கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 18, 2012
பார்வையிட்டோர்: 12,352 
 

மாசானமுத்துவுக்கு நிற்க முடியவில்லை. வெயில் வெள்ளையாக எரிந்துகொண்டு இருந்தது. ஊமை வெயில். உடம்பெல்லாம் ஊறியது. உடல் இடுக்குகளில் எல்லாம் ஈரம் மிதந்தது. கால் கடுக்கும்போது, காலை மாற்றிப்போட்டு நிற்பான். அடிக்கொரு தரம் உடலைச் சற்று இப்பாலும் அப்பாலும் நீட்டி, வளைத்துச் சோம்பல் முறிப்பான். காலை நீட்டி உதற வேண்டும் போல் இருக்கும். வெகு நேரம் இந்த வரிசையில் நின்றிருப்பதால், சற்று விலகி எங்காவது போய் உட்கார்ந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது!

மலைப் பாம்பு போல நீண்டு கிடந்தது வரிசை. வயிற்றுப் பகுதி மட்டும் சற்று புடைத்தாற் போல் இருந்தது. அந்த இடத்தில் தென்னையின் நிழல், கொட்டிய நீர் போல பெருவட்டமாகத் தரையில் தேங்கிக்கிடந்தது. இந்தக் கம்பெனிக்கு அழகே நான்தான் என்பது போல அந்தத் தென்னை கம்பீரம் காட்டியது. அதன் வனப் பும் பரப்பும் ‘நான் இந்த மண்ணுக் குச் சொந்தம்’ என்று சொல்வது போல இருந்தது.

தூங்கிக்கொண்டு இருந்தவனுக்கு விழிப்புக் கொடுத்தாற்போல் இருந்தது அது. அதுவென் றால் அடர்ந்த அந்தத் தோப்பும் தோட்டமும், மாமரமும், கொய்யாக் கிளையும் இன்னும் என் னென்னவோ அவன் கண்முன் அசைந்துகொண்டே இருந்தன. சிறுமையாக ஏதோ செய்துவிட்டாற் போல் மனம் குன்றிக் குறுகியது. அந்தச் சுற்று வெளியைப் பார்த்தான். துயரமும் கோபமும் ஒருபுறம் அழுத்த… அவற்றிலிருந்து பார்வையைப் பிடுங்கி, சற்று நகர்ந்து ஓரமாகப் போய் நின்றுகொண்டான்.

விவரம் இல்லாமல் தாத்தா இதைச் செய்துவிட்டாரோ? ஒருவர்கூடவா இதைத் தாத்தாவிடம் சொல்லவில்லை. தாத்தா எப்படித் தடுமாறினார்? அவர் மனசு கெட்டி! கண் நிறையக் காசைக் காட்டிப் புத்தியைப் புடுங்கிக்கொண்டுவிட்டான். அப்புறம் மனசைக் கொண்டுபோய் குப்பையில் கொட்ட வேண்டியதுதான்!

‘‘என்ன சொல்றீங்க பாட்டா?’’

‘‘என்ன, என்னடா செய்யச் சொல்றீக?’’

‘‘அதிர்ஷ்டத்தைப் பீச்சாங்கையால விரட்டாதீய…’’

‘‘வெளையுற நெலமுடா? அதுதான்டா எங்க பசியாத்துது!’’

‘‘ரெண்டு மூணு தலைமுறைக்கு ஒரு வேலையும் செய்ய வேண்டாம்…’’

‘‘பார்றா..!’’

‘‘அப்புறம் ஒங்க இஷ்டம்!’’

‘‘……………’’

‘‘நா கமிசனுக்காகப் பேசுறேன்னு நெனைக்காதீக. அரசாங்கத்துல பெரிய திட்டம் இருக்காம். பெரிய தொழில் பேட்டை இந்தப் பக்கம் வருதாம். நெலத்தை எல்லாம் அளந்து எடுத்துக்கிட்டு இம்புட்டு தான்னு அடிமட்ட ரேட்டை கொடுக்கப் போறானாம்.’’

‘‘நம்மத எதுக்குடா தொடுறான்?’’

‘‘அப்படி நினைக்காதீக! கவுருமென்ட்டுக்கு ரைட்ஸ் இருக்கு. தாசில்தார் இந்த சுத்துப் பட்டுல எல்லாம் லாவிகிட்டுத் திரியுறானாம்.’’

‘‘வெளையுற நிலம்டா…’’

‘‘எம்புட்டு கிடைக்கும்?’’

‘‘ஏழு எட்டு உசுரு இத நம்பித்தான்டாங்கு றேன். அப்புறம் விடமாட்டேங்குறவன்.’’

‘‘சொளையா தாரேங்குறான். நம்ம ஆயுசுக்கும் பாக்க முடியாத தொகை!’’

மாசானமுத்து காலில் சூட்டை உணர்ந்தான். தகதகவென்று சூடு நிறைந்துவிட்டது. காலை மாற்றிப்போட்டு நின்றான். ஒரு செருப்பையாவது போட்டு வந்திருக்கலாம். இது அவசரத்தில் மறந்துவிட்டதல்ல. காலத்தை நொந்து என்ன பயன்?

எங்கு திரும்பினாலும் கட்டடங்கள். தூரத்தில் ஒரு ஃபேக்டரியில் ஸ்டீல் கூரை தகதக வென்று மின்னியது. மின்னல் சொடுக்கினாற் போல் அங்குமிங்கும் அந்த ஒளி தெறித்துக் கொண்டு இருந்தது. சற்று கூர்மையாகப் பார்த்தால் ஒளி வெள்ளமாய்க் காட்சி தந்தது. சற்றுத் தொலைவு நடந்து, திரும்பினால் செல்போன் கம்பெனி. அப்பால், இதோ இங்கி ருந்தே தெரியுதே செயின்ட் கோபேன் கண்ணாடி கம்பெனி. ஒரு மைல் தொலைவு கடந்தால் கார் கம்பெனி. இன்னும் என்னென் னவோ வரப்போற தாம்! கம்பெனி பஸ்ஸ§ம் காரும் நகர்ந்த மணியமாகவே இருக்கிறது. ஒரு காக்கா குஞ்சைக் காண முடியாத இந்தப் பக்கம் இத்தனை ஜனக்கூட்டமா? எங்கிருந்தோவெல்லாம் வந்திருக்கிறார்கள். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது!

தன் குடும்பம் படும் பாடுகளைப் பற்றி நினைத்துக்கொண்டே நின்றான் மாசானம். தள்ளுவண்டியில் வாழைப் பழத் தார்களை ஒரு காடா விளக்கு வெளிச்சத்தில் வைத்துத் தள்ளிக்கொண்டு, வீதி வீதியா… வீடு வீடா கூவிக் கொண்டு, அப்போதும் அவனுக்குக் கட்டுப்படியாக வில்லை. மாசச் சம்பளம் என்று ஒன்று அவனுக்கு வரும்படி இருந்தால் தேவலை. அப்படித் தான் நினைத்தான். என்ன வாழ்க்கை? அன்றாடச் சித்திர வதையிலே இந்தச் ஜென்மம் முடங்கிவிடவா வேண்டும்? தாத்தா இந்தத் தோட்டத்துடன் இருக்கும்போது, அது ஒரு தினு சாகத்தான் இருந்தது. புதையல் கிடச்சாப்லயோ மண்ணுல பொங்கினாப்லயோ இல்லை. அடுத்த வேளைக்கு என்ன செய்யுறதுனு ஒருபோதும் திகைக்கப் பண்ணிவிடவில்லை அந்த மண்!

அந்தத் தென்னை யையே நோட்ட மிட்டுக்கொண்டு இருந்தான். அந்தத் திசை யில் அந்தத் தென்னை யைத் தவிர ஒன்றும் பார்ப்பதற்கில்லை. வெட வெடவென்று உயர்ந்த தென்னை. அதன் உச்சிக் கீற்று. சற்று வளைந்து, அப்புறம் வழவழவென்று நீண்ட அதன் உடல். மெள்ள மெள்ள அந்தத் தென்னையின் நிழலை நெருங்க நெருங்க, அது நிற்கின்ற தினு சும் பேசுகிற பேச்சும் பெரிய ஆச்சர்யத்தைத் தோற்றுவித்தது. இன்னும் நெருங்க நெருங்க நெஞ்சே வெடிச்சுவிடும் போல் இருந்தது. இது தற்செயலாக நடந்ததாக அவனால் நம்ப முடியவில்லை!

வண்டி மாடு கட்டி இந்தத் தோட்டத்துக்கு வந்த நினைப்பு நெஞ்சில் நீந்தியது. அடர்ந்த தோட்டத்தையும் பறவைகள் சிலீ ரென்று ஒரு சேர உயரப் பறப் பதையும் பார்த்ததும் ‘யப்பா’ என்று வீறிட்டது இன்னும் ஞாபகத்தில் ஒட்டியிருந்தது. தாத்தாவின் தோஸ்து ராமுடு மாமா, ‘‘தென்னைமரம் ஏறுறீகளா முதலாளி’’ என்று நெஞ்சைத் தடவிக்கொண்டே வருவார்.

‘‘ம்…’’ என்பான். ஆவல் பொங்கும்.

‘‘மரம் ஏறத் தெரியுமா?’’

தலை ஆடும்.

‘‘ஏறுங்க பாப்போம்.’’

அந்தத் தென்னையின் உயரம் பார்த்து, வியப்பான். நெருங்கி நெஞ்சோடு அந்தத் தென்னையைச் சேர்த்து அணைத்துக் கொள்வான். அவன் பிடிக்குள் அது அகப் படாது.

‘‘எளநி குடிக்கிறீகளா முதலாளி?’’

‘‘ம்…’’

ராமுடு மாமா, வேட்டியை மடித்து தார்பாச்சி கட்டிக்கொண்டு தவளை மாதிரி தென்னையில் தாவுவார். சடசடவென்று தாவி அவர் உயர்வதையே பார்த்துக் கொண்டு இருப்பான். அவர் உச்சிக்குப் போனதும் காற்றில் அசையும் தென்னை யோடு அவரும் அசைவது, எங்கே விழுந் திடப் போறாரோ என்று கலவரமாகவே இருக்கும். தடதடவென்று ஏழு எட்டு இளநீரைத் திருகிக் கீழேவிட்டு, அதே வேகத்தில் இறங்குவார். அரிவாளால் மடமடவென்று மட்டை சிதற சீவித் தரு வார்.

அந்த விரிந்த நிலம் அவர்கள் உழைப்பிலே ஊறிக்கிடந்தது. மண்ணைக் கொத்திக் கொத்திப் பச்சை உண்டாக்கி, அதிலே பசியைப் போக்கிக்கொண்டு இருந்தது. தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என்று சகலத்துக்கும் இந்த மண்தான் ஆதரவு. பசி யாற்றவும் பொழுதைப் பொசுக்கவும் உடம்பை ஒப்படைக்கவும் வேறு போக்கிடம்? தாத்தாவோட அப்பாவை இங்குதான் பொதச்சு வெச்சிருக்கு. கோடியில் ஒரு வகை மரம் உண்டு. அதனடியில்தான் அவர் சமாதி.

முன் பகுதி தோப்பு; பின் பகுதி தோட்டம். கூலி ஆள் கிடையாது. வீட்டில் எல்லோ ருக்கும் இந்தத் தோப்பும் தோட்டமும்தான். உழைச்சு உழைச்சு உருப்படி பண்ணிய மண். விவரம் தெரிந்த நாள் முதல் அவன் காணாத காட்சியாக அந்தத் தோட்டம் ஒரே கோலா கலமாகத்தான் இருந்தது. எந்தப் பயிர் வைத்தாலும் வாட்ட சாட்டமாகத்தான் எழும்பும். அந்த யோகத்தை நம்பத்தான் முடியவில்லை. தாத்தாவை விடாமல் துரத்தித் துரத்தி, ஒரு கட்டத்தில் அவன் காட்டிய ரூபாய் நோட்டைப் பார்த்து, வீடேதான் விழுந்துவிட்டது. அப்பா… சித்தப்பாமார்கள் எல்லோருக்கும் தொடாததைத் தொட்டுவிட்ட மாதிரி. பணம் சம்பாதிக்க எத்தனை கஷ்டப் படணும்? பரம்பரையா அந்தத் தோட்டம் நின்ற மாதிரி, தோட்டத்துக்கு அவன் கொடுத்த பணமும் நிக்கும்னு நம்பினா? தலைகுனிந்து அந்த மண்ணைக் காண வெட்கமாக இருந்தது!

வரிசை சற்று மெள்ள வேகம் பிடித்தாற் போல் இருந்தது.

‘‘செக்யூரிட்டி வேலைக்கா இத்தனை பேரு?’’

‘‘வேற வேலைக்கும் எடுப்பான்.’’

‘‘இன்டர்வியூன்னா?’’

‘‘ஏதாவது கேப்பான், படிக்கச் சொல்லுவான்?’’

‘‘இங்கிலீசுமா?’’

‘‘பார்த்துக்கலாம்…’’

இன்டர்வியூ அறைக்கு முன் ஒருவன், ஒவ்வொருவராகச் சோதித்தான். கை,கால், முகம், விரல் எல்லாவற்றையும் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு புன் சிரிப்பு. அவ்வளவுதான். உள்ளே அறைக் குள்ளும் சோதனை தொடரும். ‘உங்கள் சொல்படி’ என்று பாமரர்களாகவே அவர்கள் நின்றிருந்தனர். அதிர்ஷ்டத்தைத் தேடும் கண்கள்.

மாசானமுத்துவுக்கு உடல் முழுவதும் ஆற்றாமை சுட்டது. மனம் பயம் கொண்டது. ஊர் பேர் தெரியாதவனிடம் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. இவனுக்கு முன்னால் இருப்பவர்களும் இவனைப் போல்தான். இதே வாகுதான். இந்தப் பக்கத்து ஆட்களாகத்தான் இருக்கும். இதே மண்ணில் புழங்கிய பிறவிகளாகத்தான் இருக்கும். முதலாளிக் களை வடிந்த முகங்கள். மெள்ள நகர்ந்துகொண்டு இருந்தவன் சட்டென்று திகைத்து நின்றான். கம்பால் ஓங்கி அடித்தாற்போல் நின்றுவிட்டான்! முகம் சிதிலமடைந்த சிலை போல நின்று விட்டான். வரிசை அவனைக் கடந்து நகர்ந்தது!

– 02nd மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *