நினைக்கலை சிவா” இது சின்னண்ணா.

”அவர் கோமா ஸ்டேஜுக்குப் போய்விட்டது எனக்குப் புரியறது. ஆனா, அம்மாவுக்கு எப்படிப் புரிய வைக்கிறது?” -பெரியண்ணன் கூறியதைக் கேட்டதும் என் வயிற்றுக்குள் ஐஸ் கட்டி இறங்கிற்று.

அப்பா கோமா நிலைக்குப் போய்விட்டாரா..? கடவுளே, அப்பாவுக்கா இந்த நிலை..? கோபப்படாத அப்பா.. அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத அப்பா.. அன்பைத் தவிர வேறோன்றும் அறியாத அப்பா.. யாரையும் எதற்காகவும் தப்பு சொல்லாத அப்பா.. அம்மா சொன்னால்கூட ‘விடு ராஜம்… அவாளுக்கு என்ன கஷ்டமோ பாவம்’ என்று பரிதாபப்பட மட்டுமே தெரிந்த அப்பா…

எதற்காக இந்த நிலைமை? யாருக்குத் தண்டனை..?

மனசுக்குள் நான் கேட்ட கேள்வி மனசை மானசீகமாக எட்டிற்றோ என்னவோ.. குரல் கரகரக்கச் சொன்னான்.

”நாம என்ன தப்பு பண்ணினோம்னு நமக்கு இந்தத் தண்டனை..?” பெரியண்ணன் கேள்விக்கு சின்னண்னன் நிமிர்ந்து பார்த்தான்.

”தண்டனையா ஏன் நினைக்கணும்? சிவா, அப்பாவை வெறும் பேஷன்ட்டா மட்டும் பாரு…”

”என்ன சொல்றே சங்கரா..?”

”இந்த மாதிரி கோமா ஸ்டேஜுக்குப் போற பேஷன்ட்ஸோட சொந்தக்காரங்ககிட்ட நாம் என்னவெல்லாம் பேசியிருக்கோம்..? எப்படியெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கோம்…?”

”சங்கரா..?”

”எத்தனை மாசமோ, வருஷமோ.. இப்படி வச்சுண்டிருக்க முடியுமா..? டியூப் வழியாப் போற உணவு ஜீரணமாகி வெளியே வரும் மலமும் மூத்திரம் வாரிக் கொட்டி, துணி மாத்தி, பெட்ஸோர் வராமக் காப்பாத்தி.. முடியற காரியமா?”

”என்ன செய்யலாம்ங்கிறே..?”

”பேசாமல் செடேஷன் குடுத்துடலாம். இல்லைன்னா வென்டிலேட்டரை ரிமூவ் பண்ணிடலாம். இதுக்கு மேலயும் கஷ்டப்படாம நிம்மதியா போய்ச் சேர்ந்துடுவார்” சிவா அண்ணன் பேசாமலிருக்க சங்கரண்ணன் தொடர்ந்தார்..

”ஆனா, அம்மா இதுக்கு ஒப்புக்கணுமே..?”

”அம்மாவுக்குத் தெரிஞ்சா ஒப்புக்க மாட்டா. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுவா. அம்மாவுக்கு இது தெரிய வேணாம். நீயும் நானும் பெத்த புள்ளைங்க. டாக்டர்ஸ். நாம முடிவு பண்ணி அப்பாவை இதுக்கு மேல கஷ்டப்பட விடாம அமைதியா நிரந்தரமாத் தூங்க வச்சிடுவோம்.”

”அம்மா கேட்டா..?”

”அப்பா உசுரு தானாப் பிரிஞ்சிடுத்துன்னு சொல்ல வேண்டியதுதான். வேறே வழியில்லை.”

அதைக் கேட்டுத் துணுக்குற்று நான் உள்ளே நுழைந்தேன். ஆத்திரமும் கோபமுமாக அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.

”என்னண்ணா இது..?”

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, பின் என்னை ஏறிட்டனர்.

”எல்லாத்தையும் நீ கேட்டுண்டுஇருந்தியா.?”

”பெத்த பிள்ளைங்க பேசற பேச்சா இது..?”

”பெத்த பிள்ளைங்களா இருக்கவேதாம்மா பேசறோம்..” -இது பெரியண்ணா.

”டாக்டரா இருக்குற நீங்க இப்படி நினைக்கலாமா?”

”டாக்டரா இருக்குறதாலதாம்மா நினைக்கிறோம்!”

வெறுப்பும் கோபமுமாக அவர்களை ஏறிட்ட என் பார்வைக்கு பதில் சின்னண்ணாவிடமிருந்து வந்தது. ”இதப் பாரு சகுந்தலா. அம்மாவுக்குப் புரியாது. ஆனா, நீ இதைக் கட்டாயம் புரிஞ்சுக்கணும்!”

”எதைப் புரிஞ்சுக்கணும்? நீங்க செய்யப் போறதாப் பேசின விஷயத்தையா, இல்லை அது நியாயம்னு சொல்ல வர்றீங்களே.. அதையா?”

”ரெண்டையுமேதான்!” சின்னண்ணன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். நான் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தேன். அவனே மேலே பேசினான்.

”கோமாங்குறது மெடிக்கல் சயன்சுக்கு ஆண்டவன் விடும் சவால்!”

இப்போது பெரியண்ணன் தொடர்ந்தான். ”ஒரு கோமா பேஷன்ட்டுக்கு நினைவு திரும்புறதுங்கிறது பெரிய மிரகிள். சாதாரணமா அப்படி நடக்கறதில்லை. அப்படி நடந்துட்டா அதுக்குப் பேரு மிரகிள் இல்லை.

”அண்ணா, நீ இப்ப என்ன சொல்ல வர்றே..?”

”அப்பாவோட இந்த ஸ்டேஜ் ஒரு பெரிய ஹிம்ஸைம்மா. படுத்துண்டிருக்கிறவருக்கும் சரி, பார்த்துண்டிருக்கிறவங்களுக்கும் சரி.. வருஷக்கணக்குல படுக்கைல நினைவு நீச்சில்லாமக் கிடக்குறதுங்குகிறது எப்படிப்பட்ட சித்ரவதை தெரியுமா? மலம் வாரிக் கொட்டணும். நாத்தமில்லாம உடம்பைத் துடைச்சு விடணும். அடிக்கடி புரட்டிப் படுக்க வைக்கணும்…”

நான் கவலை கலந்த பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.

”அப்படியே எவ்வளவுதான் சுத்தமா வச்சிண்டாலும் அப்பாவைப் படுக்க வச்சிருக்கிற ரூம் மட்டுமில்ல, வீடே நாத்தமடிச்சுப் போயிடும்.. எங்களால இதெல்லாம் முடியாது. நானும் சிவாவும் காலை ஏழு மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு ஓடியாகணும். உன்னுடைய மன்னிமார்களைப் பத்தி உனக்கே நன்னாத் தெரியும். மாமனாரை கவனிக்கச் சொல்லி அவங்ககிட்ட நாங்க சொல்லவா முடியும்..?”

”இல்லண்ணா… ஏதாவது ஆளோ நர்ஸோ போட்டு…” நான் முடிப்பதற்குள் குறுக்கிட்டான் சின்னண்ணா. ”போடலாம். ஆனா, அப்பாவோட பாரியான உடம்பைத் தூக்கவே ரெண்டாள் வேணும். துடைச்சு, வேஷ்டி, சட்டை மாத்திப் படுக்க வச்சு… அதெல்லாம் ரொம்பக் கஷ்டம் சகுந்தலா. அவர் வேஷ்டியை எப்ப நனைச்சிப்பாரு.. அசிங்கப்படுத்திக்குவாருன்னு யாருக்குத் தெரியும்..?

தவிர, அப்பாவைப் பார்த்து அம்மா அழுதுண்டே இருப்பா. அதைப் பார்த்துக் குழந்தைங்க பயப்படும். எல்லாத்துக்கும் மேல அப்பாவுக்கே இது நரக ஹிம்ஸை!”

”நீங்க சொல்றதெல்லாம் சரிதாண்ணா.. ஆனாலும், பெத்த அப்பாவை அந்த மாதிரி..”

”பெத்த அப்பாவானாலும் அவர் இப்போ உணர்ச்சி இல்லாத பிணம்தான்!”

சுரீரென்று தைக்கிற மாதிரி சொன்னான் சின்னண்ணா.

”டாக்டர்களான எங்களுக்கே முடியலை. இவ்வளவு தூரம் நீ ஃபீல் பண்ணினா அப்பாவை உன் வீட்ல வச்சுப் பார்த்துக்கிறதாச் சொன்னா எங்களுக்கு ஆட்சேபனை இல்லை..”

இந்தக் கடைசி அஸ்திரம் என்மீது பாய்ந்துவிட்டது. இது பிரம்மாஸ்திரம். என் சகல இயலாமைகளும் புரிந்து எய்யப்பட்ட அஸ்திரம். வீழ்வதைத் தவிர வேறு வழியில்லை.

”உங்களாலேயே முடியலைனா என்னால் எப்படிண்ணா முடியும்? அவரைப் பத்தி, என் மாமனார், மாமியார் பத்தித் தெரிஞ்சும்..”

”அப்ப பேசாம நாங்க சொல்றதைக் கேளு. இங்கே நடந்ததை அம்மாகிட்ட சொல்லாத! மத்ததை நாங்க பார்த்துக்கறோம்!”

அடி வயிற்றை சங்கடம் கவ்வத் தலையாட்டினேன்.

”நாங்க போய் ஆக வேண்டியதை கவனிக்கிறோம்” என்று அவர்கள் நகர்ந்து போனார்கள். நான் உறைந்துபோய் நின்றிருந்தேன்.

எவ்வளவு சுலபமாக சொல்லி விட்டுப் போகிறார்கள்.. நிதர்சனமாக இருந்தால்கூட..

பெற்ற அப்பா.. மார் மீதும் தோள் மீதும் போட்டு வளர்த்தவர். பெற்ற நாளிலிருந்து படுக்கையில் விழுந்த அந்த நிமிடம்வரை தங்களுக்காகவே வாழ்ந்தவர்..

”என்ன ராஜம், மணி பதினொன்னாகப் போறது. இன்னும் சங்கரன் ஆஸ்பத்திரியிலருந்து வரலை..?”
”ஏதாவது ஸீரியஸ் கேஸ் வந்திருக்கும். அவன் வருவான். நீங்க படுத்துக்கோங்கன்னா..”

ஆனாலும் சின்னண்ணாவின் கார் வந்து அவன் காரிலிருந்து இறங்குகிற வரை அப்பா தூங்கினதில்லை.

”என்ன ராஜம் வாழைப்பூ துவட்டலா, பருப்பு உசிலியா..?”

”துவட்டல்தான் பண்ணலாம்னு இருக்கேன்.”

”வேணாம் ராஜம். பருப்பு உசிலியே பண்ணிடு. சிவா சாதத்துல போட்டுப் பிசைஞ்சு சாப்பிடுவான்.”
அவரையா..? எப்படி..?

இந்த உலகுக்கு வந்ததெல்லாம் போக வேண்டியதுதான்.

அதற்காக..? தானாய்ப் போக வேண்டியதைத் தடியால் அடித்தா போக வைப்பது..? இது கையலாகாததனத்தின் உச்சமா? விஞ்ஞான உலகின் சாதனையா?

விந்துவைச் சேகரித்து வங்கியில் வைத்து செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கிற காலம் வந்துவிட்ட பின் இதுவும் வரத்தான் செய்யும். வருவதை நிறுத்த முடியாது. போவதைப் பிடித்து வைக்கவும் முடியாது. வரும், போகும். இதுதான் வாழ்க்கை. கோடானு கோடி மக்களில் அதைப் புரிந்து கொள்பவர்கள் மிகச் சிலரே. அவர்களில் சின்னண்ணாவும் பெரியண்ணாவும்.. ஏன், நானும்கூடத்தான் அடக்கம்.

”ஐயோ.. என்னை விட்டுப் போய்ட்டேளேன்னா…” அம்மாவின் கதறலில் சுய உணர்வு பெற்று எழுந்து ஓடியபோது எல்லாம் முடிந்து போயிருந்தது.

அடுத்த சில மணி நேரங்களில் அப்பாவின் சடலம் வீட்டில் கொண்டு வந்து இறக்கப்பட்டபோது வீடு முழுதும் ஜனங்கள்.

”ஐயிரு அப்படியே தூங்குற மாதிரியே இருக்காரில்ல..?”

”ரொம்ப நல்ல மனுசன்…”

”மஞ்சளும் குங்குமுமா அந்தம்மா மகாலட்சுமி மாதிரி இருப்பாங்க..”

பகீரென்றது எனக்கு.

மெள்ள அம்மாவை ஏறிட்டேன். கண்ணாடிப் பெட்டியருகில் உட்கார்ந்து உறவினர்களிடம் சொல்லிச் சொல்லிக் கதறிக் கொண்டிருந்தாள்.

”இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமேன்னா… பசங்க மேல உசிரையே வெச்சிருந்தேளே… ராஜம் ராஜம்னு என்னைச் சுத்தி சுத்தி வருவேளே… இனிமே எனக்கு யாரு இருக்கா? என்னை விட்டுட்டுப் போக எப்படின்னா மனசு வந்தது..? ஆஸ்பத்திரியில இருந்தது மாதிரி அப்படியே இருந்திருந்தாக்கூடக் காலமெல்லாம் வச்சு நான் செய்திருப்பேனே… நீங்க இருக்கேள்ங்கிற திருப்தி இருந்திருக்குமே..”

அம்மாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் மனசில் ஈட்டிகளாகப் பாய, தலை உயர்த்தி அண்ணன்களைப் பார்த்தேன்.அவர்கள், ஏதோ மிக முக்கியமான காரியத்தை கவனிக்கப் போகிற பாவனையில் மெள்ள அந்த வரவேற்பறையை விட்டு வாசலுக்கு நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

– ஜனவரி 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *