கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 18,153 
 
 

உண்மையான மரத்தை பார்ப்பதைவிட, ஓவியத்தில் உள்ள மரத்தை பார்த்து இரசிக்கும் மனநிலை கொண்ட மனிதர்களின் மத்தியில்,சந்திரா எப்போதும் உண்மையான இயற்கை மணம் வீசும் மரங்களோடும், மலர்களோடும் வாழ்வை சுவைத்துக் கொண்டிருந்தாள். வயது அறுபதை நெருங்குவதால், கையை உயர்த்தி, உடம்பை நேர்படுத்தி, மூச்சை உள் வாங்கி, நுனிக்காலில் நின்று, எக்கி கிளைகளை பிடித்து இழுத்து, மலர்களை பறிக்கும் போதும், மூச்சை வெளியேற்றி, உடம்பை வளைத்து, தலையைக் கீழ் நோக்கி, கால் மூட்டுக்களை வளைத்து, கையை கீழ் இறக்கி தரையில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை எடுக்கும் போதும், சந்திராவுக்கு தனது தோள், கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலியானது கிட்டத்தட்ட மரண வலிதான் , ஒவ்வொரு முறையும் பூக்களை பறிக்கும் போதும், எடுக்கும் போதும் ஏற்படும் மரண வலியானது, ஒவ்வொரு முறையும் பூக்களை தழுவும்போதும், வண்ணங்களை கண்விழியில் நிரப்பிக்கொள்ளும் போதும், நறுமணத்தை உள் வாங்கும் போதும் தனக்கு ஏற்பட்ட மரண வலி மறைந்து, புதிய உயிர் பிறக்கும் மகிழ்ச்சி அவளது மனதில் தொற்றிக் கொள்வதாலோ, சந்திரா தனது காலை மற்றும் மாலை பொழுதுகளை எப்போதும் மலர்களிடத்தும், மலர்களை மாலைகளாக மாற்றும் நுட்பத்திலும் தோய்ந்திருந்தாள்.

தினந்தோறும் காலை ஆறு மணிக்கு எழுந்து, வாசற்கதவை திறக்கும் சந்திராவுக்கு, எப்போதும் ஒர் ஆச்சரியம் காத்துக்கொண்டே இருக்கும். இரவு முழுவதும் வானில் சிதறி மின்னிக்கொண்டுயிருந்த நட்சத்திரங்களும், கிரகங்களும், வானத்தை காலி செய்துவிட்டு, தனது வீட்டு வாசலில் அணிவகுத்து நிற்பதுபோல, செவ்வாய் கிரகத்திற்கு ஒத்த சிகப்பு நிற காம்புகளையும், வெள்ளி கிரகத்திற்கு ஒத்த வெள்ளை நிற இதழ்களையும் கொண்ட பவள மல்லி மலர்களை, சந்திரா வீட்டின் வாசலில் நிற்கும் பவள மல்லி மரம், பின்னிரவுகளில் பூக்களை மலரச் செய்து, விடியற்காலையில் உதிரச்செய்து, வெள்ளை நிற மேல்சட்டையும், சிகப்பு நிற கால்சட்டையும் அணிந்த நட்சத்திர குழந்தைகள் போல அணிவகுத்து நிற்கும் பவள மல்லிகளே சந்திராவை காலை வணக்கம் சொல்லி வரவேற்கும்.

தரையில் கிடக்கும் மலர்களைக் காலால் மிதிப்பது, இயற்கையைக் காலால் எட்டி உதைப்பதற்குச் சமம் என்ற அற நெறியை கொண்ட சந்திரா, படுக்கையில் கிடக்கும் தனது பேரக் குழந்தைகளை எடுப்பது போல, ஒவ்வொரு பவள மல்லி மலரையும் கையில் எடுத்து, எடுத்த மலர்களை ஊசி நூலில் கோத்து மாலையாக்குவதே, சந்திராவின் காலை வேளைப் பணிகளில் ஒன்றாகும். மற்ற மலர்களை நூலால் கட்டி மாலையாக்கும் போது, பவள மல்லியை மட்டும் ஊசி நூலால் கோத்து மாலையாக்குவது ஒரு தனிச்சிறப்பே. இத்தகைய தனிச்சிறப்பு இருப்பதால், பவள மல்லி என்று எழுதும்போது ” பவள மல்லி ” யா? அல்லது “பவழ மல்லி” யா? என்ற சந்தேகம் சந்திராவுக்கு பதிலில்லா கேள்வியாக தொடர்ந்து கொண்டுயிருந்தது.

தனது கை, கால் மூட்டு வலிகளை உள் வாங்கி உருவான இந்தப் பவள மல்லி மாலை மனித கழுத்தை அலங்கரிப்பதைவிட, தெய்வத்தின் கழுத்தை அலங்கரிப்பதே சாலச் சிறந்தது என்று எண்ணிய சந்திரா, இந்த மாலையை, அவ்வூரின் குளக்கரையில் அமைந்திருந்த நாக ராஜ சிலைக்கு அணிவிப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தாள். குளக்கரையில் அரச மரம் இருந்தால் பிள்ளையார் கோவில் கட்டுவதும், வேப்ப மரமிருந்தால் அம்மனுக்கு கோயில் கட்டுவதும் தமிழ் நாட்டில் எழுதப்படாத சட்டமாக இருந்தாலும், சந்திராவின் கிராமத்தில் நாக ராஜ சிலை உள்ளது வியப்பே.ஆனால், அதற்குள்ளும் ஒரு உப சட்டம் உள்ளது. இந்த உலகில் மனிதனால் நடப்படும் மரத்தைவிட, பறவைகளின் எச்சத்தால் வளரும் மரங்களே அதிகம், அதிலும் பறவையின் எச்சத்தால் வளரும் மரங்களுக்கே ஆயுசு கூடுதல் என்பது கூடுதல் உண்மை. பல இலட்சத்தில் ஒரு வாய்ப்பாக ஒரு காக்கை ஒரு சேர வேப்பம் பழத்தையும் , அரச மர பழத்தையும் உண்டு, ஒரு சேர அந்த எச்சத்தை குளக்கரையில் இடும்போது, தாவரவியலில் ஒரு ஆச்சரியாமாக வேப்ப செடியும்,அரச செடியும் பிண்னிப் பிணைந்து வளரும் அபூர்வ நிகழ்வு நடக்கும்.

அப்படிபட்ட நிகழ்வே சந்திராவின் கிராமத்தின், குளக்கரையில் ஒரு வேப்ப செடியும், அரச செடியும் பிண்னிப் பிணைந்து வளர்ந்து நின்றன. ஒர் ஆண் நாகமும், பெண் நாகமும் காம இட்சையில் வீழ்ந்து, இணைந்து, பிண்னிப் பிணைந்து, எழுந்து நிற்கும் நிகழ்வுக்கு ஒத்திருந்தது இந்த வேப்ப மற்றும் அரச மர இணைப்பு. இதனால் என்னவோ,எங்கெல்லாம் இந்த இணைப்பு ஏற்படுகிறதோ,அங்கெல்லாம் நாகர் சிலையை வைத்து வழிபடும் முறையும் தமிழகத்தில் உள்ளது.இந்த வழக்கத்தின் படியே நாக ராஜன் சிலை சந்திராவின் கிராமத்திற்கும் வந்து சேர்ந்தது.

எப்போதும் போல, அன்றைக்கும் சந்திரா, தான் கோத்த பவள மல்லி மாலையை எடுத்துக் கொண்டு குளக்கரை நாக ராஜா சிலையை நோக்கி நடந்தாள், போகிற வழியில் ஒரு பிள்ளையார் கோவிலும், ஒரு மாரியம்மன் கோவிலும் இருந்தாலும் கூட , சந்திராவின் மாலையை சூட்டிக்கொள்ளும் நல்வாய்ப்பை நாக ராஜ சிலையே பெற்றிருந்தது.இதற்கு பின்புலமாக சந்திராவிடம் மூன்று முக்கிய காரணங்கள் இருந்தன.

முதலாவதாக தமிழகத்தின் நூற்றைம்பது ஆண்டுகால அரசியல் வரலாற்றின் சாறன சமூக நீதி கோட்பாடே.., ஆமாம் பிள்ளையாரும், மாரியம்மனும் கோயில் என்ற நான்கு சுவருக்குள்ளும், ஆகமவிதி என்ற கட்டுமானத்திற்குள்ளும் இருந்த காரணத்தினால், சந்திராவின் கரங்களால் மாலை சூட்டிக்கொள்ளும் தகுதியை இழந்திருந்தன, தனக்கான முகவர்களை தனக்கும், சந்திராவுக்கும் இடையில் நிற்க வைத்திருந்தன. ஆனால் நாக ராஜ சிலையோ எந்த வித கட்டுமானத்திற்குள்ளும் சிக்கிக் கொள்ளாமலும், நேரம், காலம், சாதி, மதம், பாலினம், வயது என்ற எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல், யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எனது அருளைப் பெறலாம் என்று இருப்பதால், நாக ராஜ சாமிக்கே தினந்தோறும் சந்திராவின் பவள மல்லி மாலையை சூட்டிக்கொள்ளும் நல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

இரண்டாவதாக, சத்திராவிற்கு எப்போதுமே தனது பெயரான ” சந்திரா ” என்ற ஒலியினுள் தீராத காதல் இருந்து வருகிறது, சமீபத்தில், ஆறு வயதே நிரம்பிய சந்திராவின் மகன் வழி பேத்தியான ஆதிரை ஒரு நாள் சந்திராவிடம், ” எனக்கு யார் “ஆதிரை ” என்று பெயர் வைத்தது? எனக்கு இந்தப் பெயர் சுத்தமாக பிடிக்கவே இல்லை. உங்களோட பெயர் “சந்திரா ” தான் பிடித்திருக்கிறது.நாம் இருவரும் நமது பெயரை மாற்றிக்கொள்வாமா?” என்றாள். ஏற்கனவே தனது பெயரில் கர்வம் கொண்ட சந்திராவுக்கு, தனது பேத்தியின் வார்த்தைகள் தனது கர்வத்திற்கு சிம்மாசனம் இட்டது போலயிற்று. இந்த தீராத பெயர் காதலால், சந்திராவிற்கு யார் தனது பெயருடன் அடைமொழி சேர்த்துக் கூப்பிட்டாலும் பிடிப்பதில்லை. அவளது வயதை முன்னிலைப்படுத்தி “சந்திரா பாட்டி “,” சந்திரா ஆத்தா “, என்று யார் கூப்பிட்டாலும் அதை அவள் வெறுக்கவே செய்தாள். எந்த வயதினராக இருந்தாலும் தன்னை சந்திரா என்று அழைப்பதையே அவள் எப்போதும் விரும்பினாள். ஆனால், அவ்வூரில், சந்திராவை சந்திரா என்று அழைக்க, அவளது வயதையொத்த மூன்று தோழிகளே இருந்தார்கள். சந்திரா உட்பட, இந்த நான்கு பேரிளம் பெண்கள் தங்களுக்கன சந்திப்புப் புள்ளியாக குளக்கரை நாக ராஜ சிலையை தேர்ந்தெடுத்திருந்தனர்.

மூன்றாவதாக, சந்திரா எப்போதும் கல்கியின் பொன்னியின் செல்வனுக்குத் தீவிர வாசகியாகே இருந்து வருகிறாள். தனது அறுபது வயதில் எழுபது முறை பொன்னியின் செல்வனின் ஐந்து தொகுதிகளையும் படித்திருந்தாள். அவளையும் அறியாமல் அவள் ஒரு பெண் வந்தியத் தேவனாக தன்னை நினைத்து கொண்டு வாழ்ந்து வருகிறாள். ஒவ்வொரு முறையும் அவள் அவ்வூரின் குளக்கரையில் நடந்து செல்லும் இரண்டு நிமிடங்களும் தன்னை வந்தியத்தேவனாக எண்ணிக்கொண்டு, வந்தியத்தேவன் வீர நாராயண ஏரிக்கரையில் ஒவ்வொரு மதகுகளையும் எண்ணிக்கொண்டு நடந்து வருவது போல, தானும் அந்தக் குளக்கரையில் நடந்துவருவாள். அந்த இரண்டு நிமிட குளக்கரை நடைப்பயணத்தில் பெரும்பாலும் பொன்னியின் செல்வனின் முதல் தொகுதியை முழுவதும் தனது மனக்கண்ணில் கொண்டுவந்து பூங்குழலியுடன் கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு புறப்படும் நேரத்தில் குளக்கரை முடிந்து நாக ராஜ சிலை வந்து அவளது கனவு உலகத்தைக் கலைத்துவிடும்.

என்றைக்கும்போல அன்றைக்கும் சந்திரா நாக ராஜ சிலைக்கு வந்து சேர்ந்த போது, அவளது தோழிகளான பணி ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான கமலா, சுந்தர ராமசாமி,தி ஜானகிராமன், ஜெயகாந்தன் இவர்களின் தீவிர வாசகியான வாசுகி, ஆன்மீகத்தில் அதித ஆர்வம் கொண்ட மணிமேகலை, மூவரும் கோரசாக சந்திராவை வரவேற்றார்கள். இந்த நான்கு பேரிளம் பெண்களையும் தவிர அங்கு, நாக ராஜ சிலையை வழிபட அன்றைக்கு அவ்வூரின் நெல் விவசாயிகளான இராமசாமி, வளவன் மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் குமாரும் நாக ராஜ சிலையை வழிபட்டுக்கொண்டிருந்தனர். ஜெயகாந்தனையும், ஜானகிராமனையும் கொண்டாடும் இரசிகர்கள் எப்போதும் கல்கி மற்றும் மு.வ வின் இரசிகர்களை பரிகாசிப்பதும் , இவர்கள் அவர்களைப் பரிகாசிப்பதும் இயல்புதானே. இதை வழிமொழிவது போல, வாசுகி, ” என்ன டீச்சர் ? இன்றைக்கு வந்தியத்தேவன் குதிரைமேல வராமல், கால்நடையாக வந்துகிட்டிருக்கு ” என்றாள் சந்திராவின் காதில் விழும்படி. ” பரியில் வராட்டாலும், பாரிஜாதத்துடன் தான் வருகிறேன் ” என்று கொண்டுவந்த பவள மல்லி மாலையை தூக்கி காண்பித்தே பதிலலித்தாள் சந்திரா. பேரிளம் பொண்களின் சபை தொடங்கியது. காதுகள் இல்லாத நாக ராஜன் தப்பித்துக் கொண்டார்.

“எத்தனை முறை பார்த்தாலும் எப்போதும் போல வியப்பை ஏற்படுத்துவது கடலும், மலையும் மட்டும் அல்ல சந்திராவின் பவள மல்லி மாலையும் கூடத்தான்” என்றார் கமலா. பவள மல்லி போல மலர்ந்தது சந்திராவின் முகம் மட்டுமல்ல இதயமும் கூடத்தான். ” கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசையையும், இராதையின் அழகையும் சேர்த்து குழைத்து செய்த மாலைப் போல இருக்கிறது சந்திராவின் பவள மல்லி மாலை” என்று பாராட்டினாள் சுந்தர ராமசாமியின் வாசகியான வாசுகி. எவ்வளவு நேரம்தான் பவள மல்லியையே பேசுவிங்க, நான் கட்டிக்கொண்டுயிருக்கும் புது புடவையைப் பற்றி பேசமாட்டிங்களா? என்று மனதுக்குள் எண்ணினாள் மணிமேகலை. ஒருவர் மனதில் உள்ளதை,அவர் சொல்லாமலே அறிந்து கொள்வதுதானே நட்பின் இலக்கணம், அந்தக் கணத்தை விட்டுவிடாமல், ” எத்தனை அழகு உனது புடவை ? எப்ப வாங்கினது?” என்று ஆரம்பித்தாள் சந்திரா. வெட்கத்துடன், தலையை குணிந்து தனது புடவையை பார்த்துக் கொண்டே ” மருமகளின் உபயம் ” என்றாள் மணிமேகலை. இந்தப் பேரிளம் பெண்களின் அரட்டையை கேட்டும், கேட்காதது போலவே நாக ராஜனை வழிபட்டனர் இராமசாமியும் வளவனும்.

பள்ளி மாணவனான குமார் ” பாட்டி எனக்கு ஒரு சந்தேகம் ” என சபைக்குள் உள் புகுந்தான். ” அம்மாவாசைக்கு அம்மாவாசை நாகப் பாம்பு மாணிக்க கல்லை வாயிலிருந்து கக்குமாமே, இந்த நாக ராஜ சிலையும் மாணிக்க கல்லை கக்குமா?” என்றான். எங்கே மணிமேகலை ஆன்மீக புரானத்தில் இருந்து கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டுவிடுவாளோ என்று பயந்து மூந்திக் கொண்டாள், ஓய்வு பெற்ற ஆசிரியை கமலா. ” நாக ராஜனை வணங்குவது நம்பிக்கை, நாகம் மாணிக்க கல்லை கக்கும் என்பது மூடநம்பிக்கை ” என்றாள் கமலா. ” அப்படி மூடநம்பிக்கை என்று சொல்லிவிட முடியாது ” என்றாள் மணிமேகலை. மேலும் தொடர்ந்து ” ஒரு நாகம் தனது பல்லில் உள்ள விஷத்தை எந்த ஒரு உயிரிடத்திலும் செலுத்தாமல்,கடிக்காமல் , விஷத்தை தன்னிடத்திலே வைத்திருக்கும் நாகத்தின் விஷம் குறிப்பிட்ட காலத்தில் மாணிக்கமாய் மாறி மாணிக்க கல்லாக வெளிவரும்” என்றாள். கமலா பயந்தது போல ஒரு மூடநம்பிக்கை கதையை குமாரின் நெஞ்சுக்குள் பதியவிட்டாள் மணிமேகலை. ஒரு கேள்வி, இரண்டு பதில்கள், குழப்பத்தில் குமார். குழப்பத்துடன் கமலாவின் முகத்தை பார்த்தான் குமார். குமாருக்கு அருகில் சென்று, நேர் எதிராக நின்று, தனது இரு கைகளையும் குமாரின் தோள்பட்டையில் வைத்து, உடம்பை சாய்த்து, முகத்தை நேருக்கு நேரக பார்த்து, சொல்லத் தொடங்கினாள் கமலா. ” அது அப்படி இல்லடா செல்லம், பாட்டி சொன்ன கதை பாம்போடது இல்லடா, மனுசனுக்கானது, ஆமாம், பாம்போட பல்லுல இருக்கிற விஷம் மாதிரி மனுசனோட நாக்குல்ல இருக்கு விஷம். கெட்ட வார்த்தை பேசி மத்தவங்களோட மனச காயப்படுதினா, நாம விஷத்தை பாய்ச்ரோமுன்னு அர்த்தம். அப்படி இல்லாமல், கெட்ட வார்த்தைகள் எல்லாத்தையும் நம்ம நாக்கு உள்ளேயே வச்சிக்கிட்டு எப்போதும் இனிய வார்த்தைகள் மட்டுமே பேசினா, நம்மை மனிதருள் மாணிக்கமுன்னு இந்த உலகம் போற்றும் ” என்றாள் கமலா. சந்திராவும், வாசுகியும் புருவங்களை உயர்த்தி ஆமோதித்தார்கள். மணிமேகலை தனது உதடுகளை இடப் பக்கமும், வலப் பக்கமுமாய் ஆட்டி அசைத்து தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினாள். புரிந்தும் புரியாததுமாய் குமார் தனது தலையைச் சொரிந்தான்.

அப்போதுதான் அந்த சத்தத்தை அனைவரும் கேட்டனர். அனைவருக்கும் இனமறியா பயம் தொற்றிக்கொண்டது. ஆம், அந்த சத்தம் ஒரு அவசர மருத்துவ ஊர்தியான ஆம்புலன்ஸின் ஒலி.அவர்களுக்கு சில அடி தூரத்தில் இருக்கும் அந்த ஊரின் எல்லையிக்கு வந்து வண்டி நின்றது. கதவு திறக்கப்பட்டு அந்த ஊரின் இளைஞனான ஜெயமோகன் அந்த வண்டியில் இருந்து இறங்கினான். உடல் சற்று மெலிந்தும், முகம் வாடியும், உடல் களைப்புற்றும், தாடியுடனும் தோற்றமளித்தான் ஜெயமோகன்.ஜெயமோகன் இறங்கினான? இல்லையா? ,தனது உடமைகளை எடுத்துக்கொண்டான? இல்லையா? என்ற அக்கரை கூட இல்லாமல் விறுட்டென்று வண்டியை எடுத்தார் ஓட்டுனர். சற்று தடுமாறி தன்னை நிலைநிறுத்திக்கொண்டான் ஜெயமோகன்.

அங்கு நின்று கொண்டிருந்த அனைவருக்கும் இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த அந்த நிகழ்வு கண்முன் வந்தது. ” என்னப்பா இது! கொரானா பாசிட்டிவ் என்றதும், வீட்டிற்கே வந்து, அழைத்து சென்ற அரசாங்கம், நோய் குணமானதும் ஊர் எல்லையிலே விட்டுட்டு போறாங்களே, என்ன கொடுமை!” என்று முனுமுனுத்தார் இராமசாமி. இரண்டு வார கால மருத்துவமனை வாழ்க்கையை ஒரு கனவாக கடந்து, புதிய வாழ்க்கையை தொடங்க நாக ராஜ சிலையை வணங்கிவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று தீர்மானித்தான் ஜெயமோகன். அதற்காக நாக ராஜ சிலையை நோக்கி அடியெடுத்தான். அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டது. தனது பள்ளி ஆசிரியர்களுக்கே பட்டப் பெயர்வைத்து மாணவர்களுக்குள் பகடி பேசும் குமார் ” மறுபடியும் கொரானா ஊருக்குள்ள வந்துட்டுடோய் ” என்று சத்தமாக ஊளையிட்டுக்கொண்டு ஒடத்தொடங்கினான். சற்று நேரத்திற்கு முன்பு கமலா எடுத்த மனிதருள் மாணிக்கம் பாடம் முழுவதையும் காற்றில் பறக்கவிட்டான் குமார்.

குமாரின் வார்த்தைகள் ஜெயமோகனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சிறுவன்தானே தெரியாமல் சொல்லிவிட்டான் என்று மனதுக்குள்ளே குமாரை மன்னித்துவிட்டு, மற்றுமொரு அடியெடுத்தான். இராமசாமி ஜெயமோகனைக் நோக்கி தனது வலது கையை உயர்த்தி, போக்குவரத்து அதிகாரி வண்டியை நிறுத்த செய்யும் செய்கையை போலவும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போலவும் கை உயர்த்தி, அடுத்த வினாடியில் கிரிக்கெட் ஆட்ட நடுவர் வீரரை வெளியேற்ற செய்யும் செய்கைப் போல, தனது நான்கு விரல்களை மடக்கி ஒற்றை ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டினார். இதனை கவனித்த ஜெயமோகன், மேலும் அதிர்ச்சிக்குள் உள்ளானான். ஆமாம் அதற்கு பொருள் ” அங்கேயே நில். நாங்கள் ஒரு நிமிடத்தில் இந்த இடத்தைவிட்டு சென்றபிறகு, வந்தால் போதும். எங்களுக்கும் கொரானாவை ஒட்டிவிடாதே “. இராமசாமியும் வளவனும் ஜெயமோகனுக்கு எதிர் திசையில் வேகமாக நடந்தனர்.

“வந்தவன், நேராக வீட்டுக்கு போகம, இங்கு எங்கே வர்ரான்?” என்று காதில்விழுந்துவிட கூடாது என்று மெதுவாக சொல்லுவதுபோல் ஜெயமோகனின் காதில் விழும்படி சொன்னாள் மணிமேகலை. ” என் மருமகள் வீட்டில் எனக்காக காத்துக்கொண்டு இருக்கிறாள் ” என்று சொல்லிக்கொண்டே இடத்தைக் காலி செய்தாள் மணிமேகலை. கொரான நோயால் ஏற்படும் கொடுமையை விட, அதில் இருந்து மீண்டு வந்த நபரை, நமது மக்கள் நடத்தும் விதத்தால் ஏற்படுகிற கொடுமை மேலும் கொடுமையானது என்பதை உணர்ந்தான். செய்வது அறியாமல் அதே இடத்திலே நின்றான் ஜெயமோகன்.

கமலாவும் வாசுகியும் எந்த ஒரு கொடும் சொல்லையும் சொல்லாவிட்டாலும், ” என்ன ஜெயமோகன்! நல்ல இருக்கிறாய?” என்ற ஆதரவு வார்த்தைக் களையும் சொல்லாமல் இடத்தைக் காலி செய்தார்கள் கமலாவும், வாசுகியும். இந்த மனிதர்கள் செய்யும் எல்லா நாடகத்தையும் புரிந்து கொண்ட சத்திரா. இதயம் நொறுங்கிப் போன ஜெயமோகனின் நிலையையும் புரிந்து கொண்டாள் சந்திரா.

கொரானா என்ற எதிரி மனித குலத்துக்கு எதிராக நடத்தும் இந்தப் போரில், நேரடியாக கொரானாவை சந்தித்து, அதனுடன் இரண்டு வார காலம் போரிட்டு, அந்தப் போரில் வெற்றியும் பெற்று ஊர் திரும்பும் ஒரு வீரனை, நாம் எப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறோம், என்று வேதனையுற்றாள் சந்திரா. இருந்தபோதிலும், கொரானாவிடம் வெற்றிபெற்று, சக மனிதர்களால் தோற்கடிக்க பட்ட ஜெயமோகனை மீட்டு எடுக்க, சந்திரா மெதுவாக ஜெயமோகனின் அருகில் சென்று, கையில் வைத்திருந்த பவள மல்லி மாலையை ஜெயமோகனுக்கு சூட்டி ” வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ” என்றாள் சத்திரா. கண்கள் கலங்கின ஜெயமோகனுக்கு.

மணம் வீசும் மலர்களுடன் சந்திரா வாழ்வதால், மனிதமும், பேரன்பும் அவளிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன.

Print Friendly, PDF & Email

5 thoughts on “பவள மல்லி

  1. நல்லக் கதை. இன்றைய கொரானா காலத்தில், நாம் நோய் உடன் மட்டுமே போராட வேண்டுமே தவிர, நோயாளியுடன் அல்ல என்ற அற்புத சிந்தனையை விளக்கம் விதத்தில் உள்ளது சிறப்பு. மகிழ்ச்சி

  2. அருமையான கதை.நிறைய வர்ணனைகளுடன் கதை தொடங்கியிருந்தாலும், மனிதரைப் பாம்புடன் ஒப்பிட்டு, கொரோனாவையும் தக்கபடி புகுத்தியிருப்பது நல்ல கற்பனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *