நெகட்டிவ்வும், பாசிட்டிவ்வும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,371 
 
 

அப்போது தான் துர்காவை பெண் பார்த்து விட்டு ஆனந்த், அவன் அம்மா, அப்பா வந்திருந்தனர்.

ஆனந்துக்கு துர்காவின் ஞாபகமாகவே இருந்தது. லேசில் மறந்து போய் விடக்கூடிய அழகல்ல துர்காவின் அழகு. சிவப்பு நிறம், கரிய கூந்தல், நீண்ட கண்கள், எள் பூ போன்ற நாசி. எல்லாவற்றையும் விட, இருக்கிறதோ இல்லையோ என்று நினைக்கும் படியான இடை. வயதுக்கும், பருவத்துக்கும் ஏற்ற செழிப்பான உடல்.

நெகட்டிவ்வும், பாசிட்டிவ்வும்

எம்.பி.ஏ., படித்து, வேலை தேடிக் கொண்டிருந்தாள் துர்கா. பெரிய படிப்பு படித்திருக்கிறோம் என்றோ, பெரிய வேலைக்கு போகப் போகிறோம் என்றோ, நிறைய சம்பாதிக்கப் போகிறோம் என்ற எண்ணமோ சிறிதுமில்லாமல், அவள் மிகவும் சாதாரணமாகவே இருந்தது மிகவும் மனதுக்குப் பிடித்து இருந்தது.

அவள் குரல், இனிமையாக இருந்தது. சிரிக்கும் போது பற்கள் முத்துக்களை தேர்ந்தெடுத்து, முல்லைச்சரம் கோர்த்தது போல இருந்ததென்றால், சிரிக்கும் போது அவள் இடது கன்னத்தில் குழி விழுந்தது, ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது.

அவள் முக அழகை அதிகரிப்பது போல், தாமரை இதழ்கள் போன்ற காது மடலில் குடை ஜிமிக்கி அதிக நீளமில்லாமலும், அதிக குட்டையாக இல்லாமலும், அப்படி இப்படி ஆடிக் கொண்டிருந்தது, பொன் குடத்துக்கு பொட்டிட்டது போலிருந்தது.

பெரியவர்கள் எதிரில், துர்கா இரு கால்களையும் பின்புறமாக மடக்கி உட்கார்ந்திருந்தது அவள் மீது ஒரு தனி மதிப்பையே உண்டாக்கியது.

எல்லாரையும் அவள் குனிந்து நமஸ்காரம் செய்த போது ஆனந்த், அவள் தேக காந்தியில் கிறங்கிப் போனான். நீண்ட பின்னல், நுனியில் சிவப்பு ரிப்பன் வைத்து முடிந்தது, பெரிய சாட்டையைப் போல சைடில் விழுந்த போது, அதை துர்கா லாவகமாக எடுத்து பின்னால் விட்டு, கொஞ்சம் தலையை சிலுப்பிக் கொண்டது, ஆனந்தை மனதுக்குள்ளேயே, “எனக்கு உன்னை ரொம்ப பிடித்துவிட்டது துர்கா… என் கல்யாணம் உன்னுடன் தான்…’ என்று சொல்ல வைத்தது.

“எங்க துர்கா தான், கேசரி செஞ்சா…’ என்று அவள் அம்மா, நீர் தெளித்து துடைத்த வாழை இலையில், மஞ்சள் நிறத்தில் முந்திரி, திராட்சை நெய்யில் வறுத்துப் போட்ட கேசரியை பரிமாறிய போது, “நீயே திகட்டாத, இனிப்பான கேசரி தான்…’ என்று, துர்காவைப் பார்த்து கண்களாலேயே பேசினான் ஆனந்த்.
அப்படி ஒரு அழகான, படித்த, சமைக்க, எல்லாம் தெரிந்த துர்காவை பெண் பார்த்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய பின் —

“”மாமி… மாமி…” என்று யாருடைய குரலோ கேட்டது.

யாரென்று பார்த்தான் ஆனந்த். நான்காவது வீட்டு நாராயணி.

“”அம்மா சமையல் கட்டிலே இருக்கா…” என்றான் ஆனந்த்.

நாராயணி உள்ளே போனாள்.

ஆனந்த், அவன் அம்மா, அப்பா எல்லாரும் போய், துர்காவை பெண் பார்த்து விட்டு, வரப் போகிற சமாச்சாரம் அவளுக்கு தெரியும். அதனால் தான், விசாரித்து விட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறாள்.

அவளிடம் அம்மா என்ன சொல்லப் போகிறாள்?

துர்கா அழகாக இருக்கிறாள், படித்திருக்கிறாள், வேலைக்குப் போகப் போகிறாள், சம்பாதிக்கப் போகிறாள், சமைக்கத் தெரிந்திருக்கிறது, பாடத் தெரிந்திருக்கிறது… மொத்தத்தில், எல்லாம் தெரிந்திருக்கிறது; ஆனால், ஒன்று மட்டும் தெரியவில்லை. அதைத்தான் நாராயணியிடம் சொல்லப் போகிறாள் அம்மா.

“”வா நாராயணி,” என்றபடி, சமையற் கட்டிலிருந்து ஹாலுக்கு வந்தாள் ஆனந்தின் அம்மா சாவித்திரி.

“”உட்காரு, நாராயணி!”

உட்கார்ந்த நாராயணி, “”ஆனந்துக்கு பெண் பார்க்க போகப் போறதாக சொல்லிண்டிருந்தேளே மாமி… பார்த்துட்டு வந்தாச்சா?” என்று கேட்டாள்.
“”பார்த்துட்டு வந்தாச்சு நாராயணி!” என்றாள் சாவித்திரி.

“”பொண்ணு பிடிச்சிருக்கா மாமி?”

அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற கேள்வியுடன், காதை கூர்மையாக்கிக் கொண்டான் ஆனந்த்.

“”பிடிச்சிருக்கு நாராயணி!” என்றாள் சாவித்திரி.

“”எல்லாருக்கும் பிடிச்சிருக்கா மாமி?”

“”எனக்கு, மாமாவுக்கு, ஆனந்துக்கு எல்லாருக்கும் பிடிச்சிருக்கு!” என்று சந்தோஷமாக சொன்னாள் சாவித்திரி.

ஆனந்தால், அதை நம்பவே முடியவில்லை. “பெண் பிடிக்கவில்லை…’ என்று சொல்வாள் என்றல்லவா அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி பேசி இருந்தாளே துர்கா.

“”ரொம்ப சந்தோஷம் மாமி… பெண் படிச்சிருக்காளா… வேலைக்குப் போறாளா இல்லை போகப் போறாளா?”

எல்லாவற்றையும் சொன்னாள் சாவித்திரி.

“”ரொம்ப சந்தோஷம் மாமி… உங்க எல்லாருக்கும் பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்றேள்… அதை, அவள் அப்பா, அம்மாக்கிட்டே சொல்லிட்டேளா மாமி?”

“”நாளைக்குப் போயி நாங்களே சொல்லிட்டு வரலாம்ன்னு இருக்கோம் நாராயணி. எவ்வளவு சீக்கிரம் முகூர்த்தம் வைக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முகூர்த்தம் வைச்சிடுங்கோ… சீர் செனத்தி எல்லாம் உங்கள் சக்தியை விட குறைச்சே செஞ்சாப் போதும்… சாதாரண கல்யாண மண்டபம் போதும்… ரிசப்ஷன் வேண்டாம் அப்படினெல்லாம் வேற சொல்லப் போறோம் நாராயணி!” என்று, தன் அம்மா சொல்வதை எல்லாம் கேட்டு, ஆனந்த் இறக்கை கட்டி பறந்தான் ஆனந்தத்தில்.

நாராயணி போய் விட்டாள்.

துர்காவை பெண் பார்க்கச் சென்ற போது, அவள் பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது ஆனந்துக்கு.

பெண் பார்க்கும் படலம் முடிந்ததும், டிபனாயிற்று. எல்லாரும் புறப்பட்டனர்.
“நாளைக்கு எங்கள் முடிவை சொல்றோம்…’ என்றாள் சாவித்திரி.

அப்போது துர்கா எழுந்து, “ஒரு நிமிஷம்… நான் கொஞ்சம் பேசணும்!’ என்றாள்.
“என்கிட்டேயா… பிள்ளைகிட்டேயா?’ என்றாள் சாவித்திரி.

“எல்லார்க்கிட்டேயும் தான்…’ என்றாள் துர்கா.

“பேசலாமே!’ என்றார் ஆனந்தின் அப்பா கணேசன்.

திக்கென்றது துர்காவின் அப்பாவுக்கும், அம்மாவுக்கும்: என்ன பேசப் போகிறாள் துர்கா?

அவளையே எல்லாரும் பார்த்தனர்.

சாவித்திரியை ஒருமுறை பார்த்துவிட்டு, பிள்ளை ஆனந்திடம் திரும்பிய துர்கா, “நான் உங்கள் அப்பா, அம்மாவை, “அப்பா, அம்மா’ன்னு கூப்பிட மாட்டேன். அந்த உரிமை என் அப்பா, அம்மாவுக்கு மட்டும் தான்… “மாமா, மாமி’ன்னு தான் கூப்பிடுவேன்!’ என்றாள்.

கணேசனும், சாவித்திரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். துர்காவை பார்த்து உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த ஆனந்த், அவள் பேச்சைக் கேட்டு, தன் அப்பா, அம்மாவின் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ என்று அதிர்ச்சியுற்றான்.

“நான் எப்போ தனிக்குடித்தனம் போகணும்ன்னு நினைக்கிறேனோ அப்போ போயிடுவேன்… யாரும் தடுக்கக் கூடாது!’ என்றாள் துர்கா.

“வீட்டினுள் நுழைவதற்கு முன்பே தனிக்குடித்தனம் போறதை பத்தி பேசறாளே இவள்…’ என்பது போல இருந்தது எல்லாருடைய முகபாவமும்.

“என் பையனுக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும்… இதை செய்யாதே, அதை செய்யாதேன்னு எனக்கு சொல்லக் கூடாது… கல்யாணமானதும் எனக்கு அவர் முழுக்க முழுக்க சொந்தமாயிடறார்…’ என்றாள் துர்கா.

“பிள்ளையை பிரிக்க பார்க்கிறீயே இப்பவே…’ என்று நினைப்பவள் போல, கணவரை பார்த்தாள் சாவித்திரி.

“மருமகள் தான் வந்தாச்சேன்னு, “ராமா, கிருஷ்ணா’ன்னு உட்கார்ந்துடக் கூடாது… வீட்டு வேலைகளை மாமியாரும் பங்கு போட்டுண்டு செய்யணும்!’ என்றாள் துர்கா.

“அவளுடைய ஒவ்வொரு பேச்சும் கல்யாணமாகறதுக்கு முன்னமேயே இப்படி இருக்கே, கல்யாணமாயிட்டா இன்னும் எப்படியெல்லாம் இருக்குமோ?’ என்று எண்ண வைத்தது போல, எல்லாரும் மவுனமாக இருந்தனர்.

“போதும் நீ பேசினது!’ என்பது போல கண் ஜாடை காட்டினாள் துர்காவின் அம்மா பார்வதி.

“உன் கல்யாணம் நடந்த மாதிரி தான் போ…’ என்பது போல அவளைப் பார்த்தார் அவள் அப்பா சாம்பசிவன்.

“அவ்வளவு தான்!’ என்றாள் துர்கா, எல்லாரையும் பார்த்து.
சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது ஆனந்துக்கு. சற்று முன் அவன் அடைந்த சந்தோஷமெல்லாம் போன இடம் தெரியவில்லை. இவ்வளவு பேச்சு துர்கா பேசிய பிறகும், அவன் அம்மா அவளை, தன் மருமகளாக ஏற்றுக் கொள்வாளா?

“”அம்மா… நாராயணி மாமிகிட்டே துர்காவை உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னியேம்மா?” என்று கேட்டான் ஆனந்த்.

“”ஆமாம் ஆனந்த்!”

“”அது நிஜமாம்மா?”

“”ஆமாண்டா ஆனந்த்… நூறு சதம் நிஜம்!” என்றாள் சாவித்திரி.

“”உன்னை அம்மான்னு கூப்பிட மாட்டேன்னு துர்கா சொன்னாம்மா?”

“”சொன்னா… இல்லேன்னு சொல்லலே… அவள் சொன்னது சரி தான் ஆனந்த்… எவ்வளவு தான், நானும், உன் அப்பாவும் அவள்கிட்டே அன்பும், பாசமும் காட்டினாலும், அப்பா, அம்மா ஆக முடியாதுடா ஆனந்த்… அதுக்கு உரிமையானவா அவளை பெத்து, வளர்த்து, ஆளாக்கின அவள் அப்பாவும், அம்மாவும் தான். அவங்களுக்கு ஈடு இணை யாரும் ஆக முடியாது…” என்றாள் சாவித்திரி.

“”எப்போ வேணும்னாலும், என்னை அழைச்சுண்டு தனிக்குடித்தனம் போவேன்னு சொன்னாம்மா!”

“”தனிக்குடித்தனம் போகணும்ன்னு ஆசைப்படாத எந்த பெண்ணும் எப்போதும் கிடையாதுடா ஆனந்த்… நானும் அப்படி ஆசைப்பட்டு, உன் அப்பாவை அழைச்சுண்டு வந்தவ தான்… அதுலே ஒரு சொர்க்கம் இருக்கும்ன்னு ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறா… துர்கா அப்படி சொன்னதுக்கு நான் அவள் மேலே கோபப்படவோ, வருத்தப்படவோ செய்யலேடா ஆனந்த்… இப்பவே, அதாவது கல்யாணத்துக்கு முன்னமே தனிக்குடித்தனம் வையுங்கோன்னு சொல்லாமே, தான் ஆசைப்படறப்போ போறேன்னு சொன்னாளே… அதுவரையிலும் ரொம்ப சந்தோஷம்டா எனக்கு,” என்றாள்.

“”அவள் என்னை கவனிச்சுப்பாளாம்… நீ தலையிடக் கூடாதாம்!” என்றான்.

“”புருஷனை தான் தான் கவனிக்கணும், அவனுக்கு வேண்டியதை, தான் தான் செய்யணும்ன்னு துர்கா நினைக்கறது தப்பில்லேடா ஆனந்த்… கல்யாணமான ஒவ்வொரு பெண்ணும், இப்படி எல்லாம் கண்டிப்பா நெனைக்கணும்… அது அவளுக்கும், அவள் புருஷனுக்கும் இடையே அதிக நெருக்கத்தையும், அன்பையும் அதிகரிக்கும்டா ஆனந்த்!” என்றாள் சாவித்திரி.

“”வீட்டு வேலைகளில் பாதி, நீயும் செய்யணும்மாம்மா!”

“”செய்யணும்டா ஆனந்த்… செய்யறதிலே தப்பே இல்லை… மருமகள் வந்துட்டா அவள் வீட்டு வேலை எல்லாம் செய்யட்டும்ன்னு ஒரு மாமியார் கையை கட்டிண்டு உட்கார்ந்தா, அவள் சோம்பேறியாகி விடுவா… இல்லாத வியாதி எல்லாம் அவளுக்கு வந்து சேரும்… நான் நல்லா ஆரோக்கியமா இருக்கணும் என்ற எண்ணத்திலே தான், அவள் அப்படி சொன்னாள்ன்னு அதை எடுத்துக்கறேன் ஆன்ந்த்!” என்றாள் சாவித்திரி.

“”அம்மா நெகடிவ்களை எல்லாம் பாசிடிவ்வா எடுத்துக்கற உன் வயத்திலே பிறந்ததை நெனைச்சு, நான் ரொம்பவும் சந்தோஷப்படறேன்ம்மா!” என்றான் ஆனந்த் குரல் தழுதழுக்க.

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *