படிச்சவன் பார்த்த பார்வை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 7,444 
 

ஏங்க, ஆசாரி வந்திருக்கார்..

“இவன் வாசலுக்குப் போனான். என்னங்க கண்ணாயிரம், என்ன விஷயம்?”

“பெரிய ஐயா ஒங்ககிட்டே ஒண்ணும் சொல்லலீங்களா தம்பி? நம்ப புஸ்தகக் கடை மாடியில் புதுசாக் கட்டப்போற ரூமுக்குக் கதவு செய்யணும். மரவாடிக்குப் போய் பலகை வாங்கியாரணும், புதன்கெழமை வந்துடு கண்ணாயிரம்னு ஐயா சொன்னாங்களே!”

இவன் வீட்டினுள் போய் மனைவியை விவரம் கேட்டான்.

“ஆமாங்க. அப்பா ஊருக்குப் புறப்படறதுக்கு முந்தி இன்னிக்கு ஆசாரி வருவாரு. மாப்பிள்ளையை அவர் கூடப் போயி பலகை வாங்கி வந்துடச் சொல்லுன்னு சொல்லிட்டுத்தான் போனாங்க. பணமும் கொடுத்துட்டுப் போயிருக்காங்க!”

இவன் திரும்பி, வாசலுக்கு வந்தான். “எத்தனை பலகை, என்ன சைஸ் எல்லாம் கணக்கேடுத்துட்டீங்களா கண்ணாயிரம்?”

“ஓ! அகலம் 18 அங்குலம். நீளம் ஆறே கால் அடி. ஒரு அங்குல கனத்தில் மொத்தம் நாலு பலகை. குறுக்கே அடிக்க, ரெண்டுக்கு ஒண்ணுல ரீப்பர் கொஞ்சம் வேணும். டெம்பரரியா இப்ப கதவை மாட்டிட்டு, பின்னால சுவர் பூச்சு வேலையெல்லாம் முடிஞ்சப்புறம் பக்கா கதவா இழைச்சுப் போட்டுடலாம்..”

“சரிங்க கண்ணாயிரம். போயிட்டு வந்துறலாம், வாங்க!”

டவுன் பஸ் ஏறி பைபாஸ் ரோடு நிறுத்தத்தில் இறங்கி ஆசாரி காட்டிய மரக்கடைக்குப் போனார்கள்.

கடை முதலாளி ஏகப்பட்ட சிநேக பாவத்துடன் சிரித்து இவனை வரவேற்றார். நாற்காலியில் உட்காரச் சொன்னார். “காபி, டீ இல்லை கூல் டிரிங்ஸ்?” என்று கேட்டு உபசரித்தார்.

“பலகை வேணும் முதலாளி” என்றார் ஆசாரி.

“பலகைதானே, கொடுத்துறலாம். வேங்கையா? இல்லை, தேக்கா..?”

“வேங்கை என்ன விலையாகுது?” என்றான் இவன்.

“எடுத்துக்குங்க ஸார். சல்லிசாப் போட்டுத் தர்றேன். மார்க்கெட் விலையில் சதுரத்துக்கு அஞ்சு ரூபா ஒங்களுக்குக் குறைச்சுத் தர்றேன்..”

இவனுக்கு விலை அதிகமோ என்று தோன்றியது. “தம்பீ, இங்கே சரக்கு சுத்தமா இருக்கும் விலையும் மத்த கடைகளை விட சல்லிசுதான்..” என்று ஆசாரி காதைக் கடித்தார்.

மரப்பலகை அடுக்கியிருந்த இடத்துக்குப் போய் தேர்வு செய்து அடுக்கியான பின், இவன் பணம் கொடுத்தான். “கண்ணாயிரம், இங்கேயே இருங்க. பக்கத்து நர்சிங் ஹோம் வரை போயிட்டுப் பத்து நிமிஷத்துல வந்துடறேன்..”

“நல்லதுங்க தம்பி!”

பக்கத்து நர்சிங் ஹோமில் டாக்டராக இருக்கும் நண்பன் பாலுவின் தங்கை நிச்சயதார்த்தத்துக்கு வர முடியாத தன் நிலைமையைக் கூறி மன்னிப்பு கோரிவிட்டு திரும்பவும் மரக்கடை வாசலுக்கு வந்தான்.

கண்ணாயிரம் மரக்கடை முதலாளியிடம் பேசிக் கொண்டு இருந்தார். அவர்கள் இவனைக் கவனிக்கவில்லை. அவன் காதில் விழுந்த உரையாடல் சுருக்கென்று காலில் முள்ளாய்த் தைக்க, இவன் அப்படியே நின்றான்.

“இன்னும் பத்துக் கதவு, பதினைஞ்சு ஜன்னலுக்கு மரம் எடுக்கணும் முதலாளி. நம்ம கடையை விட்டிட்டு வேற கடைக்கு நான் கிராக்கியை இட்டுட்டுப் போயிருக்கேனா? போட்டுத் தாங்க முதலாளி!”

“தோ பாரு கண்ணாயிரம், வழக்கமா உள்ள அஞ்சு பர்சண்ட் கமிஷன் கொடுத்துப்புட்டேன். இன்னும் கொடுன்னா எப்படி? நீயே சொல்லு..!”

“இல்லீங்க மொதலாளி. மரைக்காயர் டிம்பர் டெப்போவுல பத்து பர்சண்ட் வரைக்கும் தர்றாங்க. அதுமாதிரி நீங்களும் தந்தாத்தானே கிராக்கியை ஒங்க கடைக்கே இட்டாரலாம்..”

“உன்னோட பெரிய தொல்லையாப் போச்சு. மேல ரெண்டு பர்சண்ட் வாங்கிக்க. ஆளை உடு!”

“சந்தோஷமுங்க முதலாளி!”

வாசலில் நின்ற இவனை ஆசாரி பார்த்து விட்டான்.

“கிளம்பலாமா தம்பீ?” என்று கேட்டான். மரங்களை ஏற்றி அனுப்ப ரிக்க்ஷா வாடகை கொடுத்து ஆசாரியிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

மனது கசந்தது. ஆசாரி நம்மை இந்தக் கடைக்கு அழைத்து வந்தது கமிஷன் அடிக்கத்தானா? அல்லது எந்தக் கடைக்குப் போய் இருந்தாலும் அவன் கமிஷன் அடித்திருப்பானா? பொருளின் விலையில் கமிஷனும் சேர்த்துத்தான் நாம் தர வேண்டி இருக்கிறதோ? எத்தனை சுலபமாக ஏய்க்கிறார்கள்?

நேரே மாமா நடத்தி வந்த புத்தகக் கடைக்குப் போனான். பார்த்துக் கொள்ள ஆட்கள் இருந்தாலும் மாமா ஊரில் இல்லாதபோது இவன் போனால்தான், ஆட்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள்.

`வள்ளலார் புத்தக நிலையம்’ என்ற பெயரில் தரமான நூல்களைப் பதிப்பித்து விற்பனை செய்து வந்தது அவன் மாமனாருக்கு உரிமையான அந்த நிறுவனம். இவன் மாமனாரிடம் தொழில் நுணுக்கங்களைப் பயின்று வந்தான். மாமாவுடைய நேர்மையும், நாணயமும், சிறந்த தமிழறிவும், நல்ல புத்தகங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியமும் அவனை வெகுவாகக் கவர்ந்திருந்தன.

அவன் இருக்கையில் அமர்ந்ததுமே ஒரு எழுத்தாளர் வந்தார். அவரிடம் பேசி அவரை அனுப்பிவிட்டு, அச்சகத்திலிருந்து வந்த ஃபாரங்களை ப்ரூஃப் பார்த்துத் திருத்தினான். வெளியூர் கடிதங்களுக்குப் பதில் எழுதினான்.

பிற்பகல் நாலு மணி இருக்கும். ஒருவர் வந்தார். வெள்ளை வெளேர் உடை. சிரித்த முகம். தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடி. நடுத்தர வயது. கையில் சிறு தோல் பை.

“வணக்கம். நான் வேலூர்லேருந்து வர்றேன். கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். எங்க கல்லூரி நூலகத்துக்கு இருபத்தையாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்க வேண்டி இருக்கு. அதுதான் உங்க புத்தக நிலையத்துக்கு வந்திருக்கிறேன்..”

“ரொம்ப மகிழ்ச்சி. எங்க கேட்லாக்கைப் பாருங்க. ஷோகேஸ்ல இருக்கிற புத்தகங்களைப் பாருங்க. எல்லாம் நல்ல புத்தகங்கள். வேண்டியதை வாங்கிட்டுப் போங்க!”

வந்தவர் இவன் முகத்தை உற்றுப் பார்த்தார். பிறகு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, குரலைத் தாழ்த்தி ரகசியமாய், “எவ்வளவு கொடுப்பீங்க?” என்று கேட்டார். இவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

என்ன சொல்கிறார் இவர்? ஒரு விநாடி யோசித்தான்.

“ஓ, டிரேட் டிஸ்கவுண்டைப் பற்றிக் கேட்கறீங்களா? ஆயிரம் ரூபாய் வரை வாங்கினால் 20 பர்சண்டும், அதுக்கு மேல் வாங்கினால் 25 சதவீதமும்..” என்று கூறினான்.

அவர் அவசரமாகத் தலையாட்டி மறுத்தார். “ஊஹும். நீங்க வழக்கமான கமிஷனைச் சொல்றீங்க. நான் அதைச் சொல்லலை..”

“பின்னே?”

“எனக்கு என்ன தருவீங்க?”

இவனுக்கு நொடியில் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. நிதானப்படுத்திக் கொண்டு, “நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை..” என்றான்.

அவர் கண் சிமிட்டிக் கொண்டே சொன்னார்: “நம்ப இராவணன் லிட்டரரி பப்ளிஷர்ஸ் இருக்காங்களே, அவங்க எனக்கு வழக்கமான டிஸ்கவுண்ட் போக, பஸ் செலவு, லாட்ஜ் செலவு, சாப்பாட்டு செலவுன்னு போட்டுத் தருவாங்க சார். நீங்க என்ன தருவீங்கன்னு கேட்டேன்..”

இவன் ஆத்திரத்தோடு, அதேசமயம் நிதானமாகச் சொன்னான். “சார், இங்கே புத்தகம் வாங்கினால் நாங்கள் புத்தகம் தருவோம். அதோடு வாங்கின தொகைக்கு பில் தருவோம்.. அவ்வளவுதான்!”

பளீரென்று பொறியில் அறை வாங்கியவர் போலத் தட்டுத் தடுமாறி, கோபத்துடன் எழுத்தார் அவர். விடுவிடுவென்று கிளம்பி நடையைக் கட்டினார்.

ஆத்திரமாக இருந்தது இவனுக்கு.

ஒரு கல்லூரி நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்காக வந்த பொறுப்பு மிக்க நபர், இப்படி நடக்கிறாரே என்று வேதனையாக இருந்தது. தரமில்லாத குப்பைகளைப் புத்தகங்கள் என்ற பெயரில் அச்சிட்டு நியாயமில்லாத வழிகளில் அவற்றை விற்பனை செய்து சில பப்ளிஷர்கள் சமுதாயத் தொண்டு ஆற்றி வருவதை அவன் அறிவான். அந்தக் குப்பைகளைப் படிக்கும் கல்லூரி மாணவர் களின் கதி..? இந்தியாவே, உன் எதிர்காலம்..?

திடீரென்று இவனுக்கு மரக்கடையில் கமிஷன் வாங்கிய கண்ணாயிரம் நினைவுக்கு வந்தார். வியாபாரம், கமிஷன், உள்கமிஷன் என இவை வேறு எந்தத் துறையில் இருந்தாலும் மன்னித்து விடலாம். கல்வித் துறையிலுமா?

சேச்சே, என்ன இது? இந்தச் சமுதாயச் சீர்கேட்டை எப்படிப் போக்குவது?

குமுறலோடு சன்னல் வழித் தெரிந்த வானத்தை, வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தான் அவன்.

(தாய் வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *