படிக்கப்படாத கடிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 9,370 
 
 

அலுவலக நேரம் முடிந்து விட்டதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமில்லை. ஆளுக்கு ஒரு சீட்டில் அமர்ந்திருக்க எனக்குக் காலியான இருக்கை ஒன்று கிடைத்தது. ரெண்டு ரூபாய் சில்லறையாகக் கொடுங்க என்றபடி கண்டக்டர் எச்சில் தொட்டு டிக்கட்டுகளைக் கிழித்துக் கொடுத்தபடி வந்தார். முப்பது செகண்டு முன்னால் பஸ்ஸைக் கிளப்பி விட்டால் முதலாளியின் சொத்து திவால் ஆகிவிடும் என்ற ரேஞ்சில் சண்டையிட்டுக் கொள்ளும் தனியார் நிறுவன பஸ் கம்பனி டிரைவர்களின் கூச்சலைக் கடந்து பேருந்து மெதுவாக நிலையத்தை விட்டு வெளியேறியது. கூட்ட நெரிசலை விலக்கி ஹென்றி வுல்சி சிக்னலை அடைவதற்குப் பத்து நிமிடம் ஆனது. சின்ன ராஜாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது என்று ஜானகி முனக ஆரம்பித்தார். சிக்னலில் அவசரமாகக் கூடைக்கார பாட்டியம்மா ஒருத்தி ஏறினார். காலை வியாபாரம் முடித்த களைப்பு முகத்தில் வியர்வையாக வழிந்து கொண்டிருந்தது.

நான் இப்படி ஒரு பேஸ்து அடிக்கும் நேரத்தில் பஸ்ஸில் பயணித்தது இல்லை. இரண்டு முறை கிளம்பும் நேரத்தில் வண்டி பங்க்சர் ஆகி வேறு வழியில்லாமல் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன். ஆபீஸ் பை ஒருபுறமும், சாப்பாட்டுப் பை ஒருபுறமும் இருக்க எந்தக் கையால் கம்பியைப் பிடிப்பது என்று மூச்சு முட்டப் பயணித்திருக்கிறேன்.

என்னுடைய வண்டி – ஸ்ப்ளெண்டர் பைக்- அலுவலக வாயிலில் காணமல் போனது. ஆறுமணிக்கு வெளியில் வந்து பார்க்கிறேன். கையில் சாவி மட்டும் அனாதையாக இருந்தது. வண்டியைக் காணவில்லை. இன்ஷூரன்ஸ் கம்பணியைக் கேட்டால் எப்.ஐ.ஆர் இல்லாமல் கிளைம் செட்டில் பண்ண முடியாது என்று கூறி விட்டனர். ஒரு மாதமாக எப்.ஐ.ஆருக்கு காவல் நிலையத்திற்கு நடையாய் நடக்கிறேன். காவல்துறை என்னை அலைக்கழிப்பதன் காரணம் எனக்குத் தெரியும். நானும் எவ்வளவு அலைக்கழிக்கப்பட்டாலும் பரவாயில்லை லஞ்சம் கொடுக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். நான் இருப்பது கன்னங்குறிச்சி. அலுவலகம் இருப்பது அம்மாபேட்டையில் . இரண்டு பஸ் மாறி போலிஸ் ஸ்டேஷன் வரை அல்லாடி விட்டு வரவேண்டும். வண்டியில்லாத எனக்கு பஸ் பயணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

ஹச்தம்பட்டியில் ஏறுவதற்கு ஆளில்லை. கூடைக்கார ஆயாவை இறக்கி விட்டு எஸ்.பி.ஷைலஜா ஆசையைக் காத்துல தூது விட பஸ் யோகா டீச்சர் மாதிரி நிதானமாகக் கிளம்பியது. சின்னதிருப்பதி மயானம் அருகில் ஒரு சின்ன வளைவில் சாலை நாற்பத்தைந்து டிகிரியில் மடங்கும். நேர் செங்குத்துக் கோணத்தில் அண்ணாநகர் வீதி வந்து பிரதான வீதியில் சேரும். இரண்டு பெரிய புளிய மரங்கள் அடுத்து அடுத்து நிற்கும் அந்த இடம் விபத்துகளுக்குப் பேர் போனது.

சார் நான் லஞ்சமா எதுவும் கேக்க மாட்டேன் இரண்டு குயர் பேப்பர் , ஒரு பென்சில் பாக்ஸ், இரும்பு ஸ்கேல் ஒன்று, கார்பன் ஷீட் ஒரு பாக்ஸ் மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்க. ஒரு ஸ்டேஷனுக்கு அலாட் பண்ணும் பணத்தில் அஸ்வமேத யாகம் நடத்துன்னு கவர்மென்ட் சொன்னா எங்களால கைக் காசை செலவு பண்ண முடியுமா? என்ற இன்ஸ்பெக்டரின் கேள்வி காதில் ஒலித்துக் கொண்டிருந்தபோது கடக் என்று ஒரு சப்தம் கேட்டது. ஏதோ ஒன்றின் மீது இடப்புறம் பின்னால் இருந்த சக்கரம் ஏறி நின்றது. பேருந்தின் பக்கச் சுவற்றை டப் டப் என்று தட்டும் ஒலியும் அய்யய்யோ என்று ஓர் அலறலும் எழுந்தன. சட சடவெனப் புளிய மரத்தைக் குலுக்கியது போலச் சனம் கூடியது. பஸ் டிரைவர் சடாலென்று தனது பக்கக் கதவைத் திறந்து ஒரே தாவலில் அண்ணா நகர் வீதியில் முன்னால் ஓடிக் கொண்டிருந்த கண்டக்டர் பின்னால் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான்.

நான் கீழே இறங்கினேன். பத்து மணிக்குண்டான சோம்பேறித்தனத்துடன் அந்தப் பகுதி இருந்தது. வீதியில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. ஏடிஎம் வாசலில் கூட்டம் இல்லை. கடைக்காரர்கள் நிதானமாக ஷட்டர்களைத் திறந்து கொண்டிருந்தனர். தெரு நாய் ஒன்று மட்டும் மக்கள் கூடியதைப் பார்த்து வேகமாக ஓடி இன்னொரு மரநிழலில் அமர்ந்து வட்டமாகச் சுருட்டிக் கொண்டு தூங்கத் தொடங்கியது.

பேருந்தின் சக்கரத்தின் அடியில் எல் வடிவில் சைக்கிள் ஒன்றின் முன் வில் வளைந்து கிடக்க சைக்கிளுக்குப் பின்னால் ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் செத்துக் கிடந்தார். கோர நிகழ்வை விவரிக்க விரும்பவில்லை. பொதுமக்களில் எவருக்கும் காவல் துறையையோ ஆம்புலன்ஸையோ அழைக்க விருப்பமில்லாதது போலக் கூடியிருந்தனர். செத்தவர் அத்தனை ஆரோக்கியமாகத் தெரியவில்லை. கசங்கிய மேல்சட்டை ஒன்றும் வேட்டியும் அணிந்திருந்தார். ஹன்டில்பாரில் ஒரு கூடை மாட்டியிருந்தது. ஓரிருவர் முயற்சியில்- அதில் நானும் ஒருவன்- மெதுவாக சைக்கிளை ஒருமாதிரி வெளியில் எடுத்து மரத்தடியில் கிடத்தினோம்.

இதற்குள் நான் அவசர ஆம்புலன்ஸ் பிரிவிற்குத் தொலைபேசியில் அழைத்தேன். இடம் அடையாளம் அடிபட்டவரின் நிலையைக் கேட்டுக் கொண்டு உடனே ஆம்புலன்ஸ் அனுப்புவதாகக் கூறினார்கள். இதற்கு நடுவில் ஹச்தம்பட்டியிலிருந்தும், அழகாபுரம் போக்குவரத்துக் காவல் பிரிவிலிருந்தும் அதிகாரிகள் வந்து விட்டனர். காவலர்கள் தங்களது பூர்வாங்க வேலையைத் தொடங்கியபோது நான் அந்த வயர் கூடையில் இறந்தவரின் அடையாளத்தைத் தேடத் தொடங்கினேன்.

ஓரளவு சுமாரான துண்டு ஒன்று, கசங்கிய சட்டை ஒன்று, ஒரு தூக்குச் சட்டியில் மதிய சாப்பாடு அவரைத் தினக்கூலி வேலை செய்பவர் என்று காட்டின. சட்டை பாக்கெட்டில் துழாவி பார்த்தேன். அங்காளபரமேஸ்வரி படம் ஒன்று. இரண்டு பூமார் பீடி ஒரு நெருப்புப் பெட்டி மடித்து வைத்த பத்து ரூபாய் நோட்டு நான்கு. சில்லறைக் காசுகள் இவ்வளவுதான். சட்டையை மீண்டும் வைக்கப் போனபோது துண்டுக்கடியில் ஏதோ தட்டு பட்டது. துண்டையும் எடுத்து உதறினேன். பிளாஸ்டிக் பிராந்தி குப்பி ஒன்று பாதி பிராந்தியுடன் இருந்தது. இதற்குள் ட்ராபிக் அதிகாரி என்னருகில் வந்தார். இளவயது காரர்.

“ சார் சைக்கிள் பஸ்ஸுக்கு வலது பக்கம் அடிபட்டு செத்து போயிருக்காரு. பஸ்காரனோட கவனமின்மைன்னு சொல்லலாம். பொறுக்கிப் பசங்க கண்ணும் மண்ணு தெரியாம வண்டியை ஒட்டி எங்க தாலியை அறுக்குறானுங்க. ரெண்டுநாள் கண் மறைவாகி பஸ் கம்பனிக்காரன் அவனைப் பார்த்து இவனைப் பார்த்து சரி பண்ணி கேஸை ஒன்னுமில்லாமல் பண்ணிடுவாங்க. சாட்சிக்குக் கூப்பிட்டால் உங்களால் வர முடியுமா?,’என்று கேட்டார். வயதும் அனுபவமும் குறைந்து நேர்மையும் மிடுக்கும் கூடியவராகத் தெரிந்தார். நான் அரை மனதுடன்,”எனது அலுவலக நேரத்தில் தொந்தரவு இல்லையென்றால் வருகிறேன்,”என்று சம்மதித்தேன்.

வேறு அடையாளம் எதுவுமின்றி அந்த மனிதர் செத்துப் போயிருந்தார். கூடியிருந்த சனம் அவரை நோக்கிய விதத்திலிருந்து அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவராகத் தெரியவில்லை. கூலி வேலை செய்பவராக இருந்தால் எந்தப் பகுதியில் வேலை செய்து வந்தாரோ அந்தப் பகுதிக்குச் செய்தி சென்று பிறகு அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு …… எனக்கு உள்ளே ஏதோ ஒன்று நெக்கு விட்டது.

அழைப்பு விடுத்து பத்து நிமிடங்களுக்கு சைரன் அலற ஆம்புலன்ஸ் வந்து நின்றது. காவல் துறை போக்குவரத்து அதிகாரி என்னுடைய கைப்பேசி எண்ணைப் பெற்றுக் கொண்டார்.

“போஸ்ட்மார்டத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுய்யா. மெடிகல் காலேஜ் ஜூனியர் பசங்களுக்கு இன்னிக்கு ஓசில போஸ்ட்மார்டம் ட்ரைனிங். அப்புறமா மார்ச்சுவரில போட்டு வைங்க. ரிபோர்ட் எல்லாம் தயார் பண்ணிக்கிட்டு வரோம். அப்புறம் டாக் பண்ணலாம். என்னிக்கு ஆள் தேடிகிட்டு வந்து அடையாளம் காட்டப் போறாங்களோ தெரியாது,”என்று காவல் அதிகாரி சலித்துக் கொண்டார்.

எனக்குத் தொடங்கிய புள்ளியில் மீண்டும் கோடு வந்து சேராத தவிப்பு. ஆம்புலன்ஸும் காவல்துறையும் அங்கிருந்து அகன்றது அவர் இறந்து போன இடத்தை முறையே இரண்டு காகம் ஒரு தெருநாய் முகர்ந்து பார்த்து அகன்று விட்டன. மீண்டும் வண்டிகள் என்ன என்ன என்ற கேள்விகளைக் கேட்டு அந்தக் கேள்விகளும் அகன்று வண்டிகள் போக வர அந்த இடம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது. நான் அடுத்தப் பேருந்திற்காகக் காத்திருந்தேன்.

“சார் சார்”என்று ஒருவன் ஓடி வந்தான். சைக்கிளை அகற்றும்போது அவனும் உடன் உதவி புரிந்தவன். விபத்து நிகழ்ந்த இடத்தின் பின்புறம் மெக்கானிகல் பட்டறை வைத்துக் கொண்டிருந்தவன்.

“என்னங்க?,”என்றேன்.

“அந்த பாடியோட உள்பாக்கெட்டில் இந்தக் கவரு இருந்துச்சுங்க “,என்று ஒரு மூடப்பட்ட பழுப்பு நிற உறையை நீட்டினான்.

நான் அவசர அவசரமாக அந்த உறையைப் பிரித்தேன்.

அப்பாவுக்கு,

எல்லாக் கடிதத்தையும் அன்புள்ள என்றுதான் தொடங்க வேண்டும் என்று எங்க டீச்சர் சொல்லுவாங்க அப்பா. ஆனால் உன்னை அன்புள்ள என்று குறிப்பிட முடியவில்லை. இந்தக் கடிதத்தை எழுதப் படிக்கத் தெரியாத உன்னால் படிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஒரு நல்ல கொத்தனாரா பெயர் வாங்கிய நீ நல்ல அப்பாவா இருந்ததே இல்லையே . காலையில் பத்து மணியிலிருந்து மாலைவரையில் மேசனாக வேலைக்குச் செல்கிறாய். உன் வேலையைச் செய்வதற்கு ஆளே இல்லை என்று கூறும் நீ ஏன் அப்படி ஒரு பழக்கத்திற்கு அடிமை ஆனாய்?

காலையில் நல்ல மேசன்; மாலையில் மோசமான குடிகாரன். பிறகு உன்னை எப்போதுதான் அப்பாவாகப் பார்ப்பது? அம்மா வெளியில் கூலி வேலைக்கும் போயிட்டு தட்டு அறுத்து விற்று, ஒரு ஓட்டை தையல் மெசினை வச்சுகிட்டு அக்கம்பக்கத்துப் பொம்பளைங்களுக்கு ஜாக்கெட்டு தெச்சுக் கொண்டு வரும் காசையும் நீயே பிடுங்கிக் கொள்கிறாய். ஆயா வீட்டில் சும்மா இல்லாமல் பலகாரக்கடை செட்டியார் கடையில் போய் மாவு சலிச்சுப் பலகாரம் சுட்டுக் காசு கொண்டுட்டு வருது.அதையும் உன் சாராயத்துக்குப் பிடுங்கிக் கொள்கிறாய். வசந்திக்குக் கண் பார்வை மங்கிட்டு வருதுன்னு அம்மா அது படிப்பை நிறுத்திட்டாங்க அதுவாவது உனக்குத் தெரியுமா அப்பா?

நான் பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனா வந்தப்ப எங்க பள்ளித் தலைமை ஆசிரியர் என்ன கூறினார் தெரியுமாப்பா? உங்க பையன் நல்லா படிக்கிறான் அவனை மெடிக்கல் படிக்க வைங்க பெரிய டாக்டரா வருவான்னு சொன்னாரு. அப்போ அதைக் கேட்டு சந்தோசமான எனக்கு இப்போதெல்லாம் கொஞ்சம் பயம்மா இருக்குப்பா. வீடு இருக்கும் நிலையில் என்னால் ப்ளஸ் டூவைத் தாண்டி படிக்க முடியுமா என்று தெரியவில்லை. என் படிப்பைக் காரணம் காட்டி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி இருக்கிறாய். எல்லாம் உன் குடிச் செலவுக்கு. அரிச்சந்திரனைப் போல நீ உன் மனைவியையும் மகனையும் கொத்தடிமையாக்கிக் காசு சம்பாதிக்கவில்லை.

ஒவ்வொரு முறை நீ வீட்டுக்கு வராமல் போகும்போதெல்லாம் வாசலில் பதை பதைக்க நானும் அம்மாவும் காத்திருப்போம். யார் யாரெல்லாமோ உன்னை எங்கிருந்தெல்லாமோ அள்ளிக் கொண்டு வந்து போட்டு விட்டு புத்திமதி கூறிச் செல்லும்போது அவமானமாக இருக்கும். அம்மா எத்தனை முறை அரளி விதையை அறைத்துத் தின்ன முயன்றிருப்பாள் ? உனது குடிப்பழக்கம் பல வருசமா எங்க மேல பெரிய பாரமா அழுத்துதுன்னு என்னிக்காவது யோசிச்சு இருக்கியாப்பா?

அடிக்கடி மூச்சிழுப்பு வந்து அவதிப்படும் ஆயா, கண்பார்வை மங்கியபடி வரும் வசந்தி அக்கா இவங்களை நினைச்சுப் பார்த்தாவது மோசமான பழக்கத்தை விட்டுத் தொலையேன்.

இப்படிக்கு ,

அன்பில்லாத மகன்.

பி.கு: இந்தவாட்டி நீ குடிச்சு எங்கேயாவது விழுந்து கிடந்தால் உன்னை நாங்கள் தேடப் போவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறோம் அப்பா.

எனக்கு திக் என்றது. ஏன் இப்படி ஒரு கடிதம் என் கையில் சிக்க வேண்டும்? எவ்வித அடையாளமும் இன்றி ஏன் இது ஒரு பொதுவான கடிதமாக எழுதப் பட்டிருக்க வேண்டும்? இந்தக் கடிதத்தால் என்ன பயன்? பைத்தியக்காரா உன் பள்ளி குறித்துக் கூறியிருக்கலாம். உன் பெயரையோ உன் தந்தை பெயரையோ குறித்துத் தகவல் அளித்திருக்கலாம். உன் குடியிருப்புப் பகுதியைக் கூறியிருக்கலாம். இப்படி அனைத்து குடிகாரத் தந்தைகளுக்கும் அவர்கள் மகன்கள் எழுதுவது போன்ற உன் கடிதத்தை வைத்துக் கொண்டு உன் தந்தையின் அடையாளத்தை நான் எங்கே தேடுவேன் சொல்லு.

இரண்டு நாட்கள் இதைப் பற்றி என் மனைவியிடம், புதல்வர்களிடம், அக்கம்பக்கத்தினரிடம், என் அலுவலக நண்பர்களிடம் புலம்பித் தீர்த்திருப்பேன். மறுநாள் எங்கள் ஊர் எடிஷனில் மட்டும் நான்காவது பக்கத்தில் விபத்தில் முதியவர் மரணம் என்று சிறிய செய்தி வந்திருந்தது. அவர்கள் வீட்டில் அந்தக் குடிகாரத் தந்தையைத் தேடிக் கொண்டிருப்பார்களா? எப்படி அடையாளம் கண்டு பிடிப்பார்கள்? பழைய செய்தித் தாள்களைப் புரட்டி ஒவ்வொரு காவல் நிலையமாக ஓடித் தகவல் கேட்டுப் பெறுவார்களா? இத்தனையும் நடந்து முடிந்து ஒரு மாதம் சென்று ஒருநாள் அந்த வயதில் இளைய காவல் அதிகாரியை ஜி.ஹெச்சில் அகஸ்மாத்தாக சந்தித்தேன். அவருக்கு என்னைச் சட்டென்று அடையாளம் தெரியவில்லை. அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். குடிகாரன் என்பதால் கேஸ் மிக சுலபமாக முடிந்து விட்டதாகக் கூறினார்.

“அவர்கள் வீட்டில் இருந்து யாராவது வந்து உடலை வாங்கிச் சென்றார்களா?”என்றேன்.

“எனக்குத் தெரிந்து இல்லை”

“அந்த உடலை என்ன செய்வார்கள்?”

“ பதினைந்து நாள் வரையில் பிணவறையில் வைத்திருப்பார்கள். பிறகு சமூக ஆர்வலர்கள் வாங்கிச் சென்று கோவிந்தா கொள்ளி போடுவார்கள்”

“ பேப்பரில் விளம்பரம் கொடுப்பீர்களா?”

“ இப்போது எந்தப் பேப்பர்காரனும் இத்தகைய விளம்பரங்களை ஆதரிப்பதில்லை”

எனது ஆவலை அடக்க முடியாமல் ஜி.ஹெச்சில் இருந்த பிணவறை நோக்கி போனேன். ஜி.ஹெச் ஒரு தனி ஊர். பிணவறையைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றானது. பிணவறை பிணத்தைப் பார்க்கும் முன்னர்ப் பல சம்பிரதாயாங்களைக் கடக்க வேண்டியிருந்தது. ஆனால் நான் ஒரு நூறு ரூபாய் மூலம் அதனை எளிதாகக் கடந்தேன்.

ஒரு பிணவறைக்குள் செல்ல அதீத துணிச்சல் வேண்டும். இன்னது என்று சொல்ல முடியாத பல்வேறு உணர்வுகள் மனதில் அலை மோதும். குளிரூட்டப்பட்ட அறை, பிணங்களின் நாற்றம், மரணம் தரும் மன பாரம் எல்லாமுமாகச் சேர்த்து இருபத்து நான்கு மணி நேரமாவது உங்களுக்குத் தப்பு எதுவும் செய்ய மனம் வராது..

“இதோ நீங்க கேட்ட ஆளோட பிணம்”என்றார் அந்தப் பிணவறைக் காவலாளி.

ஸ்ட்ரெச்சர் போலவும் இல்லாமல் கட்டில் போலவும் இல்லாமல் தோன்றிய நீளப் படுக்கையில் அந்தக் குடிகாரரின் பிணம் வெள்ளைப் போர்வையால் மூடப்பட்டிருந்தது.

“ஒரு மாசம் ஆச்சே ஏன் இன்னும் டிஸ்போஸ் பண்ணாம இருக்கீங்க?”, என்றேன்.

“ நாளைக்குதான் ஒரு என்ஜிஓவிலிருந்து ஆள் வராங்க”

பேருந்தின் அடியில் பார்த்த உருவம் போலத் தெரியவில்லை. அப்பாவின் மரணம் நிழலாடியது. ஒன்பதாவது நாளிலிருந்து கல் ஊன்றி பத்து, பதினொன்று, பனிரெண்டு என்று ஒவ்வொரு நாளும் ஆத்மாவிற்குத் தாக சாந்தி செய்து கரையேற்றி, அதன் பிறகும் ஊனம், மாசியம் என்று ஆத்மாவிற்கு உருவம் கொடுத்து வருஷாப்திகம் செய்து அனுப்பி வைத்தோம்.

நான் பிணவறைக் காவலாளியை அழைத்தேன். மேலும் ஒரு ஐம்பது ரூபாயை நீட்டினேன்.

“இன்னாத்துக்கு சார்?,’என்றான்.

என் கையில் இருந்த அந்தப் படிக்கப்படாத கடிதத்தை மீண்டும் அந்தப் பிணத்தின் சட்டை பாக்கட்டில் வைக்கச் சொல்லி விட்டு வெளியேறினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *