சற்றுக் கண் அயர்ந்திருக்க வேண்டும். அருகிலிருந்து எழுந்த, சீமெந்துச் சாந்தின் மணம் மூக்கில் அப்பி எழுப்பி விட்டது.
விமலன் நேர் எதிரில் தெரிந்தான். இப்பொழுதுதான் வடமேல் மூலையில் நின்று கல்லுயர்த்தி சாந்து பூசிக்கொண்டிருந்தான் போலிருந்தது. அதற்குள் கிழக்கே பார்க்க வந்து விட்டிருந்தான்.
உச்சி வெயிலின் கதகதப்பில் கண்கள் கூசின. திரும்பும் வெற்றுச் சீமெந்து வாளியைக் கைமாற்றிக்கொண்டிருந்தவர்கள் நிழலோட்டமாய்த் தெரிந்தனர்.
சுற்றி விழுந்திருந்த வேப்பமர நிழல் இருபக்கமும் நெருக்கிக் கொண்டு வந்து விட்டிருந்தது. மண்ணிலிருந்து வெக்கை அடித்தது.
கையை, கண்ணுக்கு மறைப்பாக நெற்றியில் வைத்துப் பார்த்த பொழுது, தென்னை நிழலில் சாந்தை வழிக்கும் சீலனின் மண் வெட்டி இழுப்பும், வாளி நிரம்பியதும் அதை வாங்கத் தயாராய் நின்ற கருணையின் , பொத்தானிடாத முழுக்கைச் சட்டைத் துணி அரைவதும் கூடத் தெளிவாய்த் தெரிந்தன.
புதிதாய் அவிழ்த்த சீமெந்துப் பக்கெற்றை மண்ணோடு கொட்டிக் குவித்திருந்தார்கள். அதன் உச்சியில் குளம் கட்டிய நீர் இருக்க வேண்டும். நீரள்ளிக் கொண்டு வந்து விட்ட வாளி, சீமெந்துச் சேற்றுக்குள் சரிந்து கிடந்தது.
“என்ன ஐயா நித்திரையாயிட்டீங்க போல?” விமலன்தான் கேட்டான்.
“ம்….. இந்த ஏறு வெய்யிலுக்கும் வேப்பங் காத்துக்கும் மயக்கம் மயக்கமா வருகுது.”
அதற்குள் மற்ற வாளிச் சீமெந்தும் வந்து விமலனின் முன், இவனது சாந்துப் பலகையில் கொட்டப்பட்டு விட்டது. “கெதியாய்த் தான் நடக்குது” என்று சொல்லப் போக, மெதுவாகத்தான் என்றாலும் அது இவனுக்குக் கேட்டு விட்டது.
“கெதியா எண்டு மட்டுமில்லை ஐயா, இப்பிடி ஆக்களை இடை விட்டு நிக்க வைச்சா முசுப்பாத்தியா ஓடு விளையாட்டு மாதிரி வேலை நடக்கும். வேலை செய்யிற களைப்பே இராது.”
“நல்லா இப்பிடிக் கதைக்கவும் உன்ரை ‘உயிரொளியில் சொல்லித் தந்தினமோ?”
சீமெந்துச் சாந்தை வாகாகப் புரட்டிக் கொண்டிருந்தவன், சாந்து அகப்பையும் கையுமாக நிமிர்ந்து பார்த்து முகம் விகசித்துச் சிரித்தான்.
‘மன்னாரிலிருந்து மீளக்குடியேற வந்த தெரிந்த குடும்பத்துப் பொடியன்’ என்று சீலன் அவனைக் கூட்டி வந்த பொழுதும், “பார்த்தா சின்னப் பொடியனா இருக்கிறாய், எங்க மேசன் தொழில் பழகினனீ?” எனக் கேட்ட பொழுதும் இதே சிரிப்புத்தான். அப்பொழுதே அவனின் நெருக்கமான பல் வரிசைச் சிரிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.
கேட்க, கேட்க மன்னாரிலிருந்து செயற்படும் அந்தத் தொண்டர் நிறுவனம் பற்றி அது ‘உயிரொளி’ என்ற பெயரில் சுற்றுப்புற இளைஞர், யுவதிகளுக்காய் நடத்தும் சுயதொழில் பயிற்சி வகுப்புக்கள் பற்றி, அவற்றில் மேசன் தொழில் பயிற்சி வகுப்பில் தான் சேர்ந்து ஐந்து மாதம் பயின்றதைப் பற்றி எல்லாம் சொன்னான்.
அப்பொழுதெல்லாம் ஒரு மேசனைப் பிடிப்பதே கஷடமான காரியமாகத்தான் இருந்தது. எல்லோரும் கைகளில் ஏற்கனவே நிறைய வேலைகள் வைத்திருந்தனர்.
ஆனால், இவன் வந்ததோடு வல்லிபுரக் கோயில் மண் லோட் அடித்து, சல்லி இழுத்து, சீமெந்து மூட்டைகள் வாங்கி அடுக்கி விட்டு மேசனைத் தேடி சலித்து அலுத்ததெல்லாம் பழைய கதையாகி விட்டது.
இப்பொழுதும் இவனோடு பேச்சுக் கொடுக்க விருப்பமாகத் தான் இருந்தது. ஆனாலும் ஒரு சிறு வேலையைக்கூட, முக்கிய மானது போல எடுத்துக் கொண்டு செய்யும் இவனின் வேலை நேரத்தைக் கெடுக்கக் கூடாது என்றும் தோன்றவே, மடியில் கிடந்த பேப்பரை எடுத்துக் கொண்டு மீளச் சாய்மனை யில் சாய்ந்து கொண்டாயிற்று. பேப்பரில் ‘சமய சந்தி’ என்ற தலைப்பின் கீழ் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஆன ஒரு கோயிலின் படம் இருந்தது.
எங்கு போனாலும் பளபளக்கும் கோயில்கள் இப்பொழுது சந்தோஷத்தைத் தருவதில்லை. கும்பாபிஷேகம் நடந்த பின் ஊர்ப் பிள்ளையாரை ஆறுதலாகத் தரிசிக்கலாம் எனப் போன நாளில் இருந்து முன்புற அலங்கார வளைவுகளுக்கும் முன் மண்டபப் பளிங்குக்கும் இடையே அகப்பட்ட பரிச்சயமற்ற தனியாளாய் உணர்ந்ததும்… சுற்றிக் கும்பிடுகையில் பிளாஸ்டிக் பொம்மைகள் கணக்காய் முகமளித்து தெரிந்த விமானத்துச் சிற்பங்களைக் கண்டு சங்கடப்பட்டதும், வெளிநாட்டிலுள்ள ஊர்க்காரர்கள் காசு அனுப்புகிறார்கள். இங்கே உள்ளவர்கள் செய்விக்கிறார்கள். என்ன சொல்ல முடியும்?
வெளிநாடுகளில் இருந்து ஊர்க் கோயில்களை ஆடம்பரத்துடன் திருத்தக் காசு அனுப்புபவர்கள், பாட்டனார் செல்வாக்காய் வாழ்ந்து விட்டுப் போன தம் வீட்டைத் திருத்த ‘காசு அனுப்பு’ என்றால் அனுப்புவார்களோ?
“இவ்வளவு காசு செலவழிச்சு, இந்த பழம் வீட்டை என்னத்துக்கு அப்பா திருத்தி? உங்க ரெண்டு பேருக்கும் பிறகு, நாங்க ஆரும் வந்து இருக்கப் போறமே அதிலை?”
எல்லாம் இந்த தம்பிராசா மேசன் கிளப்பி விட்ட எழுப்பலினால் தான். “இந்த வீட்டிலை ஒரு இடத்தில கை வைச்சா தொட்டுத் தொட்டு எல்லா இடத்திலையும் கை வைக்க வேண்டி வரும். பிள்ளைகள் வந்து பாக்கட்டும் எண்டு விடுங்கோவன்” என்றார்.
“சன்னதியானிட்டைப் போயிட்டு, உங்களையும் பாத்திட்டுப் போகலாமெண்டு வந்தன்” என்று சொல்லிக் கொண்டு வந்தவரை, அவர் அந்தக் காலத்தில் கட்டிடக் கட்டுமானத்தில் விண்ணன் என்பது ஞாபகம் வர, அழைத்து சேதமுற்ற தன் வீட்டைச் சுற்றிக் காட்டியபொழுது,
இப்படிச் சொன்னார். “எல்லாத்துக்கும் சிலவு எக்கச்சக்கமா போயிடும்”
திருத்தப்பட்ட வீடு, புதுப்பொலிவோடு மனதில் பவனி வந்து கொண்டிருந்த வேளை இந்த யோசனையை ஏற்க முடியவில்லை. பிள்ளைகள் தான் இருக்கிறார்களே. தன் கண் முன்னாலேயே திருத்தட்டுமே என்று எழுந்த ஆவல்தான் மூத்தவனிடம் கேட்க வைத்தது.
இருபத்தி நான்கு வயதிலேயே என்ஜினியராய் விட்டான் என்ற பெருமை, அவன் எண்பத்தி மூன்று இனக் கலவரத்தின் பொழுது, தெற்கிலிருந்து அரும்பொட்டாய் தப்பி ஓடிவந்த பொழுது வெலவெலத்திருந்தது. அவன் வேறு மனித உயிர்கள் எரியூட்டப் பட்டதைச் சொல்லிச் சொல்லி அரற்றிக் கொண்டிருந்தான். “இவர்களோட என்னண்டு இந்த நாட்டில் இருக்கிறது? ரெண்டு வருஷத்துக்கு ஒருக்கா ஏதாவது சாட்டு வைச்சு எரிச்சுக் கொண்டிருப்பாங்கள்.” பிறகுதான் அவுஸ்திரேலிய ஓப்பின் விசாவிற்கு அவன் எழுதிப் போட்டது தெரிந்தது. இந்த நாடே வேண்டாம் என்று விட்டுப் போனவன், அவனிடம் வீட்டைத் திருத்தக் காசு கேட்டது மடத்தனம் தான்.
தம்பிராசா சொன்ன மாற்றுத் திட்டத்தைக் கவனத்தில் எடுத்த பிறகுதான் தோன்றியது. “உங்களுக்குத் தேவை எண்டா தனியா ரெண்டு புது அறை கட்டுங்கோவன். அது சிலவு சுருக்கம்”
நடு முற்றத்தின் கிழக்கெல்லையாய், வகைக்கு ஒவ்வொருதரம் ஷெல், பொம்பர் வீச்சுகளுக்காளாகி விட்டு, மீதி இருந்த பனம் சிலாகைகளையும் வீட்டின் மற்றப் பகுதிகளை ஒக்கிடக் கொடுத்து
விட்டு வெற்றுச் சுவராய் நின்ற அந்தப் பழைய சமையலறை, சாப்பாட்டறை இணைப்பை இடித்து விட்டு, அவ்விடத்தில் புதிதாய் இரு அறை கட்டுவது.
வங்கிக் கணக்கிருப்பிற்கும், இத்திட்டத்திற்கும் கூட மிகவும் பொருத்தமாக இருந்தது.
அறைகளைப் புதிதாய்க் கட்டும் பொழுது, பழைய வீட்டின் ஒரு பகுதியே இது என்ற எண்ணம் திருப்தியையும் தரக்கூடும். அதோடு வேறுமொரு வசதி. டானாப்பட்ட’ பின் விறாந்தையின் தொங்கலில் செருகியது போலிருந்த பாத்றூமும் இனிப் பக்கத்தில் வந்து விடும். புதிதாய் கட்டுவதற்கும் பாத்றூமுக்கும் நடுவே சம தளமாய் ஒரு நடை போட்டால் போதும். இரவு நேரத்தில் பின் விறாந்தைக் கதவைத் திறந்து கொண்டு, நீள நடந்து வந்து இருபடி கீழிறங்கி ‘பாத்றூம்’ போய் வருவதிலுள்ள அவஸ்தை, கண் மணிக்கும் தான் உண்டு.
வயதானால் எல்லாம் பக்கத்தில் இருக்க வேண்டும். ஆனால், பிள்ளைகள் மட்டும் பக்கத்திலிருக்க மாட்டார்கள்.
இளையவன் பக்கத்தில்தான் இருப்பான் என்ற தெம்பு கொஞ்சக் காலம் இருந்தது. பக்கத்தூர்’ பள்ளிக்கூடத்தில் தான் படிப்பித்துக் கொண்டிருந்தான். ‘ஆமி வருகுது’ என்று ஊரை விட்டு உடுப்பிட்டி, வதிரி என்று ஓடிய பொழுதும் அங்கும் இருக்க முடியாது திரும்பி ஆவரங்கால், புத்தூர் என்று அலைந்த பொழுதும் உடன் வந்தான். தமையன் போலன்றிப் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை மறு பேச்சின்றிக் கலியாணம் செய்து கொண்டிருந்தான்.
ஸாம்பியாவிற்கு விஞ்ஞானப் பட்டதாரிகளைக் கூப்பிடுகிறார்கள் எனப் போனவன், குடும்பத்தையும் அழைத்துக் கொண்டான். பின் ஒரு நாள் போனில் கதைத்தான், “அடுத்த மாதத்தோட என்ரை கொன்ராக்ற்’ முடியுது. நாங்க அப்படியே கனடாக்குப் போறம்.”
அந்த கொம்யுனிக்கேஷன் சென்ரர் பெண் , போனும் கையுமாக நான் அப்படியே நின்றதைப் பார்த்துக் கொண்டிருப்பது உறைத்தது.
“வளர்ந்து வாற ரெண்டு பொடியளை வைச்சுக்கொண்டு என்னண்டு அப்பா நான் அங்கை வாறது? அவங்களுக்காவது ஒரு பாதுகாப்பான வாழ்வைத் தேடிக் கொடுக்க வேண்டாமே. நாங்க பயந்து பயங்து கொண்டிருந்த மாதிரி, எங்கட பிள்ளையளும் வந்து பயந்து கொண்டிருக்க வேணுமே அந்த நாட்டிலை?”
அவனின் அந்தக் காலப் பயம் நிறைந்த தருணங்கள் அலை அலையாய் வந்து அடித்தன. உடுப்பிட்டியில் ஒரு கோயிலில் தஞ்சமடைந்த வேளை சீருடையினர் வந்து இளைஞர்களாகப் பார்த்து அழைத்துச் சென்ற பொழுது, கண்ணிவெடியில் சிக்கித் தொடரணி வாகனமொன்று சிதறிய ஆத்திரத்தில் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்ட சுற்றுப்புற இளைஞர்களைச் சுடுவதற்காய் வரிசையில் நிறுத்தியதாய் அறிந்த பொழுது… அப்பொழுதெல்லாம் கையாலாகாத தன்னிருப்பு அவனுக்குப் பட்டிருக்குமோ என்றும் எண்ண வைத்தது.
இப்பொழுது நாட்டின் பயம் கலந்த சூழலில் இருந்து தன் பிள்ளைகளைத் தப்புவிக்க வாய்ப்புக் கிடைக்கும்பொழுது அவன் அதைப் பயன்படுத்தாமலிருக்க முடியுமா, என்ன?
மத்தியானச் சாப்பாட்டிற்காய் ஆட்கள் போகத் தொடங்கி விட்டார்கள். கிணற்றடிக்குப் போய், சீமெந்து தூசி கழுவி, முகம் ஒற்றி வந்து பலா மரத்தடிச் சைக்கிள்கள் ஒவ்வொன்றாய் உருளத் தொடங்கின.
எழுந்து பின் விறாந்தைக்குப் போகப் படி ஏறுகையில், தூணையும் பிடித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
பின் விறாந்தையில், மேசையில் சாப்பாட்டுக் கூடையின் கீழ் சாப்பாடு இருந்தது. சோற்றுத் தட்டும் கிண்ணங்களில் அவியலாய் இரு கறிகளும், கூடவே ஆவியில் வெந்த உப்பு மிளகுத் தூள் தூவிய நீள் கரட் துண்டுகள்.
கண்மணி இவை செய்வதே அதிகம். சமைத்து முடிந்ததும் அயர்ச்சி வந்துவிடும். மேசையில் எடுத்து வைத்துவிட்டு போய்ப் படுத்துவிடுவாள். தானே எடுத்துப் போட்டு, தனிய இருந்து சாப்பிடுவது பழக்கமாகிவிட்ட ஒன்று.
சாப்பிடும் தட்டை எடுத்துக்கொண்டு கழுவவென விறாந்தை ஓரம் நீர்த் தொட்டியருகே வந்தபொழுது, கிணற்றடியில் சந்தடி இன்னும் கேட்டது.
தட்டோடு தயங்கி நிற்கையில் விமலன் தான் வந்து கொண்டிருந்தான். “என்ன விமலராசா, சாப்பிடப் போகேல்லையோ?”
“நான் சாப்பாடு கொண்டு வந்தனான் ஐயா. இஞ்சை இருந்து தான் சாப்பிடப் போறன்.”
சாரத்தைக் கழுத்தில் கொழுவி, நழுவ விட்டு, இடுப்புத் துண்டை உருவியெடுத்து தோளில் போட்டு சாப்பாட்டுக் கூடை யோடு வேப்ப மரத்தடிக்கு நடந்து “அம்மாவும் அப்பாவும் ஒரு செத்த வீடு எண்டு கம்பர் மலைக்குப் போயிட்டினம். அம்மா, விடியவே எழும்பி சமைச்சு வைச்சிட்டு போயிட்டா. நான் எனக்கு கட்டித் தரச் சொல்லி வாங்கிக்கொண்டு வந்திட்டன்” எல்லாம் பேசிக்கொண்டேதான்.
சாப்பாட்டுக் கூடையைத் தூக்கி வைத்துவிட்டு, சோற்றைத் தட்டில் எடுத்துப் போடுகையில் ஏதோ வெறுமை வந்து கவ்வியது மாதிரி இருந்தது.
சுதர்சினி இருந்தால் அரட்டை அடித்துக்கொண்டு கூட இருந்து சாப்பிடுவாள். தட்டைப் பார்த்துப் பார்த்து வேண்டியதை எடுத்துப் போடுவாள். வீட்டையே கலகலப்பாக்கி அடிப்பாள்.
வேலைக்குப் போன நாட்களில் மத்தியானத்திற்கெனச் சாப்பாட்டுப் பார்சல் கட்டித் தருவாள். இடைவேளையின் பொழுது அதைப் பிரிக்கையில் அதன் கச்சிதத்தை, கட்டிய விரல்களின் அக்கறையைக் கண்டு கொள்ளும் விதமாய் இரண்டு பார்சல்கள் கட்டுவாள். ஒன்று பெரிது, வேலைக்குப் போகும் அப்பாவிற்கு. மற்றது சிறியது, தனக்குப் பள்ளிக்குக் கொண்டு போக
அதே பள்ளியில்தான் அவளுக்குக் காதலும் வந்து விட்டது.
ஒரே மகளின் திருமணத்தை ஊரெல்லாம் சொல்லிச் சிறப்பாகச் செய்ய வேண்டும். பேரப் பிள்ளைகள் இந்த வளவின், இந்த மண்ணில் புரண்டு ஓடியாடி விளையாட வேண்டும். மருமகன் வேலையால் காரில் வந்து இறங்க வேண்டும். அவை எல்லாம் அந்தக் காலக் கனவுகள்.
அவன் பக்கத்தூர்க்காரன்தான். மாற்று இயக்கத்தில் இருந்த வனாம். எப்படியோ தப்பி, ‘கொன்ரேயினரில்’ அடைபட்டோ கிடைப்பட்டோ வெளிநாடு போய் விட்டான். ஆளாகியும் விட்டானாம். நாட்டிற்கு அதுவும் ஊருக்குத் திரும்பவே முடியாதாம். உயிராபத் தான விடயமாம் அது. சுதர்சினியை இந்தியாவிற்கு கூட்டி வந்தால் தானும் வந்து கலியாணம் செய்து அழைத்துப் போவானாம். ‘காதல்’ என்ற பிறகு, எல்லாவற்றுக்கும்தான் இணங்க வேண்டி ஏற்பட்டு விட்டது.
பின் விறாந்தைக் கிறாதியால் விமலன் வெளியே முண்டித் தெரியும் இரு வேப்ப மர வேர்களின் நடுவே வேப்பமரத்தில் சாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. கையில் சாப்பாட்டுப் பார்சலை எடுத்து வைத்திருந்தான்.
ஏதோ தோன்றியது. “இரு நானும் உன்னோடை சாப்பிட வாறன்” ஒரு கையில் சோற்றுத் தட்டையும் மறு கையில் கரட் – தட்டையும் எடுத்துக் கொண்டு அவசரமாய்ப் படி இறங்குகையில், “ஐயா, பார்த்து பார்த்து” என இவன் குரல் கொடுப்பது கேட்டது.
ஒரு மாதிரியாய் இறங்கிச் சாய்மனையில் இருந்து கொண்டு, பக்கத்து ஸ்டூலில் கரட் தட்டையும் வைத்தபின், சாப்பாட்டுப் பார்சலைப் பிரிக்கும் இவன் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.
இவனருகில் சொதிப் போத்தல் இருந்தது. மேலே மஞ்சள் கட்டி நிற்க கீழே இருந்த வெளிறிய நீரில், அடியிலிருந்த மீன்தலை தெரிந்தது.
“என்ன கொம்மாவுக்கு விடிய வெள்ளனவே மீன் கிடைச் சிட்டுத்தோ?”
“அம்மா நேற்றுப் பொழுதுபடவே மீன் வாங்கிப் பொரிச்சு வைச்சவ. விடிய எழும்பி குழம்பும் சொதியும்” என்றவன், “ஐயாவுக்கு என்னையா சாப்பாடு?” என்றும் கேட்டான். இப்படி இயல்பாய் விகல்பம் தோன்றாமல் கேட்கவும் தெரிகிறதே இவனுக்கு என்றிருந்தது.
“வயது போயிட்டுது. எல்லாத்திலையும் கட்டுப்பாடுதான். எண்ணெய்ச் சாமான் கூடாது. கனக்க காரம், தேங்காய்ப் பால் ஒண்டும் கூடாது. அவியலாக ரெண்டு கறி. ம்… இந்தக் கரட்துண்டை எடன். குழம்போட சாப்பிடலாம்.”
நீட்டிய தட்டில் இருந்து ஒரு கரட் துண்டை எடுத்துக் கொண்டான்.
“மன்னாரில் உயிரொளியிலையும் இப்பிடித்தான். மத்தியான நேரத்திலை மரத்தடியிலை இருந்து ஒண்டா கதைச்சுச் சிரிச்சுக் கொண்டு சாப்பிடுவம். ஒராளின்ரை சாப்பாட்டை மற்றவைக்கும் குடுத்துக் கொண்டு, எனக்கும் அந்த நினைவுதான் வருகுது, இப்ப.”
“அப்பிடி எத்தினைபேர் இருப்பீங்க உங்கட வகுப்பில்?”
“எங்கட வகுப்பு எண்டில்லை. மத்தியான நேரம் தானே. எல்லா வகுப்பிலை இருந்தும் வருவாங்கள். சில சிங்களப் பொடியளும் இருக்கிறாங்கள். சிலாபம் பக்கத்துப் பொடியள்.”
“அவங்களோட என்ன பாசையில் கதைப்பீங்க?”
“ஒண்ணுரெண்டு சிங்களச் சொல்லுத் தெரியும், மற்றும்படி எல்லாம் கைப்பாஷைதான்.”
“அட பறுவாயில்லையே!”
“இதைச் சொல்றீங்க. சில நேரம், சிங்கள ஊர்களிலை இருந்து எங்களோடை பழக விரும்புற சிங்களப் பொடியள், பொட்டை யளையும் கூட்டி வருவினம். அவங்களோடையும் கைப்பாசைதான். சமாளிப்பம்.” ஒரு கை பக்கத்திருப்பவனின் தோளில் பதிந்திருப்பது போன்ற பாவனையில் இருக்க, மற்றக் கை ஏதோ அபிநயிக்க, இவன் முற்றாக அந்த நினைவுகளுக்கே போய் விட்டான் போலிருந்தது.
“ஒவ்வொருத்தர் வீட்டிலையும் ரெண்டு பேரை வைப்பினம். எங்கட வீட்டை ரெண்டு பேர் இருந்தாங்கள். நிமல், ஜயந்த எண்டு ரெண்டு பேர். நல்ல பொடியள். அம்மா அவர்களுக்கு தோசை, இட்டலி, இடியப்பம் எண்டு செய்து குடுத்தா. ஒவ்வொரு இடத்தை யும் கொண்டு போய்க் காட்டினம். நல்ல சந்தோஷமாய் இருந்தது. எனக்கென்னவோ இப்பிடியே எங்களை எல்லாம் முந்தியே பழக விட்டிருந்தா, ஆளை ஆள் மதிக்க வேண்டும் எண்டு சொல்லிக் குடுத்திருந்தா எங்களுக்குள்ளை இந்தச் சண்டையே வந்திராது. எங்கட நாடும் இப்பிடி அழிஞ்சுபோய் கிடவாது எண்டு படுகுது.”
சோற்றில் வைத்த கையோடு, இவனையே பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றியது.
– மல்லிகை – நாற்பதாவது ஆண்டு மலர் ஜனவரி 2005 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.