அவளுக்கென தற்பொழுது சொந்தங்கள் இல்லை. அகதிமுகாம் வாழ்க்கை நிம்மதியை கொடுக்காது விட்டாலும் தனிமையைக் குறைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் பலர் இருந்தார்கள். அவளால் பலருக்கு உதவி செய்யமுடிந்தது. அதிலும் குழந்தைகளை பராமரிக்க உதவுவதில் பெரும்பாலான நேரம் கழிந்தது.
ஒருவிடயம் மட்டும் அவளுக்கு தொந்தரவாக இருந்தது. அதுவும் இரவுகளில் அந்தத் தொல்லை வந்து சேருகிறது. மற்றவர்களிடம் பேசி ஆறுதலடைய முடியாத விடயம். அதைத் தீர்க்க அவளுக்கு வழி தெரியவில்லை. பல நாட்களாக தலையைப் போட்டு உடைத்தாள். எதுவும் தென்படவில்லை.
அவளது வாழ்க்கை மன்னாரில் தொடங்கி முள்ளிவாய்காலில் முடிந்த மூன்று வருட யுத்தத்தில் வறுத்தெடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியமாகத் தொடர்கிறது எந்தப் பெண்ணுக்குத்தான் தொடர்ச்சியாக ஆண் ஒருவன் தொடர்வதைச் சகிக்கமுடியும்?
“எனக்கு ஏன் இந்த வேதனை? இவ்வளவுக்கும் போர் அலைச்சல் என்னை வாட்டி எடுத்துள்ளது. என்னில் என்ன கவர்ச்சியைப் பார்த்தான் இந்தப் பாவி? “
கலாவினது துன்பம் சில வருடங்களாக தொடருகிறது.
செட்டிகுளம் அகதிமுகாமில் இருந்தபோது நடந்த விடயங்களை தாங்க முடியாது இராணுவப் பொறுப்பாளரிடம் முறைப்பாடும் செய்தாள். அவளைப் பொறுத்தவரை இழப்பதற்கு எதுவுமில்லாத நிலையை இந்த யுத்தம் பரிசாக கொடுத்துவிட்டது. எதிர்காலமே கேள்விக்குறியாக அவள் முன்பாக தொங்குகிறது.
போரின் இறுதிக்கட்டத்தின் முன்பாக வந்ததால் செட்டிகுளம் முகாமில் தனியான வசிப்பிடம் கிடைத்தது. நான்கு பக்கங்களும் அடைக்கப்பட்ட கிடுகால் அமைந்த குடிசை. பிற்காலத்தில் அமைக்கப்பட்ட கன்வஸ் கூடாரங்களைவிட வசதியானது.
அன்று அந்த அகதிமுகாம்களுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி அந்தப்பகுதிக்கு மக்களின் குறை கேட்க வந்தார். அவரது ஓட்டவெட்டப்பட்ட நரைத்தலை, சாதுவான முகம், கனிவான கண்கள், ஆறுதலான குரல் எல்லாம் அவளுக்கு அவரிடம் நம்பிக்கையைக் கொடுத்தது. அருகில் சென்று அவரைப் பார்த்தபோது கலாவிற்கு மதிப்பு வந்தது. இவரிடம் துணிந்து சொல்லலாம் என நினைத்தாள். நெருங்கியபோது அவரது நெஞ்சுயரத்தில் நின்றாள்.
துணிவை வரவழைத்துக்கொண்டு, தலையை நிமர்த்தி, ‘எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை நான் உங்களுக்கு சொல்லவிரும்புகிறேன். இங்கல்ல. உங்கள் அலுவலகத்தில்.’ என்றாள்.
ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்த அந்த அதிகாரி, இந்தப்பெண் போராளிகளைப்பற்றிய தகவலைத் தரவா அல்லது இவளும் ஒரு தற்கொலைப் போராளியாக இருக்கமுடியுமா என சிந்தித்தபடி பொறுப்பாளர் திலகரத்தின ‘இன்று மாலை ஒரு பெண் அதிகாரியை அனுப்புகிறேன் அவருடன் வரவும’ என்றார்;.
மாலையில் வந்த பெண் அதிகாரி கலாவின்) உடையைக் களைந்து பரிசோதித்துவிட்டு அடிவயிற்றைப் பார்த்து
‘உன் புருசன் எங்கே?’ எனக்கேட்டாள்.
‘யுத்தத்தில் இறந்துவிட்டார்’
‘உண்மையாகவா?’
அந்தப் பெண் அதிகாரியோடு சென்ற கலா தனது கதையை கூறினாள்.
யுத்தத்தின்போது மன்னார் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்களில் ஒருத்தி கலா. ஆரம்பத்தில் உறவினர்கள் கிராமத்தவர் என பலருடன் இடம் பெயர்ந்தாள். மன்னார் பகுதியில் தொடங்கிய யுத்தத்தில் குடும்பமாக கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் வழியெங்கும் யுத்தத்தின் அழிவும் கோரவிளைவுகளும் நிழலாக அவளைத் தொடர்ந்தன. குடும்பத்தில் ஒவ்வொருவராக உயிரைத் தொலைத்தவர்களில் கடைசியாக உயிருடன் தப்பிவந்தவள் அகதி முகாமில் தஞ்சமடைந்தாள்.
அவள் வாழ்ந்த பிரதேசத்திற்கு பெரியகுளத்தில் இருந்து பாயும் நீரால் நெல் விளையும். வயல்பிரதேசத்தின் நடுவில் அமைந்துள்ள மேட்டில் அவள் குடும்பம் வாழ்ந்தது. வீட்டை சுற்றிக் காய் கறித்தோட்டம். அதற்கப்பால் அவர்களது நெல்வயல்கள். அங்கு கொக்குகளும் நாரைகளும் உணவுக்காக தவமிருந்த காலத்தில் நடந்த சம்பவம்.: மன்னார் பகுதியில் யுத்தம் கருக்கொள்வதற்கு சிலமாதங்கள் முன்பாக நடந்த விடயம் விதையாக விழுந்து. பிற்கால நிகழ்விற்கு அச்சாரமாகியது.
அவளுடைய ராணி என்ற கறுப்பு நாயுடன் எங்கிருந்தோ வந்து சேர்ந்த செந்நிறமான ஆண் நாயொன்றும் அவளது வீட்டில் ஓட்டிக்கொண்டது. அதற்கு டார்சான் எனப் பெயர் வைத்தாள். இரண்டு நாய்களும் எதிர்பார்த்தது போல் தம்பதியாகிவிட்டன.
இயக்கத்தில் பன்னிரண்டு வயதில் இருந்து ரக்கியாக (வேவு) வேலைபார்த்த கலாவின் தம்பி சுரேஸ் வளர்ந்துவிட்டான். எப்போதாவது வீட்டுக்கு வரும் அவன், பலமுறை கல்லால் அடித்து டார்சானை துரத்தினான். ஏனோ அவனுக்கு ஆண்நாயைப் பிடிக்காது. அம்மாவும் கலாவும் டார்சானுக்காக பரிந்துபேசி அவனுடன் சண்டைக்குப் போனார்கள்.
ஒரு நாள் இயக்கத்தில் இருந்து கைத்துப்பாக்கியைக் கொண்டு வந்து நாயை விரட்டி சுடமுயற்சித்தான். அப்பொழுது அம்மாவுக்கும் கலாவுக்கும் புரிந்துவிட்டது. இவன் தன்னை ரக்கி என பொய் சொல்கிறான். இயக்கத்தில் ஏதோ பொறுப்பில் இருந்தால்தான் கைத்துப்பாக்கி கிடைக்கும். அம்மா குய்யோ முறையோ என இரவு முழுவதும் அழுதபடி இருந்தபோது அதைப்பற்றி கவனிக்காமல் அப்பு தன்பாட்டில் இருந்தது. சில வருடங்களாக அப்புவின் மூளையில் வீட்டு விடயங்கள் பற்றிய எந்த சிந்தனையுமில்லை. அன்றுதான் கடைசியாக சுரேஸ் வீட்டிற்கு வந்தது. அந்தநாளில் வீட்டில் அம்மா ஒரு மரணவீட்டை நடத்தி முடித்திருந்தாள்.
சுரேஸின் விடயம் தெரிந்து அம்மா அழுத இரண்டு மாதங்களில் ராணி வீட்டின் பின் பகுதியில் மாட்டுக்கொட்டிலுக்குள் இரண்டு குட்டிகளைப் போட்டிருந்தது.
அப்புவுக்கு பெரும்பாலும் ஏதோ வழியாக சாராயம் கிடைத்துவிடும். இயக்கக் கட்டுப்பாட்டில் சாராயம் கிடைக்காது என நினைக்க வேண்டாம். அனுபவசாலிகளுக்கு வழி தெரியும். அப்பு குடித்துவிட்டு பொழுதோடு படுக்க போய்விடும்;. பிற்காலத்தில் சோறு, பாலப்பழம் எனக் கிடைப்பதில் இருந்து சாராயம் வடிப்பதற்கும் தெரிந்து கொண்டது. வீட்டின் பின்பகுதியில் உள்ள கொட்டிலுக்குள் மூன்று அடுப்புகள் வைத்து பானைக்கு மேல் பானை வைத்து அதில் பிளாஸ்ரிக் குழாய் வைத்து சாராயம் வடிக்கிறது. வழக்கமாக கிடைப்பதிலும் சுத்தமானது. அத்துடன் அதிகபோதை தருவது எனவும் சொல்லிக் கொள்ளும்.
சுரேஸ் ஒருநாள் பானைகளை உடைத்துவிட்டு இயக்கத்திடம் புகார் சொல்லவிருப்பதாக வெருட்டினான். அவனோடு எதுவும் பேசாது இரண்டு நாட்களில் மீண்டும் தனது வடிசாலையை அப்பு உருவாக்கியது.
ஒரு நாள் இரவு ராணி குரைத்தபோது லாம்பைக்கொண்டு சென்றாள். வைக்கோல் நிறைந்திருந்த மாட்டுக் கொட்டிலுக்குள் எதுவும் தெரியவில்லை. சில நிமிட நேரத்தில் திரும்ப நினைத்தபோது வைக்கோல் கட்டுகளுக்கு இடையில் பார்த்தபடி ராணி குரைத்தது. அப்பொழுது கருப்பு பெனியனுடன் சாரமணிந்த ஒருவன் பாய்ந்து வந்து கலாவின் வாயைப் பொத்தினான். அவனது தாக்கத்தால் நிலைகுலைந்த கலா, அப்படியே நிலத்தில் விழுந்தாள். கொச்சையான தமிழில் ‘சத்தம் போடாதே உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்’ என காதுக்குள் சொன்னான். தலையாட்டியதும் அவன் கையை எடுத்து தனது விரலை அவள் வாயில் வைத்தான். அவனது மீசையற்ற ஆனால் சிலநாட்கள் சவரம் செய்யப்படாத முகம் சூடான மூச்சுக் காற்று. வேர்வையின் மணம் அவளை தலை குனியவைத்தது. ஒரு கணத்தில் தெரிந்த அவனது கண்கள் மட்டும் வித்தியாசமாக அந்த இருட்டில் ஒளிர்ந்தது.
அவன் மெதுவாக தனது தோளில் ஒரு காக்கி துணிப் பையை போட்டுக் கொண்டு இடுப்பில் ஏதோ சொருகிக் கொண்டு சென்றான். அவன் கையில் மினுக்கமாகத் தெரிந்தது. அது சிறிய லைட்டாக இருக்கலாம்.
இந்த சம்பவத்தை கலா ஒருவரிடமும் கூறவில்லை. கூறி என்னதான் செய்வது? இதைப்பற்றி வெளியே சொன்னால் என்னதான் நடக்குமோ என்ற அச்சம் வேறு அவளில் குடிகொண்டது.
யாரோ ஒரு சிங்கள இராணுவ வீரன் உளவறிய வந்திருக்கிறான்.
சில மாதங்களில் போர் தொடங்கியது. பத்து கிலோமீட்டர் தொலைவில் சண்டை நடந்தது. வானத்தில் நெருப்பை கக்கிக் கொண்டு குண்டுகள் இடியிடித்ததுபோல் இரு பக்கமிருந்தும் பாய்ந்தன. தண்ணீர் நின்ற வயல்களில் விழுந்து வெடித்து குழிகளை உருவாக்கின. மக்களற்ற வயல் பிரதேசங்களே ஆரம்பத்தில் சண்டை நடந்த இடங்கள். மழைக்காலம் வந்த போது சிறிது சண்டை குறைவாக இருந்தது. போராளிகளின் வாகனங்கள் வந்து போயின.
மோட்டார் சைக்கிளில் வருவதும் காயமடைந்தவர்கள்; ட்ரக்ரரில் போவதுமாக இருந்தது. பல மாதங்கள் இழுபறியான சண்டை. சண்டை உக்கிரமடைந்தபோது கிராமம் வெளியேறுவதற்கு தயாராக இருந்தது. போராளிகள் வெல்லுவார்கள். என்ற நினைவில் பலர் வீடுகளது அருகாமையில் பதுங்கு குழிகளையும் வெட்டியிருந்தார்கள்.
ஒரு நாள் மதியவேளை. முகில்கள் அற்ற நிர்மலமான நீலவானம் அதில் மஞ்சள் வெயில் எங்கும் காந்திக் கொண்டிருந்தது.. எந்த வெடிச்சத்தமும் அற்று அமைதியாக இருந்தது. அமைதி என்பது தங்கம் வெள்ளியிலும் அருமையான காலமது..
போர்காலத்திலும் வயிறு பசிக்கிறதே?.உலை வைப்பம் என நினைத்து சமையலுக்காக மழையின் ஈரம்படாமல் அடுக்கி வைத்திருந்த விறகுகளை எடுப்பதற்காக கொட்டிலுக்குள் சென்றபோது ஒரு குண்டு கொட்டில்மேல் விழுந்தபோது கலாவின் அம்மாவும் இறந்தார். அம்மாவோடு பின்னால் சென்ற ராணியும் ஒரு ஆண் குட்டி நாயும் இறந்துவிட்டது. சுரேஸ் வந்து அம்மாவின் உடலை கோயில் மயானத்தில் புதைத்துவிட்டு, வயலில் ராணியையும் குட்டியையும் புதைத்தான். அந்த இரண்டு நாட்கள் மட்டும் அப்பு சாராயம் வடிக்கவில்லை. டார்சானும் அதனது ஆறுமாதக் பெண்குட்டியும் குடும்பத்துடன் ஒட்டிக்கொண்டன.
ஒரு நாள் டார்சானைக் காணவில்லை. தேடியபோது தனது குட்டியை துரத்தியபடி நின்றது. ‘அட நாயே’ எனக் கல்லால் எறிந்து விரட்டிவிட்டு ‘இனி உனக்கு சாப்பாடு கிடையாது. இந்தப் பக்கம் வராதே’ எனத் திட்டினாள் கலா. அன்றிலிருந்து டார்சானையோ குட்டியையோ அவள் காணவில்லை.
இராணுவம் முன்னேறி போராளிகள் பின்வாங்கியபோது, கிராமத்தவர் வெளியேறத் தொடங்கினர்.
எங்கள் வயல்களில் போராளிகள் பதுங்குகுழி வெட்டுவதும் மண்ணை புல்டோசர்களால் குவித்து பெரிய அரண்களை அமைப்பதிலும் ஈடுபட்டனர். ஒரு மழைநாள் இரவில் இராணுவத்தினரது குண்டுகள் சரமாரியாக விழுந்தன. குடிபோதையில் இருந்த அப்புவையும்; இழுத்துக்கொண்டு மாட்டுக் கொட்டிலின் பின்பாக இருந்த பங்கரின்மேல் பகுதி தகரத்தை விலக்கிவிட்டு குதித்தாள். தொடர்ந்து குண்டுகளின் சத்தமும் துப்பாக்கிகளின் வெடிச்சத்தமும் கேட்டது. மின்னலாக வந்து குண்டு வெடிப்பது தெரிந்தது. போராளிகளும் இந்தப் பகுதியில் இருந்து ஆட்டிலெறிகளை ஏவினார்கள்.
பகலில் இருந்து தொடர்ந்து இரவும் மழை பெய்தபடியால் மேடாக உயர்த்தியிருந்த பகுங்கு குழியின் மேல் பகுதியில் வெள்ளம் வராவிட்டாலும், சுற்றியிருந்த மழைநீர கசிந்தது. சுரேஸ் இருந்தபோது வெட்டிய பகுங்கு குழி ஆறடிக்கு இரண்டடி மட்டுமே இருக்கும். இருவர் விலத்தி படுக்கமுடியாது. நீரின் சதுசதுப்பால் முதுகை வைத்து சாய்ந்திருக்க முடியவில்லை.
சிறிதுநேரத்தில் அப்புவின் குறட்டை கேட்டது. மீதியாகவிருந்த வடிசாராயத்தை கடைசியாக விட்டுப் போகாமல் வாய்க்குள் ஊற்றியிருக்கவேண்டும்.. மதுபோதை அப்புவை யுத்தகாலத்தின் சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பாக விலக்கி புதிதான கற்பனை உலகத்தில் வைத்திருந்தது..குடும்பம், உறவு என்ற தொடர்புகள் அற்றதாக இருக்கவேண்டும். அந்த உலகம் அப்புவுக்கு மட்டும் புரியும்போல!
மதுபோதை அறிவையும் மெதுவாக மரக்கச் செய்துவிட்டது. யுத்தகாலத்தில் அறிவோ உடல் பலமோ நவீன ஆயுதங்களுக்கு எதிராக பிரயோசனமாகாது என நினைத்திருக்கலாம். ஒருவிதத்தில் ஆனந்தமடைய வைத்திருக்கலாம்.
அப்புவின் குறட்டை இரவை அரித்தபடி கேட்டது. இந்தளவு மோசமாக யுத்தம் நடக்கும்போது தூங்குவதற்கு எவரால் முடியும்? பொறாமையாகவும் இருந்தது. ஏதோ ஒருவிதத்தில் அப்பு துணையாக இருக்கிறது என்பதை விட எந்த ஆறுதலும் கலாவுக்கு இல்லை.
அப்புவின் நிலை சில வருடங்கள் முன்பாக வேறாக இருந்தது. ஆறடி உயரமும் மீசையும் வைத்த கமக்காரன். பத்து ஏக்கர் நெல்வயலும் ஒரு ஏக்கர் வீட்டை சுற்றிய மேட்டுக்காணிக்கும் சொந்தக்காரன். காணியை விட ஐந்து கறவை மாடுகள். இரண்டு காங்கேயம் காளைகள் பூட்டிய மாட்டுவண்டி எனசெல்வாக்காக வாழ்ந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பமாக மாதாகோயிலுக்கு அழைத்து செல்வதும் அங்கு நண்பர்களை சந்திப்பதும் என வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது.
செபம் முடிந்ததும் கோயில் ஃபாதர் வந்து அப்புவிடம் ஐந்து நிமிடமாவது பேசாது போகமாட்டார். ஊரில் ஏதாவது விடயங்கள் நடப்பதென்றால் அப்புவின் ஆலோசனையைக் கேட்பார்கள். அப்படி இருந்த அப்புவை மாற்றியது தம்பி சுரேஸ்தான்;. பத்துவயதில் இயக்கத்திற்குப் பின்னால் அவன் போகத் தொடங்கியதும், அப்பு அவனைக் கண்டிக்க, அவன் அதை இயக்கத்திடம் சொல்லியிருக்கவேண்டும். இயக்கத் தலைவன் ஒருவன் வந்து அப்புவை வெருட்டியிருக்க வேண்டும்.
அவனது தகப்பன் அப்புவிடம் சம்பளத்திற்கு வேலை செய்தபோது சிறுவனாக வந்து வீட்டில் உணவுண்டிருக்கிறான். அவனால் அப்பு கண்டிக்கப் பட்டிருக்கவேண்டும். இராணுவசீருடையுடன் வந்து அப்புவைப்பார்த்து, ‘பெருசு இங்கை வா’ என கூட்டிச்சென்றான். வீட்டின் எதிரே உள்ள வயல்வெளியில் அவன் கைகளை அசைத்து சொல்லுவதும் பின்பு இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் காட்டியதும் தெரிந்தது. அப்பு மீண்டும் வீடு நோக்கி வரும்போது சொந்தக்காரனிடம் அடிபட்ட நாயின் நடையிருந்தது. எக்காலத்திலும் குடித்தறியாத அப்பு அன்றிலிருந்து குடிக்கத் தொடங்கியது.
வண்டி மாடுகள், பால்மாடுகள் என அப்பு விற்கத் தொடங்கியது. அதன் பின் காணிகளை குத்தகைக்கு கொடுத்துவிட்டது. அம்மாவுடன் பேசுவதை முற்றாக குறைத்தது. ஏதாவது தேவையாகில் கலாவுடன் சில வார்த்தைகள் பேசும். இந்த யுத்தம், அப்பு என பார்த்து வளர்ந்த மனிதனை அழித்து பல வருடங்களாகிவிட்டது. அம்மா பூமாதேவிபோல் பொறுமை கொண்டவள் என்பதால் நிழலோடு குடும்பம் நடத்தினாள்.
பொறுப்பாளர் திலகரத்தின தொடர்ந்து அவளது கதையை சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்தாள்
இரவு குண்டுகளின் சத்தம் அமைதியாகியது. என்னை அறியாமல் நித்திரை வந்தபோது அப்புவின் உடல் என்மீது கிடந்தது.
‘உனக்கும் டார்சானுக்கும் என்ன வித்தியாசம்’
நாளை வித்தியாசம் பார்க்க உயிரோடு இருப்பமா என முனகியபடி அந்த இடத்திலே அப்பு இருந்தது.
‘நாளை இறப்பதென்றால் இன்று மிருகமாகுவதா?’
——
அசையவில்லை.. தள்ளவும் முடியாத பாரமாக இருந்தது.
உடலெங்கும் அணு அணுவாக குண்டுகள் வெடித்து சிதறுவதுபோலும் தசைகள் சிதறுவதும் இரத்தம் பெருகி அதில் மூழ்கியபடி வானத்தில் எங்கோ பறப்பது போன்று இருந்தது. உடல் என்பது துகளாகியதால் ஒன்றாக அசையும் இயக்கத்தை இழந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. கூக்குரலிட்டு அழைப்பதற்கு வார்த்தைகள் ஆரம்பத்தில் தெரியவில்லை.எரிந்த சாம்பலில் மனித எலும்பு கிளறுவதுபோல் வார்த்தைகளைச் சேர்த்தபோது அவை துண்டு துண்டாக வெளிவந்தன. உயிர் நீங்கிய உடலாக மாறிய அடுத்த நாள் புதுயுகமாக எனக்கு விடிந்தது.
அந்த பதுங்குகுழி இரவுக்குப் பின்பு ஊரில் இருக்க மனமில்லை. அப்புவை விட்டு விட்டு தனியே வெளியேற முயற்சித்தாலும் அப்பு ஒட்டிக் கொண்டது. அப்புவிடம் அதிக பாதிப்புத் தெரியவில்லை. வெறுப்பு ஆனாலும் என்னால் ஒதுக்க முடியவில்லை மாங்குளத்தில் ஒருவீட்டில் ஐந்து குடும்பங்களோடு இருந்தேன். ஆனால் எனது துரதிஷ்டம் வயிற்றில் வளர்ந்தது. கணவர் குண்டில் இறந்துவிட்டார்; என்றபோது புதியவர்கள் அதிகம் துருவவில்லை.
குழந்தை கிளிநொச்சியில் ஒரு குடிசையில் பிறந்தபோது அழாத ஆம்பிளைப் பிள்ளையாக இருந்தது. கேட்பவர்களுக்கு கண்ணீரைத் தவிர பதில் பேசாமல் நானும் ஊமையாகிவிட்டேன். ஒரு விதத்தில் அகதிவாழ்வு எனது சீர்கேட்டை மறைக்க வசதியாக இருந்தது. குழந்தையின் தகப்பனை யாராவது கேட்டால் ஊமையாகிவிடுவேன். தம்பியா, பிள்ளையா என எனக்கே புரியாத சொந்தம். எப்படி மற்றவர்களுக்கு பதில் சொல்வது?
எனது நிலையை பார்க்கவோ நினைக்கவோ மறுத்து அப்பு ஓடித்திரிந்தது.
யுத்தம் ரயில் பெட்டிபோல் நகர்ந்தபோது நங்களும் அதன் சக்கரங்களில் ஓட்டிய சடப்பொருளாக நகர்ந்தோம். தினம் வேறு வேறு மனிதர்களை சந்தித்துக் கொண்டிருந்ததால் சமூகத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயமில்லை. அதுவே யுத்தத்தின் அனுகூலமாக இருந்தது.
தொடர்ச்சியாக பதுங்கு குழிகளுக்குள் பலரோடு சீவித்த ஒரு நாள் அதிகாலை நேரத்தில் குழந்தையை அப்புவிடம் விட்டுவிட்டு வெளிக்கு சென்று திரும்பி வந்தபோது தலைகள், தசைகள் என மனித உறுப்புகள் எல்லாம் சிதறியபடி கிடந்தது. யார் எவர் என அடையாளம் காணாத தசை மற்றும் எலும்புகள் பரவிக்கிடந்தது. நேரடியாக ஷெல் ஒன்று விழுந்திருக்கவேண்டும். பிரமை பிடித்ததுபோல் சில மணிநேரம் உலகத்தை மறந்திருந்தபோது அந்த பதுங்குகுழிக்குள் ஒருவன் வந்து விழுந்தான். இரத்தம் கழுத்தில் இருந்து வழிந்தது. ஆனால் உயிர் இருந்தது.
அம்மே அம்மே என அலறியபோது திரும்பிப் பார்த்தேன். அவனது முகம் அடையாளம் தெரியவில்லை. ஆனால் கண்கள் அன்று ஒருநாள் எங்கள் மாட்டுக் கொட்டிலில் கண்டதுபோல் இருந்தது.
அவனது தலையை பிடித்து உலுக்கியபடி ‘அன்று நீ வந்ததிலிருந்து நான் நாயாக அலைகிறேன் சிங்களப் பண்டிகளே ஏன் எங்களை இப்படி வதைக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் சாதாரணமானவர்கள். உங்களுக்கு என்ன செய்தோம்? பொடியள் அடித்தால் அவன்களோடு சண்டைபோடுங்கோ. இந்தா என்ற தம்பி சுரேஸ் கூட சண்டைபோட்டால் எனக்கென்ன? என் பிள்ளை என்ன செய்தது? தமிழ்கூட பேசாத என் குழந்தை என்ன செய்தது? தமிழைத்தான் விடு. அழக்கூட மாட்டான் என்பது உனக்குத் தெரியுமா? கெட்ட சனியன் என்றாலும் துணையாக இருந்த அப்பு கூட போய்விட்டதே ? நான் யாருக்கு அழுவேன்.
ஆத்திரம் தீர அவனது மார்பில் அடித்தேன்.
அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை தொடர்ச்சியாக குண்டு வெடித்தபடி இருந்தது. புகையும் மணமும் மூடியிருந்த அஸ்பெஸ்ரார் சீட்டை மீறி வந்தது. அழுகுரல் இடைக்கிடை எதிரொலித்தது. இதைப்போல் எப்பொழுதும் யுத்தத்தை பார்க்கவில்லை.
வறுத்த கடலையும் போத்தல் தண்ணீரும் அன்று உணவாகின. மாலையில் யுத்தம் நின்றபோது, வைத்திருந்த தண்ணீரும் கடலையும் முடிந்து விட்டது. யாருக்காக உயிர்வாழவேண்டும் என நினைத்து வெளியே எழும்பி செல்ல நினைத்தபோது காலில் ஏதோ சுரண்டியது போல இருந்தது
பாம்போ எனப் பார்த்ததுபோது இதுவரையும் செத்தது போலக்கிடந்த ஆமிக்காரன் வாயில் விரலை வைத்து தண்ணீர் வேண்டும் என பாவனை செய்தான்.
‘நீ செத்து துலைந்துவிட்டாய் என நினைத்தேன். இன்னும் சாகவில்லையா? என்றபடி அவனைப் பார்த்தபோது எனது வார்த்தையில் இருந்த கோபம் உள்ளத்தில் இருக்கவில்லை. உயிர் போகும் நேரத்தில் தண்ணியில்லை என்பது நல்லதா? தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத பாவத்தையும் சுமக்க வேண்டுமா? ஆனால் என்ன செய்வது சனங்களிடம் கேட்டால் ஆமிக்கரனுக்கு தண்ணீர் தரமாட்டார்கள். அன்று கூட அவன் நினைத்திருந்தால் என்னைக் கொன்றிருக்கலாம். அல்லது கெடுத்திருக்கலாம்?
கையில் போத்தலை எடுத்துப் பார்த்தேன். ஒரு சொட்டுமில்லை.
வேறு வழி எதுவும் தெரியவில்லை. ஏற்கனவே மேல்சட்டையின் கீழ் ஊசி குழந்தைக்காக திறந்திருந்து. பத்துமணித்தியாலமாக பால் முலையில் கட்டியாக இருந்தது. பதுங்கு குழியில் விலகி இருந்த அஸ்பெஸ்ரார் சீட் முற்றாக மூடியிருக்கிறதா எனப்பார்த்துவிட்டு அவனது தலையை மடியில் வைத்து அவன் வாய்க்குள் பாலை பீச்சினேன். குழாயில் வந்ததுபோல் அவனது திறந்த வாய்க்குள் முலைப்பால் சென்றது. சில நிமிடநேரம் பாலை பீச்சியபோது எனது நெஞ்சின் உள்ளேயும் வெளியேயும் அமைதியாகியது. கையை எடுத்து கும்பிட்டான். நெஞ்சில் இருந்த சுமை இறக்கி வைத்தது போன்று இருந்தது. அவனது தலையை மண்ணில் வைத்து அங்கிருந்த துணியால் போர்த்திவிட்டு பதுங்கு குழியின் மேல் ஏறி வெளியில் சென்றாள். இரவாகியிருந்தது. ஆள்நடமாட்டம் தெரியவில்லை. தூரத்தே தெரிந்த ஒளியை பார்த்தபோது கருக்கலில் ஏற்கனவே அங்குள்ளவர்கள் வெளியேறியிருந்தார்கள்.
இங்கு இனி இராணுவம் வரும்.
மெதுவாக தெரிந்த ஒளியை பின்தொடர்ந்து செல்லும்போது இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு வவுனியா அகதிமுகாமுக்கு அனுப்பப்பட்டேன்
முகாமில் சில மாதங்கள் அமைதியாக இருந்தேன்.
ஒருநாள் இரவில் எழுந்து வெளிக்கு சென்றபோது எதிரில் துப்பாக்கியுடன் நிழலாகத் தெரிந்த உருவம் அருகில் வந்து ‘என்னைத் தெரியவில்லையா” என்றது.
‘அன்று மன்னாரில் வீட்டின் மாட்டுக் கொட்டகையில் சந்தித்தாயே?. உன் முலைப்பால் குடித்து உயிர் பிழைத்தேன்’
‘நீ இன்னும் உயிருடன் இருக்கிறாயா…? நீ செத்திருப்பாய் என்றுதான் நான் நினைத்திருந்தேன்.’
‘உனது முலைப்பால் என்ற அமுதத்தை குடித்தபின் எப்படி நான் சாகமுடியும்?’;
‘என்ர பிள்ளையே செத்துவிட்டதே. அதுவும் குடித்ததுதானே? என்றேன்; எரிச்சலுடன்.
யாரோ வருவது கேட்டதும் அவன் விலகிவிட்டான்.
அவனை நினைத்தபடி படுபாவி. அவனுக்காக நான் இரங்கி பால் கொடுத்திருக்கக்கூடாது. எத்தனை தமிழரை கொன்றிருப்பான்? . இன்னும் எத்தனை பேரைக்கொல்லுவான்? எனது செயலை நினைத்து நொந்து கொண்டேன்.
முகாமில் இப்பொழுது போர் முடிந்து ஏராளமானவர்கள் வந்துவிட்டதுடன் அடிக்கடி இராணுவத்தினர் விசாரணை என வந்துபோனார்கள்.
ஒரு நாள் இரவு அதே ஆமிக்காரன் வந்தான். இப்பொழுது முதல்முறை இருந்ததுபோல் நீலசாரம் அணிந்து இடுப்பில் கத்தி வைத்திருந்தான்.
கூச்சலிட முயன்றபோது வாயை பொத்திவிட்டு, பக்கத்தில் இருந்து அன்று இரவு முழுவதும் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். தகாதவேலை எதுவும் செய்யாதது எனக்கு ஆறுதலாக இருந்தது. நடு இரவில் தனக்கு முகாம் வாசலில் வேலை இருப்பதாக போய்விட்டான்.
அவன் தொடர்ந்து வருவதும் நடு இரவுவரை அவளது முகத்தைப் பார்த்தபடி இருப்பதுமாக பல இரவுகள் கழிந்தன.
ஆனால் எனக்கு பொறுக்கமுடியவில்லை. இதனாலே முறைப்பாடு செய்தேன்.
தனது கதையை ஆரம்பத்தில் இருந்து கூறினாள்.
முகாம் பொறுப்பாளர் திலகரத்தின அனைத்தையும் ஆறுதலாக கேட்டுவிட்டு ‘நீ சொல்லும் அடையாளத்துடன் ஒருவர் இந்த முகாமில் இல்லை. ஆனால் எமது இராணுவ பொலிஸ் மூலம் உனது குடிசையை இரண்டு நாட்களுக்கு கண்காணிக்கிறோம்’ என்றான்.
பின்பு அவன் சில மாதங்களாக வரவில்லை.
ஒரு நாள் இரவு எதிர்பாராமல் வந்து அகதி முகாமுக்கு வெளியே கையை பிடித்து அழைத்துச் சென்றான். அவன் தோளில் துணிப்பையிருந்தது. முகாமின் முள்ளுக்கம்பியை விலத்தி அருகில் ஓடிய ஆற்றுப் பக்கமாக அழைத்து சென்றான். அங்கிருந்த பாலைமரத்தின் கீழ் இருக்கும்படி பணித்தான். கையில் வைத்திருந்த உணவுப் பொட்டலத்தை பிரித்து உண்ணும்படி கூறினான். அகதி முகாம் உணவு தின்றவளுக்கு கோழிக்காலோடு பிரியாணியைப் பார்த்தால் எப்படி இருக்கும்? உண்ணும்படி கட்டளையிட்டான். கண்ணீருடன் உண்டபோது இடையில் விக்கல் வரவும் போத்தல் தண்ணீரைத் தந்தான். இப்பொழுது அவனது கையில் சுரேஸின் பிஸ்டல் மாதிரி ஒன்று இருந்தது.
நடு இரவு வரையும் தனதருகே இருக்கச் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தபடி இருந்தான்.
அதன்பின் அவனே மீண்டும் அவளை உள்ளே கூட்டிவந்தான்.
இப்படி பலமுறை நடந்தது.
பதினெட்டு வயதில் இடம் பெயரத் தொடங்கியவள் தற்பொழுது இருபத்தாறு வயதாகி விட்டது. அந்த ஒன்பது வருடங்கள் அவளைப் பொறுத்தவரை ஒரு யுகமாகி அவள் மனதிலும் உடலிலும் தெரிகிறது.
கடைசிவரையும் அகதிமுகாம்களில் இருந்துவிட்டு, பின்னர் வவுனியா பிதேசத்தில் அரசாங்கம் கொடுத்த காணியில் ஆறுமாதம் வாழ்ந்தாள். சிறுகச் சேமித்த பணத்தோடு அவள் சொந்த ஊரான கிராமத்திற்கு போனபோது, அவளது தந்தைக்கு சொந்தமான காணிகளை சித்தப்பா மாமா என வந்த சில உறவினர்கள் எடுத்து சிலபோகம் வயலும் செய்துவிட்டார்கள். அவளது உரிமையை நிலைநிறுத்த எந்த பத்திரங்களும் அவளுக்கு இல்லை. அவர்களுடன் சில இரவுகள் தங்கிவிட்டு வவுனியாவுக்கே திரும்பி வந்துவிட்டாள்.
அவளிடம் கல்வி பயிற்சி எனத் தகைமைகள் எதுவுமில்லை. அரசாங்கம் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் உதவிகள் ஒருவிதத்தில் பசியைத் தீர்த்தது. வயிற்றை நிறப்புவது மட்டுமா வாழ்க்கை?
இறுதியில் வவுனியா அருகே கிடைத்த காணியில் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கொட்டில் அமைத்து அங்கு வாழ்ந்த ஒரு நாள் அந்த இராணுவ வீரன் தேடி வந்தான்.
பொறுமையை இழந்து, ‘உனக்கு என்னவேணும்?; என்னோடு படுக்க வேண்டுமானால் வா. நான் அதற்குத் தயார். என்ர அப்பு செய்த வேலையால் நான் மரத்துவிட்டேன். ஆம்பிளைகளைக் கண்டாலே எரிச்சல் வருகிறது. ஆனால் தற்கொலை செய்ய விருப்பமில்லை வாழவிரும்புகிறேன். அதுவும் தனியாக.’
‘நீ வாழ விரும்பினால் நான் வரமாட்டேன். யாரையாவது கல்யாணம் செய்து வாழ்வாய் என சத்தியம் செய்தால் நான் உன்னைத் தொல்லை செய்யமாட்டேன்.’
‘நான் கல்யாணம் முடிக்கிறதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?’
“நான் உன்பிள்ளையாக பிறக்கவேணும் அம்மா. அதற்காக வருடக்கணக்கில் அலைகிறேன்“ என்றபோது கலா அந்த இடத்தில் சரிந்தாள்.
கடந்த காலமென்பது இறந்தகாலமல்ல. கண்ணீரால் கழுவவோ காலத்தால் துடைத்தெறியவோ முடியாதது.
நன்றி அமிரிதா