கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 20,204 
 

கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின்மதியத்தின் மங்கிய வெய்யில் காற்றில் அசைந்து கொண்டிருந்த தென்னையோலைகளின் கைங்கர்யத்தால் தாழ்வாரத்தைத் தொட்டுத்தொட்டு விளையாடிக்கொண்டிருந்தது. தென்னையோலைகளின் மேல் ஓடுவதும் பின் அங்கிருந்து மதில் சுவரின் மேல் பாய்வதுமாக இரண்டு அணில்கள் தொட்டுப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. வழக்கமாக இதையெல்லாம் ரசிப்பவள் அன்று சூன்யத்தை வெறித்தவாறு படுத்திருந்தாள். அவளது பார்வையைக் கவனித்தால் அவள் மனம் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போலிருந்தது.

நிழல் யுத்தம்“புதனோட புதன் எட்டு.. நேத்து ஒன்பது.. இன்னிக்குப் பத்து. ஹூம்.. அந்தப்புள்ளையோட பேசி இன்னியோட பத்து நாளாச்சுது. “அத்தை.. அத்தை”ன்னு காலைச் சுத்திச்சுத்தியே வளர்ந்த புள்ளை. இன்னிக்கு அது என்னியப்பாத்தாலே வெலகிப்போற மாதிரி ஆக்கிட்டாரே இந்தப் பெரிய மனுஷன்.. வயசான காலத்துல புத்தி இப்படியா போகணும்?” நினைக்கும்போதே கரகரவென்று கண்ணீர் ஊற்றெடுத்து கையின் வழி சொட்டித் தரையை நனைத்தது. அப்படியே படுத்துக்கிடந்தவள் பெருமூச்சுடன் எழுந்தமர்ந்து, கலைந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள். ஒரு கையைத் தரையில் ஊன்றி மெதுவாக எழுந்தவளின் கை சுளீரென்று வலித்த இடுப்பை அனிச்சைச்செயலாகப் பற்றிக்கொண்டது. முந்தானையை உதறி அதிலேயே முகத்தைத்துடைத்துக்கொண்டு இடுப்பில் செருகிக்கொண்டவள் அடுக்களையை நோக்கி நடந்தாள்.

சாயந்திர டிபனுக்காக நனைத்து ஒட்டப்பிழிந்த அவலைத் தாளிதத்தில் போட்டுக்கிளறியவள் ஒரு கை தண்ணீரை எடுத்து அதில் பட்டும் படாமல் தெளித்தாள். சுர்ர்ர்ர்ர்.. என்ற ஓசையுடன் ஒன்றிரண்டு அவல் துகள்கள் குதித்தன. மூடி போட்டு வெந்ததும், உப்பு சரி பார்த்து கைப்பிடித்துணியால் கை சுட்டு விடாமல் இறக்கி வைத்தாள். “அவலு தாளிச்சதுன்னா ஆலாப்பறப்பாளே” மனதுக்குள் நினைத்தபடி ஒரு கிண்ணத்தில் அள்ளி வைத்துக்கொண்டு முந்தானையால் பொதிந்துகொண்டு கொல்லைப்புறத்துக்குச்சென்றாள். இடது பக்க வீட்டை நோக்கி மண் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு எட்டிப்பார்த்தாள். எதிர்பார்த்தது கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் “ ஏட்டி,.. இந்தா. அவலு தாளிச்சேன், வந்து வாங்கிக்கோ” என்று அழைத்தாள்.

அந்தப்பக்கம் அமர்ந்திருந்த இளம்பெண் அதைக்காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

மறுபடி மறுபடி அழைத்துப்பார்த்துச் சலித்த விசாலாட்சி, ”ஏட்டி,.. பெரியவங்க இன்னிக்கு சண்டை போட்டுக்கிடுவாங்க, நாளைக்கு சேர்ந்துக்கிடுவாங்க. நீ எதுக்கு நடுவுல வாரே? உனக்கும் எனக்கும் என்ன சண்டை? நீ எங்கிட்ட பேசுறதுக்கு என்னா? வீம்பு பிடிக்காதே” என்று கெஞ்சினாள்.

“ஆமா, வீம்பு பிடிக்கிறாங்க வீம்பு. இவங்க வான்னா வரணும்,.. போன்னா போகணுமா?.. களவாணிக வீட்டுக்கெல்லாம் இவங்க வந்தா இவங்க கவுரவம் என்னாவுறது?” என்று வேண்டுமென்றே சத்தமாகப்புலம்பி விட்டு அந்தப்பெண் வீட்டினுள் சென்று விட்டாள்.

பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் விசாலாட்சி. இதே மாதிரியான ஒரு சாயந்திரத்தில்தான் அந்த இரண்டு குடும்பங்களுக்குமிடையேயான பிளவின் அஸ்திவாரத்தில் முதல் கல் விழுந்தது. இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சு ஆற மாட்டேன் என்கிறது அவளுக்கு.

அந்த மாலைப்பொழுதில்,..

“காப்பி ஆறிப்போவுது. இன்னுமா குடிக்காம வெச்சிருக்கீங்க?.. இது கொள்ளாம். பொறவு “ஆறிப்போச்சு சூடாக்கித்தா”ன்னு வந்து நிப்பீங்க. அத சூட்டோட குடிச்சாத்தான் என்ன?” வாசலை நோக்கி எதற்கோ வந்தவள் டீபாயின் மேலிருந்த காபியின் மேல் படிந்திருந்த ஆடையை விரலால் எடுத்துச் சுண்டியவாறே கேட்டாள்.

“ஒரு நிமிஷம் இரு வாரேன். மளிகைக்கு ஐயாயிரம், பாலுக்கு ஆயிரம், ம்… அப்றம்,.. அவ்ளோதான்” சொல்லியபடியே டைரியில் எழுதியிருந்த லிஸ்டைச் சரி செய்து பேனாவால் டிக் செய்த சொக்கலிங்கம், ஒற்றைத்தாளாய் மீதியிருந்த ஐநூறு ரூபாய் பணத்தை டைரியின் உள்ளேயே வைத்து மூடினார். பேனாவின் மூடியைத்திருகி மூடியவர் கையில் அப்பியிருந்த மசியைத் தலையில் தேய்த்துக்கொண்டார்.

நிழல் யுத்தம்2“என்ன அத்தான்?.. காப்பி குடி நடக்குது போலுக்கு.” மிதியடியில் காலைத்தேய்த்துத் துடைத்தவாறே உள்ளே நுழைந்தார் குரலுக்குச் சொந்தக்காரர். கூடவே நுழைந்தனர் ஒன்றிரண்டு நண்பர்கள்.

“யாரு?.. பெருமாளா?.. வா.. வா.. சாலாச்சி, திருக்கழுக்குன்றம் கழுகு பதிவா வர்ற நேரம் தப்பினாலும் தப்பும், ஒங்கண்ணன் காப்பி நேரத்துக்கு வாரது தப்பாது. போயி சூடா கொண்டா”

“எங்க அண்ணனை வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்கு தின்ன சோறு செரிக்காதே. மலைக்குப் போனாலும் மச்சான் தயவு வேணும்ன்னு சொல்லுவாங்க. எங்கண்ணங்கிட்ட பார்த்துப் பேசுங்க ஆமா,.. சொல்லிட்டேன்” என்று சிரித்துக்கொண்டே வந்தவள் “இந்தாங்கண்ணே” என்று டம்ளர்களை அண்ணனிடமும் மற்றவர்களிடமும் கொடுத்து விட்டு உள்ளே போனாள்.

மச்சானும் மச்சினனும் நாட்டு நடப்புகளைப்பேசிக்கொண்டிருந்தார்கள். “ஊர் ஞாயம் பேச ஆரம்பிச்சா ரெண்டு பேருக்கும் நேரம் போறதே தெரியாதே” என்று புன்னகையுடன் நினைத்தபடி அடுக்களையில் இரவுச் சமையலுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டாள் அவள். கால் மணி நேரம் சென்றிருக்கும். வாசல் மணி அழைத்தது. எழுந்து வாசலுக்குச் சென்றார் சொக்கலிங்கம்.

“என்னடா?.. “

“அப்பா காலைல வந்த பேப்பரை வாங்கிட்டு வரச்சொன்னா மாமா”

உள்ளே வந்து ஹாலெங்கும் தேடி எடுத்துக் கொடுத்து அனுப்பி விட்டு வந்தார். “சரி,.. அப்போ நான் வீட்டுக்குப் புறப்படறேன்” என்று எழுந்த பெருமாள், பேயறைந்த முகத்துடன் எதையோ தேடிக்கொண்டிருந்த சொக்கலிங்கத்தைப் பார்த்து ஒரு நிமிடம் நின்று “ என்ன தேடுறீங்க அத்தான்?” என்றார்.

அவர் அதைக் காதிலேயே வாங்கவில்லை. வாய் மட்டும் தன்னிச்சையாகப் புலம்பிக்கொண்டிருந்தது. கைகள் மேஜை இழுப்பறையைத் திறந்து கலைத்துப் போட்டுக்கொண்டிருந்தன.

“இப்பத்தானே உள்ளே வெச்சேன். எங்கே போச்சு?”

“என்ன போச்சுங்கறீங்க”

“காணலை.. கை கால் முளைச்சு நடந்து போயிருக்குமா? இதென்ன அதிசயமா இருக்கு”

“இப்படி மொட்டையாச் சொன்னா என்னத்தைப் புரியும்?. எதைக்காணலைன்னு சொல்றீங்க?”

“டைரிக்குள்ள வெச்சிருந்த ரூவாயக் காணலைய்யா. ஐநூறு ரூவாயாச்சே..”

“ஐநூறு ரூவாயா? அத பீரோவுல வைக்காம டைரிக்குள்ளயா வெச்சீங்க. சரி, பீரோவுக்குள்ள வச்சுட்டு மறந்து போயி வேற இடத்துல தேடிட்டிருக்கப்போறீங்க. ஒங்களுக்குத்தான் வெச்ச இடம் ஒரு நாளும் ஓர்மை இருக்கது கெடையாதே. இன்னொருக்க தேடிப்பாருங்க”

“எங்கியும் வைக்கலையே.. இப்பத்தான் நீங்க வர்றப்பதான் உள்ளே வெச்சேன். அப்றம் நாம பேசிட்டிருந்தோம், அப்றம் நான் வெளியே போனேன். இப்ப உள்ளே வந்து பார்த்தா ரூவாயக் காணலை”

“அது எப்படிக்காணாமப் போகும்?”

“அதானே எனக்கும் தெரியலை. பெருமாளு, அத்தான் கிட்ட வெளையாடலாமேன்னு நீங்க சும்மா வெளையாட்டுக்காக ஏதாவது..” என்று இழுத்தார்.

பெருமாளின் முகம் கறுத்தது. “என்னிய சந்தேகப்படறீங்களா?.. ரூவாய நான் எடுத்துருப்பேன்னு நினைக்கிறீங்களா?” நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.

“நீங்க வேணும்ன்னு எடுத்திருப்பீங்கன்னு சொல்லலை. சும்மா வெளையாட்டுக்கு செஞ்சீங்களான்னுதான் கேட்டேன்.”

“ரெண்டுக்கும் அர்த்தம் ஒண்ணுதான்யா. ச்சே.. ஒங்கள என்னவோ பெரிய மனுஷன்னு நினைச்சேன். புத்தியைக் காட்டிட்டீரே. இத்தனை பேருக்கு நடுவுல சபையில மூக்கறுத்துட்டீரே”

சொக்கலிங்கம் சூடானார் ”தங்கச்சி வீட்டுலயே கையை நீட்டுறது மட்டும் நல்ல புத்தியோ?”

அவ்வளவுதான் பெருமாளின் ஆத்திரம் தலைக்கேறியது. “பொண்ணையும் கட்டிக்கொடுத்து களவாணிங்கற பட்டமும் வாங்கிக்கிட்டாச்சு. இத்தனை பேரு இருக்கையில அது எப்படிய்யா என்னைப் பார்த்து இப்படிக் கேக்கத்தோணிச்சு?. அப்படி இத்தனி நாளு உங்க வீட்டுலேர்ந்து எத்தனை பொருளைய்யா திருடியிருக்கேன்?. போதும்யா உங்க சகவாசம்” என்றபடி விறுவிறுவெனப் படியிறங்கி விட்டார்.

நடந்த விவரமறிந்த விசாலாட்சிதான் பாவம் திருகையிலகப்பட்ட தானியமாய் அரைபட்டுக்கொண்டிருந்தாள். இந்தப்பக்கம் கணவன், அந்தப்பக்கம் சகோதரன். பாவம்… யாருக்குத்தான் பரிந்து பேசுவாள். மடை திறந்த வெள்ளமென சொக்கலிங்கம் திட்டிக் கொட்டிக் கொண்டிருந்த வார்த்தைகளனைத்தையும் மௌனமாக உள்வாங்கிக்கொண்டிருந்தாள். விஸ்வரூபமெடுத்தவர் ஒருவாறு அடங்கி அமர்ந்தபோது டைரியின் பக்கங்கள் மட்டும் மௌனத்தைக் குலைத்து காற்றில் படபடத்துப் பேசிக்கொண்டிருந்தன. எழுந்து அதை பீரோவில் வைப்பதற்காக எடுக்கப்போனவள் திடுக்கிட்டாள். படபடத்த பக்கங்களுக்கிடையே மறைந்து மறைந்து பளிச்சிட்டுக்கொண்டிருந்தது ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு.

பரபரப்புடன், “ஏங்க,.. இங்கே பாருங்க” என்று கூவினாள்.

“அடச்சை.. இது இங்கேயா இருக்கு. தாளுக்களுக்கு இடையில ஒட்டிக்கிட்டிருந்ததுல கவனிக்காம உட்டுட்டேன். இப்ப என்ன செய்யறது?”

“ஆமா,.. இப்பக் கேளுங்க. எதுக்கெடுத்தாலும் அவசரப்பட்டு என்னத்தையாம் செய்ய வேண்டியது. பொறவு முழிக்க வேண்டியது. ஒங்களுக்கு இதே பொழப்பாப்போச்சு. இருங்க.. வாரேன்” என்றவள் டைரியை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறத்துக்கு ஓடினாள். பின் வாசல் வழியாக அண்ணனின் வீட்டுக்கு.

இதற்குள் செய்தி அங்கேயும் எட்டியிருந்தது. அனைவரின் முகங்களும் இறுகிப்போய்க்கிடந்தது. எதிர்பார்த்ததுதான் என்பதால் அதைக் கண்டு கொள்ளாமல் அண்ணனின் அருகில் சென்றாள். டைரியை விரித்து பக்கங்களுக்கிடையில் இருந்த ரூபாயைக் காட்டினாள்.

“தப்பு நடந்து போச்சுண்ணே.. ஒக்கல்ல புள்ளைய வெச்சுட்டு ஊர் முழுக்கத் தேடுன மாதிரி ரூவாய இதுக்குள்ள வெச்சுட்டு வேண்டாத்த பேச்சு பேசிட்டார் அந்த மனுஷன். எனக்காச்சுட்டி அவர மன்னிச்சுருங்க. மயினி,.. நீங்களும் எங்கள மன்னிச்சுருங்க. அண்ணங்கிட்ட எடுத்துச் சொல்லுங்க..” என்று அண்ணியின் மோவாயைத் தொட்டுக் கெஞ்சியவள், “ஏட்டி, நீயாவது அப்பாட்ட சொல்லுட்டி,. நீ சொன்னா அப்பா கேப்பாரு” என்று அண்ணன் மகளைத்துணைக்கழைத்தாள்.

“மன்னிக்கச் சொல்லுகதுக்கு என்ன இருக்கு அத்த?.. என்னதான் சொந்தம்ன்னாலும் நாலு பேத்துக்கு மத்தியில மாமா எங்க அப்பா மேல திருட்டுச் சொல்லு சொல்லிட்டாரே. இனிமே யார் வீட்டுக்கும் போனாலும் எப்படி மன சமாதானமா போக முடியும்? என்னத்தையும் காணலைன்னா எங்களைச் சொல்லிருவாங்களோன்னு பயந்துல்லா கெடக்கணும்.” சூடாக வந்தது பதில்.

அன்றிலிருந்து தொடங்கியது நிழல் யுத்தம். தெருவில் எதிரெதிரே வரும்போது முகத்தைத் திருப்பிக் கொள்வதில் ஆரம்பித்து, அந்த வீட்டுப்பெண்கள் குழந்தைகள் கூட கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்காமல் இருப்பது வரை யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. சொக்கலிங்கமே நேரடியாகப் போய் மன்னிப்புக் கேட்டுச் சமாதானப்படுத்த முயன்றும் இறங்கி வரவில்லை. “சபையில மூக்கறுத்துட்டு தனியா வந்து மருந்து தடவுதீங்களா?” என்று விறைப்பாகப் பதில் வந்ததாகச் சொன்னார் விசாலாட்சியிடம்.

ஊருக்குள்ளும் அரசல் புரசலாகச் செய்தி பரவியிருந்ததில் வெளியே தலை காட்ட இரு குடும்பத்தினருமே சங்கடப்பட்டுக்கொண்டிருந்தனர். நகமும் சதையுமாக இருந்தவர்களை ஊர் மெச்சிய காலம் போய், இப்போது ஊருக்கு அவலாக தங்கள் வீட்டு சங்கதி ஆகி விட்டதே என்று விசனப்பட்டனர். அப்படியும் இப்படியுமாக இரண்டொரு மாதங்கள் உருண்டோடின. முன் பகல் நேரத்துத் தாளித வாசனையாய் வன்மம் பரவிக்கொண்டுதான் இருந்தது. பலகாரங்கள் பகிர்ந்து கொள்ளாமல், பிடிக்குமே என்று பதார்த்தங்கள் கொடுத்தனுப்பப் படாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

வழக்கம்போல் சாயந்திரம் கோயிலுக்குப் புறப்பட்டார் சொக்கலிங்கம். பிரகாரம் சுற்றி வந்து பிரசாதம் வாங்கி விட்டு, “என்னப்போ… ஈஸ்வரா” என்று மெலிதாய் அந்த ஈஸ்வரனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் முணுமுணுத்துவிட்டு கோயிலின் திண்ணையை நோக்கி நகர்ந்தார். தோளிலிருந்த துண்டை எடுத்துத் திண்ணையில் பட்டும் படாமல் அடித்துத் தூசியைத் துரத்தி விட்டு உட்கார்ந்து கொண்டார்.

கோயிலுக்குள்ளிருந்து வருவது,.. யாரது?.. பெருமாளா? அவரேதான். ‘கிட்டப்போயி பேசினா சுள்ளுன்னு விழுவான். அதுக்காக அப்படியே உட்டுர முடியுமா?’ நினைத்தபடி எழுந்து அருகில் சென்றார். இவரைக் கண்டதும் பெருமாள் விலகி நடக்க முயன்றார்.

“செரி,.. போட்டும். தப்பு நடந்துட்டுது. இன்னும் எத்தனை தடவதான் ஒங்க கிட்ட கெஞ்சட்டும் நான்?. மன்னிச்சு உடுவீங்களா.. அத விட்டுட்டு இன்னும் அதையே புடிச்சுத் தொங்கிட்டிருக்கீங்களே” என்று அவரது கையைப் பிடித்துக்கொண்டு நயமாகப் பேச்சைத்தொடங்கினார் சொக்கலிங்கம்.

“சபையில அவமானப்படுத்துன ஒம்ம கிட்ட எனக்கென்ன பேச்சு?.. வழிய விடுங்க.” என்றபடி கையை விடுவித்துக்கொள்ள முயன்றார் பெருமாள். இருவரின் கைகளிலும் விரோதத்தின் பழைய விறைப்பு இல்லை. பாசத்தின் அதிர்வுகளையும் எங்கோ ஒரு ஆழத்தில் உணர முடிந்ததில் கண்கள் பனித்தன இருவருக்கும்.

“சரி,.. இன்னும் அதையே சொல்லிட்டிருக்காதீங்க. அவசரப்பட்டு ரெண்டு குடும்பத்தோட சந்தோஷத்தையும் நானே கெடுத்துட்டேன். இப்ப என்ன?.. இத்தனை பேர் நெறைஞ்சுருக்காங்க இந்தக்கோயில்ல. எல்லாத்துக்கும் மேல என்னப்பன் தாணுமாலயன் கருவறைக்குள்ள உக்காந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டு ‘நடத்துங்கடே’ன்னு சொல்லி சிரிச்சிட்டிருக்கான். இவங்க முன்னாடி மன்னிப்பு கேட்டா போதுமா?.. எல்லோரும் நல்லாக்கேட்டுகிடுங்க. என் மச்சினர் அப்பாவி, ஒரு பாவமும் அறியாத்தவர். அவசரப்பட்டு நாந்தான் அவரு மேல திருட்டுப்பழிய போட்டுட்டேன். என்னய மன்னிச்சுக்கிடுங்க” என்று சொன்னவர் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் மளாரென்று பெருமாளின் காலில் விழுந்தார் அத்தனை பேர் முன்னாலும்.

அவரவரும் நின்ற இடத்திலேயே நின்று போயினர். முதலில் சுய நினைவுக்கு வந்த பெருமாள்தான் துள்ளி விலகி “என்ன காரியம் செஞ்சீங்க. எங்க வீட்டு மாப்பிள்ளை நீங்க. எங்கால்ல விழறதாவது? மொதல்ல எந்திரிங்க..எந்திரிங்க சொல்றேன்” என்று தங்கை கணவரை எழுப்பித் தோள் சேர்த்துக் கொண்டார்.

“மனசுல ஒண்ணும் வெச்சுக்கிடாதீங்க..” என்று மச்சினரின் தோளில் சாய்ந்து விம்மினார் சொக்கலிங்கம்.

“அடப்போங்க அத்தான்.. ஒங்களை எனக்குத்தெரியாதா?.. அவசர புத்தியில ஏதாச்சும் செஞ்சுட்டு முழிப்பீங்க. என்ன?.. இந்தத்தடவை என் கழுத்துக்கு கத்தி வெச்சிட்டீங்க. சரி, போட்டும். ஆண்டவன் சன்னிதியில சொன்னதே போறும் எனக்கு.. சவத்தெ விடுங்க. நம்ம மேல பட்ட திருஷ்டி வெலகிச்சுன்னு நினைச்சுக்கறேன். என்ன சிக்கல்ன்னா வீட்டுல இருக்கற உருப்படிகளைச் சமாதானப்படுத்த கொஞ்சம் காலம் செல்லும். எல்லாம் சரியாயிரும்.. நீரடிச்சா நீர் வெலகப்போவுது” என்று அவர் சொன்ன தினுசிலேயே தன்னை மன்னித்து விட்டார் என்று சொக்கலிங்கத்திற்குப் புரிய மனசு லேசானது.

கை கோர்த்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினர் இரண்டு பெரியவர்களும்.

– தினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (ஜூலை 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *