நாதங்கள் மோதினால்…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 22,182 
 
 

நாட்டைக் குறிஞ்சியில் வர்ணத்தை முடித்து விட்டு, அடுத்ததாக கணபதியையும் வாசித்த பின் அமிர்தவர்ஷிணியில் சுதாமயியை வாசிக்க ஆரம் பித்தாள் மீரா.

பார்வை, எதிரே எள் விழ இடமின்றி சபா முழுவதும் நிறைந்திருந்த ரசிகர்கள் மீது திரும்பிய போதெல்லாம், முதல் வரிசையில் அவளுக்கு நேராக அவளின் தந்தைக்கு அடுத்து போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலி காலியாயிருப்பது அவள் நெஞ்சை உறுத்தியது. அந்த ஒரு நாற்காலியினால் சபா முழு வதுமே காலியாக இருப்பது போன்ற உணர்வு!

கடைசியில் பாலமுருகன் வரவே இல்லை. அவன் வரமாட்டான் என்று அறிவு உணர்த்தினாலும் மனத்தின் ஒரு மூலையில் அவன் வரவேண்டும் என்ற ஏக்கமும், வருவான் என்ற சிறிதளவு நம்பிக்கையும் ஒட்டிக்கொண்டிருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையை அவன் சிதறடித்துவிட்டான். அவன் வராமல் இருப்ப திலிருந்தே ‘இதோடு உனக்கும் எனக்கும் எந்தவிதமான உறவு ஏற்படவும் வழியில்லை, மீரா’ என்று அழுத்தமாக உணர்த்திக்காட்டுவது அவளுக்குப் புரிந்தது. இனிமேல் அவன் தன் மனத்தை மாற்றிக்கொள்ளவே மாட் டானோ என்று நினைத்தபோது, அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. விரல்கள் லயம் தவ றாமல், நயம் தவறாமல் வீணையை மீட்டிக்கொண்டு இருக்க, மனம் ரகசியமாக விம்மிக்கொண்டிருந்தது.

மீரா, அவன் நினைவை உதறித் தள்ளிவிட்டு வாசிப்பில் முழுக் கவனத் தையும் செலுத்த முயன் றாள். சுதாமயி முடிந்ததும் அரங்கம் அதிரும்படி கை தட்டல்கள். மீரா தன் தந்தை கௌரிசங்கரைப் பார்த்தாள். அவர் முகத் தில் விவரிக்க முடியாத பெருமிதம். முதல் வரிசை யில், நகரத்திலிருந்த அத்தனை பெரிய மனிதர் களும் அமர்ந்திருந்தார்கள். அநேகமாக எல்லா சங்கீத வித்வான்களுமே வந்திருந்தனர். ஆனால், அவளுக்குக் குருவாக இருந்து, அந்த விரல்களின் மீட்டலில் இத்தனை நளினத்தையும் இனிமையையும் கொண்டு வரக் கற்றுக் கொடுத்த பால முருகன் மட்டும் வரவில்லை. கண்களில் துளிர்த்த கண்ணீரை வியர்வையைத் துடைப்பதுபோல் ரகசியமாகத் துடைத் துக் கொண்டாள் மீரா. கைத்தட்டல் ஓய்ந்ததும் அடுத்ததாக ரகுவம்ச சுதாவை வாசிக்க ஆரம்பித்தாள். எவன் நினைவை மறந்துவிட்டு நாதத்தில் ஒன்றிவிட முயன் றாளோ, அவன் நினைவே மறுபடி அவள் நெஞ்சத்தை நிறைத்தது.

அவளது தந்தை கௌரிசங்கர் கூட ஒரு பெரிய வீணை வித்வான்தான். அவரது புகழை மங்கச் செய்துவிட்டு ஓங்கியது பாலமுருகனின் புகழ். அதற்குக் காரணம் இருந்தது. அப்பாவின் வாசிப் பில் சங்கீத ஞானம் நிரம்பி இருக்கும். அதை விஷய ஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்க முடியும். ஆனால், பாலமுருகனின் வாசிப்பில் லயம், இனிமை, நளினம் எல்லாமே நிரம்பி வழியும். சங்கீதத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களைக் கூட ‘என்ன அழகாக வாசிக்கி றான்!’ என்று வியக்கச் செய்து ரசித்துக் கேட்கும் இசை அவனுடையது. அதனால் அவனுக்கு ஆயிரமாயிரம் ரசிகர்கள். எந்த இடத்தில், எந்தச் சபாவில் அவனது கச்சேரி நடந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன்பே எல்லா டிக்கெட்டுகளும் விற்றுப் போகும்.

பாலமுருகனின் வீணை வாசிப்பு எத்தனை நளினமாக இருந்ததோ அதேபோல் அவனும் பார்க்க அத்தனை நளினமானவனாக, அழகானவனாக இருந்தான். வெள்ளை வெளே ரென்ற நிறம், கூர்மையான கண்கள், எடுப்பான நாசி, சுருண்டு முன் நெற்றியில் கவர்ச்சிகரமாக வந்து விழும் கேசம். நல்ல உயரமும், அளவான பருமனும், எடுப்பான தோற்றமுமாய் அனைவரையும் கவர்ந்துகொண்டு இருந்தான்.

தன் தந்தையிடமே வீணை கற்றுக்கொண்டு, அவரையும் மிஞ்சும்படி வாசித்துக் காட்டிய மீராவுக்கு, பாலமுருகனிடம் கற் றுக்கொண்டு அவனது வாசிப்பில் இருக்கும் இனிமையையும் நயத் தையும் தன் விரல்களுக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது. அவனது வீணைக் கச்சேரி எங்கு நடந்தா லும் தவறமாட்டாள் மீரா. ரேடி யோவில் ஒலிபரப்பாகும் அவனது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் டேப் பில் ரிக்கார்ட் பண்ணி வைத்துக் கொண்டு போட்டுப் போட்டுக் கேட்பாள்.

நினைவுகளின் வேகத்தினூடே மீரா, ரகுவம்ச சுதாவை முடித்து விட்டாள். அடுத்து, சண்முகப் பிரியாவில் மரிவேரதியை ராகம் தானத்திற்கு ஆரம்பித்தாள். முதன் முதலாக அப்பா அவளை அழைத் துக்கொண்டு பாலமுருகனின் வீட்டிற்குப் போனபோது, அவன் அவளை மரிவேரதிதான் வாசித் துக் காட்டச் சொன்னான். வீணையை மீட்டும் சப்தத்தை அடக்கி, நாதத்தை மட்டும் வெளிப்படுத்தி இனிமையாக அவள் வாசிக்க ஆரம்பித்ததுமே பாலமுருகன் அவளது திறமையை எடை போட்டுவிட்டான். அவளது வாசிப்பைக் கேட்டபின் மறுக்காமல் அவளுக்குக் கற்றுக் கொடுக்க ஒப்புக்கொண்டான்.

மீராவிற்குக் கற்றுக் கொடுக்கக் கொடுக்க அவளிடம் யாரிடமுமே இல்லாத ஓர் அபூர்வத் திறமை ஒளிந்துகொண்டு இருப்பதைக் கவனித்தான் பாலமுருகன். அவன் ஒருமுறை வாசித்துக் காண்பித்தால் போதும், அதே போல் ராகம் மாறாமல், தாளம் தவறாமல் வாசித்துக் காட்டிவிடுவாள் மீரா. வாய்ப்பாட்டிலும் அவள் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கவே இன்னும் சுலபமாகக் கற்றுக் கொடுக்க முடிந்தது.

”மீரா! உன் வாசிப்பில் என்னை நானே மறந்துவிடுகிறேன். இசை யின் மூலமாகவே என்னை முற்றி லும் மயக்கிவிட்டாய் நீ!” – வீணை மீதிருந்த அவளது கரத்தில் தன் கரத்தைப் பதித்தான் பால முருகன். மீராவின் உடலும் உள்ள மும் சிலிர்த்தன. பாலமுருகனைத் தன் இதயத்தில் வைத்து இத்தனை நாட்கள் அவள் பூஜித்துக்கொண்டு தான் இருந்தாள். அவன் தன் மனத்தைத் திறந்துகாட்டியதால் ஏற்பட்ட இன்பத்தாலும், திடீ ரென்று அவன் கரம் தன் கரத்தைப் பற்றியதால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் மீரா ஒரு விநாடி பேச முடியாமல் தடுமாறினாள்.

”ஏன் மீரா பேசமாட்டேன் என்கிறாய்?”

”இல்லை… என் இசையில் நீங்கள் மயங்கிவிட்டதாகச் சொல் கிறீர்களே; உங்களது நாதத்தைக் கேட்டு மயங்கித்தானே நான் இங்கே மாணவியாக வந்து சேர்ந் தேன்!”

”எப்படியோ… இருவரும் ஒருவரிடம் ஒருவர் மயங்கிவிட்டது உண்மைதானே? இரண்டு இசை உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? மோகனம் மாதிரி மயக்கும். கல்யாணியைப் போல் இனிமையாக இருக்கும். அமிர்தவர்ஷிணி மாதிரி அமிர்தத்தைப் பொழியும்…”

அப்படி சொன்ன அவரா இப்படி மாறிவிட்டார்?

மீரா பெருமூச்சுவிட்டாள்.

ராகம் தானத்தைப் பலமான கைத்தட்டலுடன் முடித்துவிட்டு ஹம்சநாதத்தில் பண்டுரீதியை ஆரம்பித்தாள். பாடலுடன் நினைவு களும் தொடர்ந்து மனத்தை நிறைத்தன.

கல்லூரி ஆண்டு விழாவில் வாசிக்கவேண்டும் என்று பிரின்ஸிபால் உள்பட பலரும் அவளை வேண்டிக்கொண்டனர். அப்போதும் அவள் அவனது சம்மதத்தைக் கேட்டுக்கொண்டுதான் ஒப்புக்கொண்டாள். கச்சேரி மாதிரி நிகழ்ச்சி இரண்டு மணி நேரத்திற்கு ஏற்பாடாகியிருந்தது.

”பிரமாதமாக வாசிக்கவேண் டும் மீரா! என் முதல் மாணவி நீதான். இந்த ஆசிரியருக்கு எப்ப டிப் பெயர் எடுத்துத் தருகிறா யென்று பார்க்கலாம்” என்றான். மீரா பதிலளிக்காமல் சிரித்தாள்.

கல்லூரி ஆண்டு விழாவுக்கு பாலமுருகனே வந்திருந்து அவளது முதல் கச்சேரியை ஆரம்பித்து வைத்து, தைரியமளித்து உற்சாகம் ஊட்டினான். கௌரிசங்கர் எல்லா சங்கீத மேதைகளையும் பத்திரிகைக்காரர்களையும் தன் பெண்ணின் கச்சேரிக்கு அழைத் திருந்தார். அவர்கள் யாவரும் ஒன்றுபோல், ”பாலமுருகனையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டாள் உங்கள் பெண். அந்த சரஸ்வதியே நேரில் வந்து வாசித்த மாதிரி இருக்கிறது” என்று பாராட்டினர். பாலமுருகனிடம் பொறாமை கொண்டிருந்த ஓர் இரண்டாம் தர வீணை வித்வான் அவனிடமே வந்து, ”என்ன சார், குருவை மிஞ் சிவிட்டாளே சிஷ்யை! கௌரி சங்கரின் பெண் இனிமேல் உங்களை இருக்குமிடம் தெரியா மல் எங்கோ மூலையில் தள்ளி விடப்போகிறாள், பாருங்கள். என்ன அற்புதமான வாசிப்பு! என்ன திறமை!” என்று வியந்ததும், பாலமுருகனின் மனம் வேதனைப் பட்டது.

கச்சேரி முடிந்து, மீரா மேடையை விட்டு இறங்கி நேராக அவனைத் தேடிக்கொண்டு வந்தாள்.

”எப்படி இருந்தது நான் வாசித்தது? ஆசிரியருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தேனா இல்லையா?” என்று சிரித்துக் கொண்டே அவள் கேட்டபோது, அவளைப் பார்க்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை.

”ஆசிரியனைக் கீழே தள்ளி விட்டு, நீ மேலே போய்விட்டாய் மீரா” என்று சொல்லிவிட்டு, அங்கே இருக்கப் பிடிக்காமல் வீட்டிற்குப் போய்விட்டான்.

மறுநாள், பத்திரிகைகள் அவளை மிகவும் பாராட்டி எழுதியிருந்தன. அதைப் படித்து விட்டு பாலமுருகன் என்ன சொல்கிறானென்று அறிந்து கொள்ள, அவன் வீட்டிற்குப் போனபோது பாலமுருகன் அவளோடு சரியாகப் பேசவில்லை. அவளாக ”பத்திரிகைகளைப் பார்த்தீர்களா?” என்று கேட்ட போதுகூட அவன், ”ம்… பார்த் தேன்” என்று உயிரே இல்லாதது போல் பதிலளித்தான். மீரா ஒன் றும் புரியாமல் குழம்பினாள்.

ஒரு வாரம் ஓடிவிட்டது. பால முருகன் அவளோடு பேசுவதைக் குறைத்துக் கொண்டதுடன், வீணை கற்றுக் கொடுப்பதையும் தவிர்த்துக்கொண்டே வந்தான். அவனது இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் தெரியாமல் மிகவும் வேதனைப்பட்டாள் மீரா. அவனது பாராமுகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நேராக அவன் வீட்டிற்குப் போனாள்.

”ஒரு வாரமாக நீங்கள் என்னை வீணை கற்க வரச்சொல்லவில்லையே, ஏன்?”

”இனிமேல் நான்தான் உன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும், மீரா!” – அவன் சிரித்துக்கொண்டே அவ ளைப் பார்த்தான். அது சிரிப்பாகவே இல்லை.

”ஏன் இப்படிப் பேசு கிறீர்கள்?”

”உண்மையைத்தான் சொல்கிறேன். உன் அற்புத மான வாசிப்பை எல்லோ ரும் புகழவில்லையா?”

”எல்லாம் நீங்கள் கற்றுக் கொடுத்ததுதானே! அதிருக்கட்டும், சில நாட் களாக நீங்கள் ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?”

”எப்படி இருக்கிறேன்? சாதாரணமாகத்தானே இருக்கிறேன்!”

”பொய் சொல்லாதீர் கள். கல்லூரி ஆண்டு விழாவிற்குப் பிறகு, நீங்கள் முற்றிலும் மாறிவிட்டீர்கள். என்னோடு சரியாகப் பேசுவதில்லை. என்னை ஏறெடுத்துப் பார்ப்பதைக் கூடத் தவிர்க்கிறீர்கள்…” – மீராவுக்குக் துக்கம் தொண்டையை அடைத்தது.

பாலமுருகன் பதிலே பேசாமல் தலைகுனிந்தவாறு, ஒரு விரலால் வீணையின் ஒரே ஒரு தந்தியை மீட்டி, ‘டொய்ங் டொய்ங்’ என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தான். மீராவினால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

”என்னிடம் இப்படிப் பாராமுகமாக நடந்துகொள்ள நான் என்ன தவறு செய்தேன்?” என்று விசும்பினாள்.

”நீங்கள் என்னோடு பேசாத இந்த ஒரு வாரத்தில், வீணை வாசிக்க வரச் சொல்லி போன் பண்ணாத இந்த ஏழு நாட்களில் நான் எப்படித் தவித்துப் போய்விட்டேன், தெரியுமா? நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னைத் தண்டியுங்கள். இந்த மாதிரி பேசாமல் இருந்து அலட்சியப்படுத்தாதீர்கள்…”

”அலட்சியமில்லை மீரா இது. என் உணர்ச்சிகள் உனக்குப் புரி யாது. என் நிலையில் இருந்து பார்த்தால்தான் புரியும். இது ஒரு வித தாழ்வு மனப்பான்மை!” – பாலமுருகன் குமுறினான்.

”தாழ்வு மனப்பான்மையா? என்ன சொல்கிறீர்கள்?”

”ஒன்றுதான் என்னால் இப்போது சொல்ல முடியும். ஒரு வாரமாக மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டதில் என் குழப்பத்துக்குக் கிடைத்த ஒரே விடை இதுதான். நாம் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேரவேண்டுமானால், நீ வீணை வாசிப்பதை விட்டுவிட வேண்டும். நம் வாழ்க்கை நிம்மதி யாக, சந்தோஷமாக அமைய வேண்டுமானால் நீ எங்கும் கச்சேரி செய்ய ஒப்புக்கொள்ளக் கூடாது. இதைத் தவிர என்னால் வேறெதுவும் சொல்ல முடியாது. மீரா, அடுத்த முறை நாம் சந்திக் கும்போது உன் உறுதியான முடிவைச் சொல். உன் பதில்தான் நம் எதிர்கால உறவை நிர்ணயிக் கும்” என்றான் பாலமுருகன்.

மீரா அதிர்ந்து போய்விட் டாள்.

வீட்டினுள் நுழையும்போதே ஹாலில் தன் தந்தை யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த மீரா, கண்களைத் துடைத் துக்கொண்டு, தன்னை நிதானப் படுத்திக்கொண்டு உள்ளே சென் றாள்.

”அம்மா மீரா, இவர் ஆர்ட்ஸ் அகாடமி காரியதரிசி சுப்பிர மணியம். அவர்கள் சபாவில் வரு கிற பத்தாம் தேதி உன் கச்சேரிக்கு ஏற்பாடு செய்ய வந்திருக்கிறார்” என்று அவரை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார் அப்பா. மீரா கைகுவித்தாள்.

”அன்று உங்கள் கல்லூரி ஆண்டு விழாவிற்கு நானும் வந்தி ருந்தேன். உங்கள் வாசிப்பை எப்படிப் புகழ்வதென்றே தெரிய வில்லை. இந்த புரோகிராமிற்கு மறுக்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று வேண்டினார் சுப்பிரமணியம்.

அப்போதைய மனநிலையில் மீராவிற்கு எதுவுமே வேண்டியிருக் கவில்லை. அவர் அந்த இடத்தை விட்டு அகன்றால் போதும் என்றி ருந்தது. ”உங்களுக்கு நாளை போன் செய்து தெரிவிக்கிறேன்” என்று கூறி அவரை அனுப்பி வைத்த பின்பு, அத்தனை நேரமாக அணை போட்டுத் தடுத்து வைத் திருந்த கண்ணீர் வெள்ளமாகப் பெருகியது. கௌரிசங்கர் பதறிப் போய்விட்டார். அவளைச் சமா தானப்படுத்தி அவளிடமிருந்து விஷயத்தை அறிந்துகொள்ள, அவர் பெரும்பாடு பட வேண்டி இருந்தது.

விஷயத்தைக் கிரகித்துக்கொண் டதும், சில விநாடிகள் அமைதி யாக இருந்தார். பின் அவளருகில் வந்து அவளது கூந்தலைப் பாசத்தோடு வருடினார்.

”மீரா! உன்னிடம் இருப்பது ஓர் அபூர்வமான கலையம்மா! பாலமுருகனையே மிஞ்சிவிடுகிறா யென்றால், எப்படிப்பட்ட வாசிப்பு அது? ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் தான் அது. அதேபோல் அவன் மீது நீ கொண்டுள்ள அன்பின் ஆழத்தையும் நான் உணருகிறேன். ஆனால் மீரா, அவனோடு நீ வாழ நினைக்கும் வாழ்க்கை சாதாரணமானது. திருமணம் செய்துகொள்வதும், பின் குழந்தை குட்டிகள் பெறுவதுமான எல் லோரும் வாழும் மிகச் சாதாரண வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, உன் தெய்விகக் கலையை அதற்கு விலையாகக் கொடுக்கப் போகி றாயா? யோசித்து முடிவு செய். நீ எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் தடையாக இருக்கமாட்டேன். ஆனால், திரும்பத் திரும்ப மனம் சலனமடையக்கூடாது. அதற் கேற்ப உன் மனத்தைப் பக்குவப் படுத்திக் கொள்!” என்றார்.

மீரா ஒரு முடிவிற்கும் வர முடியாமல் இரண்டு நாட்கள் தடுமாறினாள். உடலும் மனமும் ஓயும் வரை அழுது தீர்த்தாள்.

இரண்டு நாட்களாகத் திரும்பிக் கூடப் பார்க்காமலிருந்த வீணை அவள் பார்வையில் பட்டது. அணை போட்டுத் தடுத்து வைத் திருந்த ஆர்வமெல்லாம் பீறிட்டுக் கிளம்பியது. விரல்களில் வாஸ லினைத் தடவிக்கொண்டு போய் உட்கார்ந்து வீணையை எடுத்து வைத்துக்கொண்டாள். வீணை யிலிருந்து ஹம்ஸத்வனியில் தியாக ராஜர் கிருதி ஒன்று பிறந்தது. அடுத்து வரிசையாகக் கல்யாணி, மோகனம், தோடி, கமாஸ் என்று ஒவ்வொரு ராகமாகக் குழைந்தது. வாசித்துக்கொண்டே போன போது அவளது நெஞ்சத்திலிருந்த குழப்பங்கள் எல்லாம் படிப்படியா கக் குறைந்துகொண்டே வந்தன.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் அற்புதமான கான மழையைப் பொழிந்துவிட்டுக் கடைசியில் ஹம்ஸாநந்தியில் தில்லானாவோடு முடித்து வீணையைக் கீழே வைத்தபோது, அவள் மனத்தில் விவரிக்க இயலாத அமைதி நிரம்பி இருந்தது.

”நான் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன் அப்பா! வீணையின் நாதத்திடமிருந்து என்னை எந்தச் சக்தியாலும் பிரிக்கமுடியாது. அந்தச் சபா காரியதரிசியிடம் சம்மதம் என்று சொல்லி விடுங் கள். கலையைக் கலைஞனிட மிருந்து பிரிக்கவே முடியாது என்பதை எப்போது பாலமுருகன் உணருகிறாரோ அப்போது அவர் என்னைத் தேடி வரட்டும். ‘அது வரை இந்த மீரா உங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பாள்’ என்று அவரிடம் சொல்லிவிட்டு வருகி றேன். அவர் மனம் மாறாமலேயே இருக்குமானால், நீங்கள் சொன்னது போல் ஒரு சாதாரண வாழ்க்கைக்கு என் கலை விலையாக வேண்டாம். அற்புதமான கலைக்கு என் வாழ்க்கை விலையாகிவிட்டுப் போகட்டும்” என்றாள் மீரா.

அதன்பின், அவனிடம் தன் முடிவைத் தெரிவித்துவிட்டு, இந்தக் கச்சேரிக்கும் அவனை அழைத்துவிட்டுத்தான் வந்தாள். ஆனால், அவன் வரவில்லை.

ராகமாலிகை முடிந்ததும், வேதத்தை அதி அற்புதமாக வாசித்த பின், மத்தியமாவதியில் கச்சேரியை முடித்தாள் மீரா. பத்து நிமிடங்களுக்கு கரகோஷம் ஓயவே இல்லை. எழுந்து அடக்க மாகக் கை குவித்தபோது கூட, நேர் எதிரில் காலியாக இருந்த அந்தப் பிரம்பு நாற்காலிதான் அவள் மனத்தை உறுத்தியது. அந்த நாற்காலி போலவே அவள் மனமும் வாழ்நாள் முழுவதும் காலியாக, வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதானா? பொறுத்தி ருந்து பார்க்கவேண்டியதுதான்!

– 12-12-1971

Print Friendly, PDF & Email

1 thought on “நாதங்கள் மோதினால்…

  1. கலையை கலைஞனிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *