பனைமரத்து முனியாண்டி சாமியும் வன்னியம்பட்டி பச்சையப்பனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 12,992 
 

நஞ்சைக் காட்டின் கிழக்குக் குண்டில், வரத்து வாய்க்காலை ஒட்டி, வாமடை பிரிந்து செல்லும் இடத்தில் கரையான் பூச்சிகள் புற்று வைத்த மேட்டில், நிலத்தின் ஈரம் சொத, சொதவென மாறாது நின்றிருக்கும் இடத்தில், சம்பந்தா சம்பந்தமில்லாமல் தனித்து நின்றது அந்த ஒற்றைப் பனைமரம்.

சாமி வயக்காடு என்றால் யாருக்கும் அடையாளம் சொல்லத் தெரியாது. இனாம் நாச்சியார் கோவில் கிராமத்தின் வடக்கு விளிம்பில் உள்ள காடு தான் சாமி காடு என்று ஊருக்குப் புதிதாய் வருபவருக்கு அடையாளம் காட்டப்பட்டது. யார் நட்டார்களோ யாருக்குத் தெரியும்?! பனைமரத்தையெல்லாம் யாரும் இளம் கன்னு வெச்சு நடுகிற வழக்கமில்லை. எங்கேயோ எப்போதோ முளைத்த ஒரு பனை நெத்து நிலத்தில் ஊன்றி, வளர்ந்து, பெரியகுளம் கண்மாய்த் தண்ணீர் வாய்க்கால் வழிந்தோடி, நெல்லுக்குப் பாய்ந்த போது, இந்தப் பனை நெத்துக்கும் பொசிந்து, பயிர் பச்சைக்கு இட்ட எரு, உரம் எல்லாவற்றிலும் தன் பங்கையும் வாங்கிக் கொண்டு, ஓங்கி உலகளந்து, விஸ்வரூபம் எடுத்து, கரு கருவென நின்றது. அம்மரத்தின் பின்புலத்தில் நீண்ட நெடிய மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்.

எத்தனை வருசம் அங்கே நின்றதோ, யாரறிவார்?! ஒற்றை மரம் என்பதால் அதில் சூல் கொள்ளவில்லை. மரத்தின் நேர் கீழே கரையான் புற்றுக்கள் இருந்ததால், மரம் ஏற எவருக்கும் தோதுப்படவில்லை. ஒருவரும் சீண்டாமலே சும்மனே கிடந்தது அம்மரம். பனைமரம் உணர்வின்றி, மரத்துப் போய்க் கிடந்தது.

வெளியூருக்கு ஒரு சொந்த சோலியாகப் போன மாசாணன், ஒரு நாள் நாச்சியார்கோவில் கிராமத்துக்குத் திரும்ப ரொம்ப நாழியாகிவிட்டது. பின்னிரவில் இரண்டாம் ஜாமத்தில் அவன் சாமி வயக்காட்டைக் கடந்த போது, ஈரமான மேல் காத்து சுழித்து, சுழித்து அடித்தது. பனைமரத்தின் ஓலைகள் காற்றில் படபடத்துச் சலசலத்தன. மார்கழி மாச வெம்பா பனி, மரத்தின் உச்சியில் முட்டிக் கொண்டு நின்றது. அருகில் அவனது ஊர் மயான நிசப்தத்தில் இருந்து. ஓலைச் சலசலப்பில், மங்கிய நட்சத்திரங்களின் வெளிச்சத்தில், பனைமர உச்சியில் பனி வெம்பாவைப் பார்த்த மாசாணனுக்கு அடி வயிறு பிசைந்தது.

ஒரு கணம் பனைமர உச்சியை ஏறிட்டுப் பார்த்த போது, நாப்பது அடி உயரத்தில், உச்சியில் சலவை வேட்டி போன்ற வெள்ளை நிறத்தில் யாரோ கையசைத்துக் கூப்பிடுவது போல பிரமை தட்டியது. ஊர் அடைந்து, வீட்டுக்குப் போய் படுத்த மாசாணனுக்கு மறுநாள் காலையே கடும் சுரம் கண்டது.

ஶ்ரீவில்லிபுத்தூர் தர்மாஸ்பத்திரியில் பன்னிரண்டு நாட்கள் படுத்த படுக்கையாய்க்கிடந்த அவன் உயிர் பிழைக்க வேண்டி, அவனது ஒரே பொஞ்சாதி கிருட்டிணம்மாள், ஈரேழு பதினாலு லோகத்திலுமுள்ள தேவர்கள், கின்னர, கிம்புருடர்கள், யட்ச, கந்தவர்களில் தொடங்கி, ஊருக்கு வெளியே ஊர் விலக்கம் செய்து தள்ளி வைக்கப்பட்ட இருளப்பசாமி, சொறிமுத்து அய்யனார், கலுங்கலடி கருப்பசாமி, தன்தலைவெட்டி அய்யனார், நைனார் சாமி முதலான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட எல்லா சாமிகளுக்கும் படையல் வைப்பதாய் பயபக்தியில் உள்ளம் உருகி நேர்ந்து கொண்டு, முந்தானையில் எட்டணாக்காசை முடிந்து கொண்டு நேர்ச்சை செய்ததால், நோய்வாய்ப்பட்ட மாசாணன், கவர்மெண்ட் வைத்தியர்களின் அஜாக்கிரதை, நர்சுகளின் அலட்சியம், தரமில்லாத தண்ணி மருந்து, ஈ, கொசு, மூட்டைப்பூச்சி மொய்க்கும் ஆஸ்பத்திரி வார்டின் சகல தொற்று நோய்களுக்கும் உயிர் தப்பித்து, சொஸ்தமாகிப் பிழைத்துத் தன் சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தான்.

நாலு நாட்கள் கறிச்சோறு ருசி கண்டவனுக்கு, மீண்டும் அந்த ஒற்றைப் பனைமரம் ஞாபகத்துக்கு வரவே, அன்றைக்கே ஒரு பெரிய கனத்த நாலு இன்ச் ஆணி, சுத்தியல் சகிதம், அந்தப் பனைமரத்துக்குப் போய், அதன் கீழே ஒரு ஆள் உயரத்தில், மரத்தின் இடுப்பில் ‘நட்டாங் நட்டாங்’ கென்று ஆணியை அடித்து, ஒரு செவ்வந்திப்பூ மாலையைத் தொங்க விட்டு, மூப்பனார் கடையில் சகாய விலைக்கு வாங்கிய நூல் இழை வெள்ளைச் சவுக்கத் துண்டை அந்தப் பனைமரத்தின் இடுப்பில் கட்டி, பயபக்தியாய்ச் சாமி கும்பிட்டு விட்டுப் போய் விட்டான்.

மாசாணனை நோயில் வீழ்த்தியது பனைமரத்துச் சாமி தான் என்று ஊராருக்குப் பிரசங்கம் செய்தது சாட்சாத் அவனது பத்தினி கிருட்டிணம்மாள் தான். பருத்திக்காட்டில் சொளை பறிக்கப் போனவள் பனைமரத்தில் ஒரு முனியாண்டி சாமி புதிதாய் குடியேறி இருப்பதாகவும் (வாடகை எதுவும் தராத பட்சத்திலும்) வரப்பிரசாத தெய்வமென்றும், நள்ளிரவில் மர உச்சியில் நின்று, வெள்ளை வேட்டி கட்டி நட்டுவாங்கமில்லாமல் கூத்து நடனம் ஆடுவதாகவும் புஞ்சைக் காட்டில் கயிறு திரித்தாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த வனத்தாய், பேச்சி மற்றும் ஆவாராயி ஆகிய கிழவிகள், அன்றைக்குப் பொழுது சாயும் நேரம் ஊர் திரும்பும் போது, அந்தச் சின்ன கிராமத்தின் நாலா மூலைகளிலும் தமுக்கு, தண்டோரா எதுவுமில்லாமல் இந்த முனியாண்டி சாமியின் புதிய வீட்டு கிரகப்பிரவேசம் பற்றிப் பொதுக்கூட்டப் பிரச்சாரம் நடத்தி விட்டார்கள்.

அடுத்த பங்குனியில், ஊரில் பெரிய காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்த பொது, மேற்படி பனைமரத்தில் குடியேறிய முனியாண்டிக்கும் ஒரு வாழை இலையில் சுடச்சுட சக்கரைப் பொங்கல் கிடைத்தது. கூடவே ஒரு விள்ளல் ஆட்டுக்கறியும்.

காத்தாடி மகன் பரமசிவன் டிரைவிங் லைசன்ஸ் வாங்க இராஜபாளையம் ஆபீசுக்குப் புறப்பட்டுப் போகும் போது,

‘நல்லபடியா லைசன்ஸ் கெடச்சா உனக்கு ருசியா படையல் வைக்கிறேன்’ என்று முனியாண்டியிடம் சத்தியம் பண்ணி விட்டுத்தான் போனான். இவனுடைய தலையில் இருந்த வேப்பெண்ணை நாத்தத்தைத் தாங்க முடியாமல் அந்த மோட்டார் ஆபீசர்,

‘நீ ஒண்ணும் வண்டி ஓட்டிக் காட்ட வேணாம். இந்தா, பிடி லைசன்ஸ்’ என்று எடுத்த எடுப்பில் ஓட்டுநர் லைசன்ஸை அவனிடம் கொடுத்தார்.

தான் லைசன்ஸ் பெற்றதற்குக் காரணம் தன்னுடைய தலையில் உள்ள மகிமை நிறைந்த வேப்பெண்ணை தான் என்பதை சற்றும் உணராமல், அந்தக் காரியத்தைச் ‘செஞ்சு முடிச்சது’ அந்த பனைமரத்து முனியாண்டி சாமி தான் என்று, அந்த ஈடு இணையில்லா கௌரவத்தை அந்த முனியாண்டிக்கே தந்த காத்தாடி மகன் பரமசிவன், செண்பகத் தோப்புக்குப் போய், ஒரு முழுக் குப்பி பனங்கள்ளை இறக்கிக்கொண்டு வந்து, முனியாண்டிக்குப் படையல் வைத்து, தொட்டுக் கொள்ள வறுத்த கருவாடும், சேவல் மார்க் சுருட்டு ஒரு பாக்கெட்டும் வைத்து விளக்கேற்றி சாமி கும்பிட்டான்.

மறுநாள் காலை, அங்கு போய்ப் பார்த்தவன், கண்ணாடிக்குப்பி காலியாகக் கிடப்பதையும், கருவாடு தின்னப்பட்டிருப்பதையும், சுருட்டு புகைக்கப்பட்டிருப்பதையும் கண்டு, அஞ்சி நடுநடுங்கி, மரத்தின் முன்னே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி, முனியாண்டி சாமி தன் கள்ளு, கறி படையலை ஏற்றுக் கொண்டதை மம்சாபுரம் வரை போய்ப் பிரஸ்தாபித்தான்.

மேலும் ரெண்டு பேர், புதுசு புதுசான சிவப்புத் துண்டுகளை வாங்கி வந்து முனியாண்டியின் இடுப்பில் கட்டி விட, சாமிக்கு சாந்நித்யம் கூடியது. விபூதி, சந்தனம், குங்குமம், சூடம், சாம்பிராணி, ஊதுவத்தி, கதம்ப மாலை, பன்னீர் பாட்டில் சகிதம் பூஜை காண ஆரம்பித்தார் முனியாண்டி. உப்புப்பொரி, பட்டாணி, சர்க்கரை, அவல் என வாரா வாரம் வசதியாய்ச் சாப்பிட ஆரம்பித்தார் சாமி. பி.ஆர்.சி.கோவிந்தன் நாலு செங்கல்லைக் கொண்டு வந்து ஒரு விளக்கு மாடம் வைக்க, இருளில் கிடந்த முனியாண்டி, கிளியாஞ்சட்டி எண்ணை விளக்கில் மினுமினுத்தார்.

பால் மாடு கந்தசாமி வாடிக்கைப்பால் ஊற்றப் போகும் இடங்களிளெல்லாம் முனியாண்டி புகழ் பரப்பி வைக்க, இப்போது சாமியின் கீர்த்தி லட்சுமியாபுரம், துலுக்கன்குளம், பொட்டல்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, மற்றும் குடிநீர், மின்சாரம், ரேசன் அரிசி கிடைக்காத பட்டி, தொட்டி கிராமங்களிளெல்லாம் பரவ ஆரம்பித்தது.

இவை போதாதென்று, உள்ளூர்க்கவிராயர் ஒருவர், முனியாண்டி துதி, முனியாண்டி அகவல், முனியாண்டி கவசம், முனியாண்டி தோத்திரம் என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பாடி வைத்து, புத்தகமாக வெளியிட, முனியாண்டிக்கு இப்போது ஒரே மவுசு தான்.

தளவாய்புரம் கிராமம் செந்தில்குமார் ஒவ்வொரு ஊராகப் போய், அங்குள்ள கோவில் தெய்வங்களைப் பார்த்து வணங்கி, கதைகள் சேகரித்து. தல புராணத் தகவல்களைத் திரட்டி, பாடல்கள் எழுதி, கேசட் தயார் செய்து ஊர் ஊராய்ப் போய் விற்பவன். எந்த ஊரில் எந்தத் திருவிழா நடந்தாலும் அவன் கடை திறந்து விற்பனை செய்வதைப் பார்க்கலாம்.

பனைமர முனியாண்டியின் புகழ் செந்தில் குமாரின் செவிகளை எட்டியது தான் தாமதம். உடனே, பெட்டி படுக்கையுடன் பஸ் ஏறி, நேரே அந்த கிராமத்திற்கே வந்து விட்டான். வந்ததும் வராததுமாய் சோலைமலைச்சாமி வயக்காட்டுக்குப் போய், அவரிடம் முனியாண்டிச்சாமியின் தல வரலாற்றைக் கேட்க, சோலைமலைச் சாமி மௌனமாய் ஒரு நமட்டுச்சிரிப்பு சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒரு நையாண்டி இருந்தது.

பின்னே என்ன ‘பனைமரம் தன் வரலாறு கூறல்’ என்று ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் உள்ள கட்டுரையைப் போல, முனியாண்டிச் சாமிக்கு என்ன தல புராணம் சொல்ல முடியும்?! சுயம்புவாய் முளைத்த ஒரு பனை நெத்துக்கு தல புராணம் என்ன சொல்வது என்று தலையைச் சொறிந்து கொண்டார்.

சோலைமலைச்சாமி. தன் வயக்காட்டுப் பருவக்காரன் அய்யாக்கண்ணுவைக் கைகாட்ட, அய்யாக்கண்ணு உடனே பெரிய ஜபர்தஸ்தாய், கனத்த பீடிகையுடன் ஆரம்பித்து, சுயம்புவாய் பனைமரம் உதித்த, ஜனித்த, முளைத்த, வளர்ந்த, விரிந்த வரலாற்றைச்சொல்லி, சாமியின் திருவிளையாடல்களை ஒவ்வொன்றாய்க் கதை போல விவரிக்க, யாவற்றையும் கேட்டுக் கொண்ட செந்தில்குமார், உடல் புல்லரித்துப் போய், ஒரு முழு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அய்யாக்கண்ணுவிடம் திணித்து விட்டு, தன் சிறிய டேப் ரிக்கார்டரில் அந்த சரித்திரம் அத்தனையையும் பதிந்து கொண்டு சென்னைக்கு ரயிலேறிப் போனான்.

மூன்று மாதங்கள் கழித்து, ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கடைத் தெருவில், ராஜகோபால் கேசட் கடைப்பக்கம் யதேச்சையாய்ப் போன சோலைமலைச் சாமி, ‘இனாம் நாச்சியார் கோவில் பனைமரத்து முனியாண்டி மகாத்மியம் – பக்திப் பாடல் திரட்டு – பாடியவர் – அச்சந்தவிழ்த்தான் நிறைமருதன் – இசை – கோடம்பாக்கம் பத்மராஜன் – விலை ரூபாய் 60/- என்ற ஆடியோ கேசட் புத்தம் புதிய மோஸ்தரில் கண்ணாடி ஷோகேஸ் உள்ளே மினுமினுப்பதைப் பார்த்தார்.

முனியாண்டிக்கு தினசரி நல்ல சாப்பாடு கிடைத்தது. சுடச்சுட நெய்ப் பொங்கல், புதுத்தேங்காய், அவல், பொரி, பொறித்த சேவல் கறி, நெய் விட்ட மாவிளக்கு மாவு, நாட்டு வாழைப்பழம், சர்க்கரை என இவையெல்லாம் போதாதென்று தினசரி இரவில் கள்ளுக்குப்பி ஒன்று, சுருட்டு ஒரு பாக்கெட். தினசரி முனியாண்டி சுருட்டுப் புகைக்காமல் தூங்குவதே இல்லை. குறைவில்லாத ஊட்டமான தீனி தின்ற முனியாண்டி நெடிது வளர்ந்தார். கீழ் வயிறு உப்பியது. உப்பிய வயிற்றில் மேலும் ரெண்டு ஆணி அடிக்கப்பட்டு, ஒன்றில் சாமியின் பெயர், விலாசம் சொல்லும் பலகை ஒன்று தொங்க விடப்பட்டது. மற்றொன்றில், சிறிய மரத்தொட்டில் கட்டப்பட்டது.

புழு, பூச்சி வயிற்றில் பிறக்காத பெண்களுக்கு முனியாண்டி, குழந்தை பாக்கியம் தர ஆரம்பித்தார். சாமியாடி ரணவீரன் வருஷந்தோறும் பொங்கல் விழாவில், அரிவாள் எடுத்து ஆடிக் கொண்டே, தீப்பந்தங்கள் சூழ முனியாண்டி சாமிக்கு நேர்த்தி செலுத்தினான். அப்போது மஞ்சள் சேலை கட்டிய சுமங்கலிப் பெண்கள் ரணவீரன் தலையில் ஒரு குடம் மஞ்சத்தண்ணி ஊத்தி, அவன் காலைத் தொட்டு வணங்கினால் அடுத்த வருஷமே குழந்தை பாக்கியம் நிச்சயம் என அந்த வட்டாரமே நம்பியது. ரணவீரன் பனைமர முனியாண்டிக்கு துபாஷி வேலை பார்க்க ஆரம்பித்தான்.

இப்போதெல்லாம் முனியாண்டிக்கு பக்தர்களுடன் பேச நேரம் இருப்பதே இல்லை. சாப்பிடவும், தூங்கவும் நேரம் சரியாக இருக்கிறது. போதாக்குறைக்கு தினசரி கள், சுருட்டு வேறு. மயக்கத்தில் உறங்கிக்கிடப்பதே வேலையாகிப் போனது. சாமியாடிகள் மட்டும் முனியாண்டிக்குப் பக்கத்தில் போய், அவன் காதில் ஏதாவது பேசலாம். கேட்டதும், அவன் காற்றில் தலையைச் சிலுப்பிக் கொள்வான் அத்தோடு சரி, “புரிந்து கொண்டேன்” என்பது போல, அத்தோடு சாமியாடி இடத்தைக் காலி பண்ணிவிட வேண்டும். இல்லையென்றால், முனியாண்டிக்கு ரௌத்திரம் பொங்கிவிடும். “போடா, போடா. போய்ச் சோலியப்பாருலே!’ என்பான் முனியாண்டி. ரவ்வும், பகலும் செண்பகத்தோப்புக் கள்ளில் மப்பு ஏறிக்கிடந்தான் முனியாண்டி. மன்னிக்கவும். (கிடந்தார் முனியாண்டி).

கண் விழிப்பதே உச்சிப்பகல் பொழுதில் தான். கண் விழித்து எழுந்ததும், கீழே கிடக்கும் சூடான படையல் சோற்றை ஒரு பிடி பிடித்து விட்டு, ஒரு உறக்கம். சாயங்காலம் கண் விழித்ததும், அவலும், வாழைப் பழமும். சர்க்கரைப் பொங்கலும் தயாராய் இருக்கும். ஒரு கட்டு கட்டி விட்டு, பிறகு மறுபடி நல்ல உறக்கம். இரவில் முதல் ஜாமத்தில் கண் விழித்ததும். சிமிட்டா விளக்கு வெளிச்சத்தில் ரெண்டு பெரிய குப்பி பனங்கள்ளையும், வறுத்த கோழிகளையும் ஒரே முழுங்கில் முழுங்கிவிட்டு, ஒரு சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு, ஒரு நீண்ட கொட்டாவி விடுவார். அத்தோடு சரி. உறக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வரும். உறக்கத்தில் யாரும் எழுப்பினால் சாமிக்குப் பிடிக்காது. சில நேரம் உருமி மேளச்சத்தம் கேட்கும். கண் விழித்து “ஏண்டா, கோட்டி புடிச்ச பயலுகளா! எவன்டா அது சத்தம் கொடுக்கறது? தூங்க விடுலே நிம்மதியா!” என்று ஒரு அதட்டுப் போடுவார். தலை காற்றில் ஆடும். அத்தோடு சரி. நிசப்தம் வந்து விடும். ஒரு பயலாவது வாயைத் திறந்தால் தானே?!

தூக்கம் என்பது பரம சுகம். உண்பதும், உறங்குவதும், பிறகு மீண்டும் உண்பதும், உறங்குவதும்… அடடா…அதை என்னவென்று சொல்வது?! இதை அனுபவித்த முனியாண்டி, “இதுவே போதும், வேற எதுவும் எனக்கு வேணாம்” என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

முனியாண்டியின் சாந்நித்யம், அருள் மற்றும் அவரது மகிமை யாவும் பரம்பரை ஆதீன மட கர்த்தாக்களின் காதுகளில் விழுந்து அவர்களும்,

“இதென்ன வம்பாப் போச்சு! நாம தான், சுகவாசியா காலம் தள்ளறோம். நம்மள விட வேற ஆளு ஒருத்தன் இப்படி வாழுறானா?! ச்சே, இது தோதுப்படாது. இத இப்படியே விடப்படாது” என்று மனசுக்குள் பொரும ஆரம்பித்தார்கள்.

ஆனால் இந்தப் பொருமல், பொறாமை எல்லாம் முனியாண்டி காதுகளுக்கு எட்டவே இல்லை. முகவூருக்குத் தெற்கே நூறு மைல் விஸ்தீரணத்தில் முனியாண்டி பேர் காற்றில் ஒலிக்காத ஊரே இல்லை.

வீரசாம்பான், இனாம் நாச்சியார் கோவில் கிராமத்தில் மூணு தலைமுறைகளைப் பார்த்தவன். ஒரு பெரிய தகர உண்டியல் செய்து, பூட்டு போட்டு, அதைக் கனத்த சங்கிலியால் கட்டி, சாமி அருகில் உள்ள சிமிண்டு மேடையில் பதித்து வைத்தான். நாலே நாளில் அந்தத் தகர உண்டியல் புள்ளத்தாச்சி பொம்பள போல முழுசாய் நிறைஞ்சு கிடந்தது.

ஒரு சனிக்கிழமை இரவில், ஊரில் யாம சாம வேளையில் எல்லோரும் அசந்து உறங்கிக் கிடந்த போது, தகர உண்டியல் உடைக்கப்பட்டது. மொத்தம் சில்லரைக் காசுகளும், கை கொள்ளாமல் நெறஞ்சு கிடந்த சலவைத்தாள் நோட்டுக்களும் களவாடப்பட்டன. பாவம், முனியாண்டி! அவன் கள்ளு குடித்த மப்பில் துங்கிக் கொண்டிருந்தான். உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்ட சத்தம் கூட அவன் காதுகளில் கேட்கவில்லை.

மறுநாள், அதிகாலை ஊர்க்காவல் பரமுத்தேவன் தான், சாமி உண்டியல் களவு போன விஷயத்தை ஊருக்குச் சொன்னான்.

ஊரே திரண்டு அங்கு கோவிலுக்கு வந்தது. பின்பு, காவல்துறை வந்தது, பின்பு, ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் பிரமுகர்கள் வந்தனர். பின்பு, அறநிலையத்துறை அதிகாரிகள் ஜீப்பில் வந்தனர். “உண்டியல் வெச்ச கோவில் இது தான?! இனிமே இது அறநிலையத்துறைக்குச் சொந்தம். அதாவது அரசாங்கத்துக்குச் சொந்தம்”. அப்படின்னு ஒரு அறிக்கை எழுதிக் கொண்டு வந்து வாசித்துக் காட்டினார். பேன்ட்-சூட் போட்ட நடுத்தர வயசு ஆபீசர்.

மறு வாரம், செவ்வகமான ஒரு பலகை மேற்படி “பனைமர முனியாண்டி சுவாமி திருக்கோவில்–அறநிலையத்துறைக்குச் சொந்தமானது” என்று சொன்னது. அத்துடன் செயல் அதிகாரியும், தக்காரும் நியமிக்கப்பட்டனர். தகர உண்டியல் வைக்கப்பட்ட அதே இடத்தில், சதுரமான சிமெண்ட் தளம் போடப்பட்டு, ஒரு புதிய இரும்பு உண்டியல் வைக்கப்பட்டது. அத்துடன், ஒரு பூசாரியும் கோவிலுக்கு நியமனம் செய்யப்பட்டார். ஆறு கால பூஜையெல்லாம் ஆகம விதிகளின்படி. அது ஐம்பொன் சாமிகளுக்கு மட்டும். முனியாண்டி சாமிக்கு ஒரு கால பூஜையே போதும் என பூசாரி தருக்கனி மகன் மாயா நிர்ணயம் செய்தார். அதற்குக்கோவிலின் செயல் அலுவலர் சோ.முத்துக்கருப்பனும் எழுத்துப் பூர்வமாய் ஒப்புதல் தந்தார்.

சாமிக்கு அர்ச்சனை செய்ய டிக்கெட் ரூ.3.00, சாமிக்கு படையல் வைக்க கட்டணம் ரூ10.00, அபிசேகம் பண்ண ரூ.20.00 தீச்சட்டி எடுக்க ரூ.25, காது குத்த ரூ.50, சாமி முன்னால் கல்யாண நிச்சயதார்த்தம் பண்ண ரூ.100, திருமணம் செய்ய ரூ.250.00 என்ற நீளமான பட்டியலை ஒரு பெரிய சைஸ் போர்டில் எழுதி முனியாண்டிக்கு முன்பாக நிற்க வைத்து விட்டார்கள்.

இப்பொதெல்லாம் பனைமர முனியாண்டியைப் பார்ப்பதே அரிது. டிக்கெட் எடுத்தால் தான் தெய்வ தரிசனம். அதுவும் வெள்ளி, சனிக்கிழமைகளில் கியூ வரிசை மைல் நீளத்திற்கு நிற்கும். கோவில் அறங்காலர் ஒரே பிசி. அவர் காட்டில் ஒரே பண மழை.

“சாமி இல்லை. பூதம் இல்லை” என்று மேடையில் முழங்கும் பகுத்தறிவுவாதிகள், நாத்திகவாதிகள் கூட ரகசியமாக வந்து இரவு நேரங்களில், யாருக்கும் தெரியாமல் சாமி கும்பிட்டு விட்டுப் போனதாகத் தகவல். முனியாண்டி ரொம்ப பாவம். தன் கண் முன்னே, எவனெவனோ. பண வசூல் செய்து கொண்டு செழிப்பாக இருப்பதைப் பார்க்கப் பார்க்க பொறாமையாகத்தான் இருந்தது. ஒரே மாத வசூலில் நிர்வாக அதிகாரி முத்துக்கருப்பன் பைக் வாங்கி விட்டார் என்றால் என்னவென்று சொல்வது?!

தன்னை முன் நிறுத்தி வசூல் பண்ணிக்கொண்டிருந்த பேன்ட் – சூட் ஆபீசர்களைப் பார்க்கப் பார்க்க முனியாண்டிக்கு கோபம், கோபமாய் வந்தது. வாரா வாரம், ஓரு அதிகாரி ஜீப்பில் வந்து முனியாண்டியைப் பார்த்து விட்டுப் போனார். வக்கீல்கள் தங்கள் கேஸ் ஜெயிக்க வேண்டும் என்று சாமிக்கு வேண்டுதல் செய்தார்கள். தினசரி வேளா வேளைக்குப் படையல்தான். ஆனால், எடுத்துச் சாப்பிட முடியாது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைன்னு முனியாண்டிக்கு ஒரே வயித்தெரிச்சல். இப்படிப் பல மாதங்கள் சுழன்று ஓடின.

ஒரு சித்திரை மாதத்தில், கோடை வெப்பம் கொளுத்திக் கொண்டிருந்தது. சூரியன் பூமியை உக்கிரமாய் தகித்துக் கொண்டிருந்தான். நெருப்பு ஆறு, வீதியில் பெருக்கெடுத்து அனல் பறக்க ஓடியது. வயல் வெளிகளில் வெப்பம் உப்புப் பொரித்துக் கிடந்தது. மாலை மயங்கியதும் சூரியன் மேல் திசையில் வீழ்ந்ததும், கருக்கலில் பூமியில் இருள் படர்ந்தது.

பக்கத்துக்கேரளாவிலிருந்து வந்த கருமேகம், மேற்குத்தொடர்ச்சி மலையின் மேல் கருக்கொண்டு திரண்டு நின்றது. நீர் முட்டி நின்ற கருமேகக் கூட்டம் பூமி பார்த்தது.

“சட் சடா, சட் சடா” வென திடீரென இடி ஓசை கொட்டியது. பெரும் அதிர்ச்சியோடு, மின்னல் வானத்தில் கிழ மேற்காக ஒரு வெட்டு வெட்டி, எங்கும் வெளிச்சத்தைச் சிதற அடித்தது. ஒரு சில நிமிடங்கள் இடைவெளி. ரங்கநாதபுரம் – கம்மாப்பட்டியில் உள்ள நிறைமடி பசுமாடு, யாதவன் வைத்துள்ள குடத்தில் பால் பொழிந்தது போல, மேகம் முழு வீச்சில் தன்னுள்ளே கருக்கட்டி நின்ற தண்ணீர் அத்தனையையும் அப்படியே நிலத்தில் கவிழ்த்தது. வெடித்துப் பாளம் பாளமாய்க் கிடந்த நஞ்சைக்காடு, புஞ்சைக்காட்டு வெளிகளில், பூமி அந்த நீரை அப்படியே “தா தா” வென்று உள் வாங்கிக் கொண்டது. எங்கும் ஊழிக்கால நீரின் பிரவாகம்.

மீண்டும் ஒரு இடி மின்னல் வெட்டியது. இப்போது அது நேர் செங்குத்தாய் மலையிலிருந்து பூமி நோக்கி இறங்கியது. வெடித்த அந்த இடி மின்னல் வீழ்ந்த இடத்தில், பனைமரத்து முனியாண்டி நேராய் நின்று கொண்டு இரவிலும் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். வெட்டிய இடி அவர் தலையில் செங்குத்தாய் இறங்க, அது அவரது தலையை அப்படியே அய்யனாரின் அரிவாள் வீசியதைப் போல வெட்டியெடுத்து பூமியில் தூர வீசியது. ஒரு பெரிய கொத்து பனை ஓலைகளும், பாளைகளும் கீழே தெறித்து விழுந்து நாலா பக்கமும் சிதறின. கொட்டிப்பெய்த மழை முனியாண்டியின் வெற்று முண்டமான உடம்பை நனைத்துக் கொண்டே இருந்தது. இரவு முழுக்கப் பெய்த அடை மழை பெரியகுளம் கண்மாயை நிரப்பி விட்டது.

காலைக்கடன் முடிக்க தரிசுப்பக்கம் ஒதுங்கிய மாசாணன் தான் முதன் முதலாய், முனியாண்டி தலை வெட்டப்பட்டு, மொட்டையாய் நிற்பதைப் பார்த்து, பதைபதைத்து ஊருக்குச் சொன்னவன். ஊரே பதறியடித்து ஓடி வந்தது. ஒட்டு மொத்தமாய் இனாம் நாச்சியார் கோவில் கிராமமும், இனாம் கரிசல்குளம் கிராமமும் ஒன்று திரண்டு முனியாண்டியைச்சுற்றி நின்று, கண்களில் ஒப்பாரி வடிய பார்த்தபடி நின்றது. ரெண்டு கிராமங்களும் ஏற்கெனவே, வெட்டு, குத்துப் பகையில் இருந்தவை. முனியாண்டியின் துஷ்டி நிகழ்ச்சி ரெண்டு கிராமத்து சனங்களை ஒன்று சேர்ந்தது. பெண்கள் மூக்குச் சிந்தி ஒப்பாரி வைத்தனர். ஜீப்பில் வந்தார் செயல் அலுவலர் முத்துக்கருப்பன். காமதேனுவாய் வருமானம் தந்து கொண்டிருந்த முனியாண்டியின் மரணத்திற்கு உண்மையிலேயே அவர் வருந்தினார்.

வெட்டப்பட்ட முனியாண்டி, மொட்டையாய் முண்டமாய் நின்றார். தலையில்லா முனியாண்டி சாமியைக் கும்பிட யாரும் வரவில்லை. வசூலும் இல்லை.

இரவில் அங்கு நடமாட்டம் குறைந்து, கோவிலில் இருந்த டியூப்லைட்டுகள் அகற்றப்பட்டன. உண்டியலைக் கழட்டி எடுத்து, வீட்டுக்குக் கொண்டு போய் விட்டார் முத்துக்கருப்பன். அகலமான செவ்வக போர்டுகள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. இரவில் அந்த முனியாண்டி, பேய் ரூபத்தில் வெள்ளை உருவமாய், தலை விரித்து வயல் வெளிகளில் சுற்றித்திரிவதாக, ஊர்க்கிழவி பேச்சி தான் கதை அளந்து கொண்டு இருந்தாள்.

சோலைமலைச்சாமி, மொட்டை முனியாண்டியை என்ன செய்யலாம் என்று யோசித்தார். விற்று விடலாமா என்றால், பேய் பிடித்த முனியாண்டியை வெட்டுவதற்கு சுற்று வட்டாரத்தில் எவனும் முன் வரவில்லை.

“அதுல வேற ஒரு பொம்பள முனி குடியிருக்குது சாமி. அந்த பொம்பள முனி தான் செத்துப்போன முனியாண்டிக்கு முத சம்சாரம். அதனால அதப்போயி வெட்டுறது பாவம் சாமி” என்று மரவெட்டிகள் பயந்தார்கள்.

களை எடுக்க வரும் பெண்களிடம், பனைமர முனியாண்டியின் விதவை மனவைியின் கதையைச் சொல்லி அவர்கள் அச்செய்தியை தேவனின் சுவிசேஷ நற்செய்தி போல எங்கும் பரப்பினார்கள். ஒருவனும் கரு முண்டமாய் நின்ற முனியாண்டியைத் தொட்டு அகற்ற வரவில்லை.

“சவம் கிடக்குது. விட்டுத்தள்ளுங்க!” என்று சோலைமலைச்சாமி தன் வகை ஆட்களிடம் சொல்லிவிட்டு பிறகு அவரும் அதை மறந்தே போனார்.

இனாம் நாச்சியார் கோவிலுக்குத் தெற்கே வன்னியம்பட்டியில் விதவிதமான தொழில்கள் செய்து பிழைக்கும் ஆட்களில் பச்சையப்பனும் ஒருவர். வயசாளி. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் மெலிந்த தேகம். இடுங்கிய கண்கள், சிவந்த முகம். எழுபதைத் தாண்டிய பச்சையப்பனுக்கு ஒரே விரோதி அரசாங்கத்தின் வனத்துறை தான். “வீட்டுக்கு வீடு ஒரு மரம் வெக்கணும்னு கவர்மென்ட் சொன்னா, வெச்ச மரத்தையெல்லாம் எவன் வெட்டுறது? அது பாட்டுக்கு எங்க பார்த்தாலும் மரம் வளர்ந்து கிடக்குது. பாக்க நல்லாவே இல்லையே!” என்பார். அவருடன் இருந்து மரம் வெட்டித்தர ஐந்து சம்பளக் கூலியாட்கள் எப்போதும் உண்டு. அவர்களில் ஒருவன் சந்தனக்காளை.

இனாம் நாச்சியார் கோவிலில், பார்க்க, வளப்பமாய் இருந்த ரெண்டு பெண்களிடம் தொடுப்பு வைத்திருந்தான் சந்தனக்காளை. ஒரு இரவில் அந்தப் பெண்கள் பேச்சு வாக்கில் மேற்படி பனைமர முனியாண்டி சாமியின் பிரபாவத்தை அவனிடம் அவிழ்த்து விட்டனர். கதையைக் கேட்ட சந்தனக்காளைக்கு முனியாண்டி மீது பச்சாத்தாபம் ஏற்பட்டது. நெடுநாளாய் ஒரு வருசம் நின்று கொண்டிருக்குதே. நம்ம பச்சையப்பன் கிட்ட சொன்னா என்ன. அண்ணாச்சி மனசு வெச்சா அந்த மேற்குத் தொடர்ச்சி மலையைக் கூட பேர்த்து எடுத்துடுவாரே என்று அங்கலாய்த்தான்.

உடனே சைக்கிள் மிதித்துப் போய், தன் முதலாளி பச்சையப்பனைப் பார்த்த சந்தனக்காளை மேற்படி சவ சரீரத்தைத் தொட்டுத் தூக்க எவனுக்கும் தைரியம் வரவில்லை என்ற உபரித் தகவலையும் வயசாளியிடம் ஒப்புவித்தான்.

முனியாண்டி பாகவதம் கேட்ட பச்சையப்பன், ஜல்லிக்கட்டு காளையை அடக்கக் களத்தில் குதிக்கும் இளந்தாரியைப் போலத் துள்ளிக்குதித்தார். மறுநாளே, சோலைமலை சாமிக்குத் தகவல் சொல்லி அனுப்பி விட்டு, தன் வகையறா ஆட்கள் நாலு பேருடன் நேரடியாக ஸ்தலத்திற்குப் போன பச்சையப்பன், கீழே நின்று கொண்டு முனியாண்டியைத் தலையிலிருந்து கால் வரையும், காலிலிருந்து தலை வரையிலும் பார்த்துவிட்டு, தலையை ஆட்டி ஒப்புதல் கொடுக்க, கூரிய தீட்டப்பட்ட கோடாரிகள் முனியாண்டியின் இடுப்பில் கடுமையாய் இறங்க ஆரம்பித்தன.

மரம் வெட்டிய ஆட்கள் தெலுங்கு பேசிக்கொண்டே “ஓங்கி தெங்குறா” “தெங்குறா” என்று வாயில் கறுவிக்கொண்டே கோடாரிகளை முழு வீச்சில் கீழே இறங்கினார்கள்.

ஆரம்ப வெட்டுக்களில் முனியாண்டி அசைந்து கொடுக்கவில்லை. இருபது வெட்டு போட்டதும் சில்லு சில்லாய், செதில் செதிலாய் முனியாண்டி பெயர்ந்து விழ ஆரம்பித்தான். கோடாரி வீச்சு அதிகமாக ஆக, ஆக முனியாண்டியின் இடுப்பு பிளக்க ஆரம்பித்தது. அது மெலிந்து கொண்டே வந்தது.

கோடாரிக்காரர்கள் நல்ல முரட்டு ஆட்கள். கள்ளுக்குடித்த மப்பில் தான் கோடாரியை வீசினார்கள்.

“ம்ம்ஹீம்ம்.. ம்ம்ஹீம்ம்” என்ற இளைப்புப் பெருமூச்சுடன் கோடாரி வெட்டு விழுந்து கொண்டே இருந்தது. ஊரடியில் இருக்கும் பெட்டிக்கடையில் இருந்து சோடா, பீடி, புகையிலை வந்தது. புகையிலையை வாயில் அதக்கிக் கொண்டு வேலையாட்கள் கோடாரி வீச ஆரம்பித்த பொழுது, சூரியன் அவர்களின் தலைக்கு மேலே நேர் உச்சியில் மிக உஷ்ணமாய் எரிந்து கொண்டிருந்தான்.

வீச்சு இப்போது குறைந்து, முனியாண்டியின் இடுப்பு, நூலிழையில் நின்ற போது, பச்சையப்பன் வெட்டுவதை நிறுத்தச்சொன்னார்.

முனியாண்டியின் மார்புக்கு மேலே, மூன்று அங்குல கனத்தில் நல்ல கொச்சைக் கயிறு இறுக்கிக் கட்டப்பட்டு, அதன் மறுமுனை தூரத்தில் நின்ற வாதராட்சி மரத்தில் கட்டப்பட்டது. இன்னொரு கொச்சைக் கயிறை எடுத்து மீண்டும் முனியாண்டி மார்பில் கட்டி, அதன் மறு முனையைப் பிடித்துக் கொண்டு தயாராய் நான்கு பேர் நின்றனர்.

இப்போது மீண்டும் கோடாரி வெட்டு விழத் தொடங்கியது, பழைய வீச்சு இல்லை. பதமாகத் தான் வீசினார்கள். பத்தாவது நிமிஷத்தில் முனியாண்டி இடுப்பு வலி தாங்க முடியாமல் அலறத் தொடங்கினார். “ணார்… ணார்… ணார்” என்று ஒரு ஈனஸ்வரத்தில் வேதனையில் முனகும் சத்தம்.

கோடாரி பிடித்தவன் வீச்சை நிறுத்தி விட்டு, எல்லோரிடமும் “கவனமா தள்ளி நில்லுங்க” என்று சொல்லிவிட்டு மேலும் வீசத் தொடங்கினான்.

இப்போதும் “ணார்… ணார்… ணார்” அவஸ்தையில் முனகினார் முனியாண்டி. “இந்தா உன் சோலி முடிஞ்சது” என்று இறுதியாய் ஒரு வீச்சு வீசினான் ஒரு இளந்தாரி.

தான் நின்ற இடத்தில் அப்படியே ஒரு ஆட்டம் சுழன்று ஆடினார் முனியாண்டி. இடுப்பு முறிந்தது. பிறகு, பெரிய மரண ஓலத்துடன் தெற்குப் பக்கம் சாய்ந்து விழுந்தார் முனியாண்டி.

நெல் அறுவடை முடிந்து, தாள் துருத்திக் கொண்டு நிற்கும் வயலில், நாப்பது அடி உயரத்தில் ஒரு சவ சரீரம் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தது. உயரமான முனியாண்டி என்பதால், உடலை ரெண்டாக வெட்டி எடுத்துப் போகலாம் என முடிவு செய்தார் பச்சையப்பன். அதன்படி மேலும் ஒரு மணி நேரத்தில், கோடாரி வீச்சுக்களில் இரண்டு சரீரங்களாய் துண்டுபட்டுக் கிடந்தார் முனியாண்டி.

சவத்தை டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்த போது, பச்சையப்பன்,

“நல்ல வைரம் பாய்ஞ்ச கட்டை. வீட்டு உத்தரம் செய்ய தோதுப்படும். நேரா வன்னியம்பட்டிக்கு வண்டியை விடுப்பா. என் வீட்டுல இது ரெண்டையும் இறக்கிரு. ஆசாரிய வெச்சு சோத்தையெல்லாம் சுரண்டி எடுத்துட்டு, நல்லா இழைச்சு, உத்தரமாய்ச் செஞ்சுற வேண்டியதுதான். என் மகா தனி வீடு கட்டிக் கொடுங்கப்பான்னு ரொம்ப நாளா அனத்திக்கிட்டே இருக்கா”

என்றபடி சக கூலியாட்களுடன் டிராக்டரிலேயே வன்னியம்பட்டிக்குப் புறப்பட்டார்.

சோசியம் சமுத்திரபாண்டி காட்டைத் தாண்டி, வரப்பில் ஏறி இறங்கிய போது, டிராக்டர் குலுங்கியது. பின்னே உள்ள டிரெய்லரில் இரண்டு பேராய்க் கிடந்த முனியாண்டி, இனிமேல் செத்த பின்னும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கப் போகும் தன் தலைவிதியை எண்ணி நொந்தபடியே தன் நீண்ட பயணத்தைத் தொடங்கினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *