கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 18,375 
 
 

“சம்வன் இஸ் நோட் இன் திஸ் வோர்ல்ட்…”

“சொறி .. நிரஞ்சனா.. ஐ ஜஸ்ட் …”

“நிரு”

“ஆ?”

“கோல் மீ .. நிரு .. அப்பிடித்தான் எல்லாரையும் கூப்பிடச்சொல்லுவன் .. நிரஞ்சனா இஸ் டூ லோங்”

“ஓ … அப்ப சுரேன் ஓகேயா?”

“பெயரை கேட்கிறீங்களா? இல்ல .. ஆளையே ..”

கண்ணை சிமிட்டியபடி ஹாண்ட்பாக்கை வைத்துவிட்டு அப்படியே கதிரையில் சாய்ந்து கையிரண்டையும் உயர்த்தி …ஜீன்ஸ், கையில்லாத கொட்டன் டாப் சிம்பிளாக தான் போட்டிருந்தாள். ஆனால் அப்படி பின்புறமாக சாய்ந்து தலைமுடியின் ஹெர்பாண்டை லாவகமாக கழட்டி, முடியை உதறிவிட்டு, மீண்டும் மாட்டும்போது சுரேனுக்கு விசர் பிடித்தது.

“ஹோலி ஷிட், ஷி இஸ் எ கில்லர் மச்சான்” என்று மீண்டும் ஜூட்டுக்கு டெக்ஸ்ட் டைப் பண்ணிக்கொண்டிருக்கும் போதே மொபைல் பீப் பீப் என்றது. ஜூட் தான். “டேய் அவசரப்படாத .. வடிவா பேசி முடிவெடு” என்று எழுதியிருந்தான்.

ஞாபகம் இருக்கிறது. அன்றைக்கு அவனை பொறாமை பிடிச்சவன் என்று நினைத்தேனே. மொக்குச்சாம்பிராணி. அவன் சொன்னது போல கொஞ்சம் நான் பொறுத்திருக்கலாமே. ஷிட்.

ஆர் யூ ஒகே சுரேன்?

கேட்ட டிமிட்ரியை பார்த்து மெதுவாக கண் சிமிட்டியபடி பதில் சொல்லாமல், கொக்பிட்டில் இருந்து மைக்கை எடுத்து பேச தொடங்கினான் சுரேன்.

“Good morning ladies and gentlemen…. நான் விமானத்தின் கப்டன் சுரேந்திரகுமார் பேசுகிறேன். எமிரேட்ஸ் EK349 விமானமும், சக விமானி டிமிட்ரி மக்காய் மற்றும் ஊழியர்களும் உங்களை அன்போடு வரவேற்கிறோம். நாங்கள் இப்போது 19000அடிகள் உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறோம்…

சம்பிரதாயமான அறிவிப்புகள். முகமன்கள். செய்திகள். குரலில் எந்த மாற்றத்தையும் காட்டாது பேசினான். நிரூ இன்னமும் பல்கனி குந்தில் இருந்து அழுதுகொண்டிருந்தாள். “யூ டோன்ட் கெட் இட் சுரேன். உனக்கு சொன்னா விளங்காது…. ப்ளீஸ் என்னையும் தாரணியையும் போக விடு.. பளார்..”. சலிங் என்று ஒரு அறை. நிரூ தொடர்ந்து விசும்பிக்கொண்டிருந்தாள். “ப்ளீஸ்.. சுரேன்..யூ டோன்ட் கெட்…”

சுரேனின் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

…..மீண்டும் தரையிறங்கும்போது உங்களை தொடர்பு கொள்ளுகிறேன் .. have a pleasant journey.”

சொல்லிமுடிக்கும்போது தொண்டை அடைத்தது. மைக்கை மீண்டும் கொக்பிட்டில் கொழுவிவிட்டு சுரேன் அயர்ச்சியாக பைலட் இருக்கையில் சாய்ந்தான். தலை கனத்தது. கண்மூடினால் முகில்களுக்குள்ளிருந்து வெள்ளை சேலையில் முந்தானை திரள் திரளாய் பரவிக்கிடக்க நிரு தான் வந்து நின்றாள். பக்கத்திலேயே தாரணிக்குட்டி. அதே வெள்ளை சட்டை, குட்டி வெள்ளை தொப்பியுடன் தேவதையாட்டம்.

“அப்பா .. எனக்கு அடுத்தமுறை சிங்கபூர் ஏயர்லைன்ஸ் ப்ளேன் வேணும் .. வாங்கியோண்டு வாறீங்களா?”

நிரு … எப்படி உன்னால் முடிந்தது நிரு? இப்பிடி ஒரு குழந்தை யாருக்கு கிடைக்கும் சொல்லு? எப்படி அவளை என்னிடமிருந்து பிரிக்கமுடியுது உன்னால? ராட்சசி. சனியன். மாடு. சுரேன் கைகள் பதட்டத்தில் படபடத்தது.

EK349 விமானம் கொஞ்சம் தளம்பியது. மத்திய கட்டுப்பாட்டு அறையில் ரேடியோ இரைய சுரேன் மீண்டும் வேலையில் கவனத்தை செலுத்த முனைந்தான். FL350 அளவில் விமானத்தை தொடர்ந்து செலுத்தும் அனுமதிக்கான ஆணைக்கு ரிப்ளை பண்ணிய பிறகு கட்டுப்பாட்டை டிமிட்ரியிடம் கொடுத்துவிட்டு ரெஸ்ட் ரூமுக்குள் விரைந்தான். விமானம் மெதுவாக தள்ளாடியது. தண்ணீரை முகத்தில் வேகமாக அடித்து கழுவி துடைத்தபடி கண்ணாடியில் பார்த்தான். கண்கள் சிவந்து, முகம் ஊதிப்போய், நிரு இவன் கோலத்தை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

ப்ளீஸ் நிரு .. போகாத ப்ளீஸ்.. நான் எல்லாத்தையும் மறந்திடுறன் .. .. இந்த பைலட் வேலை தானே .. சனியன் பிடிச்ச வேலையை.. விட்டிடலாம் .. ப்ளீஸ் போகாத.

நிரு போயே விட்டாள். இரண்டு நாளைக்கு முன்னர் தான். தாரணியையும் தூக்கிக்கொண்டு, போனவளின், பின்னாடியே ஓடிப்போய், அப்பார்ட்மென்ட் லிப்டிலே இருபதாவது மாடியில் கெஞ்ச ஆரம்பித்தது; இரண்டாவது மாடி தாண்டும்போது காலில் விழுந்து பார்த்தான் சுரேன். குழந்தை வேறு அப்பா அப்பா என்று அழுதது.

அவளின் எதிர்காலத்தையாவது யோசித்து பார்த்தாளா? வசதியான வாழ்க்கை, படிப்பு, கார், கொள்ளுபிட்டியவில் லக்சரி பிளாட்ஸ். தேவதை போன்று ஒரு பெண்குழந்தை. இது எல்லாவற்றையும் விட தரையிறங்கி அடுத்த கணமே தொலைபேசி அழைக்கும் பைலட் கணவன். இது ஒருத்திக்கு போதாதா? எத்தனை பேர் இந்த வாழ்க்கைக்காக ஏங்கிக்கிடக்கிறார்கள்? ஒருத்தன் இரவு பகல் பாராது வேலைக்கு போவது ஒரு குற்றமா? மூன்று வாரம் தனியப்படுக்க முடியாதா? எப்படி அவளால் … சுரேனின் கண் சிவந்து தளும்பியது…குழந்தையை பக்கத்து அறையிலேயே தூங்க வைத்துவிட்டு ….எப்படி ஒருத்தனோடு …

“How .. how can .. how can you f*’in sleep with some idiot? … you bastard.”

ஓங்கி வாஷிங்பேசினில் ஒரு உதை விட்டான். நங் என்று கைவலித்தது. நிரூ கண்ணாடியில் இவனை பார்த்து மீண்டும் சிரித்தாள். அதே நக்கல் சிரிப்பு. எட்டு வருடங்களுக்கு முன்னரும், இந்த சிரிப்பு தானே, இப்படித்தானே சிரித்தாள். பசப்பி. உனக்கு என்ன குறைவைத்தேன்? சொல்லேன். நீ சொன்னதெல்லாம் கேட்டேனே. ஒரு குறை சொல்லேன். ஜஸ்ட் வன்.

சுரேன் முகத்தை துடைத்துக்கொண்டே ரெஸ்ட் ரூமை விட்டு வெளியே வந்தான். மீண்டும் கொன்ரோல் ரூமுக்குள் வந்து உட்கார்ந்தான். 35,000 அடிகள் உயரத்தில் விமானம் நிதானமாக பறந்துகொண்டிருந்தது. ரேடர் புள்ளி 16:12:18 சரியாக இருக்கிறது என்று மீண்டும் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து வந்த தகவலுக்கு பதில் கொடுத்துவிட்டு, ஓட்டோ பைலட்டின் சகலவிஷயங்களையும் மீண்டும் ஒருமுறை செக் பண்ணினான். லாண்டிங் தயார்படுத்தலுக்கு இன்னமும் நான்கு மணி நேரங்கள் இருக்கிறது. தலை கனத்தது. இப்படியே உட்கார்ந்திருந்தால் தலை வெடித்துவிடும் போல் தோன்றியது. தலையில் கையை வைத்தபடியே சாய்ந்து உட்கார்ந்தான்.

“யூ ஆர் நோட் ஒகே சுரேன் .. டேக் எ வோக் அண்ட் கம்”

டிமிட்ரி சொல்வது சரிபோலவே பட்டது. மீண்டும் ஒருமுறை கொக்பிட்டை சரிபார்த்துவிட்டு எழுந்து பயணிகள் பகுதிப்பக்கம் நடந்தான். பிசினஸ் வகுப்பில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஒருசிலர் இவன் உடையை பார்த்துவிட்டு மரியாதையாய் சிரித்தார்கள். சிலர் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். ஒரு ரெடிமேட் புன்னகை, முகமன்கள் தாண்டி நடந்தான். போகும் வழியிலேயே விமானப்பணிப்பெண்ணிடம் டீ கோப்பை ஒன்றை வாங்கினான். முதல் சந்திப்பு. நிரூ தான் அதிகம் பேசினாள்.

ஒரு சுகர் போதுமா? ஷுவரா? என்ன இந்த வயசிலேயே டயபட்டிஸா?

எக்ஸ்ப்ரஸோவிற்குள் ஏற்கனவே ஒரு பக்கட் சீனியை போட்டுவிட்டு இரண்டாவதை தயாராக கையில் வைத்தபடி கேட்டாள் நிரு. சுரேன் சிரித்தான்.

“இல்ல .. அப்பிடியே பழகீட்டு … ஐ ஜஸ்ட் டோன்ட்..”

“ஓ கமோன் .. எனக்காக .. வன் மோர்..’

“நோ நோ .. நான் .. அதை குடிக்க ஏலா..”

சொல்லிமுடிப்பதற்குள் அடுத்த பக்கட்டையும் போட்டு இவனைப்பார்த்து சிரித்தபடியே கரைத்தாள். சிரித்தபோது மெல்லிசாய் ஒரு பக்க கன்னத்தில் மட்டும் குழி விழுந்தது. சுரேன் அவளையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன கோவமா?”

“ஓ .. நோட் ரிய..”

இவன் முடிக்க முதலேயே தொடர்ந்தாள்

“ஸோ .. சொல்லுங்க .. நீங்க நிஜமாவே பைலட்டா?”

“லைசன்ஸ் கொண்டுவர மறந்திட்டனே!”

“கட்டினா ஒரு பைலட்ட தான் கட்டுவன் எண்டு சிவானியிடம் சாலஞ் பண்ணியிருக்கிறன் தெரியுமா?”

“எவ்வளத்துக்கு?”

“எது .. பெட்டா? நத்திங், … அது ரெண்டாம் வகுப்புல பண்ணினது.. .”

நிருவை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கலாம். ஒரு மாதிரி அங்கேயும் இங்கேயும் மெதுவாக தலையாட்டுவாள். நீண்ட மூக்குள்ள ஆட்டுக்குட்டி போல. அழகாக. தலை ஆடும்போது மேல்வாய் பல்லால் கீழ் உதட்டை மூடி கடித்தபடி ஒரு பாவனை கொடுப்பாள். பேசிக்கொண்டிருக்கும்போதே “She is the one” என்று ஜூட்டுக்கு டெக்ஸ்ட் பண்ணிவிட்டான்.

“யாருக்கு டெக்ஸ்ட்? கேர்ல் பிரண்டா?”

“ஹ ஹா .. இட்ஸ் ஜூட் .. மை பிரண்ட் … “

“அதான் நான் வந்திட்டனே .. அப்புறம் என்ன? … ஜூட்”

போயிட்டியே நிரூ. வந்தனி அப்படியே போயிட்டியே… நான் உன்னை திட்டினது பிழை தான். அதுக்காக நீ இப்படி போகலாமா சொல்லு? நான் செஞ்சது பிழை என்று ஒரு வார்த்தை சொன்னாயா? காலில் விழுந்து நான் தானே நீ செய்த பிழைக்கு சொறி கேட்டேன். நீ … என்னை இப்பிடி … முதல் நாளே கேட்டேனே .. சொல்லியிருக்கலாமே.

“நிறைய ட்ராவிலிங்க் .. மாசத்தில இருபது நாள் வானத்தில பறந்துகொண்டிருப்பன் இருப்பன் .. சமாளிப்பியா?”

“பத்து நாள் வீட்டுக்கு வருவீங்க தானே? …பைலட் வைஃபுக்கு பிசினஸ் கிளாஸ் ஒஃபர் கிடைக்குமாமே?”

பிசினஸ் கிளாஸ் ஐல் இருக்கையில் நிரூ சாய்ந்து கால் நீட்டி படுத்தபடி மாக்ஸிம் வாசித்துக்கொண்டிருந்தாள். ஸ்னிக்கர் போட்டு முழங்காலுக்கு கீழே பளிச்சென்று வெள்ளையாக முடியே இல்லாமல், பாதங்களில் கூட நரம்புகள் தெரியாமல், ஊதா கலர் நைல் போலிஷ் அடித்து.. நிரு தான். பெருவிரல் மெதுவாக தாளம் போட்டபடி. நீ இங்கே தான் இருக்கிறியா நிரூ? என்னை விட்டு உன்னாலே போக முடியாது பார்த்தியா? என் விமானத்திலேயே வந்துவிட்டாய் பார்த்தியா? சொன்னேன் இல்லையா? அவன் வேண்டாம் நிரு. இட்ஸ் லஸ்ட். எ ஷிட். நான் இருக்கிறன் நிரு.

“சுரேன் … அங்கே என்ன பார்க்கிறாய் .. கம் ஹியர்”

திரும்பிப்பார்த்தான். அட இங்கே இருக்கிறியா நிரு. உனக்கு விண்டோ சீட் தான் பிடிக்கும் எண்டத மறந்தேபோனன் பார்த்தியா? கண்ணை மூடி ஐபோடில் பாட்டு கேட்கிறியா? என்ன பாட்டு? இளையராஜாவா? இந்த பாட்டு கேட்டியா நிரூ? “சற்றுமுன்பு பார்த்த மேகம் மாறிப்போக”. நல்லா இருக்கும் நிரு. எடுத்தோண பிடிக்கேல்ல எண்டு சொல்லாம திரும்ப திரும்ப கேட்டுப்பாரு நிரூ. அப்பிடி சொல்லாத நிரு. அவனுக்கு பிடிக்காட்டி அது கூடாத பாட்டா? அவன் ஒரு சனியன் பிடிச்சவன் நிரூ. அவன்ட கதையை போயும் போயும் கேட்கிறியே. அவனுக்கெண்டு ஒரு டேஸ்டே இல்ல நிரு. he wants sex நிரு. He is a dog .. a stray dog. அப்படி அந்த நாயிடம் என்னத்தை கண்டு விட்டாய் நிரு? சொல்லேன். சொல்லாட்டி .. சுரேன் நெருங்கினான்.

“அப்பா …. என்னை விட்டிட்டு எங்கேயப்பா போறீங்கள்?”

குழந்தை. ஐயோ. தாரிணி. கண்ணம்மா… எங்கேடா இருக்கிறாய். திரும்பினான். தூரத்தில் எக்கானமி இருக்கை வரிசை நடுவே தாரிணி நின்றுகொண்டிருந்தாள். அதே வெள்ளை சட்டை. வெள்ளை தொப்பி. குழந்தை இவளைப்பார்த்து சிரித்தது.

“இங்கேயா நிக்கிற குட்டி… ஓடியா ஓடியா .. அப்பாவை விட்டிட்டு எப்படிம்மா உன்னாலே போக முடிஞ்சது ..”

“இனி போகமாட்டன் அப்பா … அம்மா சொன்னாலும் கேட்கமாட்டான் .. நீங்க தான் எனக்கு வேணும் … ”

தாரணி சிரித்துக்கொண்டே இரண்டு கைகளையும் அகல விரித்தபடி ஓடிவந்தாள். சுரேனின் கண்கள் கலங்கி தழும்ப தொடங்கியது.

“கண்ணா .. பார்த்தியா … உனக்கு நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பொம்மை வாங்கிவச்சிருக்கிறன் தெரியுமா?”

“அப்பிடியா அப்பா … எங்கே காட்டு”

“ம்ம்ம் .. காட்டமாட்டன் போ .. அப்பாவை அழவிட்டிட்டு போனதுக்கு வட்டியும் முதலுமாக .. எனக்கு டென் கிஸஸ் தரோணும்.. ஒகே யா”

“டென் எண்டா .. டென் பிஃங்கர்ஸ் டைம்ஸா?”

“என்ர கெட்டிக்கார குஞ்சு”

சுரேன் குழந்தையை வாரி அள்ளி உச்சி முகரப்போகும்போது விருக்கென்று வந்த நிரூ தாரணியை அவனிடமிருந்து பறித்தாள். இவன் இழுத்துப்பார்த்தான். அவள் விடவில்லை.

“விடு நிரு … எனக்கு தாரணி வேணும் .. ப்ளீஸ் .. என்னை ஏன் இப்பிடி கொல்லுறாய்?”

“நோ வே சுரேன் .. அவள் என்னோட தான் இருப்பாள்… ஜஸ்ட் போர்கெட் ஹெர்”

“நீ … அவளை தரப்போறியா இல்லையா?”

“முடியாது .. போ .. போடா … அதான் உன்னை வேண்டாம் எண்டு விட்டாச்சே .. அதுக்கு பிறகு என்ன குழந்தை இவருக்கு வேண்டிக்கிடக்கு…”

“இல்லை நிரு .. நீ எங்கேயாவது .. யாரோடையாவது .. ஐ டோன்ட் கேர் .. அவளை மட்டும் விட்டுடு ப்ளீஸ்”

நிருவிடம் இருந்து குழந்தையை சுரேன் பறிக்கப்போனான். அவள் குழந்தையை அடுத்தப்பக்கம் எறிந்தாள். படுத்திருந்த நிரூ திடீரென்று எழுந்து குழந்தையை பிடித்தாள். அவளிடம் போய் குழந்தையை மீண்டும் பறிக்கப்போனான். நிரூ குழந்தையை மீண்டும் எறிந்தாள். ஹெட்போனை போட்டபடியே திடீரென்று எழுந்த நிரூ குழந்தையை பிடித்து மடியில் வைத்துக்கொண்டாள். அவளிடம் போனால் பின்னால் இருந்து குழந்தை “அப்பா” என்றது. திரும்பிப்பார்த்தபோது பின்னால் இருந்து மீண்டும் நிரு சிரித்தாள். அதே நக்கல் சிரிப்பு. அடுத்தபக்கம் இருந்தும் சிரித்தாள். எகத்தாள சிரிப்பு. குழந்தை அழுதது. மொத்த இருக்கைகளிலுமே நிரு இருந்து சிரித்துக்கொண்டிருந்தாள். குழந்தையை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தாள். குழந்தை வீரிட்டு அழுதது. நிரு சிரித்துகொண்டிருந்தாள். ஹ ஹா ஹா. ஹா. ஹாஹா.

சுரேனுக்கு தலைவெடித்துவிடும் போல இருந்தது. சடக்கென்று திரும்பி எதையுமே பார்க்காமல் பைலட் அறைக்குள் நுழைந்தான். தண்ணீர் குடித்தான். இருக்கையில் இருக்கும்போது கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. டிமிட்ரி திரும்பி இவனைப்பார்த்தான்.

“ஹௌ ஆர் யூ பீஃலிங் சுரேன்?”

சுரேன் டிமிட்ரியை பார்த்து சிரித்தான். தெளிவாக சிரித்தான்.

“மச் பெட்டர்.”

“குட் …. எக்ஸ்கியூஸ் மீ ..”

சொல்லியபடி கட்டுப்பாட்டை சுரேனிடம் கொடுத்துவிட்டு டிமிட்ரி ரெஸ்ட் ரூமுக்கு போக எழுந்தான். சுரேன் விமானத்தின் முன் கண்ணாடி வழியே வானத்தை பார்த்தான். முகில்களுக்குள்ளிருந்து வெள்ளை சேலையில் முந்தானை திரள் திரளாய் பரவிக்கிடக்க நிரு தான் வந்து நின்றாள். பக்கத்திலேயே தாரணிக்குட்டி. அதே வெள்ளை சட்டை, குட்டி வெள்ளை தொப்பியுடன் தேவதையாட்டம். ஹ ஹா ஹ ஹா ஹ ஹா … நிரு சிரித்தாள்.

ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாய், சுரேன் கொக்பிட் வோய்ஸ் ரெக்கோர்டர் பவர் ஸ்விட்சை சடக்கென்று இழுத்து நிறுத்தினான். டேட்டா ரிக்கொர்டருக்கான கேபிளை இழுத்து அறுக்க, அந்த லைனுக்குரிய ரிப் விழுந்தது. பின்னர் விமானத்தின் ஓட்டோ த்ரோட்டில், ஓட்டோ பைலட் என ஒவ்வொன்றாக நிறுத்த ஆரம்பித்தான். விமானம் கலீர் என்று குழுங்கியது. இப்போது நோஸ் லிவரை வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் மாறி சுழற்ற ஆரம்பிக்க,

விமானம் சுழன்றடித்து தலைகுப்புற விழ ஆரம்பித்தது. சுரேன் விமானத்தின் வேகத்தை உச்சத்துக்கு அதிகரித்தபடியே கண்ணை மூடினான். விமானத்தின் ஒவ்வொரு பாகங்களாக வெடித்து சிதற ஆரம்பித்தது.

“அப்பா …. என்னை விட்டிட்டு எங்கேயப்பா போறீங்கள்?”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *