டாக்டர் மாதவன் காரை நிறுத்திவிட்டு, வந்து தன் வீட்டின் காலிங் பெல்லை அடித்த போது காலை ஒன்பது நாற்பது. பசி வயிற்றை கிள்ளுகிறது. உடல் முழுக்க அப்படியொரு வலி. நைட் டியூட்டியை முடித்துவிட்டு வருகிறார். இரவு முழுக்க தூக்கமில்லை. ஏழெட்டு ஆக்ஸிடெண்ட் கேஸ்கள். அதில் மூன்று டெத். சில ஆண்டுகளாகவே தினசரி ஆக்ஸிடெண்ட் மரணங்கள் ஒன்றிரண்டை தாண்டும் என்பது சராசரி நிகழ்வாக போய்விட்டது. கிளம்பும் போது வருத்தமுடன் டெத் சர்டிஃபிகெட்களில் கையெழுத்திட்டு விட்டு கிளம்பினார். எல்லாமே அவருடைய பிள்ளை ராகவ் வயசு பிள்ளைகள்தான். ரெண்டு மூணு வயசு குறைவாகவே இருக்கலாம். உச்சியில் புதர் போல முடி வளர்த்து, கீழே மூன்று பக்கங்களிலும் முழுமையாக சிரைத்துவிட்ட ஹை ஃபேட் கிராப் தலை இளைஞர்கள். பல்ஸர் வண்டிகளில் இந்த அடர்த்தியான வாகன நெரிசல்களில் சர் சர்ரென்று நூற்றி இருபதில் பறந்து முட்டி மோதி செத்து, சாகடித்து, குடும்பத்தார்களின் இரங்கல் சடங்குகளுடன் மடிந்து போகும் அப்பாவி சாகஸ இளைஞர்கள். வீட்டு வேலைக்காரி தனம் வந்து கதவைத் திறந்தாள். சோர்வாக நுழைந்தார். நுழையும் போதே ஏங்க…ஏங்க… என்று அழுதுக் கொண்டே அவர் மனைவி துர்கா ஓடி வருகிறாள். கண்டதுக்கெல்லாம் டென்ஷனாகி அழும் மனுஷி அவள். ஆசிரியை.
“ எ…என்னம்மா! என்னாச்சி?.”
“ஐயோ! என்னான்னு சொல்லுவேன்?. அமெரிக்காவில நம்ம ராகவ் சீரியஸா கிடக்கிறானாங்க. ராத்திரியிலிருந்து பேதியாம். தண்ணி தண்ணியா போவுதாம், பத்து பதினைஞ்சி தடவைக்கு மேல போயிட்டு, பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறானாம்.”
“ யா..யார்…யார் சொன்னா?.”
“யாரோ குமரன்னு ஒருத்தன் போன் பண்ணி சொன்னான்.” ——-சொல்லிவிட்டு துடிக்கிறாள். அந்த செய்தி கூர்மையாக அவரைத் தாக்கி விட்டது. அக்யூட் ஸ்டேஜில் பேதி என்பது எவ்வளவு வலிமையான உயிர்க் கொல்லி என்பதை நன்கறிந்தவர். மருத்துவத்தில் பாலபாடம் அது.
அதிர்ந்து நிற்கும் இந்த டாக்டருக்கும், அழும் ஆசிரியைக்கும் பிறந்த ஒரே பிள்ளைதான் ராகவ் என்கிற ராகவன். பிரபலமான கல்லூரியில் பி.டெக் முடித்து விட்டு இவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் லாஸ் ஏஞ்சல்ஸில் எஸ்.ப்ரோ. கம்பெனியில் மூன்று வருட காண்ட்ராக்டில் பணிபுரிய சரியாக நாலு நாட்களுக்கு முன்னால்தான் போய் ஜாய்ன் பண்ணியிருக்கிறான். ஏர்போர்ட் போய் வழியனுப்பி வைத்துவிட்டு அழுத அந்த நினைவுகள் இன்னும் அவர்கள் மனசில் முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது. டாட்!, மம்மீ! ஜஸ்ட் மூணே மூணு வருஷம்தான்னு சொல்லி சிரிச்சிட்டு டாட்டா காண்பிச்சானே.. இப்போது துர்காவின் அழுகை சத்தம் கூடியது.
“ வாணா வாணான்னு இந்த பாவி எம்மா சொன்னேன்?. கேக்கலியே. ராகவா!.”——-பெருத்த குரலில் கதறுகிறாள். டாக்டர் மாதவனுக்கு மாலை மாலையாய் வியர்த்து கொட்டுகிறது. அவசரமாக செல்லில் ராகவ்வின் நெம்பரை தட்டினார். காத்திருந்தார். ரிங் போகிறது, ஆனால் யாரும் எடுக்கவில்லை. விட்டு விட்டு மூன்று தடவை ட்ரை பண்ணியும் நோ யூஸ். இப்போது அவர்களுக்கு பதட்டம் அதிகமாகிறது. துர்கா ஆயாசம் மேலிட கீழே சரிந்தாள்.. ஐந்தாவது தடவை ட்ரை பண்ண, ரொம்ப நேரம் கழித்து எடுத்தது யாரோ ஒரு வேற்று குரல்.
“நான் ராகவ்வோட ஃப்ரண்ட் அங்கிள், குமரன். கூட ஒர்க் பண்றேன். பக்கத்து ஃப்ளாட்லதான் இருக்கேன். இங்க ராகவ் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு அங்கிள். டையோரியா. தண்ணி தண்ணியா பீச்சியடிக்குது. நேத்து சாயந்திரத்தில இருந்தே இருந்திருக்கு, எங்கிட்ட கூட சொல்லல. இப்ப நினைவில்லாமதான் கிடக்கிறான்.என்ன பண்றதுன்னு தெரியல. பயமா இருக்கு அங்கிள். ஃப்ரண்ட் சுனிலை ஹெல்ப்புக்கு கூப்பிட்டிருக்கேன்.”—- ஆஸ் எ டாக்டர் அவருக்கு பையன் நிலைமையின் தீவிரம் புரிந்து விட்டது. டீஹைட்ரேஷன். இடையில் பதினாலாயிரம் கிலோமீட்டர் தூரம். குப்பென்று மார்பு அடைக்கிற மாதிரி இருந்தது. ஜிவ்வென்று காதோரங்களில் உஷ்ணமாய் உணர்ந்தார். மயக்கம் வரும் போலிருக்கிறது. ஒரே பிள்ளை. வேலைக்காரி தனமும், பொம்மியும் அவர் தள்ளாடுவதைப் பார்த்து அரக்க பரக்க ஓடி வந்து அவரை தாங்கி பிடித்து உட்கார வைத்தார்கள். துர்கா ஏங்க…ஏங்க என்று கத்துகிறாள். உஷ்! என்று எச்சரித்து விட்டு சுதாரித்துக் கொண்டு போனில் பேசுகிறார்.
“ ப்ளீஸ்.. குமரன்! ராகவ்வை எழுப்புபா, டாடி கூப்பிட்றார்னு சொல்லு. முகத்தில தண்ணி அடி. டேய்! ராகவ்..!ராகவ்!.”—உடல் அதிர கத்தினார். குரலில் நடுக்கம். நாலைந்து குரலுக்கப்புறம் ராகவ் மெதுவாக வாயைத் திறந்தான்.. பலவீனமான குரல்
“ டாட்! டாட்..! “— சொல்லிவிட்டு அழுகிறான் விசும்பும் சத்தம் கேட்கிறது..
“மயக்கமா இருக்கு. நிறைய பேதியாயிடுச்சி..”— அதுக்கு மேல என்ன கத்தியும் பதிலில்லை. குரல் அடங்கிவிட்டது. “ஏங்க…ஏங்க ராகவ்வை வந்துடச் சொல்லுங்க. வம்சத்துக்கு ஒத்த புள்ளை. ராகவா..ராகவா..! டாய் அம்மா சொல்றேன் வந்துடு” —–டாக்டர் மாதவன் மவுனமாக நிற்கிறார். இல்லை இல்லை நாம தைரியத்தை விடக்கூடாது. அவனுக்கு அது புது இடம். மனுஷாள் எதுவும் பழக்கமாகியிருக்காது. கூச்ச சுபாவம், உதவின்னு யார் கிட்டேயும் கேக்க மாட்டான். தனிமை பயம். நேரம் பார்த்தார். பத்தரை மணி. நமக்கும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் டைம் டிஃபரன்ஸ்— மைனஸ் பனிரெண்டரை மணி நேரம். ஸோ இப்ப அங்க ராத்திரி பத்து மணி . இவ்வளவையும் இரண்டு நிமிட யோசிப்பில் முடித்துக் கொண்டு நிமிர்ந்தார். ஒரு நொடி சுதாரித்தார். “ கண்ணே டேய்! ராகவ்…..! ராகவ்! தைரியத்தை வுட்ராதடா.. முதல்ல எலெக்ட்ரால் பவுடரை கலக்கிக் குடிச்சியான்னு சொல்லு?.”
“இ.ல்.லை.”
“ மடையனே! எதை செய்யணுமோ அதை செய்யாதே. ஃபூல்…ஃபூல்..! படிச்சிப் படிச்சி சொல்லியனுப்பினேனே. எதுக்கு மெடிசன் கிட்டுன்னு ஒரு பாக்ஸை தயார் பண்ணி கொடுத்தனுப்பினேன்? வயசான காலத்தில எங்களை ஏம்பா இப்படி கஷ்டப் படுத்தறே?.”—அவனிடமிருந்து பதில் இல்லை.
“தம்பீ! குமரன்!
“இருக்கேன் அங்கிள். ராகவ்வுக்கு நினைவு தப்பிடுச்சி அங்கிள்.”
“பயப்படாதப்பா இப்ப நீதாம்பா அவனுக்கு அம்மா அப்பா எல்லாம். கண்ணா!. சீக்கிரமா ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போயிடணும். ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணு.”
“ இல்லை அங்கிள். எங்க ரெண்டு பேருக்குமே மெடிகல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இல்லை. அதுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேலாகும். ஒரு மாசத்துக்கான ட்ராவல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்கு, பட் அது அகெய்ன்ஸ்ட் ஆக்ஸ்டெண்ட் இஞ்சுரி ஒன்லி. ”
“ஐயோ! அப்ப என் பையன் கதி?. இன்ஷூரன்ஸ் கவரேஜ் ஜாயின் பண்ணவுடனே கிடைச்சிடும்னு சொன்னானே.?.”—-அவருக்கு பயத்தில் பேச்சு குழறியது, தடுமாறினார். துர்கா தலை தலையென்று அடித்துக் கொண்டு அழுகிறாள்.
டாக்டர் மாதவனுக்கு அமெரிக்க மருத்துவ விதிமுறைகள் தெரியும். அந்த நாட்டில் ட்ரீட்மெண்ட்டுக்கு மெடிகல் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்திருக்கணும். அது இல்லையென்றால். எந்த ஆஸ்பிட்டலிலும், எந்த டாக்டரிடமும், ட்ரீட்மெண்ட் கிடைக்காது. எமெர்ஜென்சின்னு ஒரு வழி இருக்கு. பட் அதுக்குக் கூட ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டீஸ் இருக்கிறது. பத்து மடங்கு பணத்தை பிடுங்கிடுவாங்க. அப்படியும் அவசரத்துக்கு உதவாது. அதுக்கு ஒரு பெரிய க்யூ நிற்கும். அதற்குள் பட்டணம் பறி போய்விடுகிற சாத்தியம் இருக்கு. அமெரிக்காவும் நம்மைப் போல சுதந்திர நாடு என்பதால் ஏதாவது குறுக்கு வழிகூட இருக்கலாம். போய் நாலே நாளான இவர்களால் அதுவும் செய்ய முடியாது. இவர்களுக்கும் அங்கே உதவிக்கு ஒரு ஜீவன் கிடையாது. ஐயோ உன்னை எப்படிடா காப்பாத்தப் போறேன்?. எந்த அமெரிக்க டாக்டர்களும் அவனை காப்பாற்ற போவதில்லை என்ற நிதர்சனம், கையறு நிலையில் அவர். சூழ்நிலையின் பயங்கரம் உறைக்க, பீதியில் மவுனமாக அலறினார். அவரை துர்கா உலுக்க உலுக்க கொஞ்ச நேரம் அசையாமல் நிற்கிறார். நிதானமாக யோசித்தார். இனி அழுது கொண்டிருப்பதில் எவ்வித பலனுமில்லை. பதினாலாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஆபத்தான கட்டத்தில் கிடப்பவனை இங்கிருந்தே ட்ரீட் பண்ணமுடியுமா?, என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. இருக்கும் ஒரே வழி இது. கடவுளே எனக்கு மனவலிமையை குடு. நாலு வரிகள் கந்தசஷ்டி கவசத்தை மனமுருகி சொல்லிவிட்டு திடமாக எழுந்தார் குமரா! என்று சத்தம் போட்டு கத்தினார்.
“எஸ் அங்கிள்.”.”
“சீக்கிரமா நீ செல்லை ஆஃப் பண்ணிட்டு, ராகவ்வின் லேப்டாப்பை ஆன்பண்ணி ஸ்கைப்புக்கு வாப்பா ப்ளீஸ்.. க்விக்…சீக்கிரம்.. சீக்கிரம்ப்பா.. ஆச்சா… ஆச்சா?.” — விஷயம் புரிந்து துர்கா ஓடிப்போய் லேப்டாப்பை ஆன்பண்ணி அவரெதிரில் கொண்டு வந்து வைத்தாள். ரெண்டொரு நிமிடங்களிலேயே ஸ்கைப் ஓப்பன் ஆகிவிட்டது. எதிரே படுக்கையில் அவர்களுடைய எல்லா ஆசைகளுக்கும், சம்பாத்தியங்களுக்குமான, ஒரே வாரிசு, துன்பங்களுக்கும், சந்தோஷங்களுக்குமான, ஒரே வடிகால், ராகவ் கிழிந்த நாறாய் பேச்சு மூச்சின்றி கிடக்கிறான். அசைவில்லை. நாலு முறை கூப்பிட்டால் ஒரு தடவை உடம்பை முறுக்குகிறான். அத்தோட சரி. அவன் கோலத்தைப் பார்த்ததும் . கண்ணே என்று ஓடி அணைத்துக் கொள்ள மனசு பரபரக்கிறது. ஊஹும் அழக்கூடாது. ஒரே மகனின் நிலையை கண்ணால் பார்த்ததும் துர்காவின் பினாத்தல் அதிகமாகி விட்டது.. இப்போது மாதவன் ஸ்கைப்பில் பார்த்தபடி ஒவ்வொரு செயல் முறைகளாக குமரனிடம் சொல்லிக் கொண்டே வர..”
“எஸ் சொல்லுங்க அங்கிள்.”
“ க்ரீன் கலர்ல உள்ளே ஒரு அட்டைப் பெட்டி இருக்கும் பாரு அவனுடைய மெடிசன் பாக்ஸ், மேலே மெடிசன்னு எழுதியிருக்கும். அதில் எலெக்ட்ரால்-(ELECTROL)— பாக்கெட்டுகள் இருக்கும். அதில ரெண்டு பாக்கெட்டை பிரிச்சி ரெண்டு லிட்டர் தண்ணியில கலக்கிக் கொண்டா. க்விக்..க்விக். வேகம்..வேகம்…”—- அவன் தடதடவென்று உள்ளே ஓடினான். கடவுளே! வாந்தி வராம இருந்தால் காப்பாத்திடலாம். துர்கா பக்கத்திலிருந்தபடி ராகவ்!…ராகவ்..என்று கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறாள்.
“ஆச்சா…ஆச்சா…தம்பீ குமரா!… சீக்கிரம்ப்பா” ——- மீண்டும் கட்டிடமே அதிரும்படி கத்தினார். டீஹைட்ரேஷன் என்ற கான்செப்ட் அவரை அலைக்கழிக்கிறது. பேதிக்கு சிகிச்சை என்பது பெரிய விஷயமில்லைதான். ஆனால் சிகிச்சை பண்ண வழியே இல்லாத இடத்தில் அடுத்து டீ ஹைட்ரேஷன் மரணந்தான். ஐயோ! பிள்ளையை கைசோர விட்ருவேனோ? .
“ அங்கிள்! எலெக்ட்ரால் கலக்கி விட்டேன்.” “குட்! இப்ப அதிலிருந்து ரெண்டு டம்ளர் தண்ணியை அவனுக்கு குடிக்கக் கொடு. ஆச்சா… ஆச்சா…?”—வீறிட்டு கத்துகிறார். போச்சு லைன் கட் ஆயிடுச்சி. கணவனும், மனைவியும் தொடர்புக்கு மும்முரமாக போராடுகிறார்கள். ஊஹும். அவர் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார். துர்கா முடியாமல் முந்தானையால் முகத்தை பொத்திக் கொண்டு குலுங்குகிறாள். அவள் கதறுவதைப் பார்த்து விட்டு மாதவன் அவளை முறைக்கிறார். இப்போது ஸ்கைப் மீண்டும் ஓப்பன் ஆகியது.
“அங்கிள்!..அங்கிள்.…! ராகவ்வை ரெண்டுடம்ளர் குடிக்க வெச்சிட்டேன். பட் இன்னும் கண்ணை திறக்கல.”
“ தேங்க்யூ தம்பீ. சீக்கிரமா அவனை நிமிர்த்தி படுக்க வைப்பா. அப்படித்தான், நேராக குட். ராகவ்வின் கால்களை நீட்டி வை. கரெக்ட் அப்படித்தான். வெரி குட். குமரன்! நீ இப்ப ராகவ்வின் வயித்து தசையை கொத்தாய் பிடிச்சி இழுத்து விடு. லேப்டாப்பை கிட்ட கொண்டுபோ, அதை நான் பார்க்கணும்.” —–குமரன் சொன்ன மாதிரி செய்தான். அவள் பார்த்துக் கொண்டிருக்க இழுத்து விட்டதினால் குவிந்த ராகவ்வின் வயிற்று தசை நாலு செகண்டில் நார்மலுக்குப் போனது.
“ஓகே! குமரன் பயப்படாத. நான் பயந்த அளவு அவனுக்கு டீ ஹைட்ரேஷன் இல்லை. சமாளிச்சிடலாம். ஆனா அவன் அடிக்கடி எலெக்ட்ரால் தண்ணியை குடிச்சிக்கிட்டே இருக்கணும். சரியா?.”—- அந்நேரத்திற்கு ராகவ் சைகை காட்ட, மறுபடியும் குமரன் அவனை டாய்லெட்டுக்கு தாங்கி பிடித்துக் கொண்டு போனான். துர்கா அவரிடம்.
“ நிஜமா? பயமில்லையே?.”—- அவளை சற்று தூரமாய் இழுத்து வந்தார். பேசுவதற்கு முன் தன்னை தயார் படுத்திக் கொண்டார். கொட்டிவிடும் விளிம்பில் கண்ணீர்.
“ துர்கா! தைரியமாக இரு, அழாத. தெய்வத்தை வேண்டிக்குவோம். நம்ம பையன் சீரியஸ்ஸான கட்டத்தில் இரு.க்.கா.ன்.”— தாளாமல் ஓவென்று கத்தியவளை அடக்கினார். அவள் முந்தானையால் முகத்தைப் பொத்திக் கொண்டாள். அப்போது டாய்லெட்டிலிருந்து குமரன் தோளில் தொங்கியபடி வந்த ராகவ்வைப் பார்த்து
“ ராகவ்! வயித்த வலிக்குதாடா?.”— மெதுவாக ஆமாம் என்று தலையாட்டினான். “ இருக்கட்டும். ராகவ்! பயப்படாதேப்பா. அப்பா இருக்கேன்ல. நான் பார்த்துக்கறேன். சொல்லு வாந்தி வருதா?.”— இல்லையென்று தலையாட்டினான். கொஞ்ச நேரத்திற்கொரு முறை உஸ் என்று ஆயாசமாக கண்களை மூடிக் கொள்கிறான். அடிக்கொருதடவை வறண்ட உதடுகளை நாக்கால் வருடிக் கொண்டேயிருக்கிறான். “குமட்டல் இருக்கா?.” “இ.ல்.ல.” ‘குட். வயித்தில இரைச்சல் இருக்குதா?.” “ஆமாம் என்று தலையாட்டிவிட்டு குமரனை பிடிச்சிக்கிட்டு மறுபடியும் அவசரமாக டாய்லெட்டுக்குப் ஓடினான். காத்திருந்தார்கள். இப்ப பரவாயில்லையா என்று துர்கா அவரை துளைத்துக் கொண்டே இருந்தாள்.
“இன்னும் அதற்கான ட்ரீட்மெண்ட்டையே ஆரம்பிக்கல.. ”— கொஞ்ச நேரத்தில் குமரன் அவனை கைத்தாங்கலாக திரும்ப அழைத்து வந்து படுக்க வைத்தான். “ராகவ்! கண்ணே! இப்ப எப்படி போச்சி?.” —அதற்கு குமரன்தான் பதில் சொன்னான்.
“ கொஞ்சங்கூட நிக்கல, அப்படியேதான் இருக்கு. நானே பார்த்தேன் தண்ணி தண்ணியா அதிகமா போச்சி. ”
“ சரி..சரி… டோண்ட் ஒர்றி. குமரன் !சீக்கிரம் இப்ப மறுபடியும் ரெண்டு டம்ளர் எலெக்ட்ரால் குடு சீக்கிரம். ”சற்று நேரம் காத்திருந்தார். இவர் பார்க்க ராகவ் ரெண்டு டம்ளர் எலெக்ட்ரால் தண்ணியை குடிச்சி முடித்தான். “ ஓகே…ஓகே..குட். ராகவ்! ஜுரம் இருக்கா சொல்லு.” —ராகவ் ஈனஸ்தாயியில் “ நேத்துல இருந்து லேசா ஜுரம் அடிக்குது டாட்.” “குமரா! நீ தொட்டு பார்த்து சொல்லு.” “எஸ். லேசா இருக்கு.” “ஒகே! அப்ப பேதிக்குக் காரணம் இன்ஃபெக்ஷன் தான். ஏ.ஜி.இ, பேஸில்லரி. ஃபுட் பாய்ஸனிங்கா கூட இருக்கலாம்.
அடுத்த தடவை இருவரும் டாய்லெட்டிலிருந்து வெளியே வரும்போது மாதவன் கவனித்தார். ராகவ் தள்ளாடுகிறான். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கொடகொடவென வாந்தி எடுத்தான்.
“ டேய்! ராகவ்!!” —– வாந்தி எடுத்துவிட்டு ஒரு நிமிடம் நின்றான்.
“ஏங்க…அவனைப் பாருங்க. ஐயோ! என்னவோ மாதிரி பார்க்கிறானே.”—- துர்கா மாதவனை உலுக்குகிறாள். அவன் கண்கள் செருக தடாரென்று கீழே விழுந்தான். அவர் பதற, துர்கா அலறினாள். ராகவ்!…ராகவ்! குமரன் சிரமப்பட்டு அவனை தூக்கி படுக்க வைத்தான். மாதவனுக்கு கவலை எழுந்தது. அவர் பயந்தது நேர்ந்து விட்டது. வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டான். கடவுளே! இந்த கண்டீஷனில் ஐ.வி. ஃப்ளூயிட்ஸ் ஏத்தாமல் எப்படி காப்பாத்தப் போகிறோம்?. அவர் பரபரத்தார்.
“குமரன்! ப்ளீஸ் சீக்கிரம் மெடிசன் பாக்ஸை திற.” —–லேப் டாப்பில் காட்சிகள் விரிய எதிரில் அவன் பாக்ஸை திறந்தான். உள்ளே கொட்டி வைத்தாற்போல மாத்திரை அட்டைகள் கிடக்கின்றன. இதில நான் சொல்ற மருந்தை அவன் தேடி கண்டுபிடிக்கிறதுக்குள்ள.
“குமரன் கொஞ்சம் வெயிட் பண்ணு.”—எழுந்து காக்க காக்க சொல்லிக் கொண்டே ஓடினார். இரண்டிரண்டு படியாக தாவி மாடியேறி உள்ளே நுழைந்து ரெண்டு நிமிஷந்தான், அதே வேகத்தில் திரும்ப இரண்டிரண்டு படிகளாக இறங்கி ஓடி வந்தார். மூச்சு இரைக்கிறது. ஆயாசமாக இருக்கிறது. வியர்த்துக் கொட்டுகிறது. இப்படி ஓடி வந்த அவருக்கு வயசு ஐம்பத்தெட்டு. போதாக் குறைக்கு வறுத்தெடுக்கும் பிரஷரும், ஷுகரும். அவர் கையில் பல்வேறு மாத்திரை அட்டைகள்.
“குமரன்! இதோ பார். என்கையில் இருப்பது சைக்ளோபாம் டேப்லெட். வயித்து வலிக்கு. அட்டையின் கலரை கவனி, பச்சை. இன்னொன்றையும் பார்த்து விடு. இது எமிஸெட்–8. மி.கி. டேப்லட். வாந்திக்கு. சீக்கிரமா ரெண்டையும் எடு.”— பார்த்துவிட்டு ஐந்து…ஆறு நிமிஷங்கள் தேடி குமரன் சரியாக எடுத்து காட்டினான்..
“ எஸ்! இதுதாம்பா. இந்த ரெண்டிலும் ஒவ்வொரு மாத்திரையை குடு.”— அவள் கண்ணெதிரே குமரன் கொடுக்க ராகவ் எலெக்ட்ரால் தண்ணீரில் விழுங்கினான்.
“குமரன்! அடுத்ததாக இதோ இந்த மாத்திரையைப் பாரு. சிப்ளாக்ஸ்–டீ இஸட்.. மாத்திரையைப் பாரு ஆரஞ்சு கலர். பார்த்துக்கிட்டியா?. ஸ்பெல்லிங் பார்த்துக்க. சிப்லா கம்பெனி தயாரிப்பு.” “ ம்..பார்த்துட்டேன்.” “அதை எடு.” —-அவன் ஒரு மூன்று நிமிட தேடலில் எடுத்து காட்டினான். “எஸ்! இதுதான் குட். இன்னும் பத்து நிமிஷம் கழிச்சி அதில ஒரு மாத்திரையை போட்டு எலெக்ட்ரால் தண்ணிய குடிக்க வைக்கணும். ”—— ஆயிற்று சிப்ளாக்ஸ்-டீ இஸட். மாத்திரையையும் சாப்பிட்டு முடிச்சாச்சி. மேலும் ஒரு கிளாஸ் எலெக்ட்ரால் இற்ங்கியது. அத்துடன் அமைதியாக அரை மணி நேரம் காத்திருந்தார்கள். நடுவில் டாய்லெட் போகிறானா? என்று கவனித்துக் கொண்டிருந்தார். இல்லை. அடுத்த ஸ்டெப்பை சொல்ல ஆரம்பித்தார்.
“ குமரன்! ”
“அங்கிள்!” “ “இப்ப ரெண்டு டம்ளர் எலெக்ட்ரால் கொடு.”—- அவர்கள் பார்வையில் குமரன் அவ்வப்போது எலெக்ட்ரால் தண்ணீரை கொடுத்துக் கொண்டிருந்தான். குமரன் இடையில் ராகவ் எடுத்த வாந்தியை துடைத்தெடுத்து விட்டு கழுவினான். மதியம் இரண்டு மணியளவில் ராகவ் கொஞ்சம் தெளிவாகியிருந்தான். இப்போது அவனை பார்த்து துர்கா உணர்ச்சி வசப் பட்டாள். “ராகவ்! இப்ப வயித்து வலி இருக்கா?” “இருக்கு டாட். ஆனா முன்ன மாதிரி இல்ல, வயிற்றிரைச்சல் கூட குறைஞ்சிருக்கு டாட். பேதி இல்லை.” “வாந்தி வர்ற ஃபீலிங்?.” “எல்லாமே குறைஞ்சிருக்கு.”— எலெக்ட்ரால் தண்ணீர் உள்ளுக்கு போகப் போக இப்போது இன்னும் தெளிவாக பேசினான். “அவ்வளவுதான் இனிமேல் பயமில்லை. குமரன்! ரொம்ப தேங்ஸ் கண்ணா. நாம ஜெயிச்சிட்டோம். நல்லவேளை ராகவ்வுக்கு ஒரு மாத்திரையிலேயே வாந்தி கண்ட்ரோலுக்கு வந்திடுச்சி. சென்னையில இருந்து அமெரிக்காவுக்கு இப்படி கூட வைத்தியம் செய்ய முடியும்னு சொன்னா யாரும் நம்பகூட மட்டாங்க.நான் இங்கிருந்து சொல்றதை நீ அப்படியே செஞ்சி என் பிள்ளையை உயிரோடு மீட்டு எங்க கிட்ட கொடுத்துட்டப்பா. அவன் வாந்தியை கூட வாரி சுத்தம் பண்ணியே. உனக்கு நாங்க என்ன செஞ்சி இந்த கடனை தீர்க்கப் போறோம்.?. மறக்க மாட்டேன் தம்பீ. இந்த நிமிஷம் எங்க ராகவ்வுக்கு எல்லாமே நீதாம்பா”—- சொல்லிவிட்டு ஸ்க்ரீனில் கண்ணீருடன் அவனை கும்பிட்டார், கூடவே துர்காவும் கும்பிட்டாள். “அங்கிள்! ஆண்ட்டி..!, ப்ளீஸ்.”—குமரன் கையால் மறுத்தான்.. “ ராகவ்! “ “டாட்!. ”——ஸ்கிரீனில் தெரியும் அப்பாவையும், அழும் அம்மாவையும் பார்த்து சிரிக்க முயன்றான்.
“ இதுவரைக்கும் கிட்டத்தட்ட மூணு லிட்டர் எலெக்ட்ரால் தண்ணீர் உள்ளே போயிருக்கு. அமைதியாக தூங்குடா. ரெண்டு மணி நேரங் கழிச்சி கூப்பிட்றோம். ஓகே?”——ஸ்கைப்பை அணைத்தார்.
“ பேஷண்ட்டுங்களை பார்த்துப் பார்த்து பார்த்து உங்களுக்கு கல் மனசுங்க. கண்ணெதிரில் ராகவ் துவண்டு போய் தொபீர் தொபீர்னு கீழே விழறான், என்னால அழுகையை அடக்க முடியல. ஆனா நீங்க?, திட மனசு. ”—என்றாள் துர்கா.
“நான் அழலேன்னு உனக்குத் தெரியுமா?. சரி அழுது இன்னா சாதிக்கப் போற, இல்லே சாதிச்ச? சொல்லு. பையன் என்ன நிலைமையில் கிடக்கிறான்?. நம்முடைய முதல் குறி பிள்ளையை காப்பாத்தறதில இருக்கணுமேயொழிய இப்படி அழறதில இல்லை. இப்படி அழறதால நீஅவனுடைய தைரியத்தைத்தான் உடைக்கிற.”
“ இன்னைக்கு சரியான நேரத்துக்கு நீங்க வரலேன்னா அவன் கதி என்னாயிருக்கும்?, “—சொல்லும் போதே மறுபடியும் அழுதாள்.
“இதுபோல சிச்சுவேஷன் யாருக்கும் வரக்கூடாது, வந்திடுச்சி, என்ன பண்றது? சமாளிக்கணும். இப்படி பேசிப் பேசி நம்ம துக்கத்தை நாமே தூண்டி தூண்டி அழறதில அர்த்தமிருக்கா துர்கா?. ஏர்போர்ட்ல போய் பாரு. தேப்பை தேப்பையாய் எவ்வளவு பிள்ளைங்க?. அதில பெரும்பாலும் யு.எஸ். போறவங்கதான். இன்னைக்கு இளைஞர்களின் கனவு அமெரிக்கா. டாலர் சம்பாத்தியத்துக்கு ஓட்றாங்க. நல்லா சம்பாதிக்கறாங்க. உலகம் சுருங்கி போச்சு துர்கா.. இந்த சூழலுக்கு நம்மளை நாம தயார் படுத்திக்கணுமே ஒழிய, முகாரி பாடிட்டிருக்கக் கூடாது. நம்ம பிள்ளைங்க சொந்தக் கால்ல நின்னு அசலூர்ல போய் ஆனை பிடிக்கிறாங்கம்மா. நமக்கு அது பெருமைதானே?. உள்ளூரிலேயே இருந்து வேலை கிடைக்காம நம்ம கையை எதிர்பார்த்து நம்ம காலையே சுத்திக்கிட்டு கிடக்கிறது நமக்கு பெருமையா என்ன? சொல்லு. அடுத்த வருஷம் பாரு, எல்லாருக்கும் இவன் தண்ணி காட்டுவான்.”
அப்போது ராகவ்விடமிருந்து கால் வந்தது. ஸ்கைப்பை ஆன் பண்ணார்கள். ஸ்க்ரீனில் சற்று தெளிவாக ராகவ் சிரித்தான். பக்கத்தில் குமரன் உட்கார்ந்திருந்தான்.
“டாட்! மம்மீ..!.சரியாயிடுச்சி. இப்ப எனக்கு ஒண்ணுமில்லேம்மா.” “ மறுபடியும் பேதி போனியா?.” “நோ டாட். இரைச்சல், வலி, வாந்தி, எதுவுமே இல்லை. ஆக்சுவலா இப்பத்தான் பசியெடுக்கிற மாதிரி இருக்கு..” “ அ.ப்.ப்.பா! பெரிய ரிலீஃப். ஆயில் இல்லாத இலகுவாக செரிக்கும் உணவை சாப்பிடு. அங்கே என்ன கிடைக்கும்?.” “இந்த ப்ளாக்கிலேயே மெஸ் இருக்கு அங்கிள். சவுத் இண்டியன் டிஷ்ஷஸ் கிடைக்கும். எந்நேரமும் சூடா இட்லி சாம்பார், தோசை கிடைக்கும்.”—என்றான் குமரன். “தட் ஈஸ் ஃபைன். இட்லி சாப்பிடட்டும்.”
“ராகவ்! நீ சாப்பிட்ட மூன்று மாத்திரைகளையும் தினசரி ரெண்டு வேளை, மூணு நாட்களுக்கு சாப்பிட்டு முடிக்கணும். புரியுதாடா?. ” “ஓகே டாட்!” ——–அவர் எழுந்துக் கொண்டார்.
“வெரி சாரி டாட். என் தப்புதான். நேத்து நிறைய கேக் சாப்பிட்டு விட்டேன். அதுதான்.” “மூடனே! நீ பண்ண பெரிய தப்பு எது தெரியுமா? நீ எலெக்ட்ராலை கலக்கி குடிக்காதது. அதைவிட பெரிய தப்பு கிட்ல பேதிக்கான மருந்துகளை விளக்கங்களோடு வெச்சிருந்தும் நேரத்துக்கு எடுத்து பயன் படுத்தாதது. இதைப் பத்தி குறைஞ்சது பத்து தடவை உங்கிட்ட சொல்லியனுப்பினேன். வெளிநாட்டில் நிராதரவா இருக்கிறப்போ நீ எவ்வளவு அலர்ட்டா இருக்கணும்?.ஹும். ”——-துர்கா பையனைப் பார்த்து கலங்கினாள்.
மம்மீ! ப்ளீஸ் அழாதே. இனிமே நான் ஜாக்கிரதையாக இருப்பேன். ப்ராமிஸ்.”— மாதவன் பொரிந்து தள்ளினார்.
“ ஃபூல்.. படித்த முட்டாள். நான் உனக்கு எதுவும் அட்வைஸ் சொல்லப் போறதில்லை. உன் சூழல் அறிஞ்சி நடந்துக்கோ. பிரச்சினை வர்றப்ப அழறது கோழைத்தனம். எப்படி அதிலிருந்து ஜெயித்து வெளியே வர்றதுன்னுதான் நீ யோசிக்கணும். அப்படி யோசிச்சி யோசிச்சித்தான் இன்னைக்கு உலகம் பூராவும் நம்ம தமிழாளுங்க வெற்றி பெற்ற மனுஷங்களா வாழறாங்க. குமரனுக்கு தேங்ஸ் சொல்லு. அவன் இல்லேன்னா இப்ப என்கூட இப்படி பேசிக்கிட்டிருக்க முடியாது. ரெண்டு பேருக்குமே சொல்றேன். உங்க கிட்ட மெடிகல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இல்லாத பட்சத்தில் வெளியில் சாப்பிட்றப்போ பழங்களைத் தவிர மத்ததை தொட பத்து முறை யோசிக்கணும். ஓகே டேக் கேர். அப்புறம் பேசலாம். ”—
தொடர்பு துண்டிக்கப் பட்டது. அப்படியே சோபாவில் ஒரு மாதிரி இறுக்கத்தோடு சரிந்தார். நெற்றியை அழுத்தி விட்டுக் கொண்டார். துர்கா கவனித்து விட்டாள். காலையிலிருந்து இவ்வளவு நேரம் அனுபவித்த மெண்ட்டல் ஸ்ட்ரெஸ், டென்ஷன். பி.பி. நோயாளியான அவருக்கு ஆகாது. வந்து பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவாக அவர் தோள் பற்றி மேலே சாய்த்துக் கொண்டாள். மிருதுவாக அவர் கழுத்தின் பின்புறத்தை நீவி விட்டாள். அவ்வளவுதான் மடை உடைந்து போய், விசும்பலாக வெளிப்பட, மாலை மாலையாக கண்ணீர் வடிகிறது. அப்போது தனம் கூடுதலாக சர்க்கரை போட்ட காபியை இரண்டு பேருக்கும் கொண்டு வந்து வைத்தாள். மதியமாகி விட்டது. காலையிலிருந்து ரெண்டு பேரும் ஒண்ணுமே சாப்பிடவில்லை. இரண்டு பேருமே சர்க்கரை நோயாளிகள்.
அங்கே லாஸ் ஏஞ்சல்ஸில் குமரன் ராகவ்வை பார்த்து சிரிக்கிறான்.
“எ.ப்.ப்.பா! உங்கப்பா டெரர்டா சாமி. என்னா கேப்டன்ஷிப்?. என்னா அதிகாரம்?. என்னா கமாண்டிங் பவர்?, ஓட்டம், பரபரப்பு, எப்பா… கடைசியில எனக்கு தேங்ஸ் சொல்றப்போதான்டா அழுதார். அது கூட அளவாக. ”
“ எங்க டாடிய உனக்கு தெரியாது குமரன்.”—சொல்லும்போதே அவனுக்கு கண்ணீர் கொப்பளித்துக் கொள்கிறது.
“நான் பயந்திடுவேன்னுதான் அவர் எதையும் வெளிகாட்டல. அவருடைய டென்ஷனை மறைக்கிறதுக்குத்தான் என்னை திட்டிக்கிட்டே இருந்தார். ஊர்ல இப்ப அழுதுக்கிட்டு இருப்பாரு. எங்க மம்மி சமாதானம் சொல்லிக்கிட்டிருப்பாங்க.”— சொல்லும்போதே ராகவ் அழுகிறான்.
– தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி 2019ல் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை.