நெடுஞ்சாலையில் ஒரு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 9,200 
 
 

சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழவன் ஒருத்தன் சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருக்கிறானே, அந்த இடத்திலிருந்து பதினாலாவது கிலோமீட்டரில்தான் ஒசூர் இருக்கிறது. இரைச்சலுடன் போகும் பெரிய லாரிகளின், கண்டெய்னர் வாகனங்களின், கார்களின், சத்தங்களுக்கிடையில் சிலுசிலுவென்று பனிச்சாரலுடன் வீசும் காற்றினால் குளிர் கவ்வுகிறது. இங்கிருந்து வலப்புறம் பிரிந்து செல்லும் மண்சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் மலையும், மலை சார்ந்த பசுமையும் சூழ்ந்த ஹள்ளியோ, பள்ளியோ கிராமம் இருப்பதை இங்கிருந்தே பார்க்கமுடிகிறது. கட்டடங்கள் புகைபடிந்து தெரிகின்றன…இந்த இடத்தில் விட்டுவிட்டு பறக்கும் வாகனங்களைத் தவிர எதுவுமில்லை, ச்சிவ்..! என்று ஒலிக்கும் சில்வண்டின் குரல். அப்போதுதான் போய்க் கொண்டிருந்த அந்த கிழவன் சாலையின் எதிர்பக்கம் போகவேண்டும் என்று நினைத்தானோ என்ன இழவோ, சடாரென்று குறுக்கே பாய்ந்து விட்டான். அந்த நேரத்துக்குதானா ஒரு லாரி அசுர வேகத்தில் வரணும்?. டேய்!…..டே…ய்…. டே….டயர்கள் பெருஞ் சத்தத்துடன் தரையில் தேய்த்துக் கொண்டே வந்து ஐயய்யோ!,போச்சி ட.மா.ர்! லாரி மோதிய வேகத்தில் கிழவன் தூக்கி வீசப்பட, ஒற்றையாய் ஒரு கேவல், இடது ஓரத்தில் சற்று திருகினாற்போல போய் விழுந்தான். அவ்வளவுதான், ஒரு முணுகலோ, அசைவோ துளிகூட இல்லை. மொத்தத்தில் சில நொடிகளில் எல்லாம் முடிந்து விட்டது. டிரைவர் தடதடவென்று உதறினான். அவன் நல்ல நேரம் கண்ணுக்கெட்டிய தூரம் ஆள் நடமாட்டம் இல்லை. வண்டிகள் எதுவும் முன்னேயோ பின்னேயோ. வரவில்லை. யோசிக்க நேரமில்லை.அவசரமாய் வண்டியைக் கிளப்பினான்.

”டாய்!..ஐயய்யோ…ஐயோ!….டாய்! மடக்கு… வுடாத…. டாய்!. …”—- ஒரு பத்துபேருக்கு மேல். ஒரே கூச்சல், திமுதிமுவென்று ஓடி வந்து லாரிக்கு முன்னால் நின்றுவிட்டார்கள். வடவாண்ட தென்னந்தோப்பிலிருந்து ஓடி வந்திருக்கணும். போச்சு முடிஞ்சிது.

“ஐயய்யோ! ஓடு ஓடு உசுரு இருக்கா பாருடா. அசையக் காணமே ஐயோ!. த்சு…த்சு…யாருன்னு பாருங்கடா…”—-எல்லோரும் ஓட்டமாய் ஓடினார்கள். அங்கே ஒரு பதட்டமான சூழலும்,உணர்ச்சிக் கொந்தளிப்பும் உருவாக ஆரம்பித்திருந்தன..டிரைவர் தடதடவென்று ஆடிக் கொண்டிருந்தான். தப்பிச்சி ஓடவும் வழியில்லை. நாலைந்து பேர் வழி மறித்து நிற்கிறார்கள்..

“ஐயய்யோ!..த.லை.வ.ரே..ரே.ரே! .மணீ!…மணீ!! இது உங்க அப்பாடா.”——மணி என்கிற அந்த இளைஞன் ஓடிப்போய் குனிந்தான். பிணத்தின் தலைப் பக்கம் ரத்தம் தேங்கியிருந்தது. தொடைஎலும்பு முறிந்து வலது கால் முறுக்கிக் கொண்டு கிடந்தது. அரை கண் மூடிய நிலையில்உயிர் பிரிந்திருந்தது. பிணம் முன்னாள் ஊர்தலைவர் போலும். ஐயோ!.ஐயய்யோ! அங்கே பெருங்கூச்சலும் அழுகையும் எழ, மணி மடேர்மடேர் என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

அதற்குள் அந்த கும்பலிலிருந்தவர்கள் ஆவேசத்துடன் லாரியில் ஏறி டிரைவரை இழுத்து கீழே தள்ளினார்கள். டிரைவர் ஆள் வெடவெடன்னு ஒல்லியாக இருந்தான். தம்திம் என்று அடிகள் சரமாரியாக விழ ஆரம்பித்து விட்டன. அவன் முகத்தில் விழுந்த குத்தில் உதடு கிழிந்து ரத்தம் கொட்டுகிறது. சட்டையெல்லாம் ரத்தம். ஆளாளுக்கு இழுத்து கீழே தள்ளி காலால் வயிற்றின் மேல் எட்டி உதைத்தார்கள். டிரைவர் விட்டு விட்டு அலறிக் கொண்டிருந்தான். சாலையில் போகும் வாகனங்கள், ஒரு நிமிஷம் தயங்கி, விஷயம் புரிந்து நிற்காமல் வேகம் பிடித்தன. அந்நேரத்துக்கு சைக்கிளில் வந்த ஒருத்தன் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து தன் ஆத்திரம் தீரும் வரைக்கும் டிரைவரை பளார் பளார் என்று அறைந்துத் தள்ளினான். அவன் செத்தவருடைய மருமகன். அதோடு விடவில்லை. ஆவேசமாக டிரைவரின் இடது கையைப் பிடிச்சி ஆட்காட்டி விரலை பின்பக்கமாக அழுத்தி ஒடிக்க முயற்சிக்க, டிரைவர் வலி தாளாமல் உச்ச ஸ்தாயியில் அலறினான். ஒரு ஆள் ஓடிவந்து அவனை தடுத்து தள்ளி விட்டு வுட்றா…வுட்றா…என்றான். ஆளாளுக்கு மறுபடியும் அடித்தார்கள்.டிரைவர் மூக்கிலிருந்து ஒழுகிய ரத்தத்தை துடைத்துக் கொண்டு அழுதபடியே “வந்த மன்சன் சடுக்குன்னு குறுக்க பூந்துட்டாருபா. என்.எச். தானேன்னு தொண்ணூறுல வந்துக்குணு இருந்தேன்.. நிறுத்த முடியல. டயரு எம்மாம் தூரம் தேய்ச்சிக்குணு வந்து கீது பாருபா.”— எழுந்த மணி ஆவேசத்துடன்

“டேய் பொறுக்கி!.எங்கப்பாவை சாவட்ச்சிட்டு சட்டமா பேசற?.”——- சொல்லிவிட்டு மாறிமாறி. அறைந்தான். சாவட்றா என்று எல்லோரும் கத்தினார்கள். அவ்வளவுதான் டிரைவருக்குக் கண்கள் செருக ஆரம்பித்தன. ஒரு முறை வாந்தி எடுத்தான். வாந்தியில் ரத்தம் வந்தது. எவ்வளவுதான் ஒரு மனுஷனால தாங்கமுடியும்?. பசிநேரம், காலையில் நாஷ்டா கூட சாப்பிட வில்லை.. கால்கள் தரையில் பாவாமல் தொய்ய, தலை தொங்கிவிட்டது. அவர்களில் சற்று படித்தவனாக இருந்த சிவப்புச் சட்டை ஆள் ஓடிவந்து தாங்கிக் கொண்டான். எல்லோரையும் அதட்டி தூர தள்ளினான்.

“உசுரு போயிட்டா கொலை கேஸ்ல மாட்டிக்குவோம்டா.” — டிரைவரை பிடித்து கீழே படுக்க வைத்தார்கள்.தண்ணீர் குடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. சிவப்பு சட்டைக்காரன் டிரைவர் முகத்தில் சடார் சடாரென்று தண்ணீரடித்து டேய்! டேய்! என்று உசுப்பிக் கொண்டிருந்தான். ஊஹும்! அசைவில்லை. எல்லாருக்கும் பயம் வந்துவிட்டது. எல்லோரும் கிட்டே வந்து டேய்!..டேய்! என்று தட்டி தட்டி உசுப்ப ஆரம்பித்தார்கள். ரொம்ப நேர போராட்டத்திற்கு அப்புறமாக டிரைவருக்கு மெதுமெதுவாக நினைவு திரும்ப ஆரம்பித்தது. மெதுவாய் எழுந்து உட்கார்ந்தான்..உட்கார்ந்தவுடனே மறுபடியும் ஒருதடவை ரத்த வாந்தி எடுத்தான்.

அந்த நேரத்துக்கு ஊர்பக்கமிருந்து பெரும் கூச்சல் கேட்டது. ஒரு பெரிய கும்பல் புழுதி பறக்க தடிதாம்புடன் ஆவேசமாக ஓடிவருவது தெரிகிறது குறைந்தது ஐம்பது அறுபது பேர் இருக்கும். டிரைவரின் கைகால்கள் தந்தியடிக்க ஆரம்பித்து விட்டன. எல்லாரையும் பார்த்துப் பார்த்து கும்பிட்டான். ஓவென்று அழுதான்.அவர்களில் சற்று விவரவாளியான அந்த சிவப்பு சட்டை எல்லோரையும்சற்று தூர கூட்டிப் போனான்.

”இதோ பாருங்கப்பா அய்யா எச்சரிக்கையில்லாம திடீர்னு ரோட்டை கிராஸ் பண்ணியிருக்காரு. அத்தோட போதையில இருந்திருக்காரு… போஸ்ட்மார்ட்டத்தில இதெல்லாம் தெரிஞ்சிடும். நான் என்ன சொல்றேன்னா, இந்த லாரியின் ஆர்.சி. புக் இப்ப நம்மகிட்டதான் இருக்கு, அவன் தப்பிக்க முடியாது. அதனால டிரைவரை வண்டியோட ஓசூர் போலீஸ் ஸ்டேஷன்ல போய் சரண்டர் ஆவ வெச்சிடுவோம்..” —–உடனே ஆளாளுக்கு கத்தினார்கள்..

” அட இருங்கப்பா.அதோ நம்ம ஊரு ஜனங்க தடி தாம்போட வர்ற வேகத்தப் பார்த்தீங்களா?.அவங்க கிட்ட இவன் மாட்டினா நிமிசத்தில அடிச்சே கொன்னுடுவாங்க… யாரையும் நம்மால கண்ட்ரோல்பண்ண முடியாது.கொலை கேஸாயிடும் புரியுதா? முன்ன ஒருக்கா இதேமாதிரி நடந்திருக்கு. புதூரான் வீட்டு சண்முகம் ஆக்ஸ்டெண்ட்ல செத்தப்போ, டிரைவரை மூச்சு பேச்சு இல்லாதபடிக்கு அடிச்சிப் போட்டீங்க. நல்லவேளை நேரத்துக்கு ஆஸ்பத்திரியில சேர்த்ததனால அப்படியும் மூணாம் நாளுதான் நெனைவு திரும்பிச்சோ தப்பிச்சீங்க. அப்படியும் நம்மூர்ல ஏழெட்டு பேரை ஒரு மாசத்துக்கு மேல ஜெயில்லவெச்சிட்டாங்க இல்லே?. சண்முகம் ஊர்ல சாதாரண ஆளு. அதுக்கே அந்த நிலைமை.. இவரு ஊர் தலைவரு, என்னாவும்?.வாணாம்யா லாரிக்கு இன்சூரன்ஸ் கவரேஜும் கரெக்டா இருக்கிறதால, நமக்கு நஷ்ட ஈடு வந்துடும். மொதல்ல போலீஸுக்குப் போயி கேஸ் ரிஜிஸ்டர் ஆவட்டும். எஃப்.ஐ.ஆர். போடட்டும். லாரிகூட யாராவது நம்ம ஆளுங்களை அனுப்பிவைப்போம்.ஏன்? நம்ம கதிரேசனும் கன்னிப்பனும் இதே லாரியில கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு போவட்டுமே. இல்லே சொந்தக்காரங்க யாராவது போங்க.

“என்னாடா போறீங்களா?.”—– ஒருத்தன் கேட்க, தடிதடியாக இருந்த கதிர்வேலுவும், கன்னியப்பனும் சரியென்று தலையாட்டிவிட்டு லாரியை நோக்கி ஓடினார்கள். மணியின் மாமா குறுக்கிட்டு

“டேய்! மணி எனக்கு இது ஒண்ணும் சரியாப் படல.. டேய்! இந்தாளு ஏதோ பம்மாத்து வேலை பண்றான். ஜாக்கிரதை..”

“ஆமாமா பம்மாத்து வேலைதான். ஏன்னா அவன் என் மச்சான் பாரு.”—–ஊர் ஜனங்க இப்போது வெறிக்கூச்சல் போட்டபடி ரொம்ப கிட்டே வந்து விட்டார்கள்.

“..ஐயய்யோ!.என்னை காப்பாத்துபா!. அண்ணாத்த!. மூணு பொட்டப் புள்ளங்கள வெச்சிங்கீறம்பா. ஐயோ! இன்னும் ஒண்ணு கூட வெலையாவலியே சாமீ!.” —அந்நேரத்துக்கு ஒருத்தன் பீர் பாட்டிலுடன் ஓடி வந்தான்.

“ஏய்! பாடூஸு! சொம்மா வேசம் கட்றீயா?. டேய்! இவன் சரக்கடிச்சிட்டு லாரிய ஓட்டியிருக்கான்பா. பாத்தியா பீர் பாட்டில்ல கள்ளு ரொப்பி வெச்சிங்கீறான்.”

“!அது…..க..க..கள்ளு இல்லபா, மோ…மோருபா. நீ ஒண்ணா குடிச்சிப் பாருபா. எனுக்கு வவுத்தில அல்ஸர் கீதுபா, கட்டி கூட கீதாம்..எட்டு கரெண்ட் வெக்கணுமாம். டாக்டரு சொன்னாருபா.. டிபனு துன்னாலும்,சோறு துன்னாலும் சரி, மோரு குடிக்கணும். இல்லாங்காட்டி தக்காது, வாந்தி வந்துரும். ராத்திரில்லாம் ஜொரம். வண்டிய எடுக்கமாட்டேன்டான்னேன் . அந்த கம்னாட்டி பேமானி கேக்கலியே..”— அவன் தேம்பினான்.

சிவப்பு சட்டை மணியிடம் “கரண்ட் வைக்கணும்னு சொல்றானே. வயித்தில கேன்ஸர் கட்டி. அதான்பா பாவம் ரத்த வாந்தி எடுத்திருக்கான். கல்யாண வயசில மூணு பொண்ணுங்க வேற இருக்காப்பல தெரியுது. ”——ஊர் ஜனங்க இப்போது ரொம்ப கிட்ட வந்து விட்டார்கள்..

மணி சடக்கென்று எழுந்து சிவப்பு சட்டைக்காரனிடமிருந்த ஒரிஜினல் ஆர்.சி. புக்கை வாங்கி பத்திரப் படுத்தினான். . டிரைவர்கிட்ட போய் ரகசியமாய்

“சீக்கிரம் லாரிய எடுத்துக்கிணு கெளம்பு. எங்க ஜனங்க வந்தா அடிச்சே கொன்னுடுவாங்க. போய் ஓசூர் ஸ்டேஷன்ல சரண்டர் ஆயிடு..” ——- வண்டி சாவியை கொடுத்தான். டிரைவர் சரியென்று தலையாட்டிவிட்டு,மணியின் கையைப் பிடித்துக் கொண்டு கதறி தீர்த்துவிட்டான்..பின்பு அவசரமாய் ஓடிப்போயி வண்டியைக் கிளப்பினான். லாரி போனவுட்டு திமு திமுவென்று கும்பல் வந்துவிட்டது. பெருத்த கூச்சலும் அழுகையுமாய் பொம்பளைங்க கும்பல் ஓடிப் போய் பிணத்தைச் சுற்றி நின்று மார்பில் தப்தப்பென்று அறைந்துக் கொண்டு பாடிஅழுதார்கள். மணியினுடைய அம்மாவும், மனைவியும் கதறிக் கொண்டு ஓடிவர,.அவர்களைப் பார்த்ததும் மணி மறுபடியும் ஓவென்று அழுதான். எங்கும் ஒரே கூக்குரல். அந்நேரத்துக்கு கதிரேசனும்,கன்னியப்பனும் வந்து நின்றார்கள்.

“டேய்! நீங்க லாரியில போவல?.”

“தோப்புக்கு போய் ஷர்ட்டை எடுத்துக்குணு இப்பத்தான் வர்றோம்.”———- சிவப்பு சட்டை தலையில் கை வைத்துக் கொண்டான். தன் வாட்ச்சைப் பர்த்துவிட்டு, செல்லில் போலீஸ் ஸ்டேஷனுடன் தொடர்பு கொண்டான்.

”டாய்! அடீங்! இன்னா ரகசியம்?.ஸ்பீக்கரை ஆன் பண்ணு. எல்லாருங் கேக்கட்டும்.” — ஸ்பீக்கரை ஆன் பண்ணான்.

“ஐயா! இங்க மஞ்சப்பள்ளி கூட்ரோட்லயிருந்து பேசறோம்ங்க.. ஒரு லாரிக்காரன் எங்கய்யாவை அடிச்சிட்டு வேகமா அந்தப் பக்கந்தான் வந்துக்கிட்டு இருக்கான். என்னங்க?,ம்.ம். ப்ளூ கலர், லைட்ப்ளூ. லைலேண்ட். ஆமாங்க லாரி நெம்பர்—TN—18—8322, ஆமாங்க அதேதான். ஆங்..எங்கய்யா செத்துட்டாருங்க.. இல்ல..இல்ல நாங்க யாரும் பாடிய தொடல. நாங்கதான் லாரிய அனுப்பி வெச்சோம். இங்க இருந்தா ஜனங்க டிரைவரை அடிச்சே கொன்னுடுவாங்கன்னு பயந்துபோயி… இந்நேரம் வந்திருக்கணுமே.”

“டேய்! டிரைவர் பைத்தியக்காரனா இருந்து இந்த வழியா வந்தா புடிச்சிடலாம்.ஏன்யா நீங்கள்லாம் முட்டாளுங்களா இல்லே அரைக்கிறுக்கா?. நடுவுல புதூர் கூட்ரோட்ல லெஃப்ட்ல கட் பண்ணி ஊருக்குள்ள மண்ரோட்ல போனா பத்து கிலோமீட்டர்ல கர்நாடகா பார்டர் வந்திடுதே, தெரியாது உங்களுக்கு?. இந்நேரம் எஸ்கேப் ஆயிருப்பான். போனை வைய்யா குடாக்கு..” —– அவ்வளவுதான் வந்த கும்பல் சிவப்பு சட்டையை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டது.

”ஐயோ! ஏற்கனவே டிரைவரை உயிர்போறஅளவுக்குஅடிச்சிட்டோம். ரெண்டு தடவை ரத்த வாந்தி எடுத்தான்.இதுக்குமேல வயித்துமேல ஒருஅடி விழுந்தாலே பொணமாயிருப்பான். அவனுக்கு வயித்தில கேன்ஸர். .நாம கொலை கேஸ்ல மாட்டி இருப்போம். அதில்லாம வண்டி ஆர்.சி.புக் ஒரிஜினல் நம்மகிட்ட இருக்கு, அவன் எங்கியும் தப்பிக்க முடியாது. அதான் மணிகிட்ட சொன்னேன்..”.— மருமகன் குதித்தான்.

“ஆமா எங்க வூட்டு சாவுல அதிகாரம் பண்றதுக்கு நீ யார்றா?. எங்க ஜாதியா ஜமாத்தா? ஸ்கூலு வாத்தின்னா கொம்பா?.” கொஞ்ச நேரம் அங்கே ஒரே கூச்சலும் குழப்பமாகவும் இருந்தது. சிவப்பு சட்டை வாத்தி இப்போது மவுனமாகி விட்டார்.

ரெண்டு மணிக்கெல்லாம் சர்ரென்று போலீஸ் வேன் ஸ்பாட்டுக்கு வந்து விட்டது.. இரண்டு கான்ஸ்டபிள்களுடன் இன்ஸ்பெக்டர் வந்திறங்கினார்.

“ஐயா! லாரிக்காரன் வந்து சரண்டர் ஆயிட்டானுங்களா?.” — கேட்ட சிவப்பு சட்டைக்காரரை இன்ஸ்பெக்டர் அலட்சியமாகப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கினார். இன்ஸ்பெக்டர் பாடிகிட்ட போய் அதை சுற்றி சுற்றி வந்து சூழ்நிலைகளைப் பார்த்தார். பாடி விழுந்துக் கிடக்கிற இடம், திசை,லாரி நின்ற இடம், திசை, என்று தேவையான விஷயங்களை குறிப்பெடுத்துக் கொண்டார். குனிந்து பாடியை பார்த்தார்.

“யோவ் எய்ட் ஒன் எய்ட்! நீங்க ரெண்டுபேரும் பாடியாண்ட டியூட்டிபாருங்க. இன்னும் அரைமணியில ப்ரேக் இன்ஸ்பெக்டர் வந்துடுவாரு, ஆம்புலன்ஸும் வந்துரும், ஃபார்மாலிட்டீஸ்லாம் முடிஞ்சப்புறம் பாடிய நேரா போஸ்ட்மார்ட்டத்துக்கு கொண்டு வந்திடுங்க. செவன் டொண்ட்டி! ஏன்யா மசமசன்னு நிக்கிற? பாடிய சுத்தி தரையில மார்க் பண்ணு. த்தூ! ஒவ்வொண்ணும் சொல்லிக் குடுக்கணும் உனுக்கு. ஆக்ஸிடெண்ட்டை மொதல்ல பார்த்தவங்க எல்லோரும் வேன்ல ஏறுங்க.”—–மணி,சிவப்பு சட்டை உட்பட எல்லாரும் ஏறினார்கள். வண்டி கிளம்பியது.

“யோவ்! அந்த ப்ளூ லாரி புதூர் கூட்ரோட்ல லெப்ட்ல திரும்பி மண்ரோட்லதான் போயிருக்கு தெரியுமா?.. டிரைவர் டர்னிங்ல நிறுத்தி டீயும் பன்னும் சாப்பிட்டிருக்கான். யார்கிட்டயோ போன்ல பேசியிருக்கான். பெட்ரோல் பங்க்ல அம்பது லிட்டர் டீசல் போட்டிருக்கான். அப்புறம் கெளம்பி படுஸ்பீடா போயிருக்கான்..” — மணியும், சிவப்பு சட்டையும் எதுவும் பேசவில்லை.

ஸ்டேஷனில் ஜீப் நுழைந்த போது யாரோ ரெண்டு கிரிமினல் குற்றவாளிகள் இன்ஸ்பெக்டருடைய விசாரணைக்கு காத்திருந்தார்கள். அவர்களுக்காக தமிழத்திலுள்ள எல்லா கட்சியிலுமிருந்தும் உள்ளூர் பிரதிநிதிகள் ஆஜராகி இருந்தனர். கூடவே அவர்களின் சாதிக்கட்சி தலைவர்களும் ஆஜர். இவர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்தது சாதி என்ற பசை..

இன்ஸ்பெக்டர் மணியிடம் ”யோவ்! நீங்க எல்லாரும் எங்கிட்ட சொன்னதை அப்படியே ரைட்டர் கிட்ட சொல்லி ஸ்டேட்மெண்ட்ல கையெழுத்து போட்ருங்க.. எஃப்.ஐ.ஆர். காப்பி குடுப்பாரு வாங்கிட்டு ஆஸ்பிட்டலுக்குக் கெளம்புங்க….”— அவருடைய செல் சிணுங்கியது. எழுந்து தூர விலகினார். இவர்கள் சோர்வாய் நடந்து ரைட்டர் டேபிளருகில் போய் நின்றார்கள். அவர்கள் நடந்ததை சொல்லச் சொல்ல, ரைட்டர் எழுத ஆரம்பித்தார். ஸ்டேட்மெண்ட் எழுதி முடிச்சி எல்லோரும் அதில் கையெழுத்து போடும்போது இன்ஸ்பெக்டர் வந்தார்.

“கேட்டீங்களாய்யா அஞ்சிமணிக்கு .பெங்களூரைத் தாண்டி பங்காருபெட் ஏரியாவில அந்த ப்ளூ லைலேண்ட் லாரி கிராஸ் ஆயிருக்கு. பெங்களூருக்குள்ள நுழைஞ்சிட்டாலே ரொம்ப கஷ்டம். ஆக்ஸிடெண்ட் வண்டின்றதால, அக்கு வேற ஆணி வேறயா பிரிச்சி பார்ட்பார்ட்டா வித்துடுவானுங்க. ட்ரேஸ் பண்ணிக்கிட்டு போனா, கண்டெம் ஆன ஒருவண்டியை காட்டுவானுங்க.சேஸிஸ் நெம்பரைகூட எப்படியோ மாத்திட்றானுங்கய்யா. ஆர்.ஸி.புக்கை வெச்சிக்கிட்டு இனிமே நாக்கைத்தான் வழிக்கணும்..”—அவர்கள் எஃப்.ஐ.ஆர். காப்பியை வாங்கிக் கொண்டு, கிளம்பி சோர்வுடன் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார்கள். டிரைவரும், லாரியும், அகப்படுவது கஷ்டம்னு தெரிஞ்சவுடன், இருந்தவர்களின் கோபம் சடாரென்று சிவப்பு சட்டைக்காரர் மேல்தான் திரும்பியிருந்தது. உள்ளுக்குள்ளே குமுறிக்கிட்டிருந்த மணி கோபத்துடன்.

“வாத்தியார! அந்த டிரைவர் உனக்கு சொந்தமா?. அப்பிடி சப்போர்ட் பண்ணியே?”.—மற்றவர்களும் பாய்ந்தார்கள்.

“ என்ன மணி நாமதானே செஞ்சோம்?. நீயே இப்படி பிரிச்சி பேசறியே?.. நான் நல்லதுக்குத்தானப்பா சொன்னேன்.”—அவர் பரிதாபமாகக் கேட்டார்.

”யார் நல்லதுக்கு?. இரு…இரு…உனுக்கு இருக்குதுடீ கச்சேரி…”—ஒருத்தன் அங்கியே கறுவினான். அதற்குள் இன்னொருத்தன் அந்த இடத்திலேயே அவரை இழுத்து கீழேதள்ளிவிட்டான்.மணி குறுக்கிட்டு அடிக்குரலில் சொன்னான்.

“ டேய்! டேய்! கம்னு இருங்கடா. இப்ப எதுவும் வெச்சிக்காதீங்க.. சவத்த எடுத்தாவட்டும்.”— சிவப்பு சட்டைக்காரருக்கு. வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. இன்னிக்கு என்னவோ நடக்கப் போவுது.. இந்த முரட்டு கும்பல் நம்மளை என்ன செய்யப் போவுதோ? நாம எதுக்காக இந்த விவகாரத்தில தலையிட்டோம்?. என்று.நடுங்கினார். அப்போது கதிரேசன்தான் வேகமாக ஓடி வந்து விஷயத்தைச் சொன்னான். அப்புறம் எல்லோருமாய் ஓடிப்போய் பார்த்தார்கள். பார்த்ததும் சிவப்பு சட்டைக்காரரும், மணியும் உணர்ச்சி வசப்பட்டார்கள். சண்டை மும்முரத்தில் யாரும் அதை கவனிக்கவில்லை. அந்த ப்ளூ லைலேண்ட் லாரி TN—18—8322 ஸ்டேஷன் எதிரில் நின்றுக் கொண்டிருந்தது. ஆஹா! எல்லாரும் ஓடிப்போய் ஸ்டேஷன் வராண்டாவில் நின்று எட்டிப் பார்த்தார்கள்.. இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருக்க, எதிரில் அந்த டிரைவர் குனிந்து அடக்கவொடுக்கமாய் நின்றிருந்தான்..

“டேய்! ரூட் தெரியாம தப்பா புதூர் கூட்ரோட்ல லெஃப்ட்ல திரும்பிட்ட சரி, அங்க கர்நாடகா பார்டர் கிட்ட போயி பேக் டயர் பங்க்சர் ஆயிடுச்சின்னு சொல்ற, சரி நம்பறேன். கர்நாடகா பார்டர் கிட்டபோனவன் அப்படியே எஸ்கேப் ஆவறதை விட்டுட்டு, இப்படி திரும்பி வந்து மாட்டுவானாடா?. லூசாடா நீ?.” —ஒரு நிமிஷம் நிசப்தமாக இருந்தது. டிரைவருக்கு கழுத்து நரம்புகள் புடைத்துக் கொள்ள அழுவான் போல நின்றிருந்தான்.

“ இந்நேரம் பொணமா பூட்டிருப்பேன் சார். இத்தினிக்கும் செத்தது யாரு?. அந்தாளுடைய அப்பன் சார். டேய்! எங்காளுங்க உன்னை அடிச்சே கொன்னுடுவாங்க, ஓடிப்பூட்றா, ஸ்டேஷன்ல போயி சரண்டர் ஆயிடுன்னு, என்னையும் நம்பிஅனுப்பி வெச்சாரே ஒரு மன்சன், யாரு சார் செய்வான்? அதெல்லாம் தெய்வப் பொறப்பு சார்..அவங்களை போய் ஏமாத்துனா அப்புறம் எனுக்கு கால் வயிறு கஞ்சி கூடஆப்டாது சார். என் உசுர குடுத்த சாமிங்க சார் அவங்க. ”—- உணர்ச்சியில் படபடவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டான். வெளியில் நின்றிருந்த எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆயிட்டது. சிவப்பு சட்டைக்காரரும், மணியும் நெகிழ்ந்துபோய் நின்றார்கள். இன்ஸ்பெக்டர் திரும்பி ரைட்டரைப் பார்த்து சிரித்தார்.

“யோவ்! பெருமாள்சாமி! இவனுங்கள என்னான்றதுய்யா?.. ஆக்ஸிடெண்ட் பண்ணிப்புட்டு ஆப்டுகிட்ட டிரைவரை எவன்னா விடுவானாய்யா?. அந்த குடாக்குங்க ஆளையும், வண்டியையுமே விட்டுப்புட்டானுங்க. இத்தினிக்கும் செத்தவனோட புள்ளக்காரன்தான் அனுப்பி வெச்சிருக்கான்… அவந்தான் அப்படீன்னா, இவன்…? கர்நாடகா பார்டர் கிட்ட போனவன் அப்படியே எஸ்கேப் ஆவானா?, இல்லே திரும்பிவந்து சரண்டர் ஆவானா?. இன்னாய்யா நடக்குது இங்க?. நாட்டில எல்லாரும் சத்திய கீர்த்திங்களா மாறிட்டாங்களா என்ன?.”—-பெருமாள்சாமி வைஷ்ணவ பக்தர் என்றது அவர் நெற்றியிலிருந்த ஒற்றையான திரிசூரணப் பட்டை.. திரும்பி பவ்வியமாய் குனிந்தார்.

“ஐயா! தப்பா எடுத்துக்காதீங்க, நம்ம டிபார்ட்மெண்ட்ல எவ்வளவு பெரிய அதிகாரியா இருந்தாலும், எப்பவும் நம்மளுது எல்லாம் திருட்டுப் பசங்க சவகாசம்(சகவாசம்)தானே?. அதான் இதெல்லாம் நமக்கு புதுசா தெரியுது. ஒருத்தன் எவ்வளவு பெரிய பொறுக்கி, கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கியா இருந்தாலும், நாம அவனுக்கு பெருசா ஒரு நல்லதை செஞ்சிட்டா, அவன் திருப்பி நமக்கு நல்லதைத்தான் செய்வான்ய்யா. கெட்டதை செய்யமாட்டான்ய்யா.. அதுலேயும் அவங்க இவன் உயிரையே காப்பாத்தி இருக்காங்க.:”—-. இன்ஸ்பெக்டர் ஒரு நொடி கூர்மையாக அவரைப் பார்த்துவிட்டு, அமைதியாகி விட்டார்.

– கிழக்குவாசல் உதயம் (நவம்பர் 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *