கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 26,110 
 

நான் செய்தது சரியாஅந்த போஸ்டல் டிவிஷனில் சூப்பரின்டெண்டன்ட் ஆகப் பொறுப்பு எடுத்து ஒரு மாதம் ஆகியும் என் வேளை பளு என்னவோ குறையவே இல்லை. எனக்கு முன்பு வேலை செய்தவரின் பெண்டிங் வேலைகள் ஒவ்வொன்றையும் கிளியர் செய்வதற்கு இவ்வளவு நாள் ஆயிற்று. இன்று சனிக்கிழமை. ஏதாவது ஆபீஸ் விசிட் பண்ணிவிட்டு ரிப்போர்ட் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.

பொதுவாக வார விடுமுறையாக சனிக்கிழமைகளில் ஸ்டெனோவையோ, ஜீப் டிரைவரையோ அழைத்துப் போகும் பழக்கம் கிடையாது. நான் மட்டும் எந்த ஊர் போக வேண்டுமோ தனியாகப் போய் வந்த பிறகு ரிப்போர்ட்களை பிராஞ்சில் கொடுத்துவிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன்.

பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன் நான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்று நினைத்தேனோ, அந்த பஸ் கிளம்பத் தயாராக இருந்தது. அதில் ஏறிக்கொண்ட பிறகு, அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஊர் வந்ததும் என்னை இறக்கிவிட்டுச் சென்றது பேருந்து.

இருபது வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஊரில் காலை வைக்கிறேன். பெரிய மாற்றம் ஏதும் காணப்படவில்லை. பஸ் ஸ்டாண்ட் என்று பெயரளவிற்கு அப்போது கொட்டகையாக இருந்தது. இப்பொழுது கட்டடமாக உருவாகி உள்ளது. வழக்கமாய் சாப்பிட்டு வந்த மணி அய்யர் ஹோட்டல் விரிவாக்கம் செய்யப்பட்டு கொஞ்சம் மாடர்னாக இருந்தது. ஹோட்டலில் டிபன் சாப்பிடலாம் என்று நுழைந்த என்னை மணி அய்யரின் பையன் ரமணி அடையாளம் கண்டு வரவேற்றான்.

“வாங்க வாசு சார், எப்படி இருக்கீங்க? எந்த ஊர்ல வேலை பாக்கிறீங்க? ஏது இவ்வளவு தூரம்?”, கேள்வி மேல் கேட்க…

“பரவாயில்லையே ரமணி, என்னை ஞாபகம் வைச்சிருக்கீங்க?”

“எப்படி சார், மறக்க முடியும்?. நீங்க இந்த ஊர் போஸ்ட்டாபீசில் கிளார்க்காக வேலை பார்த்தபோது எவ்வளவு உதவி செஞ்சிருக்கீங்க. ஒங்க மூலம் தானே என் தங்கைகள் மூணு பேருக்கும் நல்ல வரன் அமைஞ்சு நல்லவிதமா செட்டிலாகி இருக்காங்க.”

“அதை விடு ரமணி. அதைப் போயி பெரிசா பேசிக்கிட்டு. ஆமாம், அப்பா எப்படி இருக்கார்?. எங்கே கல்லாவிலே காணோம்?”

“ஐந்து வருடத்திற்கு முன்பு அப்பா தவறிட்டாரு. அதற்கு அடுத்த வருடமே அம்மாவும் தவறிட்டாங்க. நானும் என் மனைவியும் தான் ஹோட்டலை நிர்வகித்து வரோம். ஒரே பையன் சாப்ட்வேர் இன்ஜினியரா சென்னையில் வேலை பார்க்கிறான் சார். ஆமாம் சார், நான் கேட்ட கேள்விக்குப் பதிலே வரலையே?”

“எங்க எண்ணெய் பேசவிட்டே நீ! நான் இந்த போஸ்டல் டிவிஷனுக்கு சூப்ரன்டாக ஜாயின் பண்ணியிருக்கேன். ஒரு மாசமா எங்கேயும் கிளம்ப முடியலை. இன்னிக்கு சனிக்கிழமைதானே, ரிலாக்ஸா இந்த ஊர் ஆபீஸ் இன்ஸ்பெக்க்ஷன் எடுத்துட்டு அப்படியே கோயில் சாமி தரிசனம் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்..”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். அப்பவே நீங்க பெரிய ஆபிசரா வருவீங்கன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்வார். அவர் சொன்னது பலித்ததில் சந்தோஷம் சார். வேலை முடிஞ்சதும் லன்ச் சாப்பிட வந்துடுங்க. நீங்க வேலை பார்த்த அதே இடத்திலே தான் போஸ்ட் ஆபிஸ் இருக்கு. நான் வேணும்னா கொண்டு விடட்டுமா?”

“இல்லை ரமணி, காலாற நடந்து போறதே சுகம். பக்கத்திலேதானே இருக்கு. நான் போய்க்கிறேனே”. உதவிதான் நான் செஞ்சிருப்பேன். அதற்கு இவ்வளவு நன்றியும் மரியாதையுமா?

இருபது வருடத்திற்கு முன்பு, முதன் முதலில் நான் கிளார்க்காக ஜாயின் பண்ணிய போஸ்ட் ஆபிஸ் அப்படியே இருந்தது. சில அரசுக் கட்டிடங்களுக்கு வயசாவதில்லை. போஸ்ட்டாபீஸ் உள் நுழைந்து கவுண்டரில் இருக்கு நபரைப் பார்த்தேன். ஆச்சர்யமாக இருந்தது.

போஸ்ட் மாஸ்டரும் என்னைப் பார்த்தவுடன், “அடடே, வாங்க வாசு, எப்படி இருக்கீங்க? எந்த ஊர்ல வேலை பார்க்கிறீங்க? அம்மா, அப்பா சௌக்கியமா? ஏது இவ்வளவு தூரம்?. அவுஸ் ஓனரைப் பார்க்க வந்தீங்களா? அவங்க காலமாயிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். நீங்க மெட்ராசுக்கு தந்தி ட்ரெயினிங் போன பிறகு நானும் நாலஞ்சு ஊர்ல வேலை பாத்துட்டு மீண்டும் ஒரு டெனியூர் இங்கே வந்திருக்கேன். இன்னும் மூணு மாதத்திலே ரிடையர்மெண்ட்”.

போஸ்ட் மாஸ்டர் சோமசுந்தரத்தின் அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறாமல் எதுவும் பேசாமல் என்னுடைய ஐ.டி. கார்டை காண்பித்ததும், அதுவரை உட்கார்ந்து பேசிய சோமு சார் சடாரென்று எழுந்து “சாரி சார்! யாரோ புதுசா சூப்பிரண்டு ஜாயின் பண்ணியிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அது நீங்கன்னு தெரியாம போச்சி”. தாம் உட்கார்ந்திருந்த சேரை நன்கு துடைத்து பின்பு அதில் என்னை உட்காரச் சொல்லிவிட்டு அவர் நின்றுகொண்டே பேசினார்.

நான் கிளார்க்காகச் சேர்ந்தபோது இருந்த அதே போஸ்ட் மாஸ்டர். இன்னும் அதே நிலையில் இருக்கும் இந்த மனிதன் என் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவர்.

“மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கறேன் சார். கிளார்க் இன்னிக்கு லீவு. நான் மட்டும்தான். பிராஞ்சு ஆபிஸ் பைகள் கட்டியாச்சி. போஸ்ட் மேன் கிளம்பிப் போயிட்டார் சார்.”

“பரவாயில்லை சோமு சார், விடுங்க. ரிலாக்சா இருங்க. அக்கவுன்டஸ், கேஷ் டெய்லி ட்ரான்ஸ்கசன்ஸ் ரிப்போர்ட், மத்த ரிகார்ட்களையும் டேபிள் மீது வையுங்க. வேலை முடிஞ்சதும் மத்த விஷயங்கள் பேசலாம். இப்ப வேலையைப் பார்க்கலாம்.”

கேஷ் பாக்ஸை எடுத்து டேபிளில் வைக்கும் போதே அவர் கை நடுக்கத்தைக் கவனிக்க நேர்ந்தது. ஒவ்வொரு டினாமினசமாக கேஷ் டேலி பண்ணும் போது ரூ.10000 குறைவாக இருந்தது. பல குறைகள். மொத்தத்தில் எந்த வேலையும் திருப்திகரமாகப் படவில்லை எனக்கு.

சோமு சார், அப்படி வேளையில் பெண்டிங் வைப்பவர் இல்லையே? ஆபீஸ் பண விஷயத்திலேயும் கரெக்டா இருப்பவர் ஆச்சே! என்ன ஆச்சு இவருக்கு?.

“என்ன சோமு சார்?. வாட் ஹாப்பண்ட்?. எப்படி ரூ.10000 குறைவாக இருக்கு?. எந்த ரிகார்டும் சரியில்லை”. நான் கொஞ்சம் கடுமையாகவே சத்தம் போட்டேன். என் சப்தம் கேட்டு, குவார்டர்ஸிலிருந்து அவர் மனைவி மீனாட்சி எட்டிப்பார்த்தார். அவரைப் பார்த்ததும் மனம் கனத்தது.

என்னை பார்த்ததும் புரிந்துகொண்டு அழ ஆரம்பித்து விட்டார். “ப்ளீஸ்…எந்த நடவடிக்கையும் எடுக்காதீங்க. கொஞ்சம் டயம் கொடுங்க சார்”

“சரி, மீனாட்சியம்மா, ஒங்களுக்காக நான் ஒரு மணி நேரம் தரேன். வெளியே போய்ட்டு வருவதற்குள் எல்லாம் சரி செஞ்சு வைங்க” என்று வெளியே வந்து நான் வாழ்ந்த அக்ரஹாரத்து வீட்டைப் பார்க்கப் போனேன். ரூம் வேண்டாம் என்று வீடு தேடி வந்த அந்தத் தெருவும், அதே ஒட்டு வீட்டுத் திண்ணையும் அப்படியே இருக்கிறது. அந்த நாள் மனதில் மின்னியது.

“சார்..சார்..யார் வீட்ல இருக்கீங்க?” எனக் குரல் கேட்டதும் பாக்கியம் ராமசாமி கதைகளில் வரும் அப்புசாமி சீதாப்பாட்டி கேரக்டர்களை நிஜத்தில் பார்த்த உணர்வு. வைர மூக்குத்தியும் வைரத் தொடும் ஜொலிக்க, கோல்டன் பிரேம் மூக்குக் கண்ணாடியுடன் கையில் வாரப் பத்திரிக்கையுடனும் அந்த மூதாட்டி. அவர் பின், சாதுவான அவர் கணவர். “யாருப்பா நீ? என்ன வேணும் உனக்கு?”

“என் பெயர் வாசுதேவன். புதுசா இந்த ஊர் போஸ்டாபீசுலே கிளார்க்காக இன்னிக்குத்தான் ஜாயின் பண்ணியிருக்கேன். ரூம் தேடி வந்திருக்கேன்”. இப்படிச் சொன்னதும் உள்ளே வரச்சொல்லி சேரில் உட்காரச் சொன்னார்.

நான் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த வேளையில் கையில் ஸ்வீட்டுடன் வந்தார், அந்த வயதான பெண்மணி. அவர்கள் இருவரையும் பார்த்த உடனே எனக்கு நமஸ்கரிக்க வேண்டும் போல் தோன்றிட இருவரையும் நிற்கச் சொல்லி நமஸ்கரித்தேன். அந்த மூதாட்டி அழ ஆரம்பித்துவிட்டார்.

25 வருடங்களுக்கு முன்பு என் முகச்சாயலில் உள்ள தன மகன் கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் மகாமகக் குளத்தில் தவறி விழுந்து, இறந்து விட்டதாகவும், என்னைப் பார்த்ததும் அவர்களுடைய மகன் ஞாபகம் வந்ததாகவும் சொல்ல நான் நெகிழ்ந்தேன்.

“கடைசிக் காலத்தில் எங்களுக்கு நீ உதவியாக இருப்பாய் என்று நம்பித்தான் ரூம் கொடுக்கிறோம். எங்களுக்கு உதவியா இருப்பியா?” என்று சொல்லிக் கொடுத்த ரூமில் தங்கி அவர்கள் குடும்பத்திலேயே தங்கியதும் நாள் ஆக ஆக என் மேல் பாசத்தையும் கண்டிப்பையும் காண்பித்து அந்த வயதான தம்பதி அவர்கள் குடும்பத்தில் என்னையும் ஒருவனாக்கிக் கொண்டது என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி.

அந்த வீட்டில் வாழ்ந்த காலத்தில் முதியவர்கள் காசி போயிருந்த போது என்னைக் கவனித்துக் கொண்டவர் போஸ்ட்மாஸ்டரின் மனைவி மீனாட்சி.

எனக்கும் போஸ்ட் மாஸ்டருக்கும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை சரியாகப் போய்க் கொண்டிருந்தாலும் அவ்வப்போது சில உரசல்கள் இருந்தன. ஒரு நாள் ஆபிஸ் நேரத்தில் யாரும் வராத நேரத்தில் ட்ரான்ஸ்ஸிஸ்டரில் கிரிக்கெட் கமண்ட்ரி கேட்டதற்காகக் கோபித்துக் கொண்டார்.

வாதங்களில், வார்த்தைகள் வெடித்தன. “இத பாருங்க வாசுதேவன்! நான் இங்கே போஸ்ட் மாஸ்டர். நீங்க கிளார்க். நான் சொல்றதை நீங்க கேட்டுத்தான் ஆகணும். இல்லாட்டி இன் சப் ஆர்டினேசன் என்று சொல்லி ஒங்க பேர்ல ரிப்போர்ட் டிவிஷனல் ஆபீஸுக்கு அனுப்ப முடியும். அதற்கு நீங்க விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும்” என்ற வார்த்தைகளினால் என் மனம் காயப்பட்டது. அடுத்த சில நாட்களில் பேச்சு குறைந்து போயிற்று.

பொதுவாக, வார இறுதியில் சொந்த ஊருக்கு வந்து போனால் ஞாயிறு இரவே திரும்பி ரூமுக்குக் கிளம்பிவிடுவேன். அப்படித்தான் அந்த ஞாயிறு இரவு 8 மணிக்குக் கிளம்பத் தயாரான நான், கிளம்பும் வேளையில் அப்பாவிற்குத் திடீரென மைல்ட் ஹார்ட் அட்டாக் வரவே உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது. நல்ல வேலை உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் நான் ஹாஸ்பிடலில் தாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

மறுநாள் திங்கட்கிழமை ஏழு மணிக்கே பப்ளிக் போன் பூத்திலிருந்து போஸ்ட் மாஸ்டரைக் கூப்பிட்டு நடந்ததை சொல்லி லீவு கேட்டதுடன் மட்டுமல்லாமல் என் பொறுப்பிலிருக்கும் அலுவலகச் சாவியை, ஹவுஸ் ஓனரிடம் வாங்கிக் கொள்ளச் சொன்னேன்.

நான் செவ்வாய் அன்று, ரூமிற்குப் போகாமல் நேரே ஆபிஸ் வேலைக்கு வந்த எனக்காகக் காத்திருந்தது ஒரு மெமோ. ஜாயின்ட் கஸ்டோயென் சாவியை போஸ்ட் மாஸ்டர் வாங்கிக் கொள்ளவில்லை. ‘அன் ஆதார்ஸைடு ஆப்சென்ட்’ என்று டிவிஷனல் ஆபிஸுக்கு ரிப்போர்ட் செய்து என் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியைக் காட்டிவிட்டார்.

என் விளக்கங்களை ஏற்க மறுத்த தலைமை ஒரு வருட இன்க்ரிமென்ட் கட் செய்து தண்டிக்கப்பட்டேன். இதற்கு மேல் அந்த ஆபிஸில் வேலை பார்க்க எனக்கு மனமில்லை. என் எண்ணத்திற்குத் தகுந்தாற் போல் தந்தி ட்ரெயினிங்காக சென்னைக்குத் தேர்வாகிப் பயணப்பட்டேன்.

அடுத்த ஓரிரு வருடங்களில் நான் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி பாஸாகி நிறைய இடங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் வேலை பார்த்த பின்பு இதோ சூப்ரண்டாக இந்த டிவிஷனுக்கே மாற்றல் ஆகியிருந்தது. அந்தத் தெருவிலிருந்து வேப்ப மரம் வளர்ந்திருந்ததைத் தவிர வேறு மாற்றமில்லை.

மெல்ல நடந்து போஸ்டாபிஸூக்கு வந்து கொண்டிருந்தேன். எதிரில் அழுதபடி போஸ்ட் மாஸ்டரின் மனைவி மீனாட்சி அம்மாள் வந்து கொண்டிருந்தார்.

ஆபிஸில் குறைந்த ரூ.10000 பணத்தை என் மனைவி பொறுப்பேற்று தன்னுடைய தாலியை விற்றுப் பணம் கொடுத்துள்ளார். தான் புத்திகெட்டு பணத்தை எடுத்ததற்கும் தன்னுடைய மகனின் உடல்நிலை காரணமாக இந்தச் சூழ்நிலை ஏற்பட்டதும், தான் இன்னும் மூணு மாதத்தில் ஓய்வு பெறப் போவதால் கருணை கூர்ந்து தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மன்னித்து விடும்படியும் எழுதி இருந்தார்.

“எழுதிக் கொடுத்த ஸ்டேட்மென்டைப் படித்துப் பார்த்த பின்பு உங்களிடம் விளக்கம் கேட்டு மெமோ வரும். இலாகா நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் வரும்” என்று எச்சரித்துவிட்டுக் கிளம்பினேன்.

என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க, “ரொம்ப நன்றி சார்” என்று சொன்ன சோமசுந்தரத்துக்குத் தெரியாது பழைய வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அழுது கொண்டு வந்திருந்த மீனாட்சி அம்மாவிடம் பர்ஸிலிருந்து ரூ.10000த்தை எடுத்துக் கொடுத்து,

“நான் இந்தப் பணம் கொடுத்தது யாருக்கும் தெரிய வேண்டாம். குறிப்பாக, உங்கள் கணவருக்கு. நீங்கள் ‘தாலியை விற்று இந்தப் பணத்தைக் கொடுக்கிறேன்’ என்று வாக்குமூலம் கொடுங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக்கிறேன். நான் பணம் கொடுத்தது உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்குக் காரணமே நான் காய்ச்சலில் இருந்தபோது நீங்க எனக்குச் செய்த மருத்துவ உதவியும் உங்க கையினால் சாப்பிட்ட விசுவாசத்திற்கு நன்றிக் கடனா நினைச்சுக்குங்க.”

நான் செய்தது கைமாறா? அல்லது என் பணியை நேர்மையாகச் செய்யாததா? என்ற குழப்பத்துடன் பஸ்ஸுக்காகக் காத்திருந்தேன்.

– ஏப்ரல் 2020

Print Friendly, PDF & Email

1 thought on “நான் செய்தது சரியா?

 1. ‘நான் செய்தது கைமாறா? அல்லது என் பணியை நேர்மையாகச் செய்யாததா? என்ற குழப்பத்துடன் பஸ்ஸுக்காகக் காத்திருந்தேன்.’ என்பது கதையின் முடிவு மிகவும் சிறப்பான முடிவு.
  கதாசிரியருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்

  தி ஜானகிராமன் அவர்களைப் போல…
  ‘சில அரசுக் கட்டிடங்களுக்கு வயசாவதில்லை.’
  ‘அந்தத் தெருவிலிருந்து வேப்ப மரம் வளர்ந்திருந்ததைத் தவிர வேறு மாற்றமில்லை.’
  போன்ற எள்ளல் சொற்றொடர்கள் ரசிக்கத்தக்கதாக இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *