நெருப்பு நாக்குகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 14,574 
 
 

வெகுநாட்களுக்குப் பிறகு… அதிகாலையில் மெதுவாக எழுந்து விடியலின் அழகை ரசிக்க நேரம் கிடைத்திருக்கிறது ராதாவுக்கு. மெல்ல உடலை நெளித்து சோம்பல் முறித்தபடி வந்து ‘பால்கனி’ கதவைத் திறந்தாள்.

மறுகணம் முகத்தில் பட்ட அந்தக் குளிர்ந்த காற்று ‘ஏ.சி.’ வைத்தாலும் ஈடாகாது என்பதை உணர்த்தியது. அரை இருளில் லேசாக வெளிச்சம் வரத் தொடங்கும் தருணத்தில் பறவைகள் இரைத் தேட கிளம்பின. அவற்றின் குரலும், ஒன்றிரண்டு நாய்கள்… நடந்து போவோர் வருவோரைப் பார்த்து குரைத்த வண்ணம் அங்கும் இங்கும் ஓடியதை பார்த்துக்கொண்டே வெளிச் சுவரில் சாய்ந்து
நின்றாள்.

மனதில் பழைய நினைவு வந்து போனது. ‘இந்த வீட்டில் குடியேறிய இத்தனை ஆண்டுகளில் ஒரு நாள்கூட இப்படி ஓளிணிந்து இருந்ததில்லையே!’ என்ற எண்ணம் எழுந்து மறைந்தது. ஒரு சாதாரண குடும்பத்தில் இரு அக்காகளுடன் பிறந்து வசதியான வாழ்க்கை வாழவில்லை என்றாலும் நிம்மதியான சந்தோஷமான நாட்களையே வாழ வைத்தார்கள் அம்மாவும், அப்பாவும். ஆனால், அதற்கு அவர்கள் தந்த விலை, அவர்களை சுற்றி எழுப்பட்ட கேள்விகள் எத்தனை எத்தனை…?

இன்று பொருளாதாரத்தில் உயர்ந்து பல படிகளைக் கடந்து நல்ல நிலையில் இருந்தாலும், அன்று இருந்த எதுவோ ஒன்று
குறைந்த – விடுபட்ட மாதிரியான தோற்றத்தைக் கொடுத்தது. மூன்று மகளைப் பெற்றவர்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்ததால் ஒரு மகன் போதும் என்று நினைத்திருந்தாலும்… தன் அக்காக்களை சந்திக்கும்போது மனதில் எழும் மகிழ்ச்சி அவனுக்கு கிடைக்காமல் செய்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றியது.

சாதாரண வேலையில் இருந்தபோதும் ஒவ்வொருவரின் தேவைகளை அறிந்து தன்னால் என்ன முடியுமோ அதைப் பார்த்து பார்த்து செய்தார் தந்தை. பெண்கள் மூவருக்கும் எந்த வருத்தமும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதிலும் ஊரெல்லாம்… ‘மூன்றும் பெண்கள்’ என்று கரித்துக் கொட்டும்போது, கவலைகொள்ள மாட்டார். ‘என் வீட்டு மகாலட்சுமிகள்’ என்று பெருமையா க எல்லோரிடமும் சொல்லி நெகிழ்வார்.

தன் குடும்பமே உலகம் என்று அம்மாவும், அப்பாவும் வாழ்ந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் யாரிடமாவது எழுந்த கேள்விகள் அவர்களை காயப்படுத்திக்கொண்டே இருந்தன.

அவர்களுடன் முடிந்ததா கேள்விகள்…இல்லையே! இன்றும் என் மகன் வரை, நாளை பேரன்-பேத்திகளையும் தொடரும். இந்தச் சமூகமே உறவுகளால் நிரப்பப்பட்டது போல அவர்களின் கேள்விகளாலும் நிரப்பப்பட்டது.

மூவரும் பெண்களாளிணி பிறந்ததில் இருந்து நெருப்பு நாக்குகளின் கேள்விக்கணை ஆரம்பிக்கப்பட்டது. “எப்படி சண்முகம்… மூணு பொண்ணுங்களையும் அடுத்தடுத்து கரை ஏத்தப்போற! அதுவும் நீ வாங்குற கையடக்க சம்பளத்தில்…?”

வினாவை எழுப்பியவருக்கு பதில் தேவையில்லை. அடுத்தவரின் தர்மசங்கடமான நிலையை ஆர்வமாக சுட்டிக் காட்டிய… இல்லை, குத்திக் காட்டிய சந்தோஷம் மட்டுமே!

அடு த் து , பெரிய அக்கா தனத்தின் திருமணத்தின்போது… “இருக்கிறதை எல்லாம் இவளுக்கே செஞ்சிட்டா மீதம் இன்னும் ரெண்டு
இருக்கே! என்ன செய்யப் போற கமலம்?” என்று யாரோ ஓர் உறவினரிடம் இருந்து பொய்யான ஆதங்கத்தடன் அம்மாவிடம் வினா எழுப்பப்பட்டது…

ஒவ்வொரு கேள்வியையும் உள்வாங்கும்போதும் மனதில் ஏற்படும் வலியும், வாழ்க்கையைப் பற்றிய பயமும், சந்தோஷங்கள் நம்மைவிட்டு தொலைந்து போகுமோ என்று எண்ணச் செய்துவிடும்.

இரண்டாவது அக்கா ஜெயா, மேலே படிக்க நினைத்தபோது வீட்டில் பல விவாதங்களுக்குப் பிறகு ஒத்துக்கொண்டாலும் அதன் பின்னர், நட்பு-உறவுகளிடம் இருந்து எழுந்த குத்தீட்டிகள் இன்னும் கூரானவை. “அதிகம் படிக்க வச்சிட்டா மாப்பிள்ளை கிடைக்கிறது சிரமம். அதுமட்டும் இல்லாம அதுக்கு உன்கிட்டே வசதி இருந்தாலாவது பரவாயில்ல” என்று சூட்டுக்கோல் சொற்கள் வந்து
விழுந்தன.

இதுமாதிரி வெவ்வேறு விதமான கேள்விகளை சந்திக்கும்போது அம்மாவின் முகம் கலக்கத்திலும், பயத்திலும் சோர்ந்து போகும். அப்பொழுதெல்லாம் அப்பாவின் வார்த்தைகள்தான் எல்லோருக்கும் தைரியத்தைக் கொடுக்கும்.

“கமலம் என்ன இது? இந்த மாதிரி பேச்சுகளை சந்திக்கிறது நமக்கு என்ன புதுசா? ஊரோட ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தேடிக்கிட்டே இருந்தோம்னா நாம நிம்மதியா வாழ முடியாது. கேட்டவருக்கு தேவை பதில் இல்ல.

நம்ம வாழ்க்கையில உள்ள நிறை குறைகளை நம்மைவிட வெளியே உள்ள யாராலேயும் நிறைவா உணர முடியாது. அததுக்கு தகுந்த மாதிரி முடிவெடுத்து வாழ்க்கையை நகர்த்திக்கிட்டு போகணும். நம்ம பிள்ளைகளின் நலனில் நம்மைவிட யாரும் அதிக அக்கறை செலுத்திவிட முடியாது. அதனால இதையெல்லாம் மனசுல வச்சிக்காம விடை தெரியாத வினாக்கள் பின்னாடி போகாம அவற்றைக் கடந்து போக பழகிக்கம்மா” என்பார்.

“இதுதான் சரிம்மா! நம்ம குடும்ப நிலவரம் நமக்குத்தானே தெரியும். அப்பா சொல்ற மாதிரி மாத்தி யோசியுங்க. நீங்க தேவையில்லாம
இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க.”

“அவருக்கென்ன… அறிவுரை சொல்லிட்டு போயிடுவார். ஆம்பளைங்களை யார் கேள்வி கேட்க போறாங்க? இந்தப் பொம்பளைங்களைத்தானே இதெல்லாம் கேப்பாங்க. அவதிப்படுறது நான்தான்” என சங்கடப்படுவார்.

அன்று அம்மா சொன்னது எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால், இன்று யோசித்தால் ஆண்கள் யாரும் மற்றவர்களின் குடும்ப நிலையை வைத்து அதிகம் கேள்வி கேட்பது போல் தெரியவில்லை. அது ஏன் பெண்களுக்கு மட்டும் இத்தனை ஆர்வம் என்று புரியவில்லை!

இந்தக் கேள்விகள் சந்தோஷமான நிகழ்வுகளின்போது வந்தால் எதிர்கொள்வதில் அவ்வளவு சிரமம் இருக்காது. ஆனால், உச்சக்கட்டமாக தந்தையின் இறப்பின்போது எத்தனை விதமான கேள்வி அனல்களை சந்திக்க நேர்ந்தது. தன் கடமைகள் எல்லாவற்றையும் நிறைவாக செய்து முடித்த பின்னரே மனதுக்குள் முழுமை அடைந்த திருப்தியோடு… ‘இனி மனைவியை மகள்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று நிம்மதியாக தன் மூச்சை நிறுத்திக்கொண்டார்.

ஆனால், மகள்களுக்கு திருமணம் நடத்தி முடித்ததோடு சகலமும் முடிந்து போய்விட்டதாகவும், ‘வீட்டின் எதிர்கால செலவுகளுக்கு சேமிப்பு எதுவும் வைத்திருக்கிறாரா?’ என்றெல்லாம் தெரிந்தவர்… அறிந்தவர் என பாரபட்சம் பாராமல் எங்களின் குடும்ப சூழ்நிலையைப் பற்றி அலசி ஆராய்ந்தனர்.

அதற்கான தீர்வை அவர்கள் தரப் போகிறார்களா…இல்லை. அங்கு இருக்கும் நேரத்தில் வாளிணிக்கு வந்த எதையாவது பேசிவிடும் தீவிரம் மட்டுமே கேள்வியை எழுப்பவர்களிடம் தெரியும். காரியம் முடிந்ததும்… தான் என்ன பேசினோம்? எது எதை
யாரிடம் கேட்டோம்? என்ற நினைவில்லாமல் நிம்மதியாக சென்றுவிடுவார்கள். ஆனால், அவர்கள் எழுப்பிவிட்டுச் சென்ற பேரலையில் சிக்கித் தவிக்கும் இதயங்கள் மீண்டு இயல்புக்கு வர நெடுநாட்கள் ஆகிவிடும்.

இப்படி சிந்தனைச் சிதறல்களில் நேரத்தை கணக்கிடாமல் நின்றுகொண்டிருந்தவளின் பின்னால் வந்து நின்ற கணவன் விஸ்வம்…

“என்ன ராதா, இந்த நேரம் ‘பால்கனி’யில தனியா நின்னுகிட்டு அப்படியென்ன யோசனை?” என்றார்.

“சும்மா பழைய நினைவுகள். அப்புறம்… சுத்தி உள்ளவங்க நம்மகிட்ட கேட்கிற கேள்விகளையும், அதுக்கு அப்பா சொல்ற விளக்கத்தையும் நினைச்சிக்கிட்டு இருக்கேன். வேற ஒண்ணும் இல்லங்க.”

“சரி! எனக்கு காப்பி போட்டு எடுத்துகிட்டு வா…”

“ம்… இதோ” என்று சொல்லிவிட்டு, தலைவாசல் கதவு திறந்து பால் ‘பாக்கெட்’டை எடுத்துக்கொண்டு வந்து காப்பி போடும்போது வீட்டு வேலை செய்யும் பெண் வந்தாள்.

“வா விமலா. நானே நினைச்சேன்… இன்னைக்கு நிறைய வேலை இருக்கே! சீக்கிரம் வருவியோ மாட்டியோன்னு…”

“அதான் நேத்தே சொல்லிட்டீங்களேக்கா…தம்பி வரப்போகுது. அதோட ‘ரூமை’யெல்லாம் சுத்தம் செய்ய செய்யணும்ன்னு! அதெப்படி வராம இருப்பேன்…?”

“இரு… சாருக்கு காப்பி கொடுத்துட்டு வந்து உனக்கும் தர்றேன். அப்புறம் பாத்திரத்தை தேச்சிட்டு, அறையை ‘கிளீன்’ பண்ணு.”

“சரிக்கா… தம்பி வெளிநாட்டிலே இருக்குது. வரும்போது வெள்ளைக்காரியை கூட்டிட்டு வந்துட்டா என்ன செய்வீங்கக்கா?”

சூடாக காப்பியை எடுத்துக் கொண்டு நகர்ந்தவளின் காதுகளில் விழுந்த தீப்பிழம்பு கேள்வியில் அப்படியே ஸ்தம்பித்து நின்றவள்…
திரும்பி விமலாவைப் பார்த்துவிட்டு மனதுக்குள், ‘மகனைப் பற்றிய கேள்வியின் தொடக்கம்’ என்று எண்ணியவளாக கணவனை நோக்கி நகர்ந்தாள்.

அந்தக் கேள்வியை செவிமடுத்த விஸ்வம் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான். அதைப் பார்த்து ராதாவும் மெதுவாக சிரிக்க… ‘இவங்களுக்கு என்ன ஆச்சு? நான் அப்படி என்ன கேட்டுட்டேன்னு இப்படி சிரிக்கிறாங்க?’ என்று புரியாமல் கேள்விக்குறியாக
நின்றாள் விமலா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *