கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 12,303 
 
 

”தபால்!” என்று கூவினான் தபால்காரன். கடிதத்தை வாங்கிக் கொண்டாள் கமலா.

கடிதத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் சமயம் அவள் தகப்பனார் வந்தார். நல்ல வெயிலில் அலைந்து முகம் கன்றிப்போயிருந்தது. கொஞ்சம் தண்ணீரைச் சாப்பிட்டுவிட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்தவர், ”யார் எழுதியிருக்கிறார்கள்?” என்றார் கமலாவைப் பார்த்து.

கடிதத்தைப் படிக்கும்பொழுதே அவள் முகம் ஏனோ வேறுபட்டுக் கொண்டே வந்தது தெரிந்தது. தலையைத் தூக்காமலே, ”அவர் தாம்” என்றாள் தாழ்ந்த குரலில்.

”இரண்டு மாச காலமாச்சு. ஒரு வரி இல்லை! என்ன வரிந்து தள்ளி இருக்கிறான் இப்பொழுது?”

கமலா ஒன்றும் பேசவில்லை. கடிதத்தை மடித்து உறையில் போட்டபடியே நின்றாள். தன் கணவன் மீது தகப்பனாருக்கு எவ்வளவு கோபம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் என்ன செய்ய முடியும்? சொல்லத்தான் முடியும்?

”அவன் எழுதுவதை நீ சொல்லுவாயா? இப்படி மறைத்து மறைத்து வைத்துக் கொண்டுதானே என் பிராணனை வாங்குகிறாய்? அவன் ஒரு கடன். அவனுக்கு மேலே நீ ஒரு கடன்!”

”ஒன்றும் இல்லை. அப்பா!”

”ஆமாம். நாலு பக்கம் வரிந்து தள்ளியிருக்கிறான். ஒன்றும் இல்லையாம்! சொல்லாவிட்டால் போ. நீ வாயைத் திறந்து சொல்லவேண்டுமா? முகத்தில்தான் சொட்டுகிறதே!” என்று சொல்லிக் கொண்டே எழுந்துவிட்டார்.

கமலாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. பேசவும் வாய் வரவில்லை. கடிதத்தை அவர் முன் நீட்டினாள். ஆனால் அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. நீராடச் சென்று விட்டார்.

அன்றெல்லாம் ரங்கசாமிக்குப் பிரமாதக் கோபம்.

ரங்கசாமி சிறிய உத்தியோகஸ்தர். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள்தான் கமலா. அவளுக்குக் கல்யாணமாகிப் புருஷனுடன் குடித்தனம் செய்து கொண்டிருந்தாள்.

அவளுக்குப் பத்தொன்பது இருபது வயசு இருக்கும். உயரமாய் வெடவெடவென்று இருப்பாள். நல்ல நிறம். பால்போல் முகம் தெளிவாய் இருக்கும். நல்ல குணசாலி. பொறுமை உடையவள். அதுவும் சில சமயங்களில் ஆபத்தாக முடிகிறது வாழ்க்கையில்!

கமலாவின் கணவனும் இளைஞன்தான். வெளியூரில் வேலை பார்த்துவந்தான். ரங்கசாமி அதிகமாய் ஒன்றும் செய்து கொடுக்கமுடியாது என்றாலும் கமலாவின் அழகு அவனைக் கொள்ளை கொண்டுவிட்டது. தேடவில்லை, ஓடவில்லை. ரங்கசாமிக்கு ஒரு ஜோஸ்யர் சொன்னாராம். அதுபோலவே போன இடத்தில் திடீரென்று கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. ”அந்தப் பெண் அதிர்ஷ்டத்தைப் பாரடி! ராஜாபோல் அகமுடையான்! அப்படி அல்லவா இருக்க வேண்டும் பெண்ணாய்ப் பிறந்தாலும்?” என்றெல்லாம் எவ்வளவோ பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் நினைப்பதுபோல் முதலில் ரங்கசாமிக்கும் அவர் மனைவி ரங்கம்மாளுக்கும் பெருமையாகவே இருந்தது. ஆனால் நாட்களும் மாதங்களும் ஓடி இரண்டு வருஷம் கழிவதற்குள் சம்பந்தி, மாப்பிள்ளை, மாமனார் எல்லோருக்கும் இடையே ஏகப்பட்ட மனத்தாங்கல், அதிருப்தி, இடையிடையே பேச்சு வார்த்தை, வேப்பங்காயாய்க் கசந்து போய்விட்டது. முடிவில் ரங்கசாமி, ரங்கம்மாள், கமலா இவர்களுக்கிடையே பேச்சு வார்த்தை தடித்துப்போய் மூலைக்கு ஒருவராய் உட்கார்ந்திருப்பார்கள்.

ரங்கசாமிக்கு உண்மையில் கமலாவிடம் பிரியம் இல்லையா? பெற்ற பாசம், மனத்தில் கலக்கம், கவலை எல்லாம் சேர்ந்துதான் அவர் வாயைப் பெருக்கின. தம் சக்திக்கு மீறியே எல்லாம் செய்தார். அழகாய்க் கல்யாணம் செய்து, வேண்டியபடி சாப்பாடு போட்டு சம்பந்திக்கும் குறைவின்றிச் சீரோ பணமோ கொடுத்தார். ”மொத்தம் ஒரு ரூபாயை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். என்ன வேண்டுமோ செய்து கொள்ளட்டும். காது மூக்கு மூளி இல்லாமல் போட்டுக் கல்யாணத்தை நான்றாய்ச் செய்யலாம்” என்றாள் ரங்கம்மாள். அது வரையிலும் எல்லோருக்கும் திருப்திதான்.

சரியான காலத்தில் கமலாவையும் கணவனிடம் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார். இதற்குப் பிறகுதான் அக்கப்போர் எல்லாம் ஆரம்பமாயின.

கடிதத்திற்கு மேல் கடிதம் வந்தது. ‘பெண் சமர்த்தாக இல்லை; காரியம் தெரியவில்லை’ என்று ஒரு பக்கம். ‘பெண்ணை அடக்க ஒடுக்கமாய் வளர்க்கத் தெரியவில்லை உங்களுக்கு’ என்று இரண்டு பக்கம்.

எப்படி இருக்கும் ரங்கசாமிக்கு? ஒவ்வொரு கடிதத்தையும் பார்க்கும்போது கோபம் பொங்கிவந்தது. ரங்கம்மாள் ஒன்று சொல்ல, இவர் ஒன்று சொல்ல, எப்பொழுது பார்த்தாலும் ஒரே ரகளை வீட்டில்.

ஒருநாள் காலை, சுமார் ஒன்பது மணி இருக்கும். ரங்கசாமி சாப்பிடலாமா என்று கிளம்பும்பொழுது அவருக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை, கமலாவின் கணவன் உள்ளே நுழைந்தான். திடீரேன்று மாப்பிள்ளையைப் பார்த்ததும் ரங்கசாமிக்குச் சந்தோஷம் உண்டாயிற்று.

”வரவேணும், வரவேணும். எப்போது வந்தீர்கள்?” என்றார் மலர்ந்த முகத்தோடு. மாப்பிள்ளையும் சிரித்துக் கொண்டே, ”ஏதோ வேலையாக வந்தேன்” என்றான்.

உடனே, ”அடியே” என்றார் ரங்கசாமி. மாப்பிள்ளைக்குக் காபி வந்தது. சாதாரணமாய்ப் பேச்சுகள் நடந்தன.

”மாப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு சாப்பிட வாருங்களேன்” என்றாள் ரங்கம்மாள். இதைச் சொன்னதுதான் தாமதம், மாப்பிள்ளை எழுந்துவிட்டான்.

”எனக்கு அவசரமாய் ஜோலி இருக்கிறது. இந்தக் கடிதத்தைக் கமலா உங்களிடம் கொடுக்கச் சொன்னாள். அதற்காக வந்தேன். ராத்திரி ரெயிலுக்குப் போகிறேன். வரட்டுமா?” என்றான் நின்றபடி

கடிதத்தைக் கையில் வாங்கிய ரங்கசாமிக்கு ஒன்றும் ஓடவில்லை. மனத்தில் பல யோசனைகள் ஓடின. கடிதம் உறையில் போட்டு ஒட்டி, ‘ரங்கம்மாளுக்கு’ என்று எழுதி இருந்தது. சற்று நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து மாப்பிள்ளையை உபசரிப்பதில் ஈடுபட்டார்.

‘‘ஊருக்கு வந்தால் நம்மகத்தில் வந்து இறங்கக்கூடாதா? இப்படி ஒவ்வொரு தடவையும் செய்வது நன்றாக இருக்கிறதா? சாப்பிடாமல் போகவே கூடாது. இங்கிருந்துதான் ரெயிலுக்குப் போகவேண்டும்” என்றெல்லாம் ரங்கம்மாளே நேரில் வந்து உபசாரம் செய்தாள். ஸ்ரீநிவாசன் கேட்கவே இல்லை. பேசாமலும் போகவில்லை. ”இந்த அசட்டுப் பிணத்தை என் கழுத்தில் கட்டினீர்களே! அதற்குச் சாப்பாடு வேறு! ஊரில் வந்து பாருங்கள். என் மானமே போகிறது!” என்று கூறி விடுவிடுவென்று போய்விட்டான் வாசலை நோக்கி.

திடீரென்று ஒரு பெரும் புயல் வீசி மரத்தை வேரோடு உலுக்கியது போலிருந்தது. ரங்கசாமி ரங்கம்மாளைப் பார்த்தார். அவள் இவரைப் பார்த்தாள். கீழே விழுந்து கிடந்த கடிதத்தை உடைத்துப் பார்க்கவும் இருவருக்கும் தோன்றவில்லை.

”கடன்காரன்! பொழுது விடிந்து வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறான்!” இது ரங்கசாமியின் அடி வயிற்றிலிருந்து வந்த வார்த்தை. கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார்.

”என்ன கடிதம்?” என்றாள் ரங்கம்மாள்.

”பெண் எழுதியிருக்கிறாள்! பார்!” என்று கடிதத்தை வீசி எறிந்தார் ரங்கசாமி.

ரங்கம்மாள் ஆவலுடன் கடிதத்தை எடுத்துப் படித்தாள். சில விநாடிகளுக்கு மௌனம் நிலவியது. கடிதத்தைப் படித்து முடித்து உறையில் போடும் சமயம் ரங்கம்மாளின் உள்ளத்திலிருந்து நீண்ட பெருமூச்சுக் கிளம்பியது.

”உம்! எல்லாம் ஜன்மாந்தரக் கடன். பிள்ளையாவது! பெண்ணாவது!” என்று உறுமினார் ரங்கசாமி.

”அவளாக எழுதி இருக்க மாட்டாள்” என்றாள் ரங்கம்மாள்.

”ஆமாம்! பெண்ணுக்குப் பரிந்துகொண்டு வராமல் என்ன செய்வாய் நீ? தகப்பன் செய்யட்டுமே என்ற எண்ணந்தான். இதைத் தபாலில் போடமுடியவில்லையோ அவளுக்கு? அவனுக்கும் தெரியவேண்டும் என்றுதானே இப்படிச் செய்தாள்?”

”பிடுங்கிப் பிடுங்கி எடுத்தால் அவள்தான் என்ன செய்வாள்? குழந்தைதானே? நம்மிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவாள்?”

”குழந்தை! நீதான் சொல்லிக்கொள்ள வேணும். அது அவளாக எழுதவில்லை என்கிறாயே; ஒரு தூபம் போட்டால் அதற்காகக் குதிக்கிறதோ? முடியாது என்று சொல்லுவதற்கு என்ன?”

”எப்படித் தைரியம் வரும்? சிறியவள்தானே?”

”ஆமாம், நமக்கு எழுத மட்டும் தைரியம் வரும்! அவ்வளவு இளக்காரமாய்ப் போய்விட்டது. இங்கே என்ன கொட்டியா வைத்திருக்கிறது பணமும் காசும்? கூஜா வேணுமாம் கூஜா! இனிமேல் ஒரு சல்லிக்குச் செய்ய முடியாது என்னால்! வந்தவனுக்கு ஒரு வார்த்தை பேச முடியவில்லை. ஒரு பிடி சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு இல்லை. மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை! வறட்டுத் தொத்தல். எழுது உன் பெண்ணுக்கு; தலைகீழாக நின்றாலும் ஒன்றும் நடக்காது என்று எழுது”.

ரங்கம்மாள் ஒன்றுமே பேசவில்லை. அவள் கண்களில் நீர் முத்து முத்தாய்த் துளித்து நின்றது.

”உம்! சோற்றைப் போடு. வயிற்றை எரிகிறது” என்று ஏதோ இரண்டு பிடி எச்சிலாக்கி விட்டு வெளியில் போய்விட்டார் ரங்கசாமி.

ரங்கம்மாளுக்கு வேதனை அள்ளி அள்ளிப் பிடுங்கியது. கடிதத்தை எடுத்து மறுபடியும் திருப்பித் திருப்பிப் படித்தாள். என்ன யோசித்தாலும் அந்தக் கடிதத்தைக் கமலா தானாக எழுதியிருப்பாள் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை. ‘புருஷன் முரடனாகவும் கோணலாகவும் இருந்தால் குழந்தைகள் என்ன செய்யமுடியும்? பாவம்! தம்பதிகளின் இன்ப வாழ்க்கையில் போராட்டம் போதாதென்று பெற்றோரும் கட்சியும் சண்டையும் பிடித்தால் என்ன செய்வது? ஏதோ பொன் வைக்குமிடத்தில் பூ. இருவரும் முரணிக்கொண்டு நிற்பதில் லாபம் என்ன?” என்றெல்லாம் எவ்வளவோ சிந்தனைகள் அவள் மனத்தில் எழுந்தன.

மளமளவென்று சென்று பெட்டியைத் திறந்தாள். தன் கல்யாணத்தில் கொடுத்த வெள்ளிக் கூஜாவை எடுத்துக்கொண்டு தட்டான் வீட்டை நோக்கி நடந்தாள்.

Image

மாலை விளக்கு வைக்கும் சமயம். ரங்கசாமி கூடத்துத் தாழ்வாரத்தில் வேகமாய் இங்கும் அங்கும் நடந்துகொண்டிருந்தார். ரங்கம்மாள் கூஜாவின்மேல் பார்வை விழுந்தது. ”ஏது இது?” என்றார். குரலில் கோபம் கனல்போல் எழும்பியது.

ரங்கம்மாள் அவருக்கு நேர் மாறாகப் பொறுமையுடன் பேசினாள்; ”நான் அப்பொழுதே சொன்னேன், கொடுத்துவிடலாம் என்று. கேட்டால்தானே?” என்றாள்.

ரங்கசாமியின் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. ”கொடுக்கவேண்டும் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறது? அப்பொழுதே கேட்டு வாங்கிக் கொண்டு போகிறதுதானே இவ்வளவு கேட்டவன்? ரொம்பச் சங்கோசப் படுகிறவனோ இல்லையோ? உன் மாப்பிள்ளை! முடியாது! இனி ஒரு சல்லிப் பெயராது! தெரிந்துகொள்!” என்று கர்ஜித்தார்.

”எல்லாம் அவனுக்காகவா செய்கிறோம்? நாமே நம் குழந்தைகளுக்கு இன்னும் உபத்திரவத்தை உண்டாக்கினால் என்ன செய்வது? சொல்லுங்கள். கூஜா சாதாரணமாய்க் கேட்பதுதானே?”

”எது வேண்டாம் சொல். கொடுக்கிறவர் இருந்தால் எனக்குந்தான் எல்லாம் வேண்டும். யார் கொடுக்கிறார்கள்? வறட்டு ராங்கிப் பயல்! வந்தானாம்! நேரே சொல்லுவதற்கு என்ன கேடு?”

”போகிறான். அசட்டுப்பிள்ளை அவனுக்குந்தான் ஒன்றும் தெரியவில்லை. ‘பெண்ணைக் கொடுத்தாயோ? கண்ணைக் கொடுத்தாயோ?” என்பார்கள். நாம்தானே தாழ்ந்து போக வேண்டும்? கோடி புண்ணியம் உங்களுக்கு. ரெயிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டு இதையும் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று கெஞ்சிக் கூஜாவையும் நீட்டினாள் ரங்கம்மாள். ரங்கசாமியின் கண்களில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தாலும் ரங்கம்மாள் பின்வாங்கவில்லை. ‘விழுந்தாலும் முதுகில் இரண்டு அடிதானே விழப்போகிறது? விழட்டும்’ என்று துணிந்து விட்டாள். ஏற்றுக்கொள்ள மறுத்து விறைத்து நின்ற அவர் கைகளில் விரல்களைப் பிடித்து பலவந்தமாக மடக்கிக் கூஜாவையும் மாட்டிவிட்டாள். ரங்கசாமிக்கு இருந்த கோபத்தில் கூஜா ஒரு மைல் தூரம் பறந்திருக்கும். ஆனால் ரங்கம்மாளின் இந்தச் செய்கையை மீறி நடக்க அவர் உள்ளம் ஏனோ தயங்கியது. ரங்கம்மாளைப் பார்த்தார். கண்ணும் கண்ணீருமாய் அவள் நிற்கும் கோலம் அவரை அயரச் செய்தது.

”நீ ஒரு பெரிய அசடு! பெண் பெண் என்று உயிரை விடுகிறாய். நாளைக்கு நமக்கு என்ன செய்யப் போகிறார்கள் எல்லாரும்? பெற்ற கடன்தான்!” என்று சொல்லிக்கொண்டே சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார்.

ரங்கம்மாள் நீண்ட பெருமூச்சுவிட்டாள். என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும்; கிளம்பினால் போதும் என்று நினைத்தாள். தெருக்கோடி சென்று ரங்கசாமி கண்களுக்கு மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு உள்ளே வந்தாள்.

ரெயில் கிளம்புவது சரியாய் இரவு எட்டு மணிக்கு. ரங்கம்மாள் அடிக்கு ஒரு தடவை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ‘இவ்வளவு கோபத்துடன் போயிருக்கிறாரே. ஒருவருக்கொருவர் சச்சரவு இல்லாமல் இருக்க வேண்டுமே!’ என்று எவ்வளவோ பிரார்த்தனைகள். ‘கமலா என்ன கஷ்டப்படுகிறாளோ! பாவம்’ என்று வேதனைப்பட்ட வண்ணம் உள்ளுக்கும் வெளிக்குமாகப் போய்க் கொண்டிருந்தாள்.

கடிகாரத்தில் ‘டண்’ என்று அடித்தது, மணி ஏழரை. ரங்சாமி அதிவேகத்துடன் உள்ளே நுழைந்தார். அவர் கையிலிருந்த வெள்ளிக் கூஜா ‘படேர்’ என்ற ஓசையுடன் ரங்கம்மாளின் காலுக்கருகில் வந்து விழுந்தது.

கூஜா தக்காளிப் பழம்போல் நசுங்கியதைக்கூட ரங்கம்மாள் பொருட்படுத்தவில்லை. ரங்கசாமி இருந்த நிலையைப் பார்த்தால் ஏதாவது அடிதடிச் சண்டைதான் நடந்துவிட்டதோ என்ற திகில் உண்டாயிற்று. இப்பொழுது அந்த மனிதரிடம் எவ்விதம் வாய் கொடுப்பது? விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கவும் பொறுமை இல்லை. கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு ஓரமாய் உட்கார்ந்துவிட்டாள். சாப்பிட்டு ஒரு மணிநேரம் கழித்துதான் ரங்கசாமியின் வாயிலிருந்து வார்த்தை வந்தது. ”ஓடு ஓடு என்று விரட்டினாயே என்னை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை அந்த வரட்டு ராங்கிப் பயல்! விறைத்துக்கொண்டு போனால் எனக்கா நஷ்டம்?”

ரங்கம்மாள் பேசவில்லை.

”முழு நீளம் எழுதிவிட்டுக் கூஜா வேண்டாமாம்! எப்படி இருக்கிறது கூத்து?”

இதற்குமேல் ரங்கம்மாளால் மௌனமாய் இருக்கமுடியவில்லை.

”ஏன் வேண்டாமாம்? நீங்கள் ஏதாவது சொன்னீர்களா?” என்றாள் விரித்த கண்களோடு.

கோபம் ரங்கம்மாளின் பேரில் பாய்ந்தது.

”எங்கும் இல்லாத ஒரு மாப்பிள்ளை பிடித்தாயே! அதற்கு எல்லாம்தான் சொல்லுவாய் நீயும். ஆபீசிலிருந்து வந்ததும் வராததுமாக ஓடிப்போய் நிற்கிறானாம் ஒரு மனுஷன்! துரைக்குப் பேசக் கூட பிடிக்கவில்லை. கூட வந்தவனை விட்டுச் சொல்லச் சொல்லுகிறான். கூஜா இப்பொழுது வேண்டாமாம். யாராவது வரும்போது அனுப்ப வேண்டுமாம்! போனதற்கு நல்ல மரியாதை; சரிதானே?”

மேலே பேசுவதற்கு என்ன இருக்கிறது? ரங்கம்மாள் கேட்டது ஒரே ஒரு கேள்விதான். ”அதற்குள் ரெயில் கிளம்பிவிட்டதா?”

”அந்த அசத்து ஏறி வண்டியில் உட்கார்ந்து விட்டால் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு எனக்கு என்ன வேலை அங்கே? சொல்கிறபடியெல்லாம் ஆடவும் பாடவும் இவன் வைத்த ஆள் போலிருக்கிறது! இனி மேல் ஏதாவது எழுதட்டும், சொல்லுகிறேன். பல்லைத் தட்டிக் கையில் கொடுக்கிறேன். மாப்பிள்ளையாம், மாப்பிள்ளை! ஜன்மாந்தரக் கடன்!”

இந்த நிகழ்ச்சிகள் நடந்து சுமார் ஆறு மாதங்கள் ஆகப் போகின்றன. ரங்கசாமி மாப்பிள்ளைக்கோ கமலாவுக்கோ கடிதமே முடியவில்லை. எல்லாவற்றையும் விவரமாய்க் கமலாவுக்கு எழுதவும் முடியாது. மாப்பிள்ளையின் கோபம் இன்னும் எப்படி எல்லாம் முறுக்கிக்கொள்ளுமோ என்ற பயம். ஏதோ இரண்டு வார்த்தை ஜாடைமாடையாய் எழுதினாள்.

உண்மையில் ரங்கம்மாள் கூறியதுபோல் அந்தக் கடிதம் கமலா தானாக எழுதவே இல்லை. கணவன் உத்தரவு என்றாலும் எழுதும்பொழுது கை ஓடவில்லை. உள்ளத்தில் துக்கம் குமுறியது. கணவனிடம் நயமாய்ச் சொன்னாள். தான் நேரில் போகும் சமயம் வாங்கிக்கொண்டு வருவதாகவும் சொன்னாள். ஆனால் ஸ்ரீநிவாசனுக்கு ஏதோ கோணற் பிடிவாதம். கடிதம் அவள் கையில் எழுதி வாங்கிக்கொள்ளும் வரையில் விடவில்லை.

”கடிதம் நான் எழுதினேன் என்று நினைக்கவே மாட்டார்கள். உங்களுத்தான் பொல்லாப்பு” என்றுகூடக் கணவனை எச்சரித்தாள் கமலா. கோபமோ தாபமோ, கையில் கொடுத்ததை அழகாய் வாங்கிக் கொண்டுவரக்கூடாதோ? அல்லது மரியாதையாகச் சொல்லிப் பேசிவிட்டு வரக்கூடாதா? கணவன் விஷயத்தில் கமலாவுக்குத் தாங்கமாட்டாத குறைதான். பெற்றோருக்கு வரிந்து எழுதினாள். மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். ”என்னைப் பெற்று உங்களுக்குக் கஷ்டமே தவிர எந்த விதத்திலும் சுகம் இல்லை” என்று வருத்தப்பட்டுக்கொண்டு எழுதினாள்.

திடீரென்று அவளுக்கே தெரியாது. ஒரு நாள் மாலை நேரம்; ”ராமுவின் மனைவி ஊருக்குப் போகிறாளாம். நீயும் வேண்டுமானால் போய்விட்டுவா. இரண்டு வாரம் இருந்து விட்டு அவளுடன் திரும்பி வந்துவிடலாம்” என்றான் ஸ்ரீநிவாசன்.

திடீரென்று கிளம்ப கமலா தயாராக இல்லை. வேண்டாம் என்று சொல்லிவிடலாம். ஆனால் ஊருக்கு வந்து தாய், தகப்பனை ஒரு தடவை பார்த்து நேரில் எல்லாம் சொல்லிவிட்டு வரவேண்டியது அவசியம் என்று பட்டது. யோசிக்கவில்லை; புறப்பட்டுவிட்டாள்.

திடீரென்று வந்தாலும் பெற்றோருக்கு பாரமாகவா இருக்கும்? ரங்கசாமியே மிகவும் சந்தோஷப்பட்டுக்கொண்டார். தந்தையிடம் சொல்லாவிட்டாலும் ரங்கம்மாளிடம் தன் உள்ளத்தில் இருப்பதை அள்ளிக்கொட்டினாள் கமலா. தாயும் மகளும் ஓய்வின்றிப் பேசினார்கள்; கண்ணீர் விட்டுப் பேசினார்கள். கண்ணீர் வடித்தால் பெற்ற மனம் சகிக்குமா? தன் மகளை மடியில் படுக்க வைத்துக்கொண்டு ரங்கம்மாள், ”அசடே, அழாதே என்ன முழுகிப் போய்விட்டது இப்பொழுது?” என்றாள்.

எல்லாவற்றையும்விட இப்பொழுது கமலாவுக்கு வந்த கடிதந்தான் அவள் மனத்தை அடியோடு உலுக்கிவிட்டது. கடிதம் வந்ததும் ரங்கசாமிக்கு எவ்வளவு கோபம் வந்தது என்பதும் தெரியும். எழுதி இருப்பதைச் சொல்ல கமலாவுக்கு எப்படித் தைரியம் வரும்? உள்ளுக்குள் துக்கமும் கோபமும் பொங்கிப் பொங்கி வந்தன. ”ஈரேழு ஜன்மத்துக்கும் இனிமேல் பெண்ணாய்ப் பிறக்கக்கூடாது, பகவானே!” என்று பிரார்த்தித்தாள். ரங்கசாமியிடம் அவ்வளவு பயம் என்றாலும் ரங்கம்மாளிடம் கமலாவுக்குச் சுவாதீனம் அதிகமாக இருந்தது. தாய அல்லவா? ஆயிரம் தப்புகள் உண்டானாலும் அவற்றைப் பொறுத்து அன்பினால் கண்ணீரைத் துடைப்பவள் தாய்! ரங்கம்மாள் தானாகவே கடிதத்தை வாங்கிப் படித்தாள்.

கடிதத்தில்தான் எவ்வளவு அதிகாரம்! சட்டம்! ‘ஒரு பெண்ணுக்கு இப்படி எல்லாம் எழுதினால் அவள் மனம் என்ன வேதனைப்படும்? அதைப் பார்த்துப் பெற்றோர் மனம் என்ன பாடுபடும்? இவ்வளவு அறிவில்லாத பிள்ளைகள் என்ன பிள்ளைகள்? நாகரிகமும் படிப்புந்தான் எதற்கு?’ என்றெல்லாம் எவ்வளவோ எண்ண அலைகள் அவள் உள்ளத்தில் எழுந்தன. நன்றாய்த் தாறுமாறாகப் பதில் எழுத வேண்டும் என்றே தோன்றியது. ஆயிரம் இருந்தாலும் கமலாவுக்கு அவன் புருஷன், கஷ்டம் சுகம் இரண்டிலும் பங்கெடுத்துக் கொள்ளுபவன். இன்று அடித்தாலும் நாளைக்கு அணைத்தால், அதல்லவா கமலாவுக்குச் சந்தோஷம்? கமலாவைப் பார்த்தாள். தாயின் வாயிலிருந்து என்ன வருமோ என்று ஒதுங்கி ஒடிந்து விழுந்த இளங்கிளைபோல் தலை நிமிராமல் நின்ற அவளை காணப் பொறுக்கவில்லை. இளங்குழந்தையென அவளைத் தழுவி முகத்தை உயர்த்தினாள்.

”பைத்தியமே! கவலைப்படாதே. பேசாமல் இரு” என்றாள். ‘‘சீக்கிரம் ஊருக்குப் போக வேண்டுமே, அம்மா!” என்றாள் கமலா. அதில் தான் எவ்வளவு வேதனை!

அந்த கவலை எல்லாம் உனக்கு எதற்கு?”

இவ்வளவு ஆதரவான வார்த்தைகளைத் தாயன்றி உலகத்தில் வேறு யாரால் சொல்லமுடியும்?

”ஓடி ஓடிக் கூஜாவைக் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னாயோ, இல்லையோ? அதற்கு வட்டி இது. இப்பொழுதே கடன் தலைக்குமேல் நிற்கிறது. வளை வேண்டுமாம் வளை! பவுன் இவள் அப்பன் வீட்டில் காய்க்கிறது என்று நினைக்கிறானோ? வறட்டுப்பயல்! ஏன், இவன் பண்ணிப் போடுகிறதுதானே ஒரு ஜோடி, அக்கறையாய் இருந்தால்? பிள்ளை இல்லாச் சொத்து பாழாய்ப் போகிறது என்று பார்க்கிறானோ? ஒன்றும் முடியாது. கூஜாவும் கிடையாது. வளையும் செய்து போட முடியாது. இஷ்டம் இருந்தால் பெண்டாட்டியை அழைத்துக் கொள்ளட்டுமே. இல்லாவிட்டால் இருந்துவிட்டுப் போகிறாள் இங்கே. நீங்கள் ஒருத்தரும் எழுதவேண்டாம். நான் எழுதிப் போடுகிறேன். என்ன செய்கிறான், பார்க்கலாம்!” என்று இரைந்தார் ரங்கசாமி.

அவர் மனம் எவ்வளவு தூரம் நொந்து போயிற்று என்பது அவருக்குத்தானே தெரியும்? ஆனாலும் சிறிது யோசித்துப் பேசலாம். குழந்தையின் சுக துக்கங்களை மறந்துவிடலாமா?

”நீங்கள் இப்படி எல்லாம் கன்னாபின்னா என்று பேசாதீர்கள். உங்களுக்கு இருக்கிற கஷ்டத்தில் எனக்கும் பாதி உண்டு. இதற்கு என்ன செய்வதென்று பார்ப்பதா? இப்படி எல்லாம் பேசிக்கொண்டிருப்பதா? சொல்லுங்கள்” என்றாள் ரங்கம்மாள்.

Image

”நான்கு பவுன் வாங்கி யாராலே வளையல் செய்யமுடியும் இப்பொழுது? நீயும் பேசுகிறாய்!”

”என்ன செய்கிறது! ஏதாவது ஒரு வழிதான் செய்ய வேண்டும்”.

”ஒரு சல்லி புரட்ட முடியாது. வாங்கிய கடனே இன்னும் அடையவில்லை”.

”நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாமே!”

”பின்னே நீ என்ன சாதித்துவிடப்போகிறாய்? வைத்துக் கொண்டிருக்கிறாயோ கையில் ஆயிரம் ஆயிரமாய்?”

”எதையோ, என் கையில் இருப்பதைச் செய்துவிட்டுப் போகிறேன். ஆயிரம் என்ன, இரண்டாயிரம் என்ன?”

”இந்தா ரங்கு, எதையாவது செய்தாயானால் கெட்ட கோபம் வரும் எனக்கு. அந்த வறட்டுப் பயல் எழுதுகிறானாம்! இவள் செய்யப் போகிறாளாம்! எதையாவது தொட்டாயானால் இனிமேல் இந்த வீட்டு வழி நாடமாட்டேன், பார்த்துக்கொள். கடன்! ஜன்மாந்தரக் கடன்!” என்று சொல்லிவிட்டுத் தெருப்பக்கம் போய் விட்டார் ரங்கசாமி.

ரங்கம்மாள் முணுமுணுத்துக் கொட்ட, மற்றக் குழந்தைகள் மலங்க மலங்க விழிக்க, கமலா கண்ணைப் பிசைய வீடு நிம்மதியற்றுப் போய்விட்டது.

நிம்மதியற்ற குடியில் நோயும் தலைவிரித்தாடிது.

”வேண்டாமடி; எதற்கு இப்படி நட்டுக்கொண்டு கிடக்கிறாய்? அவர் பாட்டில் சொல்லிக்கொண்டு கிடக்கட்டும். காதுங்காதும் வைத்தாற்போல் ஊருக்குப் போய்ச் சேரலாம். ஏன் கவலைப்படுகிறாய்? இப்படி அலட்டிக்கொண்டால் ஏற்கனவே உடம்பு இருக்கிற லட்சணத்திற்கு ஏதாவது படுக்கை போட்டுவிட்டால் என்ன செய்கிறது?” என்று ரங்கம்மாள் எவ்வளவோ சொன்னாள்.

கமலாவுக்கு உலகமே வெறுத்துப்போய் விட்டது போன்ற ஒரு தோற்றம். ஜுரத்தை அவளே வரவேற்றாள். கண்ட ஜுரம் விஷமாய் ஏறிவிட்டது. வைத்தியர் வந்தார்; பார்த்தார். ”விஷ ஜுரம்; ஜாக்கிரதையாகப் பார்க்கவேண்டும்” என்றார். இப்பொழுது யாரைக் கேட்பது? எங்கே போவது? உள்ளுக்கும் வெளிக்குமாய் நடந்தார் ரங்கசாமி. ‘இனி யாரைச் சொல்லி என்ன பயன்? எல்லாம் நம்மால் வந்த வினைதான்’ என்று ஒரே பயங்கர மௌனத்தில் ஆழ்ந்தாள் ரங்கம்மாள்.

கமலா பயப்படவில்லை. கவலையும் படவில்லை. வேதனைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நிம்மதியாகப் போகும் வழியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரே கடமை மட்டும் அவள் நெஞ்சைப் பிளந்தது. ”அப்பாவை அவருக்கு எழுதிவிடச்சொல் அம்மா. நான் பிழைக்கமாட்டேன்” என்றாள். அவள் பேச்சில் படபடப்பு இல்லை. அமைதியே இருந்தது.

ரங்கசாமி எப்படிக் கட்சி கட்ட முடியும? வைத்தியரைக் கேட்டார். மாப்பிள்ளைக்கு எழுதவேண்டிய முறையில் அவசியமானதை எழுதினார்.

ஜுரம் மணிக்கு மணி, நாளுக்கு நாள் ஏறியது. ”என்னவோ நாம் செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிடலாம். ஒன்றும் விடக்கூடாது” என்றார் வைத்தியர். ஜுரம் கண்டு வாரம் இரண்டு ஓடிவிட்டன. தந்தியும் தபாலுமாகப் பறந்து மாப்பிள்ளை வந்து சேர்ந்தான்.

ஒரு நாள் பகல்; நல்ல வெயில். கமலாவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பெற்றோரின் முகம் வேதனை நீங்கி பளீர் என்று விளங்கியது. கணவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். சிறிது நேரத்தில் வைத்தியர் வந்து ஊசிப் போட்டார்.

அவர் சென்றதும், ”அப்பா!” என்று வாய்விட்டுக் கூப்பிட்டாள் கமலா. ரங்கசாமி வந்து அவள படுக்கையில் உட்கார்ந்தார்.

கமலா அவர் கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்களிலே ஏதோ ஒளி வீசியது தந்தையிடம், இப்போது பயம் இல்லை. ”அப்பா, உங்களை எல்லாம் மிகவும் கஷ்டப் படுத்திவிட்டேன். நான் போவதுபற்றி எனக்கு வருத்தமே இல்லை. அவரையும் வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். என் நகைகள் இருக்கின்றன. கடனை அடைத்துவிடுங்கள்” என்றாள். அவ்வளவு தான்; புன்சிரிப்புடன் கண்ணை மூடிவிட்டாள். ”கமலா, கமலா!” என்று ஒரே கூப்பாடு. எல்லாரும் அழக் கிளம்பிவிட்டார்கள்.

”கடன் கடன் என்று வதைத்து எடுத்தீர்கள்; குழந்தை உயிரையே விட்டுவிட்டாள், போங்கள்” என்று அலறினாள் ரங்கம்மாள்.

ரங்கசாமி அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்தார். மாப்பிள்ளையோ வேரற்ற மரம்போல் சாய்ந்து விட்டான் தரையில். இந்த அமர்க்களத்தில் வைத்தியரைப் பற்றி ஒருவருக்கும் தோன்றவில்லை. யார் ஓடினார்களோ என்னவோ, அவர் வந்து அதட்டல் போட்டதுந்தான் அமர்க்களம் சற்று ஓய்ந்தது.

Image

”ஒன்றும் இல்லை. எதற்காக இப்படி அமர்க்களம்? களைப்பினால் கண்ணை மூடி இருக்கிறாள். கண்டம் தப்பிவிட்டது, இனிப் பயமே இல்லை” என்று ஓர் ஊசிப் போட்டார். ”ஒருவரும் சத்தம் போட வேண்டாம். இன்னும் ஒரு மணிநேரத்தில் தானாகக் கண் திறந்து பேசுவாள். மாலை வந்து பார்க்கிறேன்” என்று கிளம்பினார் வைத்தியர்.

”நிஜமாகவா டாக்டர்?” என்று தவித்துப் போய்விட்டாள் ரங்கம்மாள்.

”குழந்தைக்குக் கவலையேதான் டாக்டர் உடம்பு!” என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் ரங்கசாமி.

ஒவ்வொரு நாளாய் ஓடி ஒரு வாரமும் கழிந்து மாதமும் கழிந்தது. நடந்ததெல்லாம் சொப்பனம்போல் கண்முன் நின்றது. கமலா இளைத்துத் துரும்பாய் இருந்தவள், சற்றுத் தேறி வந்தாள். ஊருக்குப் புறப்படப்போகிறாள். ரங்கம்மாள் தெய்வங்களைத் தொழுது பக்ஷணம் செய்து கொண்டிருந்தாள்.

ரங்கசாமியோ அவசர அவசரமாய்ச் சாமான்களை எல்லாம் கட்டிக்கொண்டிருந்தார். கமலாவின் பெட்டியில் அவள் சாமான்களை எல்லாம் சரிவர வைத்தபடி, ”ரங்கம், எங்கே, அந்தக் கூஜாவை எடுத்துக்கொண்டு வா இப்படி” என்றார். அவர் கையாலேயே பெட்டியில் அதை வைக்கும்போது ரங்கம்மாளின் உள்ளந்தான் எப்படிக் களித்துக் கொந்தளித்தது, தெரியுமா?

கமலா ஒன்றுக்குமே வாய் திறக்கவில்லை. ரங்கசாமியைக் கண்டு அவள் உள்ளம் உருகியது.

சாப்பாடு முடிந்தது. ரெயிலுக்குப் போக வண்டி வந்து நின்றது வாசலில். வேப்பிலையைக் கமலாவின் தலையில் செருகி நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டு வெற்றிலை பாக்குக் கொடுத்தாள் ரங்கம்மாள். சாமான்கள் எல்லாம் வண்டியில் ஏற்றியாகிவிட்டன. ரங்கசாமியும் கமலாவும் வண்டியில் ஏறும் சமயம்.

ரங்கசாமி ரங்கம்மாளைப் பார்த்தார்.

”ஏன்? ஏதாவது மறந்துவிட்டீர்களா?”

”இல்லை, இல்லை; கமலாவுக்குக் கையில்”.

”வேண்டாம் என்றால் கேட்கவே மாட்டேன் என்கிறார் அப்பா, இந்த அம்மா” என்று குறுக்கே வந்தாள் கமலா.

”எப்படியோ எங்கள் வயிற்றில் பாலை வார்த்தாயே அம்மா! பிழைத்துக்கிடந்தால் இந்த வளைதானா பிரமாதம்?”

கமலா தாயைப் பார்த்தாள். ரங்கம்மாள் ரங்கசாமியைப் பார்த்தாள். என்ன அருமையான வார்த்தை! ரெயிலுக்குப் போகும் வண்டி தெருக்கோடி சென்று மறையும் வரையில் அதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நின்றாள் ரங்கம்மாள். ரங்கசாமி சொன்ன வார்த்தைகள் அவள் தேகமெங்கும் பரவி நிம்மதிக் கடலில் அவளை ஆழ்த்தின. ”பெற்ற மனம் என்று இதற்குத்தானே சொல்கிறது உலகம்!” என்று வாய் முணுமுணுத்தது.

ரங்கசாமியின் உள்ளம் மேற்பார்வைக்குப் பாறையாகவே இருந்தது. ஆனால் துன்பம் என்னும் வெடியினால் பிளந்த பிறகு அதனடியிலிருந்துதான் நீருற்று எழுந்தது.

***

கௌரி அம்மாள்

(1913 – 1987)

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மத்தியதரக் குடும்பங்களைத் தன் கதைக்களனாகக் கொண்டு தொடர்ந்து எழுதியவர்.

1949ல் வெளியான இவரின் ‘கடிவாளம்’ நாவல், குறிப்பிடத்தக்க ஒன்று. இவரின் சிறுகதைத் தொகுதி ‘வீட்டுக்கு வீடு’ (1970).

தன் வாழ்நாளின் பிற்பகுதியில் ஆன்மீக ஈடுபாடு கொண்டு, தனது எழுத்துகளின் போக்கை மாற்றிக் கொண்டவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *