கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 15,762 
 

அந்த ஊர் தன்னை வெளியுலகுக்குக் காட்ட மறுக்கும் கோர முகங்கொண்ட பெண்ணைப்போல ஒடுங்கிப் பதுங்கியிருந்தது. செம்பனையின் தரைதட்டும் பச்சை மட்டைகளால் தங்களைத் தாங்களே மூடிக் கொண்டதுபோல ஸ்கோட்சியா தோட்டப் பிரிவு ஏழு வெளியுலகத்திலிருந்து எட்டியும் விலகியும் நின்றிருந்தது. வயதோடி மூப்படைந்து மரத்தண்டை விட்டு பிரிய மனமற்றும் ,ஒட்டுறவோடு வாழ பிடிப்பற்றும் தொங்கும் செம்பட்டை நிறமேறிய மட்டைகள் நிலையாமையைச் சுட்டும் வண்ணமாய்த், துவண்டு தொங்கிக் கிடந்தன. தார் சாலையிலிருந்து சூரியன் உதிக்கும் திசையில் திரும்பிக் கிட்டதட்ட பத்து கிலோமீட்டர் செம்மண் சடக்கின், குழியில் இறங்கி, சரலைக் கற்களில் குத்திக் குதித்து, இப்படித்தான் இயற்கையோடு இயைந்து சந்நதம் ஆடி பயணிக்க வேண்டுமென்பது அங்கே நெடுங்கலமாய் நீடிக்கும் விதி. பெருமழை நாளில் சகதி கூழாகி டயர்களை சுற்றவிடாமல் இருக்கும், பழம் ஏற்றும் டிரகடர்கள் நமக்கு முன்னே பயணித்திருந்தால் ஆழப்பதிந்து சாலையை சாக்கடையாக்கி மேற்கொண்டு வாகனங்களை நகரவிடாமல் ‘பந்த்’ செய்துவிட்டிருக்கும். வாகனத்தைத் தள்ளி தொடரும் பயணங்களில் தள்ளுப்வர்களுக்கு சகதிபிசேகம் நடந்துவிட்டிருக்கும். சேற்றில் சிக்கித் திணரும் சக்கரங்கள் நின்ற இடத்திலேயே சரசரவென்று சுழன்றால் பின்னே அதைத்தானே செய்யும்!

தார் சாலையிலிருந்து பயணம் செய்பவர்களைக் கரும் பச்சை நிறம் பின்னால் தொடர்ந்தபடியே இருக்கும். நாலாப்பக்கமும் செம்பனை மரங்கள் பச்சையுடுத்தி கண்கள் பார்க்கும் நிறம் ஒட்டுமொத்தமாகப் பச்சையென்றே ஆகிவிட்டிருக்கும். அந்த ஊர் புதியவர்களுக்கு லேசில் தட்டுப்படாது. எப்படி தட்டுப்படும்? குடியிருப்புப் பகுதிகளையும், தோட்ட அலுவலகத்தையும், அந்தப் பலகைப் பள்ளியையும்கூட செம்பனைக் அடாதுடியாய் மூடியிருந்தால்! கடந்த சில ஆண்டுகளாக அக்குடியிருப்புப் பகுதிகூட தமிழரின் வாசத்தையும் இழந்திருந்தது. முற்றிலும் இல்லையென்றாலும் வேறு வக்கற்று அவ்வூர் வாழ்வாதாரம் தரும் ஊர் என நம்பிக்கையை கைவிடாது, ஓரிரு குடும்பங்கள் எஞ்சியிருந்தன. அவர்கள்கூட வங்காளதேச இந்தோனேசிய, பிற அந்நியத் தொழிலாளர்களின் நுழைவால் சுய அடையாளமிழந்து அமுங்கிவிட்டிருந்தார்கள்.

நான் தலைமை ஆசிரியாராகப் பதிவியேற்றபோது உண்டான பெருமிதம் அவ்வூர்ப் பள்ளிக்கு வந்தபோது பெருமழையில் சடசடத்துச் சரிந்து விழும் மலைச்சரிவானது மனம் . இது பஞ்சு மிட்டாய் மாதிரி! உருண்டு திரண்டு கையில் நிறைந்தாலும், உள்ளபடியே பெருவிரல் அளவுக்குகூட மிஞ்சாத இனிப்பு போல.

“சார் “ என்று வந்து நின்றார் பரம் ஆசிரியர்,

“முகிலன் இன்னைக்கும் பள்ளிக்கு வர்ல சார்?” நான் வியப்போடு அவரைப் பார்த்தேன். “வரலன்னா நாம என்ன செய்யமுடியும் ?”

“இல்ல சார் … வழக்கமா யாராவது போய்தான் வலிய கூட்டிட்டு வரணும்?”

“பெற்றோருக்கில்ல அக்கறை வேணும்?”

“அவன் ஒருத்தன்தான சார் அஞ்சாம் ஆண்டு படிக்கிறான், அவனும் இல்லனா எனக்கே போரடிச்சுப் போவது சார்! போய் கூட்டிட்டு வந்துர்ரேன்.”

“நம்ம ஆளுங்களுக்குப் எப்போ புத்தி வரப்போவுதோ!”

“அந்த ஆளு குடிச்சிட்டு படுத்துக் கெடப்பான், இல்லனா இவனையும் பழம் பொறுக்கக் கூட்டிட்டு போயிடுவான் சார், தீம்பார் வரைக்கும் போயி பையனைக் கையோட கூட்டிட்டு வந்த அனுபவமெல்லாம் இருக்கு சார்.”

“சரி போங்க..”

இங்கே மொத்த மாணவர் எண்ணிக்கையே ஐந்து பேர்தான். இந்த ஆண்டு முதலாம் ஆண்டுக்கு ஒரு மாணர்கூடப் பதிவாகவில்லை.சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு?

அலுவலகத்துக்கு வெளியே வந்து போது எப்போதும் போலவே பள்ளி வளாகம் பேச்சு மூச்சற்றுக் கிடந்தது. எந்த வகுப்பிலிருந்தும் மாணவர்களின் ஒருமித்த குரலோ ஆசிரியர் போதிக்கும் ஓசையோ எழவில்லை. செம்பனைக் கீற்றுகள் அசைவற்றுக் கிடந்தன. காலைக்காற்று சோம்பிக் கிடந்தது. தூரத்தில், உச்சி மலையில் கருமை கலந்த சாம்பல் நிற மேகம் ஒன்று தீற்றப்பட்டதுபோலத் தெரிந்தது. கீழ்வானில் மேகக்கூட்டங்கள் பொங்கல் பானையிலிருந்து பால் நொதித்து பொங்கி ஒழுகப்போவதுபோல குழுமிக் கிடந்தன். பச்சைக் கீற்றிலைகளினூடாகப் பாய்ந்த கதிர்கள் திப்பித் திப்பியாய் வெயிற்கோலங்களை வரைந்திருந்தன. போதனை வேளைதான் சலமற்றுக் கிடக்கிறது என்றால், ஓய்வு வேளையின் பொழுதும் பள்ளி வளாகம் கிணற்றடி மௌனத்தில் ஆழ்ந்திருக்கும். நான் போதித்த பழைய பள்ளியின் மாணவர்களின் பிளந்துகட்டும் கூச்சலும் கும்மாளமும் துளியளவு கூட இல்லாத பள்ளி . இயல்புக்கு முரணான குதூகலச் சூழலற்றுச் சதா சர்வ காலமும் அந்நியப் பட்டுக் கிடந்தது.

ஐந்தாம் ஆண்டு மாணவனை அழைத்துவரப் போன ஆசிரியரின் மோட்டர் சைக்கிளின் பின்னிருக்கை காலியாகவேயிருந்தது. மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் உதட்டைப் பிதுக்கி ஒரு கைவிரல்களால் இல்லை என்று சைகை செய்தார்.

உடனடியாகத் தகவல் சொல்ல முனைந்தவர், மோட்டார் சைக்கிளை சற்று அருகே வந்து நிறுத்தி, தலைக்கவசத்தைக் கழற்றினார். முடி கலைந்து, பழுப்பேறியிருந்த இழைகள் கருமைக்கு இடையே வாகிலிருந்து விலகித்தெரிந்தன, “சார் அவன பழம் பொறுக்கக் கூட்டிட்டுப் போய்ட்டாரு. வேலையிடம் ரொம்ப துரமாம் சார் , ஒரு இந்தோனேசியாக் காரன் சொன்னான்.” என்றார் தலைக்கவசத்தைக் கழற்றியவாறு.

ஏமாற்றத்துடன்“என்னையா இது? இருக்கிற ஒன்னு ரெண்டு பேரும் வரலேன்னா எப்படிப் பள்ளிய நடத்துறது?”

“சார்..இங்க இன்னும பல விஷயம் நடக்கும்? இந்த எஸ்டேட்டுலேர்ந்து ரெண்டு பேருதான் ஸ்கூலுக்கு வர்ரானுங்க… மிச்ச மூனு பேரு சுங்ஙை கோப்லேர்ந்து கொண்டுவந்து விடுராங்க!”

“சுங்ஙை கோப் இங்கேர்ந்து தூரமாச்சே.. எப்படி வராங்க…?”

“மாணவர் எண்ணிக்கை கொறஞ்சி போச்சினா பள்ளிய மூடிடுவாங்கன்னு பெற்றோர் முறையிட இங்குள்ள சடடமன்ற உறுப்பினர் அவங்க பெற்றோருக்கு மாசம் நூறுவெள்ளி கொடுத்து, வர வைக்கிறாரு!”

“ என்ன கூத்துயா இது? இதெல்லாம் தொடர்ந்து நடக்குற காரியமா? எத்தன வருஷத்துக்கு இப்படி நடத்த முடியும்? வர வழியிலையே மூனு ஸ்கூல் இருக்க, அங்கெல்லாம் போடாமல், தாண்டி இங்க கூட்டிட்டு வர்ரது கோமாளித்தனமா இருக்கே! ”

“ சார் அஞ்சாறு வருஷமா இப்படித்தான் இழுபறில இருக்கு… அதுலேயும் போன வருஷம்தான் ஆட்சி மாறனப்போ, புது சட்டமன்ற உறுப்பினர் நூறு நூறு வெள்ளி தரேன்னு ஒத்துக்கிட்டார். அவர் இருக்கிறப்போ பள்ளி மூடப்படக் கூடாதுன்னு இந்த திட்டம். வர தேர்தல்ல செல்வாக்கு கொறஞ்சிரும்னு… ”

“அதுக்கு முன்ன?”

“முன்ன உள்ள ஆளுங்கச்சியும் இதத்தான் பண்ணாங்க, ஆனா தொடர்ந்து பணம் கொடுக்காததானால பிள்ளங்கள அனுப்ப மாட்டேட்டாங்க! அப்பல்லாம் ரெண்டே மாணவர்தான். அந்த ரெண்டு பேருமே லீவ் போட்டுட்டா பள்ளி ‘ஓ’ன்னு ஓஞ்சிக்கிடக்கும்.”

“ப்ச்சே.” என்று பார்வையை வேறுபக்கம் திருப்பினார். மேகங்கள் விலகி வானம் நிர்வானமாய் திறந்து கிடந்தது. பறவைகூட்டங்கள் சிறகடிக்காமல் ஓய்ந்து கிடந்தது. வெண்மை வெளி கண்களைக் கூசவே மீண்டும் ஆசிரியர் முகத்தைப் பார்த்தேன். மேலும் சில தகவல்கள் சொல்லத்துடிக்கும் ஒளி கண்களின் வழியே வெளிப்பட்டது.

“சார், சுங்ஙை கோப்ல புது தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டுறதுக்கான அரசு கொடுத்த நெலம் தயாரா இருக்கு. இந்த வட்டாரத்துல இருக்கிற நாலு பள்ளிக்கூடத்துப் புள்ளைங்கள அங்க கொண்டுபோற மாரி திட்டம் . ஆனா இரு கச்சிக்காரங்க சிண்டுமுடி சண்டையில அது அப்படியே பெண்டிங்கல இருக்கு.

நான் மனதில் கணக்குப் போட்டுப் பார்த்தேன். நான்கு பள்ளிக்கூடத்தில உள்ள மாணவர் எண்ணிக்கைய சேத்தா ஐம்பதாவது வரும்.சுங்ஙை கோப் சிறு பட்டணத்துல உள்ள இந்திய மக்கள் தொகையில இன்னோரு நூறு மாணவராவது இருப்பாங்க. புது பள்ளிய கம்பீரமாவே நடத்தலாம்.

“சார் பள்ளிவிட்டுப் போகும்போது வாங்க நான் அந்த எடத்த காட்டுறேன்?”

……….

சுங்ஙைபோப் சிற்றூரின் சாலையை விட்டு ஒரு ஐம்பது மீட்டரில் அந்த நான்கு ஏக்கர் நிலம் இருந்தது. நிலத்தைச் சுற்றி வேலியிடப்பட்டிருந்தது. வீடுகளுக்கு நடுவில் வாகாக அமைந்திருந்தது .சுற்றிலும் தனித்தனி வீடுகள் . பல வீடுகளின் வாசல்களில் மாவிலைத் தோரணம் கட்டியம் கூறின. இந்தியர் நடமாட்டம் நம்பிக்கையைக் கூட்டியது.

………..

மறுநாள் காலை மணி ஒன்பதுக்கெல்லாம் ஒரு கார் அலுவலகத்தின் முன் வந்து நின்றது.

“சார் ஒங்ககிட்ட கொஞ்சம் பேசணும்….மூவருக்குமே இறுகியிருந்தது முகம். என்னைக் கண்மாறாமல் பார்த்தபடி ஆளூயர பென்சில் குச்சிபோல விறைப்பாக நின்றிருந்தார்கள்.”

“உள்ள வாங்க….வணக்கம்” எட்டுக்கு எட்டடி அகலம் கொண்ட அறையில் நெருக்கி நெருக்கி அமர்ந்தால்தான் நான்குபேரும் உட்காரமுடியும். மேலும் இரு நாற்காலிகளை அலுவலக அறையிலிருந்து கொண்டுவந்து போட்டேன். ஒருவர் கோபமுகத்தோடு நாற்காலியில் உட்காராமல் நின்றபடியே இமைக்காமலும் வேறுபக்கம் பார்வையைத் திருப்பாமலும் என்னையே நோக்கிக்கொண்டிருந்தார்.

“சார்….என்னமோ புது ஸ்கூல் கட்டுற திட்டத்துல எறங்கியிருக்கீங்களாம்? நாங்க ஆளுங்கட்சி கிளைக்காரங்க. நேத்து நெலத்த போய்ப் பாத்துட்டெல்லாம் வந்தீங்களாம்?”

“ஆமாம் பட்டணத்துல ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் வந்தா அது பெரிசா வளரக்கூடிய வாய்ப்பிருக்குமேன்னு …………”

“என்ன சார் வெங்காய வாய்ப்பு…? இந்தப் பள்ளி ஒரு வரலாறு சார்! என்பது வருச வரலாறு. இது இருக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்ன?”

“கொஞ்சம் சிந்திச்சிப் பாருங்க பள்ளிக்கூடம்னா எல்லா வசதியும் இருக்கணும். மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை, மத்த கல்வி வசதிங்க எல்லாம் இருக்கணும், அப்போதான் கல்விச் சூழல் இருக்கும்…அங்க ஒரு பள்ளி இருந்தா இதெல்லாம் கைகூடுமேன்னு சிந்திச்சிப் பாத்தேன்.”

“இப்போ என்ன கொற இங்க?மாணவர்கள மடியில வச்சிச் சொல்லித் தரலாமே. சின்னுதா இருந்தா சிறப்பா இருக்குமே….நீங்க வேலைக்கு வாங்க, சம்பளம் வாங்கிட்டுப் போங்க…இந்த ஸ்கூல இல்லாமா ஆக்குற வீணான வேலையெல்லாம் உங்களுக்கு வேணாம், சொல்லிட்டோம்.”

“ இல்லாம ஆக்குறேன்னு ஏன் நெனைக்கறீங்க?பெரிய பள்ளியாயிருந்தா உறுதியா காலங் காலமா நெலைக்குமேன்னு சொல்லுங்க. எல்லா வசதியும் கொண்ட நல்ல பள்ளிக்கூடம் கெடைக்குமே! கூட்டமா படிக்கும்போது மாணவர்களுக்கு ஒரு போட்டி மனப்பானமை வளரும் , மகிழ்ச்சி இருக்கும்…நம்ம.. பிள்ளைகளோட நன்மைக்குத்தானே எல்லாம்…”

“ என்ன பெருசா பிள்ளகளோட நன்மைய பாத்துட்டீங்க? எங்களுக்குத் தெரியாத அக்கறை! உங்க சுயநலத்த கருதி இத இல்லாம செய்வீங்களா?”

இதுவரை பேசாமல் இருந்த ஒருவர் சொன்னார். “சார் நாலு பள்ளிக்கூடம் ஒரு பள்ளிக்கூடமா ஆனா, நாலு தலைமை ஆசிரியர் பதவி ஒரு தலைமை ஆசிரியர் பதவியா கொறஞ்சிடிடுமே,” என்றார்.

“இங்க பாருங்க… இன்னொரு பெரிய பள்ளிக்கூடம் உருவாவப் போதுன்னு நெனைங்க. நம்ம எனத்துக்கு நெறைய வேல வாய்ப்பு கூடுமேங்குற கோணத்துல சிந்திச்சிப் பாருங்க! ஏன், வர லட்சுமிய வாசல்லியே நிப்பாட்டணும்?”

“நீங்க இந்த ஸ்கூலுக்குக் கருமாதி செய்லாம்னு பாக்குறீங்க.மக்கள் மனச மாத்தப் பாக்குறீங்க…ல!”

“அப்படியெல்லாம் பேசாதீங்க…இந்த நாட்ல புது தமிழ் ஸ்கூல் கெடக்கிறதே குதிர கொம்பா இருக்கு…”

“என்ன சார்…நாங்க கிளிப்புள்ளமாரி சொல்லிக்கிட்டே இருக்கோம்..உங்க காதுல என்னா பஞ்சா வச்சி அடைச்சிருக்கீங்க?” மூவரில் மேலுமொருவர் சடக்கென்று எழுந்து ஒற்றை விரலுயர்த்தி…”ஓ…. நீங்க எதிர்க்கட்சி ஆளா? ஒங்கள பதிவியிலேர்ந்து தூக்கிடுவோம்.” என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறினர். எஞ்சின் உறுமிப் புகை கக்கியது. ஒரு வட்டக் கரும்புகை காட்சியை மறைத்து நின்றது. கொஞ்ச நேரத்தில் சற்றே கலைந்து இயல்பான காட்சிக்கு வழிவிட்டது.

சற்று நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஒரு மாணவரை ஏற்றிக்கொண்டு வந்திருந்தார் ஒருவர். எனக்குள் ஏறியிருந்த அழுத்தமும், குழப்பமும் மேலும் எகிறிவிடுமோ என்று அஞ்சினேன். இவர் எந்தக் கட்சிக் காரரோ!

“சார்… இவன் என்னான்னு கேளுங்க சார்…” அப்படியென்றால் இது வேறு ஒரு பிரச்னை! மாணவன் தலையை உயர்த்தாமல் சாயங்கால வேளை தூங்குமூஞ்சி மர இலைகளைப்போலத் தொங்கப் போட்டிருந்தான். அவர் என்னையே பார்த்தபடி இருந்தார்.” கேளுங்க சார்?” என் மனக் குழப்பம் சீராகமல் பிடிவாதம் செய்தது. இவர்களுக்குள்ளிருக்கும் பிரச்னை என்னை மேலும் குழப்பியது.

“உள்ள வாங்க… என்னையா? என்ன வேணும் ஒனக்கு?” என்றேன் மாணவனை நோக்கி. கொஞ்சம் விலகிவிட்டிருந்தது சற்றுமுன்னர் மல்லுக்கு நின்ற அழுத்தம்.

“கேளுங்க சார்…இவன் என்னதான் நெனக்கிறான்னு…”மாணவன் குனிந்து நின்ற தோற்றத்திலிருந்து வாய்த் திறக்க வாய்ப்பில்லை எனத் தெரிந்தது.

“நீங்களே சொல்லுங்க….என்ன அவனுக்கு ?”

“சார் …… அவ்ளோ செலவுபண்ணி ஸ்கூல்ல சேத்தா…போமாட்டேன்னு ஒத்த கால்ல நிக்குறான் சார்”

“ஏன்…. படிக்க இஷ்டமில்லியா?….”

“அத ஏன் சார் கேக்குறீங்க….ஸ்கூல்ல நெறைய பார் படிக்கறாங்களாம்.. நெறையா வாத்தியாருங்களாம்..அவனுக்குக் கூட்டத்தப் பாத்தா பயமா இருக்காம். இவன் தனியா இருக்கிறத பாத்து மத்த பிள்ளைங்க கேலி கிண்டல் பண்ணுதுங்களாம். இந்த ஸ்கூல்லதான்சார் படிச்சான்.”

போன ஆண்டு ஒரே ஆறாம் ஆண்டு மாணவன் அவன். அது மட்டுமல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக வகுப்பிலும் அவன் ஒருவனே தனித்து இருந்திருக்கிறான். இந்த எஸ்டேட்டிலும் ஒற்றைக் குடும்பமாய் வாழ்ந்திருக்கிறார்கள்.

“ உங்களுக்கு எத்தன புள்ளைங்க?”

“இவன் ஒருத்தன்தான் சார்”

“ஒங்க உறவினர் வீட்டுக்குப்போன அங்க எப்படியிருப்பான்?”

“சார்..யார்ட்டேயும் ஒரு வார்த்த பேச மாட்டான். யார்ட்டேயும் சேராம தனியாத்தான் இருப்பான். வா வூட்டுக்குப் போலாம்னு தொல்ல பண்ணிக்கிட்டே இருப்பான் சார்.” அவன் எதிர்நோக்கும் பிரச்னை எனக்குள் மெல்லத் துலங்கத் தொடங்கியது. இது ஒரு போபியா. சமூக மனப் பதற்ற நோய் (social anxiety disorder) சமீபத்தில்தான் படித்தேன்.

அவனைச் சற்று நேரம் வேளியே இருக்குபடிச் சொல்லிவிட்டு.நான் சொன்னேன். “இவன் பொறந்ததிலிருந்தே தனியாவே இருந்திருக்கான். புதுசா கூட்டத்த பாத்ததும் இவனுக்கு ஒருவித விலகல் மனம் வந்திடும். பள்ளியில வீட்ல் ன்னு, அந்த வாழக்கை அவனுக்குப் பழகிப்போயிருக்கு. காட்டுலியே இருந்த மிருகத்த மனுஷன் வாழ்ற எடத்துல விட்டா, அது பரிதவிச்சு அலைமோதுமில்ல, அதுபோலத்தான் அவனுக்கும் நேர்ந்திருக்கு. அவன் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புங்க.. பழகப் பழகச் சரியாயிடும்…வகுப்பு ஆசிரியர்ட்ட இதபத்தி தெளிவா சொல்லுங்க. அவங்க அவனுக்கேத்த நண்பர் தேடித்தருவாங்க. கொஞ்ச நாள்ள சரியாயிடும்” என்று தேறுதல் சொல்லியனுப்பி வைத்தேன்.

மூன்று நட்கள் கழித்து இன்னொரு குழு வந்தது. வரவேற்றேன்.

“சார் …. சுஙைப்கோப்புல அந்தப் பள்ளிக்கூட நெலம் நாங்க பாத்தது சார். எல்லாம் கனிஞ்சி வந்தப்ப ஆட்சி மாறிடிச்சு. இப்போகூட ஒன்னும் கெட்டுப் போகல. நீங்க எங்களோடஒத்துழைச்சீங்கனா பள்ளிக்கூடத்த எழுப்பிடலாம். மத்த மூனு பள்ளிக்கூட சனத்துகிட்டேயும் நம்ம கைதான் ஓங்கியிருக்கு! அவனுங்க கெடக்கிறானுங்க சார்!”

“அப்பையே நீங்க இத முழுமூச்சா செய்திருக்கணும்”

“எங்க …சார் சனங்க விட்டாங்க. ஒத்த கால்ல நின்னாங்க இது இருக்கனும்னு. எதிர்கட்சிக்காரங்க ஏத்தி விட்டானுங்க வேற! இதுக்கு எதிர்காலம் இல்லேன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.”

அப்படியென்றால் ஏன் இவர்கள் ஆட்சியில் இப்பள்ளி இருக்க வேண்டுமென்று மெனக்கட்டிருக்கிறார்கள். ஆமாம் அதுவும் அரசியல்தான். அப்போதும் இது வரலாறு என்று சொல்லித் தங்கள் செல்வாக்குக்குக்காகப் பாடுபாட்டிருப்பார்கள். பொதுமக்கள் குரலை எதிரொலித்துத் தர்மத்தைத் தோற்கடித்திருக்கிறார்கள்.

ஆனால் எனக்குள் அந்நிலத்தில் புதிய பள்ளி எழுவது தீர்க்கமான முடிவு என்றே பட்டது. அது தொடர்பாக ரகசியமாகச் சில வேலைகளில் மும்முரம் காட்டி வந்தேன். பழைய கோப்புகளைப் புரட்டினேன். கல்வி இலாகாவில் இது தொடர்பான மேலதிக விபரங்களைச் சேகரித்தேன். தெரிந்த மலாய் அதிகாரிகளிடம் பேசி வந்தேன்..பிற பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமும் கலந்து பேசினேன். சில நடைமுறைச்சிக்கல்கள் இருந்தன.

காலம் விரைந்து ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு நாள் நண்பகல் பன்னிரண்டரை இருக்கும்.“சார்…சார் ,”என்று ஒரு ஆசிரியை ஓடி வந்தாள். என் வகுப்புப் பையனுக்குப் பசி மயக்கம் சார். காலையிலேர்ந்து ஒன்னும் சாப்பிடலயாம். தொவண்டு தொவண்டு விழுறான். நம்ம ஆசிரியர்கிட்டே உணவு இருகான்னு கேட்டுப் பாத்தேன். யார்ட்டேயும் இல்ல.நீங்க ஏதும் வச்சிருக்கீங்களா?”

“ என்னிடமும் இல்லையே. வீட்டிலிருந்து கொண்டு வந்ததை சாப்பிட்டு கழுவிவைச்சிட்டேனே”. ச்சே..இதைச் சொல்ல எனக்கே வெட்கமாக இருந்தது. முன் தயாராக ஏதும் வாங்கி வைத்திருக்கலாம்.

“டியூட்டி ஆசிரியர்கிட்ட சொல்லி அவன ஒடனே கூட்டிட்டுப் போய் ஏதும் சாப்பிட வாங்கித் தரச் சொல்லுங்க. ஒன்னு கிடக்க ஒன்னு நடந்திரப் போவுது. இந்தாங்க பணம்.” மேய்ன் சாலைக்குப் போய் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில்தான் ஒரு கம்பத்துக் கடை உண்டு! ஆசிரியரின் கார் என்னைக் கடந்து விரைந்தது.

கார் கண் மறைந்த பிறகு எனக்கு மீண்டும் புதிய பள்ளி நினைப்பு மேலெழுந்தது.

பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் வெறுமனே கிடப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான்கு பள்ளிகளும் ஒன்றிணைந்து இயங்கினால் உண்டாகும் பலன்கள் பற்றியே யோசித்தவண்ணம் இருந்தேன். இன்று போகும்போது ஒரு எட்டு பார்த்துவிட்டுப் போகவேண்டும்.

காரைச் செலுத்திக் கொண்டே நிலப்பகுதியை நோட்டமிட்டேன். என் பார்வைக்கு என்றுமில்லாத தோற்றம் பளிச்சிட்டது! சரலைக் கற்குவியலும், சிமிந்து மூட்டைகளும், கலவை இயந்திரமும், கூடவே சாரம் எழுப்புவதற்கான தூண்களும், பலகைகளும் குவியல் குவியலாய்க் கிடந்தன.

காரை ஓரம்கட்டி நிறுத்தி விரைந்து இறங்கினேன், கார் கதவைக் கூட மூடும் பிரக்ஞையற்று!

சற்றுத் தள்ளி, ஆளுயரத்துக்கு மேல் ஒரு தகவல் விளம்பரப் பலகை நிமிர்ந்து நின்றிருந்தது. ‘இது மலாய்ப் பள்ளிக்கூடத்துக்கான நிலத்திட்டம். 2022ல் பள்ளி கட்டி முடிக்கப்படும்’ என்றும் மேலும் சில கூடுதல் விபரங்களும் எழுதப்பட்டிருந்தன. என்னால் அதற்கு மேல் வாசிக்க முடியவில்லை. சதுரங்கத்தில் செக் மேட் வைக்கப்பட்டதுபோல் என்னிலை ஸ்தம்பித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *