கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 12,413 
 
 

பயங்கள்…. பயங்கள்…. எத்தனைவிதமான பயங்கள்… எப்படியெல்லாம் பயங்கள்… மனிதர்களின் பயங்களுக்கு அளவே இருப்பதில்லை.

இந்தப் பயங்கள் ஜம்புநாதனுக்கு எப்போதுமே வந்ததில்லை…

பயங்கள் என்ன… அவரைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை முறையே
வேறு. பயங்கள் இல்லை: துக்கங்கள் இல்லை: பிரச்சனைகள் இல்லை:
கவலைகள் இல்லை: எதுவுமே இல்லை: அப்பா இருந்தவரை எல்லாம்
அவர்… அது முடிந்ததும் அம்மா அம்மா இருக்கிறபோதே ராஜலட்சுமி
வந்து சேர்ந்துவிட்டாள்.. தன்னிடம் கட்டுப்பெட்டியாக வளர்ந்திருந்த
மகனை அப்படியே ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தாள் தாய்….
அதற்கப்புறம் ராஜலட்சுமி அவருக்கு எல்லாமுமாக ஆகிவிட்டாள்

சிலரைப்போல தனக்கு ஏன் எந்த பயங்களும் வரவில்லை என்று எப்போதாவது ஜம்புநாதன் நினைப்பதுண்டு…… அதற்கு உடனடியாக விடையும் அவருக்குக் கிடைத்து விடும்… “அதுதான் எனக்கு வந்த, எல்லா பிரச்சினைகளையும் ராஜலட்சுமி எடுத்துக் கொண்டாளே அப்புறம் என்ன பயம்..” என்று சொல்லிக் கொண்டார்… ராஜலட்சுமிக்கு பயம் என்றால் அப்படியொரு பயம்… சளி பிடித்தால்… ஜூரம் வந்தால்.. கை கால் இலேசாக மரத்தால்… இப்படி பயந்து பயந்து எண்ணத்தை சாதித்துவிட்டாள்… பயப்படுவதனால் எல்லாம் போய் விடுகிறதா… என்ன… வருவது வந்தே தீருகிறது… அப்படித்தான் ராஜலட்சுமிக்கம் வந்தது.. அவள் பயங்கள் பயனற்றுப் போய்விட்டன…

எமன் யாருக்குப் பயப்படுகிறான்.. நினைத்த நேரத்தில் வந்து விடுகிறான்.. தாமதமே கிடையாது…

இதோ ராஜலட்சுமி தன் பெரிய சரீரத்தை சாய்ந்துவிட்டாள்… பயத்தை
இவள் வென்றுவிட்டாளா… அல்லது பயம் இவளை வென்றுவிட்டதா….
ஒரு சின்ன சந்தேகம் ஜம்புநாதன் மனதில் எழுந்தது… இப்படியெல்லாம்
தத்துவார்த்தமாக அல்லது ஆழமாக யோசிக்க ஜம்பநாதனக்கு வராது..
அவரை அந்த மாதிரி யாரும் வளர்க்கவில்லை: “அவனுக்குப் பாவம்
என்ன தெரியும்…. சிறுபிள்ளை… மாதிரி” என்று பொறுப்புகளை தன்மேல்
போட்டுக் கொண்டு அப்பா வளர்த்து அம்மா கவனித்து கடைசியில் வந்த
ராஜலட்சுமிகூட “அவர் கிடக்கிறார் விடுங்க.. நீங்க சொல்றது எனக்குத்
திருப்தி…. அவருக்கு இதெல்லாம் அதிகமாத் தெரியாது. பேஷா
நடத்துங்க.. “என்று ஜம்புநாதனை ஒதுக்கிவிட்டே காரிய மாற்றப்போய்
அவர் நிஜமாகவே ஒன்றும் தெரியாதவராகிப் போனார்.. அல்லது தெரிந்து
கொள்ள பிடிக்காதவராகிப் போனார். அவருக்கென்று சுயசிந்தனைகள்
எதுவும் இல்லாமல் போய் யாராவது சொன்னால் அதை மட்டும் செய்கிற
அளவுக்கு மழுங்கிப் போனார்.. அதையாராவது சொல்லி கேலி
செய்தாலும்கூட அதைப் பொருட்படுத்தவோ அதற்காக வேதனைப்படவோ கூட அவருக்குத் தெரியாமல் போனது…” அவர்கள் சொல்லுவது நிஜம் தானே… நிஜத்தைப் பேசினதுக்காக யாராவது கோபித்துக் கொள்வார்களா” என்ற ரீதியில்தான் அவரது யோசனைகள் ஓட ஆரம்பித்திருந்தன….

இவ்வளவு எதற்கு… ராத்திரி ராஜலட்சுமி போய்விட்ட பிறகு என்ன
செய்வது எது செய்வது என்று புரியாமல் மறுகி நின்றபோது மட்டும் என்ன வாழ்ந்தது… ஓன்றிரண்டு சொந்தக்காரர்கள் அண்டை அயலார்கள் வந்த வேகம் என்ன.. இழுத்துக் கட்டிக்கொண்டு காரியங்களைச் செய்தவிதம் என்ன… எல்லாம் மயக்கத்தில் நடந்த மாதிரி உணர்ந்தார்.. விடுவிடுவென்று இரண்டு மகளுக்கும் ஒரே மகனுக்கும் தந்தி கொடுத்தார்கள். நூறு மைலில் இருந்த மகள் வந்தாகிவிட்டது… சென்னையில் இருந்து வரவேண்டிய மகளும், மகனும் இனிமேல்தான் வரவேண்டும்… ஆயிற்று இரண்டு மணி நேரத்தில் ராஜலட்சுமி புறப்பட்டு விடுவாள்…

தரையில் சின்னக் கொள்ளி புகைந்து கொண்டிருந்தது.. பொய்ப்
பந்தல் ஒன்று அவலத்துடன் நின்றிருந்தது… ஜம்புநாதன் எந்த வித
உணர்ச்சியுமில்லாமல் உட்கார்ந்திருந்தார்…. முகத்தை மழித்து மூன்று
நாளாகியிருந்தது… இன்றுடன் நான்காவது நாள்… ராஜலட்சுமி
இருந்திருந்தால் இப்படி மழிக்காமல் இருக்க விடவே மாட்டாள்…

வேதாசலம் தூரத்தில் செருப்பை விட்டுவிட்டு பனியனுடன் வந்து
ஜம்புநாதன் பக்கத்தில் உட்கார்ந்தார்.. அவர் ஏந்திய கையைத் தொட்டு
வணங்கி தன் அனுதாபத்தைத் தெரிவித்த பின்னர் பொது விசாரணைக்குள் நுழைந்தார்…

“நேத்து நல்லா இருந்ததா அம்முலு சொன்னா…”

“நேத்தெல்லாம் நல்லாத்தான் இருந்;தா… ராத்திரி லேசா நெஞ்சை
வலிக்குதுன்னா… மூணு மணி இருக்கும்னு நெனைக்கறேன்… எனக்கும்
தூக்கம் வரலையா… முழிச்சிட்டு இருந்தேன்… முனகல் சத்தம் கேட்டதும் என்னன்னு கேட்டேன்…நெஞ்சுவலிக்குதுன்னு சொன்னா.. கொஞ்சம் தண்ணி கேட்டா… குடுத்தேன்… ரெண்டு மடக்கு உள்ளே போச்சு…

மூணாவர் மடக்கு உள்ளே போகலை… பயந்துட்டு ராஜம்மா.. ராஜம்மான்னேன்… பதில் வரல்லே… அப்புறம் போய் வாத்தியாரை எழுப்பி கூட்டிட்டு வந்தேன்… அவரு வந்து எல்லாம் முடிஞ்சிடுச்சி ஜம்புநாதான்னு சொன்னதும்தான் எனக்கே புரிஞ்சது… இப்பகூட நம்ப முடியல்லே….நெஜம்மா இவ போயிட்டான்னு…”

வேதாசலம் கொஞ்ச நேரம் மௌனம் சாதித்தார்.. என்ன சொல்லுவது
என்று யோசித்ததாகத் தோன்றியது….

“ம்… கொடுப்பினை அவ்வளவுதான்… அம்மா இருந்தா நம்ம
கிராமத்துக்கே ஒரு பலம் மாதிரி… கல்யாணம் கருமாதி எதுவாகட்டும்
அவங்களுக்குத் தெரியாதது எதுவுமேயில்லை.. பழய கட்டை..
சம்பிரதாயம் தவறாம சொல்லித் தருவாங்க…. அவங்க ஒரு கல்யாணத்துலே இருந்தாலே ஒரு களை இருக்கும்… ம்… உங்களுக்குப் பெரிய கஷ்டம்…இனிமே எப்படி இருப்பீங்கன்னே எனக்குப் புரியலை….”

அவர் மௌனமாக எழுந்து போனார்… அடுத்து ஒருவர் அதே கதை
வேதாசலம் மாதிரியே அவரும் அங்கலாய்ப்பு….

“ஆமாம்…. எல்லோருமே ஒரு நாள் போக வேண்டியதுதான்…
ராஜலட்சுமி போய்விட்டாள்… நான்கூட ஒரு நாள் போவேன்… அவள்
போனபின் நான் எப்படி இருப்பேன் என்று அவர்கள் கேட்பதுதான்
ஆச்சரியமாக இருக்கிறது.. எனக்கென்ன குறை… ராஜாவாட்டம் பையன்
ஆபீஸராக இருக்கிறான்.. மனசரிஞ்சு செய்யற மருமக… சலிச்சா போய்வர ரெண்டு மகள் வீடுகள்.. நான் எதுக்கு கவலைப்படணும்… ராஜலட்சுமி மாதிரி எடுத்ததற்கெல்லாம் பயப்பட நான் என்ன பொம்பிளையா.. “

தன் மன வாதம் சரியா தப்பா என்று அவருக்குப் புரியவில்லை.

திடீரென்று ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. ஒரேயொரு தடைவ
ராஜலட்சுமியாகத் தன் வாயால் சொன்னது அது.. இன்றுவரை பல தடைவ யோசித்துப் பார்த்துவிட்டார். ஆதன் அர்த்தம் புரியவில்லை: எப்போதும் போல் தன் ரீதியில் ஆழமாக சிந்திக்கத் தெரியாமல் விட்டுவிட்டார்…

“நீங்க மொதல்லே போயிடனும்ங்க… அதற்கப்புறம் நான் போகணும்….”

எதுவும் புரியாத ஜம்புநாதனையே இந்த வார்த்தை திடுக்கிட வைத்தது… மனைவியைக் கேள்வி கேட்டு அவருக்கு வழக்கமில்லை: ஏன்
யாரையும் அவர் திருப்பிக் கேட்டதில்லை: தனக்குள்ளே கேட்டு பதில்
கிடைக்காமல் போனால் அதோடு அதை விட்டு விடுவதுதான் அவர்
வழக்கம்… சிரமப்படுவதில்லை.

“இது என்ன கூத்து பொம்மனாட்டி புருஷனுக்கு முன்னே பூவும்
மஞ்சளுமா போகணும்னு நெனைப்பா… இவ ஏன் இப்படி நெனைக்கறா…
எல்லாம ஆசைதான்… நெறைய நாள் இருந்து பேரன் பேத்திங்க
கல்யாணத்தைப் பார்க்க இருக்கலாம்…. இல்லே சாக பயப்படறா”, என்று
ஒரு யோசனை வர அதுவே சரியானது என்று அப்போது அவர்
யோசித்திருந்தார்..

இப்போது மறுபடியும் அந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.. தன்
முடிவு தவறோ என்ற சந்தேகம் எழுந்து விடைகாண முடியாமல் தவித்தார்.

தூரத்தில் ஒரு டாக்ஸி வந்து நிற்க மார்ச்சேலை விலகிய
அக்கறையில்லாமல் மகளும் மருமகனும் வண்டியைவிட்டு இறங்கிய
கையோடு நெஞ்சில் அடித்துக் கொண்டு ஓடிவர அனிச்சையாக எழுந்து
நின்றார்….

“ஐயோ… ஐயோ….ஐயோ…. “ வென்று சத்தம் நடையில் நிறைந்தது…
ஐந்து நிமிடத்தில் இரண்டு மகள்களும் வந்து ராஜலட்சுமியைக்
கிடத்தியிருந்த கூடத்துக்கு ஜம்புநாதனை இழுத்துக் கொண்டு போனார்கள்…

“எப்படியம்மா இவதை விட்டுவிட்டுப் போக உனக்கு மனசு வந்தது.
கனகு கனகுன்னு உயிரை விடுவியே.. உன் பேத்தியைப் பாரும்மா… டேய் உன் பாட்டியைப் பாத்துக்கோடா ரங்கு…. ஐயோ அண்ணா….’

இன்னமும்கூட ராத்திரியில் இருந்து ஜம்புநாதனுக்கு அழுகை
வரவில்லை “எதுக்கு அழணும்… வயசாயிட்டுது போயிட்டா….
தர்மபத்தினியா நல்ல சினேகிதியா, விஸ்வாசமான வேலைக்காரியா
பொறுமையோட இருந்தா… என்னைக் கவனிச்சிட்டா… எனக்கு நெறைய
செஞ்சிருக்கா.. வாஸ்தவம்தான் இல்லேங்கல.. அழுகை எனக்கு வரல்லியே…

நான் வராத அழுகையை எப்படிக் கொண்டு வருவேன்….’

“பாவம் கிழவனாருக்கு அழக்கூட தெரியாத மாதிரி வச்சிட்டுப்
போயிட்டா புண்ணியவதி.. நல்ல சாவு.. கொடுத்து வச்சிருக்கணும்..”

மணியடித்து சங்கொலித்து குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு
வந்தார்கள் எண்ணெய்விட்டு குளிப்பாட்ட புதுக்கோடி போட்டு… எல்லாம்
முடிந்து… ராஜலட்சுமி பயணப்பட்டு தன் புதுவீட்டுக்குப் போய் ஜம்புநாதன் ஏற்படுத்திய நெருப்பில் தகனமாகி… அருவமாகிப் போனாள்…

வீட்டுக்கு வந்தபோது சாப்பாடு காத்துக் கொண்டிருந்தது…

ஜம்புநாதனுக்கு எப்போதுமே ஆற்றுக்குளியல்தான் வழக்கம்… எப்போது
பெரிய காரியங்களுக்குப் போனாலும் குளித்துவிட்டே வந்துவிடுவார்…

இன்றும் அப்படி வந்து விட்டிருந்தார்.. தயாராக சாப்பாடு.. குறைவாக
சாப்பிட வேண்டும் என்று உணர்வு சொன்னது… முடியவில்லை.. அவர்
அப்படிப் பழகவில்லையே: இரவு படுக்கிறவரை நடந்த உபசாரங்கள்
உபசரிப்புகள் மீண்டும் மீண்டும் அவரை ஓரே முடிவில்தான் கொண்டு
வந்து நிறுத்தியது…. ஆமாம்.. எனக்கென்ன குறைவு ராஜலட்சுமி
போய்விட்டதுதான் குறை… வேறென்ன குறை… என்னை இனிமேல் யார்
கவனிக்கப் போகிறார்கள் என்று ஊர் முழுக்கக் கேட்டார்களே…இதைவிட
பைத்தியக்காரத்தனம் ஏதும் இருக்க முடியாது….

காலையில் பால்விட்டு ஆற்றில் அஸ்தி கரைந்தது… ஜம்புநாதனுக்கு
கொஞ்சமாக மனசில் கனம் ஏறியது… அவ்வளவு தானா… அவ்வளவே
தானா.. ராஜலட்சுமி போயாகிவிட்டதா… இனிமேல் அவளைப் பார்க்கவே
முடியாது இது என்ன மாயம்.. இந்த வாழ்க்கையே இப்படித்தானா….
மறுபடியும் குளியல் மறுபடியும் வீடு.. சாப்பாடு… வயிறு நிறைய…
திண்ணைக்கு வந்து உட்கார்ந்தார்… இன்றும் விசாரிக்க வருகிறவர்கள்
வந்தார்கள் போனார்கள்… உள் நடையில் சின்னதாகப் பேச்சு சத்தம்
கேட்டது. மகள்கள்… மாப்பிள்ளைகள்… பையன்….

“அம்மா வீட்டை வித்துட்டாளாம்… மாடுங்களைக் கூட..”

“பணத்தை என்ன செஞ்சாளாம்…”

“போய் எழுப்பிக் கேளு…”

“அநியாயமா இருக்கே… நம்மளை ஒரு பேச்சு கேட்டிருக்கக்
கூடாது.”

“அதெல்லாம் விடு… ஊருக்குப் புறப்பட என்ன வழி…. எனக்கு ஆடிட்
இருக்கு… நீ வர்றியா, பதினோறாம் நாள் முடிஞ்சப்புறம்தான் புறப்பாடா”

‘சரிதான்… கொழந்தைங்க படிப்பு என்ன ஆகிறது.. ஏற்கனவே
கனகு பதினாறாவது ராங்க்… நீ எப்பக்கா புறப்படறே…”

“நானும் உங்கூட புறப்பட வேண்டியதுதான்… நான் இல்லாம ஒரு
நாள் இருக்க முடியாது அவராலே… ஓட்டல் சாப்பாடு அவருக்கு
ஆகாது.. பத்துநாள் தனியா இருந்து சாப்பிட்டா… ஒரு மாசம் வயித்து
வலியாலே அவஸ்தைப்படுவார்…”

“சரி….சரி பாவம் உத்யோகத்தில் இருக்கிறவர்களானால் இதே
தொல்லைதான். என்று கிழவர் நினைத்துக் கொண்டார். பையன் பேசாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது… அவன் ஊருக்கு வந்தால் இரண்டு நாள் தங்கல் ஆச்சரியம். இவர் சந்தேகத்தை தெளிய வைக்கிற மாதிரி அவன் மனைவிக்கு உத்திரவு ஆரம்பித்தது…

“கமலா.. நீ சூட்கேஸ்லே துணியை அடுக்கு… ரெண்டுமணி வண்டிக்கு புறப்படணும்;..’

கிழவர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்…. உள்ளே வீட்டுக்குள்
பரபரவென்று எல்லாம் நடப்பது தெரிந்தது. பயண ஏற்பாடுகள் மூன்று
தம்பதிகளும் குழந்தைகள் சகிதமாக வந்து நின்றனர்… இரண்டு வண்டிகள் வாசலுக்கு வந்து நின்றன….

“அப்பா…இதுக்கு வந்துட்டு போறபோது சொல்லக் கூடாது… உங்க
மாப்பிள்ளைக்கு ஆடிட்…”

“காரியத்துக்கு தேதி வச்சதும் லெட்டர் போடுங்க… முதல் நாளே
வந்துடறோம்….”

“ஆகட்டும்மா, லெட்டர் போடறேன்…”

“ஒடம்பைப் பத்திரமாப் பாத்துக்குங்க மாமா… உங்க பிள்ளைக்கு
இப்படியொரு வேலை வாச்சிருக்கு. ராத்திரி கெடையாது…. புகல் கெடையாது…

“பாவம்… அவனை ஜாக்கிரதையாப் பார்த்துக்கம்மா….”

“அப்பா… காரியத்துக்கு லெட்டர் போடுங்க… அப்பா உடம்பு ஜாக்கிரதை.. அப்பா, அம்மாவை சதாவும் நெனைச்சிட்டு இருக்காதீங்க…அப்பப்போ வெளியே போயிட்டு வாங்க.. அப்பா.. வேளா வேளைக்கு சாப்பிடுங்க அப்பா. அப்பா. அப்பா.

எல்லம் வண்டி ஏறி சர் சர் என்று வண்டிகள் புறப்பட்டுவிட அதே
நேரம் பக்கத்து வீட்டு வாத்தியாரும் மனைவியும் ஓடி வந்தனர்…

“என்னங்க…. எங்க போறாங்க…”

“ஏன் ஊருக்குத்தான்… பாவம் அவங்க உத்தியோகம் அந்த மாதிரி”

“எல்லோருமா போறாங்க…”

“ஆமாங்க ஏன்…”

“அட கன்றாவியே, காரியம் ஆகிறவரை பொண்ணுகளும் பையனும்
மருகளும் இருக்கக்கூடாது… வீட்லே விளக்கேத்த ஆள் வேணாம்…”

கிழவருக்கு சின்னதாக அப்போதான் ஒரு பிரச்சனை எழுந்தது…

இப்படியொரு விஷயம் இருக்கிறதா….

“போகட்டும்… போறபோது ஏதாவது பணம் தந்தாங்களா. தினமும்
ஊங்களுக்கு ஏதாவது செலவு இருக்குமே. காரியத்துக்கு சாமான்கள் வாங்க வேண்டாம்… ஏதாவது தந்துட்டுப் போயிருக்காங்களா…”

“ஒன்னும் தரல்லே… எனக்கும் கேட்கணும்னு தோணல்லே….” என்று
புரிதாபமாகப் பேசினார் ஜம்புநாதன்…

வாத்தியாரும் அவர் சம்சாரமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்
கொண்டார்.

“ஆமாம்… உங்களை இப்படி அம்போன்னு விட்டுட்டுப்
போயிட்டாங்களே உங்களாலே தனியா எப்படி இருக்க முடியும்…”

“அதான் காரியம் முடிஞ்சதும் பையனோட போயிடப்போறேனே…’ என்று குழந்தைத் தனமாகப் பேசினார்…

“பையன் அதப்பத்தி ஏதாவது பிரஸ்தாபிச்சானா..”

“இல்லையே. என்று முணகத்தான் அவரால் முடிந்தது…

“ஆமாம் அவன் ஏன் ஒரு பேச்சுகூட சொல்லவில்லை…” என்று
மனசுக்குள் முணகினார்.

தூரத்தில் மணியக்காரனும் பால்கார பொன்னுத்தாயும் வந்து
கொண்டிருந்தனா.; வாத்தியார் மறுபடி ஆரம்பித்தார்.

“உங்க பையன் உங்களைத் தன்னோட வச்சிக்குவானா ஜம்பு…”

“ஏன் வச்சுக்காம என்;ன…’

மெல்ல அவர்களுக்குக் கோபம் முளைத்தது….

“உங்களை அந்தம்மா குழந்தையாவே வச்சிட்டுப் போயிட்டாங்க….
உங்களுக்கும் ஒரு எழவும் புரியலை… இருக்கிற ஒரே பையன் எதிலும்
பட்டுக்காம நகர்ந்திருக்கான். பெண் குழந்தைகளைப் பத்திக் கேட்கவே
வேண்டாம்… இப்ப மேலே என்ன செய்யப் போறீங்க… கால முச்சூடும்
துனியா சமைச்சு சாப்பிட்டு எப்படி இருக்கப் போறீங்க….”

இதற்குள்ள்hக மணியக்காரரும் பொன்னுத்தாயும் இன்னும் நாலைந்து
பேரும் வந்துவிட்டனர்…

கசமுசவென்று அவர்க்ள பேசியபோது தான் தன் பையனும்
பெண்களும் தன்னைத் தவிர்த்து நிர்க்கதியாக்கிவிட்டு ஓடியிருப்பது
புரிந்தது… தன் குழந்தைகள் தனக்காக எதுவுமே செய்யப் போவதில்லை
போலிருக்கிறது என்பதை அவர்களின் பேச்சில் இருந்து புரிந்து
கொண்டார். மனதில் சின்னதாக ஒரு கலவரம் வேர் பிடிக்க ஆரம்பித்தது…

இதுதான் அவருக்கு முதல் பிரச்சனை.. முக்கிய பிரச்சனை.. ஓரேயொரு
பிரச்சனை… சாப்பாடு, அதற்கு வழி… உடல் தாளாமையால் செய்து
கொண்டிருந்த வேலையை நிறுத்தி மூன்று மாதமாகிவிட்டது.. இனி அந்த
வேலைக்குப் போகவும் முடியாது… யாரும் சேர்த்துக் கொள்ளவும்
மாட்டார்கள் கண்ணில் லேசாக புரைவேறு… வீட்டை வேறு ராஜலட்சுமி விற்று விட்டாளாம். கேட்டதும் கையெழுத்துப் போட்டாகிவிட்டது…

அவள் சொல்லி அதற்கு மாற்று சொல்லித்தான் பழக்கமில்லையே…
பணம் என்ன செய்தாள் எவ்வளவு பணம் வந்தது… எதும் தெரியாது…

“மேரே என்ன செய்யப் போறீங்கய்யா…” ஜம்புநாதன் ஒன்றும்
புரியமால் பைத்தியக்காரர் மாதிரி தன்னைச் சுற்றி நின்றும் உட்கார்ந்தும்
இருந்த சின்னக் கூட்டத்தைப் பார்த்தார். அவருக்கு ஏதும் புரியவில்லை.

மற்றவர் ஏதாவது சொன்னால் செய்ய அவர் தயார். ஆவராக எது செய்து
பழக்கம்? “எனக்கு ஒன்றும் புரியல்லே. பையன் வந்தாக் கேட்கணும்…
அவன் என்னைக் கூட்டிட்டுப் போயிட மாட்டானா.” பரிதாபமாகக் கேட்டார்…

மணியக்காரர் முன் வந்தார்…

“எல்லாம் சும்மா இருங்கப்பா… பாவம் அவரைக் கேட்டுட்டு…
அவருக்கு என்ன தெரியும்… பாருங்க ஜம்புநாதன்… நீங்க ஒன்னுக்கும்
பயப்பட வேணாம்… ராஜலட்சுமியம்மா வீட்டை எனக்குத்தான்
வித்திருக்காங்க.. வித்த பணத்தை வாங்கிக்கலே என் மூலமா ஒருத்தர்கிட்ட தந்திருக்கேன்… மாசம் மூவாயிரம் மாதிரி கெடைக்கும்… அதோட நாலு மாடுகளை பொன்னுத்தாய்க்கு விக்கலே சும்மாத்தான் வச்சிக்க சொல்லியிருக்கா… அதுக்கு பிரதியுபகாரமா பொன்னுத்தாயி உங்களுக்கு சமைச்சிப் போட்டு உங்களுக்குத் தேவையானதை செஞ்சிட வேண்டியது ஏற்கனவே என் மூலமா ஏற்பாடு செஞ்சிட்டாங்க… இப்போது காரிய செலவுக்கு வேண்டிய பணம் தர்றேன். இல்லே நானே இருந்து நடத்தி வைக்கிறேன்… பாவம் உங்களுக்கு என்ன தெரியும்… அந்தம்மா
செஞ்சதுக்கு நாங்க இதுகூட செய்யாட்டி எப்படி… நீங்க எப்பவும் போல
இந்த வீட்லேலே இருந்துக்கங்க… என்ன…”

ஜம்புநாதனுக்கு ஒன்று மட்டும் தெரிகிறது…. ராஜலட்சுமி போகிற
போதுகூட பொருப்புகளை மூன்றாவது ஆளுக்குத்தான் தள்ளிவிட்டுப்
போயிருக்கிறாளே தவிர தன் மீது சுமத்தவில்லை: தான் அதற்கு
லாயக்கில்லை என்பது அவளுக்குத் தெரியும்…

“இந்த கஷ்டமெல்லாம் கெழவருக்கு வந்துடக் கூடாதுன்னுதான்
முகராசி இந்த ஆள் முன்னாலே போகணும்னு சொல்லிகிட்டேயிருந்தது…

பூவோட போறதைவிட புருஷனை விட்டுட்டுப் போறதுதான் அதுக்கு
பேரிய விஷயமா தெரிஞ்சது… தான் முன்னாடி போயிட்டா புருஷனை
ஆதரிக்க புள்ளைங்க முன்னே வராதுன்னு எவ்வளவு யோசனையோட
காரியம் செஞ்சிட்டு போயிருக்கு பாருங்களேன்…” பொன்னுத்தாயி பேசிக்
கொண்டே போனாள்…

ஜம்புநாதன் திண்ணையை விட்டிறங்கி வீட்டிற்குள் நடந்தார்…

குழந்தை தாயைத் தேடுகிற தவிப்புடன் கண்களை வீடு முழுதும் அலையவிட்டார் ராஜலட்சுமி வழக்கமாக உட்காருகிற ஈசிசேரிங் அருகில் உட்கார்ந்து அவளை மனசுக்குள் உருவகப்படுத்திய போது கண்களில் நீர் குளம் கட்ட ஆரம்பித்தது… மெல்ல விசும்ப ஆரம்பித்து “ராஜம்மா நீ போயிட்டியே” என்ற சின்ன ஓலத்துடன் அவர் குலுங்க ஆரம்பித்த போது முதல் முதலாக அந்த வீட்டில் ஒரு இழவின் சோகம் கவிய, அந்தச் சின்னக்கூட்டம் ஜம்புநாதனை சுழிவிரக்கத்துடன் செயலற்றுப்போய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது…

Print Friendly, PDF & Email

1 thought on “பயங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *