உடல் களைத்திருந்தது. எங்காவது சிறிது நேரம் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இன்னும் சிறிது தூரம் நடந்தால் பூங்காவையே அடைந்துவிடலாம் என்பதால் முயன்று நடந்தான். சாலை ஓரமாக ஒரு கிழவர் பல வெள்ளை சட்டைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வரும் போதெல்லாம் அவரை பார்த்திருக்கிறான். அவரிடம் யாரும் சட்டை வாங்கி அவன் பார்த்ததில்லை. அவருக்கு என்ன வருமானம் வரும் என்ற கேள்வி மட்டும் அவரை பார்க்கும்போதெல்லாம் மனதில் எழும். எப்படி இருந்தாலும் அவர் தன்னைவிட அதிகமாகதான் சம்பாதிப்பார் என்று எண்ணி தனக்குள் சிரித்துக் கொள்வான்.
இன்று சிரிப்பு வரவில்லை. எல்லாமே சூனியமாகி விட்டது போல் ஒரு தோற்றம். எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. பூங்காவின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமாக அமர்ந்திருந்த சிவன் மட்டும் கண்ணில் பட்டார். சிவன் சிலையை நிமிர்ந்து பார்த்து மனதிற்க்குள்ளேயே வேண்டிக் கொண்டான். உள்ளே இடது மூலையில் சற்று நிழல் இருந்தது. அங்கிருந்த மேடை மீது அமர்ந்தான். அப்படியே படுத்து உறங்கிவிடு என்று உடல் சொல்லிற்று. மனமும் வலுவிழந்திருந்தது. இரண்டு நாட்களாக அழைந்துக் கொண்டிருக்கிறான். எவ்வளவு முயன்றும் முப்பதாயிறம் தான் புரட்ட முடிந்தது. இன்னும் மூனரை லட்சம் தேவைப்படுகிறது. முழு பணத்தையும் செலுத்தியப் பின் தான் ஆபரேஷன் செய்ய முடியும் என்று மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள். அப்பா ஆரோக்கியமாகதான் இருந்தார். இப்போது சிறுநீரகத்தில் புற்றுநோய் என்கிறார்கள். அது அருகாமையிலுள்ள திசுக்களுக்கு பரவிக் கொண்டிருப்பதால் ஒரு வாரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதுவரை பரிசோதனை, ஸ்கேன் என ஐம்பதாயிரம் செலவாகி விட்டது. அப்பாவின் சேமிப்பையையும் தணிகாச்சலம் மாமா கொடுத்த காசையும் வைத்து சமாளித்துவிட்டான். அவனுடைய பர்சில் முன்னூற்றி சொச்சம் இருந்தது. இன்றைய நிலையில் அவ்வளவுதான் அவனுடைய மதிப்பு.
கடந்த சில வருடங்களாகவே அப்பாவிற்கும் அவனுக்குமான உறவு கரடுமுரடாக தான் இருந்து வந்தது. அவன் வேலையை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று சொன்னபோதே அப்பா எதிர்ப்பு கொடி பிடித்தார். அதுவும் அவன் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டான் என்பதை அறிந்ததும் அப்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார். அப்பாவுடன் போர் வெடிக்கும் போதெல்லாம் அம்மாதான் சமாதானக் கொடிப் பிடிப்பாள்.
“எல்லாரும் ஒரு நாள் சாவதானமா போறோம். எனக்கு புடிச்ச வேலைய செய்யணும்னு நினைக்குறேன். தப்பா?”
“ஆமா பெரிய வேலை. டைரக்டருக்கு பொட்டி தூக்குற வேலை” அப்பாவும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசுவார்.
“அவருக்கு B.P இருக்குடா. நீதான்டா அடங்கிப் போனும்” அம்மா இவனைதான் எப்போதும் ஆசுவாசப் படுத்துவாள். ஆனால் பலன் இருக்காது. இவன் மீண்டும் குதிப்பான்.
“படம் எடுக்குற மூஞ்சப் பாரு. அன்ஃபிட் பெல்லோ. வடபழநில பிச்ச தான் எடுக்கப் போறான்”
பிரச்சனை உச்சத்தை அடையும் போதெல்லாம், தன் கணவனையும் மகனையும் எப்படி அடக்க வேண்டும் என்று அம்மாவுக்கு தெரியும்.
“தட்டுவாணி முண்ட. என்ன இந்த குடும்பதுல குடுத்துட்டா…” அம்மா தன் வாழ்க்கையையே நொந்துக் கொள்ள தொடங்கியதும் அப்பாவும் பிள்ளையும் தத்தம் வேலையை பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். மீண்டும் ஓரிருநாளில் போர் நடக்கும். இப்படியாக போர் செய்து இருமனதாக சமாதானம் ஆகி, மீண்டும் முட்டிக் கொண்டு காலம் கடந்துக் கொண்டிருந்த ஒரு காலை வேளையில் அவனும் வழக்கம் போல் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல கிளம்பினான். இரண்டரை வருடங்களுக்கு முன்பு தன் முதல் திரைக்கதையை எழுதி எடுத்துக் கொண்டு கிளம்பிய அன்று இருந்த வேகம் இப்போதெல்லாம் இல்லை. ஒரு கதைச் சொல்லச் செல்லும் இடத்தில் வேறொரு கதையை சொல்ல சொல்வார்கள். இப்படியாக இரண்டு மூன்று திரைக்கதைகள் எழுதி முடித்துவிட்டான். ஆனால் எதுவும் அடுத்தக் கட்டத்திற்கு நகரவில்லை. வீட்டு வாசற்படியை கடக்கையில் கையில் பால், தினசரியுடன் அப்பா உள்ளே நுழைந்தார். தன் பாணியில் ஆசீர்வாதம் செய்யாமல் அவனை வெளியே எப்படி அனுப்புவது என்று நினைத்தாரோ என்னவோ,
“அடுத்த ப்ரொடியூசரா? விளங்கிடும்” என்று சொல்லிவிட்டு இவன் பதிலை எதிர்பார்க்காதவராய் அவனை கடந்து சென்றார். அப்பாவிற்கு உடலெல்லாம் வியர்த்திருந்ததை கவனித்தான். மேலும் அவர் உடலில் ஏதோ நடுக்கும் இருந்தது. அதனால் வழக்கத்திற்கு மாறாக அப்பாவிற்கு பாந்துவமாக பதிலளித்தான்.
“இது புது கதைப்பா. பெரிய ஹீரோ சப்ஜெக்ட். கன்பார்மா வொர்க் ஆகும்”
“ஆமா பெரிய….” சொல்லிமுடிப்பதற்கு முன் அவர் வாசலிலேயே சரிந்து விழுந்தார்.
“அம்மா”
சப்தம் கேட்டு அம்மா பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.
யாரோ தன் தோளை உலுக்குவது போல் இருந்தது. விழித்துப் பார்த்தான். சிவனின் முதுகு தெரிந்தது. கண்களை துடைத்துக் கொண்டான். இப்போதுதான் தாம் எங்கு இருக்கிறோம் என்று விளங்கியது. “தம்பி இங்கலாம் தூங்கக் கூடாது.” என்று சொல்லிவிட்டு பூங்கா காவலாளி கடந்து சென்றான். சட்டைப் பையிலிருந்து மொபைல் போனை எடுத்து நேரத்தை பார்த்தான். 4.05. இந்நேரம் பாஸ்கர் சார் வந்திருக்க வேண்டும். பூங்காவில் இருந்த குழாயில் முகத்தை கழுவிக் கொண்டான். பாஸ்கர் சாருக்கு ஃபோன் செய்யலாமா என்று யோசிக்கும்போது பாஸ்கரின் இருச்சக்கர வாகனம் பூங்காவின் முன் வந்து நின்றது.
இருவரும் பூங்காவை வலம் வந்தவாறே பேசினர். பாஸ்கர் பேச இவன் அமைதியாகக் கேட்டிக்கொண்டிருந்தான்.
“அப்பா தான்பா முக்கியம். படம் எப்ப வேணாப் பண்ணலாம். உன் கதை ஒன்லைன் புடிச்சிருந்துனுதான் சார் கிட்ட வந்து சொல்ல சொன்னேன். ஆனா நீ வராத வரைக்கும் நல்லது. அவர் ப்ரொடியூஸ் பண்ண ரெண்டு படத்துலயும் டிஸ்ட்ரிபியூஷன் பிரச்சனை. இதுல ஃபைனான்ஷியரோட தகராறு வேற. நீ இப்ப சார்கிட்ட வந்து கதை சொன்னாலும் வேஸ்ட். அவருக்கு கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. கதைய வாங்கிவச்சுகிட்டு இழுத்தடிப்பாரு. வேற ஐடியா சொல்றேன் கேக்குறியா?”
அவன் என்ன என்பது போல் பார்த்தான்
“ஆப்ரேஷனுக்கு காசு வேணும்னு சொன்னே இல்ல…?”
அவன் அப்போது இருந்த சூழலில் தலை அசைப்பது மட்டுமே எளிதாக இருந்தது.
“நமக்கு தெரிஞ்ச டைரக்டர் ஒருத்தர் இருக்கார். பெரிய பார்ட்டி. அடுத்த படத்துக்கு கதை தேடுறாறு. உன் சப்ஜெக்ட் நல்லா இருக்கும்னு தோணுது. இது பெரிய ஹீரோ சப்ஜெக்ட். உன்னாலலாம் ஹாண்டில் பண்ண முடியாது. ஸ்கிரிப்ட்ட குடுத்துரு. ரெண்டு நாள்ல நல்ல அமெளண்ட் வாங்கிக்குடுத்துறேன்”
“கிரெடிட் சார்!”
பாஸ்கர் இவன் அருகில் வந்து இவன் தோளில் கைப்போட்டான். “படம் ஆயிரம் பண்ணலாம். முதல அப்பாவ பாரு. அப்பறம் வேற கதை பண்ணிக்கலாம்.” சொல்லிவிட்டு பாஸ்கர். செருப்பை ஓரமாக கலட்டிவிட்டு சிவனை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டான். இவன் பூங்காவின் வெளியே பார்த்தான். அந்த கிழவரிடம் ஒருவன் சட்டை வாங்கிக் கொண்டிருந்தான்.
***
அப்பாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து சுயநினைவு திரும்பி இருந்தது. ஐ.சி.யூவுக்குள் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்பதால் அம்மா உள்ளே இருந்தாள். தணிகாச்சலம் மாமா அப்பாவிற்கு சில மாத்திரைகள் வாங்க சென்றிருந்தார். ஐ.சி.யூ வாசலில் இருந்த பெரிய மீன்தொட்டிக்குள் பெரியதும் சிறியதுமாக நீந்திக் கொண்டிருந்த மீன்களையே பார்த்தவாரு இவன் நின்றுக் கொண்டிருந்தான். தொட்டிக்கு மேலே இருந்த குழாய் வழியாக மீன் உணவு கொஞ்சம் கொஞ்சமாக தொட்டிக்குள் விழுந்துக்கொண்டிருநது. ஒவ்வொரு மீனும் தனக்கான உணவை மட்டும் உண்பதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
தணிகாச்சலம் மாமா இவனை கடந்து அறைக்குள் சென்றதை அவன் கவனிக்கவில்லை. மாத்திரைகளை முன்னறையில் அமர்ந்திருந்த நர்ஸிடம் கொடுத்துவிட்டு, வெளியே இவன் அருகில் வந்து நின்றார். அவருக்கும் அப்பா வயசுதான். அவரும் அப்பாவும் ஒரே பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியர்களாக வேலை செய்தவர்கள். இவன் அவரை பார்த்து சிறு புன்னகை மட்டும் புரிந்தான். அவரே பேச்சைத் தொடங்கினார்.
“அம்மா சொன்னாங்க. கதைல்ல தான் காசு வந்துச்சாம்”
இவனுக்கு உள்ளுக்குள் ஒரு கணம் பெருமித உணர்வு தோன்றி மறைந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தலையை மட்டும் அசைத்தான்.
“எல்லாரும் ஒரு நாள் சாவப் போறோம்னு சொல்லுவியே? அப்பா போட்டும்னு விட வேண்டிதானா?”
“மாமா…..” என்று பதட்டமாக அவரை அடக்கினான்.
“முடியாது இல்ல.. ஏனா அப்பன். அதே மாதிரிதான அவனுக்கும். அவன் புள்ள நீ நல்லாருக்கணும்னு தான நினைப்பான்?”
இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“நிகழ்தகவுக் கோட்பாடு தெரியுமா?” மாமா கேட்டார். அவன் விழித்தான்.
“தெரியாது! இங்கிலீஷ் மீடியம் படிச்ச புள்ள இல்ல. நிகழ்தகவுனா ப்ராபபிலிட்டி. ஒரு காச சுண்டிவிட்டா பூவும் விழும் தலையும் விழும். அதான் ப்ராபபிலிட்டி. அதான் வாழ்க்கையும். பூ மட்டும்தான் விழப் போதுனு நினச்சு நீ வாழ்க்கைய வேஸ்ட் பண்ணுனீனா நீ முட்டாள். இப்ப உனக்கு வயசு இருக்கு. படம் எடுப்பேனு தைரியமா சொல்ற. நீ படம் எடுத்த சந்தோஸப் படுற முதல் ஆளு உங்க அப்பனாதான் இருப்பான். ஆனா ஒருவேளை எடுக்கலனா? இன்னும் பத்து வருஷம் இப்படியே ஓடிருச்சுனா? உன் கூட படிச்சவன்லாம் சம்மாதிச்சு செட்டில் ஆகிருப்பான்? நீ?”
“காசு மட்டும்தான் வாழ்க்கையா மாமா?”
“இல்ல. காசுமட்டுமே வாழ்க்கை இல்ல… ஆனா இன்னைக்கு காசு குடுத்ததுனாலதான உங்க அப்பனுக்கு ஆபரேஷன் பண்ணுனாங்க?”
மாமாவை ஆமோதிக்கும் வகையில் பேசாமல் இருந்தான்.
“காசுக்காக உன்ன வாழ சொல்லல. ஆனா வாழ்றதுக்கு காசு வேணும். அது தான் உங்க அப்பனோட கவலை. நீ அவனுக்கு அப்பறம் கஷ்டப்படக் கூடாதுனு தான் உன்ன மோசமாலாம் திட்டுவான். உன் மேல இருக்குற அக்கறைய அவனுக்கு கோவமா தான் வெளிப்படுத்த தெரியும். ஏனா அவன் கஷ்டத்துலயே வளந்தவன். அவனுக்கு கிடைக்காத சலுகைலாம் உனக்கு கொடுத்தும் நீ அத பயன்படுத்திக்கிலங்க்ற கோவம்தான் அது. ஆனா உன்ன ஒவ்வொரு முறை ஏதாவது பேசிட்டு என் கிட்ட வந்து தான் வருத்தப் படுவான். உன்கிட்ட எல்லா திறமையும் இருந்தும் சினிமா சினிமானு எல்லாத்தையும் வேஸ்ட் பண்றனு. உண்மைய சொல்லு. ஒருநாள் கூட நீ பீல் பண்ணுனது இல்ல? ஏன் வேலையா விட்டோம்னு?“
மாமாவிடம் பொய் சொல்ல முடியாது. ‘ஆம்’ என்று தலை அசைத்தான்.
“வேலையா விட்டா லைஃப்ல பல பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான வேலைய விட்டுருப்ப. ஆனா வேலைய விடும் போது இருக்குற கான்ஃபிடன்ஸ் ஒரு கட்டத்துக்கு மேல இருக்காது. அதான். யதார்த்தம். அந்த யதார்த்தம் எங்களுக்கு புரிஞ்சதுனாலதான் வேலைக்கு போ சொல்றோம்”
“அப்ப மனசுக்கு புடிச்ச வேலைய விட்டுட்டு புடிக்காத வேலைய எப்டி செய்றது?”
“இஞ்சீனியர் வேலை புடிக்காம போனதாலா சினிமா புடிக்க ஆரம்பிச்சிதா? இல்ல சினிமா புடிச்சதால இஞ்சீனியர் வேலை புடிக்காம போச்சா?”
இந்த கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.
“மனசுக்கு புடுச்சது புடிக்காதது எல்லாம் காலம் தான் முடிவு பண்ணனும். உனக்கு சினிமா எடுக்கணும் ஆசை. சந்தோஷம். ஆனா அதுல வருமானம் வரல. வருமானதுக்கு இப்போதைக்கு ஒரு வேலை பாத்துக்கோனுதான் சொல்றோம். இருபத்தினாலு மணி நேரமா வேலை செய்ய போற? ப்ரீ டைம்ல சினிமால கவனம் செலுத்து. எல்லாமே அந்தஅந்த டைம் வந்தாதான் நடக்கும். அது நடக்கும் போது நீ இருக்கணும். ஆரோக்கியமா இருக்கணும். லட்சியம் வெறினு நீ வெளில பேசலாம். உன் அப்பன் கிட்ட சண்டை போடலாம். ஏனா அவன்கிடா மட்டும்தான் உனக்கு சண்டை போடுற உரிமை இருக்கு. ப்ரொடியூசர் சட்டைய புடிச்சு சண்டை போடமுடியாது.
“ரொம்ப வருஷம் கழிச்சு நம்மலால மத்தவங்க மாதிரி சம்பாதிக்க முடியாம போச்சேனு நீ ஒரு செகண்ட் நினச்சினா அதுதான் உன்னோட பெரிய தோல்வி. உடம்பும் வீணாகி மனசும் வீணாகி கடைசில உன் மேலையே உனக்கு கோவம் வந்துரும்.
“தண்ணிக்கு வெளிய இருக்கும் போது மூச்சு முட்டாது. இறங்கி நீந்தும் போதுதான் மூச்சு மூட்டும். அப்படி மூச்சு முட்டுனா ஏதாவது பாறைய புடிச்சுக்குறதுதான் புத்திசாலித்தனம். அதுக்கப்பறம் மறுபடியும் எப்ப வேணா நீந்தலாம். ஆனா நான் பின்வாங்க மாட்டேன், விடாம நீந்திக்கிட்டேதான் போவேன்னா மூச்சு முட்டி தான் சாகனும். எப்ப தண்ணிக்கு வெளிய தலைய தூக்கணும்னு தெரிஞ்சவந்தான் புத்திசாலி. நீ புத்திசாலினு நான் நம்புறேன்”
மாமா சொல்வதில் இருக்கும் நியாயம் அவனுக்கு புரிந்துவிட்டதாலோ என்னவோ மாமாவை எதிர்த்து பேசவில்லை. சிலை போல் நின்று மாமா சொல்வதை கவனித்தான்.
“உன் அப்பன் என்னைக்காவது சொல்லிருப்பானா? சம்பாதிக்காம வீட்டுக்குள்ள வராதனு? அவனுக்கு தேவை உன் காசு இல்ல. உன் தேவைய நீ பூர்த்தி செஞ்சிக்கணும். அவன் காலத்துக்கப்பறம் நீ யார் கையையும் எதிர்ப்பார்க்கக் கூடாதுனுதான் அவன் நினைக்குறான். உன் மனசுக்கு புடிச்ச வேலையை செய். ஆனா உன் மனசு எப்பவும் திடமா இருக்குறதுக்கு என்னலாம் செய்யனுமோ அதெல்லாம் செஞ்சிட்டு அந்த வேலைய செய். அதுக்கு இன்னொரு வேலைக்கு போனுனாலும் போ”
அவனுக்கு தனியாக சிந்திக்க நேரம் தர வேண்டும் என்று நினைத்த மாமா, சாப்பாடு வாங்கிவருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றார். இவன் எதையோ யோசித்தவாறே மீண்டும் அந்த மீன் தொட்டியை பார்த்தான். முன்பு கவனிக்காத ஒன்றை இப்போது கவனித்தான். பெரிய மீன்கள் எல்லாம் தொட்டியின் மேல் பகுதியில் நீந்திக் கொண்டிருக்க, மிகச் சிறிய சில மீன்கள் தொட்டியின் அடிப்பகுதியில் உணவின்றி தவித்திக் கொண்டிருந்தன. புதிதாக பிறந்த மீன்களாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். எந்த மீனும் குட்டி மீன்களைப் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. மீன்கள் தன் குட்டிகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாது என்பதாக எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. திடீரென்று தொட்டியின் மேல் பகுதியில் நீந்திக் கொண்டிருந்த ஒரு பெரிய மீன், உணவை தன் வாயால் கவ்வி தொட்டியின் அடிப்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த சிறிய மீன்களை நோக்கி துப்பியது. சிறிய மீன்கள் அந்த உணவை உண்டன. மீண்டும் மேல் பகுதிக்கு சென்று உணவைக் கவ்வி மீண்டும் கீழ் நோக்கி நீந்தியது. அவனை அறியாமலேயே அவன் உதட்டில் புன்னகை பூத்து மறைந்தது.
“அப்பா கூப்பிடுறாரு” அம்மா வந்து சொன்னாள்.
இவன் உள்ளே நுழைந்தான். அம்மாவும் உடன் நுழைந்தாள்.
“ஒருத்தர் தான் அலௌட்னு டாக்டர் சொன்னாரு இல்ல” என்று முன்னறையில் அமர்ந்திருந்த நர்ஸ் கத்தினாள். அம்மா, ‘சரி சரி’ என்றவாறே வெளியே வந்துவிட்டாள். இவன் மட்டும் உள்ளறைக்குள் சென்றான். படுத்திருந்த அப்பா, இவனை பார்த்ததும் உடலை அசைக்க முயன்றார். முடியவில்லை.
“வேணாம்ப்பா” என்றவாறே அவர் கையை பிடித்தான்.
அவரும் இவன் கையை பற்றிக் கொண்டு சிறிது நேரம் அவன் கண்களையே உற்றுப் பார்த்தார். அப்பாவுடன் ஏதாவது பேசவேண்டும் என்று தோன்றினாலும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. மௌனமாக இருந்தான். அப்பா மிகவும் வலுவற்றிருந்தார். இவனைப் பார்த்து புன்னகைச் செய்தார். இவன் பதில் புன்னகைப் புரிந்தான். ஒருவாரமாக சரியான தூக்கம் இல்லாதததால் இவன் உடலும் களைத்திருந்தது. ஆனால் இப்போது மனம் மட்டும் திடமாக ஆகி இருந்தது.
– October 2015