அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள் துடைக்கப்பட்ட பளிச்சிடலின் அடியில் விருப்பமும் ஆர்வமும் புடைத்தெழும்பின. குழந்தைகள் அவனை மேலும் வற்புறுத்தலாயினர். அங்கே விருந்தாளியாக வந்திருந்தான் அவன். ஓரளவுக்கு நெருங்கிய உறவுதான். அடிக்கடி வரவில்லை என்பதே இயல்பாக இருக்க விடவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகள், எட்டிலிருந்து பன்னிரண்டு வயதிற்குள்ளான மூவர் – சிறுமி, இரண்டு சிறுவர்கள் – அவன் மடிமீது புரளவும் விளையாட்டின் நடுவராக அவனைப் பாவிக்கவுமான அளவிற்குத் தயாராகிவிட்டிருந்தனர். அதன் உச்சபட்சமாகத்தான் இந்த அழைப்பு. மனதில் மெலிந்த குறுகுறுப்பு உணர்வைத் தோற்றுவிப்பதாக, மூழ்கிவிட்ட நினைவுப் பொருள் ஒன்றைப் பெற்றுவிட்டதாக அவன் கிளர்ச்சி அடைந்தான். உடனே எழுந்து சென்றுவிடவும் முடியவில்லை. தயக்கத்தின் மெலிந்த நூல் முனைகள் அவன் கால்களை இறுகக் கட்டியிருந்தன. பாதம் வியர்த்து ஊன்றியிருந்த தரை பிசுபிசுத்தது. அங்கும் இங்குமாகக் கண்களை ஆசை நிரப்பி அலைபாய விட்டான். குரல் எழும்பாமல் உள்ளடைத்தது. குழந்தைகள் கைகளை இடுக்கிக் கொண்டு அவன் தாடையில் கைவைத்துக் கெஞ்சவும், கைகளை உரிமையுடன் பற்றி இழுக்கவும் தொடங்கினர். அவன் அசைவில் கட்டில் கிரீச்சிட்டுக் கத்தியது. ஏதாவது ஒரு குரல் ’அவரத் தொந்தரவு பண்ணாதீங்கடா’ என்று உயர்ந்து இந்தச் சூழலைச் சிதைத்துவிடுமோ என அஞ்சினான். அதற்குள்ளாக அவர்களோடு எழுந்துவிடுவது நல்லது என்று பட்டது. தன் ஆர்வத்தை மனதிற்குள் சுருட்டிக்கொண்டு தயவு செய்யும் பாவனையில் ‘துண்டு இல்லையே’ என்றான். அதுதான் இப்போது பெரிய பிரச்சினைப் போல. அவர்கள் வெகு உற்சாகமாகக் கூவிக் கொண்டு எங்கெங்கோ ஓடி ஆளுக்கொரு துண்டை இழுத்து வந்தனர். முகம் முழுக்கப் பரவிய வெட்கச் சிரிப்போடு அவனும் எழுந்து கொண்டான்.
பசுமை மணம் பரவிய காடுகளுக்கிடையே நிலத்தின் பிளந்த வாய்போல சட்டென்று கிணறு தோன்றியது. சீரான சுவர்களையோ சமமான வடிவத்தையோ அது பெற்றிருக்கவில்லை. அங்கங்கே கதைகள் பிதுங்கி குழிப் பொந்துப் புண்கள் நிறைந்து ‘ஆ’வென இருந்தது. படிகளெனத் தோன்றும்படி சுவடுகள் பதிந்த தடமொன்றும் தெரிந்தது. மோட்டாரின் குழாய் பாதியளவுக்கு மூழ்கி அசைவற்றிருந்தது. தென்னங்கீற்றுகளில் நுழைந்த கதிரொளி கிணற்றைத் துளைத்து ஆழ்மண்ணைக் காட்டியது. குதிப்பதற்குக் கால்களைத் துறுதுறுக்க வைக்கும் தோற்றமுடைய கிணறுதான் இது. குழந்தைகள் யார் முதலில் குதிப்பது என்று தர்க்கித்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. குதித்தலில் தொடக்கம்தான் முக்கியம். ஒரு முறை நீர் சிதறிக் கிணறலையும் சத்தம் கேட்டுவிட்டால் போதும். கிணற்றின் உறைந்த மௌனத்தை முதலில் உடைக்க வேண்டும். அதன் பின் உற்சாக வெறி எல்லோரையும் தொற்றிக் கொள்ளும். அதைத் தொடங்குவதில்தான் அத்தனை சிரமம். முதலில் குதிப்பவரைக் காவு கொள்ளவெனக் கிணறு காத்திருப்பதான அச்சம். அவர்களின் கவனம் குவிந்திருந்த போது, குலையிலிருந்து கழன்று விழும் நெற்றுத் தேங்காயென அவன் குதித்திருந்தான். உடனே கிணற்றின் மூலைகள் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களும் குதித்தனர். உறைந்திருந்த கிணறு இப்போது பலவித ஓசைகளில் பேசத் தொடங்கிற்று. இடைவிடாமல் நீர் அலைந்து சுவர்களில் மோதும் ஒலிகள். குழந்தைகள் அங்கங்கே பற்றி ஏறிக் குதிப்பதற்கான வழிகளை வைத்திருந்தன. குதிப்பதன் மூலம் நீரைத் துன்புறுத்துவதே அவர்களின் லட்சியம் போல தொடர்ந்து குதிக்கும் சத்தம்.
கிணற்றை அவன் வேறுமாதிரி உணர்ந்தான். பூங்குழந்தையை அள்ளி அணைக்கும் மென்மையுடன் நீரைக் கைகளால் வருடிக்கொண்டு நீந்தினான். கிணற்றின் ஒழுங்கற்ற உருவம் பெரும் சந்தோசத்தைக் கொடுத்திருந்தது. வெயில் வேளையில் தண்ணீரின் ஜில்லிப்பு உடலுக்கு ஒத்தடம். அடிக்கடி தலையை முழுகுவதிலும் மல்லாந்து நீச்சலடிப்பதிலும் அவன் விருப்பமுற்றான். சிதறி விழுந்திருந்த வெயில் ஆழ்பள்ளத்துக்குள் கிடக்கும் அவனைத் தேடி வந்து முகத்திலடித்தது. அற்புதத்தைத் தேக்கி வைத்திருக்கிறது கிணறு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு வழங்குகிறது. கிணற்றின் மீது அன்பு வெறி முகிழ்த்தது. அதன் ஒவ்வொரு அணுவையும் தொட்டுத் தழுவ ஆசையுற்றான். அலைவில் தூசிக் கோல்கள் ஒதுங்கிக் கிடக்கும் அதன் மூலைகள் ஒவ்வொன்றையும் நோக்கி வெகுநேரம் பயணம் செய்தான். ஒவ்வொரு மூலையும் நின்று ஓய்வெடுப்பதற்கான சிறு இடத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது. குறைந்தபட்சம் பற்றி நிற்பதற்கான பிடிமானங்களையேனும் கொண்டிருந்தது. கருணை மிக்கது கிணறு. மூலைகளில் பனி நீரின் சுகம். பின் ஆழத்தை நோக்கிச் சென்று கிணற்றின் அடி மேனியை அறிய ஆவல் கொண்டான். நடுக்கிணற்றில் மூழ்கிய சில விநாடிகளில் வெகுதூரம் உள்நோக்கி அமிழ்ந்துவிட்டதாக உணர்ந்தான். கிணறு இன்னும் போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம். ஒன்றும் புரிபடாது மூச்சுத் திணறியது. சட்டெனக் கைகளை அழுத்தி மேல்நோக்கி வந்தான். கிணற்றுள் எத்தனையோ ரகசியங்கள். எல்லாவற்றையும் எப்போதோ வரும் ஒருவனுக்குச் சில நிமிடங்களில் அவிழ்த்துப் பரப்பிவிடுமா? என்ன மாதிரியான முட்டாள்தனத்தில் ஈடுபட்டோம் என்று தன்னைக் கடிந்துகொண்டான். படியோரப் பலகைக்கல்லில் உட்கார்ந்து ஆசுவாசமானான். தண்ணீரின் அசைவில் சுவரைப் பற்றிக் கொள்ளும் தவளையையும், மேலிருந்து நீருக்குள் தாவும் தவளையையும் புதிதான வியப்போடு கண்டான். சற்றுநேரம் வெறும் பார்வையாளன் மட்டுமேதான் என்று தோன்றியது.
குழந்தைகளோ சற்றும் களைக்கவில்லை. சரியும் மண்ணைப் பொருட்படுத்தாமல், சுவர்களைப் பற்றியேறி மாறி மாறிக் குதித்துக் கொண்டேயிருந்தனர். தவளைகளுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை. கிழவனின் வாயிலிருந்து எழும் புன்சிரிப்பைப் போல, மெல்ல நகைத்துக்கொண்டு அவர்களைக் கிணறு பார்த்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. குஞ்சம் கலைந்த ரிப்பன் காற்றிலாட அந்தச் சிறுமி எட்டிக் குதிக்கையில், வெயில் பட்ட மினுக்கத்தில் இறங்கி வரும் குட்டி தேவதையைத் தணிவாகக் கிணறு ஏந்திக் கொள்வதாய் இருந்தது. மேலேறுவதும் குதிப்பதும் தெரியாமல் பையன்கள் அத்தனை வேகம். அவர்களின் பொருளற்ற கூச்சல்களைப் பெருமிதத்தோடு கிணறு வாங்கிக் கொண்டது. துணையற்ற தனிமையில் வெகுகாலமாக லயித்துச் சலிப்புற்றுப் போய்விட்ட மனோபாவத்தோடு இவற்றையெல்லாம் கிணறு ரசித்துக்கொண்டிருக்கிறது போலும். அவன் உடம்பைத் தழுவிய ரகசியக் காற்று குளிரைப் பரப்பியது. மேனியிலிருந்து உருண்டோடிய நீர்த்திவலைகள் அனைத்தும் கிணற்றில் கலந்துவிட்டன. உடல் காய்ந்து போனது. நடுக்கம் பற்றியது. நீருக்குள் இருக்கையில் தெரியாத குளிர், சற்று மேலேறியதும் சட்டெனப் பிடித்துக்கொள்கிறது. உண்மையில், இது கிணற்றின் தந்திரம். தன்னுள் இறங்கச் சொல்லும் அதன் அழைப்பு. ஒரு முறை வந்துவிட்டவனை மீண்டும் மீண்டும் தூண்டுவதற்கான மந்திரத்தைக் கிணறு தூவிவிடுகிறது. அலையினூடே பாய்ந்தான். இப்போது வெதுவெதுப்பான நீர் அவன் உடலைத் தடவி அரவணைத்தது. அவனையறியாமலே கிணற்றை வட்டமாகப் பாவித்து வலம் வந்தான். அவன் காலடிகள் உடனுக்குடன் மறைந்தாலும் சுளிவுகள் இருந்தன. மறுபடியும் வலம் வரத் தூண்டிற்று. அதற்குள் அந்தச் சிறுமி அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“சித்தப்பா… கெணத்தச் சுத்தி நிக்காம எத்தன ரவுண்டு வருவீங்க?”
அவனால் எண்ணிக்கை சொல்ல முடியவில்லை. கிணற்றை அளவிட்டான். அதன் கோணமற்ற பரப்பு எந்தத் தீர்மானத்தையும் கொடுக்கவில்லை. பதிலின்றி மெலிதாக மழுப்பிச் சிரித்தான். அவள் விடவில்லை.
“பத்து ரவுண்டு வர முடியுமா?”
சிறுவன் அதற்குப் பதில் சொன்னான்.
”சித்தப்பாவால ரண்டு ரவுண்டே வரமுடியாது.”
அவனைக் கிளப்புவதற்காக அந்தச் சிறுவன் சொல்கிறான் என்பதை உணர முடிந்தாலும், இதையும்தான் பார்ப்போமே என்ற சவால் மனம் வந்திருந்தது. படியிலிருந்து தொடங்கி ஒவ்வொரு மூலையாக தொட்டு மீண்டும் படிக்கே வருவது ஒரு சுற்று. முதல் வட்டம் முடிந்து அடுத்த வட்டத்தின் பாதியில் அவன் மூச்சுறுப்புகள் பலகீனமடைந்தன. வாய் வழியாக மூச்சு வாங்கினான். கைகள் சோர்ந்து கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை. மறுபடியும் கிணறு அவனைத் தோல்வியுறச் செய்துவிட்டது. ஒரு மூலையில் நின்றுகொண்டு உடல்குறுகி மூச்சு வாங்கினான். கிணற்றின் எக்களிப்புத் தானோ என அஞ்சும்படி அவர்களின் ஆரவாரம் காதடைத்தது. அவமானத்தை மிகுவிக்கும் கூச்சல். மேலேறிப் போய்விடவேண்டும் போலிருந்தது. கிணறு யாராலும் ஜெயிக்க இயலாத பிரம்மாண்டம். இதன் முன் தோல்வியை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதனோடு போட்டியிட்டுத் தோற்பதே தைரியம்தான். கர்வத்தோடு பெருமூச்செறிந்தான். படியை நோக்கி நீந்தினான். தேர்வடத்தைப் பிடிக்கும் அடக்கத்தோடு கை துழாவியது. படியோரம் வந்து இறுதி முழுக்குப் போட்டுத் தலையைப் பின்னோக்கி நீர்ச்சீப்பினால் சீவிக்கொண்டான். பின் அறிவித்தான்.
“நான் ஏர்றன். நீங்க குதிக்கறதுன்னா குதிச்சுட்டு வாங்க.” அவன் அறிவிப்பு குழந்தைகளிடம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும். சில நொடிகள் கிணற்று அலை டிமிக்கிடும் ஓசை. சிறுமியின் முகத்தில் துயரத்தின் சாயை முற்றிலுமாகப் படிந்துவிட்டது. பையன்கள் சோர்ந்து போயினர். கிணற்றுச் சுகம் இத்தனை சீக்கிரம் தீர்ந்து போய்விடுவதை அவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவன் ஏறிவிட்டால் அவர்களும் ஏறிவிடவேண்டியதுதான். பெரிய ஆள் யாரும் இல்லாமல் கிணற்றுக்குள் இருக்க அவர்களுக்கு அனுமதியில்லை. கிணறு எத்தனையோ அச்சுறுத்தல்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. அதன் மேற்பொந்துகளில் விஷமேறிய கிழட்டுப் பாம்புகள் அடைகிடக்கலாம். துஷ்டக்கணம் ஒன்றில் அவை தலை நீட்டி வெளிவரலாம். நீருக்குள் மூழ்கிச் செல்பவர்களை மாட்டி இழுக்கும் கொடங்குகள் மறைந்திருக்கலாம். வழுக்கலின் பிடி எந்த நேரத்திலும் இறுகலாம். அந்தச் சூழல்களைப் பெரியவர்கள் சமாளித்து விட முடியும். சிறுவர்கள்? அத்தோடு, சுற்றிலும் உயர்ந்த தென்னைகள் நிற்க, நடுவில் ஆடிச்செல்லும் கிணரு, அமானுஷ்யமான தன்மை வாய்ந்தது. குரல்களின் எதிரொலி எந்தத் திசையிலிருந்தும் வரும். பயமூட்டும் மௌனம் நீரின் கருமைக்குள் நிரந்தரமாகி இருக்கிறது. இவற்றிலிருந்தெல்லாம் பாதுகாக்கும் கவசமான அவன் மேலேறிவிட்டால் அவ்வளவுதான். சிறுமி, அவனை அழைப்பதற்குக் கெஞ்சியதைப் போன்றே மறுபடியும் தொடங்கினாள். இப்போது அவளுடைய கெஞ்சல் அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஏறிப் போய்விடும் முடிவில் தீர்மானமாயிருந்தான். அசட்டையான புன்னகையோடு அடி எடுத்தான். கிழக்கு மூலையில் நின்றிருந்த சிறுமி நீரில் லாவகமாகப் பாய்ந்து அவனருகில் வந்து எங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். நனைந்து படிந்திருந்த சடை ஆட, ’போவ் வேண்டாஞ் சித்தப்பா’ என்று தயவானாள். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அவள் கைகள் முறுக்கிச் சுற்றிய பாம்பெனப் பிடித்திருந்தன. ‘உடு கண்ணு… உடு கண்ணு’ என்றான். இந்தச் சாதாரணமான சொற்களே அவள் பிடிவாதத்தைப் போக்கிவிடுமென நினைத்தான். அவள் விடுவதாயில்லை. வரம் தரும்வரை விடமாட்டேன் என்று இறைஞ்சுவதுபோல அவள் குனிந்திருந்த தோற்றம் காட்டியது. அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. தடுமாற்றத்தோடு மெல்லக் குனிந்து அவள் விரல்களைப் பிரிக்க முயன்றான். மேலும் மேலும் இறுகியதே தவிர நெகிழவில்லை.
“சித்தப்பாவ உட்ராத பிள்ள” என்னும் குரல் எங்கிருந்தோ கேட்டது. அப்போதும்கூட பிள்ளை விளையாட்டின் பிடிவாதம்தானே இது என சாவதானமாகச் சிரித்தான். எதிர்பார்க்காத நொடியில் சிறுமியின் கை அவனை வாரி உள்ளே தள்ளியது. சுவரில் துருத்திக்கொண்டிருக்கும் கல்லொன்று பெயர்ந்து விழுவதைப் போல நீரில் படாரென விழுந்தான். வயிற்றில் நீர்ச்சாட்டை பளீரென வெளுத்து வாங்கியது. உடலெங்கும் அச்சத்தின் மின் துகள்கள் பாய்ந்தன. சுதாரித்து நீந்தி படிக்கு வந்தான். இதுவும் கிணற்றுக்கு எதிரான தோல்விதானோ என்று தோன்றியது. அப்படியொன்றுமில்லை என்று காட்டிக்கொள்பவனாய் ‘ஏங்கண்ணு இப்பிடிப் பண்ணுன’ எனச் சமாதானம் பேசிக்கொண்டு ஏறலானான். இப்போது அவனுக்கு மேல்படியில் – அது படியில்லை துருத்திக்கொண்டிருந்த பையன் அவனைப் பார்த்து கைகளை விரித்து ஆட்டிக் கொண்டு ‘உடமாட்டனே’ என்று கூச்சலிட்டான். ஏறிவிடும் வைராக்கியத்தோடு கால்தூக்க, பையன் குனிந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு புரண்டான். இரண்டு பேரும் ஒருசேரக் கிணற்றுக்குள் விழுந்தனர். பையனை நீருக்குள் இழுத்துக் கால் உந்தி ஓர் அழுத்து அழுத்திவிட்டுப் படியை நோக்கி வேகமாக நீந்தினான். பையன் அடிமண்ணைத் தொட்டுத்தான் திரும்ப முடியும். அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள குறி வைத்து வந்த சிறுமியைத் தள்ளிவிட்டுப் பாய்ந்து படியேறினான். ‘ஏய்’ என்று உற்சாகக் கத்தலோடு இன்னொரு பையன் அவன் மீது தாவினான். சற்றும் அவன் எதிர்பார்க்காத கணம். மீண்டும் நீருக்குள் விழுந்திருந்தான். நீரைத் துளைத்து வந்த ஒளி கண்களைக் கூசியது. திவலைகளினூடே அவன் பார்க்க முயன்றான். புரியாத காட்சிகளே எங்கும் நிறைந்தன. பரபரப்பானான். ஏறி ஓடி விடுதலை தவிரத் தப்பிக்க வழியேதுமில்லை. ஆனால், படிக்கு மேலே இன்னொரு பையன். அவர்களுக்குள் ஓர் ஒழுங்கு வந்திருந்தது. நீருக்குள் அவனோடு போராட ஒருவர், படியேற விடாமல் காலைக் கவ்வ ஒருவர். கொஞ்சம் உயரத்தில் நின்றுகொண்டு மேலே தாவிக் குதிக்க ஒருவர். மாற்றி மாற்றி அவர்கள் அந்தந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். அவனைச் சுற்றி உடைக்க இயலாத கனத்த விலங்கென அவர்கள் மாறியிருந்தனர்.
இந்த விளையாட்டு எத்தனை நேரம் தொடருவது? இது என்ன விளையாட்டு? விளையாட்டெனக் கிணற்றின் தந்திரம். விருந்தாளியாக அவன் யார் வீட்டுக்கும் வரவில்லை. கிணறு வரவழைத்திருக்கிறது. நீச்சலுக்கு அவனை யாரும் அழைக்கவில்லை. தன் தூதுவர்களை உருவம் கொடுத்துக் கிணறு அனுப்பியிருக்கிறது. அவர்கள் முகங்களை அவனுக்குத் தெரியாது. மாயத்தின் பிறப்பிடம் கிணறு, மரணக்குழி. காவு கேட்கத் தொடங்கிவிட்டது. கிணற்றின் பகாசுர வாய்க்குள் வசமாக வந்து சிக்கிக்கொண்டிருக்கிறான். குழந்தைகள் என அவன் நினைத்தது எவ்வளவு தவறு. கிணற்றின் ஏவலாளர்களான மூன்று பிசாசுகள். கழுத்தைக் குறிவைத்துப் பாய்கிறது ஒன்று. காலை வாரி விடுகிறது ஒன்று. நீருக்குள் கட்டிப்புரண்டு இழுக்கிறது ஒன்று. அவற்றின் சிரிப்புகள் உயிர் உறிஞ்சும் அழைப்பு. குட்டிப் பிசாசுகள் பசி வெறி கொண்டுவிட்டன. அவன் எவ்விதம் தப்பிப் போவான்?
கிணற்றின் பொந்துகள் மரணம் ஒளிந்திருக்கும் இருட் குகைகளென மாறின. தோல் கருக்கும் அமிலக் கரைசல் தண்ணீர். இவற்றை வெற்றி கொள்ளும் நீச்சல் பலம் அவனிடம் இருக்கிறதா? சுவர்களின் மீது ஏறிக்கொண்டு கழன்ற கண்களோடு வாய் பிளந்து நிற்கின்றன தவளைக் குட்டிகள். அவை எந்த நேரத்திலும் அவனை வீழ்த்திவிடத் தயாராய் இருக்கின்றன. பிசாசுகள் துவண்டு போகையில் அவை பாயக்கூடும். அச்சம் அவன் உடல் முழுக்கப் பரவி நிலைகொண்டது. எதையும் யோச்கிக்கக் கூடவில்லை. ஏறி ஓடிவிடுகிற முன்னமுன்ன, மீண்டும் மீண்டும் முயன்று சரிந்தான். தண்ணீரைக் குடித்துக் குடித்து வயிறு உப்பிப் போய்விட்டது. உடல் முழுவதும் நடுக்கம் வேறோடியிருந்தது. எசகுபிசகாக விழுந்ததில் எங்கெங்கோ கற்களின் சிராய்ப்புகளும் காயங்களும் எரியத் தொடங்கின. அவன் அதனைப் பொருட்படுத்தவில்லை. தப்பிப்பதில் குறியாக இருந்தான். அவற்றின் இலக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிதைத்து ஆள்விழுங்கி விடுவதுதான் போலும். மிரண்ட விழிகளோடு சாவுடன் போராடும் மிருகமாய் மூர்க்கமானான். கைபற்ற வரும் பிசாசுகளை இழுத்து அடித்தான். கால் வைத்துக் கிணற்றின் ஆழம் நோக்கி உந்தினான். ஆனால் அவற்றின் மூர்க்கமும் அதற்கேற்ப அதிகரித்தன.
மரணக்குழி வேறு ஏதேனும் வழிகளைக் கொண்டிருக்கலாம். மூலையை நோக்கித் தாவினான். நிற்க இயலவில்லை. கால்கள் வெடவெடத்தன. மேனியில் வழியும் நீரை முந்தி வியர்வை பெருகியது. அவையோ அவனின் மூலை நகர்வு தங்களுக்குக் கிடைத்த வெற்றியெனக் கும்மாளமிட்டன. துழாவிய விழிகளில் மோட்டார் பம்ப் பட்டது. பற்றுக் கிடைத்த வேகத்தில் கைகள் தாவின. குழாயைப் பிடித்துக் கொண்டு சரசரவென மேலேறத் தொடங்கினான். அது ஒன்றுதான் அங்கிருந்து வெளியேற வைக்கப்பட்டிருக்கும் சூட்சும வழியென ஊகித்தான். வழவழத்த அதன் உடலோடு வெகுவாகப் போராடி ஏறிக் கொண்டிருந்தான். அப்படியும் இப்படியுமாய் அசைந்தாலும் தன் நிலைவிட்டு மாறாமல் கடினமாகவே இருந்தது. விளையாட்டின் உச்சவெறி எங்கும் பற்றிக் கொண்டது. வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் கடைசி நொடிகள் இதுவாகவே இருக்கலாம். அவன் ஏற ஏற கூச்சலிட்டுக் கொண்டே பாகுக் குழம்பென உருவம் ஒன்று அதிவேகத்தில் பம்ப்பில் வழுக்கி வந்து அவன் மீது மோதிற்று. பிடிப்புத் தளர்ந்து நேராக நீருக்குள் போய் விழுந்தான். அவ்வளவுதான். எல்லாம் தீர்மானிக்கப்பட்டு விட்டதுபோல. குழறத் தொடங்கினான். கைகள் அனிச்சையாக நீந்திக் கொண்டிருந்தன. திசை எதுவெனத் தெரியவில்லை. எங்கே பிடிப்பென உணர இயலவில்லை. எதை எதையோ கை பற்றியது. கால்கள் நடுக்கத்தோடு எவற்றின் மீதோ ஏறின. அது கிணற்றின் ஏதோ பக்கச் சுவராக இருக்கலாம். நீட்டிக் கொண்டிருக்கும் கல் விளிம்புகளில் கைகள் பதிகின்றன போலும். சிறிது தூரம் ஏறிவிட்டதான உணர்வு கொண்டான். அது நம்பிக்கை அளித்து ஈர்த்தது. மேலும் மேலும் தாவலானான். அப்போது கிணறு குரலெழுப்பி எதிரொலித்தது. ‘பாம்பு பாம்பு’. துவண்டு கைகளின் பிடி நெகிழ்ந்தது. வாய் பிளந்து கை கால்கள் விரிய மல்லாந்து விழுந்தான் நீருக்குள், தவளை ஒன்றாய்.