பாலாமணி அக்காவை நினைத்துக்கொண்டு தாயம் விளையாடியபோது, அவளே வாசலில் வந்து நின்றது ஆச்சர்யமாக இருந்தது. அக்கா ளின் பிள்ளைகளும் வந்திருந்தனர். தாயக்கட்டைகளை வைத்துவிட்டு, பாலா அக்கா என்று கட்டிப்பிடித்துக்கொண்டேன். அக்காவின் மேல் அதே வாசனை. பரீட்சை அட்டையின் பின்னால் கட்டம் வரைந்து தாயம் விளையாடுவதை, அவள்தான் எங்களுக்குச் சொல்லித் தந்தது. விளையாட்டைப் பாதியிலேயே விட்டுவிட்டு, துண்டு வளையல்களையும் புளியங்கொட்டைகளையும் எடுத்து வைத்துவிட்டோம். இனி எதற்கு விளையாட்டு? பாலா அக்கா வந்த பிறகு விளையாட முடியுமா? பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்தாலே போதுமே.
பாலா அக்காவின் திருமணத்தின்போது இருந்த தலைமுடியில் பாதி இப்போது உதிர்ந்துவிட்டது. அக்காளிடம்தான் சீவிக்கொள்ளப் பழக வேண்டும். சீப்பு தலையில் அழுத்துவதே தெரியாது. அவள் எங்களுக்குச் சீவி அழகு பார்த்ததை மறக்க முடியாது. இப்போதோ, பிள்ளைகளை யாருக்கோ வந்த விதி என்று, நோக்காடு கண்டு அழைத்து வந்திருக்கிறதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருந்தது. தலையில் எண்ணெய் வைக்காமல், ரிப்பன் கட்டாமல், அள்ளிப்பிடித்து இறுக்கி, சின்ன கொண்டை போட்டு, ரப்பர் பேண்டைக் கட்டிவிட்டு, அழைத்து வந்திருக்கிறாள். எங்களுக்குக் கோபம்தான். அக்காளின் முகத்தைப் பார்த்தால் யாருக்குக் கோபம் வரும்?
அக்கா வந்தது தெரிந்ததும், வீட்டில் எல்லாமே மாறிவிட்டது. இதே ஊரில் சந்தைப்பேட்டைத் தெருவில்தான் பாலாவைத் திருமணம் செய்து தந்தது. எங்கள் வீட்டிலிருந்து மெயின் பஜாருக்குப் போக ஒரு குறுக்குச் சந்து, அப்புறம் மெயின் பஜார், பக்கத்திலேயே சந்தைப் பேட்டைத் தெரு. நேற்றுகூட அக்காவை, தொட்ராயன் கோயிலுக்கு அழைத்துப் போகலாம் எனப் பேசிவைத்திருந்தோம். அக்காவின் திருமணத்துக்கு முன்பு வாரா வாரம் கோயிலுக்குப் போவோம். கோயிலுக்குக் கிளம்பினால்,அக்காளுடன் பத்து பேராவது நடந்து வரத் தயாராக இருப்பார்கள். ”ஊரையே கூட்டிட்டுல்ல நீ போவே” என்று திட்டுவாள் அம்மா.
எங்கள் வீட்டில் எனக்குத் தள்ளிவைத்து தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போதுதான், சேகர் மாமாவை நேருக்கு நேராகப் பார்த்தேன். மாமாவுக்கு அக்காவைவிட அழகான கண்கள். அக்காவுக்குப் பற்கள் அழகு என்றால், மாமாவுக்கு கண்கள். ”மாமா கண்ணுக்கு என்ன சோப்புப் போட்டுக் குளிக்கிறீங்க?” என்று கேலி செய்தேன். பாலா அக்கா சிரித்து விட்டாள். அக்கா சிரிக்கும்போது பற்களைப் பார்க்க வேண்டுமே.அவள் இப்போதெல்லாம் சிரிப்பதே இல்லை.
பாலாமணி அக்கா பிள்ளைகளை என்னிடம் விட்டுவிட்டு, அம்மா வுடன் சமையலறைக்குப் போய்விட்டாள். அக்கா வந்தது நைனாவுக்கு எப்படித்தான் தெரியுமோ. பட்டறையிலிருந்து வந்தவர், பிள்ளைகளுக்குப் பொரி உருண்டையும் கடலை மிட்டாயும், அக்காவுக்கு அன்னகாமு கடை அதிரசமும் கையோடு வாங்கி வந்தார்.
என்னைவிட பாலாவின் மேல் அப்பாவுக்குப் பிரியம். ”பெரிய பிள்ளை, பெரிய பிள்ளை என்று செல்லம் தந்தது போதும். போற வீட்டுல பிள்ளை வளர்த்த லட்சணம் பாருன்னு என்னோட தலை உருளப் போவுது” என்பாள் அம்மா. அக்காவும் ‘நைனா நைனா’ என்று பிரியமாக இருந்தாள். பொரி உருண்டைகளை மூத்தவளும் சின்னவளும் கையில் வைத்துக்கொண்டு, பாலாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ”பிள்ளைகளைத் திங்கச் சொல்லுடி” என்று அம்மா அதட்டினாள். பாலா ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாள் எனத் தெரியவில்லை. அப்பாவைப் பார்த்ததும், தரையில் உட்கார்ந்தவள் எழுந்துகொள்ளவே இல்லை. அவள் அழாமல் இருக்க வேண்டும் என்று சாமியிடம் வேண்டினேன். ‘பாலா அக்காவை அழாமப் பார்த்துக்க சாமி’ என்று முனகிக்கொண்டே இருந்தேன்.
பாலா அக்கா அழத் தொடங்கிவிட்டாள். அவளின் அப்பாவும் அம்மாவும் உட்கார்ந்துகொண்டார்கள். அக்காவின் கால்களில் கொலுசு இல்லை. உருட்டு மெட்டி மட்டும்தான் இருந்தது. கல்யாணத்தன்று விரல்களில் புது உருட்டு மெட்டியும், ஜால்ரா கொலுசும் போட்டிருந்தாள். நான்கு வருடங்களில், அக்காவின் உடலைப் போல உருட்டு மெட்டி, கம்பி மெட்டியாகத் தேய்ந்து போனது. அப்பாவும் அம்மாவும் ”அழாதே அழாதே” என்று சமாதானம் செய்தார்கள். நைனா கோபமாக, ”என்னன்னு சொல்லவும் மாட்டேங்கிற. அழுகையையும் நிறுத்த மாட்டேங்கிற. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்து இப்படித்தான் அழுதுட்டு சாப்பிடாம, நீ பாட்டுக்குப் போயிட்டே, சொல்லு என்னன்னு” என்று திட்டினார். அம்மா அதிரசத்தை எடுத்துப் பிள்ளைகளுக்குத் தந்தாள். யாரும் வாங்கிக்கொள்ளவே இல்லை. மூத்தவள் அம்மா அழுவதையே பார்த்துக்கொண்டு இருந் தாள். இன்னமும் கொஞ்ச நேரத்தில் சின்னவள் அழுதேவிடுவாள்.
அப்பாவைத் தேடிப் பட்டறையிலிருந்து இரண்டு தடவை ஆட்கள் வந்துவிட்டார்கள். அப்பா, ”வந்தா அவதி அவதியா வரும். இல்லைன்னா சுத்தமா தொடச்சது மாதிரி இருக்கும்” என்று கோபமாகச் சொன்னார். ஊரில் நகைக் கடைகள் வரத் தொடங்கியதும், நகைப் பட் டறை வேலைகள் குறைந்துவிட்டன. நகைக்கடைக்காரர்கள்கடனுக்கு ரெடிமேட் உருப்படிகளைத் தருகிறார்கள். எங்கெங்கிருந்தோ ஆட்கள் ரெடிமேட் உருப்படியோடு வருகிறார்கள் என்று தலையில் அடித்துக்கொண்டு அழாத குறையாகச் சொன்னார்.
சேகர் மாமாவுக்கும் வேலை மந்தம். வழக்கம் போல உருப் படி வேலைகள் தரும் கடைக்காரர்கள் வேலையை நிறுத்தி விட்டார்கள். அவர்களுக்கு ரெடிமேட் உருப்படிகள் வெளி யூர்களிலிருந்து கடனுக்குப் போட்டுவிட்டுப் போகிறார்கள். மேல் வலிக்காமல் உட்கார்ந்த இடத்தில் பேசிக்கொண்டே சம்பாதிக்கிறார்கள். முதலீடு என்று எதுவும் போட்டு கடை வைப்பதில்லை. கடனுக்கு வாங்கி, கடனுக்குத் தந்து, கடனுக்கு வாழும் கடங்காரப் பயல் வாழ்க்கை. அம்மாவுக்கு எல்லாம் தெரியும்.
புதிதாகக் கடை வைத்தவர்கள் வேலை வேண்டுமென்றால் ரூ.25,000 முன் பணமாக ‘டெபாசிட்’ கட்டச் சொன்னார்கள். கடைக்காரனின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, பாலா அக்காவின் நகைகளை சேகர் மாமா அடகு வைத்துவிட்டார்.
பாலா அக்காவின் நகைகள் அழகானவை. காதுக்கும், மூக்குக்கும், கழுத்துக்குமாக பார்த்துப் பார்த்துச் செய்தது. நைனாவின் ஆசையும், சம்பாதிக்கப் பட்ட கஷ்டமும் அவள் போட்டிருந்த நகைகளில் தெரியும். அப்பா தன் வீட்டுக்கு என்று செய்யும் நகைக்குத் தனி அழகு வந்துவிடும். சேகர் மாமா நகைகளை அடகு வைத்துவிட்டு ‘வேலை தருவான்’ என்று மாதக்கணக்கில் காத்திருந்தார். வரும் ரிப்பேர் வேலை யில் குடும்பத்தையும் பிள்ளைகளையும் சரிக் கட்டமுடிய வில்லை. வேறு இடத்தில் வட்டிக்குக் கடன் வாங்கி, வருகிற வேலைகளில் வட்டிக்குக் கட்ட, அரிசிப் பருப்பு வாங்கிப்போட என்று வருடம் போனது. டெபாசிட் வாங்கிய கடைக்காரன் உருப்படி வேலைகள் தராமல் ரிப்பேர் வேலைகளையும், அதிலும் வெள்ளிக் கொலுசு பத்தவைப்புக்கு ஆள் அனுப் பினான். தலையெழுத்தை என்ன செய்ய முடியும்.
பாலா அக்கா ஒன்றும் சொல்லவில்லை. அழுது முடித்து விட்டாள். அம்மாதான் எல்லாம் சொல்லித் தீர்த்தது. அப்பாவுக்குக் கோபம். பட்டறைக்காரர்களையும், சங்கத்துப் பெரியவர்களையும் அழைத்துக்கொண்டு போய் கடைக்காரரிடம் பேசியபோது நிமிர்ந்துகொண்டான். ரிப்பேர் வேலை தருவதே பெரிய விஷயம் என்று திமிராகப் பேசினான். எல்லோரும் சேர்ந்து சேகர் மாமாவுக்காகப் பேசியதும், மாதம் இவ்வளவு பணம் என்று தந்துவிடுகிறேன் என்று சமாதானம் சொன்னான். அடப்பாவி, மொத்தமாக வாங்கிய பணத்தைச் சில்லறை சில்லறையாகத் தந்தால் நகையை எப்படி மீட்பது?
பாலா அக்காவுக்கு நகைகளை மீட்க முடியவில்லை என்ற இயலாமை மனதில் கொடி போலச் சுற்றத் தொடங்கியது. விஷக் கொடி. அக்கா, மாமாவோடு எதற்கெடுத்தாலும் சண்டை போட்டாள். சண்டை இல்லாத நாட்களே இல்லை என்று பக்கத்து வீட்டுக்காரர்களின் அவச் சொல் அம்மாவை சந்தேகம்கொள்ளச் செய்தது. நம்ம பாலாவா சண்டை போடுறா. நம்ம பாலாவா எதிர்த்துப் பேசுறா. அவளின் சந் தேகம் நியாயம்தான். பாலா அக்கா பூவைப் போல அழகு. குணமும் அப்படியே. கையில் வைத்திருப்பவர்கள் யாரென்று தெரிந்துகொண்டா பூ வாசம் தருகிறது. யாரென்று தெரிந்து கொண்டா அழகாக மலர்கிறது.
சேகர் மாமா தனியாக வீட்டுக்கு வந்தார். நைனா பட்டறையிலிருந்து காபி, பலகாரத்தோடு வந்துவிட்டார். மாமாவும் நைனாவும் நேருக்கு நேராகப் பேசிக் கொண்டதே இல்லை. நைனா காலண்டரைப் பார்த்துப் பேசுவார். மாமா, தாத்தா போட்டோவைப் பார்த்துப் பேசுவார். கல்யாணமான புதிதில் இப்படிப் பேசுவதைப் பார்த்து, அக்காவிடம் கேலி செய்தேன். பாலா அக்கா, மாமாவிடம் இதைச் சொல்ல, அவர் எனது கையைப் பிடித்துக்கொண்டார். அப்போது பாவாடை சட்டை போட்டிருந்தேன். ”உங்க அக்காகிட்டே சொல்லு. உன்னையும் கல்யாணம் பண்ணிக்கிறேன். பண்ணிக்கிட்டு உங்க அப்பாகிட்டே பக்கத்திலே உட்கார்ந்து நேருக்கு நேராப் பேசுறேன்” என்றார். வெட்கப்பட்டு கையை அவரிடமிருந்து இழுத்துக்கொண்டு ஓடியே போய்விட்டேன்.
மாமாவுக்கு அப்போதிருந்த கேலியும் கிண்டலும் எப்போதிருந்து காணாமல் போய்விட்டது என்று தெரியவில்லை. வீட்டுக்கு வரும்போதெல்லாம் கன் னத்தில் தாடி முளைத்தபடி, கண்கள் குழிவிழுந்து சத்தமே இல்லாமல் பேசுகிறார்.
மாமா எப்போதும் வீட்டுக்கு வரும்போது, வெள்ளை வேட்டியும் நல்ல கலர் சட்டையும் போட்டு வருவார். அவர் செருப்பே அழகாக இருக்கும். பளிச்சென்று எங்கிருந்தாலும், மாமா இருக்கிறார் என்பது போல அடையாளம். அந்த அழகான செருப்பெல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. ஏன் இப்படி அழுக் கான கைலி வேட்டியும், கக்கத்தில் கிழிந்த சட்டையுமாக வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. காபியும் பல காரமும் அப்படியே இருக்கிறது. மாமா தனக்கு வேண் டாம் என்று மறுத்துவிட்டார். செம்பு நிறையதண்ணீர் வாங்கிக் குடித்தார். வீட்டில் எல்லோரும் அமைதியாக இருப்பது எதற்கென்றே தெரியவில்லை. அக்காவின் கோபத்தைத்தான் மாமா சொல்லி சங்கடப்பட்டார். சம்பாதிக்காமல் விட மாட்டேன் என்கிற வைராக்கியம் அவரது கண்களில் தெரிந்தது.
சேகர் மாமாவைச் சமாதானம் செய்து, வீட்டுக்கு அனுப்பினார் அப்பா. மூன்று நாட்களாக பாலா வீட்டில் சமையல் செய்யவில்லை என்று சேகர் மாமா சொல்லியபோது அம்மா அழுதே விட்டாள். வீட்டில் யாருக்குமே இல்லாதகோபம், பாலாவுக்கு எப்படி வந்தது. அவளுக்கு கோபப்படவே தெரியாதே. முன்னால் நிற்பவர்கள் மனம் கஷ்டப்படக் கூடாது என்று சிரித்துப் பேசுபவள். பாலா அக்காவின் கோபத்தை யாரும் நம்பவில்லை. சேகர் மாமா என் றைக்கு எங்களிடம் பொய் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகு மாமா வீட்டுக்கு வரவே இல்லை. அவர் கோயமுத்தூருக்கு யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாகக் கட்டிய வேட்டியோடும் சட்டையோடும் வேலைக்குப் போய்விட்டார்.
பாலா அக்காவின் பிள்ளைகள் அழுகின்றன. மூத்தவள் ‘நைனா நைனா’ என்று கதறுகிறாள். சின்னவளுக்கு இன்னமும் விவரம் தெரியவில்லை. அம்மாவின் மடியிலும் பாட்டியின் மடியிலும் உட்கார்ந்திருக்கிறாள். மூத்தவளை வாயை மூடு அழாதே, அழாதே என்று பாலா அக்கா கோபமாக அடிக்கிறார். அம்மாவும் நானும் பாலாவின் கோபத்தை நேராகவே பார்த்துவிட்டோம். அப்பா அவளைச் சமாதானம் செய்தும் முடியவில்லை. மூத்தவளையும் சின்னவளையும் வேறு எங்காவது வைத்திருக்கலாம் என்று யோசனை செய்தபோது, அக்கா பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ”செத்தாலும் என்கூடதான் இருக்கணும்… பொழைச்சாலும் என்கூடதான் இருக்கணும்” என்று பிள்ளைகளை இழுத்து தன் அருகே வைத்துக்கொண்டாள். எவ்வளவு அடித்தாலும், திட்டினாலும், பிள்ளைகள் அம்மாவிடமே ஒட்டிக்கொள்கின்றன. சேகர் மாமாவின் குணம் அப்ப டியே பிள்ளைகளுக்கும் இருக்கிறது.
சேகர் மாமாவைச் சமாதானம் செய்து அழைத்து வரலாம் என கோவைக்குச் சென்றார்கள். மாமாவின் வைராக்கியம் யாருக்கும் தெரியாது போல. வர மாட்டார் என்று நினைத்தது போலவேதான் நடந்தது. சம்பாதிக்காமல் விட மாட்டேன் என்று சொன்ன அவரது கண்களை பாலா அக்கா பார்க்கவில்லை. பார்த்திருந்தால், மாமாவை ‘நீயெல்லாம் ஆம்பளையா’ என்று கோபத்தில் கேட்டிருக்க மாட்டாள். அப்படிக் கேட்டதால்தானே மாமா ஊருக்குப் போனார்.
சேகர் மாமா ஊருக்குத் திரும்ப மாட்டார் என்று தெரிந்ததும், பாலா அக்கா என்ன நினைத்தாளோ, எந்தக் கடைக்காரனிடம் என்ன மருந்து வாங்கினாளோ, எப்படி வைத்து, எங்கு குடித்தாளோ, பள்ளிக்கூடம் விட்டு வரும்போது வாயில் நுரை தள்ளி தரையில் கிடந்தாள்.
பெரிய ஆஸ்பத்திரியில் போட்டார்கள். வாந்தி எடுக்கச் சொல்லி டாக்டரும் நர்ஸூம் அக்காவைத் திட்டினார்கள். அக்கா வாந்தியே எடுக்கவில்லை. பற்களைக் கடித்துக்கொண்டு வாய் மூடிப் படுத்திருந்தாள். அவளைப் பார்த்தபோது, நிச்சயமாகப் பிழைத்து வந்து எங்களுடன் உட்கார்ந்து தாயம் விளையாடுவாள். கோயிலுக்குப் போவோம் என்று நினைத்து சாமியிடம் வேண்டினேன்.
”சாமீ! அக்கா சாகக் கூடாது. சாமீ! அக்காவைக் காப்பாத்து!” என்று கண்ணீரோடு அவள் படுத்திருந்த கட்டிலின் அருகே நின்றிருந்தேன். அக்காவைப் பார்ப்பதற்கு எல்லோரும் வந்துவிட்டார்கள்.
பாலா அக்கா, அப்பாவை அழைத்தாள். அப்பா அவளருகே சென்றார். ”நீங்க ஆசையாப் போட்ட நகையை எங்களால காப்பாத்த முடியலப்பா” என்றாள்.
”ஏ கழுதை! நகை போனா போகுது மகளே” என்று திட்டினார் அப்பா.
பாலா அக்கா சன்னமான குரலில், ”எங்களால காப்பாத்த முடியலையப்பா” என்று சொன்னாள். அவள் எதைச் சொன்னாள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்காகச் சொன்னாள் என்றும் தெரியவில்லை. பாலாமணி அக்காவின் கதை முடிந்துவிட்டது!
– 10th டிசம்பர் 2008