கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 14,803 
 

கண்கள் சிவக்க, கோபமாக கத்திக் கொண்டிருந்தான் குமார். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே பயப்படுவாள் அனு. அடுக்களையில் அவளுக்கு வேலையே ஓடவில்லை. பாவம் சந்தீப்… பத்து வயது சிறுவன்; அவன் முன் அழுதபடி நின்றுக் கொண்டிருந்தான்.

இதற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல், உள் அறையில் உட்கார்ந்து சாமி ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருந்தாள் அனுவின் மாமியார் ஜெயலட்சுமி.

“”இங்க பாரு சந்தீப்… உன்னோட நடவடிக்கை வரவர சரியில்லை. கொஞ்சமும் மனசில் பயமில்லை. கூட படிக்கிற பிள்ளைங்களோடு தகராறு, சண்டை. மிஸ் சொல்றதை கேட்கறது கிடையாது. இதெல்லாம் நல்ல பழக்கம் இல்லை புரியுதா… மிஸ் சொல்றதை கேட்டு நடந்துக்கணும். என்ன சொல்றது விளங்குதா?”

நியாயம்

கையில் இருந்த ஸ்கேலால், முழங்காலுக்கு கீழ், கால்களில் சுளிரென அடித்தான்.

“”அப்பா ப்ளீஸ்பா. அடிக்காதீங்கப்பா… வலிக்குது.”

“”வலிக்குதா… அப்பதான் ஞாபகம் இருக்கும். இனி இந்த மாதிரி நடந்துக்க மாட்டே. நேத்து வாசலில் பஞ்சுமிட்டாய் வாங்க அம்மாகிட்டே காசு கேட்டு, அம்மா கொடுக்கலைன்னு பாட்டிகிட்டே கேட்டியாமே… உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். பாட்டிக்கிட்டே காசு கேட்க கூடாதுன்னு…”

“”இல்லேப்பா… அம்மா தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதான் பாட்டிகிட்டே கேட்டேன். சாரிப்பா… இனி அப்படி செய்ய மாட்டேன்.”

கெஞ்சுதலுடன், அழுத கண்களுடன் பிரதீப் பார்க்க, “”சரி, சரி… உள்ளே போய் முகம் அலம்பிட்டு, ஸ்கூலுக்கு கிளம்பு…”

அடித்த கணவனை விட, உள்ளே அமைதியாக உட்கார்ந் திருக்கும் மாமியார் மீது அனுவுக்கு கோபம் வந்தது. குழந்தையை திட்டி, அடிக்கிறாரே… போய் தடுப்போம் என்றில்லாமல், தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல், கல் போல அமர்ந்திருக்கும் மாமியாரை நினைக்க, எரிச்சல் வந்தது.
அம்மா மீது மிகவும் மரியாதை வைத்திருப்பவன் குமார். அம்மா சொல்லை தட்ட மாட்டான். எந்த விஷயத்தில் குமார் கோபப்பட்டு கத்தினாலும், உடனே தலையிட்டு, அவனை சாந்தபடுத்துவாள். அப்படிபட்டவள், குழந்தையை குமார் அடிக்கும்போது, தடுக்க வராமல் அமைதியாக இருப்பது… மாமியாரின் மேல் அவளை கோபம் கொள்ள செய்தது.

முகம் சோர்ந்து சந்தீப், மவுனமாக ஸ்கூலுக்கு கிளம்ப, “”அனு… சந்தீப்பிற்கு தட்டில் டிபன் வைத்து கொடு; நான் ஊட்டி விட்டு அனுப்பறேன்.”

இதில், ஒன்றும் குறைச்சலில்லை. பேரன் மேல் அக்கறை இருப்பது போல் காட்டி கொள்கிறாள் என, மனதில் முணுமுணுத்தபடி, டிபன் தட்டை மாமியாரிடம் கொடுத்தாள்.

குமார் ஆபிசுக்கு செல்ல, சந்தீப் ஸ்கூலுக்கு சென்றுவிட, பாத்திரங்களை ஒழித்து தேய்ப்பதற்கு போட்ட அனு, வேலைக்காரி மரகதம் உள்ளே நுழைவதை பார்த்தாள்.

ஜெயலட்சுமி குளித்துக் கொண்டிருக்க, “”மரகதம், முதலில் வீட்டை பெருக்கி துடைச்சுடு; அப்புறம் பாத்திரம் தேய்க்கலாம்.”

“”சரிம்மா. பெரியம்மா எங்கே… குளிக்கிறாங்களா?” கேட்டபடி, துடைப்பத்தை எடுத்து, வீட்டை பெருக்க ஆரம்பித்தாள்.

குளித்துவிட்டு வந்த ஜெயலட்சுமி, அனுவை பார்த்து, “”அனு… நீ சாப்பிடு. நான் சாமி கும்பிட்டு, அப்புறமா சாப்பிடறேன். டேபிள் மேலே நாலு இட்லி எடுத்து வச்சுட்டு, உன் வேலையை பாரு.”

“நேரத்துக்கு சாப்பிட்டு ப்ரஷர் மாத்திரை போட்டுக்கணும்… முதலில் சாப்பிடுங்க…’ சாதாரணமாக அனு அப்படி தான் சொல்லியிருப்பாள். இன்று மாமியார் மீது கோபமாக இருப்பதால், ஒன்றும் பதில் சொல்லாமல், அடுக்களையில் நுழைந்தாள்.

“”என்னம்மா முகம் வாடியிருக்கு… குளிச்சுட்டு வந்திருக்கீங்க… சாப்பிட வேண்டியது தானே. மணியாகலையா?” வீட்டை பெருக்கியபடி மரகதம் கேட்க, “”மனசு சரியில்லை மரகதம். சந்தீப்பையே நினைச்சுட்டு இருக்கேன்.”

சந்தீப் பெயர், அவர்கள் பேச்சில் அடிபட, என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை கவனித்தாள் அனு.

“”ஏன்ம்மா… புள்ளைக்கு என்ன ஆச்சு… உடம்பு சரியில்லையா… நல்லா தானே ஸ்கூலுக்கு போயிருக்கு.”

“”அதில்லை மரகதம்… காலையில் குமார், அவனை சப்தம் போட்டு அடிச்சுட்டான். அவன் முகம் சோர்ந்து, ஸ்கூலுக்கு போனதை நினைச்சுக்கிட்டேன்; சாப்பிட கூட பிடிக்கலை.”

“”என்னம்மா இது, குமார் ஐயா உங்க பிள்ளை. நீங்க எது சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் கேட்கற தங்கமான புள்ளை. நீங்க போயி, “அடிக்காதே’ன்னு சொல்லி தடுத்து இருக்கலாமே… அதை விட்டுட்டு… இப்ப போயி அடிவாங்கிட்டு போன பேரனை நினைச்சு… வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க…”

அனு மனதில் எழுந்த கேள்வியை, மரகதம் கேட்க, மாமியார் என்ன பதில் சொல்ல போகிறாள் என்பதை கேட்க கூர்ந்து கவனித்தாள்…

“”புள்ளையோட பழக்க வழக்கங்கள் தப்பு. அப்படி செய்யக் கூடாதுன்னு பெத்தவங்க கண்டிக்கும் போது, நான் தலையிட்டால் அது, அந்த பிள்ளையை கெடுக்கிற மாதிரி ஆயிடும். தனக்கு ஆதரவாக பாட்டி இருக்காங்க… நாளைக்கு எந்த தப்பு செய்தாலும் பாட்டி தனக்கு ஆதரவாக இருந்து காப்பாத் திடுவாங்ககிற எண்ணம், அந்த பிஞ்சு மனதில் வந்துடும். அது, அவன் போக்கையே மாத்திடும்… அது தப்பு மரகதம்…

“”வயசான நாங்க, பேர பிள்ளைங்க மேல காட்டற பரிவும், பாசமும் அவங்க நல் வாழ்க்கைக்கே குந்தகமா அமைஞ்சுட கூடாது. நேத்து, வாசலில் பஞ்சுமிட்டாய் வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு அனு, காசு கொடுக்க மறுத்திட்டா. பாட்டி கிட்டே வாங்கிடலாம்ன்னு என்கிட்டே ஓடி வந்தான்.

“” நான் காசு கொடுத்தா… அது, அவனை கெடுக்கற மாதிரி தானே அமையும். நல்லதை பெத்தவங்க எடுத்துச் சொல்லும் போது, நாம் குறுக்கிடாம, அமைதியாக இருக்கிறது தான் நல்லது. உண்மையான அக்கறையோடு கண்டிக்கிற உரிமை, பெத்தவங்களுக்கு மட்டும் தான் இருக்கு.

“”அதிலே மூணாவது மனுஷங்க, தலையீடு இருக்கக் கூடாது. அன்பையும், பாசத்தையும் காட்ட வேண்டிய நேரத்தில் தான் காட்டணும். என் பேரனை நல் வழிபடுத்தணும்ன்னு தானே கண்டிக்கிறான்னு, மனசை கல்லாக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்.

“”நிச்சயம் இனி அந்த மாதிரி தவறுகளை பேரன் செய்ய மாட்டான். அவன் நல்லவனா, வல்லவனா வளரணும் மரகதம். அதுதான் இந்த பாட்டியோட விருப்பம்.”

“”என்னவோ போங்கம்மா… நீங்க சொல்றது எனக்கு விளங்கலை. பேரன் மேலே அளவு கடந்த பாசம் வச்சிருக்கிறது மட்டும் புரியுது.”

மரகதம் வெளியேற, “”அத்தை… எழுந்திருங்க. வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம்… மணியாச்சு. சாயந்திரம் உங்க பேரன் வந்ததும் கூட்டிட்டு, கோவிலுக்கு போய்ட்டு வாங்க, உங்க மனசு சரியாயிடும்.”

உண்மையான பரிவுடன் கூறினாள் அனு.

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *