பயித்தம் செடிகளுக்கு பிறகான காலைப்பொழுதுகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 20,275 
 
 

காலை நேரம். மேகம் இறுக்கமாக இருந்தது. மழை வருவது போல புழுக்கம் நிரம்பி வழிந்தது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து நிரம்பி கிடந்தன.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஊரின் வடக்கே இருந்த கன்னித்தோப்பின் நாவல்மர நிழலில் புழுங்கை என்கிற செந்தாமரை நின்று கொண்டிருந்தான். தோப்பில் நிழல் மெல்லிய இருள் போல் ஊடுறுவியிருந்தது. சித்ராவை இங்கு வரச்சொல்லியிருந்தான். அவள் வந்தால் நடந்த சம்பவத்தை சொல்லி ஒரு முடிவை எட்டிவிட வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இவன் சொன்ன நேரத்தில் அவள் வந்திருக்கவில்லை.

இவன் அமர்ந்திருந்த தரையில் ஓடிய வேர்கள் இடையே மரத்தின் இலைகள் உதிர்ந்து கிடந்தன. மக்கிய மர வாசனையும் வந்து கொண்டிருந்தது. உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் புற்றிலிருந்து எறும்புகள் வரிசையாக வருவது போல் நினைவிலிருந்து எழத்தொடங்கியது.

“அது ஒரு புதன் கிழமை.”

காட்டாற்றில் இறங்கி நடக்கத் தொடங்கினான். அவனை எல்லோரும் புழுங்கை என்றே அழைத்தார்கள். சிறு சிறு பள்ளங்களில் தேங்கி நின்ற குழம்பலான நீரில் அயரை மீன்கள் நீந்திக்கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது. விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக இருந்தால் பங்குனி மாத பனி வெண்மையாக இறங்குவது தெரிந்தது. ஆற்றில் மணற்பரப்பின் மீது படிந்த வண்டலில் கால் வைத்தான். சதக் என்று நீர் தெறித்தது. கூப்பிடும் தூரத்திலிருந்த தெருவில் கூட்டிலிருந்து திறக்கப்படும் கோழிகளின் கூவலும், சிறகடிப்பும் கேட்டது. தெருவிலிருந்து அடிபம்பில் யாரோ தண்ணியடிப்பதும், கதவு தாழ் திறப்பதும் காதில் மிக துல்லியமாக விழுந்தது. ஆற்றின் கரையோரத்தில் வளர்ந்திருக்கும் கோரையை விலக்கி கொண்டு கரையில் ஏறினான்.

ஏரிக்கரையை பார்த்தான் மிதமான பனியால் அந்த பகுதி மறைக்கப்பட்டிருந்தது. கரிச்சிட்டன் குருவியொன்று தென் திசையிலிருந்து பறந்து வடக்கேயிருந்த ஏரிக்கரைப் பக்கமாய் போய் கொண்டிருந்தது. நூறு குழி நிலத்தில் விதைத்து விட்டிருந்த பயறு நல்ல விளைச்சல் கண்டிருந்தது. பள்ள வயலில் பயிறு விளையாது என்று, பண்ணையில் வருடா வருடம் குத்தகைக்கு விட்டு விடுவார்கள். நூறு குழிக்கு மூன்று மரக்கால் பயிறோ, உளுந்தோ எது விதைக்கிறார்களோ குத்தகையாக அதனை கொடுத்துவிட வேண்டும். ரொம்ப காலத்துக்கு பிறகு, இந்த பருவத்தில் இப்படியொரு விளைச்சல் கண்டிருப்பது நம்முடைய அதிர்ஷ்டம் என்று சொல்லி புழுங்கையின் அம்மா அமுதா கர்வப்பட்டாள்.

வாழை கொல்லையார் வீட்டில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, மிச்சப்பட்ட இட்லியும், சட்னியும் வாங்கி கொண்டு வருவதற்குள் எப்படியும் இருபது குழி பயிறை பிடுங்கி விடுவேன் என்று தான் அமுதாவிடம் சொல்லி விட்டு கிளம்பியிருந்தான். ஏரிக்கரைக்கு வந்து வயலில் இறங்கும்போது கிழக்கே சூரியக் கதிர்கள் உயிர்ப்புடன் மேலெழும்பிக் கொண்டிருந்தது. வயலில் இறங்கும் முன் “அங்காளம்மை தாயே இந்த வருஷம் எங்கள காப்பாத்திபுட்டே… ஆவணி மாசத்துல மூணு கெழமை வந்து அம்மாவும் நானும் உன் சன்னதியில் படுக்குறோம்” என்று கோயில் இருக்கும் திசையைப் பார்த்து கும்பிட்டு விட்டு பயிறுச் செடியை பிடுங்கத் தொடங்கினான்.

செடிகளின் இலைகள் மீது சாம்பல் படிந்திருந்தது. கொத்து கொத்தாக சாய்ந்திருந்தது காய்கள், பல பழுத்தும், சில பழுக்கும் பருவத்திலும் இருந்தது. செடிகளிலிருந்து பனியின் ஈரம், கீழே வயல் மண்ணில் கசிந்து கொண்டிருந்தது. வயலில் சில பள்ளமான பகுதிகளில் செடிகள் அதிக ஊட்டத்தில் திமுத்துப் போயிருந்தது. கைகளால் அவற்றை பிடுங்க முடியாது, கதிரருவாள் கொண்டு தான் அறுக்க முயும். வயலில் வண்டல் இறுகிக்கிடந்தது. தெரங்கிக் கிடந்த செடிகளையும், சள்ளையான சில கொடியோடிய பயிறை மட்டுமே பிடுங்கினான். சூரியன் மெல்ல ஏறத் தொடங்கியது. தெற்குவெளி பக்கம் போயிருப்பாள் சித்ரா என்று இவனுக்குத் தெரியும். நாலைந்து நாட்களாக ‘சம்பளத்துக்கு பயிரெடுப்பு தொடங்கியிருந்தார் பட்டாளத்து ராமையன்.’

“அங்கு வேலைக்கு போக வேண்டாம், என்று சொல்ல வேண்டும், ராமையன் பொம்பள விஷயத்தில் மோசமான ஆள் என்று கேள்விப்பட்டிருந்தான்.”

காலைப்பொழுதின் பிரகாசமான வெயில். இவனுக்கு சுறுசுறுப்பைக் கிளர்த்தியது. முடிந்தவரை பிடுங்கிப் பார்த்தான். அழுத்தம்கொடுத்த சில செடிகளிடம் மல்லுக்கு நிற்க வேண்டியிருந்தது. காட்டாற்று கரையோர மர காடுகளில் ஆள் காட்டி குருவியின் குரல் கேட்டது. வன்ட்டான்… வன்ட்டான்… யாரோ ஆள் வருகிறார்கள். பிடுங்குவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து நின்று பார்த்தான். ஒருவருமில்லை. உடல் வியர்வையால் பிசுபிசுப்பு கண்டிருந்தது. குருவி மீண்டும் சிரிச்சிடவும் நிமிர்ந்து பார்த்தான்.

ஒரு ‘ஆள்’ ஆற்றுக்கரையில் ஒரு ஜோடி காளை மாடுகளை ஓட்டிக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தான். அது வண்டிக்கார கோபாலாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அமுதா கீழத்தெரு எல்லையில் கையில் பிளாஸ்டிக் வாளியை எடுத்து கொண்டு கைகளை காற்றில் சாசுவதமாக ஆட்டியபடி நடந்து கொண்டிருந்தாள். வாளிக்கு உள்ளிருந்து மற்றொரு பாத்திரம் முணுமுணுக்கும் ஓசை கேட்டது.

“வாளியில என்னா வெச்சிருக்க அமுதா…”

“பண்ணையில இட்லி கொடுத்தாங்க… வாங்கிட்டுப் போறேன்… வேணுமா?”

“வேண்டாம் சும்மா கேட்டேன், பயறு எடுத்தாச்சா?”

“புழுங்கைதான்… எடுக்கப் போயிருக்கான். இட்லி கொண்டு போயி அவன்கிட்டே கொடுத்து பயிறு அடிக்க பண்ணைக்கு அனுப்பனும்…”

எதிரே வந்த கிளியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் அமுதா. பைக் ஒன்று புழுதிப்பறக்க சாலையில் தடதடத்துப் போய்க் கொண்டிருந்தது. ‘சரி நேரமாயிட்டு, அவன் பசி தாங்க மாட்டான் நா வர்றேன்!’ மல்லுக்கட்டி பிடுங்கியதில் சோர்வு ஏற்பட்டது. வியர்வை பெருகிறது &ணீனீஜீ; பசித்தது &ணீனீஜீ; தாகம் வேறு எடுத்தது. வெயிலை மீறி காலைப்பொழுதின் ஈரமும், தூரத்து தேக்கு மர காடுகளின் குளிர்ந்த காற்றும் இதம் வருடியது. ஆள்காட்டி குருவியின் குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான்.

அம்மா வந்து கொண்டிருந்தாள். அவள் நடையில் ஒரு வேகம் தெரிந்தது. பிடுங்கிய பயறு செடிகளை அள்ளும் வசதிக்காக நாலைந்து பிடியளவு செடிகளை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்தான். பிடுங்கிய இடம் முழுவதும் பழுத்தும் காய்ந்ததுமான செடிகள். சிறு சிறு முட்டாக வைத்திருந்து பார்ப்பதற்கு அழகாக தெரிந்தது. பயிறு செடியின் உலர் வாசனை காற்றெங்கும் வீசியது. மடையன்கள் கூட்டமாக பறந்தது. காட்டாற்று அழிஞ்சைக் காட்டில் குயில்கள் இரண்டு எதிர்பாட்டு பாடிக் கொண்டிருந்தன. அமுதா வரப்பில் நடந்து வந்து வயலில் இறங்கினாள்.

“எண்டா… பட்டமா… புடுங்கமா… குறுக்கும் நெடுக்குமா புடுங்கியிருக்கே” செடி இறுகிக் கெடக்கு… அரிவா இருந்தாதான் அறுக்க முடியும்.

“சரி! இட்லிய தின்னுட்டு வெயில நின்னு எப்படி பயிறடிக்க முடியும். கொஞ்சம் பழையது சோறு கொண்டு வந்து இருக்கலாம்முல்ல…”

பதிலேதும் சொல்லாமல் அமுதா வரப்போரமாக நின்று பயறு செடிகளை பிடுங்கத் தொடங்கினாள். குனிந்து எழும்போது இட்லியும், சட்னியும் தொண்டைக்கு வந்தது. கொஞ்சம் நிமிர்ந்து நின்றாள். முடிந்தவரை புழுங்கை பிடுங்கிதான் போட்டிருந்தான். காலிப் பாத்திரங்களை வரப்பில் வைத்துவிட்டு நடக்கத் தொடங்கினான்.

வயல்வெளிகளில் தட்டுக்கிளிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. வரப்பில் அவன் வேகமாக நடந்து போவதைப் பார்த்தாள் அமுதா. நாலு மாத குழந்தையாக அவனை தூக்கிக்கொண்டு வந்தபோது மலங்க மலங்க விழித்துக்கொண்டு திசையறியாத குருவி குஞ்சுவை போல விழித்துக் கொண்டு கிடந்தான். அமுதாவின் பெரியப்பா மகளான சாந்தா தான் இவனை பெற்றவள். இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என சாந்தாவின் கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து துன்புறுத்த தொடங்கினான்.

ஒருநாள் போதை முற்றிய நிலையில் கடும் மூர்க்கத்தோடு புறவாசலில் இருந்த அம்மிக்கல்லில் தள்ளிவிட்டான். பிறந்து நான்கு மாதமே ஆன சிசுவாக புழுங்கை பயல் பாயில் கிடந்து அழுது கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தினர் பார்த்து செய்தி அனுப்பினர். அங்கு போய் சேர்ந்தபோது பக்கத்து வீட்டு பாட்டி பாயருகே உட்கார்ந்து ஒப்பாரி பாடி குழந்தையை ஆப்பாட்டிக்கொண்டிருந்தாள். பாட்டியின் குரலை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அன்று தூக்கி தோளில் போட்டவள் தான் அமுதா. கையடக்கமான மரப்பாச்சி போலிருந்தவன். இன்று ஆறடி உயரத்தில் கனசதுரமான முக அமைப்பில் மாநிறத்தில் குழிவிழும் கன்ன சிரிப்பில் இருபத்தொரு வயதின் வனப்பில் வளர்ந்து நிற்கிறான்! அவன் நடந்து செல்வதை பின்னிருந்து பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு வியப்பு ஏற்படுகிறது.

“எத்தனையோ தடவை அக்கம் பக்கத்தினர், புழுங்கையிடம் உன்னை பெற்றவள் அமுதா இல்லை என்று சொன்னபோதும் ஒரு தடவை கூட என்ன இப்படிச் சொல்கிறார்கள் என்று கேட்டதில்லை இவன்” வேகமாக நடந்தான் தெற்கு வெளியில் பண்ணையின் களம் இருந்தது. தொடர்ந்து ஒரு வார காலமாக எடுத்திருந்த உளுந்து கட்டுகளை ஒரு பகுதியிலும், பயித்தம் கட்டுகளை ஒரு பகுதியாகவும் பிரித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான்கு ஆட்களும், அவர்களின் வீட்டுக்காரிகளும் இந்நேரம் ‘களத்துக்கு’ வந்திருப்பார்கள் என்று நினைத்தான், அதற்குள் பயிரெடுத்துக் கொண்டிருக்கும் சித்ராவை ஒரு தடவை பார்த்து விட்டு செல்லலாம் என்று தோன்றியது.

கிராமத்திலிருந்து தெற்கே விரிந்து கிடந்த வயல்களில் அங்கங்கே பெண்களும், ஆண்களுமாய் பயிறு உளுந்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். தண்ணீர் வசதி கொண்டவர்கள், பருத்தி விதைத்து, பாத்திக் கட்டிக்கொண்டிருந்தார்கள். பாசனத்துக்கான பெரிய வாய்க்கால் ஓடும் வயலோரமாக இருந்த வயலில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உளுந்து பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் தான் சித்ரா இருப்பாள் என்று இவனுக்கு தெரியும்.

புளியங்கொட்டை நிறத்தில் தாவணியும், மரநிறத்தில் பாவாடையும் தாவணியும் அணிவாள், ரவிக்கையின் நிறம் அடிக்கடி மாறும், சில நேரம் கருப்பு, சில நேரங்களில் இளம் சிவப்பு! டவுனுக்கு மற்றும் ஏதேனும் விசேஷமாக வெளியே செல்ல நேர்ந்தால் அதுக்கென்று சில ஆடைகளை வைத்து இருக்கிறாள். பெரிய வாய்க்காலை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினான். சாப்பிட்டிருந்த ‘இட்லிகள்’ எங்கோ ஒரு மூலையில் கிடந்தது. சாப்பிட்ட திருப்தியில்லை. இரண்டு வயல்களை தாண்டி தோப்புபோல் குறுக்கிட்ட திடல் பகுதியை கடந்த போது தோப்பில் காய்த்து குலுங்கிக் கொண்டிருந்த இலந்தைப் பழங்களின் வாசனை. நின்று தோப்பைப் பார்த்தான். தோப்புக்கு செல்ல புல்களின் ஊடே காலளவு சோடு விழுந்திருந்தது. வேலி காத்தான் முள் கிளைகள் அங்கங்கே கிடந்தன. மூன்று மரங்கள் காய்த்துக் கொண்டிருந்தன.

முதல் மரத்தில் பெரிய காய்களும், இரண்டாவது மரத்தில் சின்ன காய்களும் மூன்றாவது மரத்தில் நடுத்தரமான நல்ல சுவையும், மணமும் கொண்ட பழங்கள் காய்த்தன. இந்த இடம், புழுங்கைக்கு, மிகவும் பிடித்தமான இடமாக ஆகிவிட்டிருந்தது. கடந்த ஐப்பசி மாதத்தில் சித்ரா புல் அறுக்க வந்தபோது அந்த இலந்தை மறைவில் வைத்துதான் அவள் உதட்டை கடித்தான். வலியால் துடித்த அவள் இலந்தை ‘முள்ளை’ எடுத்து தோள்பட்டையில் குத்தினாள். முள் குத்திய காயம் ஆற மூன்று நாட்கள் ஆகிவிட்டது.

அவள் புல்லறுக்க வரும் அந்தி பொழுதுகளில் இருள் குவியும் தருணங்களில் இங்கே தான் அவளை வரும்படி கேட்டுக்கொள்வான். வேகமாக திடலுக்குள் புகுந்து இலந்தை மரத்தருகே சென்றான். பழுத்த பழங்கள், புல் மண்டிய இடங்களில் கிடந்தன. எடுத்து சுவைத்துப் பார்த்தான். முதல் மரத்தின் பழம் எப்போதும் போலவே லேசான புளிப்புத் தன்மையும், பிசைந்த ரொட்டி மாவு போலவும் ருசியளித்தது. இரண்டாவது மரத்தை கடந்து மூன்றாவது மரத்துக்கு சென்று பழங்களை பொறுக்கினான். கிளைகளில் படர்ந்து மெல்லிய சிவப்பு நிறத்தில் பழங்களும், இளம் மஞ்சள் நிறத்தில் செங்காய்களும் அடர்ந்து கிடந்தன கிளையில். பள்ளி விடுமுறை என்றால் சிறுவர்கள், படையெடுத்து வந்து இருப்பார்கள். பள்ளி நாட்கள் என்பதால் எவரும் வரவில்லை என்று நினைத்தான். அடிமரத்தின் மேலே கிளைத்திருந்த கிளைகளை பலத்தை திரட்டி இரண்டு கைகளால் கோர்த்து உலுக்கினான்.

பழங்களும், செங்காய்களும் உதிர்ந்தன. நல்ல கனிந்த பழங்களை வாயில் போட்டு சுவைத்தான். தோப்பில் கடைசியில் இருந்த நாலைந்து வேப்பம்மரங்களில் அருகேயிருந்த நூனாமரத்தில் இரண்டு இரட்டைவால் குருவிகள் உட்கார்ந்து இவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. சேகரித்த பழங்களை கைலியில் போட்டுக்கொண்டு நடக்கும்போது யாரோ தோப்புக்குள் வருவது தெரிந்தது. லெட்சுமி வந்துக் கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும் நமுட்டு சிரிப்பு சிரித்தாள். சித்ராவோடு பழகுவது இவளுக்கு தெரியும்.

சித்ராவும், இவளும் நெருங்கிய தோழிகள். அவளைப் பார்த்ததும் இங்கு ஏன் இவள் வந்தாள்? என்று நினைத்தான் அவள் முகத்தைப் பார்த்து… “பழம் பொறுக்கத்தான் வந்தேன். முன்னாலேயே வந்து எல்லாத்தையும்… பொறுக்கிட்டியா.”

சித்ராவைப் பற்றி கேட்க நினைத்து சட்டென்று அடக்கிக் கொண்டான். ஒரு மாதிரியாக பார்த்து விட்டு மரத்துக்கு கீழே பழங்கள் கிடக்கின்றதா என்று தேடினாள். பூச்சி பிடித்த, சரியாக பழுக்காத சூம்பிய காய்கள் கிடந்தன.

“ஒன்னையும் காணல… எல்லாத்தையும் பொறுக்கிட்டியா கொஞ்சம் தா…” கைலியில் சேகரித்திருந்த பழங்களை அள்ளிக் கொடுத்தான். முந்தானையை விரித்து வாங்கும்போது அவள் உதடுகள் மெல்ல துடித்தன. மாராப்பு விலகியது. கீழே குனிந்து கொண்டு பழங்களை கொடுத்துவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினான். ‘சித்ராவுக்கு மட்டும் உலுக்கி பழம் கொடுக்குற…!’

அவள் சொல்வதை கேட்டதும், நடுக்கமாய் இருந்தது. தொண்டைக்குள் ஏதோ உருண்டது. இனம்புரியாத அதிர்வில் உடல் குன்னியது. தாகமாய் இருந்தது. நடையை துரிதப்படுத்தினான். வயலில் உளுந்துச் செடியை பெண்களோடு பெண்களாய் நின்று குனிந்து பிடுங்கியவள் நிமிர்ந்து நின்று அர்த்தம் தொனிக்கும் வகையில் பார்த்தாள் சித்ரா. வரப்போர புண்னை மர நிழலில் நின்றிருந்த ராமையன் புழுங்கையைப் பார்த்தான்.

மரத்தில் புறாக்கள் நாலைந்து சிணுங்கியது. சமிக்ஞை எதுவும் செய்ய முடியாமல் நாலைந்து தடவை திரும்பி மட்டும் பார்த்து விட்டு நடந்தான். களத்தில் ஆட்கள் பயறு கட்டுகளை கலைத்து செடிகளை உதறி கொண்டிருந்தார்கள். பெண்கள் வந்திருக்கவில்லை. நேற்று செடிகளை கட்டி கொண்டு சேர்த்தபோதே பச்சையாக இருந்தது. நன்றாக உலர்ந்தால் தான் செடியிலிருந்து தானியம் உதிரும்.

“ஏண்டா இவ்வளவு நேரம் கழிச்சு வர்றே”

ஏரிக்கரையில பயறு எடுத்தேன். அம்மா தெருவுக்கு போயிட்டு வந்ததும் சாப்பிட்டு வர்றேன்.

“ஒரு ஆள். வேகமாக சத்தம்போட்டு, சிரித்துக்கொண்டே கப்பையை தேடிகிட்டு போகலியே… மீசே மொளச்சிட்டு, பெரிய மனுசன் ஆயிட்டே வர்ற தையில கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான்..”

இவனும் பதிலுக்கு சிரித்துவிட்டு, செடிகளை அள்ளி காயப்போட்டான். களத்தில் இருந்த விளாங்காய் மர மறைவில் இலந்தை பழங்களை கொட்டி மறைத்து வைத்தான். வெயில் அனத்தத் தொடங்கியது.

சைக்கிளில் சேகர் வந்து கொண்டிருந்தார். இவர் பண்ணையின் முக்கியமான ஆள். ஒரு நாளைக்கு எத்தனை ஆள் என்ன வேலை செய்ய வேண்டும், வேலையை பொறுத்து இந்த ஆளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர். இவரிடம் கொஞ்சம் அடங்கி நடந்தால் தான் பண்ணையில் தொடர்ந்து வேலைப் பார்க்க முடியும். ஆனால் புழுங்கைக்கு அறவே பிடிக்காது இவரை. வேறு வழியில்லாமல் அவருக்கு பணிந்து கொண்டிருந்தான்.”

“ஒரு நாளைக்கு கவுச்சி இல்லாட்டி கூட சோறு இறங்க மாட்டுது. நேத்து செம்மேட்டு குளத்து நத்தை நல்ல ருசி கறி குழம்பு மாதிரி இருந்துச்சு…!”

“இந்த வெயிலுக்கு எவ்வளவு குளிர்ச்சி தெரியுமா.. இரத்தமா.. போறதுக்கு கண் கண்ட மருந்து.”

“எனக்கு ஒருநாள் புடிச்சு.. சுத்தம் பண்ணி கொண்டு வந்து உங்கம்மாவ கொடுக்கச் சொல்லு புழுங்க..”

சரியென்று தலையாட்டி விட்டு, வேலையில் தீவிரமானான். கையில் கோக்காலி கம்பினால், செடிகளை புரட்டிப் போட்டு உலர்த்தவேண்டும். அப்போதுதான் செடிகள் காயும். களத்திலிருந்து வயல்வெளியை எட்டிப் பார்த்தான். சித்ரா வயலில் வேலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. லெட்சுமியும் அவளோடுதான் பயிறு எடுப்பாள் என்று தோன்றியது. காலையில் காட்டாற்றில் பார்த்த அயரை மீன்கள் பற்றி அம்மாவிடம் சொல்லியிருந்தால் நீரை இறைத்து மீன்களை பிடித்திருப்பாள். அயரை மீன் குழம்பு, மிகவும் ருசியாக இருக்கும். உப்பும், புளியும் மட்டும் சரியாக சேர்த்து விட்டால் ஒரு படியரிசி சோற்றை ஒரு ஆள் சாப்பிடலாம்.

கூட வேலைபார்க்கும் ஆட்களின் வீட்டுக்காரிகளும் வந்து விட்டார்கள். செடிகளை உலர்த்தி காய வைத்து விட்டால் நாளை ஒரு காய்ச்சல் போட்டு, டிராக்டர் கொண்டு அடித்து விடலாம். வெயில் ஏறிக்கொண்டே போனது. விளாமர நிழலில் உட்கார்ந்து சேகர் புழுக்கமாக இருக்கிறது என்று முணுமுணுத்துக் கொண்டார். வெயில் தாங்க முடியாத பெண்கள். கிடைத்த நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். பயிறு எடுக்கும் பெண்கள் தலையில் முக்காடு போட்டு கொண்டு வேலை செய்வது தெரிந்தது. டீக்கடைக்கு டீ, வடை வாங்கி கொண்டு வந்த ஆள். நிழலில் உட்கார்ந்தார். சேகர் சைக்கிளை எடுத்துகொண்டு தெரு பக்கம் போனார். புழுங்கைக்கு நீர் கடுப்பு ஏற்பட்டது. வெற்றிலை போடும் மாரியம்மாவிடம் சுண்ணாம்பு வாங்கி கால் பெருவிரலில் தடவிக்கொண்டான்.

கூட வேலை பார்க்கும் பெண்கள் நக்கல் பண்ணி சிரித்தார்கள். இருபுறமும் இரண்டு வாய்க்கால்களை கொண்டு நீண்டு கிடக்கும் அந்த திடலில் பல்வகை செடிகள் அடர்ந்து கிடந்தன. கடும் வெயிலில் செடி கொடிகள் வதங்கும் வாசனையடித்தது. புழுக்கம் தாங்காத சில வண்டுகள். அங்குமிங்கும் பறந்து நிழல் தேடியது. புழுங்கை என்பது இவன் பெயர் இல்லை. செந்தாமரைக் கண்ணன் என்று தான் பெயர் வைத்திருந்தாள் இவனை பெற்ற சாந்தா. அமுதா இவனை தூக்கிக் கொண்டு வந்த சில வருடங்களில் இவளின் கணவனும் மஞ்சள் காமாலை வந்து இறந்து போய்விட்டான். இவளுக்கும் அவன் மூலமாக குழந்தையில்லை. அந்த பெயர் பெரிதாக இருப்பதாக உணர்ந்தாள். அதனால் செந்தாமரை என்று அழைத்தாள். இந்த பெயரில் வில்லன் நடிகர் ஒருவர் இருப்பதால் அந்த பெயர் வேண்டாம் என்று நினைத்த நேரத்தில், இவன் மண் பானையில் இருக்கும் புழுங்கல் அரிசியை சதாநேரமும் தின்று வயிறு உப்பி இருந்தான்.

எப்போதும் கால்சட்டை பையில் புழுங்கல் அரிசியை பதுக்கி வைத்திருந்தான். அதை அள்ளி வாயில் ஊறவைத்து தின்றான். அமுதா எவ்வளவு திட்டியும், அடித்தும் அரிசி திண்பதை நிறுத்தவில்லை. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ‘புழுங்கை’ என்று கிண்டலாக அழைக்கத் தொடங்கினார்கள். செந்தாமரை கண்ணன் என்ற பெயர் அரசு ஆவணங்களில் மட்டும் உச்சரிக்கப்பட்டது. அமுதாவும் எல்லோரையும் போலவே புழுங்கை என்றே அழைத்தாள். அவனும் அதற்காக எவரிடமும் கடிந்து கொண்டது இல்லை. உச்சி வெயிலில் ஆட்கள் வியர்வையில் கரைந்து கொண்டிருந்தார்கள்.

கானல் அலை மேலெழும்பி மினுங்குவது தெரிந்தது. வயலில் இருந்த பெண்கள் வரப்போர பனை மரங்களின் நிழல்களில் உட்கார்ந்தார்கள். இன்று எப்படியாவது சித்ராவை தனிமையில் சந்தித்து ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். புழுங்கை மதியத்துக்கு அமுதா சாப்பிட ஏதாவது ஆகாரம் கொண்டு வருவாள் என்று நினைத்தான். ஊர் இருந்த வட திசையைப் பார்த்தான். நாய் குரைப்பும், சேவலின் கூவலும், ஸ்பீக்கர்களில் உயிர் உருக பாடும் ஜேசுதாஸும், எஸ்.பி.பி&ணீனீஜீ;யும், தனியாகவும், பெண் குரலோடும் பாடி அடங்கிப் போயிருந்தனர்.

தெருக்களை சுற்றியிருந்த தென்னை மரங்களும், வேறு சில மரங்களிலும் உணவு தேடி அலையும் காகங்களின் குரல்கள் வெளியில் கரைந்து கொண்டிருந்தன. ரிணலிங்கேஸ்வரரும், அம்மையும், சாரதி பெருமாளும், தேவியும், கர்ப்ப கிரஹத்தில் உறைந்து போயிருந்தனர். உச்சி வேளையில் ஊரே ஒரே நிசப்தம். திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் கனத்த ஓசையை எழுப்பிக்கொண்டு நாகூரிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது. சூரியனைப் பார்த்த ஆட்கள் உச்சியிலிருந்து மேற்கே கீழிறங்கியிருப்பதை பார்த்து அந்தி பொழுதுக்கான பெரிதான அறிகுறி எதுவும் தென்படவில்லை என பேசிக்கொண்டார்கள். அவ்வப்போது சிறு காற்று மட்டும் ஆசுவாசமும் தந்தது. வெப்பம் மட்டும் குறையவில்லை.

சேகர் மரத்தடியில் உட்கார்ந்து வெற்றிலை போட்டு துப்பிக் கொண்டிருந்தார். வியர்வையில் உப்பு உடம்பில் பூத்துவிட்டது. காயவைத்த செடிகளை குவித்து ஒரே போராக போட்டார்கள். வெயில் குறைந்ததும் பயிறு எடுத்த பெண்கள் ரயில் போன கொஞ்ச நேரத்தில் கரையேறி வந்து விட்டிருந்தனர். சேகர் நாளைக்கு சீக்கிரமாக வந்து விட வேண்டுமென ஆட்களிடம் சொன்னார்.

சோர்வடைந்த பெண்களை பார்த்து “பண்ட பாத்திரங்களை சீக்கிரமா புழங்கிட்டு படுத்துருங்க” என்று நக்கலாக சிரித்தார். அதுக்கு ஒரு பெண் “போங்கய்யா… நீங்களும் உங்க இதும்” என்று பதிலடி கொடுத்தாள்.

நடக்கத் தொடங்கினார்கள் வீட்டை நோக்கி வேலை முடிந்த திருப்தியில். மர நிழலில் மறைத்து வைத்திருந்த இலந்தை பழங்கள் வெயிலில் சுருங்கியும், கட்டெறும்பு மொய்த்தும் செங்காய்கள் நிறம் மாறியும் போயிருந்தன. விலாமரத்தில் நாலைந்து கிளிகள் உட்கார்ந்து கீறிச்சிட்டன. வேகமாக திடலில் நடந்து பெரிய குளத்துக்கு வந்து தாமரை செடிகள் இடையே புகுந்து நீந்தி, நீச்சல் அடித்தான்.

நீர் கடுப்பு நீரின் குளுமையால் குறைந்தது. வீட்டிற்கு வந்தான். கூரை வேய்ந்த மண் சுவரால் ஆன வடக்கு பார்த்த வீடு அது. கதவை திறந்து பார்த்தான். இருள். கோழி பீயின் வாசனை குப்பென்று வீசியது. எறவானம் வழியாக கோழிகள் மேலேறி குதித்து இருக்குமோ? என்று தோன்றியது.

கைலியை மாற்றிக்கொண்டு சித்ராவுக்கு பிடித்த நீலநிற கட்டம் போட்ட சட்டை போட்டுக் கொண்டு சைக்கிளை எடுத்தான். சித்ராவுக்கென்று பறித்திருந்த இலந்தை பழங்களை ஒரு பாலீதின் கவரில் போட்டு முடிந்து கொண்டான். தலையை வாரி ஒழுங்குபடுத்தினான். பவுடர் அடித்துக்கொண்டான். கதவை சாத்திவிட்டு, ஆட்டு கொட்டிலைப் பார்த்தான். மேய்ச்சலுக்கு போயிருந்த ஆடுகள் திரும்பியிருக்கவில்லை. வடக்கு தெரு மதகு பக்கம் வந்தான். சைக்கிளை நிறுத்தி உட்கார்ந்து கொண்டான். மதகிலிருந்து பிரியும் தெருவில் ஏழாவது வீடு தான் சித்ராவின் வீடு, மதகின் எதிரில் ஒரு சந்து போல் போய், வளையும் திடலில் தனி வீடாக இருந்தது லெட்சுமி வீடு. பொழுது மசமசவென ஏறிக் கொண்டிருந்தது.

சித்ரா வீட்டில் உடல்நிலை சரியில்லாத அவள் அப்பா வாசலில் நாற்காலியை போட்டு உட்கார்ந்து அந்தி வெயில் காய்ந்து கொண்டிருந்தார். தெருவில் சுற்றிக் கொண்டிருந்தார்கள் சில சிறுவர்கள். சிலர் பம்பரம் விட்டுக் கொண்டிருந்தார்கள். நார்த்தைக் குருவிகள் கூடு திரும்பும் சக உறவுகளை குரலிட்டு அழைத்துக் கொண்டிருந்தன. சித்ரா அண்ணன் சைக்கிளில் கொத்து வேலைக்கு சென்று திரும்பி வந்திருந்தார். அவளின் அம்மா ஆடுகளுக்கு, புல்லறுத்து கட்டிக் கொண்டு வந்தாள். நான்கு மணிக்கே வேலை முடிந்து வீடு திரும்பியிருந்த சித்ராவை காணவில்லை.

மெல்லிய இருள் பரவத் தொடங்கியது. இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கடைத்தெரு இருந்தது. சீக்கிரமாக போனால் இப்ராகிம் பாய் கடையில், ஆட்டுக்கறி சூப்பும், குடல் வறுவலும் சாப்பிடலாம். சித்ரா எங்கே போய் தொலைந்தாள்? படபடப்பாக இருந்தது புழுங்கைக்கு. இவன் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது சித்ரா, ஏழாம் வகுப்பு படித்தாள். இந்த ஊரிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பஸ் வசதி கிடையாது. நடந்து மற்றும் சைக்கிளில் தான் செல்ல வேண்டும். சாலையும் மண்சாலை தான். மழைக்காலம் வந்துவிட்டால் சேறும், சகதியுமாக ஆகிவிடும். அது மழைக்காலம் முடிந்து மூன்றாவது நாள் கொஞ்சமாய் வெக்கலித்திருந்தது.

பள்ளிக்கு அந்த சுற்று வட்டாரங்களிலிருந்து சென்று படித்து வந்தார்கள். அது காலை நேரம் என்பதால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலைக்கு எதிரில் இருந்த திடலில் இரண்டு பாம்புகள் புணையல் ஆடின. அனைவரும் அதனை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் சாலையில் சிதறிக்கிடந்த கல்லை எடுத்து பாம்புகள் மேல் விட்டெறிந்தார். தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த பாம்புகள் கூடலை தவிர்த்து எழுந்து படமெடுத்து ஆக்ரோஷமாக சீறியது. வேடிக்கைப் பார்த்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.

அந்த நேரத்தில் சாலையில் டி.வி.எஸ் 50ல் வந்த ஒருவர் சித்ராவை மோதி கீழே தள்ளினார். சித்ராவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. எல்லோரும் ஓடிவிட புழுங்கை மட்டும் அவளை அழைத்துச் சென்று பள்ளிக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சை பெற வழி செய்தான். அதிலிருந்து இவன் மீது வாஞ்சையோடு நடந்து கொள்ள துவங்கினாள்.

பருவம் எய்திய பிறகான நாட்களில் அதிகம் பேசுவதை குறைத்துக் கொண்டாள். இவன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு வயல் வேலைகள் செய்வதிலேயே ஆர்வமாகிப் போனான். சித்ரா பத்தாம் வகுப்பில் குறைந்த மார்க்கில் தேர்ச்சி பெற்றும் மேற்கொண்டு அவளை படிக்க வைக்கவில்லை. குடும்பத்தில் நிலவிய வறுமையே காரணம்.

வேறு வழியில்லாமல் சாகுபடி நடக்கும் நாட்களில் சித்ராவும் வயல்வேலைக்கு வரத் தொடங்கினாள். இருவருக்குள்ளும் நட்பு மீண்டும் உயிர் பெற்றது. இவனிடம் பேசும் நேரங்களில் மட்டும் தனக்குள் ஒரு படபடப்பு ஏற்படுவதையும், வார்த்தைகள் குறைந்து போவதையும் உணர்ந்தாள். இதே அனுபவத்தை அவனும் உணர்ந்ததாக ஒருநாள் சொன்னான். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வயல்வேலை செய்யும் இடங்களிலும், திடல் கரைகளிலும், தோப்புகளிலும், ஆற்றுப் படுகையிலும், தங்களது நேசமிகு உறவை வளர்த்துக் கொண்டார்கள். இவர்களின் நட்பை உணர்ந்த சிலர் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டினார்கள்.

சித்ராவின் நினைவிலிருந்து மெல்ல தெளிந்து எழுந்து நின்றான். உடம்பு வலிப்பது போல் இருந்தது. லெட்சுமி கறுப்பு கிடா ஒன்றை வயல்வெளியில் இருந்து இழுத்துக்கொண்டு வந்தாள். அது திமுறியது. அவனைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தாள். அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.

“யாரை தேடிகிட்டு உட்கார்ந்திருக்கே” என்று வெடுக்கென்று கேட்டுவிட்டு, போய்க் கொண்டிருந்தாள், இருள் கருமையாக படரத் தொடங்கிவிட்டது. எழுந்து லெட்சுமி வீட்டுக்குப் போனான். அவள் வீட்டுக்குள் அடுப்படி வேலையில் இருப்பது போல் தெரிந்தது. அவள் அப்பாவும், அம்மாவும் பாய் வியாபாரம் செய்பவர்கள் அவர்கள் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. கனைத்து கொண்டே வாசலில் நின்று தண்ணி வேண்டும் என்று சத்தமிட்டான். எட்டி பார்த்துவிட்டு, தண்ணீர் செம்போடு வெளியே வந்தாள்.

“சித்ராவை பாத்தியா…”

“அது கேட்கத்தான் வந்தியா”

தண்ணீரை வாங்கி ‘மடக்’, ‘மடக்’ என ஓசையெழுப்பிய படியே குடித்தான். இருள் ஏறிவிட்டது. வெளியில் செண்பகப்பறவை ஒன்று கூவிக் கொண்டே பறப்பது தெரிந்தது. தண்ணீரை குடித்துவிட்டு, ‘ஒனக்கு தெரியாதா. அப்ப நான் கௌம்புறேன் திரும்பி நடக்கத் தொடங்கினான். வடக்குவெளி பக்கமா போனா… அப்படியா… நான் கிளம்புறேன்.

“உன் விஷயம் முடிஞ்சதும் கௌம்புற பாத்தியா பரண் மேலே கோழி கவுக்குற பஞ்சாரம் கெடக்கு கொஞ்சம் எடுத்து கொடுத்துட்டு போ” என்றாள். அவன் எனக்கு வேலை இருக்கு என திரும்பி நடக்கத் தொடங்கினான். மதகிலிருந்து சைக்கிளில் ஏறி மிதிக்கத் தொடங்கினான். இரவு வந்திருந்தது. கெண்டைக்கால்கள் வலித்தன. கடைத்தெரு வெறிச்சோடி கிடந்தது. கடைசி டீக்கடையில் மட்டும் அடுப்பெரிந்து கொண்டிருந்தது. நொறுங்கலான பக்கோடாவும், புகையடித்த டீயும் டீக்கடைக்காரர் கொடுத்தார்.

மளிகை கடைக்கு வந்து அம்மாவுக்கு வெற்றிலையும், பாக்கும் வாங்கி கொண்டு கிளம்பினான். வேலை முடிந்ததும் ஆட்கள் சாராயம் குடிக்க வாஞ்சூர் போயிருப்பார்கள். அவர்கள் குடித்து விட்டு வந்தால் ஒரே ரகளையாக இருக்கும். குற்றவுணர்ச்சி தொண்டைக்குள் அறுவியது. வேகமாக சைக்கிளை மிதித்தான். லெட்சுமி அம்மாவும், அப்பாவும், சூப்பர் எக்ஸெலில் மீதப்பட்ட பாயோடு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். வீட்டில் அம்மா சட்டியில் தாளித்துக் கொண்டிருந்தாள். வெந்தயம் கருகும் வாசனை வந்தது. ஒற்றை பல்பு அருகே உட்கார்ந்தான். அம்மாவிடம் பேச பிடிக்கவில்லை.

சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள். ரேடியோவை ஆன் செய்தான். பாட்டு போடுவதற்கு இன்னும் நேரமிருந்தது. பாயை விரித்து போட்டு படுத்தான். அசதியாக இருந்தது. உடலை தரையில் வைத்து அழுத்தினான். சுகமாக இருந்தது. வாஞ்சூருக்கு போயிருக்கலாம் என்று தோன்றியது. எழுப்பினாள். தட்டில் சாப்பாடு இருந்தது. சோற்றில் ஆவி பறந்தது. கிண்ணத்தில் இருந்த குரவை மீன் குழம்பு ருசி என்னவோ பிடிக்கவில்லை. மறு சோறு வேண்டாம் என தவிர்த்து கையை கழுவி விட்டு, பாயை எடுத்து கொண்டு எப்போதும் படுக்கும் திண்ணைக்கு வந்தான்.

பாயை விரித்து கொஞ்ச நேரம் உட்கார்ந்தான். மனம் துயரத்தாலும், குற்ற உணர்ச்சியாலும் அலை பாய்ந்து கொண்டிருந்தது. சித்ராவுக்கு செய்த துரோகத்தை நினைத்து வருந்தியது. வீட்டிலிருந்து வாசலுக்கு வந்தான். நல்ல இருள். சாலையில் நடக்கத் தொடங்கினான். லெட்சுமி அழைத்ததும் மறுத்து கொஞ்ச தூரம் நடந்து வந்தவன், அவளின் தயவு எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால் வீட்டுக்குள் நுழைந்தான், திண்ணையில் கிடந்த பச்சை கோரைகளின் வாசனையடித்தது, நார்கள் சிதறிக் கிடந்தன. ஒற்றை ‘பல்பு’ மஞ்சளாய் எரிந்துக் கொண்டிருந்தது.

மண் பானையில் உலை வைத்திருந்தாள். அடுப்பில் குச்சிகள் எரிந்தன. அவள் குளித்து இருந்த சோப்பின் வாசனை உடலிலிருந்து வந்தது. கூரை வேய்ந்த கிழக்கு பார்த்த அந்த வீட்டில் பரண் நேர்த்தியாக அமைத்திருந்தார்கள். அருகில் குதிர் ஒன்று இருந்தது. புற வாசலுக்கு போய் பழைய மர ஸ்டுல் ஒன்றை எடுத்து வந்தாள். கீழே வைத்தாள். புழுங்கை ஸ்டுலை ஆட்டி பார்த்தான் நான்கு கால்களில் ஒன்று கூட கடகடவென்று ஆடியது.

“நான் மேலே ஏறி எடுக்குறேன். நீ கால்ல அமுக்கி புடிச்சிக்கோ” என்று அவளைப் பார்த்தான்.

‘ஏறு.. ஏறு.. ஒன்னும் ஆகாது…’ ‘ஏறிப் பார்த்தான்.. ஒரே இருளாக தெரிந்தது. எலிப்புழுக்கைகளின் கெட்ட வாசனை வீசியது. பரணில் நடு மையத்தில் கிடந்தது பஞ்சாரம். கையால் முடிந்தவரை எட்டி பிடித்து பார்த்தான், முடியவில்லை, எகிறி ஒரு தாவு தாவினான், கையில் கிடைத்துவிட்டது பஞ்சாரம்.’

ஸ்டுலில் இருந்து கால் மேலே போனதும், பயந்தாள் லெட்சுமி. நிதானித்து பஞ்சாரத்தை கீழே கொண்டு வந்தான். இடுப்பிலிருந்த கைலி, நழுவி கீழே விழுந்தது. அவள் இருளில் சிரிப்பது கேட்டது. இடுப்பில் சொருகியிருந்த இலந்தை பழம் சொத் என்று கீழே விழுந்தது. நடுவீட்டில் உருண்டு கிடந்தது பஞ்சாரம். வெள்ளை நிற பூனை மிரட்சியுடன் விலகியது. தீ அதிகமாகி பானையிலிருந்து கஞ்சி வடிந்து அடுப்பு அணைந்தது. அடைய வந்த கோழிகள் இருளில் உருவங்களைப் பார்த்து விலகி நின்றன. கதவு தாழிட்டுக் கொண்டது. பெருமூச்சுகளால் சூழ் கொண்டது இருள்.

தாகம் தீராத விளையாட்டின் முதல் ஆட்டத்தை துவங்கியிருந்தான். அந்த கணத்தில் எதுவுமே தவறில்லை என்று தோன்றியது. கன்னித்தோப்பில் அவள் வந்தது கூட தெரியாமல் நினைவில் மூழ்கியிருந்தான். அவள் கோபமாக சிரித்தாள். உதடுகள் துடித்தன. “ஒரு வாரமா என்னுமோ எங்கிட்ட பேசாம போய்க்கிட்டிருக்கே அப்படியென்ன எம் மேல உனக்கு கோபம்?” சிரித்துக் கொண்டே கேட்டான். சட்டையைப் பிடித்து உலுக்கினாள். கையைப் பிடித்து இழுத்து முதுகில் ஒரு அடி வைத்தாள். கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.

“ஏன் என்ன அடிக்கிற” கன்னத்தை தடவிக் கொண்டே கேட்டான்.

“செல்லம்மா அடிச்சா கூட உனக்கு வலிக்குதா”

“இது செல்ல அடியில்ல சித்ரா”

“உன்னப் பத்தி… சில பேரு தப்பா சொல்றாங்க.. நான் நம்பல நீயும் அப்படி செய்யமாட்டேனு நம்புறேன். சினிமாவுல சொல்ற மாதிரி நம்பிக்கை தானே வாழ்க்கை”

கலகலவென சிரித்தாள். புழுங்கைக்கு உடல் நடுங்கியது. பேய்சிரிப்பு போலிருந்தது. உண்மையை ஒத்துக்கொள்ளலாமா? வேண்டாம்..!

“சரி நான் கௌம்புறேன்” நடந்தாள்… தரையிலிருந்து புழுதி பறந்தது. ஒரு வாரம் கழித்து… காலைப்பொழுதில் ஊர் எல்லையோரம் இருந்த செல்லியம்மன் கோவில் அரசமரத்தடியில் நின்று கொண்டிருந்தான் புழுங்கை. அப்போது டாடா சுமோ ஊரிலிருந்து வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சிலரில் சித்ராவும், அவள் அண்ணனும் இருப்பதைப் பார்த்தான்.

உண்டியல் அருகே சென்று அவர்கள் காணிக்கையை செலுத்திவிட்டு காரில் ஏறினார்கள். அருகில் சென்ற இவனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வேதனையோடு ஊருக்குள் நடந்தான். அப்போது எதிரே வந்த இருவர் சித்ரா வெளிநாடு செல்வதாக பேசிக்கொண்டு சென்றார்கள்.

நன்றி; குமுதம் தீராநதி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *